புறநானூறு காட்டும் போர் நிர்வாகமும் மேலாண்மையும்

முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

கேரளப் பல்கலைக்கழகம்

திருவனந்தபுரம்.

வீரத்தையும்  காதலையும் சங்ககால மக்கள் தம் இரு கண்களாகக் கொண்டனர். எனவேதான் சங்க இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டன.  காதலை அகநூல்களும் வீரத்தைப் புறநூல்களும் எடுத்தியம்பின.  எனினும் அகநூல்களில் புறச்செய்திகளும் புறநூல்களில் அகச்செய்திகளும் இடம் பெறுவதைக் காணலாம்.  புறநானூறு என்றதுமே சங்ககால மக்கள் நடத்திய போர்களும் அவர்களது வீரச்செயல்களுமே நமது நினைவுக்கு வரும்.  ஆனால் போரினால் விளையும் துன்பங்களை எடுத்துக்கூறி போர்களைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் கட்டாயமாகப் போர்செய்ய வேண்டிய சூழல்களில் பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாத்த சங்ககால மக்களின் நிர்வாகத் திறனையும் புறநானூறு பதிவாக்கியுள்ளன.  இக்கட்டுரை        புறநானூறு காட்டும் அக்கால மன்னர்களின் போர் நிர்வாகத்தையும் போரிடர் மேலாண்மை திறத்தையும் எடுத்துரைக்க முயல்கிறது.

 

போரும் காரணங்களும்

     போர் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது போரின் அழிவும் துன்பமும் தான்.  மனிதகுலம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை போராட்ட உணர்வு மேலோங்கியே வந்திருக்கின்றது.  நமது நாட்டில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் போர்களால் மக்கள் மிகுந்த துன்பத்தையே அனுபவித்தனர்.  அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்து கூடிவாழ முற்பட்ட பின்னரும் தொடக்ககால போர் வெறி குறைந்தபாடில்லை.  போர் முறையில் ஈட்டியும், வாளும் துப்பாக்கியும் செயலிழக்க புதிய போர்க்கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிலும் இராணுவத் தளவாடங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையும் பெருகிக்கொண்டே இருக்கிறது.  வல்லாண்மை மிக்க நாடுகள் இந்த உலகத்தைப் போல பதினைந்து உலகங்களை அழிக்கின்ற அளவிற்கு அணு ஆயுதப் போர்க்கருவிகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.  இத்தகைய அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்குக் காரணமாக அமைந்த போருக்குரிய சில காரணங்களைக் காண்போம்.

     ’இந்தியாவில் போர்’ என்னும் நூலில் போருக்குரிய காரணங்களாகக் கீழ்வருவனவற்றை இராமசந்திர தீட்சிதர் சுட்டுகிறார்.  மறவனின் போர் விருப்பமும் உடல்தினவும் வழிவழியாகப் போர் செய்யத் தூண்டுவனவாக அமைந்தன என்று குறிப்பிடுகிறார்.  போரையே தொழிலாகவும் போர்க்கள சாவையே புகழுக்குரியதாகவும் தமிழர் விரும்பினர். சங்ககால வீரத்தாயும் தன்மகன் போர் செய்வதையே பெருமையாகக் கருதினாள்.  சான்றாக,

           ’புலிசேர்ந்து போகிய கல்லளை போல

           ஈன்ற வயிறோ விதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’     – புறம் 86

என ஒரு தாயிடம் நின் மகன் எங்கு உள்ளான்? என்று வினவியவர்க்கு அவன் போர்களத்து இருப்பான். அவனைப் பெற்ற வயிறு புலி இருந்து சென்ற கன்முழை போன்று இங்கு உளது என்று கூறுவதாக அமைகின்றது.

 மேலும்  பண்டைய தமிழர் போர் வீரர்களாக இருப்பதையும் போரில் களிறுகளை வீழ்த்துவதைப் பெருமைக்குரிய செயல்களாகவும் கருதியுள்ளனர்.  இத்தகைய வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடுதல் வேண்டும் என்று புலவர்களுக்குப் பொருள் கொடுத்து ஆதரித்தனர்.

‘ வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்

இன்று உளன் ஆயின் நன்றுமன் என்ற நின்

ஆடுகொள் வரிசைக்கு ஒப்ப                 – புறம் :53

கபிலர் இல்லையே என்று வருந்திய மாந்தரஞ்சேரலிரும் பொறையிடத்து இளங்கீரனார் ‘ நின் புகழ் முற்றுப் பெற்று விடவில்லை அதனைப் பாடி முடிதல் எம்மனோர்க்கு இயலா. கபிலர் இருந்தால் சிறப்புற நின்னை பாடுவான். ஆயினும் என்னால் இயன்றவரைப் பாடுவேன் பாடாதிருந்தால் அரிது என விளக்கினார்.

இத்தகைய எண்ணம் உலகம் முழுமையும் இருந்ததை சி.எம். பெளராவின் வீரயுலகப் பாடல் என்னும் நூல்வழி அறியமுடிகிறது.  ஆக போர் என்பது மனிதனின் மனப் போக்கினால் உருவானது மட்டுமன்று உலகத்தின் இயல்பும் கூட எனப் புறநானூறு கூறுகின்றது.

‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத் தியற்கை                 –     புறம் – 76

என்ற அடிகள் சுட்டுகின்றன.  எனவே போர் பலவழிகளில் நிகழ்ந்துள்ளன.  மன்னர்கள் தன் எல்லைகளைப் பரப்புவதற்காகவும்  தன் புகழை நிலை நாட்டுவதற்காகவும் போர் செய்தனர். சான்றாக,

           முழங்கு முந்நீர் முழுவது வளைஇப்

           பரந்துபட்ட வியன் ஞாலம்

           தானிற் தந்து தம்புகழ் நிறீஇ      புறம் 18

கடலால் சூழப்பட்ட இவ்வகன்ற உலகத்தை மன்னன் தன் முயற்சியால்  கொண்டு தன் புகழை நிலை நாட்டியதை இவ்வரிகள் சுட்டுகின்றன.

மேலும்  தன்மானம் காரணமாகவும் ( புறம் 75)  புலவர்கள் தம் வீரச் செயல்களைப் புகழ்வதற்காகவும், போர் நிகழ்த்தினர் என்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிகின்றோம்.

மகளிர் காரணமாகப் போர் நிகழ்ந்ததைப் புறநானூறு பதிவாக்கியுள்ளது. அதாவது மகட்கொடை மறுப்பு காரணமாகப் போர் நிகழ்ந்ததைப்  புறம் 116, 337, 342 போன்ற பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

போரால் ஏற்படும் துன்பம்

போரால் மக்கள் பல துன்பத்திற்கு ஆளானதைச் சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. போர்களத்தில் பிணங்கள் எங்கும் கிடக்கும் தோற்றம் தச்சனின் உலைக்களத்தில் கிடக்கும் கருவிகளைப் போன்றிருந்தது என்றும் ( களவழி 15) வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் அவர்கள் உடலிலிருந்து சொட்டுச் சொட்டாகக் குருதி ஒழுகும் காட்சி கார்த்திகை விழாவில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கார்த்திகை விளக்கு போன்று  ( களவழி 21) இருந்தது என்றும் யானைகள் போர்க்களத்தில் கிடக்கும் காட்சி குன்றுகளைப் போலிருந்தது என்றும் ( களவ 21) களவழி நாற்பது போர்க்களக் காட்சியை எடுத்தியம்புகிறது.  புறநானூற்றில் ஒரு பெண் தன்கணவன் போரிடச் சென்று திரும்பி வராதது கண்டு போர்களம் நோக்கிப் புறப்பட்டாள் . அங்கே அவளது கணவன்

‘ எடுப்ப எழாஅய் மார்பம் மண்புல்ல

இடைச் சுரத்து இறுத்த மள்ள          ( புறம்254)

எழுப்ப எழாதவனாய் மார்பில் புண்பட்டு சுரத்திடை வீழ்ந்து கிடக்கின்றான் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன.

…………….யானும்

மண்ணுறு மழித் தலைத் தென் நீர்வார

தொன்று தாம் உடுத்த அம்பகைத் தெரியற்

சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்

கழிகல மகளிர் போல

வழி நினைத்திருத்தல் அதனினும் அரிதே          –     புறம் 288

இவ்வரிகள் போர்களத்தில் தன் கணவன் இறந்த  செய்தியைக் கேட்ட பெண்ணின் மன நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. முடிகளைந்து தலையைக் கழுவுதலும் அல்லி அரிசியை உண்டு அணிகலன்களைக் களைந்து கைம்பெண் போல கணவன் இறந்த பின்பு வாழ்தல் அரிது என்று ஒரு பெண் புலம்புவதாக அமைகிறது.  இதிலிருந்து போர்த்துன்பத்தால் வீரர்கள் இறந்து படுவதும் அவ்வீரர்களின் மனைவியர் பெரும் துன்பத்திற்கு ஆளானதையும் புறநானூறு வழி அறிந்து கொள்ள முடிகிறது.

போர் நிர்வாகம்

       நாட்டை ஆளும் மன்னனுக்குத் துணையாக அமையக் கூடியவற்றுள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது படை ஆகும்.  இதனைத் திருவள்ளுவர்,

           ’படைகுடி கூழமைச்சு நட்புஅரண் ஆறும்

           உடையான் அரசருள் ஏறு         – திரு 381

என்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறங்கங்களைக் உடையவன் அரசருள் ஏறு போன்றவன் என்று எடுத்துரைக்கின்றார்.  இவ்வாறனுள் முதலிடம் பெறுவது படை ஆகும்.  இப்படையை நிர்வகித்தல் அரசனின் தலையாய கடமையாகும்.

சங்ககால மன்னனுக்கு எனத் தனியான ஒரு நிலையான படை இல்லை என்பதை சங்க இலக்கியம் வழி அறிய முடிகிறது.  போர்க்காலத்தில் திரட்டப்படுவனவே படைகளாக அமைந்துள்ளன. அப்படைகள் போர் புரிந்து பல வெற்றிகளையும் பெற்ற செய்தியையும் அறிய முடிகிறது. சிறு குழந்தைகள் வரையிலும் போரில் ஈடுபட்ட செய்திகள்   புறநானூறில் பதிவாகியுள்ளன.   புறநானூற்றின் வாயிலாக அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ,தேர்ப்படை  என்ற நாற்படை பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன.  எனினும் அதனை மன்னன் எவ்வாறு நிர்வகித்தான் என்பதற்கான அகச் சான்றுகள் மிகக் குறைவாகவே காணக்கிடக்கின்றன.

     தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் சிறுவயதிலேயே போர்த்தொழிலை மேற்கொண்டவன்.  அவனைப் புகழும் இடைக்குன்றூர் கிழார்,

’ கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக்

நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்

யார்கொல் வாழ்கவன் கண்ணி தாட் பூண்டு

தாலி களைந்தன்று மிலனே பால்விட்

டயினியு மின்றயின்றனனே       –     புறம் -77

இப்பாடல் வரிகளில் காலிலே வீரக் கழலை அணிந்த ஐம்படைத் தாலிகழற்றாத இவன் பால் பருகுதலை விட்டு இன்று உணவு உண்டனன் என்று குறிப்பிடுகிறார்.  அதாவது போர்த்தொழில் செய்ய விரும்புவோர் உடல்வாகை ஊக்குவிக்கும் சத்தானஉணவு வகைகளை உண்டான் என்ற செய்தி இலைமறை காயாக இப்பாடலில் இருப்பதைக் காணலாம்.  போர் வீரர்கள் பல உணவு வகைகளை உண்டு தம் உடல் வலிமையைப் பெருக்கினர் என்பதையும் அறியமுடிகிறது.  பாரதப்போரில் பெருஞ்சோறிட்ட உதியன் சேரலை இங்கு நினைவு கூறத் தக்கது.

போர் செய்யும் முறை

அக்காலத்தில் நிகழ்ந்த போர் முறைகளைத் தொல்காப்பியம் எடுத்தியம்புகின்றது.  பழங்காலத்தில் ஐந்து நிலைகளில் போர் நிகழ்ந்ததைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.  இவ்வைந்து நிலைகளுக்கும் ஐவகையான பூக்களை அணிந்தனர்.  இது இக்காலத்து சீருடைகள் அணிவதற்கு இணையானது என்ற பூரணசந்திரன் அவர்களின் கருத்து இங்கு ஒத்து நோக்கத்தக்கது.  தொல்காப்பியர் கருத்துப்படி ஆ நிரைகளைக் கவர்தலே  போரின் தொடக்கமாகும் இதற்கு வீரர்கள் வெட்சிப்பூச் சூடுவர்.  ஆ நிரைகளை மீட்க வருவோர் கரந்தைப் பூச்சூடுவர்.   கோட்டையில் நின்று போர் செய்வோர் உழிஞைப்பூச் சூடுவர்.  கோட்டையை முற்றுகை இடுதலைத் தவிர்ப்பதற்கு நொச்சிப்பூ சூடுவர்.  மட்டுமல்லாது இரு பெரும் வேந்தர்களும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் நின்று போர் செய்வதற்குத் தும்பைப்பூ சூடுவர். இப்போரில் நால்வகைப் படைகளையும் பயன்படுத்துவர்.  புறநானூறில்   நால் வகைப் படைகளையும் பயன்படுத்துவதால் பெரும்பான்மையும் தும்பைப் போரைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறது எனலாம்.

மேலும் அக்காலத்தில் போருக்கென சில விதிமுறைகள் இருந்தன.  அன்று நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி போன்றவை கொண்டு போரிடும் முறைகள் காணப்பட்டன.

’உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை

வியந்தன்று மிழிந்தன்று மிலனெ யவரை

அழுந்தப் பற்றி யகல் விசும்பார்ப்பெழக்

கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை’         புறம் – 77

என்ற வரிகளில் தன் எதிரில் வந்து நின்ற பகைவர்களை இறுகப் பிடித்து ஆகாயத்தில் ஒலியெழ உடல் நிலத்தில் விழவீழ்த்தியதை எடுத்தியம்புகிறது. எனவே அக்காலத்தில் நேருக்கு நேர் எதிர்த்து போரிட்டனர் என்பதை அரியலாம். புறமுதுகிட்டு ஓடும் எதிரியையும் ஆய்தம் இன்றி நிர்கதியாய் நின்றோரையும் தாக்குதல்கூடாது என்பது அக்கால மரபு.

போரிடர் மேலாண்மை

போர்த்துன்பத்தால் ஏற்படும் அபாய நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளைப் போரிடர் மேலாண்மை எனலாம்.  அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் உறையுளும் வழங்குதல், வந்த போரை எதிர்கொள்ள படை பலத்தைப் பெருக்குதல் போன்றனவும் இவற்றுள் அடங்கும்.

     போரிடரால் மக்களுக்குப் பேரழிவு ஏற்படாதவாறு போர் நிகழ இருக்கும் இடத்தின் அருகிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு பறை அடித்து அறிவிக்கும் நிகழ்ச்சி புறனானூற்றில் இடம் பெற்றுள்ளது.

’ஆவும் ஆன் இயற்பார்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங் கடன் இருக்கும்

பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம் அம்பு கடிவிடுதும்  நும் அரண் சேர்மின்       புறம்-  9

பசுவும் பசுவினியல்பை ஒத்த பார்ப்பனரும் பெண்களும் நோயுற்றவரும் இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்குச் செய்யும்  அரிய சடங்குகளை மதித்துச் செய்யும் புதல்வர்களைப் பெறாதவர் எனப்பலரும் கேட்பீராக யாம் எம் அம்புகளை விரைவுபட செலுத்திப் போரிட உள்ளோம் யாவரும் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள் என்று ஆபத்தான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மக்களை இடம்பெயரச் செய்யும் உயரிய பண்பு அன்றைய மக்களிடையே நிலவியிருந்தது.  இது இன்றைய போர் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது நினைவு கூறத்தக்கது.

     போர்க்களத்தில் படையை அழித்தல், மன்னர்களைக் கொல்லுதல், பகை மன்னர்களின் முரசு, காவல்மரம் இவைககளைக் கவர்ந்து கொள்ளுதல் கடிமரத்தை அழித்தல்,  ஊரை எரிப்பதுடன் நீர் நிலைகளை உடைத்தல் விளைந்த வயல்களில் தீமூட்டுதல் எனப் பல்வேறு இழிச் செயல்களையும் செய்தனர்.  இதனை மனதில் கொண்ட புலவர்கள் போரைத் தூண்டாமல்  போர் நடக்காமலிருக்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகளைச் செய்துள்ளனர்.

சோழர் குடியில் பிறந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர்.  அப்போது கோவூர்க்கிழார் என்னும் புலவர் உங்கள் இருவர் மாலையும் ஆத்திப்பூவால் ஆனது.  போரில் இருவரும் வெற்றியடைதல் இயலாதது. ஒருவர் வென்று மற்றவர் தோற்பர்.  உங்களில் யார் தோற்பினும் உங்கள் குடியின் தோல்வியையே அது உணர்த்தும் .  உங்களை ஒத்த சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இத்தோல்வி பெரும் மகிழ்ச்சியைத் தரும் எனவே போர் செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகின்றார்.  இதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்தியம்புகிறது

‘ நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே

ஒருவீர் தோற்பினும் தோற்பதும் குடியே

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்

குடிப்பொருள்  நன்று நும் செய்தி கொடித்தேர்

           நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே         புறம் – 45

மேலும் தந்தை மகனுக்கு இடையே நடந்த போரைத் தவிர்த்தலையும்  புறம் 213 ஆம் பாடலால் அறிகிறோம். போரால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி போரைத் தடுத்தலையும் ( புறம் 77) புற நானூறு சுட்டுகிறது.

     சங்ககால மன்னர்கள் போர்த்தொழிலில் மட்டுமன்று படையின் வலிமையறிந்து படையை நிர்வகிக்கும் திறனையும் பெற்றிருந்தனர். போரினால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து போரிடருக்குரிய மேலாண்மைத் திறனை பெற்ற செய்தியையும் புறநானூறு வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

பயன்பட்ட நூல்கள்

  • சாமிநாத ஐயர் உ. வே (ப.ஆ)புற நானூறு , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988
  • தமிழ் வேலு- சு – களவழி களமும் காலமும், தென்பெண்ணைப் பதிப்பகம், தென்னார்க்காடு,1997
  • பரிமேலழகர் திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை 1986

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *