Advertisements
Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

தூது இலக்கியங்களில் அமைந்துள்ள பாவகைகள்

பவளராணி.ப

ஆய்வாளர்

தமிழ்த்துறை

கேரளப்பல்கலைக்கழகம்

காரியவட்ட வளாகம்

திருவனந்தபுரம்

இலக்கியத்தில் அமைந்துள்ள மொழி நடையை அறிய துணை செய்யும் கருவியே யாப்பு ஆகும். யாப்பு வகைகளில் ஒன்றுதான் பா. இப்பா நான்கு வகைப்படும் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா. பா செய்யுளின் ஓசை இனிமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இப்பாக்களின் அமைப்பு நிலையும், ஓசை நிலையும் யாப்பு நெறிக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும், “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால் அவன் செய்யுளை விகற்பத்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை” (தொ:பே:ப:114-115) என்று பாவிற்கு ஓசை இன்றியமையாதது என்பதைத் தெளிவாக விளக்குவதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் தூது இலக்கியங்களில் யாப்பு

தமிழ் இலக்கிய வகைகள் காலச்சூழலுக்கும் கருத்து விளக்கத்திற்கும், பாடுபொருளுக்கும் ஏற்ப சில மாற்றங்கள் அடைந்துள்ளன. கலிவெண்பா ஒன்றே தூது இலக்கியங்களில் மிகப் பழங்காலம் தொட்டு கலிவெண்பா புலப்பட்டு வருகின்றது. எனினும் பிற்காலத்தில் நிலைமண்டில ஆசிரியம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக்கலித் துறை, கொச்சகக்கலி, போன்ற பிற வகைகளிலும் தூது இலக்கியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன என்றே கூறலாம். இவை தூது இலக்கியத்தின் வளர்சியைக் காண்பிக்கின்றன. தொல்காப்பியர் 26 நூற்பாக்களில் கலிப்பா பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் கலிப்பாவை ஒத்தாலிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ் கலி என்று 4 வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளார்.

 

 

பாட்டியல் நூல்களில் கலிவெண்பா

     பாட்டியல் என்பது இயல்பைக் கூறும் நூலாகும். பாட்டியல் செய்யுளியலிலிருந்து மாறுபட்டு அமைவதாகும். பொதுவாக எல்லாப் பாட்டியல் நூல்களும் சிற்றிலக்கியம், காப்பியம், தொகைகள் போன்ற இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுத்துக் கூறுகின்றன. அங்ஙனம் வகுத்துக் கூறப்பட்ட பிரபந்த மரபியலில்

“இருதிணையுடன் அமை அயலை உரைத்துத்

தூது செல விடுவது தூது, இவை“கலிவெண்

பாவினால் விரித்து பகர்வது மரபே”          (பி.ம-15)

என்றும் அடையாளப் படுத்துகின்றனர்.

இலக்கண விளக்கம்

“பயில் தரும் கலிவெண் பாவினாலே

உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்

சந்தியின் விடுத்தல் முந்தூது எனப்

பாட்டியல் புலவர் நாட்டினர் தெளிந்தே” (874)

முத்து வீரியம்

“கலிவெண் பாவால் அமைவது தூது” (126)

போன்ற நூல்களும் இவ்விலக்கணத்தையே கூறுகின்றன.

கலிவெண்பா

     தூது இலக்கியங்கள் அனைத்தும் கலிவெண்பா என்னும் யாப்பு வகையிலேயே அமைதல் வேண்டும் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணமாகும். தலைவன் அல்லது தலைவியின் மன உணர்வுகளை முறையாக வெளிப்படுத்துவதற்குப் பிற பாக்களை விடக் கலி வெண்பாவே  ஏற்றது என இலக்கிய ஆசிரியர்கள் கருதியிருக்கலாம். தொல்காப்பியத்தில் கலிப்பா வகைகளுள் ஒன்றாகக் கலி வெண்பாவைச் சுட்டுகிறார். இதை

            “ஒத்தாழிசைக் கலி கலிவெண் பாட்டே

                        கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே (தொல்.பொரு.நூ.435)

 

என்ற நூற்பா உணத்துகிறது. தொல்காப்பியர் கலிவெண்பாவை வெள்ளடியியலால் திரிபின்றி முடிய வேண்டும் என வரையறைச் செய்கிறார்.

தூது இலக்கியங்களில் பயின்று வரும் கலிவெண்பாவின் இரண்டாமடியின் இறுதியில் அமையும் சொல், தனிசொல் பெற்று வரும்.

                        “சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி

            வாரில் அகப்பட்டு மயங்கினேன் – தேருங்கால்”  (நெஞ் – 46)

 

 

“வந்து நெருங்க மணவைநகர் வேங்கடமால்

            சிந்தை மகிழ்ந் தஞ்சாந் திருநாளில் – தந்ததோர்”  (மே – 121)

            “பஞ்சிபடாநூலே பலர் நெருடாப் பாவே கீண்டு

            எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே – விஞ்சுநிறம்”  (தமி – 17)

மேல் கொடுத்துள்ள மூன்று நூற்பாக்களும் இவ்வமைப்பை பெற்றுவந்துள்ளன. முதலடியின் முதல் சீருக்கு ஏற்பத் தனிசொல்லில் விகற்பம் அமைந்துள்ளது. ஈரடிதோறும் எதுகை ஒத்தமைந்துள்ளது. இம்முறையில் ஈரடிதோறும் எதுகை ஒத்தமைவதால் ஈரடிகளும் “கண்ணி” என்னும் பெயரால் வழங்கப்படுகின்றன. இத்தகைய அமைப்பு முறை தூது இலக்கியங்களில் பயின்று வரும் கலிவெண்பாவிற்கு உரிய அமைப்பாகிறது. தூது இலக்கியங்கள் முழுமையும் இத்தகைய கலிவெண்பா அமைப்புடையனவாகவே உள்ளன. இக்கலி வெண்பாவை பின் தோன்றிய யாப்பருங்கலம், மூன்று வகையாக்கி அவற்றுள் ஒன்றை வெண்கலிப்பா என்ற பெயரால் கலிவெண்பாவைக் கூறுகின்றது.

            “ஒத்தாழிசைக் கலி வெண்கலிப் பாவே

            கொச்சகக் கலியோடு கலிமூன் றாகும்” (யா.க.நூ. 79)

 

கலிவெண்பாட்டு என்ற பெயரினை நோக்குகையில், இவை கலிப்பாவிற்கும் வெண்பாவிற்கும் உரியவை என்று எண்ணத்தோன்றும். எனினும் தொல்காப்பியர் இதனைக் கலிப்பாவின் ஒருவகையாகவே குறிப்பிட்டுள்ளார். இதன் பாடல் வரி வருமாறு

“ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால்

            திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே”  (தொ.பொ.நூ.147)

கலிவெண்பாட்டு முடியும் வரை ஒரு பொருள் பற்றியே வருதல் வேண்டும், வெள்ளடி இயலான் வருதல் வேண்டும், திரிபின்றி முடிதல் வேண்டும் என்ற மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது.

         இளம்பூரணர் 147வது நூற்பாவில் கலிவெண்பாட்டினை இருவகையாகப் பாகுபடுத்தியுள்ளார். தளை அமைப்பை ஒட்டியே கலிவெண்பா, வெண்டளையினால் வந்து ஈற்றடி முச்சீரினால் வருவன ஒருவகை, அயல் தளைகளும் விரவி வந்து ஈற்றடி வெண்பாவைப்போல முச்சீரினால் முடிவன மற்றொரு வகை மேற் குறிப்பிட்ட “வெள்ளடி இயலான்” என்ற வரியினால் இவ்வாறு இருவகையாக கலிவெண்பாட்டினை பாகுபடுத்திக் காட்டியுள்ளார். மேலும் கலிவெண்பாட்டு, வெண்கலிப்பாட்டும் ஒன்றாகும் என்று இயம்பியுள்ளார்.

    காரிகை உரையாசிரியர்  ஈற்றடி அமைப்பு முறை மட்டுமின்றி இலக்கண வகையாலும் இப்பாவகைகளிடையே வேறுபாடு உண்டு என்பர். வெண்கலிப்பா என்பது கலித்தளையும் கலியிடையும் தழுவி ஈற்றடி முச்சீராக வருவன என்றும், வெண்டளை பெற்று வெள்ளோசை தழுவி ஈற்றடி முச்சீராக வருவது கலிவெண்பா என்றும் காரிகை உரையாசிரியர் கூறுவார்.

நூலின் தொடக்கம்

    நூலின் தொடக்கத்தில் முதற் செய்யுளில் அமையும் முதல் மொழி மங்கலச் சொல்லாக இருக்க வேண்டும் என்றும், அத்தகையச் சொற்கள் முப்பத்தொன்பது என்றும் பாட்டியல் நூல்கள் பட்டியல் இடுகின்றன. முதன் முதலில் மங்கலம் பற்றி கூறிய நூல் பன்னிருபாட்டியல் என்று கூறப்படுகிறது.( யாப்பியல் – அன்னி தாமசு). வாழ்க்கையில் மங்களத்தை எதிர்பார்த்த, வரவேற்ற மனிதமனம், பேச்சு வழக்கிலும் கூட மங்களத்தைப் புகுத்தியது. லெக்சிகனில் மங்கலச் சொல் என்பது செய்யுளின் முதலில் வரக்கூடிய நன் மொழி என விளக்கப்படுகின்றது. பாப்பா பாட்டியலில் மங்கலச் சொற்களாக  சீர், எழுத்து, பொன், பூ, திரு, திங்கள், மணி, நீர், சொல், கங்கை, ஆரணம், குஞ்சரம், உலகு, பார், தேர், முந்நீர், கடல், கார், நேமி, ஆழி, வேலை, அணி, சுதை, பூவை, அமுதம், திகிரி, மதி, தரு, பிறை, பங்கசை, பதுமை போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்ப்படையில் தூது இலக்கியங்களில் முதல் இலக்கியமான நெஞ்சுவிடு தூதில் “பூ மேவும்” என்ற மங்கல மொழி அமைந்துள்ளது. மேகம் விடு தூதில் “பொன்” என்ற மங்கல சொல்லும், தமிழ் விடு தூதில் “சீர்” என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது. பூ மேவும், பொன், சீர் போன்ற சொற்கள் எல்லாம் மங்கலச் சொற்கள் என பாட்டியல் நூல் சுட்டுகின்றது.

நூலின் இறுதி  

 

    வெள்ளடியினால் திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டின் இலக்கணம், எனவே நூலின் இறுதி முச்சீராய் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்ப்பாட்டின் அடிப்படையில் முடிதல் வேண்டும் என்பதாகும். கலிவெண்பா யாப்பில் அமைந்த முன்று தூது நூல்களில் இரண்டு தூது நூற்களின் இறுதி “மறவாதே தூது சொல்லி வா” (தமிழ் விடு தூது), “மாலைதர நீவாங்கி வா“ (மேகம்விடு தூது,) என்று நாள் (வா,வா) என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிகின்றது. நெஞ்சுவிடு தூது “பிறப்பு” (நினைந்து) என்னும் யாப்பைக் கொண்டு முடிகின்றது.

கட்டளைக் கலித்துறையில் தோன்றிய நூல்கள்

     கட்டளைக் கலித்துறையில் தோன்றிய முதல் இலக்கணம் யாப்பருங்கலக்காரிகை. பின்னர் தமிழ் இலக்கியத்தில் மிகுதியும் பழக்கம் பெற்ற கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு வகை தூது இலக்கியம் உருவாக ஒரு கருவியாக அமைந்தது. தொடக்ககால தூது இலக்கியங்கள் அதிகமும் கலிவெண்பாவால் தோன்றியவையாகும். இவை 19-20 ஆம் நூற்றாண்டுகளில் சில மாற்றங்கள் அடைகின்றன. அல்லி மரைக்காயர் எழுதிய வண்டுவிடு தூது, அன்னம் விடு தூது, மாரிவாயில் ஆகியவை கட்டளைக் கலித்துறை  யாப்பில் அமைந்த தூது நூற்களாகும். கட்டளை என்பது எழுத்து எண்ணும் மரபைச் சுட்டுவது. இதனை தொல்காப்பியர் நாற்சீர் கொண்ட செய்யுளடிகளில் பயின்று வரும் என்கிறார். சான்றாக

           சீர்திகழ் மாரி வாயிலாமிதனைச்

                  செந்தமிழ்த் தாய்நுதற் கணிந்தோன்

            நேர்மைசே ருண்மை விழைவழக் கறிஞர்

                  நிறைதமிழ் ஆங்கில முணர்ந்தே

………………………………………………………………………….(மாரி)

 இது போன்று பழனியாண்டவர் நெஞ்சுவிடு தூது – கீர்த்தனை என்ற இசைப்பாவாலும், தத்தைவிடு தூது – அம்மானை அமைப்பாலும் அமைந்துள்ளது என ந.வீ. செயராமன் அவர்கள் தூது இலக்கியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முடிவுரை

      இலக்கணங்கள் இலக்கியங்களை அடிப்படையாக்கி எழுந்தவையாகையால் காலந்தோறுமுள்ள இலக்கிய மாற்றம் இலக்கணங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் சில தூது இலக்கியங்கள் மாற்றம் அடைந்துள்ளமையை இங்கு அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு காலத்திலும் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றுகின்றன. அதன் அடிப்படையில் இலக்கணங்களும் வளர்ந்து வருகின்றன. பாட்டியல் நூல்கள் கூற்றுப்படி தூது இலக்கியங்கள் தொடக்கக் காலங்களில் கலிவெண்பாவினால் தோற்றம் பெற்றுள்ளன. இதுவே பிற்காலத்தில்  கட்டளைக் கலித்துறை, அம்மானை முறை, கீர்த்தனப் பாடல் என வேறுபட்ட யாப்பு அமைப்பில் வளர்ந்துள்ளது என்பது இக்கட்டுரை வாயிலாக அறியப்படுகிறது.

துணைநூற் பட்டியல்

 

தூது இலக்கியங்கள்   – ந.வீ. செயராமன்

தமிழ் தூது இலக்கியங்கள் – ஈஸ்வரன்

தமிழ் தூது இலக்கியத்தின் தோற்றம் – அ. நடராசன்

நெஞ்சு விடு தூது – உமாபதிசிவாச்சாரியர்

மணவை திருவேங்கடமுடையான் மேக விடு தூது

மாரிவாயில்                     – சோமசுந்தர பாரதியார்

வண்டுவிடு தூது,

அன்னம் விடு தூது,             – அல்லி மரைக்காயர்

மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது

சங்க இலக்கிய யாப்பு            – பிச்சை.அ

யாப்பியல்                       – அன்னி தோமஸ்

புறநானூற்றில் யாப்பு             – அ. சதீஷ்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க