Author: எஸ்,வி.வேணுகோபாலன்

  • சென்ற இடமெல்லாம் (தொலையும்) செருப்பு

    — எஸ் வி வேணுகோபாலன்

    வாழ்க்கை அனுபவம்: சென்ற இடமெல்லாம் (தொலையும்) செருப்பு

    Kolhapuri-chappalsமந்தைவெளி அம்மனுக்கும் எனக்கும் இருந்த உடன்படிக்கை யாருக்கும் தெரியாது. எத்தனை நாள் செருப்பை கோவில் வாசலிலேயே மறந்து போட்டுவிட்டு அருகே இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது நான் மூன்றாவது வகுப்புதான். எனது கால் அளவும், செருப்பளவும் சிறியது தான். இருக்கட்டுமே, ஒரு நாள், இல்லை ஒரே ஒரு நாள் திருடு போனதுண்டா… மாலையில் வீடு திரும்புகையில்,  இந்தாடா எடுத்துப் போட்டுட்டுப் போடா என் ராசா என்று சொல்வது மாதிரி அம்மனே காப்பாற்றி வைத்திருப்பாள் ஜோடி செருப்பை.

    ஆனால் செருப்பை கவன பிசகாக எங்காவது விட்டுவிட்டுத் தேடுவது, அல்லது தொலைப்பது என்பது எனது மரபணுவில் உள்ள பிரச்சனை என்பது உலகோருக்குத் தெரிய மறுக்கிறது. மாணவப் பருவத்தில் காசி விஜயம் மேற்கொண்ட போது, காசி விசுவநாதர் கோவில் வாசலில் எத்தனையோ முறை விட்டது ஒருபோதும் தொலையக் கிடையாது. தமிழர்கள் தங்குவதற்காக நம்மவர்கள் அங்கே சென்று கட்டி வைத்திருக்கும் சத்திர வாசலில் ஒரே ஒரு முறை கழற்றி வைத்தது, அடுத்த நொடியே காணமல் போய்விட்டது. வெளியே சொல்ல முடியுமா?

    ஆனால் செருப்பு தொலைத்த விதங்களில் இரண்டு மிகவும் ருசியானவை. இரண்டும் இரண்டு கவிதைகள். நாங்கள் அப்போதுதான் சென்னை ரங்கராஜபுரம் பகுதியில் ஓர் அவுட் ஹவுஸ் பகுதியாக இருந்த மிகச் சிறு வீட்டைச் சொந்தமாக்கிக் கொண்டு குடியேறி இருந்தோம். அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சி அந்த வீட்டை வாங்கியதில். மாமரங்கள். தென்னை மரங்கள். சுற்றிலும் சின்னஞ்சிறு செடிகள் போட இடம். அந்தக் குறுந்தோட்டப் பகுதியில் அழகான கிணறு. என்று அம்மாவுக்கும் அந்த வீடு கொள்ளையாகப் பிடித்தமாகிவிட்டது.

    அந்தத் தோட்டத்தில் கிணற்றடியில் அரை வட்ட சிமிண்டுப் பூச்சின் மீது ஒரு துணி தோய்க்கும் கல். எனது காலை நேரம் அங்கே நின்று பல் துலக்குவதும், பின்னர் குளிக்கப் போகுமுன் துணி தோய்க்க அங்கே போய் நின்று கொண்டு திரைப்பாடல்களை சத்தமாகப் பாடியபடி துணிகளை வெளுத்தெடுப்பதுமாகக் கழிந்து கொண்டிருந்தது.

    ஒரு ஞாயிற்றுக் கிழமை நண்பகலைத் தொடும் நேரத்தில் நான் பி பி ஸ்ரீநிவாசாக மாறிக் கொண்டிருந்தது தெரியாமல் எனக்குப் பின்புறம் சுவர் தாண்டி ஏதோ வந்து விழுந்த பெருஞ்சத்தம். திரும்பிப் பார்த்தால் பதினான்கு வயது கூட சொல்ல முடியாத ஒரு சிறுவன். காலில் ஒரே இரத்தம். என்னை அச்சத்தோடு பார்த்தபடி, தத்தித் தத்தி நடந்து வந்தான். “என்னப்பா, யாரு நீ, எங்கிருந்து ஓடி வர்ற…எதுக்கு சுவர் எகிறி குதிச்ச?” என்று கேட்டேன்.

    “சார், எங்க மாமா என்ன அடி அடின்னு அடிச்சுத் துவைச்சிட்டாரு சார்…தப்பி ஓடி வர்றேன்…குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க சார்” என்றான். பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பி பி எஸ் பாட்டைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சமையல் அறைக்கு ஓடினேன். என்ன ஏது என்று கேட்டுக் கொண்டே வந்த  அம்மாவிடம்,”பாவம் சின்ன பையன்…மாமா அடிச்சாருன்னு ஓடி வந்து குதிச்சிருக்கான் நம்ம வீட்டுக்குள்ள…தண்ணி தாகம் பாவம்” என்றபடி தோட்டத்திற்குப் போனேன். ஆனால் …பையனைக் காணோம்.

    எங்கே போயிருப்பான் என்று உள்ளே போய் தண்ணீர்ச் செம்பை வைத்துவிட்டுப் பார்த்தபோது, வாசல் வழியாக மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்கள் கழித்து மூன்று நான்கு பேர் ஓடி வந்தனர். “சார் சார், ஒரு பொடிப் பையன் உங்க காம்பவுண்ட் வழியாத் தானே குதிச்சான், எங்கே அவன்?” என்றனர். ” நீங்கதான் அவன் மாமாவா…பாவம், ஏன் போட்டு அடிக்கிறீங்க..ரத்தம் சொட்டச் சொட்ட வந்தானே.. “என்றேன்.

    “மண்ணாங்கட்டி, யாருய்யா சொன்னது நான் அவனுக்கு மாமான்னு. திருட்டுப் பய சார். எதையோ திருட எங்க வீட்டுக்குள்ள புகுந்தான். பார்த்துக் குரல்  கொடுத்ததும்,அப்படியே உங்க காம்பவுண்ட் சுவத்துல ஏறி குதிச்சிருக்கான். அங்கே பொத்தி வச்சிருக்கிற கண்ணாடிச் சில்லு குத்திக் கிழிச்ச காலில் இருந்து வந்த ரத்தமாயிருக்கும் சார் அது” என்றார் வந்தவரில் ஒருவர். போகட்டும் போ என்று அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து பார்த்தால், வீட்டு முகப்பில் விட்டு வைத்திருந்த செருப்பைக் காணவில்லை.. சரிதான் பொடிப் பையன் அன்போடு அந்தச் செருப்பையும் நகர்த்திக் கொண்டு போய்விட்டான் என்று தெரிந்தது. அப்போதும், பாவம் தண்ணீர் குடிக்காமல் போய்விட்டானே என்ற வருத்தமே அதிகம் இருந்தது.

    அதைவிட அருமையான செருப்புத் திருட்டுக்கு ஏமாற நான் திருவான்மியூர் சென்று குடியேற வேண்டியிருந்தது. அந்த வீட்டுக்கு இரண்டு பக்கம் வாசல்படி. முதல் நாள் இரவுதான் புது ஜோடி செருப்பை வாங்கி வந்திருந்தேன். முன்பக்க அறையின் ஓரம் இருந்தது அது. மறுநாள் அதிகாலை வழக்கம்போல், தண்ணீர்க் குழாயில் நீர் பிடித்துக் குடங்களைக் கொண்டு தரும் வேலைக்காரப் பெண்ணுக்காக ஒரு பக்க வாசல் கதவைத் திறந்து வைத்தேன். அப்படியே தரையில் கீழே உட்கார்ந்தவன் சொக்கித் தூங்கிவிட்டேன். விழித்தெழுந்து பார்த்தபோது இரண்டு குடம் தண்ணீர் பத்திரமாயிருந்தது. புது ஜோடி செருப்பு போயே போய்விட்டது.

    அது பிரச்சனை இல்லை. எனது மாமனாருக்கு நான் செருப்பை ஏமாந்து திருட்டுக் கொடுத்தது பற்றி விளக்கக் கடமைப் பட்டிருந்தேன். “தெரியல சார்…யாரோ வந்து எடுத்துப் போய்விட்டான்” என்றேன். அவருக்கு அடாத கோபம். உடனே எனது நாத்திகம் தான் அவருக்குத் துணைக்கு நின்றது – என்னைக் கடிந்து கொள்வதற்கு. வீட்டுக்கு நடுவே நின்றுகொண்டு , “ஒரு பயலும் இங்கே சாமி கும்பிடறதில்ல…ஒரு பூஜை, புனஸ்காரம் எதுவும் இங்கே நடப்பதில்ல…அதான் செருப்பு போச்சு. கொஞ்சமாவது பயபக்தி இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா” என்றார் உரத்த குரலில்.

    “நானாவது கோயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன்..இன்னும் என்ன எல்லாம் நடக்குமோ?” என்றபடி இன்னொரு வாசல் பக்கம் சென்றார். தனது செருப்பை எடுத்துப் போட்டுக் கொள்ளச் சென்றவர் நெருப்பை மிதித்தவர் மாதிரி துடித்தார். அவரது ஜோடி செருப்புக்களும் சேர்ந்தே காணாமல் போயிருந்தன.

     
     
     
     
    நன்றி: தமிழ் இந்து
    sv.venu@gmail.com
     
     
     
     

    படம் உதவி:  http://blog.zodomo.com/7-kinds-of-shoes-every-woman-must-own/mojris-and-kolhapuri-chappals-2/, http://blog.zodomo.com/wp-content/uploads/2012/03/Mojris-and-Kolhapuri-chappals-2.jpg

    http://kids.baps.org/storytime/bharatthegemofloyality.htm, http://kids.baps.org/storytime/photo/bharatthegemofloyality.jpg

    Share
  • இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளி 100 % தேர்ச்சி

    எஸ்.வி. வேணுகோபாலன்

    குறிச்சி ஐ பி இ ஏ பள்ளி 100 சதவீத தேர்ச்சி !

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி சிற்றூரில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி சாதனை புரிந்துள்ளனர். மாணவி நிஷா ஸ்ரீ 461 மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக வந்துள்ளார். ஆயிஷா சித்திகா சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். தேர்வு எழுதிய 22 மாணவர்களில் 12 பேர் 400 க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 13 பேரும், சமூக அறிவியலில் 16 பேரும் 90க்கு அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    தமிழ் வழி மற்றும் செயல்வழி கல்வி முறையில்இயங்கும் இந்தப் பள்ளியை நடத்தி வரும் ஐ பி இ ஏ கல்வி அறக்கட்டளை தலைமை அறங்காவலரும், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க பொதுச் செயலாளருமான கே கிருஷ்ணன், தாளாளர் சோமசுந்தரம் மற்றும் கல்விக் குழு தலைவர் லட்சுமி கோவிந்தராஜன், கல்விக்குழு உறுப்பினர்கள் தி தனபால், மாதவன், அமல்ராஜ், ஜி பாலச்சந்திரன், ரவி ஆகியோரும், தலைமை ஆசிரியை வாசுகி அவர்களும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நேரில் சென்று வாழ்த்தினர்.

    சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களது உயர்வுக்குப் பாடுபடும் அர்ப்பணிப்பு மிக்க பள்ளி ஆசிரியர்களை கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு பாராட்டியது.

    கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் பேரா. மணி, குறிச்சி பள்ளியின் வழிகாட்டிகளில் முக்கியமானவரான தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டு செய்தி அறிந்தவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

    வழக்கம்போலவே, ஹோமியோபதி மருத்துவ தம்பதியினர் பி வி வெங்கட்ராமன்-ஜெகதா இருவரும் இரவு பத்தரை மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்து, பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லுமாறு கேட்டுக் கொண்டு, ரூ 5000 நன்கொடை வழங்கிவிட்டு விடைபெற்றனர்.

    இந்தப் பள்ளியின் வெற்றிகரமான இயக்கம் இத்தகு அன்பர்கள் பலரது தொடர் பங்களிப்பும், ஊக்க மொழியும், அக்கறையும், கரிசனமும்தான்!

    ***********

    Share
  • பெண்கள் நிலை , தேர்வு முடிவுகளில் முதலிடம் – சமூகத்தில் எந்த இடம் ?

    — எஸ் வி வேணுகோபாலன்

    toppersகடந்த ஆண்டு சென்னை பள்ளியொன்றில் மகாகவி பாரதி குறித்த சிறு உரையாடலுக்குப் போயிருந்த அனுபவம் மறக்க இயலாதது. எட்டாம் வகுப்பு பிள்ளைகள் – ஆண், பெண் இரு பாலருமாக 27 பேர் கொண்ட வகுப்பு அது. இருபது நிமிட உரையை அடுத்து கேள்வி பதில்கள் என்பதாக அமைத்துக் கொண்டோம் பாரதி குறித்த எங்களது தேடலை. பாரதி அறிமுகம், அவரது பன்முகத் தன்மை குறித்தெல்லாம் நேரடி செய்திகளாக அல்லாமல் வெவ்வேறு நிகழ்வுகளோடு கலந்து சுவாரசிய கதியில் போய்க் கொண்டிருந்தது விவாதம். எத்தனை எத்தனை அறிவார்ந்த கேள்விகள். தனது வகுப்பு குழந்தைகளுக்குத் தமிழிலும், பாரதியிடத்தும், பொது அறிவிலும், வரலாற்றுச் செய்திகளிலும் இவ்வளவு ஈடுபாடா என்று தமிழ் ஆசிரியை பெருமிதத்தோடு வியந்து நின்றார். முத்தாய்ப்பான கேள்வி இன்னும் காத்திருந்தது. ஒரு சிறுமி அழகாகக் கேட்டார், “சார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்றுதானே சொன்னீங்க. அப்ப பாரம்பரிய வைத்தியத்துக்கு என்ன பேரு?” என்றார். “பாட்டி வைத்தியம்” என்றேன் நான். “அப்ப அவுங்கள எல்லாம் சமூகம் டாக்டரா அங்கீகரிக்காதோ ?” என்றார். அசந்து நின்றேன்.

    துணிவு, அறிவு, நுட்பம், பார்வை என பலவகையிலும் தங்களைப் பெண்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோது தொடர்ந்து இவ்வாண்டும் பெண்களே முதலிடம், அதிக சதவீதம் என ஊடகங்கள் அறிவித்தன. இப்படி கரையை நோக்கி ஓங்கரித்தும், ஆர்ப்பரித்தும் பெருத்த ஓசையோடு வரும் மிக உயரமான கடல் அலைகள் பல நேரம் மிக சாதாரணமாகத் தேய்ந்து அதிக கவனம் பெறாது கரையை பெயருக்குத் தொட்டுவிட்டுக் கடலுக்குள் திரும்புவதைப் பார்க்கிறோம். அதிக சதவீதத் தேர்ச்சி பெற்ற மாணவியர், முதலிடம் பெற்ற பெண் குழந்தைகள் பின்னர் சமூகத்தில் எங்கே காணாமலே போய்விடுகின்றனர்? அல்லது எப்படி காணாமல் ஆக்கப் படுகின்றனர்?

    அடிப்படையில் பாலின வேறுபாட்டில் ஊன்றப் பட்டிருக்கும் சமூகத்தில் குழந்தை வளர்ப்பிலிருந்து, சமூகப் பார்வையின் நிழல் படிப்பிலும், திருமண நேரத்திலும், பிந்தைய வாழ்க்கைப் பாதையிலும் படரத் தான் செய்கிறது. தங்களது சொந்தத் தேடல்களை, விருப்பங்களை, கேள்விகளை மனித இனத்தில் சரிபாதி அடுத்த பாதியிடம் ஒப்புக் கொடுக்க நேருவது எத்தனை பெரிய வன்முறை என்பது ஒரு கணம் சிந்தித்தால்தான் புரியும்.

    உயர் படிப்புக்குப் போகும் பெண்களில் கூட (இந்த வாக்கியத்திலே செய்வினை செயப்பாட்டுவினை மயக்கம் ஒன்று இருக்கிறது – உயர் படிப்புக்கு அனுமதிக்கப் படும் என்று இருக்க வேண்டும்) கணிசமான பகுதியினர் வேலைக்கான உத்தரவுகளை வாங்கி இந்தப் பக்கம் வைத்துவிட்டு நண்பர்களிடம் தங்களது திருமண அழைப்பிதழை வழங்குபவர்களாக மாற வேண்டியிருக்கிறது.

    ‘நீ என் குழந்தைகளின் தாய், அதை நான் மறுத்துவிடுவேனாகில் நீ வெளியேற வேண்டி இருக்கும்’ என்கிறது வங்காளி மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எந்த விதத்திலும் நிராகரிக்கப் படக் கூடாதவளாக ஒரு பெண் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதிலிருந்து என்று கேட்கக் கூடாது. எல் கே ஜியிலிருந்தே இந்த உணர்வு ஊட்டப்படுகிறது. சொல்லப் போனால் அதற்கும் முன்பிருந்தே!

    மாலனின் தப்புக் கணக்கு என்கிற அருமையான சிறுகதையை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் கதை நேரம் தொடரில் குறும்படமாகப் பார்த்திருப்பீர்கள். பள்ளியில் ஒரு கணக்கைத் தனது சொந்தப் புரிதலில் வித்தியாசமாக அணுகிப் போட்டிருப்பாள் அந்தச் சிறுமி. மதிப்பெண்கள் மறுக்கப் பட்டிருக்கும். நியாயம் கேட்கப் புறப்படும் தாத்தாவுடைய பயணத்தின் கடைசி மோதல் தனது மகனோடு நடக்கும். ‘அவ ஒரு பெண் குழந்தை. சுயமா எதையும் யோசிக்க அனுமதி கிடையாது. நாளைக்கு வளர்ந்த பிறகு ஏராளமான பிரச்சனை ஏற்படும். என்ன சொல்லிக் கொடுக்கிறாங்களோ அதைத் தான் அவ கேட்டுச் செய்யணும்’ என்று குழந்தையின் தந்தை பேசும் வசனம் அந்தக் குறும்படத்தின் மிக நுட்பமான இடம். விவாதக் களம்.

    கால காலமான இந்தப் பண்பாக்கம் இயல்பான செய்தியாக மரபணுக்கள் வழி கடத்தப் படுகிறது. மத உணர்வுகளால் நிறுவப் படுகிறது. ஆதிக்கப் போக்கினால் அமலாக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் நவீன சமூகத்தின் வளர்ச்சியில் மேம்போக்கான மாற்றங்கள் நிகழ்வதன் வேகம் இந்த அடிப்படை நீரோட்டத்தை உணர இயலாதபடி அத்தனை நேர்த்தியாக சமூகத்தின் தோற்றத்தைத் திருத்திக் காட்டுகிறது.

    அண்ணன் தம்பிகள் எப்போது வீடு திரும்பினாலும் கேள்வி கேட்காத குடும்பம், ஒரு பெண் அப்படி நினைத்தபடி நடந்து கொள்ள இயலாது என்பதைப் பேசும் பாலபாரதி கவிதை ஒன்று, அப்படியெல்லாம் வாதம் செய்யும் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்றும், ‘இவளை’ யார் தலையிலாவது கட்டித் தள்ளிவிட வேண்டும் என்றும் குடும்ப அங்கத்தினர்கள் பேசுவதை எடுத்துச் சொல்கிறது.

    தான் எழுதிய கதைகளைத் தனது வாழ்நாளில் அச்சில் பார்க்காது மறைந்துபோன ரங்கநாயகி என்ற எழுத்தாளர் பற்றிய பேரா. கே பாரதி அவர்களது சிறப்பான கட்டுரை (தி இந்து: பெண் இன்று: மே 11), தலை சிறந்த எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய பெண்மணி என்று அவரைப் போற்றுகிறது. ஆனால் சமூகம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. இரா.நடராசன் அவர்களது புகழ் பெற்ற ஆயிஷா கதையின் கடைசியில், அந்தத் தேடல் மிக்க சிறுமி எழுப்பிய கேள்விகளின் வரிசையில் ஏன் பெண் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகவில்லை என்பது முக்கியமான ஒன்று. குடும்பம், சமூகம் என்கிற நிறுவனங்கள் பெண்கள் சுதந்திர சிந்தனையாளர்களாக உருவாவதை அனுமதிப்பதில்லை. இவற்றின் தேவை, நோக்கம், அடிப்படை கட்டுமானம் அப்படி.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலத்திலேயே சமூகம் நிற்கிறதா என்று கேட்கலாம். இல்லை, நிச்சயமாக இல்லை! எண்பதுகளில் வந்த மிர்ச் மசாலா என்ற அருமையான இந்தி திரைப்படத்தில், தனது பெண் குழந்தை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டதைப் பார்த்து மிகவும் கோபம் கொள்ளும் கிராமத் தலைவன் தன்னுடைய மனைவியிடம், உனக்கு எத்தனை துணிச்சல், நெஞ்சுரம் இருந்தால் இந்த வேலையைச் செய்திருப்பாய் என்று மிரட்டும் இடம் ஒன்று வரும். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று அறியப்படும் சாவித்திரி பாய் ஃபுலே வீதியில் பெண் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்கையில் அவர் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது என்று படித்திருக்கிறோம். நாகரிக சமூகம் அந்த இடத்தைப் பெருமளவு (பெருமளவு என்றுதான் சொல்ல முடியும்!) கடந்து வந்திருக்கிறது. என்றாலும், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மிடியத்தாலும், அதற்கு அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப் பிடிக்கும் தன்மைக்குப் பெண்களை சமூக வெளி அனுமதிக்கிறதா என்பதுதான் கேள்வி.

    ஊடக விவாதங்கள், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பெண் சுதந்திரம், பாலின சமத்துவம் குறித்த புரிதல்களில் உள்ள சிக்கல், மாற மறுக்கும் சமூக போக்கு இவற்றைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். கவுரவக் கொலைகளின் பின்னணியில் தெறிக்கும் வன்மம் சாதிய விஷயத்திற்கும், பெண் அடிமைத்தனத்திற்கும் ஒருசேர இடம் அளித்திருப்பதைப் பார்க்க முடியும்.

    celebration of topperமாநகரங்களின் கடை வீதிகளில், தொழில் நுட்பத் துறையில், அலுவலகங்களில் பெண்கள் நிறைந்திருப்பது என்பது ஒன்று. அதிகாரப் பகிர்வில், தம்மைக் குறித்த முடிவுகளை எடுப்பதில், ஜனநாயக அமைப்பின் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதில் பெண் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி வேறு! எதிர்பாராத விருந்து, தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வு, சமாளிக்க இயலாத மருத்துவச் செலவு, செய்தே தீர வேண்டிய அன்றாட வேலைப் பளு இவற்றை கால காலமாக வழி வழி வம்சாவழியாக நிர்வகிக்கத் தெரிந்திருக்கும் பெண்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார பெருவெளியில் செயலாற்றத் தெரியாதா?

    மரபார்ந்த பார்வையை வெவ்வேறு உத்திகளில் தொடர வைக்கும் ஊடகங்கள், மாற்றங்களுக்கான தூண்டுதல் தவிர்க்கப்படும் பாட திட்டங்கள், இளமைப் பருவத்திலிருந்தே சமத்துவமற்ற வளர்ப்பு முறை, வீட்டினுள்ளும், வெளியேயும் நடமாடும் பண்பாட்டுக் காவலர்களாக பழைய கண்ணோட்டத்தைக் கட்டிக் காப்பாற்றும் மனிதத் திரள் போன்ற அம்சங்கள் நவீன உலகின் புதிய அம்சங்களை வாரிச் சுருட்டி விழுங்கிக் கொண்டே அடிப்படை விதிகளை மாறாது பார்த்துக் கொள்கின்றன.

    பெண்களுக்கிடையே ஒட்டுமொத்த விடுதலைக்கான முழக்கம் எழுப்புகையில் சாதிய, மத வேறுபாடுகளின் மடியில் கோலோச்சும் சக்திகள் அப்படியான கலகக் குரல்களை ஒன்று சேரவிடாது பார்த்துக் கொள்வதில் கடுமையாக செயல்படுகின்றன. பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதை இன்று பாதுகாப்பற்றதாக உருமாறி நிற்கும் பொதுவெளி சாத்தியமற்றதாக அறிவிக்கிறது. பெண்களின் உடல் மீதும், உளவியல் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலுக்கான பழி அனைத்தும் பெண்கள் மீதே சுமத்தப்படும் விஷமத்தனம், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்று சொல்லாமல் சொல்கிறது.

    பள்ளித் தேர்வு முடிவுகள் வருகையில் முதல் பக்கத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் சிரிப்பும், கொண்டாட்டமுமாகக் காட்சி அளிக்கும் பெண் குழந்தைகள் காட்சி முடிந்து திரை விழுந்தபிறகு காணாமல் போய்விடும் தன்மை மாற்றப் படவேண்டும். சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று ஆண்களோடு பெண்களும் முன்னெழுந்து வரும் நிலைக்கான போராட்டம் வெகு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. அதற்கான குரல் குடும்ப ஜனநாயகத்திலிருந்து புறப்பட வேண்டி இருக்கிறது. முற்போக்காளர்களது தீர்மானமான செயல்பாட்டைக் கோருகிறது.

     
    நன்றி: தீக்கதிர்: மே 15, 2014

    Share
  • ஏப்ரல் 23: உலக வாசகர்களின் பிறந்த நாள்

    ஏப்ரல் 23: உலக வாசகர்களின் பிறந்த நாள்

    எஸ் வி வேணுகோபாலன்

    images (3)
    எல்லா வேறுபாடுகளையும் கடந்த ஒரு திருநாளாக புத்தக தினம் பிறக்கிறது. உலக வாசகர்களின் பிறந்த நாள் இது. பெரிய பெரிய படங்களைக் கொண்ட பல வண்ண புத்தகத்தை ஒய்யாரமாகக் கொண்டாடிப் படித்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுமியும், முகத்தருகே புத்தகத்தை வைத்துக் கண்களை இடுக்கியவாறு படித்துப் பெருமிதம் கொள்ளும் மூத்த குடிமகன் ஒருவரும் ஒரு சேர பூரிப்பு கொள்ளும் அற்புத தினம் அல்லவா இந்த நாள்!

    திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும் என்னைக் கிறங்கடிக்கும் செய்தியாக இருப்பது, ஸ்பெயின் தேசத்தின் கேட்டலோனியா நகரத்தில் இந்த நாளைக் காதலர் தினம் போலக் கொண்டாடும் விதம்! ஆடவர்கள் தமது மனம் கவர்ந்த நங்கையர்க்கு ரோஜா மலர்களைப் பரிசாக அளித்து மகிழ்வார்களாம். பதிலுக்கு, அந்தப் பெண்கள் புத்தகங்களை வழங்குவார்களாம். இந்த நாளில் 4 மில்லியன் மலர்களும், 8 லட்சம் நூல்களும் கை மாறும் என்று தெரிவிக்கிறது இணையதள குறிப்பு ஒன்று. ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் சரிபாதி இந்த ஒரு நாளில் விற்றுவிடுமாம். புத்தகக் காதலர்களும், காதல் அகத்தினரும் நீடூழி வாழ்வார்களாக!

    ஒரு பெரிய ஆளைக் கூட மாய மந்திரம் போட்டுக் குறுக்கி ஒரு குடுவையில் அடைத்துவிடுகிற மந்திரவாதி போல, இந்த உலகத்தையே-அதன் வரலாற்றையே-அரிய மனிதர்களையே-அருங்காட்சி அனைத்தையுமே…ஒரு சொடுக்கு போட்டுக் குடுவையில் அடைத்ததுமாதிரி ஒரு புத்தகம் நம் எதிரே இருக்கிறது. எத்தனை எத்தனை குடுவைகளை நம்மால் விடுவித்துப் பார்க்க முடிகிறதோ அத்தனை இன்பங்கள் இந்த வாழ்வில் நமக்கு வசப்படுகிறது. அதன் பார்வையே முதல்கட்ட உற்சாகத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைத்துவிடுகிறது.

    நாம் கதவைத் திறந்ததும் நம்மோடு பேசத் தொடங்குகிற சித்தராக இருக்கிறது புத்தகம். அந்தக் குரல் மூடி வைத்த அந்த நூலில் நமக்காக எத்தனையோ காலமாகக் காத்திருக்கிறது. நமக்குப் போதும் என்கிறபோது, கதவை மீண்டும் சாத்தி வைத்தால் சடக் என்று அமைதியாகி அடுத்த திறப்புக்குக் காத்திருக்கிறது அந்தக் குரல். யார் தட்டியபோதும் திறக்கிற அந்தக் கதவு, கரையான்களிடமும் பேதம் பார்க்காமல் தன்னை ஒப்புக் கொடுத்து ஒரு தியாகப் பெருவாழ்வுக்குத் தயாராகிறது.

    அவரவர் கற்பனைக்கு ஏற்ப, அவரவர் வேகத்திற்குப் பொருத்தமாக, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் முன்பின்னாகக் கூடக் காட்சிகளை இயக்கும் திரையரங்கமாக இருக்கிறது ஒரு புத்தகம். ஒளியுமிழும் அதன் திரைச்சீலை, படத்தைப் பார்ப்பவர் ஏரிக்கரையில் அமர்ந்தாலும், பயணத்தின் ஊடே வருகை புரிந்தாலும், சமையல் அறை வேலைகளின் இடைவெளியில் எட்டிப் பார்த்தாலும் அதே மதிப்போடும், பொறுப்போடும் தனது திரையிடலை அன்போடு நிகழ்த்துகிறது. பழைய படங்களின் புதிய காப்பிக்காக ஏங்காத வாசகர் உண்டா! எத்தனை எத்தனை கிளர்ச்சியை உருவாக்குகிறது இந்த வாசிப்பு!

    பழைய புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி அதன்மீது போதை கொண்டு அலைவோரைக் குறித்து ஒரு கட்டுரையை பதினைந்து ஆண்டுகளுக்குமுன் தினமணிக் கதிரில் வாசித்த நினைவு வருகிறது. ஆக்கபூர்வமான போதை அது! இனி புத்தகமே வாங்கமாட்டேன் என்று சொல்லிச் சென்ற நண்பர் ஒருவரை அடுத்த வருடமே புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன். மது அருந்தாவிட்டால் என்ன, பழகிய கடைக்குப் போய்வருவதில்லையா, அப்படித்தான் இதுவும் என்றார் அவர்!

    வேறு ஒரு நண்பர் எப்போது சந்திக்கும்போதும் ஜோல்னாப் பையைப் பிடுங்கி உள்ளே என்ன புத்தகம் இருக்கிறது என்று ஆராய்வார். இன்னொருவர், கடைசியாக என்ன புத்தகம் வாசித்தீர்கள் என்றுதான் பேச்சையே தொடங்குவார். இப்படியான ஜீவிகள் அடுத்தவர் வாசிப்பைத் தூண்டவும், வாசிப்பின் தூதுவர்களாகவும் அமைந்துவிடுகின்றனர். பகிர்வு மிகப் பெரிய வாசிப்புத் தளம். தாங்களாக வாசிக்க இயலாதவர்கள்கூட இப்படியான கேள்வி ஞானத்தில், ஒரு கட்டத்தில் தேடித் பிடித்து வாசிக்கத் தொடங்குகின்றனர். மறைந்த அற்புதக் கலைஞர் பூர்ணம் விசுவநாதன் அவர்களது குழுவில் நடித்துவந்த ரமேஷ் என்ற வங்கி ஊழியரது பணி நிறைவு விழாவில் பேசிய குருகுலம் நாடகக் குழு இயக்குனர் பூவராக மூர்த்தி, எப்போது பார்க்கும்போதும் இவரைப் படிக்கவில்லையா அவரைப் படிக்கவில்லையா என்று கேட்டுக் கேட்டு எத்தனையோ எழுத்தாளரது படைப்புகளை ரமேஷ் தன்னை வாசிக்க வைத்த உத்தியைக் குறிப்பிட்டார். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறும் வித்தியாச கோஷ்டிகள் இவர்கள்.

    இந்த ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் அன்று , வாசிப்பு குறித்த எனது அனுபவங்களை எல்லாம் புரட்டிப் போட்டாள் ஓர் ஒன்பது வயது சிறுமி. திருவான்மியூர் பனுவல் அமைப்பின் சமூக நீதி மாத நிகழ்வுகளில் அன்று பீமாயணா என்ற படக் கதை வடிவிலான அம்பேத்கர் வரலாறு புத்தகத்தை அறிமுகப் படுத்திப் பேசிய அந்தக் குழந்தையின் பெயர் சைதன்யா. கையில் எந்தக் குறிப்பும் அற்று, ஒரு பிசிறு இல்லாமல், சுமார் இருபது நிமிடங்கள்போல அத்தியாயம் அத்தியாயமாக அவள், அம்பேத்கரின் ஆளுமை குறித்து தான் அடைந்த வியப்பின் பிரதிபலிப்பை எடுத்து உரையாற்றிய விதம் பார்வையாளரை அசத்தியது. வண்டிக்காரர் இளக்காரமாகப் பார்த்தார் என்ற வாக்கியமும், பின்னர் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கையில், அதிலும் அம்பேத்கருக்கு ஒரு நன்மை இருந்தது. தீண்டாமை குறித்துப் புரிந்து கொள்ளவும் போராடவும் அவருக்கு அது உதவியது என்ற சொல்லாடலும் நுட்பமாக இருக்கும் அவரது வாசிப்பை உணர்த்தியது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் நடித்திருக்கும் இந்தச் சுட்டிப் பெண், ஏற்கெனவே எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது குழந்தைகளுக்கான கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விருது வாங்கி இருப்பவர். வலைப்பூவில், கவிதைகளை எழுதித் தள்ளுபவர். இந்தக் குட்டிப் பெண்தான், இணையதள சாட்டில் பதில் போடத் தவறியபோது என்னை இறந்து விட்டீர்களா என்று கேட்ட தேவதை.

    வாசிப்பு இறக்காத வரை மனிதர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள் என்றே தோன்றுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இந்த நாள், உண்மையில் வாசகர்களின் பிறந்த நாள்! உலகம் முழுக்க பிறந்த நாள் கொண்டாடும் வாசகர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    **********
    நன்றி:தி இந்து நாளிதழ்: ஏப்ரல் 23, 2014

    படத்திற்கு நன்றி:

    http://www.catchy.ro/author/adina-dinitoiu

    Share
  • ஒருபொதுக் கூட்ட மேடையின் செலவு வெறும் 2,500 ரூபாய்

    எஸ். வி. வேணுகோபாலன்

    acs

    திருச்சியில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பேசுகிறார்.

    திருச்சி, ஏப். 17 -தஞ்சை-கந்தர்வக்கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் படாடோபம்-பகட்டாரவாரம் எதுவுமின்றி எளிமையிலும் மிக எளிமையாக நடைபெற்றன என்று `தி இந்து’ நாளிதழ் புகழாரம் சூட்டி யிருக்கிறது. சமீபத்தில் தஞ்சை-கந்தர்வக் கோட்டை-திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து தி இந்து நாளிதழின் திருச்சி, புதுகை செய்தியாளர்கள் ஒரு தொகுப்பினை தி இந்து நாளிதழில் வெளியிட்டிருக் கிறார்கள். அதன் சாராம்சம் வருமாறு: எவ்விதமான படாடோபமோ, பகட்டாரவாரமோ இன்றி நடைபெற்ற ஒரு முக்கிய பிரமுகரின் பிரச்சாரம் என்றால் அது திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்தான்.

    ராட்சச கட்-அவுட்டுகள் கிடையாது, பெரிய பெரிய பதாகைகள் கிடையாது, டிரம் சத்தம் கிடையாது, மாபெரும் பொதுக்கூட்ட மேடை கிடையாது, எல்லாவற்றிற்கும் மேலாக எங்கேயும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் படவில்லை. நம்பமுடியாதுதான், ஆனால் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் பொதுக்கூட்ட நிகழ் வுகள் அவ்வாறுதான் நடந்தன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலும், திருச்சியிலும் அவர் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அவரைப் போலவே மிகவும் எளிமையுடன் நடந்தன. இவ்விரு இடங்களிலும் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை வேட் பாளராகத் திருச்சி தொகுதியில் போட்டியிடும் எஸ். ஸ்ரீதருக்கு வாக்களிக்குமாறு கோரி உரை நிகழ்த்தினார்.

    இவ்விரு இடங்களிலுமே மிகவும் குறைந்த செலவிலான திறந்தவெளி மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இடதுசாரிக் கட்சித் தலைவர்களின் படங் களுடன் ஒவ்வொரு மேடையின் பின்புறமும் ஒரேயொரு ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. மேடையையொட்டி கட்சிக்கொடிகள் பறந்தன. கட்சிஊழியர்கள் சிவப்பு டி-ஷர்ட்டுகளை அணிந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். இவ்விரு இடங்களிலுமே மேடைக்கான செலவு 2500 ரூபாய்க்கும் குறைவு என் பதைக் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “ஒவ்வொரு கூட்டத்திற்கும் மேடை, மைக் செட்டு அமைப்பு,

    நாற்காலிகள், மின்விளக்கு வசதிகள் என அனைத்துக்குமே 30 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவு செய்திருக் கிறோம்,’’ என்று வேட்பாளர் எஸ். ஸ்ரீதரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட் டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னதுரையும் கூறினார்கள். மேடையில் மின்விசிறியோ ஏர் கூலரோ கூட வைக்கப்பட வில்லை.தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி முடிவடைந்தபின் மாணிக் சர்க் காரை, கந்தர்வக்கோட்டை நிகழ்ச் சிக்காக அழைத்துச் செல்ல புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அவரை அணுகியபோது, கட்சி யின் மாவட்டக்குழுவுக்குச் சொந்தமான காரிலேயே கந்தர்வக் கோட்டை சென்றுவிடலாம் என்று மாணிக் சர்க்கார் கூறியிருக் கிறார். எனினும், “கட்சிக்குச் சொந்தமான கார் சரிவர இயங்காத நிலையில் இருந்ததால், டாக்சி ஏற்பாடு செய்து அவரை அழைத்து வந்தோம்,’’ என்று எம். சின்னதுரை தெரிவித்தார்.

    “கூட்டத்தினரிடையே அவர் பேசிக்கொண்டிருக்கையில்கூட பக்கத்திலிருந்த டீக் கடையி லிருந்துதான் 6 ரூபாய்க்கு டீ வாங்கி அவரிடம் கொடுத்தோம். அதைத்தான் அவர் பருகினார். அவருக்கு என்று நாங்கள் செலவு செய்தது அந்த 6 ரூபாய் மட்டுமே,’’ என்று அவர் மேலும் கூறினார்.திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போதும் பொது மக்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. கூட்டம் நடைபெற்ற இடத்தில் கூட போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணிக் சர்க்காருக்கு இசட்பிளஸ் செக்யூரிட்டி தரப்பட் டிருந்தபோதிலும், பாதசாரிகள் எவ்வித இடையூறுமின்றி மிகவும் சுதந்திரமாக பொதுக்கூட்ட மேடையினருகே வரைசெல்வதற்கு அனுமதிக்கப்பட் டிருந்தார்கள்.1998லிருந்து திரிபுராவின் முதல்வராகத் தொடர்ந்து பதவி வகித்து வரும் உருக்கு போன்றமனிதரான மாணிக் சர்க் கார், திருச்சி கூட்டம் முடிந்தபின் திருச்சி ரயில்நிலையத்தில் பிர முகர்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சென்னை செல்லும் ராக் போர்ட் எக்ஸ் பிரசில் ஏறுவதற்கு முன் சாப் பிட்டது என்ன தெரியுமா? ஒரு சில இட்டிலிகள் மட்டுமே.

    Share
  • அன்பின் முகவரி

     

     

    எஸ் வி வி 

    unnamed (1)

    அன்பின் முகவரி உறைந்துவிட்டது
    நெல்லை 21 E சுடலை மாடன் தெருவில்

    அந்தத் தொலைபேசி முனையில்
    ஹலோ …என்ற வெள்ளந்திக் குரல்
    ஒலிக்காது இனி
    அழைப்பவர் அடையாளம் பிடிபட்ட மாத்திரத்தில்
    வெடித்துப் புறப்படும் அந்தக்
    குதூகல தோழமைச் சிரிப்பின் பரவசம்
    வாய்க்காது ஒருபோதும் இனி

    நிபந்தனையற்ற வாஞ்சையை
    திணறத் திணறப்
    பொழியும் அருவி தென்படுமோ இனி…

    சுமக்க மாட்டாது அஞ்சல்காரர்
    ஏந்திவரும் கடிதங்கள், புத்தகங்கள்,
    பருவ இதழ்கள் ஏங்கக் கூடும்
    எதிர்பார்த்து வந்த
    ஈரமான இதயத்தைக் காணாது.

    தந்தி சேவை நிறுத்தப்பட்ட ஆபத்து
    வந்து சேரக் கூடும்
    (அவர் அதிகம் எழுதிக் கொண்டிருந்த)
    அஞ்சல் அட்டைகளுக்கும் !
    அடுத்தவரைப் பாராது
    வேகமாகக் கடந்துபோகும்
    அவசர சமகால வெளியில்
    பகிர்ந்து கொள்ளவும் பாராட்டி மகிழவுமான
    ஊக்கமொழியாளரது மறைவு
    உளவியல் துறைக்குமான இழப்பு

    வயது சமாதானம் செய்துவிட
    முடியாத மரணங்களுக்கான
    துயரம் அளவிட முடியாதது

    ஆனாலும்

    செல்விருந்தோம்பி
    வருவிருந்து பார்த்திருக்கும்
    இலக்கியப் பெருந்தேடல் மிக்க
    அவரது கண் பார்வையின் நீட்சி
    காலத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில்
    உணரப்படவே செய்யும்
    வர்க்க சமரசமற்ற
    கருத்தோட்டத்தை அடைகாக்கும்
    சமத்துவ உலகுக்கான
    வேட்கையை வளர்த்தெடுக்கும்
    மனிதகுல விடுதலைக்கான
    கீதத்தை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்.

    ************
    நன்றி: தீக்கதிர் (மார்ச் 27, 2014)

    Share
  • கடைசி தலைமுறை குருவிகளுக்காக…..

     
    எஸ் வி வேணுகோபாலன்

    images (7)
    தினம் பார்த்துக் கொண்டிருந்த images (5)
    பறவைகளுக்காக
    ஒரு தினம் கொண்டாடுகிறது சமூகம்

    வாழும்போது புறக்கணிப்பவர்களை
    மறைந்தபிறகு கும்பிடுவதுபோல

    கேட்கத் தவறிய சங்கீதத்தை
    எழுத்தில் வாசித்து ஏங்குவது போல

    வறண்டு போன ஆற்றின் மணலில்
    நதியின் பெயரை எழுதுவது போல

    ஆனால், பாவம்
    கடைசி தலைமுறை குருவிகள்
    அவை அறியாது
    இவை எதையும்
    இவற்றுக்குப் பின் வருவதையும் !

    Share
  • “தாய்மொழி வழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள்…..”

    தொகுப்பு: எஸ். வி. வேணுகோபாலன்

    முனைவர் ம. திருமலை,

    துணைவேந்தர்,

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    “கிராமத்தில் மாட்டுக் கொட்டகை போன்ற இடத்தில் நடத்தப்பட்டுவந்த  பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்த என்னை சோழவந்தான் உயர்நிலைப் பள்ளியில் கொண்டுவந்து போட்டார்கள். இங்கே சொல்லத் தக்க மதிப்பெண்கள் எதையும் நான் பெற்றிருக்கவில்லை. நான் தேற மாட்டேன் என்றார்கள். எனினும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டேன். முழுக்க முழுக்கத் தாய்மொழிவழியிலேயே கல்வி பயின்றவன். இப்போது உங்கள் முன் ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தராக நிற்கிறேன்…..எனவே பெற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன்… மதிப்பெண்களை வைத்துக் குழந்தைகளை எடை போடாதீர்கள்… குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் நல்ல சாதனையாளர்களாக வர வாய்ப்பு உண்டு.

    “காலனி ஆதிக்கம் இருந்த நாட்களில், அர்பட்நாட் என்ற ஆங்கிலேயர் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகப் போனபோது, அவரது வங்கியில்  பணம் போட்டிருந்தவர்கள் பட்ட பாடுகளை மகாகவி பாரதி தமது கட்டுரையில் எழுதினார். நாமே ஒரு சுதேசி வங்கி தொடங்கினால் என்ன என்று அவர் விடுத்த வேண்டுகோளில் இருந்து பிறந்ததுதான் இந்தியன் வங்கி. பின்னர் அதே அர்பட்நாட்டின் கட்ட்டடத்தையும் வாங்கி அங்கேயே இந்த வங்கி இயங்கத் தொடங்கியது. அதன் ஊழியர்கள் எங்களுக்குச் சமூக அக்கறை உண்டு என்று கம்பீரமாக நடத்தும் இந்தத் தொழிற்சங்க சேவை போற்றுதலுக்குரியது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துதலுக்கு உரியவர்கள்.

    இங்கே தலைமை ஆசிரியை வாசித்த ஆண்டறிக்கையில், இந்தப் பள்ளியில்  பிரம்படி இல்லை. ரேங்க் கார்டு இல்லை என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேங்க் கார்டு கொடுத்ததும் இந்த அம்மாக்கள் உடனே அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு ஒப்பிடுவார்கள். இது எங்கே கொண்டுபோய் விடும் தெரியுமா? முதல் முறை அடிபட்ட  பிள்ளை, அடுத்த முறை  அப்பா கையெழுத்தை அவனே போட்டுக் கொண்டுபோய்விடுவான். பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உண்டு.  ஒரே வீட்டில் அண்ணனும், தம்பியும் இருப்பார்கள். ஒருவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருப்பான். அவன் தனது ரேங்க் கார்டைப் பெற்றோரிடம் கொண்டு காட்டுவான். அடுத்தவன் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பான். அவனால் அப்படிக்காட்ட முடியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மிக்க் கவனமாகவும் திறமையாகவும் செயற்படவேண்டும். இருவரையும்  பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    முனைவர் ம. திருமலை, துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
    முனைவர் ம. திருமலை,
    துணைவேந்தர்,
    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ஒருமுறை நான் விமான நிலையத்தில் காத்திருந்தேன். எனக்குப் பின்புற வரிசையில் செப்புச் சிலை போல் ஒரு பெண் குழந்தை. மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோர் அந்தக் குழந்தையை அவள் சரியாகப் படிப்பதில்லை என்று யார் யாரோடோ ஒப்பிட்டவண்ணம் அத்தனை திட்டு திட்டிக் கொண்டிருந்தனர். என்னிடம் கொடுத்தால் அந்தக் குழந்தையை மடிமீது ஏந்திக் கொண்டாடி இருப்பேன். அவ்வளவு உயர்கல்வி படித்திருந்தும் அந்தப் பெற்றோர் இப்படி மூடத்தனமாகக் குழந்தையை நடத்தும் விதம் என்னை மிகவும் பாதித்தது.

    பெற்றோரே, உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்குகின்றனர் என்பதை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களிடம் காணும் திறன்களை ஊக்குவித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களைப் பள்ளியில் பெற்ற  குழந்தைகள் சிலர் மேற்படிப்பில் சமாளிக்க முடியாமல் நொறுங்குவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ மனிதர்கள் தங்களது பள்ளிக் கல்வியில் அதிகம் மதிப்பெண் பெறாதவர்கள் என்பதை அன்பு கூர்ந்து கவனியுங்கள்.

    பள்ளிக்கூடப் படிப்பில், எங்களுக்குக் கணக்குப் பாடம், கணக்கு ஆசிரியர்  என்றாலே வயிற்றைக் கலக்கும். ஆனால் அவர் வராத அன்றைக்கு, கருப்பையா வாத்தியார் என்பவரை அந்த பாட வேளையில் ஏதாவது சொல்லிக் கொடு என்று எங்கள் வகுப்புக்கு அனுப்பி வைப்பார்கள். அவர் படித்தவர் இல்லை. கைநாட்டு மனிதர்தான். ஆனால் அவர் வந்தால் அப்படி உற்சாகம் கொள்ளும் வகுப்பறை. பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வார். நல்ல சுவாரசியமாகக் கதை போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று விறுவிறுப்பான ஒரு கட்டத்தில் கதையை நிறுத்திவிட்டு,இடுப்பிலிருந்து மூக்குப்பொடிப் பட்டையை எடுத்து அதில் ஒரு சிட்டிகை எடுத்து நிதானமாகப் பொடியை உறிஞ்சுவதில் ஈடுபடுவார். நாங்களோ கதையின் அடுத்த கட்டம் என்ன என்று அறியத் துடிப்போம். இப்படியாக எங்களை வசீகரித்து, வாழ்க்கை குறித்த புரிதல்களையும் எங்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தவர் அவர். பள்ளிக் கல்வியைக் காட்டிலும் கருப்பையா கற்றுக் கொடுத்த நுட்பங்களே வாழ்க்கையில் சோதனைக் காலங்களில் – சவாலான தருணங்களில் பிரச்சினைகளைத் துணிவோடு சந்திக்கும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொடுத்திருக்கிறது.

    இன்றைக்கு இப்படியான சூழல் இல்லாததால், மாணவர்கள் எப்படித் திணறுகின்றனர் என்று பார்க்கிறோம். ஒரு கல்லூரி முதல்வரை மாணவர்கள் வழிமறித்துக் கொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை. இன்னொரு மாணவர் ஒரு பெண் ஆசிரியரையே குத்திக் கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளதைப் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான சூழல் இல்லை.

    கற்றலின் இனிமை பற்றிக் குறிப்பிட்டார்களே… மாணவர்-ஆசிரியர் உறவு இணக்கமாக இருக்க வேண்டும். தாய்மொழியைக் கேவலமாக நினைக்காதீர்கள்…உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீன மொழி.  ஆங்கிலம் அல்ல. ஆங்கில மோகம் கொண்டு அலைவது தேவையற்றது. மகாகவி பாரதியே,ஆங்கிலக் கல்வி பற்றி வருத்தமுற்றுத் தனது சுயசரிதையில், “செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது” என்று சொல்வார். இதனால் ஓர் எள்ளின் முனையளவு  நலமும் பெற முடியவில்லை என்றார். இதை எந்தக் கோயிலிலும் வந்து சத்தியம் செய்வேன் என்றும் சொன்னார். நானும் தமிழ் வழிக் கல்வி படித்துத்தான் இன்று துணைவேந்தராக உயர்ந்திருக்கிறேன். ஒன்றும் விளங்காமல் எல்லாம் போய்விடவில்லை. தமிழ் கற்றால் நல்ல நிலை ஏற்படும் என்பதற்கு வேறு ஒரு நிரூபணம் தேவையில்லை.

    இந்தப் பள்ளி தாய்மொழிவழிக் கல்வியைத் தொடர்ந்து நடத்துவது அருமையான விஷயம். 6சதவீதம் பேர் பேசும் ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம். நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்..

    இந்தப் பள்ளி மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..”

    (இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நடத்திவரும் ஐ பி இ ஏ பள்ளியில்  பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற 12ஆவது ஆண்டுவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து…)

    நன்றி: வண்ணக்கதிர்

    Share
  • பெருகிய சாம்பல் காட்டில்……..

     
    எஸ் வி வேணுகோபாலன்

     

    வெறும் ஊரொன்றின்
    பெயரல்ல வெண்மணி
    ஒரு கோர நிகழ்வொன்றின்
    வலி மட்டிலுமல்ல அது

    உள்ளே கனன்று கொண்டிருக்கும்
    நெருப்பை
    தலைமுறைகளுக்குப்
    பற்ற வைத்துக் கொண்டிருக்கும்
    சாம்பல் மேட்டின் கதை அது

    ஒற்றை அராஜக பழிவாங்குதலின்
    நினைவு மட்டுமல்ல வெண்மணி
    வர்க்க மேலாதிக்க
    வன்மத்தின் உருவகக் காட்சி அது

    நொறுங்கிய வளையல்களுக்குள்
    குழந்தைகளின் கடைசி கதறலும்
    சிதறிய எலும்புகளில்
    களையெடுத்த பெண்களின் காறித் துப்பலுமாய்ப்
    பெருகிய சாம்பல் காட்டில்
    பயிராகிக் கொண்டிருக்கிறது
    கால காலத்திற்குமான வர்க்க பாடம்

    அமைதியான சூழலென்று
    அடிமைத்தனத்திற்குப் பெயரிடும் சமூகம்
    கலகம் என்று அரற்றுகிறது
    உரிமைகளுக்கான எழுச்சியை

    உயிர்கள் பற்றி எறிவதன்
    வேதனைக் கூச்சல்கள்
    செவிகளில் விழமறுத்த
    நீதி தேவதையின்
    மூடப் பட்டிருந்த கண்களுக்கு
    செல்வாக்கு மிக்க கனவான்களது
    கார் தெரிந்தது புதிய சாட்சியம்

    ஆத்திரத் தீயின் ஆறாத சாம்பல்
    சோக நெடுங்கதையின்
    கண்ணீரைக் குடித்தும்
    கனன்றபடி காத்திருக்கிறது

    எழுதப்பட வேண்டிய இறுதித் தீர்ப்பு
    இன்னும் மீதம் இருக்கவே செய்கிறது….

    **********

    Share
  • ஒடுக்குமுறையின் தாக்குதலில் அலைவுறும் உடலும் உள்ளமும்!…

    எஸ்.வி. வேணுகோபாலன்

    தீக்கதிர் (பிப் 24) இலக்கிய சோலையில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை::

    ஒரு சிறுகதையை முன்வைத்து

    ஒடுக்குமுறையின் தாக்குதலில் அலைவுறும் உடலும் உள்ளமும்

    மகாகவியின் அந்தக் கவிதையை அதற்குமுன் வாசித்திருந்தாலும், எம் பி சீனிவாசன் அவர்களது சேர்ந்திசை சிற்பங்களில் ஒன்றான பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் பாடலை முதன்முறை மட்டுமல்ல பின் எப்போது கேட்க நேரும்போதும், அதன் கடைசி பகுதியில் “ஓயுதல் செய்யோம்.. தலை சாயுதல் செய்யோம்..” என்ற இடம் வருகையில் இயல்பாக உணர்ச்சி மேலிட கண்ணீர் பெருகத் தொடங்கிவிடும். மனதில் உறுதி வேண்டும் என்ற கவிதை யேசுதாஸ் குரலில் திரைப்பாடலாக ஒலிக்கக் கேட்கும் தருணங்களில் அப்படித் தான்; உண்மை நின்றிட வேண்டும் என்ற வரி என்னை வெவ்வேறு நினைவடுக்குகளின் தாக்கத்தில் சற்று இயல்பு நிலை நழுவ வைத்துவிடும்.

    மனித மனத்தின் தன்மை அப்படி என்பதை பலரது அனுபவங்களிலிருந்தும் அறியமுடியும். இசை நுகர்வைப் போலவே, ஓவிய ரசனை போன்றே, எழுத்து வாசிப்பும் நம்மைச் சமயங்களில் நிலை குலைய வைத்துவிடும் என்பதையும் நாம் உணர்கிறோம். தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களது தோட்டியின் மகன் நாவல் அப்படி ஒரு வாரத்திற்கு என்னைத் திண்டாட வைத்தது. அழகிய பெரியவன் அவர்களது சிறுகதைகள் சில உலுக்கி எடுத்ததுண்டு. இந்தப் பட்டியல் பெரியது.

    இவை ஏற்படுத்திய உணர்ச்சிகளிலிருந்து வேறுபட்ட தாக்கம், சம காலத்தில் நேரடியாக அறிந்த நிகழ்வுகளின் புனைவு வடிவங்களில் பயணம் செய்கையில் ஏற்பட்டது. அதன் அதிர்ச்சி பிரதிபலிப்புகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. தாமிரபரணியில் 17 உயிர்கள் காவு வாங்கப்பட்ட மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையைப் பின்புலமாகக் கொண்ட ச தமிழ்ச்செல்வனின் “சொல்ல வருவது” சிறுகதையைக் குறிப்பிட வேண்டும். தனது தோழனின் கல்லறையை விட்டு அகல மறுத்து அங்கேயே அல்லாடும் அந்த நாய், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபின்னும் நள்ளிரவு நேரத்தில் அவனது நினைவில் பெருத்த ஊளையிட்டு அழும் கதையின் இறுதிக் காட்சி எப்போது வாசித்தாலும் நிம்மதி இழக்க வைத்துவிடும்.

    தவிப்புற வைக்கிற – ஆவேசம் கொள்ளத் தூண்டுகிற ஒரு சிறுகதையை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. “நீளும் கனவு” என்ற தலைப்பில் (கயல் கவின் புக்ஸ், சென்னை 24) வெளியாகி இருக்கும் கவின் மலர் அவர்களது அருமையான சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது “மெய்” என்ற அந்தக் கதை.

    தாங்க முடியாத வலியில் துடிக்கும் ஒரு வாலிபனின் மரண அவஸ்தையின் சொந்தக் குரலில் தொடங்கும் கதை, தான் எங்கே இருக்கிறோம், உயிரோடுதான் இருக்கிறோமா, எப்படி இந்தக் கதிக்கு ஆளானோம் என்று அவன் நிகழ்வுகளைப் பின்னோக்கி சிந்திக்கப் பார்த்துப் பரிதவிக்கும் பாதையில் தொடர்கிறது. உள்ளபடியே அவனது உடலும் பயணத்தில் இருக்கிறது. செமத்தியாக அடித்து நொறுக்கப்பட்ட தனது எந்தெந்த உறுப்புகள் என்னென்ன கதியில் இருக்கின்றன என்பதே கூட அவன் தனக்கு உணர்த்திக் கொள்ளத் தலைப்படும் நேரம் பார்த்து மயக்கம் வந்து அவனை வீழ்த்துகிறது. மீண்டும் கூடுதல் வலியோடு கண் திறந்து அல்லாடும் நேரத்தில் மூளை அவனுக்கு நேர்ந்த தாக்குதலை மீண்டும் திரையில் எழுதிப் பார்க்க முனைகிறது. மீண்டும் மயக்கம்.

    “மவனே! சாவுடா! செத்துத் தொலைடா நாயே!” என்று சொல்லி அடிக்கப்பட்ட நினைவுகள்…. சுற்றிலும் காக்கிச் சட்டைகள்… திரும்பிய பக்கமெல்லாம் இளைஞர்கள்.. ஐந்து முக்கு சாலை. விண்ணதிரும் முழக்கங்களோடு வாகனங்கள் கடந்து போன இடம். முஷ்டியை உயர்த்தித் தான் குரல் எழுப்பிக் கொண்டிருந்த நேரம். இப்போது நினைவு ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. தாங்கள் காவல் துறையால் நையப் புடைக்கப்பட்ட இடம், பரமக்குடியின் ஐந்துமுக்கு சாலை. மீண்டும் மயக்கம். மீண்டும் தெளிகிறபோது தன்னருகியில் நெற்றியில் கொப்புளிக்கும் குருதியொடு சாய்கிற பெரியவர் காட்சியில் வந்து போகிறார். துப்பாக்கிச் சூடு. பழி தீர்த்த திருப்தியோடு புன்னகைக்கும் காக்கிச் சட்டைகளும் தட்டுப்படுகிற காட்சி அது.

    தனது உடம்பின் எல்லாப் பாகங்கள்மீதும் பூட்ஸ் கால்கள் கொலைவெறியோடு மிதித்த அந்தக் கொடூர நினைவுகள், தான் உள்ளபடியே செத்துப் போய்விட்டோமோ என்று அலைவுறும் கணங்கள்…என கதை நகர்கிறது. சாதிப் பெயரைச் சொல்லி திட்டியவாறே ஒருவன் நடு மண்டையில் ஓங்கி அடித்தது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்போது தன்னை எங்கே கொண்டு செல்கின்றனர் என்று தெரியாது. மருத்துவமனை வாசலில் நிற்கும் வேனுக்குள் உயிருக்கு மன்றாடுவோரும், சோர்ந்துபோய் விடைபெற்று விட்டோரும் இருக்க, தற்செயலாக அந்தவழி செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரது மனித நேய நடவடிக்கை அவர்களை மருத்துவமனைக்குள் கொண்டு சேர்க்கிறது.

    பின்னர் சடலங்களின் வரிசையில் தானும் கிடத்தப் பட்டிருக்கிறோம் என்று அந்த வாலிபன் உணர்ந்தாலும் நகரக் கூட முடியாத – தீனக் குரலை எழுப்பக் கூட இயலாத நிலையில் படும் பாடுகளும், பின்னர் சிகிச்சையின் கரங்கள் அவனை ஒரு கட்டத்தில் தீண்டத் தொடங்கிய நேரத்தில் தனது காதல் மனைவியை ஒரு முறை பார்த்துவிட்டு உயிரை விட்டுவிடத் துடிக்கும் அவனது இதயத் துடிப்புகளும் அசாத்திய உண்மைத் தன்மை வாய்ந்தவையாக கவின் மலரின் எழுத்தில் கனத்த வாசிப்பாகிறது. வலி பொறுக்க மாட்டாத சயமங்களில் மயக்கம் அவனுக்கு வரமாக வாய்ப்பதை வாசிக்கையில், மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் வரும் கண்பார்வையற்ற பெண், தனது கால்களில் சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய ஆட்களைப் பற்றி விவரிக்கையில், நல்ல வேளையாக ஒருத்தன் என் மார்பில் ஓங்கி உதைத்தான், நான் மயக்கம் ஆனேன் என்று சொல்லுமிடம் எனக்கு நினைவுக்கு வந்தது.

    ‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை’ என்று புரட்சிக் கவி காவியத்தில் எழுதியிருப்பார் பாவேந்தர் பாரதிதாசன். போராட்டங்களை ஒடுக்கும் அரசின் கொடுங்கரங்கள் அப்படித்தான் என்பதை சுதந்திர இந்தியா உடனே சேலம் சிறையில் நிரூபித்தது. கடலூரில் காட்டியது. எத்தனை எத்தனை உன்னத போராளிகளை அற்ப வெறியோடு தாக்கிய ஆட்சியாளர்களின் ஏவல் படைகளுக்கு இயக்கங்கள் பறிகொடுத்திருக்கின்றன. சாதிய வன்கொடுமைக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களை இன்னும் மூர்க்கமாகத் தாக்கப் பழகி இருக்கும் காவல் துறையின் ‘சாதனை’ வரலாற்றின் அண்மைக் கால அராஜக சாட்சியம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு.

    கொலையுண்டவர்கள் எண்ணிக்கை கூட சரிவர சொல்லப்படாத அளவு துணிச்சலோடு நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள் நாளேடுகளில் ஒரு நாளின் தலைப்புச் செய்தியாகவும், பருவ இதழ்களில் ஒரு சிறப்புக் கட்டுரையாகவும், புலனாய்வு ஊடகங்களில் ஒரு பரபரப்பு அம்சமாகவும் தற்காலிக வாழ்வு வாழ்ந்துவிட்டு பொது நினைவிலிருந்து அகற்றப்பட்டு விடுபவை. ஆனால் தாக்குண்ட ஒரு மனிதனின் உடலும், உள்ளமும் அடையும் பரிதவிப்பின் பதிவாக எழுதப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை சம கால உண்மை நிகழ்வு ஒன்றின் கவனிக்கத் தக்க புனைவாக முன்வைக்கப் பட்டிருக்கிறது. சமூக செயல்பாட்டாளர்களின் வாசிப்பை வலியுறுத்துகிறது.

    Share
  • எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

    எஸ் வி வேணுகோபாலன் 

    அஞ்சலி: பாலு மகேந்திரா

    எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

    baluதேர்ந்த கதை சொல்லிகளை உலகம் கண்டிருக்கிறது. காட்சிப் படுத்துவதில் அசாத்திய நேர்த்தி கொண்டிருப்பவர்களையும் திரையுலகம் வழங்கி இருக்கிறது. மவுன மொழியின் தொடர் கிளர்ச்சி அனுப்வங்களை ஏற்படுத்திச் சென்றவர்களும் இருந்தார்கள். கட்டணம் கொடுத்து சீட்டு வாங்கி திரையரங்கின் இருக்கையில் அமர்ந்து பிறகு அங்கிருந்தே வெளியேறிக் கொண்டிருந்த ரசிகர்களை ஃபிரேமுக்குள் இழத்து அந்த நிகழ்வுகளோடே வாழ்ந்துவிட்டுப் போக வைக்கும் ஆற்றல் படைத்திருப்போரது அரிய வரிசையில் இருந்தவர் பாலு மகேந்திரா.

    மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்றார் மகாகவி. தனது காமிரா மொழியில் அந்த மந்திரச் சொற்களை தேவைக்கேற்ப பதிப்பிக்கும் திறமையைக் கொண்டிருந்த பாலுவின் மரணம் இன்றைய தலைமுறை திரையுலக படைப்பாளிகளையும், பழைய தலைமுறை ரசிகர்களையும் ஒன்று போலவே பாதித்திருப்பதை அவரது இறுதி ஊர்வலத்தில் பார்க்க முடிந்தது. சிந்தனையில் தேக்கமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கே இது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    மூடுபனி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே ஏற்பட்ட அலைவுறுதல், வேறு படங்கள் மாதிரி அல்ல இது என்பதை அப்போதும், வேறு இயக்குனர்கள் மாதிரி அல்ல இவர் என்பதைப் பிறகும் எனக்கு கற்பித்தது. இயல்பியல் கோட்பாட்டில் சொல்லப்படுவது போல், அலை நீளங்கள் சமமாக உள்ள இரண்டு வெவ்வேறு பொருள்களின் அதிர்வுகள் சந்திக்கும் புள்ளியில் நிகழும் ஒத்திசைவு (RESONANCE) அனுபவத்தை ரசிகர்கள் உள்ளத்தில் நிகழ்த்தும் கலைஞர்கள் கற்பனையில் விரியும் காட்சிக்குள் சென்றுகூட சரி செய்து திரும்பும் திறனைப் பெற்றிருப்பார்கள். திரைப்படம் என்பதைத் திரை மொழி என்று நமக்குப் புரிய வைத்த சில ஆளுமைகளில் முக்கியமானவர் பாலு மகேந்திரா.

    ஒரு காலத்தில் “பேசும் படம் ” திரை இதழின் கடைசி பத்து, பதினைந்து பக்கங்களில் வெளியாகியிருக்குbalu1ம் வசனங்களிலிருந்தும், வானொலியில் மாதம் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளின் (பிற்பகல் 3 மணி என்று நினைவு) ஒரு மணி நேர ஒலிச்சித்திரத்திலும் ஒரு முழு படத்தை அப்படியே உள்வாங்கி அதைப் பார்த்து முடிந்த நிறைவு அடைந்து கொண்டிருந்த இள வயது குதூகலத்தைக் கலைத்துப் போடத் தொடங்கிய படங்கள்,வெறும் கேளிக்கைக்கு அப்பால் ஒரு தேடலை தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டத் தொடங்கின. முப்பரிமாண உணர்வோடு, பின்புலத்தில் விரியும் காட்சிகளில் கசியும் ஒளி, ததும்பும் இசை, பாத்திரங்கள் மட்டுமின்றி அசையாத பொருள்களும் வெளிப்படுத்தும் உடல் மொழி என ஒரு திரைப்படத்தின் கூறுகள் பலவற்றை சாதாரண ரசிகர்களும் தமது கையள்ளிப் பருக முடியும், கோப்பையில் ஏந்தி ஒயிலாக அருந்த முடியும் என்பதை பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ உணர்த்தியது.

    புது மனை புகு விழா அழைப்பிதழில் வீட்டை அச்சில் பதிந்திருப்பது போல அத்தனை இலகுவானதில்லை ஒரு வீடு கட்டுவது என்பதை, பாலு மகேந்திரா திரையில் எழுதிக் காட்டினார். ஒவ்வொரு காசையும் எண்ணி எண்ணி அவள் (அர்ச்சனா எத்தனை அற்புதமாக அதைச் செய்திருப்பார்!) செலவு செய்து அந்த வீட்டை எழுப்பிக் கொண்டிருக்கையில், காதலன் ஆசையாக வாங்கிவந்து கொடுக்கும் சேலை அவளுக்கு அவன் மீதான அன்பைத் ததும்ப வைப்பதற்குப் பதிலாக, இப்ப இந்தப் புடவைக்கு என்ன தேவை என்று அவளது ஆற்றாமையாக வெடிக்கும் காட்சி பார்வையாளருக்கு எத்தனையோ உணர்த்தி விடுகிறது. சொக்கலிங்க பாகவதர் அந்த வேகாத வெயிலில் முடிவற்ற நடையை நடந்து கொண்டிருப்பது பல நூறு மனிதர்களுக்கும் சேர்த்து நடந்த நடை.

    மூன்றாம் பிறை திரைப்படத்தில் வயதான மனிதருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் இளம் மனைவி பாத்திரம். பூர்ணம் விஸ்வநாதனும், சில்க் ஸ்மிதாவும் வெளிப்படுத்தும் எதிரெதிர் உளவியல் நிலைகளை – பாலியல் உணர்வுகளின் வடிகாலையும், ஏமாற்றத் ததும்பலையும் பாலுவின் திரை மொழி எழுதியது. அந்தப் படத்தில் ஸ்ரீதேவி, கமல் ஹாசன் இருவருக்கு மேலாக சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியின் பாத்திரத்தை அவர் உலவ விட்டது, அந்தப் பெண்ணின் மன நிலையை வாசிக்கக் கொடுத்திருக்கும் புத்தகம் போல இருக்கும். அவரது படங்களில் பாடல்களும், பாடல் காட்சிகளும் தனி ரசனையோடு இணைக்கப்பட்டிருக்கும்.

    balu2“மறுபடியும்” திரைப்படம், அலை பாயும் உள்ளத்தைக் கண்களில் வாசித்தறிய வைக்கும். இளையராஜாவின் ‘ஆசை அதிகம் வச்சு’ (எஸ். ஜானகி) பாடலின் இசை புறப்படும் வேகத்திலேயே, தாளம் தப்பாத ரோகிணியின் நடனத்தின் பாதையில் தன்னைத் தொலைக்கும் நிழல்கள் ரவி பாத்திரம் ஒரு குறியீட்டுக் காட்சி. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்பது, அவரது ‘ரெட்டை வால் குருவி’ சந்தித்த எதிர்வினைகளில் தெரியும். அவர் பாடு எடுத்து வழங்கிய பிற்காலத் திரைப்படங்கள் பெரிய வரவேற்பு பெறாதது அவரை பாதிக்கவே செய்தாலும், தம்மைச் சுற்றி நிறையும் அடுத்தடுத்த இளம் படைப்பாளிகளுக்காகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு கற்பித்தலின் இன்பத்தில் அவர் இறங்கியது தமிழ்த் திரை உலகில் ஒரு புதிய அனுபவம். அது தான் அவர் நிர்மாணித்த சினிமா பட்டறை.

    சின்னத் திரை என்று அழைக்கப்படும் தொலைகாட்சியில் வாரா வாரம் ஒளிபரப்பான கதை நேரம் தொடரில் சிறுகதைகள் பலவற்றை அற்புதமான குறும்படங்களாக வடித்து வழங்கிக் கொண்டிருந்தார் பாலு மகேந்திரா. மாலன் அவர்களின் தப்புக் கணக்கு ஓர் அருமையான வடிவில் வழங்கப்பட்டிருந்தது. சுஜாதாவின் கதை ஒன்று உருக்கமாக வார்க்கப் பட்டிருந்தது. மௌனிகா என்ற திறமையான நடிகை எத்தனை எத்தனை பாத்திரங்களில் வந்து போனார் அந்தத் தொடரில்!

    தாமே அவரது வலைத்தள எழுத்துக்களில் பதிவு செய்திருப்பது போல 5 ஆண்டுகளில் 21 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவிட்டு இயக்குனராக அவர் முயற்சிகளைத் தொடங்கிய பிறகும் மகேந்திரன் கேட்டுக் கொண்டதற்காக முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவாளராக இயங்க ஒப்புக் கொண்டார். உமா சந்திரன் அவர்களது அற்புதமான குறுநாவலின் அசாத்திய திரை வடிவம் வெற்றி பெற்றதில் பாலுவின் பங்களிப்பு முக்கியமானது.அரிதாக் வாய்க்கும் திரை நட்சத்திரங்களில் ஒன்றான ஷோபாவின் வருகையும், மின்னல் வேக மறைவும் திரை ரசிகர்கள் மறக்க முடியாதது. பாலு பேசப்படும் போதெல்லாம் அழியாத கோலமாக ஷோபா நினைவு வந்து போவது தவிர்க்க முடியாதது.

    குழந்தைகளை அவர் எத்தனை நேசித்தார் என்பதை, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சைதன்யா என்ற குழந்தை எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வம்சி வெளியீடாகக் கொண்டு வந்த நேரத்தில், அவளிடம் ஆட்டோகிராஃப் பெற்றதில் விளங்கிக் கொள்ள முடியும்.

    சர்வதேச நிகழ்வு ஒன்றிற்காக பிரதி எடுக்க தனது வீடு படத்தின் நெகடிவ்களை எடுத்துப் பார்த்தபோது ஒரு பிரதி கூட எடுக்க முடியாதபடி அவை சிதைந்து போயிருந்தது கண்டு அவர் மனம் அரற்றியது. ஒரு திரைப்பட காப்பகம் அமைக்க வேண்டும், படங்கள் கால காலத்திற்கும் பாதுகாக்கப் படவேண்டும் என்ற குரலை அதன்பின் ஓயாது அவர் எழுப்பிக் கொண்டிருந்தார். சக படைப்பாளிகளை, சக மனிதர்களை உளமார பாராட்டும் உள்ளம் வாய்த்திருந்த அவரது, ஜனநாயக உணர்வும் சமூக பிரக்ஞையும் பெருமிதம் கொள்ளத் தக்கது.

    தமிழக அரசின் சிறப்புத் தணிக்கை சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய திரைப்பட பாதுகாப்பு சிறப்பு மாநாட்டு மேடையில், மிக எளிமையாக ஓட்டப் பட்டிருந்த ஒரு சுவரொட்டி அவரை அதிர வைத்தது. ஒளிப்படக் கருவியை ஆக்டோபஸ் ஒன்று ஆக்கிரமிப்பது போன்ற அந்த உருவகத்தின் தீப்பொறியில் தொடங்கியது அவரது உரை. எனது ஆயுதத்தை எந்த ஆகடோபசும் கைப்பற்றுவதை நான் அனுமதிக்க முடியாது என்பது அனைவரது கூட்டு பிரகடனமாக அன்று உருவெடுத்தது.

    படம் எடுக்க பிரும்மாண்ட சாதனங்கள் தேவை இல்லை, யாரும் இந்தத் துறைக்குள் வரலாம் என்ற அழைப்பை அவர் இறுதி மூச்சு வரை விடுத்துக் கொண்டே இருந்தார். புதிய படைப்பாளிகளை மனதார ஆசீர்வதித்தார். மாற்று திரைப்படத்திற்கான இடது சாரி முற்போக்கு இயக்கத்தின் குரலுக்கு அவரது ஆதரவு மகத்தானது. தலைமுறைகளைக் கடந்து பேசப்படும் கலைஞரான அவரது கடைசி படம் சம காலத்தின் பிரதிபலிப்பையும், சமூக மாற்று சிந்தனைக்கான ஆர்வத்தையும் கலந்து கொடுத்த பரிசோதனை முயற்சி என்று பேசப் படுகிறது. எல்லாப் பண்டங்களையும் தமதாக்கிக் கொள்ளும் சந்தைப் பொருளாதார மூலதனத்தின் கைகளில் திரைப்படங்களும் சிக்கி மூச்சுத் திணறும் சம காலத்தில் இப்படியான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டது கூட ஒரு கலகக் குரல் என்றே தோன்றுகிறது.

    சென்னை சாலி கிராமத் தெருக்கள் கொள்ளாது திணறிய கூட்டத்தின் நடுவே புறப்பட்ட அவரது இறுதிப் பயணம், வேதனையான அந்தக் கணத்திலும், அவரது கனவுகள் வேறு கண்கள்வழி தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையை வழங்கவும் செய்தது.

    மூன்றாம் பிறை திரைப்படத்தை ‘சத்மா’ என்ற பெயரில் இந்தியில் அவர் எடுத்தபோது, க்ளைமாக்ஸ் காட்சியை இயல்பாக எடுக்கக் காத்திருக்கையில் மழை பொழியத் தொடங்கியதாம். இது ஒரு மந்திரத் தருணம் என்று அவர் வியப்போடு சொன்னதாக கமல் ஹாசன் (பிசினஸ் லைன்) தமது அஞ்சலிக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். மந்திரம் போல் காட்சி மொழி இன்பம்தான் அவரது உள்ளத் தேடல் கடைசி வரையிலும்!

    பிரியாவிடை அளிக்கிறது ரசிக உலகம், எங்கள் இனிய பொன் நிலாவே உங்களுக்கு!

    நன்றி: தீக்கதிர்

    ********

    மரணிக்கப் போவது எங்கள் உடல்கள், நாங்கள் அல்ல !

    “………எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும், இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும், எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல! “
    – பாலு மகேந்திரா (வலைத் தளத்திலிருந்து)

    Share
  • காதல் ஃபீனிக்ஸ்

     

     

    எஸ்.வி. வேணுகோபாலன்

     

    காதலைப் பறவையாக்கி
    நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில்
    அதன் இறக்கை துடிப்பு
    சுதந்திரத்தைக் கோரியது

    காதலை பனிக்கட்டியாக்கி என்
    உள்ளங்கையில் வைத்துச்
    சில்லென்று ரசிக்கையில்
    உருகி ஓடி வெளியேறிவிட்டது

    காதலே கனவுகளாய்
    மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என
    ஆசை ஆசையாய்ப்
    படுக்கை விரித்த இரவுகளில்
    உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது

    பின்னர்
    காதல் பூக்களில்
    முட்களால் குத்தப் பட்ட கதையும்
    காதல் நெருப்பில் என்
    இதயம் வெந்த கவிதையும்
    இருக்கின்றன அழுக்கேறிய
    பழைய டயரி பக்கங்கள் நெடுக

    நேற்று இரவு படுக்குமுன்
    சாம்பலாகப் பூசிக் கொண்டேன்
    பொசுக்கிய காதல் நினைவுகளை

    இன்றைய நாள் என்னைத் தொட்டு எழுப்பி
    சீண்டியவாறு தெரிவிக்கிறது
    காதலர் தின வாழ்த்துக்களை –
    அருகே புன்னகை பூத்தவாறு சிறகடிக்கிறது
    சாம்பலில் இருந்து பறக்கும் காதல் பறவை !

    Share
  • மண்டேலா, ஓ எங்கள் கறுப்புக் குயிலே….

    எஸ் வி வேணுகோபாலன் 

    mandela

    ஆதிக்கத்தைப் புறம்தள்ளும் சிரிக்கும் கண்கள்
    காலம் ஏற்றிக் கொடுத்த
    வரைகோடுகளும் அழகு சேர்க்கும் முகம்
    கறுப்பின் உரிமைக்காய்ப் போராடியே
    வெளுத்துப் பூத்த தலை
    எப்படி விடைகொடுப்போம் உயிர்ப்பின் உருவகத்திற்கு!

    சிறைக்குள் விரிந்த வானத்தில்
    பறந்து கொண்டிருந்த பறவையே!
    இளமையின் கனவுகள், காதல், வேகம்
    எந்த இயல்பான உணர்ச்சிக்காகவும்
    இழக்கத் தயாரில்லை சுதந்திரத்தின் மாண்பை
    விடுதலை நேரத்தில் வெளியேறிய பெருமூச்சில்
    வெளிப்படவில்லை பழி தீர்க்கும் உணர்ச்சி
    மன்னிப்பின் தீப்பொறியே சுடர்விட்டது
    ‘அவர் நாண நன்னயம் செய்தது’
    உனது புதிய அரசியல் நாகரீகம்
    எப்படி வழியனுப்புவோம் உயிர்த்துடிப்பின் உட்கருவை!

    தொண்டு செய்து பழுத்த
    எங்கள் இன்னொரு பழமே !
    அதிகாரத்தின் இரண்டு முனைகளையும்
    ருசித்தவன் நீ
    ஆளுமையின் அடையாளம் அதிகாரத்தில் அல்ல,
    கழற்றி உதறினாலும்
    அது அகலாதது என்பதைக்
    கற்றது உலகம் உன்னிடமிருந்து
    எப்படி அஞ்சலி செலுத்துவோம் எங்கேயும் நிறைந்த வெளிச்சத்திற்கு !

    கறுப்பா வெளுப்பா
    ஆதிக்கக் குரலிடையே
    வேறுபாடு இல்லை உனது அகராதியில்
    சமத்துவ சமூகத்திற்கான உனது தீபம்
    மாசற்று எரிகிறது மகத்தான குன்று ஒன்றின்மீது
    பாட்டன் பூட்டனுக்கும்
    கொள்ளுப் பேரன்களின் கொள்ளுப் பேரன்களுக்கும் கூட
    தந்தையாக நிரந்தரமானது உனது பிம்பம்
    உறுதியின் உயிர்மூச்சுக்கு எப்படி நடத்துவோம் இறுதி யாத்திரையை!

    மண்டேலா ஓ எங்கள் கறுப்புக் குயிலே !
    ஒடுக்கப்படுவோர்க்கு நெஞ்சுரம் புகட்டும் பெயர்ச்சொல்லே !
    உலகளாவிய விடுதலை கீதத்தின் குறியீடே !
    நம்பிக்கை கை விளக்கே!
    அடங்க மறுத்தலை
    அமைதியாகவே காட்டத் தெரிந்திருந்த அற்புதக் கனலே !
    செவ்வணக்கம் தோழா உனது புகழார்ந்த வாழ்க்கைக்கு!

    ************

    Share
  • கல்லூரி முதல்வர் படுகொலை

    என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?
    எஸ்.வி. வேணுகோபாலன்

    News_45799

    அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.

    அதிகபட்சம், இரண்டு நாள் உறக்கமற்ற இரவுகளைக் கடந்தது போன்ற களைப்பை மீறி, ஒரு படுகொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எந்தச் சுவடும் அதில் தென்படவில்லை. கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லாத அந்த முகங்களில் நிகழ்கால வாழ்க்கையை எப்படியாவது அல்லது எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிற முகங்களுக்கான ஒரு புதிய மாதிரிப் படிமம் தெரிந்தது. அதிர்ச்சி அளிக்கும் அந்தக் காட்சியை வெறிக்கும் எந்தக் கண்களும் அடுத்த வேலையில் உடனே போய் மறந்துவிட முடியாது அந்த முகங்களை.

    ஏரோநாட்டிக் என்ஜினீயரிங் (ஆகாய விமானங்கள் குறித்த பொறியியல் படிப்பு) மாணவர் ஒருவர்.தகவல் தொடர்பு படிப்பவர் அடுத்தவர். சிவில் பொறியியல் வகுப்பில் இருப்பவர் மூன்றாமவர். கல்லூரியில் ரேகிங் கூடாது என்பது உள்பட ஒழுக்க விதிகளில் மிகவும் கண்டிப்பானவர் கொலையுண்ட கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பது ஒரு தகவல். சக மாணவர் ஒருவரை பேருந்து இருக்கை தொடர்பான தள்ளு முள்ளு சண்டைக்காக கல்லூரிக்குள்ளும் வெளியேயும் அடித்தார் என்பதற்காக முதலில் குறிப்பிட்ட மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது அடுத்த தகவல். அவரோடு மற்ற இரண்டு மாணவர்களும் சேர்ந்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கல்லூரி வளாகங்களில் பரஸ்பரம் மாணவரிடையே வாக்குவாதங்கள், மோதல்கள், அடிதடி, வெட்டு, குத்து என்பவை புதியவை அல்லதான். ஒழுக்க விதிகளோடு முரண்படும் மாணவர்கள்-கடுமையாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகங்கள் இவையும் புதிதான விஷயமல்ல தான். ஆனால் கண்ணுக்குப் புலனாகாது நுட்பமாக இவற்றின் தன்மையில் தீவிரமான, வேதனை தரத் தக்க, மீளுதல் இல்லாத வகையிலான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இவை கல்லூரி அளவில் மட்டுமல்ல, நமது சமூக வெளியில் வெவ்வேறு தளங்களில் இப்படி நடப்பதை அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் யாரும் உற்று கவனித்தால் புரிந்து கொள்ளமுடியும். ஒற்றை திசையிலான இறுக்கமான எண்ணப் போக்கு நமது காலத்தின் அடையாளமாக உருப்பெற்று வருகிறது. இதைச் சிந்தனை என்று சொல்வது கூட பிழையானது. சிந்தித்தால் இத்தனை விபத்துக்கள் நடைபெறாது.

    தான் எதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படியே அதனை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு. தன்னை மீறித்தான் அடுத்த சங்கதி என்ற எண்ணப் போக்கு. நட்பு, நேயம், உறவுமுறை எல்லாவித சேர்க்கைக்கும் இது முன் நிபந்தனை. இந்த விதிகள் கடுமையானவை. மாற்றத்திற்கு உட்பட இயலாதவை. இளம் வயதிலிருந்து, சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலிருந்தே கூட இத்தகைய எண்ணப் போக்கு சூழலின் உரமும், வரமும் பெற்று செழித்து வளருகிறது. எல்லாக் காலத்திலும் அச்சுறுத்தும் எதிர்வினையின் கவசத்தை மேலே போட்டுக் கொண்டே வளரும் இந்த எண்ணப் போக்கு மேலும் இறுகி கெட்டிப்பட்டுவிடுகிறது.

    அன்பிற்கும், கவனம் மறுக்கப்படுவதற்குமான இடைவெளி மிகக் குறுகியது. நீ என்னாவாகவும் இரு, எப்படியும் நடந்து கொள் என்று விட்டுவிடுவது குழந்தையின்பால் உள்ள அன்பினால் வழங்கப்படும் சலுகை அல்ல. கவனம் செலுத்த மறுக்கும் புறக்கணிப்பின் நரக திசை அது. பள்ளிக்கூட நாட்களில் திருத்த இயலாதிருந்த மாணவரை ஒரு முறை கண்மண் தெரியாமல் அடித்துவிட்டுப் பிறகு அவனது சூழல் என்ன? ஏது? என்று கரிசனத்தோடு நேரே சென்று கண்டறிந்து அந்த மாணவரோடு போராடி, அன்பினால் வென்று மகத்தான வெற்றியை அந்த மாணவர் எதிர்காலத்தில் பெற முடிந்த தமது வாழ்க்கை அனுபவத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.இராசகோபாலன் பகிர்ந்து கொள்வதுண்டு.

    எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் என்ற முறையில் அழைத்து அவரிடம் ஒரு மரக்கன்றை நடச் சொல்லி அந்தச் செடி போலவே மாணவரும் தழைக்கக் கண்ட எடுத்துக்காட்டு புதுவை கல்வியாளர் ஜே கிருஷ்ணமூர்த்தி அனுபவத்தில் இருக்கிறது. அவ்வளவு எளிதான பயிற்சி அல்ல இது. இப்போது களத்தில் நாம் காணும் சிக்கலான நிலைமை கோருவது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை.

    பெற்றோரும், ஆசிரியரும், அண்டை அயலாரும் மட்டுமல்ல. அனைவருமே எச்சரிக்கை கொள்ள வேண்டிய சிக்கலான நடப்புகளைக் கடந்து கொண்டிருக்கிறோம் நாம். கடன் கேட்டால் தரவில்லை என்று சொந்த சகோதரியை வெட்டிக் கொல்கிறார் ஒருவர். காதலித்து மணந்தவள் தன்னை வேலைக்குப் போகக் கூடாதா? என்று கேட்டதற்கு அவள் கதையை முடித்துவிடுகிறார் இன்னொருவர். பேருந்து பயணத்தில், ரயில்களில், கடைவீதியில், சாலையில் எங்கேயும் எப்போதும் அற்ப விஷயங்களுக்காகக் கொதிக்கக் காத்திருக்கிறது நமது இரத்தம். மிகப் பெரிய சமூகத் தீமைகளைஏறெடுத்துப் பார்க்காமல் திரும்பிக் கொள்ளும் முகங்கள், சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கத்தியைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

    நமது உணவுப் பழக்கம் நம்மை அறம் சார்ந்த அணுகுமுறைக்கு அனுமதிப்பதில்லை. சைவ, அசைவ உணவுமுறை அல்ல இங்கே குறிப்பிடுவது. வேக உணவு. நார்ச் சத்து குறைவான உணவு. உப்பும், உறைப்பும் கூடுதலாகச் சேர்க்கப் பட்ட உணவு. இயற்கையின் கொடையான காய், கனிகள் மறுக்கப்பட்ட உணவு. உரையாடல்களே அற்ற நமது அன்றாட வாழ்க்கை. பள்ளிக்கூட நாட்களிலேயே பழக்கத்திற்கு வந்து சேரும் மது. போதைதான் நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஓர் இளைப்பாறுதல் என்ற புதிய பண்பாட்டுத் திசை.

    அதற்கு அடுத்தடுத்த கட்ட போதைப் பொருள்கள். அவற்றுக்கான நிதி ஆதாரத்திற்காக என்னவும் செய்யப் பழக்கும் சேர்க்கை அனுபவங்கள். இவற்றின் முடிச்சிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாத ஒரு கட்டத்தில் எந்தக் குற்றங்களுக்கும் தயாராகும் உளவியல் போக்கு. இந்த சாபம் இப்போது பிடித்தாட்டுகிறது நமது இளவட்டங்களை. பொறியியல் படிப்பின் தற்போதைய விலை என்ன? என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் பொறுப்பைத் தீர்மானிப்பது யார் ?என்பது பெரிய கேள்வி. படிக்கப் போன இடத்தில் தனது முக்கிய கடமை என்ன? என்பதும், அங்கே இருக்கும் சட்டதிட்டங்களில் கேள்வி இருந்தால் அதை ஜனநாயகமாக தட்டிக் கேட்க இடமுண்டா என்பது அடுத்த பிரச்சனை.

    அப்படியே ஆனாலும், வந்த நோக்கத்திற்குப் புறம்பாகத் தம்மையும் அழித்துக் கொண்டு அடுத்தவர் வாழ்க்கையிலும் விளையாடும் அளவு வெறிச் செயலுக்கு மாணவப் பருவத்தில் எப்படி தூண்டுதல் கிடைக்கிறது என்பது கவனம் கோருகிற அடுத்த முக்கிய கேள்வி. வேலையற்ற திண்டாட்டம், பாலியல் குற்றங்கள், போதை போன்றவை எப்படி முதலாளித்துவ சமூகத்தின் இன்றியமையாத தேவைகள் என்று நமது சமூக அறிவியலாளர்கள் விவரிக்கின்றனரோ, அப்படியே புதிய தாராளமய காலம் வேறு தேவைகளை அதுவே உற்பத்தி செய்கிறது. ஊழலை உருவாக்கும்போதே அந்தப் புழக்கத்தில் பெருகும் பணம் எத்தனை புதிய சமூகத் தீமைகளை உருவாக்கித் தரும் என்பதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

    பெரும் ஏற்றத்தாழ்வின் ஊடாட்டத்தில் தத்தளிக்கும் ஒரு சமூகம் எப்படி அந்த பிரதிபலிப்புகளின் எதிர்வினைகள் அற்று ஒன்றுமறியாத மாதிரி மனிதர்களை நடத்த முடியும்? இந்தக் கொடிய கரங்களின் பிடியில் நடுத்தர வயதுக்காரர்களே எல்லை மீறும்போது, துடிப்பான வாலிப வயதில் வந்து நிற்போரை நடப்புக் காலம் எத்தனை ஆட்டுவிக்கும் என்பதன் ஒரு அதிர்ச்சிக் கூறு தான் தூத்துக்குடி மாவட்டத்தின் பொறியியல் கல்லூரி விஷயத்தில் நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது.

    தனி விஷயமாக இதைப் பார்ப்பதும், விசாரிப்பதும், உண்மையைக் கண்டறிவதும், தண்டிப்பதும் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தலை குனிந்து நிற்கும் சமூகம் அதைக் கடந்தும் மிகுந்த கவலையோடு, அக்கறையோடு, எச்சரிக்கையோடு விவாதங்களை நடத்த வேண்டுவது காலத்தின் கரைதலாகும். தனது பொறுப்பை நிறைவேற்றுவதன்றி கொலையுண்டு கிடக்கத் தக்க தவறு எதையும் செய்ததாகத் தெரியாத கல்லூரி முதல்வரின் முகமும் நாளிதழில் இருக்கிறது. அந்த முகத்திற்கும் சமூகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    நன்றி: தீக்கதிர்: அக்டோபர் 12

    Share
  • அக்டோபர் 10: உலக மன நல தினம்

    முதுமையின் புன்னகை குழந்தைப் புன்னகை

     

     எஸ்.வி. வேணுகோபாலன்

     

    News_45642

    அடுத்திருப்பதைப் பளிச்செனக் காட்டிவிடும் கண்ணாடியைப் போல, உள்ளம் கடுத்திருப்பதைக் காட்டிவிடுகிறது முகம் என்றார் வள்ளுவர். சாலையில் வேகமாகக் கடக்கும் முகங்களில் எத்தனை ஆயாசம். நடையில் எத்தனை சோர்வு. உள்ளம் களைத்துப் போவதை மறைக்கவும், மறக்கவும் முடியாத எத்தனையோ சோகச் சிறுகதைகள் ஒவ்வொரு திருப்பத்திலும்.மகிழ்ச்சியால் ததும்பும் மனம் இலேசாக இருக்கிறது.

    வேதனையால் நிரம்பும் உள்ளம் கனக்கிறது. வலி, அவமதிப்பு, புறக்கணிப்பு, தேடியது கிடைக்காதது, கிடைத்தது நிலைக்காதது, நிலைப்பது வேண்டாமல் போய்விடுவது, போனது மீளாதது, மீண்டது ஆகாதது.. என அடுக்கடுக்காய்த் துன்பங்கள் மனிதர்களை வாட்டி எடுக்கின்றன. உறவுகள், நட்பு எல்லாவற்றுக்கும் வரைகோடுகளும், எல்லைக்கோடுகளும் சித்திரங்களை மாற்றி எழுதும்போது சிக்கல்கள் தோன்றிவிடுகின்றன. இறுக்கமாகும் மனது நெகிழ்ந்து கொடுக்க மறுக்கிறது. அதன் அடுத்த பயணம் சுமைதாளாது வெடிக்கும் நிலைகளை நோக்கி நகர்கிறது.

    மன நலம் காப்பது மனிதர்களை மேலும் அழகானவர்களாக ஆக்குகிறது. உள்ளார்ந்த சிரிப்பைச் சிந்தும் மனிதர்கள் மற்றவர்களை விடவும் வசீகரமாகத் தெரிகின்றனர்.உடல் சார்ந்த சிரமங்களை மீறி அன்பார்ந்த புன்னகையைத் தவழவிடும் மனிதர்கள் விரைந்து குணமடையும் வாசல்களைத் திறந்து கொள்கின்றனர்.

    மனம், உள்ளம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் புறக் காரணிகள்தான் அகமும் புறமுமாய் மனிதர்களது நிலையைப் பெரிதும் தீர்மானிப்பது. பொருளாதாரம் ஒரு முக்கிய காரணி. வாழ்க்கை முறை அடிப்படைக் காரணி. சமூகம் சார்ந்த வாழ்க்கை அணுகுமுறை, பகிர்ந்து கொள்ளும் உளப்பாங்கு, வெளிப்படைத் தன்மை, பரஸ்பரம் அடுத்தவர் குரல்களை மதிக்கும் பண்பு, பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும் விஷயங்களை பகுத்து ஆராயும் திண்மை போன்றவை கால காலமாக நமது பண்பாட்டின் அடிச்சுவடுகளாய் இருந்து வருபவை. ஆனால் வேகமான தாராளமயமும், மூர்க்கமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் சந்தைமயமும் நமது அடிப்படை குணாம்சங்களை காவு வாங்குகின்றன.

    எதற்காக எதைத் தேடி எங்கே ஓடுகிறோம் என்ற தெளிவில்லாத சம கால துரத்தல் வேட்டையில் கையில் வந்தடையும் பணத்திற்கு எதிர் விகிதத்தில் உள்ளங்கள் வெறுமை அடைகின்றன.

    “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என்றான் மகாகவி. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். எது எப்படிப் போனாலும் நம் வேலை முடிந்தால் சரி என்று ஓடும் அன்றாட வாழ்க்கை, இப்படியான கருணை, கரிசனம், நேயம், புல், பூ பூக்காத வறட்சி உள்ளங்களோடு வீட்டுக்குள் வந்து அடைய வைக்கிறது. புத்தகங்களைக் காட்டிலும் அதிகம் மருந்துகளால் நிரம்புகின்றன நமது அலமாரிகள்.

    உலக சுகாதார நிறுவனம், 1992 முதல் அக்டோபர் 10 அன்று உலக மன நல தினமாக அனுசரித்து வருகிறது. மன நல சம்மேளனத்துடன் இணைந்து கடைப்பிடிக்கப்படும் இந்த தினத்தில், இந்த ஆண்டு முதியோர் குறித்த சிறப்பு கவனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

    “பழுத்த ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரித்ததாம்” என்பது மூத்தோர் சொல். தான் கடக்க வேண்டிய எதிர்கால மைல் கல்லில் இன்று உட்கார்ந்திருக்கும் முதியோரை அடுத்தடுத்த தலைமுறை மதிக்கத் தவறுகிறது. சந்தைப் பொருளாதார விதிகளோடு இணைந்த இந்தத் தலைமுறை இடைவெளி உடல்மொழியிலும், பார்வையிலும், பகிர்தலிலும் மிகப் பெரிய வன்முறையாக வெளிப்படுகிறது. கூனிக் கூசிக் குறுகிப் போகும் முதியோர் உள்ளம் வறண்ட நிலத்தை விடவும் அதிகப் பரிமாணத்தில் வெடித்துப் பிளந்துவிடுகிறது. பின்னர் அதன் மீது எவ்வளவு நீரூற்றினாலும் ஒரு பசுந்தளிரை அது வெளியே நீட்டித் தர இயலாது போகிறது.

    பேராசிரியர் ச. மாடசாமி தொகுத்திருக்கும் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று: நான்கு மகன்களாலும், மருமகள்களாலும் அவமதிக்கப் படும் மூதாட்டி ஒருத்தி வீட்டை விட்டு வெளியேறி ஊரின் புறத்தே இருக்கும் பாழடைந்த வீட்டினுள் போய் நின்று கொள்கிறாள். தான் படும் பாட்டைக் குறித்த அவளது அடக்கமாட்டாத வேதனையின் கூக்குரல் ஒலிக்க ஓலிக்க ஒவ்வொரு சுவராய் பெருத்த ஓசையோடு இடிந்து விழும்.

    அண்மையில் விகடன் இதழில் அ. முத்துலிங்கம் எழுதியுள்ள ‘கடவுச் சொல்’ என்ற அற்புதமான சிறுகதை மனிதர்கள் அருகே வந்து பேசுகிறது. தங்களோடு ஒத்துப் போகத் தெரியவில்லை என்று வயதான தாயைப் பிள்ளைகள் மிகுந்த பொருட்செலவில் வசதியான விடுதியில் குடிவைத்தும் அந்த முதியவள் படும் தனிமையின் அவஸ்தையைச் சொல்கிற கதை அது.

    நோயினாலும், பொருளாதார சிக்கல்களாலும், குடும்பப் பிரச்சனைகளாலும், தனிமைத் துயரிலும், உளச் சோர்வின் பொருட்டும் பாதிக்கப்படும் முதியோர் குறித்த அக்கறையை, இந்த உலக மன நல தினம் முன்னுக்குக் கொண்டுவருகிறது. முதுமை உடலில் ஏராளம் சுருக்கங்களைக் கொண்டு வருகிறது. ஆனால், அக்கறையான கவனிப்பின்அன்பு உள்ளங்கள் சுருங்கிப் போகாது பார்த்துக் கொள்கிறது. முதியோரது புன்னகை, குழந்தையின் புன்னகையைப் போலவே இதமளிப்பது. மற்றவர்களது முகங்களையும் சேர்த்து அலங்கரிப்பது.

    – நன்றி:தீக்கதிர்: அக்டோபர் 10, 2013

    Share