தமிழ் மலையாள ஆக்கப்பெயர்கள்
முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ
உதவிப்பேராசிரியர்
கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம்
திருவனந்தபுரம்
பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் எனப்படும். தமிழ் மொழியில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கண நூல்கள் வெளிப்படையாக ஆக்கப்பெயர்களை உருவாக்கும் முறையைக் கூறவில்லை. எனினும் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் பெயராக்க விகுதிகளை எடுத்தியம்புகின்றன. இக்கட்டுரை தமிழ் இலக்கண நூல்கள் கூறும் ஆக்கப்பெயர்களை மலையாள இலக்கண நூலான கேரள பாணினீயத்துடன் ஒப்பிட்டு நோக்குகின்றது.
ஆக்கப்பெயர் – விளக்கம்
பொதுவாக பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative) எனப்படும். தொல்காப்பியத்தில் ஆக்கப்பெயர்கள் பற்றிய விளக்கம் காணப்படவில்லை. எனினும் வடமொழிமரபைப் பின்பற்றி இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியமும் பிரயோகவிவேகமும் ஆக்கப்பெயர்களை விளக்குகின்றன. இவ்விலக்கண நூல்கள் இதனைத் தத்திதன் என்று அழைக்கின்றன. தத்திதம் என்ற சொல்லுக்கு மலையாளம் ஆங்கில மொழியகராதி Derivative, Nominal Derivative ஆகிய பொருள்களைச் சுட்டுகின்றது
தத்திதன் என்பது வடமொழி வழக்கு. வீரசோழியமும் கேரள பாணினீயமும் தத்திதாந்த பதத்திற்கு (ஆக்கப்பெயர்களுக்கு) இலக்கணம் கூறவில்லை. பிரயோகவிவேகம் இதற்கு,
”துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்து முன்சொல்தனைப் போய்
மன்னும் பிரத்திய்யமே தத்திதாந்தம் – (பிவி.29)”
என்று இலக்கணம் கூறுகின்றது. அதாவது முன்சொல் தன்னைத் தொடர்ந்து வரும் ஏனைய சொற்களை நீக்கி விகுதிபெற்றுத் அத்தொடர்மொழியின் பொருளை உணர்த்தும் சொல்லே தத்திதாந்தம் அல்லது ஆக்கப்பெயராகும்.
எ.டு
வலையால் முயன்று உண்பவன் -> வலையன்
இத்தொடரில் ’வலை’ என்னும் சொல் நிற்க ‘ஆல் முயன்று உண்ணும்’ என்ற தொடர்மொழி கெட்டு வலை + அன் எனச்சேர்ந்து வலையன் என்று ஆகிறது.
பெயராக்கவிகுதிகள் / ஆக்கப்பெயர் விகுதிகள்
வீரசோழியர் ஆக்கப்பெயருக்குரிய பொதுவான விகுதிகளாக அன் முதலான பதினேழு விகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்(வீ.சோ.52). பிரயோக விவேகமும் கேரள பாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைக் கூறி அவற்றின் கீழ் பெயராக்க விகுதிகளைச் சுட்டுகின்றன.
ஆக்கப்பெயர் – வகைகள்
ஆக்கப்பெயர்களின் வகைகளை வீரசோழியம் கூறவில்லை. ஆனால் விகுதிகளை ஆண்பாற் பெயரில் வரும் விகுதி, பெண்பாற் பெயரில் வரும் விகுதி, பொருளை விளக்கும் விகுதி என மூன்றாகப் பாகுபடுத்தியுள்ளது. பிரயோகவிவேகம் தத்திதனை (ஆக்கப்பெயர்களை) மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. வீரசோழிய ஆசிரியர் பொதுப்படையாக விளக்கிச் சென்ற காரிகைகளிலே கேரள பாணினீய ஆசிரியர் விளக்கும் தத்திதன் வகைகள் இடம்பெற்றுள்ளன. கேரள பாணினீயம் வடமொழியின் அடிப்படையில் பெயர், பண்பு, சுட்டு முதலான சொற்களை அடியாகக் கொண்டு பிறக்கும் சொற்களைத் ’தத்திதம்’ என்றும் வினைச் சொற்களினின்று தோன்றும் பெயர்ச் சொற்களைக் ’கிருத்து ’என்றும் குறிப்பிடுகிறது. (கே.பா பக் 195).
எ.டு
தத்திதங்கள்
புத்தியுள்ளவன் → புத்திமான்
வ்யாகரணமறியுந்நவன் → வையாகரணன்
கிருத்துகள்
தர்சிக்குந்நவன் → த்ருஷ்டாவு
தர்சிக்குந்ந க்ரிய → த்ருஷ்டி
வடமொழியிலுள்ள தத்திதன், கிருத்து ஆகியவை மலையாள மொழியில் காணப்படவில்லை. இருப்பினும் மலையாள மொழியில் காணப்படும் இத்தகைய ஆக்கப்பெயர்களை நான்காக வகைப்படுத்தி, ஆக்கப்பெயர்களின் உருவாக்கத்திற்குப் பெயர், வினை, பண்பு, எண், சுட்டுப்பெயர் முதலானவற்றிற்குச் சேர்க்கப்பட வேண்டிய விகுதிகளை விளக்கிக் கூறுகிறர் ஏ.ஆர். ராஜராஜவர்மா. அடிப்படைத் தமிழிலக்கணம் என்னும் நூலில் எம்.ஏ. நூஃமான் ”பெரும்பாலான ஆக்கப் பெயர்கள் பெயர் அல்லது வினைச்சொற்களில் இருந்தே ஆக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார். எனினும் அவர் தரும் எடுத்துக்காட்டுகளுள் பெரும்பாலானவை பெயர், பண்பு, வினை போன்ற சொற்களில் இருந்து ஆக்கப்படுவதைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் கூறும் பெயராக்க விகுதிகளின் வகைகளைச் சுட்டுகின்றது.
| வரி.எண் | பிரயோகவிவேகம் | கேரளபாணினீயம் |
| 1. | சாமானிய தத்திதன் | நாமநிர்ம்மாயித தத்திதம் |
| 2. | அவ்விய தத்திதன் | பூரணிதத்திதம் |
| 3. | பாவ தத்தித்டன் | தன்மாத்திரத் தத்திதம் |
| 4. | தத்துவதத்திதம் |
சாமானிய தத்திதன் / நாமநிர்ம்மாயித தத்திதம்
பொதுப்பெயரை அடுத்து வரும் விகுதிகளைக் குறிப்பதே இத்தத்திதம். இதனைப் பிரயோகவிவேகம் சாமானிய தத்திதம் என்றும் கேரளபாணினீயம் தன்மாத்திரத் தத்திதம் என்றும் அழைக்கின்றன. வீரசோழியம் இவ்வாறு பெயரிட்டு வகைப்படுத்தவில்லையாயினும் சில பொதுவான விகுதிகளைச் சுட்டுகின்றன.
எ.டு
அன் – கெளரவன் – குமரமரபினன்
இயன் – ஆதித்தியன் – அதிதிமகன்
ஈனன் -குலீன்ன் – குலத்தினுள் விழுமியோன்
இகன்–தெளவாரிகன் – துவாரத்தில் நிற்பான்
ஏயன் – காங்கேயன் – கங்கையின் மகன்
வான் – குணவான் – குணத்தை நன்றாக உடையவன்
வதி – குணவதி – குணத்தை நன்றாக உடையவள்
அவ்விய தத்திதன் / பூரணிதத்திதம்
விகுதி பெற்று வரும் இடைச் சொற்களையே அவ்வியதத்திதன் என்கிறது பிரயோகவிவேகம். அதாவது சுட்டுப்பெயருள் பிளந்து நில்லாத இடப்பெயர்களும், எண் முதலியவை ஏழாம் வேற்றுமைப் பொருளோடு நின்றனவும் ஆகிய ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்களை அவ்விய தத்திதன் என்கிறது.
எ.டு
ஒருவயின், இருவயின் –எண்
அவ்வயின், எவ்வயின் – சுட்டுப்பெயர் பிளந்து நில்லாத இடப்பெயர்
வீரசோழியம் எண்ணுப்பெயருடன் வரும் தத்திதனை விளக்கவில்லை. எண்ணுப்பெயருடன் ’ஆம்’ என்னும் விகுதி இணைந்த வடிவம் தமிழ் மொழியில் சங்கமருவிய காலத்திலிருந்தே காணப்படுகிறது (இரண்டாம் சந்தி – மணிமே 30 -150) . மேலும்’’ஆவது’ என்ற விகுதி சேர்ந்த எண்ணுப்பெயர் வடிவம் (இரண்டாவது, மூன்றாவது) இன்றைய தமிழில் பயின்று வருகின்றன. கேரள பாணினீய ஆசிரியர் பூரணித் தத்திதத்தை,
’ஸங்க்யா நாமத்தில்ல மென்னு
வரும் பூரணிதத்திதம் (கே.பா .94)’
என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார். அதாவது, எண்ணுப் பெயர்களுடன் ‘ ஆம்’ என்னும் விகுதி சேரும்போது உருவாகும் பெயர்ச் சொற்களே பூரணித் தத்திதம் என்று அழைக்கப்படுகிறது.
எ.டு
ஒன்னு + ஆம் – ஒன்னாம்,
ரண்டு + ஆம் – ரண்டாம்,
நூறு + ஆம் – நூறாம்
பாவ தத்திதன் / தன்மாத்திரத் தத்திதம்
இது பண்புப்பெயர்கள் ஏற்கும் விகுதிகளைப் பற்றியதாகும். வலி, நெடு என்னும் குணத்தின் பின் மை, அம், பு, து, வு, கம் வல், அளவு, அதி என்னும் விகுதிகள் வரும் என்று வீரசோழியம் கூறியுள்ளது (வீ.சோ.55). இக்காரிகைக்கு உரையெழுதும் பெருந்தேவனார் குணமாவது நெடு, முறு, கரு, பசு, வெளு, கெடு, இள, தண், வெம், அரி, எளி, பெரு, செறு, பரு, நேர்.மலி, என இவை முதலாக வரும் என்று உரையெழுதியுள்ளார். பண்பின் முதல் நிலையோடும் ஆண், பெண் முதலாகிய பெயரோடும் மகர, ஐகாரமும் சிறுபான்மை உகரமும் பொருந்திவருவது பாவதத்திதன் என்று பிரயோகவிவேகம் கூறுகிறது. கேரள பாணினீயம் பல பண்புகளின் இருப்பிடமாகிய ஒரு பொருளின் ஒரு தனிப்பண்பை மட்டும் சிறப்பித்துக் கூறுவது தன்மாத்திரத் தத்திதம் என விளக்குகிறது.
எ.டு
செம்மை, சிறுமை, கறுமை,செறும, வெண்ம, புதும
தத்துவத் தத்திதம்
வீரசோழியம் தத்துவத் தத்திதனைத் தனியாகப் பெயரிட்டு விளக்கவில்லை எனினும் தத்திதன்கள் பயின்று வரும் பதினாறு இடங்களை 53, 54 அம் காரிகைகளில் விளக்கிக் கூறுகின்றது. அவையாவன, உண்ணும் இதனால் (வலையன்), உரைக்கும் இதனை (வேதியன் – வேதத்தினை உரைப்பவன்), உடையான் இது ( கொந்தத்தை உடையான் –கொந்தவன்), பண்ணும் இதனை (மருந்தைப் பண்ணுவான் – மருத்துவன்), பயிலும் இதனை (கூத்தன்), பயன் கொள்ளுமிதில் (வில்லி), எண்ணும் இதனை (சோதிடன்), இதனுக்கு நாயகன் (சிலம்பன்) ஈங்கு இருக்கும் (பட்டினவன்), நண்ணும் இதனை (பாண்டியன்), இதை ஒக்கும் (பொன்னன்), இங்குளன் (அகத்தன்), மகன் இவனுக்கு (ஆதித்யன்), மகன் இவளுக்கு (காங்கேயன்) இந்த வர்க்கத்தினன் (செம்பியன்), இவனைத் தெய்வமாகக் கொண்டவன் (பெளத்தன்). இன்னும் இவைபோன்ற பிறபொருளிலும் வரும் என்றும் வீரசோழியம் குறிப்பிடுகின்றது. பிரயோகவிவேகம் சாமானிய தத்திதன் வகைகளுள் இதனை அடக்கிக் கூறுகிறது. கேரள பாணீனியம் அது உள்ளது, அதனில் உள்ளது, அங்கிருந்து வருவது, அங்குத்தோன்றியது முதலான பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொற்களைத் தத்துவத் தத்திதம் என்று குறிப்பிடுகின்றது. இத்தகைய பெயர்ச் சொற்களின் உருவாக்கத்திற்கு அடிச் சொற்களுடன் ‘அன்’ விகுதியைச் சேர்க்க வேண்டும் என்றும் விளக்குகிறது (கே.பா. 92). இத் தத்துவத் தத்திதன் வீரசோழியம் கூறும் வகைகள் சிலவற்றை ஒத்ததாகும்.
எ.டு
|
|
வீ.சோ/பி.வி | கே.பா |
| அது உள்ளது | கள்ளன் → கள்ளத்தனத்தை உடையவன் | மூப்பன் → மூப்பை உடையவன் |
| அதனின் உள்ளது | பாண்டியன் → பாண்டிய நாட்டில் உறைபவன் | ஆலங்ஙாடன் சர்க்கர |
| அங்கிருந்து வருவது | – | கிழக்கன் காற்று |
ஆக்கப்பெயர்களை வடமொழியில் தத்திதன் என்பர். வடமொழிமரபைப் பின்பற்றி தமிழில் தோன்றிய வீரசோழியமும் ஆக்கப்பெயர் விகுதிகளைப் பட்டியலிட பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. தமிழில் பிற்காலத்தில் தோன்றிய அடிப்படைத் தமிழிலக்கணம் ஆக்கப்பெயர்களை வகைப்படுத்தவில்லை. எனினும் ஆக்கப்பெயர்கள் உருவாக்கும் முறையை விளக்குகின்றது. பயன்பாட்டியல் நோக்கிலே இவ்வாக்கப்பெயர்கள் இடைக்காலத்தில் தோற்றம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன.
பயன்பட்ட நூல்கள்
- இளயபெருமாள்.மா – கேரள பாணினீயம்(மொ.பெ),தமிழ்த்துறை, கேரளப் பல்கலைகழகம்,1977.
- கோபாலையர். தி.வே – பிரயோகவிவேகம், தஞ்சை சரஸ்வதிமகால், தஞ்சை, 1973.
- கோபாலையர். தி.வே – வீரசோழியமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும், நாச்சியார் அச்சகம், , திருச்சி,2005.
- ராஜராஜவர்மா. ஏ. ஆர் – கேரளபாணினீயம், டிசி. புக், திருவனந்தபுரம், 2000.
- மீனாட்சி சுந்தரம்.தெ.பொ – Foreign Models in Tamil Grammar, Kerala University Co – operative store press, Trivandrum,1974.
- வேலுப்பிள்ளை – தமிழ் வரலாற்று இலக்கணம், குமரன் புத்தக இல்லம் , சென்னை, 2002.
- ஹெப்சி ரோஸ் மேரி.அ – ’வீரசோழியம் நேமிநாதம் ஓர் ஒப்பாய்வு’ – அச்சிடப்படாத ஆய்வேடு, கேரளப்பல்கலைக்கழகம், திருவன்ந்தபுரம் – 2006
