ஒடுக்குமுறையின் தாக்குதலில் அலைவுறும் உடலும் உள்ளமும்!…

எஸ்.வி. வேணுகோபாலன்

தீக்கதிர் (பிப் 24) இலக்கிய சோலையில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை::

ஒரு சிறுகதையை முன்வைத்து

ஒடுக்குமுறையின் தாக்குதலில் அலைவுறும் உடலும் உள்ளமும்

மகாகவியின் அந்தக் கவிதையை அதற்குமுன் வாசித்திருந்தாலும், எம் பி சீனிவாசன் அவர்களது சேர்ந்திசை சிற்பங்களில் ஒன்றான பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் பாடலை முதன்முறை மட்டுமல்ல பின் எப்போது கேட்க நேரும்போதும், அதன் கடைசி பகுதியில் “ஓயுதல் செய்யோம்.. தலை சாயுதல் செய்யோம்..” என்ற இடம் வருகையில் இயல்பாக உணர்ச்சி மேலிட கண்ணீர் பெருகத் தொடங்கிவிடும். மனதில் உறுதி வேண்டும் என்ற கவிதை யேசுதாஸ் குரலில் திரைப்பாடலாக ஒலிக்கக் கேட்கும் தருணங்களில் அப்படித் தான்; உண்மை நின்றிட வேண்டும் என்ற வரி என்னை வெவ்வேறு நினைவடுக்குகளின் தாக்கத்தில் சற்று இயல்பு நிலை நழுவ வைத்துவிடும்.

மனித மனத்தின் தன்மை அப்படி என்பதை பலரது அனுபவங்களிலிருந்தும் அறியமுடியும். இசை நுகர்வைப் போலவே, ஓவிய ரசனை போன்றே, எழுத்து வாசிப்பும் நம்மைச் சமயங்களில் நிலை குலைய வைத்துவிடும் என்பதையும் நாம் உணர்கிறோம். தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்களது தோட்டியின் மகன் நாவல் அப்படி ஒரு வாரத்திற்கு என்னைத் திண்டாட வைத்தது. அழகிய பெரியவன் அவர்களது சிறுகதைகள் சில உலுக்கி எடுத்ததுண்டு. இந்தப் பட்டியல் பெரியது.

இவை ஏற்படுத்திய உணர்ச்சிகளிலிருந்து வேறுபட்ட தாக்கம், சம காலத்தில் நேரடியாக அறிந்த நிகழ்வுகளின் புனைவு வடிவங்களில் பயணம் செய்கையில் ஏற்பட்டது. அதன் அதிர்ச்சி பிரதிபலிப்புகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. தாமிரபரணியில் 17 உயிர்கள் காவு வாங்கப்பட்ட மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையைப் பின்புலமாகக் கொண்ட ச தமிழ்ச்செல்வனின் “சொல்ல வருவது” சிறுகதையைக் குறிப்பிட வேண்டும். தனது தோழனின் கல்லறையை விட்டு அகல மறுத்து அங்கேயே அல்லாடும் அந்த நாய், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபின்னும் நள்ளிரவு நேரத்தில் அவனது நினைவில் பெருத்த ஊளையிட்டு அழும் கதையின் இறுதிக் காட்சி எப்போது வாசித்தாலும் நிம்மதி இழக்க வைத்துவிடும்.

தவிப்புற வைக்கிற – ஆவேசம் கொள்ளத் தூண்டுகிற ஒரு சிறுகதையை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. “நீளும் கனவு” என்ற தலைப்பில் (கயல் கவின் புக்ஸ், சென்னை 24) வெளியாகி இருக்கும் கவின் மலர் அவர்களது அருமையான சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது “மெய்” என்ற அந்தக் கதை.

தாங்க முடியாத வலியில் துடிக்கும் ஒரு வாலிபனின் மரண அவஸ்தையின் சொந்தக் குரலில் தொடங்கும் கதை, தான் எங்கே இருக்கிறோம், உயிரோடுதான் இருக்கிறோமா, எப்படி இந்தக் கதிக்கு ஆளானோம் என்று அவன் நிகழ்வுகளைப் பின்னோக்கி சிந்திக்கப் பார்த்துப் பரிதவிக்கும் பாதையில் தொடர்கிறது. உள்ளபடியே அவனது உடலும் பயணத்தில் இருக்கிறது. செமத்தியாக அடித்து நொறுக்கப்பட்ட தனது எந்தெந்த உறுப்புகள் என்னென்ன கதியில் இருக்கின்றன என்பதே கூட அவன் தனக்கு உணர்த்திக் கொள்ளத் தலைப்படும் நேரம் பார்த்து மயக்கம் வந்து அவனை வீழ்த்துகிறது. மீண்டும் கூடுதல் வலியோடு கண் திறந்து அல்லாடும் நேரத்தில் மூளை அவனுக்கு நேர்ந்த தாக்குதலை மீண்டும் திரையில் எழுதிப் பார்க்க முனைகிறது. மீண்டும் மயக்கம்.

“மவனே! சாவுடா! செத்துத் தொலைடா நாயே!” என்று சொல்லி அடிக்கப்பட்ட நினைவுகள்…. சுற்றிலும் காக்கிச் சட்டைகள்… திரும்பிய பக்கமெல்லாம் இளைஞர்கள்.. ஐந்து முக்கு சாலை. விண்ணதிரும் முழக்கங்களோடு வாகனங்கள் கடந்து போன இடம். முஷ்டியை உயர்த்தித் தான் குரல் எழுப்பிக் கொண்டிருந்த நேரம். இப்போது நினைவு ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. தாங்கள் காவல் துறையால் நையப் புடைக்கப்பட்ட இடம், பரமக்குடியின் ஐந்துமுக்கு சாலை. மீண்டும் மயக்கம். மீண்டும் தெளிகிறபோது தன்னருகியில் நெற்றியில் கொப்புளிக்கும் குருதியொடு சாய்கிற பெரியவர் காட்சியில் வந்து போகிறார். துப்பாக்கிச் சூடு. பழி தீர்த்த திருப்தியோடு புன்னகைக்கும் காக்கிச் சட்டைகளும் தட்டுப்படுகிற காட்சி அது.

தனது உடம்பின் எல்லாப் பாகங்கள்மீதும் பூட்ஸ் கால்கள் கொலைவெறியோடு மிதித்த அந்தக் கொடூர நினைவுகள், தான் உள்ளபடியே செத்துப் போய்விட்டோமோ என்று அலைவுறும் கணங்கள்…என கதை நகர்கிறது. சாதிப் பெயரைச் சொல்லி திட்டியவாறே ஒருவன் நடு மண்டையில் ஓங்கி அடித்தது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இப்போது தன்னை எங்கே கொண்டு செல்கின்றனர் என்று தெரியாது. மருத்துவமனை வாசலில் நிற்கும் வேனுக்குள் உயிருக்கு மன்றாடுவோரும், சோர்ந்துபோய் விடைபெற்று விட்டோரும் இருக்க, தற்செயலாக அந்தவழி செல்லும் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரது மனித நேய நடவடிக்கை அவர்களை மருத்துவமனைக்குள் கொண்டு சேர்க்கிறது.

பின்னர் சடலங்களின் வரிசையில் தானும் கிடத்தப் பட்டிருக்கிறோம் என்று அந்த வாலிபன் உணர்ந்தாலும் நகரக் கூட முடியாத – தீனக் குரலை எழுப்பக் கூட இயலாத நிலையில் படும் பாடுகளும், பின்னர் சிகிச்சையின் கரங்கள் அவனை ஒரு கட்டத்தில் தீண்டத் தொடங்கிய நேரத்தில் தனது காதல் மனைவியை ஒரு முறை பார்த்துவிட்டு உயிரை விட்டுவிடத் துடிக்கும் அவனது இதயத் துடிப்புகளும் அசாத்திய உண்மைத் தன்மை வாய்ந்தவையாக கவின் மலரின் எழுத்தில் கனத்த வாசிப்பாகிறது. வலி பொறுக்க மாட்டாத சயமங்களில் மயக்கம் அவனுக்கு வரமாக வாய்ப்பதை வாசிக்கையில், மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் வரும் கண்பார்வையற்ற பெண், தனது கால்களில் சூடு வைத்துக் கொடுமைப்படுத்திய ஆட்களைப் பற்றி விவரிக்கையில், நல்ல வேளையாக ஒருத்தன் என் மார்பில் ஓங்கி உதைத்தான், நான் மயக்கம் ஆனேன் என்று சொல்லுமிடம் எனக்கு நினைவுக்கு வந்தது.

‘சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கெல்லாம் உயிரின் வாதை’ என்று புரட்சிக் கவி காவியத்தில் எழுதியிருப்பார் பாவேந்தர் பாரதிதாசன். போராட்டங்களை ஒடுக்கும் அரசின் கொடுங்கரங்கள் அப்படித்தான் என்பதை சுதந்திர இந்தியா உடனே சேலம் சிறையில் நிரூபித்தது. கடலூரில் காட்டியது. எத்தனை எத்தனை உன்னத போராளிகளை அற்ப வெறியோடு தாக்கிய ஆட்சியாளர்களின் ஏவல் படைகளுக்கு இயக்கங்கள் பறிகொடுத்திருக்கின்றன. சாதிய வன்கொடுமைக்கு எதிரான எழுச்சிப் போராட்டங்களை இன்னும் மூர்க்கமாகத் தாக்கப் பழகி இருக்கும் காவல் துறையின் ‘சாதனை’ வரலாற்றின் அண்மைக் கால அராஜக சாட்சியம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு.

கொலையுண்டவர்கள் எண்ணிக்கை கூட சரிவர சொல்லப்படாத அளவு துணிச்சலோடு நடத்தப்படும் இத்தகைய நடவடிக்கைகள் நாளேடுகளில் ஒரு நாளின் தலைப்புச் செய்தியாகவும், பருவ இதழ்களில் ஒரு சிறப்புக் கட்டுரையாகவும், புலனாய்வு ஊடகங்களில் ஒரு பரபரப்பு அம்சமாகவும் தற்காலிக வாழ்வு வாழ்ந்துவிட்டு பொது நினைவிலிருந்து அகற்றப்பட்டு விடுபவை. ஆனால் தாக்குண்ட ஒரு மனிதனின் உடலும், உள்ளமும் அடையும் பரிதவிப்பின் பதிவாக எழுதப்பட்டிருக்கும் இந்தச் சிறுகதை சம கால உண்மை நிகழ்வு ஒன்றின் கவனிக்கத் தக்க புனைவாக முன்வைக்கப் பட்டிருக்கிறது. சமூக செயல்பாட்டாளர்களின் வாசிப்பை வலியுறுத்துகிறது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க