Author: கவியோகி வேதம்

  • கொல்லிமலையின் கொள்ளையழகு!

    கவியோகி வேதம்

     

     

     

    சேலம் நாமக் கல் பக்கச்  சிறப்பழகே  கொல்லிமலை!

     

    ஓலச்சிறு அருவியுடன் இயற்கைஅன்னை உல்லாசம்!

     

    கொல்லிப் பாவைஎனும்  குறு ‘தேவி’(கால்) பாவும் இடம்!

     

    கொல்லும்  அரக்கர்களை (அன்று)- குறுநகையால்  வென்றஇடம்!

     

     

     

    யாரையும் இதுவரையும் கொல்லாத மலையைப்போய்

     

    பார்! இது  ஆட்கொல்லி மலைதாண்டா! என்றுசொன்னால்

     

    கவி இவனும்  காதில்பூ  வைத்தவனோ? நம்புவனோ?..(இது)

     

    கவலையைக் கொல்லும்மலை!  மனஅழுக்கைக் கொல்லுமலை!!

     

     

     

    குறிஞ்சிநில  வளச் ‘சாட்சி’  கொல்லிமலை! இயற்கை(யின்)மடி!

     

    உறிஞ்சியபின்   ‘சக்தியன்னை ’உயர்ந்தசிவன்  வயிற்(று)அணுவை,,

     

    கீழிறங்கிக்  காட்டுகின்றாள் கிறுகிறுக்கும் தன் அழகை!

     

    பாழிலிருந்(து)   ஆன்மாவைப்  பதமாக மேலுயர்த்த

     

     

     

    தனக்கென்று   தனிவழியை தளிர்த்தடங்கள் பூஞ்சோலை

     

    முனகிநிற்கும்  பலமுகில்கள், மூலிகைப் பண்ணைகள்

     

    பெரியசாமி  கோயில்கள், பெரியசந் தனப்பாறை

     

    அருமைப்  ‘ படகுவீடு’, அட்டகாச மலைத்தொடர்கள்,

     

     

     

    தாவர  இயல்பூங்கா, தொலைநோக்கி நிலையங்கள்,

     

    மேவுசுத்தத்  தென்றல், மிதமான தட்பவெப்பம்

     

    மூலம் எல்லாம்  நமைக்கவர்ந்து முன்னேற்று  கிறாள்மனத்தை!

     

    ‘வாலைமகள்’  சக்தி- எண்ணில், வளையாத நெஞ்சுமுண்டோ?

     

    .

     

    இருண்டஉங்கள்  மனஇறுக்கம் ரெண்டுநாளில் போகுமய்யா!

     

    பருக்கவைத்தே  உம்’ பர்ஸை’ , பின் இங்கே செலவழிப்பீர்!

     

    கட்டிவைத்த   கண் இரண்டால்,   கருங்குயிலைக் காண்பீரோ?

     

    பெட்டிகளில்  பணம்பூட்டிப் பேரின்பம் அடைவீரோ?

     

    .

     

    ஓய்வினையே  கழிப்பதற்கும்   இன்பமெலாம்  சுகிப்பதற்கும்

     

    தாய்மடியாய்  கொல்லிமலை  தான் -உம்மை வரவேற்கும்!

     

    எங்கும்உமக்கு  வேகம்ஏன்? எதிலுமே சலிப்பும்ஏன்?

     

    தங்கத்  தமிழ்மன்னர்   பாரி, காரி, மலையன்,ஓரி

     

    .

     

    ஆண்டுவந்த  கொல்லிமலை ஆத்மாவின் ஏகாந்தம்!

     

    ஆண்டிடுமோ  சிறுநோயும்  அதிகநாள் நீர்தங்கின்?

     

    கோடி கொடுப் பினு(ம்)இதுபோல் கற்கண்டுநீர் கிட்டிடுமோ?

     

    வாடவே   வைக்காத  வளர்பசுமை  வேறெங்கு?

     

    .

     

    பலாமலர்த் தேனும் மிகுருசி  அன்னாசி,மலர்த்தேனும்

     

    நிலாபோல்  கீழ்கொட்டும்  நின்றறியாத் தேனீக்கள்!

     

    சாணக்யன் பிறந்த இடம்சடசடென ஆகாயகங்கை(ஓர்)

     

    பாணம்போல்  கீழ்பாய்ந்து  பசுந்தளிர்கள் செழிக்குமிடம்!

     

     

     

    கவிதை  ஊற்றே  கொல்லிமலை!- கோபக்

     

    கனலை  மாற்றும் நல்லமலை!

     

    தவமாய்ச்   சித்தர்   அருளுமலை!நீவிர்

     

    சற்றே   படகில்  வந்துகாண்பீர்!

     

    ‘கவை’போல் காது கள்விடைக்கத்துளிர்கள்

     

    கடித்த  முயல்கள் ஓடும்மலை!

     

    நவையே கொள்வீர்! இம்மலையை அழகை

     

    நன்றாய்  உண்ண  வந்திடுவீர்

     

     

     

     

     

    Share
  • டயரியில் குறித்த காசு!..

     

     

     கவியோகி வேதம்

     

     

     குழந்தையாய் இருந்தான்,

     குடிக்க, தின்னப் பலவும் கேட்டான்,

     விளையாடப் பொம்மை,  கேம்ஸ்நோட் பேட்

     காசு எத்தனை..?அறியான்;

     தந்தையோ  குறித்தார்,

     கல்லூரிக்கு அனுப்பும் முன்;

    .

     டாக்டராய் ஆகு,

     அதுவே உன் லட்சியம் என்றார்!

     டயரியில் குறித்த அவனுக்கான

     செலவிலே அவர் மனம்.!.

     அவன் இன்னும்  குழந்தையாய் இருந்தான்,

     அவருக்காய்ப் படித்தான்..வென்றான்

     செய்த செலவை அப்பன் ‘டயரியில்’- குறித்தான்.

    .

     வசூலிக்கும் நேரத்தில்

     வக்கணையாய் வந்தது அவர்க்கே பெரும் நோய்!

     முதல் நோயாளி அவர் அவனுக்கு;

     அவன் காசு வசூலிக்கவில்லை..

     அதுபற்றி அவர்க்கே உறுத்தல்!

     சொல்லி மன்னிப்பாய் என்னும் முன்

     வாய் கோணியது.

     உடல் காடு ஏகியது;

     வெட்டியானோ இவன் டாக்டர்

     என அறிந்து பெரும் காசு கேட்டான்.

     அப்பனைப் பிழைக்க வைக்கமுடியாத் தண்டனையாய்

     அவனுக்கு இவன் கொடுத்தான்.

     கடைசி மூச்சில் டயரி நினைவு

     அப்பனுக்கு வந்தது அறியாதவனாய்..!

     

     *************************************************************

     

     

     

     

     

     

     

    Share
  • பனித்தூளின் சாகசநடனம்!

    -கவியோகி வேதம்

    (கனடாவின் பனிமழை குறித்து எழுதப்பட்ட கவிதை)

    சன்னல்வழிப் பார்க்கின்றேன்; சரமழைதான்
    பொழிகிறதோ?
    என்(று)உற்று நோக்கிநின்றால் இழைஇழையாய்ப்  பனிச்சாறு!

    ‘முகிற்’–பட்டு. கிழிந்ததுவோ? சரிகைசுக்கு நூறாச்சோ?
    தொகைதொகையாய் உதிர்ந்துவந்து வீட்டின்மேல் கூரைமேல்

    கார்களின்மேல், சாலையின்மேல், புல்லின்மேல் கதவின்மேல்
    கூறுகெட்ட வெங்காயப் பனிஉதிர்ந்து கொஞ்சிற்று!

    கூரைஎல்லாம் குல்லா! குளிர்ந்ததரை யில்வெண்‘பாய்’
    சாரைசா ரையாய்-விரை சரக்கு(உ)ந்தில்  ஒளிப்போர்வை!

    சின்னசெடி, புல்கொத்து – இவற்றைஒரு  ‘பர்தா’-போல்
    மின்னியே  மறைத்துபனி அட்டகாசம் செய்கிறதே!

    இதற்கிடையில் அரசாங்கக்  கார் ஒன்று இறகைப்போல்
    சுதிவிரித்தே  பனிப்பாயைச்  சுருட்டி-ஓரம் தள்ளிற்றே!

    என்னவெல்லாம் அதிசயம்! இதுவரை அறியேனே!
    பின்னும் வெயில்தவிர சென்னையில் பார்த்திலனே!

    என்றுஒரு காட்டான்போல் இளிப்புடனே பார்த்திருந்தேன்!
    “சன்னல் திறந்தேநான் சரியாகப் பார்த்திடவா?”-.

    என்றேயான் பேத்தியிடம் இளம்-‘மதலை’ போல்கேட்டேன்!
    “சன்னலைத் திறந்தால்நீ  சட்டினிதான்!”—அவள்சிரித்தாள்!

     

     

    Share
  • கையக்கூட தொடமாட்டேன்..!

        கவியோகி வேதம்

    பனங்காட்டு வயலுக்குள்ளே

    .. ..பசுமாடு மேய்க்கும்புள்ளே!

    இன்னக்கி ‘சரி’ சொல்லுபுள்ளே!

    .. இந்தாண்டில் தாலிகட்றேன்!

    .

    கல்யாணத்துக்கு சாச்சியாநான்

    ..கன்னிமுத்தம் ஒண்ணுதர்ரேன்!

    மெல்லநீயும் வந்துபுள்ளே-என்

    .மீசெபக்கம் தார்ரியா?

    .

    கொக்கிஎதும்  போடாதே-மாமா!

    .கொக்கிஇடநான் வளையமில்லே!

    சொக்கமாட்டேன் உன் மீசெயிலே!

    ..சுந்தர்ராமன் நீயுமில்லெ!

    .

    மாடுமேய்க்கும் புள்ளெதான்நான்!-

    .மக்கு இல்ல நானுமாமா!

    ஏடுகூட படிப்பேன்மாமா!-உன்

    .எண்ணமெல்லாம்  அறிஞ்சிடுவேன்!

    .

    கலியாணப் பேச்செசொல்லி-என்னெ

    கண்கலங்க வெக்கவேணாம்!

    கல்யாணம் ஆகும் முன்னெ

    .கன்னமுத்தம் ஒண்ணும்வேணாம்!

    .

    என்னெக்கட்ற ஆம்பிளைக்கி-நானு

    .என்னிக்கும்சுத்த மாயிருப்பேன்!

    உன்னெக்கண்டு மயங்கிவிட்டு

    .உளுத்துப்போயி நிக்கமாட்டேன்!

    .

    ஆம்புளெங்க  பொண்மயக்கி

    .அம்போ-ன்னு விட்டபின்னே,..

    பொம்புளெங்க யார்ட்டபோயி

    . புலம்பறது சொல்லுமாமா!

    ..

    அடிசக்க காத்தாயீ!–நீ

    . அறிவுள்ள பொம்பளைடீ!

    துளிக்கூட மயங்காத

    . துணிச்சல்உள்ள  ஆத்தாநீ!-

    .

    இந்தாண்டுத் தையில நான்

    .எசவான நாள்பார்த்து-உன்

    செந்தண்டுக் கழுத்திலநான்

    ..தாலிகட்டி மகிழ்ந்திடுவேன்!

    .

    அந்தநாளு வரும்வரெக்கும்

    ..ஆத்தீ உன்னெத் தொடமாட்டேன்!!

    நல்லஒரு பொண்ணே!-உனக்காய்

    ..நாளுமேநான் காத்திருப்பேன்!

     

     

     

     

     

     

    Share
  • சக்தியின் பித்திலிருந்து தப்புவது கடினம்!

    -கவியோகி வேதம்

    அப்பனே! மெத்தக் கடினம்! – தியான
      –ஆளுகைச் சுற்றில்நீ வந்தாலே! (அப்பனே)
    வெப்பமும் ஆவியும் போலே – சக்தி
     –விரலுக்குள் உன்னைப்பிடிப் பாளே!

    நித்தமும் மூச்சைப் பிடிப்பாய்! — சக்கர
     –நீள்சுகம் அங்க னுபவிப்பாய்! – அவள்
    கொத்தாய்உன் மேனி  பிடிப்பாள்! – பேசிக்
     –கொஞ்சியே சித்தும் வடிப்பாள்!  (அப்பனே)

    உனக்குள் பரவசம் தந்தே — மூளை
      –உச்சியில் நின்றே சிரிப்பாள்! – அவள்
    தினமும் சிலரை அனுப்பி- வினைத்
     –தினவைஉன் மூலமே தீர்ப்பாள்!  (அப்பனே)

    சக்தியின் பித்தில் இருந்தே – உன்னால்
     –தப்பவே ஒண்ணாது! – சொன்னேன்! — ஆக
    பக்தியும் த்யானமும் வேண்டின் — சக்திப்
     –பரப்புக்குள் போகும்முன் யோசி!  (அப்பனே)

     

     

    Share
  • எத்தனை அழகு! எத்தனை அமைதி!

    கவியோகி வேதம்

     
    எத்தனை அழகு! எத்தனை அமைதி!
    ..இறைவனின் சன்னதியில்!
    முத்தெனும் பல்லின் ஒளியில் மூழ்கினன்
    …முருகனின் தண்ணருளில்!
    .
    எத்தனை முயன்றும் சொல்லே வரலையே?!
    … எங்ஙனம் பாடிடுவேன்?
    சத்தினை உறிஞ்சிய தலைவனின் அருளையே
    ….சாரமாய் நாடிடுதே!!
    .,
    சூடவே தொடுத்த மாலையும் நழுவித்–
    ..தொலைவில் போனதுவே!
    .பாடவே எடுத்த பல்லவி மறந்ததே,
    ……பதட்டம் ஆனதுவே!
    .
    கண்ணின் வீச்சில் உலகம் மறந்தது;
    …கவலையும் பறந்ததுவே!!
    தண்ணருள் புன்னகை முழுதுமே என்னைச்
    சக்கையாய்ச் செய்ததுவே!
    .
    ‘என்னஓர் புண்ணியம் செய்தனை!’- எனும்சொல்
    … ..எங்கோ கூறியதே!
    மின்னலாய் ஓர்வேல் தொடவே , ‘அவனாய்’-
    ..மேனியே மாறியதே!
    **********************************************(கவியோகி வேதம்)29-7-16`

    Share
  • தேகமும் யோகமும்.. பகுதி12

     கவியோகி வேதம்

     யோக நிலையும்,மனித உதாரணமும்

     

    yoga211

     நம் மனிதர்களில் பாதி சதவிகிதம் பேராசையினாலும், தீவிர இச்சைகளாலும் ,உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மன வலிமை இழந்து, அதனால் உடல் பலத்தையும் இழந்து விரைவில் நோய்க்கு ஆளாகின்றனர். மனோ பலம் இல்லாததால் எந்த மருந்தும் அவர்களைக் குணப்படுத்த முடியாமல் போகிறது.

     உதாரணத்துக்கு… பேரைச் சொல்லாமல் சொல்லுகின்றேன். பிரபல சிரிப்பு நடிகர்.. அவர் திரைக்கு வந்து இரண்டு மூன்று தடவை முகத்தையும், காலையும் அஷ்ட கோணலாக ஆக்கிக் காட்டினாலே போதும் விழுந்து விழுந்து ஜனங்கள் சிரிப்பர். அப்பேர்ப்பட்ட நடிகர் சும்மா இருக்கக்கூடாதா! நானும் படம் தயாரிக்கிறேன் என்று சொல்லி ஆசை வலைக்குள் வீழ்ந்து, அதில் தோல்வியுற்று துக்கம் தாங்க முடியாமல் குடிவெறிக்கு ஆளாகி  இறந்தும் போனார். இன்னொரு குணசித்திர நடிகையும் அப்படியே. படத்தயாரிப்பில் விழுந்து நஷ்டப்பட்டு அந்தச் சோகத்தால் கஞ்சா முதலிய போதைக்கு அடிமையாகி நெடுநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இந்த இருவர்க்கும் யோகா மூலம் மேலே ஏற, மீண்டும் தன்னம்பிக்கை ஒளியை அவர்கள் உள்ளே புகுத்தி வாழுமாறு செய்ய  யாரும் வழி காட்ட வில்லை.அதுவே உண்மை.

    ….இப்படி நடிகர்கள் மட்டுமல்ல. நிறைய பணக்காரர்களும் கூட நண்பர்களால் கெட்ட  வழியில் ஈர்க்கப்பட்டு, அவமானம் தாங்காமல் தற்கொலை வரை போகின்றனர்.  ‘வாழ்க்கை’ என்பது தானும் ஒழுங்காக வாழ்ந்து, பிறரையும் நல்வழிக்குத் திருப்பி, கூடுமானவரை சிக்கலில் மாட்டியோர்க்கும், ஏழைகட்கும் தீவிரமாக உதவுவதே என்ற கோட்பாட்டை மறக்கின்றனர்.

    ..இன்று உலகம் முழுதும் ‘யோகா ’ தினம் அனுஷ்டிக்கப்படுகிறது..  உடல், மன உணர்ச்சிகளை தியானம் மற்றும் யோக ஆசனங்களாலும்  கட்டுப்படுத்தி, அல்லது ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவந்தால் யாவரும் இன்பமாய் வாழலாம் என்று எல்லா யோகாசிரியர்களாலும் போதிக்கப்படுகிறது. மன வலிமையையும் , காரியத்தை வெற்றிகரமாகச் சாதிக்கும் திறனையும்  யோகா மூலமே மேம்படுத்தலாம்  என்று இன்றைய டெம்ப்டேஷன் (தூண்டுதல்) சூழ்நிலையில் அனைவராலும் அறிவு பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. பெரிய அரச போக வாழ்க்கை கிட்டினாலும் கௌதம புத்தர் தம் மன வலிமையால் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி, இந்த போக வாழ்க்கையில் நான் மூழ்க மாட்டேன். அனைவரும் எப்போதும் மனத்தில் மகிழ்ச்சியும் அமைதியும்  பெறவேண்டும் ;அதற்கான வழிவகை காண்பேன்

     என்று மனைவியை, மகவை, அரச வாழ்க்கையைத் துறந்து காட்டுக்கு ஏகவில்லையா? அதனால் மனம் ஒன்றே துக்கத்துக்கும், மட்டற்ற மகிழ்ச்சிக்கும் அமைந்த ஒரே சாதனம் என்று தெரியவில்லையா? சந்தோஷம் என்பது வெளியில் இல்லை, வெளியில் கிடைக்கின்ற பொருள்களால் இல்லை, உனக்குள் ஆழ்ந்து அறியும் ஞான மனத்தால்தான்  என்று வேதாந்திகள் மட்டுமின்றி இன்று சாதாரண கிராமத்தானும் உணர்கிறான். அதனால் ,..எனக்கு இது போதும், இன்று கிட்டும் பணம் போதும், மனத்துக்கு இன்று நிம்மதி கிடைக்கிறதா அதுவே எனக்கு இறைவன் அளித்த பெரிய கொடை என்று அனுபவத்தால் உணர்கின்றான். எந்தத் தீவிர இச்சைகளும், இலவசமாகக் கிட்டும் எந்தப்பொருளுக்கும்  உண்மையாக உழைக்கின்ற விவசாயி ஆசைப்படுவதில்லை.

     …. எல்லா மனிதருள்ளும் ஏதோ ஒன்றைச் சாதிக்கும்  வெறியும், உழைப்பு உணர்வும் ஆழ் மனத்தே அமைந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி இறைவனிடம் நம்பிக்கை பூண்டால் அவனுக்கு அபாரமான  இன்ப வாசல் திறக்கிறது.  ஒரு கதவு பூட்டப்பட்டாலும் அவனுக்கு இன்னொரு வாசல் நிச்சயம் திறக்கிறது…

     …..எனக்குத் தெரிந்த ஒரு துணி வியாபாரி சில வருடங்களாக வெற்றிப்பாதையில் போய் நிறைய லாபம் சம்பாதித்தார். அதனால்  ஒரு பெரிய கடையைத் தொடங்கி அதனை நிர்வகிக்கும் பொறுப்பை வேலைகிட்டுமோ என்று தவிப்பில் இருந்த தன் மைத்துனனுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து வழங்கினார். யாவற்றையும் கற்று, வியாபார நுணுக்கமெல்லாம் தெரிந்துகொண்டு மூன்றே வருடத்தில் அவருடைய பணம் பூராவும் சுருட்டிக்கொண்டு  அந்த மைத்துனன் வட நாட்டுக்கு ஓடிவிட்டான்.

     அவனைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

     போலீஸும் உதவவில்லை.  ஆயின்  தனக்கு  ‘யோகா’ சொல்லிக்கொடுத்த ஒரு ராமகிருஷ்ண மடத்து சன்னியாசியின் ஆசிகள் மூலம்  தன்னிலை உணர்ந்தார். தைர்யமும் அவரால் பெற்றார். அவர் இதை ஒரு கர்ம பலன் என்று ஒதுக்கித் திரும்பவும் முதலில் இருந்து உன் வியாபாரத்தை ஆரம்பி என்றார். உனக்கு நஷ்டம் கொடுத்தவன் உன் உறவினன்தானே, சரி அவனுக்கு நானே மேல் நிலைக்கு வர உதவினேன் என்று மனத்தில் ஒரு மகிழ்வு நிலையை ஏற்படுத்திக்கொள் என்று உபதேசம் செய்தார்.

     .. தெளிந்தார் அவ்வியாபாரி. சரி போனது போகட்டும் என் அறிவு மழுங்கவில்லையே, அனுபவம் இன்னும் என் மூளைக்குள் ஒளிர்கிறதே என்று திரும்பவும் உண்மையாக  உழைத்து,ஒரு வங்கியை அணுகி கடன் பெற்று படிப்படியாக மேல் நிலைக்கு வந்துவிட்டார். இன்று அவருக்கு தென்னிந்தியாவில் ஆறு கடைகள் உள்ளன.  நிறைய சோதனைகள் வைத்த பிறகே, டெபாஸிட் முதலியன பெற்ற பிறகே தகுதியான ஆட்களுக்குக் கடையில் வேலை கொடுப்பார் இன்று.. அனுபவமும், யோகாவும் இப்போது அவரிடம் பேசுகின்றன அன்றோ?

     … இதுபோல் யான் நிறைய நல்ல பணக்காரர்களைச் சந்தித்திருக்கின்றேன்.

      அதில் ஒருவர், ..அவர் எந்த இரண்டு இன்ப எல்லைக்கோ,அல்லது பிறரின் தூண்டுதலுக்கோ ஆளாகாமல், தனது உண்மைநிலை, தன்  செயல்திறன்,தன்னால்  முடிந்த எல்லை இவற்றைக்கணித்து எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பார்.

     உலகம் மாயை என அவர் ஒப்பார், ஞானி ஜனகர் போல் இங்கேயே இருந்துகொண்டு பிறர்க்கும் உதவி செய்து கடமை ஒன்றையே பெரிதெனக்கொண்டு வாழ்கிறார். படாடோபம் கிடையாது அவரிடம்;தனது குடும்பத்தாரை மட்டுமின்றி, பறவைகளையும் நேசிக்கிறார். இயற்கையையும் நேசிக்கின்றார்.ஏழைகட்கும், கலைஞர்கட்கும் தன்னால் முடிந்தவரை உதவுகின்றார். யோகம்  உண்மையாகக் கற்பிக்கும் ‘மனிதத்தன்மை’ எனில் என்ன? என்பதற்கு உதாரணம் அவர்.எப்போதும் சிரித்த முகத்தால் நேர்மையான பேச்சால், நடவடிக்கைகளால் எல்லோரையும் அவர் கவர்கின்றார். யோகத்தன்மை என்பது இதுவே. ‘நல்லி’ என்று நல்லதே செய்யும் அவருக்கு மக்கள் வழங்கிய  பெயர்…(தொடரும்)

     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    Share
  • தேகமும் யோகமும் 11 வது பகுதி..

    கவியோகி வேதம்

    yoga21

     ‘தீவிர இச்சை’யைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    ….. யான் சில அன்பர்கட்கு யோகா கற்றுக்கொடுத்துவரும்போது ஒரு இளம்பெண் கூச்சத்தோடு என்னிடம் சொன்னாள். ‘வேதம் சார்!நீங்கள் சொல்லிக்கொடுக்கும் எல்லாப் பயிற்சிகளையும் நான் தினசரி வீட்டில் தவறாமல் செய்துவருகிறேன். ஆயின் இப்போதெல்லாம் யோகா செய்தபின் கடும் பசி ஏற்படுகிறது. எதையாவது உடனே நிறைய சாப்பிடணும்போல் தீராத ஆசை உண்டாகிறதே.அது ஏன்? முன்பு போல் என்னால் இப்போ தின்னும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லையே? ஏன் சார்?’-என்றாள்.

    ……….. நான் சொன்னேன். ஆமாம். யோகா செய்தபின் பசிக்கும்தான். காரணம் என்னவென்றால், உன் உடம்பிலுள்ள கெட்ட ரத்தம்,கழிவுகள் எல்லாம் அவ்வப்போது உடன் வெளியேறுகிறது.ரத்தமும் சுத்தமாகிறது. வயிற்றிலும்  அதிக அமிலம் சுரந்து ஏதாவது  ‘தின்னத்தா, தின்னத்தா’ என்று நாட்டிய ஜதி  போல் அது பேசுகிறது. இங்குதான் நாம் அதி ஜாக்கிரதையாக இருக்கணும். வயிற்றை அடக்கத்தெரியணும். மெதுவாக அதனிடம் பேசு. ஓவராகத் தின்று என் வயிற்றில் தொப்பை போட விடாதே! உனக்கு வேண்டியது கொஞ்சம் தான் தருவேன். நீ அமிலத்தைக் கிளப்பி நான் அதிகம் தின்று குண்டாகணுமா உன்னால்?,’ என்று  வெறியுடன் கேள். அந்த மன உணர்ச்சியை நீ சரியாகப் புரிந்துகொண்டு அது வெறும்  ‘போலிப்பசி’ என்று உணர்ந்தாயானால் , அந்தந்த வேளையில் மட்டும் மிக அளவாக  உன்  வயிற்றுக்குப்  போட்டாயானால்,உடம்பு சிக் என்று இருக்கும். இல்லையெனில் இருபது வயதுக்குள்   ‘குட்டியானை’ ஆகிவிடுவாய். இது உனக்குத் தேவையா? என யோசி, பின் நன்கு செயல்படு” என்றேன்.

    .. அவள் புரிந்துகொண்டாள். அந்த உணர்வு நசையினை அடக்கி இன்னும் தீவிரமாகப் பயிற்சிகள் செய்து, சிப்ஸ், சாக்லெட், முறுக்கு போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே நீக்கிவிட்டாள். காலை, மதியம், இரவு என்று உணவு வேளைகளையும், உணவின் தரத்தையும் ஒரு  கட்டுக்குள் கொண்டுவந்தாள்.          ……….அந்தக் கன்னிப்பெண்ணின் முகம்இதனால்அதீதப்பொலிவுற்றது. உடம்பும் சிக் என மாறியது. நான் மேலே சொன்ன இந்த அதீத (வேண்டாத)உணர்வுகளைத்தான்   ‘ தீவிர இச்சை’ என்கின்றோம்.

     மனம் ஒன்று சொன்னால் யோசியாமல், சட்டெனச் செயல்படாதிருக்கும் நிலையே யோக ஆன்ம நிலை ஆகும்.. நிதானம் அப்போதுதான் பிடிபடும்.

    இதேபோல்தான் யோகாவைத் தீவிரமாகப் பயின்றால் மெதுவாக உங்கள் உள்ளே ஒரு சாத்தான் தோன்றி ‘ செக்ஸ்’ தாகத்தைத் தூண்டும். இது ஒரு கழிவு மாதிரிதானே என்றெல்லாம் அந்த சாத்தான் சமாதானம் சொல்லி உங்களை ‘டெம்ப்ட்’ செய்து படுகுழியில் விழத்தூண்டும். அதற்கு இடம் கொடுத்தால் அவ்வளவுதான். நீங்கள் அம்போ என்று ஆகிவிடுவீர்கள். உடல் சக்தி இழந்து, ஞாபகசக்தி,ஆன்ம சக்தியும் இழந்து, ஒரு ஒல்லிப்பிச்சானாக, எதுவும் பேச சக்தியற்றவனாக ஆகிவிடுவீர்கள். ஜாக்கிரதை! செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்தி,  அதுதரும் நிறைய ஆன்ம சக்தியில்அதனை மெதுவாக கலைகள், கவி, கதை இயற்றல் போன்ற நல்ல வழிகளில் மனத்தைத்  திருப்பிவிட்டீர்களாயின்  உங்கள் வாழ்க்கையே ப்ரம்மானந்தமாகிவிடும்.

     இதனை அவசியம் யோகா பயில்பவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்து ஜாக்கிரதையாகி  அதுதரும் பேரின்ப சக்திமூலம் நல்ல வழிகள் கண்டு வாழ்க்கையை ரம்மியமானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். என் யோக ஆசான் ஒரு சமயம் சொன்னார்.. ‘எப்படி பளுதூக்கும் குண்டு உன் கைகால் சதைகளை வலிமைப்படுத்துகிறதோ, அப்படியே  ‘டெம்ப்டேஷன்’ என்கிற தீவிர இச்சையைக் கட்டுப்படுத்தும்  உன் உள்மன  ‘ஆற்றல்’ உன்னைத் தூக்கி  மேலே நிறுத்தி  ஆத்மாவிற்கு அதிகமான தெய்வீக சக்தியைக் கொடுக்கிறது. இதற்கு  நான் சந்தித்த ஒரு நல்ல  மனிதனின்கதையை உதாரணமாகச் சொல்கிறேன். அப்போதுதான் உங்களுக்குப்புரியும்!

        ……எங்கள் ஊருக்கு அருகே ரங்கசமுத்திரம் எனும் சிற்றூர் இருக்கிறது. சிறுவயதில் நச்சுத்தீனி தின்று உடம்பு குண்டான ,  ‘சக்திகாந்தன்’ எனும் ஒரு வாலிபர் ஒரு யோகியிடம் தியானம், ஆசனங்கள் முதலியன கற்றபின் குருவின் மந்திர உபதேசத்தால் கவரப்பட்டு அவர் சொன்னபடியே இந்த தீவிர இச்சைகளை எல்லாம் அடக்குவதில் வெற்றி கண்டு, சகல யோக வித்தைகளும் மனோபலத்தால், தினசரிப் பயிற்சியால்  கைகூடப்பெற்று பின்பு தீவிர சன்னியாசி ஆனார்.

     அவரது முகப்பொலிவையும், உடல் அழகையும் கண்டு நேசித்த எத்தனையோ பணக்காரர்கள் அவரிடம்  என் பொண்ணைக் கட்டிக்கோ, என் சொத்து பூரா உனக்குத்தரேன், என் வியாபாரத்தில் நீ கலந்துகொண்டாயானால் நிச்சயம் இந்த ஊரிலேயே நீ பெரிய பணக்காரனாவாய் என்றெல்லாம் அவரை(tempt) செய்து வசியப்படுத்த முயன்றார்கள். அந்த வாலிபரோ (சாமியாரோ?)- குரு வாக்கைப் பரிபாலனம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார். தன் முகத்தின் தேஜஸ்  தன்   குருவின் ஆன்மிக உபதேசத்தாலும் , பயிற்சியாலும்,  ரகசிய மந்திர  தீட்சையாலுமே வந்தது என்று பரிபூரணமாக உணர்ந்து அவர்கள் பேச்சுக்கெல்லாம் ஒரு பெரிய ‘நோ’ போட்டு ஒதுங்கிவிட்டார். அதனால் அவரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து அந்த குரு தம் பெரிய ஆஸ்ரமத்தையே அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.அவரது சமாதி நிலைக்குப்பிறகு அந்த சக்திதாசர் ஆஸ்ரம வேலைகளை மிக அற்புதமாக விஸ்தரித்து, காயத்ரி யக்ஞம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணங்கள் போன்றவற்றால் தம் ஊரையும் பக்கத்து ஊர்களையும்  ஆன்மிகச் செழிப்பு  மிக்க ஸ்தலங்களாக்கிவிட்டார்.. தனது மந்திரங்களாலும்,யோக சக்தியாலும், மூலிகை மருத்துவத்தாலும்  ஊராரின்  சகல நோய்களையும், வாழ்வுப் பிரச்னைகளையும் தீர்த்துவைத்து வெற்றிகண்டார்.

     இதனால் திடீர் என்று ரங்கசமுத்திரத்துக்கு வந்த ஒரு  ‘ஹிமாலயன் யோகி’ அவரது நற்செயல்களையும், ஆன்மப்பணிகளையும் பாராட்டி, தனது ஆன்ம சக்தியையும் அவருக்கு ‘தீட்சை’ மூலம் கொடுத்து  ‘ப்ரம்மாநந்த  சக்திதாசர்’என்னும் பட்டப்பேரையும் கொடுத்துத் தன் தீர்த்த யாத்திரையைத் தொடங்கினார்.  இந்த உண்ணும்  ‘பேராசை நச்சை’ச் சாமர்த்தியமாக தன் வைராக்யத்தால் வென்றவர் எப்படி உண்மையான தீவிர பரிபூரண யோகியானார் என்பதற்காக  இந்த வரலாற்றைச் சொன்னேன்.,

    .. ஆதலால் அன்பர்களே! இந்தத் தீவிர நசையை,இச்சையை (temptation) வென்றோர் நிச்சயம் இறைவனுக்குப் பக்கத்திலேயே ஒரு  ‘சீட்’ போட்டுக்கொண்டு வசிப்போர் ஆவர்.இவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.

     மக்களுக்குப் பல விதத்திலும் இவர்கள் தொண்டு செய்வார்கள். அகம்பாவத்தின் சாயல்கூட அவரிடம் இருக்காது.. ஒருசமயம் இயேசு கிருஸ்து தன்  மாணவர்களுக்கு உபதேசித்தார். உங்கள் ஆன்ம வலிமையைக்குலைக்கும் வினோதமான இச்சை உங்கள் பக்கம் வரும்போது, சட்டென மனத்தால் அதனை அடித்துப்போட்டு, “ஏ சாத்தானே! என் ஆன்ம பலத்துக்கு முன் உன் நொண்டிக்கைகளை நீட்டாதே. உன்னைப் பிய்த்து எறிந்துவிடுவேன். என் பின்னால் பயந்து நீ ஒரு மைல் தள்ளிப்போய்விடு. முன்னால் நின்றால் உனக்கே ஆபத்து! வாலாட்டாதே! என்னிடம்’ என்று சொல்லி அதனை விரட்டுங்கள் என்றாராம். இந்தத் தீவிர இச்சை யாரை (பிரபலங்களை)எப்படியெல்லாம் வளைத்து அடிமையாக்கி அவர்கள் வாழ்க்கையையே நாசமாக்கியிருக்கிறது என்று அடுத்த அத்தியாயத்தில்,சொல்கின்றேன்.

    (தொடரும்)-

    Share
  • தேகமும் யோகமும் (10)

    கவியோகி வேதம்

    yoga21

    சரி. இந்த சபல மனத்தை எப்படி வழிக்குக்கொணர்வது? நான் பதில் சொல்கிறேன்.

    அது உங்களிடம்தான் உள்ளது. ஆம்! வேறு யாரும் உங்களைச் சபலப்படுத்த முடியாது! ஒரு பாடல் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

    “தன்னை (நற்குணத்தில்) நிலைநிறுத்துவானும்,இல்லை தன்னைக் கீழே கொண்டுபோவானும், பிறகு ஒருவேளை, மேலே மேலே தன்னை மேம்படுத்துவானும் தானே”. இது ஒரு ‘நல்ல’ பழமொழியின் அறிவுறுத்தல்.

    நீங்கள் இடம் கொடுத்தால்தானே அவர்கள் மடத்தைப்பிடுங்குவார்கள். வைராக்யம் வேண்டும் ஸ்வாமி. வைராக்யம்! அதாவது நெஞ்சுறுதி! நீங்கள் பிறரது மெஸ்மெரிஸ வார்த்தைக்குச் சற்றும் இடம் கொடுக்காதீர்கள். .. “இந்த  விஷயத்தில் நான் என் இஷ்டப்படி தான் ஒரு நல்ல முடிவை எடுப்பேன். எனக்கென்று ஒரு தனிக்கொள்கை., அதாவது நல்ல கொள்கைஉண்டு,” என்று பிடிவாதமாக எப்போதும் இருங்கள். ஒருபோதும் எந்தச் சபலத்திற்கும், நப்பாசைக்கும் ஆட்படாதிருங்கள். பிறகு யார் உங்களை, எப்படி வளைத்துவிடமுடியும்?

    இன்னொன்று! எந்த நேரம் ஆயினும் ‘அவர் சொன்னார் இவர் சொன்னார்’ ஐயோ! என்னால் அவர்சொல்படி நடக்கமுடியலையே, நேரம் ஆகிறதே, குறிப்பிட்ட நேரத்திற்குள் என்னால் வேகமாகச் செயல்பட முடியலையே என்றெல்லாம் மனத்தைப்போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

    எப்போதும் இயல்பாக இருங்கள்.அமைதியுடனும், நிதானமாக அதேநேரம் காலம் அறிந்து அதற்குள் செயல்படுவதும் நிச்சயம் உங்களால் முடியும். ஒரு உண்மையான உதாரணம் சொல்லவா!

    எனக்குத்தெரிந்த ஒரு வயதான அம்மா இருந்தாள். கமலா மாமி என்று பெயர். 82 வயது. யார் என்ன சொன்னாலும் அவள் ‘அப்ஸெட்’… அதாவது கலங்கிவிடமாட்டாள். பதட்டமே இல்லாமல் எப்போதும் செயல்படுவாள். சிக்கல் ஒன்று திடீர்என வந்தாலும் இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதிலேயே குறியாயிருப்பாள். எதனால் இச்சிக்கல், தடை வந்தது என குழம்பமாட்டாள். மனத்தைப்போட்டுக் கசக்கமாட்டாள். அவளிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றேன். அவளிடம் நானும் என் தம்பியும் “எப்படி மாமி! எப்பவும் உங்களால் நிதானமாக, அதேசமயம் சொன்ன நேரத்திற்குள் எல்லாம் முடிக்கமுடிகிறது?” என்று கேட்டோம். அவள் டக்கென்று உடனே ஒரு பதில் சொன்னாளே பார்ப்போம்!

    ‘அதாவது கண்ணா! நான் ராத்திரி ராத்திரி ஒரு குழந்தையாய் மாறிவிடுவேன். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்’.

    எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. “புரியலையே மாமி”என்றோம். அவள் நிதானமாகச் சொன்னாள்.

    பகல் பூராவும் என் கணவர்க்காகவும், மற்ற மகன்கள், மகள்கள், பேரப்பசங்கள் இவர்களுக்காகவும் உழைத்து என்னால் முடிந்ததை ஈஸ்வர அர்ப்பணமாக, அதாவது என் ஸ்வாமி கண்ணனுக்காகத்தான் அவ்வளவும் செய்கின்றேன் என்று மனத்தில் சங்கல்பம் பண்ணிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செய்வேன். அதனால் எனக்குக் களைப்பே தெரிவதில்லை.

    பிறகு ராத்திரி நேரம் ஒரு மணிநேரம் கண்ணன் படம் முன்பு உட்கார்ந்து, அமைதியாகத் தியானம் செய்வேன். அப்போது கண்ணா! நான் பகலில் எனக்கு வந்த கவலைகள், திடீர்ச்சிக்கல்கள், குழப்பங்கள் யாவையும் இப்போது உன் பாதங்களில் வைத்துவிட்டேன். இனி உன்பாடு. அதன்பாடு! எதுவும் என்னோடது இல்லை. உன் பிரச்னைகளாகத்தான் அவைகளைக் கருதுகிறேன். ஆகவே நீதான் நாளை அவற்றுக்கு ஒரு நல்ல முடிவு கண்டுதரணும். சரியா கண்ணா? என்பேன். அவனும் சரி என்று தலையாட்டுவான். (அது நிச்சயம் என் மன(உள்)க் கண்ணுக்குத்தான் தெரியும்!).

    ஏதாவது சொல்லி பிறரை நான் புண்படுத்தியிருந்தால் என் கண்ணனிடமே இரவு மன்னிப்புக் கேட்டுவிடுவேன். புண்பட்டவர் சார்பில் தீவிரப் பிரார்த்தனையும் செய்வேன். என் பாரம் குறையும். என்னை அறியாமல் உடனே என் கண்ணனிடமிருந்து சில்லென ஒரு தென்றல் வந்து மனத்துள் பரவும். அவன் என்னைச் சட்டெனத் தழுவுவதுபோல் ஒரு காட்சி விரியும். என் கண்ணில் நீர் துளிர்க்கும்! பின் எப்படி எனக்கு டென்ஷனோ, பரபரப்போ வரும்? சொல்லுங்கள் என் கண்மணிகளா! என்பாள்.

    கேட்கிற எங்களுக்கு மயிர்க்கூச்சல் எடுக்கும். தினசரி நாங்கள் அவளைச் சீண்டினாலும் பதறாமல் இப்படியே பரவசமாய் ஒரு பதில் சொல்வாள். இந்த மாமி மாதிரி நாம் அனைவரும் இருக்க முயலவேண்டும்; பிரார்த்தனை செய்யவேண்டும். அந்த அம்மா சொன்னபிறகு அலுவலகத்தில் நான் யார் எனக்கு என்ன நெருக்கடி கொடுத்தாலும், இவர்களுக்காக மட்டுமின்றி யான் என் குருநாதர்(பாபாஜி)க்காகவே எல்லாம் செய்கின்றேன் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டேன். அதன்பிறகு என் உள்ளத்தில் மகிழ்ச்சியே நிலவியது.

    எந்தச் சிக்கலுக்கும் உடனுக்குடன் யார் மூலமாவது விடையும் கிடைத்தது. இதுதான் உண்மை. இப்படியே நடந்துகொண்டு யான் எந்த டென்ஷனையும் தவிர்த்துவிட்டேன். பின் எதற்காக நாம் இங்கே வாழ்கிறோம்? வீணாய் டென்ஷனில் ஆட்பட்டு, இருக்கிற கொஞ்சநஞ்சம் சக்தியையும் இழப்பதற்கா? நீங்களே சொல்லுங்கள்! இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் இளைஞர்க்குக்கூட டென்ஷன் என்கிற மனோவியாதி(!) வந்துவிடுகிறது.

    இதைக் களைய வழியை அன்றே அர்ஜுனன் மூலம் கண்ணன் நமக்குச் சொன்னான். “அர்ஜுனா! பிறரைக் கொல்லப் போவதும், தான் ஜெயிக்கப்போவதும் என்ற எண்ணம் எல்லாம் நானே விளைவிக்கின்றேன். நீ இதை ஒரு பெரியச் சுமையாகக் கருதிக்கவலைப்படாதே! எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிட்டு நீ அமைதியாகச் செயல்படு. நான் உன் கூடவே எப்போதும் இருக்கும்போது நீ வீணாக ஏன் மனத்தைக்குழப்பிக்கொள்கிறாய்.” இதன் பிறகே அர்ஜுனன் மனத்தெளிவடைந்து தன் கடமையைச் சரியாகச் செய்யமுயன்றான். என்பது வரலாறு.

    ஆகவே நாமும் எது செய்தாலும் நம் ஆண்டவனே என்னைக் கருவியாகக் கொண்டு செயல்படவைக்கிறான் என்ற திண்ணமான மனம் கொண்டால் ஒருவித ஹார்ட் அட்டாக்கும் நமக்கு வரவே வராது. சரிதானா அன்பர்களே?

    தொடரும்

    Share
  • தேகமும் யோகமும் – பகுதி-9

    மனம் பற்றி..! 

    yoga2

    கவியோகி வேதம்

    தியானத்தில் நீங்கள் அமரப்போகும் முன்பு உங்கள்  ‘மனது’ பற்றிச் சற்றே சிந்திக்கலாமா? மனம்பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்லியிருப்பினும் அதை ஒரு ஒழுங்குக்குக் கொணர அதுபற்றி விரிவாக அலசுவது அவசியம். மனிதனுக்குக் கிடைத்த ஒரு பெரிய வரப்ரஸாதம் இந்த மனம். எண்ணங்களின் தொகுப்பே மனம். அளப்பரிய சூக்கும யந்திரம் இது. சுழன்று கொண்டே இருக்கும்.

    நீங்கள் இதனைப்பற்றிச் சரியாக தெய்வீகச் சிந்தனையுடன் அணுகாவிட்டால் உங்களை அது எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும். நல்லதும் அதுவே செய்யவைக்கும். சமுதாயப் பணி செய்யத் தூண்டி உங்களுக்கு ‘ஓஹோ’என்று புகழை வாங்கிக் கொடுக்கும். அல்லதும் (தீமை) செய்ய வைத்து உங்கள் வாழ்க்கையையே கெட வைக்கும். சமீபத்தில் நீங்கள் பேப்பரில் படித்திருப்பீர்கள். ஒரு சாதாரண ‘அறிமுகக் கார்டை’ச் சரியாக எடுத்துக் காட்டாததற்காக நெய்வேலியில் ஒரு ராணுவத்தான் ஒரு நபரை நெற்றியில் (சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு) சுட்டுவிட்டான். அவன் வாழ்க்கையே போச்சு. தேவையா இப்படிப்பட்ட அவசர புத்தி? பதட்ட நிலை? மனத்தை ஓர்மைப்படுத்தி சரியான முடிவை எடுக்காத எண்ணம்?….
    ஆகவே தியானத்தில் மிக ஆழமாக நீங்கள் அமரும் முன் அதற்குச் சில கடுமையான உத்தரவுகளைப் போட வேணும். ஒழுங்காக நேர்வழியில் செல் என்று அதனை(மனத்தை) ஒரு தெய்வீக்க் கட்டுக்குள் கொண்டு வர வேணும். ஏன் எனில் உங்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் இடம்(ஆக்ஞா சக்கரம்) இருக்கிறதே அதுதான் மனம் என்னும் சூக்கும யந்திரம் சற்றுநேரமாவது நிற்கும் இடம்.

    ….அந்த இடத்தில் நீங்கள் மனத்தை ஓர்மைப்படுத்தி ஒரு இருபது நிமிடமாவது அதனை நிற்க வைத்துப் பயிற்சி கொடுத்தீர்கள் என்றால், அதில் வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் எனில், உங்களைப்போல் ஒரு ‘ராஜா’ (Controlling king) இருக்கவே முடியாது. மெல்ல மெல்லப் பயிற்சியின் மூலம் ஒரே வருடத்தில் அதே ‘ஆக்ஞா’வில் மனத்தை நிறுத்தி, அங்கே ‘ஒளிப்படலம்’ கொண்டுவரச்செய்து அதனால் சிறிதாவது ‘சக்திகள்’ பெற்று மற்றவர் நோயைக் குணப்படுத்த முடியும். உங்கள் ஆலோசனைகளே பலத்த வெற்றிபெறும். பிறரது காய்ச்சலுக்கோ, இல்லை குணப்படுத்தக்கூடிய லேசான மற்ற நோய்களுக்கோ நீங்கள் வெறும் ‘விபூதி’ கொடுத்தால்கூட அதில் தெய்வீக சக்தி ஏறி சட்டென்று குணம் கிட்டும். இது எல்லா தியான மனிதர்களின் அனுபவம். ஆயின் அப்படி ஆழ்ந்த தியான சக்தியில் ஈடுபட்டவர்களுக்கே இது சாத்தியம். என் அனுபவமும் கூட. நாம் எத்தனை மகான்களைப் பார்த்திருக்கின்றோம்? அவர்களுக்கு இந்த விபூதியால் குணப்படுத்தும் தெய்வீக சக்தி எப்படி வந்தது? ஆழ்ந்த பல வருடத் தியானப்பயிற்சியால் அன்றோ? ஆகவே, ஓடிக்கொண்டே இருக்கும் மனத்தை ஓர்மைப்படுத்தி, ஒரு புள்ளியில் நிலைக்கவைக்கும் சாதனை உங்களை எங்கோ கொண்டு சேர்க்கும். இது பெரிய வித்தையே அன்று. தீவிர தினசரிப் பயிற்சியால் இது எல்லோர்க்கும் சாத்தியமே!

    ‘எண்ணங்கள் மனத்தின் அசைவுகள்’ (vibrations) என்பான் ஒரு கவி. நேரிய தெய்வீக எண்ணங்கள் நித்தம் என்னைப் புனிதனாக்கின’ என்றான் ஒரு ஃப்ரென்ச் ஞானி. ‘நெற்றிப்பொட்டில் ஒளியைக் கொண்டேன்; நிமலனின் அருள் சக்தி தானே வந்தது’ என்பார் திருமூலர் ஞானி ஒரு மந்திரத்தில். அவரே பிறிதொரு மந்திரப் பாட்டில் சொல்வார், “பத்து சதம் கூட நாம் ‘எண்ண யானை’யைத் தினசரி சரியாகப் பயன்படுத்த வில்லையடா! பராபரமே! பின்பு நாம் ‘சித்திகளை’ப் பெறமட்டும் துடிப்பது எங்ஙனம்?” என்பார்.

    .. இதே கருத்தைத் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர். நாம் இவர்களை ஆழ்ந்து படித்தாலே நம் தினசரித் தியானத்தைச் சீராக, அற்புதமாக, ஆநந்தமாகப் பின்பற்றலாம். ஆம்! நம் எண்ணங்களின் தரம் மிக உயர்வாக இருந்தால் மட்டுமே எல்லோரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவும், சமுதாயத்திற்கு மிகப் பயன் உள்ளதாகவும் இருக்கும். இதைத்தானே திருமூலர் ‘மனம்! அது, செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்!’ என அடித்துச் சொல்கின்றார்.

    (தொடரும்)-

    *************************************************************************************

    Share
  • தேகமும் யோகமும்- பகுதி-8…

     உங்களுக்கு உறுதுணையாக ஒரு யோக நூல்

    கவியோகி வேதம்

    yoga

                ,’யோகம்’-என்பது ஒரு பரவச நிலை.!யோகம் என்பது ஒரு வைகறைக்குளிர்ச்சி!சூரிய ஒளியில் குளிக்கும் காலைப் பறவைகளின் சிறகு விரிந்தநிலை!ஆம்! பூமியை உதைத்து வேகம் எடுக்கும் அதிர்ஷ்ட விமான நிலையே யோகம்.பிரபஞ்சத்தை விழுங்கிக் கொண்டே இங்கேயே சொர்க்கம்காணும் ஆநந்த ஆவிநிலையும் யோகம்தான். புரிகிறதா? யோகம் சித்தியானபிறகு உங்கள் உள்ளே ஸ்புரிக்கும் .கள்ளினும் செம்மாந்த நிலை அது!.கவிதையுள் முக்குளிக்கும் விதிர்விதிர்க்கும் களிப்பு நிலை அது!

                    பேரானந்தச் சொட்டு உங்கள் மூளைக்குள் விழுந்தால் நீங்களும் யோகத்தில் நீந்தலாம்! புதிய அமுதம் மாந்தலாம்! பிறர்க்கும் உதவலாம்.எந்த நோயையும் நீங்களே தீர்க்கலாம்.சித்திகளை ஏந்தலாம்!ஏன்?..தெய்வீகத் தன்மையைஉங்கள் கண்ணுக்குள், நரம்புக்குள்,ஏன்? உடலுக்குள்ளேயே அருந்தலாம்!புரிகிறதா? இதுதான் யோகம். இவ்வளவுதான் யோகம்!

                   ..கடினமே இல்லை.முயன்று முயன்று அந்தப் பரவசத்தில் முங்கத் தயாராகுங்கள்!  என்ன!உங்களுக்கு அந்த யோக வழியைக்காட்ட  ஒருநல்ல ஆசான் தான் தேவை. முயலுங்கள். தினசரி உங்களுக்குத் தெரிந்த மூச்சுப்பயிற்சி, அல்லது காயத்ரியுடன் சேர்ந்து கனிந்த பிராணாயாமம் ஒரு முப்பது எண்ணம் செய்து பாருங்களேன்! அட்டகாசமான ஒருமைப்பாடுதான் இதற்கு முக்கியத் தேவை.. கொஞ்சம் யோகாசனமும் செய்யுங்கள். அது உங்கள் நரம்புகளை ஒரு யோக நிலைக்குத் தயார்ப்படுத்தும். உடம்பும் உஷ்னம் ஆகாது. அதற்காகக் கன்னாபின்னா என்று செய்யாதீர்கள். காஞ்சி மகா முனிவரே , ‘அட! யோகமா? செய்வீர்! ஆயின் ஒரு குருவைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அவர் மூலமே தினசரி அவர் சொல்படி நிதானமாகச் செய்வீர் , உடல் உஷ்ணம் ஆகாதபடி..’என உபதேசித்திருக்கின்றார்.

      உதாரணத்திற்கு, இந்த யோகம்திருவல்லிக்கேணியில்  1960களில்  வசித்த ‘சித்தேஸ்வர்’ என்னும் ,யோகிக்கு எளிதில் கைவந்தது. அவர் குரு மூலமாக.

     தீவிரமாக அவர் முதலில் நம் பிள்ளையாரைத்தான் தீவிரமாக உபாசனை செய்தார். அந்த தும்பிக்கைக் கடவுள் ஆச்சர்யமாக அவரது யோக உடலுக்குள் புகுந்துகொண்டு நான் சொன்னபடி எழுது ‘உலக மக்களுக்காக  யோகப்பயிற்சிகளின் மொத்த வடிவையும், செய்முறைகளையும் உனக்குத் தொகுத்துத் தருகின்றேன் ‘ என்று சொல்லி அவரை நடுராத்திரியில் எழுப்பி எழுத  வைத்தார் .. முதலில் அந்த யோகப் பெருங்கனலின் துளி வீச்சை உள் வாங்கிக் கொண்டார்இந்த ஞானி.,..இந்தத் திருவல்லிக்கேணி யோகி!.

    தான் அடைந்த பெரும் சொத்தைத்,தான் எவ்வாறு தன் புத்தியில் தேக்கி,உடம்பில் உருவேற்றிப் ‘பூரணநிலை’தனை அடைந்தாரோ,அந்த ஞானக்கல்வியைப்பிறர்க்கும் உபதேசிக்கத் துணிந்தார் தன் அற்புதச்சீடர் “விஜயகுமார்’ மூலமாக!

                  ..மனிதனின் நிலை எவ்வாறு யோகம் மூலம்(தொடர்ந்து பயிற்சி பெற்றால்)படிப்படியாக தெய்வ நிலை அடைகிறது என்பதைத் தன் அனுபவம் வழியே சொற்களாக,புரிகிற சிறு சிறு பூங்காப் பாதையாக விவரிக்கிறார் சுவாமி, யோகிசித்தேஸ்வரர் ‘ யோகமும் மனிதனின் நிலையும்’ என்ற  ஒரு புத்தகம் மூலம்..இது திருவல்லிக்கேணியில் உள்ள எல்லா புத்தகக் கடையிலும் கிடைக்கும்.

                  ..தன் குரு சொன்னதை அவ்வப்போது உரைகளாகத் தொகுத்து,தெளிவான தலைப்புகளாகப் பிரித்து நமக்குத் தருகிறார்  அவர். நடை கொஞ்சம்  எளிமையும் கடினமும்(சம்ஸ்க்ருத) கலந்து இருந்தாலும் யான் சொன்னதுபோல் நிச்சயம் நாமும் யோகம் பயில வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, தினசரி சாதனை செய்பவர்க்கு இந்நூல்  பயன்படும். .

                  ..யோகத்தின் அடிப்படைத் தத்துவம் என்ன?தேகத்தின் உணர்வுத் தத்துவம் எப்படி மேன்மேல் யோகத்தின் பிடிக்குள் அகப்படுகிறது,பரவச நிலையில் “உள் ஆழ்ந்த மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது?எப்படி “சித்திகளை’  விளைவிக்க முனைகிறது,ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு “அருள்வாக்காக” மாறுகிறது,அதன்மூலம் கைவரப்பெற்ற உள்ளங்கையின் ஆன்மசக்தி எவ்வாறு பிறமாந்தரின் எல்லா நோய்களையும் தீர்க்கவல்லதாக மாறுகிறது என்றெல்லாம் படிப்படியாக,அழகாக,தெளிவாக  இந்த நூல் மூலம் நீங்கள் அறியலாம்..வாழ்க இந்த அற்புத யோக நூல்!.

     உங்களுக்கு ஒரு நல்ல குரு கிட்டினாலும், அவர் தனது ஆன்மிக சக்திகளை உங்கள் உள்ளே பாய்ச்சி உங்களை யோகத்துக்குத் தயார் படுத்தினாலும் படித்து அறிய, சாதனை செய்ய உறுதுணையாக ஒரு யோக நூல் தேவை என்பதற்காக இந்த ரகசியம் சொன்னேன். நிச்சயம் இதைப்  படிக்கவும். யோகத்திற்கும் தியானத்திற்கும் தயார் ஆகுங்கள்.

     தொடரும்

    Share
  • தேகமும் யோகமும் – பகுதி 7

    கவியோகி வேதம்

    yoga

    என்னுடைய தேகமும் யோகமும் தொடரைப் படித்து வருகிற சில அன்பர்கள் ‘சார்! பிராணாயாமத்தைப்பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்’என்று போன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லலாம்தான். ஆனால் அது ஒரு தகுதியான குரு மூலமே கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகத்தைப்பார்த்துக் கற்கும் வழி அன்று அது.  மிக ஆழமான மூச்சு இழுத்தல் பற்றியும், மெதுவாகப் பின்பு விடுவதுபற்றியும் எவ்வளவுதான் இங்கே விவரித்தாலும் ஆசிரியர் மூலம் நீங்கள் கற்றால்தான் பயனளிக்கும். “இனிஷியேஷன்”, அல்லது ஆசிரியர் உடல்தொட்டுப் பயிற்றுவிக்கும் (நேரடிக் கண்காணிக்கும்) வழிமுறைப்பயிற்சி அது. ஏன் எனில் ஒரு ஆசான் பிராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது அவரது ‘வைப்ரேஷன்’ (தொடு அதிர்வுகள்) மூலமே சீடனுக்கு அந்தத் தெய்வீகக்கலை வெற்றி கொடுக்கிறது. இது அனுபவ பூர்வ உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. மகான் விவேகாநந்தரின் சரித்திரத்தை ஆழமாகப்படிக்கும் எவரும் இதை ஒத்துக்கொள்வர். பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் அவரைத்தொட்டார். அவ்வளவுதான் தியானத்தில் ஆழ்ந்தார் விவேகாநந்தர்!

    1980இல் நான் இதுபற்றி விளக்கமாக என் ‘கசினிடம் ’ (பெரியப்பா பையன்) இடம் எடுத்துச் சொல்லியும், ஒரு தகுந்த ஆசான் மூலமே நீ மூச்சிழுத்தல் பற்றிக் கற்கவேண்டும். புத்தகத்தில் படித்துச் செய்யாதே என்று பல தடவை அவனிடம் சொல்லியும் கேட்காமல் அவன்தன் வீட்டில் ஏதோ ஒரு பிராணாயாமப் புத்தகத்தை முன்னால் வைத்துக்கொண்டு அதில் சொன்னவாறு செய்ய ஆரம்பித்தான். சில இடங்கள் அவனுக்குப் புரியவில்லை. அப்படியும் மூச்சை ஏதோ ஒரு ரேஸ்குதிரை போல் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு (சீக்கிரமே இதில்) வெற்றி அடையவேண்டும் என்று தீவிர வெறியில் (என்மேல் பொறாமை?) மூச்சைப்பலமாக இழுத்து, ரொம்ப நேரம் கழுத்து நரம்புகள் புடைக்க நெற்றியில் மூச்சைத் தேக்கினான். வேகம் அதிகம் ஆனதால் மூன்றே நாளில் அவன் கழுத்துநரம்பு சுளுக்கிக்கொண்டது. மருந்து சாப்பிட்டுக்கொண்டே விடாமல் பலமாக இன்னும் மூன்று நாள் செய்தான். வெளியே விடும்போதும் உடல் பலத்தை அழுத்தி மூச்சைவிட்டான். புத்தகத்தையும் சரியாகப்படிக்கவில்லை.இது தப்பன்றோ?

    பத்துநாள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றால் என்  பெரியப்பா, “பாருடா இவனை. இரண்டுநாளாக ஏதோ மனம் பேதலித்தவன் மாதிரி ஆகாயத்தையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். யோகாவெல்லாம் பண்ற நீ  இவனிடம் சொல்லி என்னவென்று கேட்டுச் சரி பண்ணக்கூடாதா? என்னிடம் பேசவே மாட்டேன் என்கிறானே” என்றுசொல்லிக் கண்கலங்கினார். நிதானமாகக் கேட்டதில், அவன் இது பற்றி என்னிடம் மெதுவாக விவரித்ததில் எல்லா விஷயமும் எனக்குப் புரிந்தது! பிறகென்ன? ஒரு நரம்பு மற்றும் மன ஆலோசனை நிபுணரிடம் அவனை அழைத்துப்போய் எல்லாவற்றையும் சரி செய்தோம். அந்த அனுபவத்திற்குப் பிறகு அவனிடம் பிராணாயாமம் என்று ஆரம்பித்தாலே, அதோ அந்தத் ‘தெனாலிராமனின் சூடான பால்கண்டால் நடுங்கும் பூனைமாதிரி’ பயப்பட்டான். தேவையா இது?

    அதனால்தான் சொல்கிறேன். மூச்சுப்பிராணாயாமம், தீவிர அழுத்தமான யோகா போன்றவற்றை ஒரு யோகா நிபுணர் மூலம் கற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது. எனினும் மெது மெதுவாக இத்தொடரில் ஆபத்து இல்லாத மிகலேசான ஆசனங்கள் பற்றியும் அதிக மூச்சிழுப்பு தேவையில்லாத ஒருவகை த்யானம் பற்றியும் விளக்க இருக்கிறேன். ஆனால், தியானம் பயில்வதற்குமுன் மனத்தைப் பக்குவப்படுத்த, எண்ணங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை முதலில் இங்கே விவரிக்கின்றேன். ஏன் எனில் அவை கட்டற்ற எண்ணங்களை அடக்கி தியானத்தில் நமக்கு வெற்றியைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    முதலாவதாக நம் ‘உள்மனதும் பழக்கவழக்கமும்’ எனும் மிகத் தேவையான விஷயம் பற்றி அலசுவோம். இது ஒரு அடிப்படைப் பயிற்சி ஆகும். கவனமாகப்படிக்கவும்.

    ஒருநல்ல தெய்வீகமான பழக்கத்தை உள்மனம் வரை வளர்ப்பது என்பது நல்ல நிலத்தை உழுவது போன்றது. இதற்குச் சிலகாலம் பிடிக்கும். பொறுமை தேவை. ஏன் எனில் அது மனசின் ‘உள்’ளிலிருந்து வரவேண்டும். இந்த நல்ல பழக்கம் பிற துணைப்பழக்கங்களை உருவாக்கும். அவை மனிதனை சரியான வாழ்க்கைப்பாதையில் செலுத்தும். இதற்கு நாமே முயன்று ‘செயல்தூண்டுதல்’ கொடுக்கவேண்டும். பின்பு அதுவே இயல்பாகி விடும். உதாரணத்திற்கு ஒருவன் விடாமல் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது கெடுதல் என்று தெரிந்தும் அவனால் சட்டென விட முடியாது. ஆனால் அப்பழக்கம், அவனுள் ஆஸ்த்மா என்னும் நோயை உண்டுபண்ணுகிறது. உடனே டாக்டரிடம் ஓடுகிறான். அவர் அவனிடம் “டேய்! நீ எப்படியாவது பாடுபட்டு இந்த சிகரெட் பழக்கத்தை ஒழி. ஆனால்தான் நீ பிழைப்பாய். இல்லாவிடில் நீ அடுத்தவருடமே பயங்கரஇழுப்புநோயால் காலி!” எனச்சொன்னார் என்றால் முயன்று அவன் மெல்லமெல்ல அப்பழக்கத்தை நிச்சயம் விட்டுவிடுவான். ஏன் எனில் அவனது உள்மனமே பயப்படுவதனால். நிச்சயம் இது சாத்தியம். இல்லையா?

    துன்பமான காலங்களில் தைரியத்தைக்காட்டும் திறனும், இச்சைப்படும்போதே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் வலிவும், மனம் காயப்படும்போதும் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கும் திறனும், தடைகள் ஏற்படும்போது நல்லநம்பிக்கையுடன் (positive approach உடன்) நல்வாய்ப்பையே எதிர்பார்க்கும் ஆழமான எண்ணமும், ’தற்செயல்’ நிகழ்வுகள் இல்லை. ஏன் எனில் இவை நாம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் துணிச்சலுடன் கொடுக்கும் நிலையான, மாறாத ‘பயிற்சி’யின் பயனே ஆகும்.சரியா?அற்பமான சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் ஒரு கோழையைப்போன்று எதிர்மறையாக, அஞ்சியோ இல்லை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் ஒதுங்கியோ போனால், தியானம் சித்திக்காது. மாறாக அந்தத் தடைகளையே, துன்ப நினைவுகளையே எண்ணுவதால் மனம் தியானத்தில் நிலைக்காது. ஆனால் விடாமல் இயல்புப் பழக்கத்தை மீறி ஒருவன் மேலே சொன்னபடி பயிற்சி செய்தால் எந்த நிலைமையிலும் கலங்காதிருப்பான் அதே மனிதன்! பெரிய விஷயங்களையும் அவன்தான் துணிவோடு செய்து வெற்றியையே பரிசாகப்பெறுவான். இது நம் அனுபவ உண்மை.

    ஆம்! பழக்கமாகும் வரை நாம் எந்த நல்லதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறோமோ அதை நீடித்து எப்போதுமே செய்ய முனையவேண்டும். அதில் தடைவந்தாலும் எதிர்த்து நல்லதையே செய்யவேணும்.பின் வாங்கலாகாது. ‘தீமை இது’ என்று ஒன்று தெரிந்துவிட்டால் அதிலிருந்து கட்டாயம் விலகி நிற்கக் கற்றுக்கொள்ளவேண்டும். பின்பு அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும். தியானப் பயிற்சியாளனுக்கு அது வரும்முன்பே தீமை என்று தெரிந்துவிடும். விலகிவிடுவான் உடனே. தெய்வீகப் பாதையில் போகும் பலனை உடனே அவன் அறுவடை செய்வான். மகிழ்வான். இனி நமது சிந்திக்கும் முறை பற்றியும், தற்காலக் காலகட்டத்தில் இந்த விஞ்ஞான வசதிகள் எப்படி நம்மை நேர்- பாதையிலிருந்து கவிழ்த்துவிடத் துடிக்கின்றன என்பது பற்றியும் அடுத்த இதழில் தீவிரமாக அலசுவோம்.(தொடரும்)-

     தொடரும்

    பி.கு.

    எமது ஆஸ்ரமத்தின்..அற்புத- ‘இலக்கியவேல்’
    (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
    வாங்கிப்பின்பு உங்கள் நல்ல, மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும்
    அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
    சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
    pl. remit to ‘Ilakkiyavel’ C/a no-6177358926. at INDIAN BAnk- Neelankarai br,
    bank’s iFSC code–IDIB 000N089.. or send yur cheq favg Ilakkiyavel..
    to my address below only.200 ம் அனுப்பலாமே.
    கவியோகி வேதம்(kaviyogi vedham)-
    —தற்போது சென்னைக்கு வந்துவிட்டேன்(நீலாங்கரை)
    PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
    kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
    Founder, Sree Laharibabaji yogasram,
    2/682, 10th cross St,…Renga reddy garden,
    Neelankarai, Chennai-600115–
    cel no=095000-88528

    Share
  • தேகமும் யோகமும்—பகுதி 6

    கவியோகி வேதம்

    yoga

    நமது முன்னோர்கள் எப்போதும் ‘நமக்கு மேல் ஒன்று’ எக்கணமும் நம்மைக் கண்காணிப்பதாக நம்பினார்கள். அந்த ‘ஒன்றோ’டு ஒன்றி’– நாம் இணைந்து கொண்டால் புதிய அந்த கன்ணுக்குப் ‘புலப்படாத உலகத்தட்டு’ (Plane of consciousness) நமக்கு நிச்சயம் நன்மை செய்யும் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தனர். இதற்கு யோகம் அவர்களுக்கு உதவி செய்தது., தீவிர தியானத்தில் பல யோகிகள் கடவுளுடன் பேசியிருக்கிறார்கள். பலருக்கும்  இறைவனிடம் பதில் கேட்டு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்கள். சிக்கல்களையும் நோயையும் தீர்த்துவைத்திருக்கிறார்கள். இதற்குப் பரமஹம்ச யோகாநந்தர் ஓர் உதாரணம்.

    நம்மைச்சுற்றிய வாயுத்திரள், பிரபஞ்ச அணுக்கள், இவற்றில் இன்னதென்று இனம் காண முடியாத ஒரு எனர்ஜி (ஊக்க அணு), ஒரு காந்தம், ஒரு ஈர்ப்பு, ஒரு திரண்ட சக்தி எந்நேரமும் பொங்கிப்பொங்கி வருவதைக் கண்டார்கள், ; நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

    மேலும் அவற்றைக் கும்பிட்டு, பணிந்து, புகழ்மாலை (ஸ்தோத்ரம்) சூடுவதன் மூலம் தமக்குள் அது மூளை, மற்றும் உடலுள்ளே புகுந்து யாண்டும் புதிய

    புதிய சக்திகளைத் தருவதாக உணர்ந்தார்கள். இந்தப் புதிய ‘சக்திகள்-உணர்வை’ Feel energies என்று ஜெர்மானியரும், சில ஆங்கிலேயர் அதை metaphysics, என்றும்,  விஞ்ஞான ரீதியாக நூலில்  எழுதிவைத்துள்ளார்கள்.

    ..   ஆம்!  கடவுளுடன் அப்படிப்பேசிய அவர்களே மகான்கள். இந்த உண்மையை நாத்தழும்ப நாத்திகம் பேசும்

    அன்பர்கள் இன்னும் மறுக்கின்றார்கள். இதனால் சூஷ்மச் சக்திகளைத்தேடி அவற்றை ஸ்வீகரித்துப் பயன் அடையும் மானுடர்க்கு யாதொன்றும் நஷ்டமில்லை.

    அது அவரவர் வந்த வழி. கர்ம வினை! அழகியகுளிர்ச் சோலையில் பற்பல குயில்கள் இனிமைக்குரலில் பாடுகின்றன என்று அங்கு செல்லும்  ‘இயற்கை ரசிகன்’ கண்டும் கேட்டும் உடல் சிலிர்க்கப்புளகாங்கிதம்

    அடைகின்றான். கவிஞனோ கவியில் அதை அனுபவித்து ப் பாடியிருக்கிறான்.

      .. இல்லை, இல்லை, அப்படி ஒன்றும் இனிமைக்குரலில்

    குயில்கள் பாடா’ என்று நாத்திகன் சொல்வதால் அப்படி அனுபவிக்கும் ரசிகனுக்கு நஷ்டமுண்டோ? அவன் அல்லவோ அந்த இனிமைக்குரல் மூலம் தன் உடம்பில், நரம்பில் புதிய ஜீவனை ஜிவ்வென்று ஏற்றுகிறான்!

    இன்னும் பல கிராமங்களில் போய்ப்பாருங்கள்! மழையே பெய்யவில்லையா நீண்ட நாட்களாக! கவலை ஏன்? என்று உடனே ஆஸ்தீக அன்பர்கள் கூடி

    வேத வித்துக்களையும் மந்திர உச்சாடனத்தில் துறைபோகிய, பிரசித்திபெற்ற ஹோம வல்லுநர்களையும் தேடிப்பிடித்து, தாங்களே கிராம மக்களிடம் பணம் வசூலித்து வேத விற்பன்னர்களை நெய் ஆகுதி சொரிந்து, யாகம், ஹோமம்

     முதலிய செய்வித்து இரண்டு நாளைக்குள் மேகங்களைத் திரளச் செய்துவிடுகிறார்கள். இது யானே அனுபவ பூர்வமாக எங்கள் கிராமத்திலும் திருநெல்வேலியின் –அத்தாழநல்லூர்– மற்றும் பக்கத்து ஊரான ‘ரெங்க சமுத்திரத்திலும்’ நேரடியாகக்

    கண்டறிந்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

      … ஆம்! அது 1956 ஆம் வருடம். யான் அப்போது திருநெல்வேலி கல்லூரியில் பட்டப்படிப்பு முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். கோடை விடுமுறை

    விட்டார்கள். சரியான வெய்யில்! மொத்தம் இரண்டு மாதம் வரை தகித்தது.

    பயிர்களுக்குப் போதுமான நீர் இல்லை. இருக்கின்ற ஒரே ஆறு தாமிரவருணியும் வேகமாக வற்றத்தொடங்கிய காலம். பாட்டிமார் புடவையின் ‘கொசுவம்’ போல் ஒரு மெல்லிய ஓடையில்தான் ஜலம் ஓடிக்கொண்டிருந்தது அந்த நதியில்!

    சில அயல்நாடுகளில் போய் வேலை பார்த்து ஊருக்குத்திரும்பிய எங்கள் தாத்தா மந்திர சக்தி மிகுந்த பாரதியார் பாடல்கள், வேத மந்திரங்கள், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்தம் எல்லாம் பொருள்பொதிந்த வியாக்யானத்தோடு

     கற்றறிந்தவர். கிராமத்து ஜனங்களில் மிகப்பெரியவர். ஆஜானுபாகுவான உயர்ந்த தோற்றம். முகமோ ரொம்ப வசீகரம்! அவரிடம் வந்து ஊர்மக்கள் ஆலோசனை

     கேட்டார்கள். அவர்தான்  கேட்டவர்களிடம் நான் மேலே சொன்ன  “‘கவலை ஏன்?  நெய் ஆகுதி யாகம்

    செய்யுங்கள், நிச்சயம் மழை பெய்யும். ஏற்பாடு செய்யுங்கோ, நான் கலந்துகொள்கின்றேன்”’ என்று உத்தரவு போட்டு அவர்கள் கை நிறையக் காசு தந்து ‘முதல் ஆசி’யை

    வழங்கினார்.

      …யான் அப்போது கல்லூரி விடுமுறையினால் கிராமத்து வீட்டில் இருந்தேன்.

    பெரியவரே ஆசிதந்து விட்டார்; ஆரம்பிங்கடா என்று இளைஞர்களும், பள்ளி ஆசிரியர்களும், வாத்யார்களும், (விசேடங்களை நடத்தித்தருபவர்கள்), உற்சாகமாக

    களத்தில் இறங்கினர். அப்போது ஜூன் (கடும் அக்னி நட்சத்திர) மாதம்…

      …  தெரு அடைத்துப் பெரிய பந்தல் போடப்பட்டது. யாக குண்டங்கள் பன்னிரண்டு தோண்டப்பட்டு பெரிய பெரிய ஆழமான குழிகளில் அக்னி வளர்த்து மந்திர, வேத வல்லுநர்களால் இரண்டு நாட்கள் மிக மிக நம்பிக்கையுடன் மந்திர கோஷத்துடன் ஹோமம் செய்யப்பட்டது. பலவித வாசனைப் பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள், அற்புதச் சொல் பலத்தோடு வருண பகவானை அன்போடு அழைக்கும் விதமாய் யாகக் குண்டத்தில் போடப்பட்டன.

    மொத்தம் 24 பண்டிதர்கள் இடைவிடாமல் வேத கோஷம் முழங்கினால், வருணனால்

    ஆகாய மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே சும்மாச் சும்மா, சதா ரம்பை,

     ஊர்வசி நடனத்தைப்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? கீழே இறங்கி பூமிக்கு வரத்தானே வேணும்? யான் அந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் என் இள வயதில் உற்சாகமாய் (பல உதவிகள் செய்துகொடுத்து) ரசித்துக்கொண்டிருந்தேன். உண்மையாகச் சொல்கின்றேன். மூன்றாவது நாள் அதிகாலை இடி மத்தளம் போல் முழங்க, மின்னல்

    ஒவ்வொன்றும் சாட்டை சாட்டையாய் ஆகாயத்திலிருந்து மண்ணில் கோடு கிழித்து,

     கன்னிப்பெண்கள் ஒரு கயிறு விளையாட்டு விளையாடுவார்களே அதுபோலச் சுற்றிச்

    சுற்றி வர, கரும் மேகங்கள் வெடித்து முன்னும் பின்னும் சுழன்று மூன்று நாட்கள் புயல்

    மழை கொட்டியது பாருங்கள்! இன்னும் என்னால் மறக்கவே முடியாத பயங்கர நிகழ்ச்சி அது!  …    …………தாமிரபர்ணியில் சட்டென வெள்ளம் கரைபுரண்டோடியது, கரையோரமாய் ஓடி

    ஓடி பசங்கள் நாங்கள் வேடிக்கை பார்த்தது நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.

    அப்படிப் பதிந்த அந்த சம்பவத்தின் மூலம்தான் நான் பாரதியைக் கற்றேன்.

       “தேவர்களைக் கவர்ந்து கீழே இழுக்கும்  மந்திரச் சொல் ஒன்று வேண்டும் அம்மா!”.. ஆம்!  நன்கு மழை பொழியச் செய்த சொற்களின் வலிமை எல்லாம் புரிந்தது. அம்மட்டோ! மந்திரம், யோக சாஸ்திரம், சொல் நுட்பப் பயிற்சி

    முறைகள், ப்ராணிக் ஹீலிங் மூலம் எப்படிப் பிறர் உடல் நோய் தீர்ப்பது, மிக ஆழ்ந்தபிராணாயாமப் பயிற்சிகளை எப்படிப் பெற்றால், எப்போதும் உற்சாகமாக மனமும் உடம்பும் திடகாத்திரமாக வேலை செய்யும், ஆசனங்களை எந்த அளவு கற்றால், நம்

    மூளைக்கு சக்திகளைப் பிரபஞ்ச (force) ஈர்ப்புச் சுரங்கத்திலிருந்து கொணர்ந்து வேகமாய்

     உள்ளே பாய்ச்சும் என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் ஒரு தீவிரக் காதலன்போல் பயின்றேன். என்ன, இவை என்னுள் முழுமை பெற ஒரு 12 ஆண்டுகள் ஆயின!

    இந்த ‘அமிர்தக் கிண்ணங்’களைப் பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியாயிருந்த ஆசான்கள் பல பேர். முதலில் எங்கள் ஊர் மகாதேவ சாஸ்திரிகள். அவரிடமிருந்து ஆரம்பித்து, சிங்கப்பெருமாள் கோவில் சக்தி உபாசகர் ஸ்ரீ ‘ராமய்யங்கார்’ ஸ்வாமிகளும், பின்பு

    எனக்குள் நயன தீட்சை கொடுத்து ‘மூன்றாம் கண்’ என்றால் என்ன என்று காண்பித்த ஸ்ரீ காஞ்சி மகானும் (பெரியவா), ஆசனங்கள், யோக முத்ரா, அஸ்வினி முத்ரா இவை மூலம் மூளை மற்றும், நரம்புகட்குள் அட்டகாசமாய்ச் சக்தி ஏற்றலாம்டா; உனக்குக்

    கஷ்டமே இல்லை என்று கற்றுக்கொடுத்த பெரியவர் வேதாத்ரி மகரிஷியும் என இத்தனை

    குருமார் ஆவர். யானும் தீவிரப்பயிற்சியில் இறங்கி விடாப்பிடியாகக் கற்று நாடி நரம்பில் ஒளிச்சக்தி ஏற்றிக்கொண்டு, பிறர்க்கும் இவற்றைப் பயிலுவித்தேன்.

    ஆகவே, இதெல்லாம் ஒரு அனுபவ உண்மையாக, பிரத்யட்சப் பிரமாணமாக ஏன் விரிவாய்ச் சொல்கின்றேன் என்றால் நம் பெற்றோர்களும் தத்தம்

    குழந்தைகட்கு பள்ளிக்கூடப் பாடங்களோடு இந்த சூட்சும சக்தி ‘யோக’ வழிகளையும் ஒரு தகுந்த ஆசான் மூலம் கற்பிக்க வேணும் என்பதற்கே. இதனால்

     நம் வருங்கால சந்ததிகள், குழந்தைகள், அற்புத ஞானமுடன் வளர்வதோடு, பல புதிய விஞ்ஞான வழிகள் மற்றும் கருவிகளையும் இந்தப்பிரபஞ்ச நுட்ப சக்திகளிலிருந்து கண்டுபிடிப்பார்கள். உண்மை இது!  சமுதாயத்திற்கே இது நல்ல உபயோகம் இல்லையா?

     நம் குழந்தைகள் வெறும் சினிமா மாயையில் மட்டுமே சிக்கிச் சுழல வேண்டுமா? தம் அறிவினால் அகில உலகப்புகழ் பெறவேண்டாமா? ஏன் நம் மகாகவி பாரதியே சொல்லிச் சொல்லி மிக மகிழ்வோடு கூத்தாட வில்லையா?

    ..   “நம் பாரதம்தான்  உலக முழுமைக்கும் ஆன்மிக ஞானத்தைக் கற்பிக்கும்! ஆம்! நிச்சயம் கற்பிக்கும்! ”– என்று!” (தொடரும்)

     ********************************************************

    Share
  • தேகமும் யோகமும்—{5 வது பகுதி}

    –யோகாவினால் பொங்கிவரும் ஆழ்மன சக்தி….

     &&&&&&&&&&&&&&&&&&&&&&

    yoga

    கவியோகி வேதம்

    ………….. நம் ஒவ்வொருவரிடமும் ஆழம்காணமுடியாத ஞாபக சக்தி, அபாரமான  ஆராய்ந்தறியும் அறிவு முதலியவை நமது  ’ஆழ்மன’த்துள்ளே புதைந்து கிடக்கின்றன. அது இறைவன் நமக்குக்கொடுத்த பெரிய வரப்ரஸாதம். இதனை நாம் நம் தினசரி தீவிர யோகப்பயிற்சியாலும், ஒழுங்கான தியானத்தாலும்  நிச்சயம் தோண்டி வெளியே எடுக்கலாம்.

     இதில் நல்ல வெற்றி பெற்ற என் ஒரு நண்பர்.. ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். அவர் மலேஷியாவிலிருக்கும் என் அன்பர்டாக்டர்  திரு.ஜேபீ{ஜெயபாரதி} அவர்கள்.அவர் தற்போது இதையெல்லாம் தம் அகத்தியர் இணையத்தில் {அகத்தியர் யாஹூ க்ரூப்ஸ்}வெளிப்படுத்திவருகிறார்.அவர் அடிக்கடி சொல்லுவார்.வேதம்! என் முன்னோர்கள் செய்த பாக்கியம். எனக்கு இந்த யோக முறைகளைக் கற்றுத்தந்த  ‘வேலவனார்’  அவர்கள் குரு வாக அமைந்ததும்,அவர் மூலம் என் ஆழ்மன சக்திகளை வெளியே தோண்டி எடுத்ததும்.. இவற்றை நான் பயன்படுத்தி எவ்வளவோ பேருக்கு இலவசமாய் நல்ல உதவிகள் செய்திருக்கிறேன் என்று..

     இப்போது சொல்லுங்கள்!அந்த விலைமதிப்பில்லாத சக்திச்சுரங்கத்தை நாம் ஒவ்வொருவருவரும் தோண்டித்தோண்டி எடுத்துப்பயன்

     படுத்துகிறோமா? என்றால் அதுதான் இல்லை. சிறுவயதுமுதல் நம் குழந்தைகட்கு சுமார் மூன்று வயதுமுதலே தேவாரம், திருவாசகம்,சில குறிப்பிட்ட மந்திர ஸ்லோகங்கள், அருணகிரி நாதரின் திருப்புகழ்  முதலியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக் கொடுத்துப் பாருங்கள்! குறிப்பிட்ட 12 வயதுக்குள் அக்குழந்தைகளின் ஞாபக சக்தி,தமிழ்

     இலக்கியம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எல்லாமே ஆச்சர்யப்படும் விதமாக வளரும்.

     ஒரு குழந்தையும் இந்த விஷயத்தில் குறைந்தோ, அல்லது மக்காகவோ இருக்காது.

          …..  இதை என் பையனிடம் முன்பே சொல்லிவைத்திருந்தேன். ஆகவே இதைப் பரீட்சித்துப்பார்க்கும் விதமாக( அவன் நியூஜெர்ஸியில் இருக்கையில்) அவனது மகனை(என் பேரனை) ஸ்கூல் நேரம் முடிந்து மாலை 6 முதல் 7 மணி வரை பக்கத்திலுள்ள ஒரு சம்ஸ்கிருத டீச்சரிடம்( சிவாநந்தாவின் சம்ஸ்கிருதி பவுண்டேஷன்) வடமொழி ஸ்லோகங்கள், ஒவ்வொரு பகவானுக்கும் உரிய மந்திரங்கள், பகவத் கீதை முதலியவற்றைக் கற்க ஏற்பாடு செய்தான். வீட்டிலோ என் மருமகள் பாரதியாரின்

     சில பாடல்களைக் கற்றுக்கொடுத்தாள்.ஆச்சர்யம்! ஒரே வருடத்தில்

     என் பேரன் எல்லாவற்றையும் தலைகீழ்ப்பாடமாகச்  சொல்வதோடு இன்னும்  இந்த10-வது வயதிலும், ஒரு வரி கூட மறக்காமல் சொல்கிறான். காரணம் என்னவெனில் குழந்தைப்பருவத்திலேயே விளையாட்டோடு விளையாட்டாய் ஆழ்மன சக்தியும் மேம்படுகிறது. வளர்கிறது.மனத்தில் குப்பைகள் சேர்வதில்லை. தேவையில்லாத எண்ணங்கள்  அவைகளை நெருக்குவதில்லை.அப்படியே சின்னச்சின்னக் கோபம், பிடிவாதச் சொற்களை  அவர்கள்  வெளிப்படுத்தினாலும்  அடுத்த நிமிடம் சமாதானமாகி,  சொற்களை, எண்ணங்களை மறந்துவிடுகின்றன.  பெரியவர்களைப்போல்(தாய் தந்தை?) ஆழ்மனம் வரை அவற்றைக்கொண்டு செல்வதில்லை. திரியாத பால் போல் குழந்தை மனம் தெளிவாக இருக்கிறது.அதாவது,உறவினரும், பெற்றோரும் அவற்றைக்கெடுத்துக் குட்டிச்சுவராக்காதவரை! கவிஞர் புலமைப்பித்தன் பாடினார்..-

        என்ன- பால்  மனமடீ உனக்கு!-குழந்தாய்!

           .. எண்ணி வியக்கின்றேனடி!

       தின்னும் பொருளை உன் அண்ணன்-நீ

         .. திகைக்கும்படிப் பிடுங்கிடினும்,

       மின்னலெனச் சண்டை போடுகிறாய்!-படு

          ..வேகமாய்க் கத்தியே திட்டுகின்றாய்!

      பின்பு வேறோர் பண்ட(ம்)உன் கைவந்தால்,-வாய்

     …. பிடித்துக்  கடித்(து)அவன் கைவைப்பாய்!

     என்ன பால்மனமடீ!..உனக்கு!!

     

    .. எவ்வளவு அழகிய பாடல் பாருங்கள்! இதுதான் குழந்தை மனம். அதில் கல்மிஷம்  இல்லை; தீராத வன்மம் இல்லை.நிலைத்த கோபமோ பொறாமையோ இல்லை.

     அதனால்தான் ஆராய்ந்து  சொல்கிறேன்.குழந்தைகளின் வெளிமனமும் உள்மனமும்பிரகாசமாகவே இருக்கிறது.ஆழ்மனமோ அற்புத சக்தி படைத்ததாக இருக்கிறது.

     பெற்றோர்கள்தாம் அதனை முதலிலேயே உணர்ந்து மூன்று வயது முதல் திருக்குறள்,திருவாசகம்,பிரபந்தங்கள் முதலியனவற்றை அவர்கட்குக்  கற்றுக்கொடுக்க ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.

        ..நம் (அவ்வை!)பாட்டிகள் சொல்லவில்லையா? ‘ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமோ?’.. ஆம்.. வயது ஏற ஏற ஞாபக சக்தி குறைகிறது.காரணம், தேவைஇல்லாத அசட்டு சினிமாப்  பத்திரிகைகள், சினிமா நடிகைச்  சமாச்சாரங்கள்,,கணினியின்  மனம் கெடுக்கும் விளையாட்டுகள்,  அனாவசியக் கோபம், பொறாமைகள், கவலைகள்.. போன்ற குப்பைகளை  மனத்துள்ளே போட்டு பால்போன்ற மனத்தைத் திரித்துவைக்கின்றோம். ஆழ்மனம் தெளிந்து அருவிநீர்போல்  இருக்கும்வரை ஞாபக சக்தியும் பெருகி, எத்தனையோ பழம்பாடல்கள், கம்பன் அமுதம், காப்பியங்கள் இவற்றை மனப்பாடமாகச் செய்தாலும் அப்படியே நினைவில் நின்று சொற்பொழிவுக்கும், சொற்ப ஒழிவு இன்றிச் செய்யும் கட்டுரைக்கும் நல்ல துணையாய் நிற்கும்.

         என் நண்பன் எழுத்தாளர் பாலகுமாரன் தம் எத்தனையோ கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்.தம் அன்னையே தனது எழுத்தின் பிரகாசத்திற்குக் காரணம் என்று.ஒரு பள்ளியில் டீச்சராக இருந்த அவர் அன்னை தினமும் இரண்டு தேவாரப்பாடல், பத்து  திருக்குறள், ஒரு திருவாசகம் இவற்றை சரியாக ஒப்பிக்காவிட்டால் இரவுச் சோறு போடமாட்டார்களாம். தாமும் துணை நின்று ஒவ்வொரு பாடலின் முழுப்பொருளும் மிக ருசிகரமாகச் சொல்லிகொடுத்ததால் ஆர்வத்துடன் எல்லாவற் றையும்  சீக்கிரமே மனப்பாடம் செய்தாராம்.தாயும் மிக சந்தோஷமடைந்து அதிகம் தமிழ்ப்பாடல்களை ஒப்பித்தால் அவ்வப்போது ஸ்பெஷல் தின்பண்டங்களும் பாலகுமாரனுக்குச் செய்துதந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவாராம்.அவர் அன்றோ சிறந்த அன்னை!

     ….இப்படி மனப்பாடம் செய்ததால் சரியான உதாரணங்கள் காட்டி இப்போதும் அவரால் சிறந்த சித்தர்போல் சொற்பொழிவாற்றமுடிகிறது. என் இன்னொரு நண்பர்( திருப்புகழ்ச் செம்மல்) மதிவண்ணனும் அப்படித்தான். சிறுவயதுமுதலே அருணகிரியார் பாடல்களினால் கவரப்பட்டு உரிய சந்தத்தோடு மனப்பாடம் செய்தவர்.

     பள்ளியில் படிக்கும் போது அவர் அருகில் குமுதம், பேசும்படம் போன்ற அநாவசியஏடுகளைப் பிறர்படிக்கத்தூண்டினாலும்,மறுத்துவிடுவாராம்.திருப்புகழே எனக்குச்

    சோறுபோடும், உயிர்வளர்க்கும் தெய்வம் என  என் அன்னையும், அண்ணனும் சொல்லியுள்ளார்கள்..ஆகவே அசுத்த ஏடுகளைச் சிந்தையாலும் தொடேன் என்பாராம்.

           ..  ‘ கசடு அறக் கற்க’ என என் தமிழ் ஆசான் திருவள்ளுவர்

     சொல்லியபடி நன்றாகத் தேர்ந்து (கசடு அற= குற்றமற்ற, உள்ளத்தில் தீய எண்ணம் விளைவிக்காத) நல்ல தமிழ் நூல்களையே கற்றுச் சிறந்த பேச்சாளனாக விளங்குவேன்!”-

     என்று பல நண்பர்களிடம் சவால் விட்டு அதில் ஜெயித்தும் காட்டி இருக்கிறார். இன்றும் அவர் சுமார் இரண்டாயிரம்  கம்பன் பாடல்களையும், ஆயிரம் திருப்புகழையும் இரவில் எழுப்பிக் கேட்டாலும் தட தட என அருவிபோல் கொட்டுவார். இதற்கு அவர் காரணமாகச் சொல்வது சிறிது நேர தியானமும்,தேகத்தையும், மூளையையும், நல்ல அளவில் பேணி வளர்த்ததும் தான் !..என்பார்.

     அவரது நினைவாற்றலில், சொற்பொழிவுத்திறனில் வியந்துபோய் மும்பை, கொல்கத்தா, மலேசியா, ஸ்ரீலங்கா அன்பர்கள் இன்றும்அவரைப்

     பல இடங்களில் தொடர்ச்சொற்பொழிவுக்குக் கூப்பிடுகிறார்கள். இதற்கெல்லாம்என்ன காரணம்? அந்தச் சிறுவயதின் தெளிந்த ஆழ்மனச் சக்தியை மதிவண்ணன் அவர்கள் மிகச்சரியாகப் பயன்படுத்தியமையே. ..

             இப்போதும் சொல்லுவார் என்னிடம். வேதம் ஸ்வாமீ!!  சிறு வயது முதல்நான் கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதை வெறுத்தவன். என் ஐந்து வயதுமுதல் இன்றுவரை தவறாமல் அருணகிரிநாதரின் புயவகுப்பு, வேல்வகுப்பு, சீர்பாத வகுப்பு  இவற்றின் பாடல்களைக் கண்மூடிச்சொல்லியபிறகே தூங்கப்போவேன். அதுவே  ஒரு பழக்கமாகிவிட்டது வேதம்! ஏன் எனில் இவற்றின்மூலம்,

     எனக்கு அருணகிரிநாதர் என் வாழ்வுக்கும்,வருமானத்திற்கும் போட்ட பிச்சை! ”–என மிக நெகிழ்ந்து கண்ணில் நீர் கோக்க  ஒரு பரவசமாய்ச் சொல்வார்!இதனால்இன்றுவரை அவரது ஞாபக சக்தியும், தமிழில் ஆராயும் அறிவும்ஆழ்மனச் சக்தியும் வளர்ந்துகொண்டே போகிறது…

     …  சுரங்கம் தோண்டி வைர  ‘ முதல்’எடுக்கின்ற சொக்கத்தங்கம் ஐயா நீர்! ’

    என்று நான் அவரைச் சிரிப்போடு கிண்டல் செய்வேன்!  மனமாரத் தழுவிக்கொள்வேன்..இப்படி ஆழ்மனச்சக்தியை வளர்த்துவரும்  நண்பர் மதிவண்ணனின் சொல்லின் அற்புதத்திறன்,பாட்டுத்திறன் இவற்றால்  எத்தனை எத்தனை  நண்பர்களின் சிக்கலான வாழ்வு சீர் அடைந்துள்ளது என நான் விவரித்தால் நீங்கள் அசந்துபோவீர்கள்..(தொடரும்)-

    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    Share
  • தேகமும் யோகமும்..{பகுதி4..}

    கவியோகி வேதம்

    யோகாவும் ஆசைகளும்..

    &&&&&&&&&&&&&&&&

    yoga

                                          ….  மனித மனத்தின் உளவியல் எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த  ‘ஹேன்ஸ் சைல்’ என்பாரின் கருத்துக்களை இப்போது சொல்கிறேன். இது யோகாவில் பின்பற்றவேண்டிய முக்கியமான ஒன்று.  அவர் சொல்கிறார்.

      “ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை. எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும்  ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது. ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.. இயற்கையை உணரத் தவறுகிறோம்,’ என்பார்..

          ..இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.

       ..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின்  அக்கருவியே, அல்லது அந்தப் புது  வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!

    வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம்தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத்துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில்  ஒரு ‘ஒற்றைக்காளை ’

     பெரிய வண்டியைச் சுமப்பதுபோல்( நம் கிராமங்களில்!) பாரத்தை அனாவசியமாக

    ஏற்றி என் வாழ்க்கையே ஒரு.. ‘ பெரிய சுமைதாங்கி’ சார்! என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும்  ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த  ஒரு ‘வண்டிச்சுமையை’  இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..

    ….  எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை. செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில்பேசஅழைக்கப்படுகிறார்.

    நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.

    எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.

     இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- .. “வேதம் சார்!

    சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?.

     நான்..;- ‘இல்லை ஐயா!’..

     அவர்..;–  ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என்  நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சொல்வதால்தானே என்னைக் கூப்பிடுகிறார்கள்.. ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.

     அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.

     ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட…. என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், கிரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.

     நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து  வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு  தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.

     ….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே  ‘சபாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன்  கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை  அவர் விலை கொடுத்து  வாங்குவதில்லை..

    அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.

     … இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.

    எங்கு போக வேண்டும்  என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.

    .. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா?  நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம்.

     அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்..

     சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப் பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!

    சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷம் இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.

    அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால்  நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்.கடைசியில் அவரது அண்ணன் மகனே ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.

      …அதனால்தான்  ‘சைல்’ சொல்கிறார். உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ  கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து  ‘அது’ ஏற்படாமல்  உங்கள்  மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.

    இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!

    … எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற  ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம்

    நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம்,  ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல்போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!

     *********************

    {தொடரும்)

     படத்திற்கு நன்றி

    Share