கவியோகி வேதம்

yoga21

சரி. இந்த சபல மனத்தை எப்படி வழிக்குக்கொணர்வது? நான் பதில் சொல்கிறேன்.

அது உங்களிடம்தான் உள்ளது. ஆம்! வேறு யாரும் உங்களைச் சபலப்படுத்த முடியாது! ஒரு பாடல் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

“தன்னை (நற்குணத்தில்) நிலைநிறுத்துவானும்,இல்லை தன்னைக் கீழே கொண்டுபோவானும், பிறகு ஒருவேளை, மேலே மேலே தன்னை மேம்படுத்துவானும் தானே”. இது ஒரு ‘நல்ல’ பழமொழியின் அறிவுறுத்தல்.

நீங்கள் இடம் கொடுத்தால்தானே அவர்கள் மடத்தைப்பிடுங்குவார்கள். வைராக்யம் வேண்டும் ஸ்வாமி. வைராக்யம்! அதாவது நெஞ்சுறுதி! நீங்கள் பிறரது மெஸ்மெரிஸ வார்த்தைக்குச் சற்றும் இடம் கொடுக்காதீர்கள். .. “இந்த  விஷயத்தில் நான் என் இஷ்டப்படி தான் ஒரு நல்ல முடிவை எடுப்பேன். எனக்கென்று ஒரு தனிக்கொள்கை., அதாவது நல்ல கொள்கைஉண்டு,” என்று பிடிவாதமாக எப்போதும் இருங்கள். ஒருபோதும் எந்தச் சபலத்திற்கும், நப்பாசைக்கும் ஆட்படாதிருங்கள். பிறகு யார் உங்களை, எப்படி வளைத்துவிடமுடியும்?

இன்னொன்று! எந்த நேரம் ஆயினும் ‘அவர் சொன்னார் இவர் சொன்னார்’ ஐயோ! என்னால் அவர்சொல்படி நடக்கமுடியலையே, நேரம் ஆகிறதே, குறிப்பிட்ட நேரத்திற்குள் என்னால் வேகமாகச் செயல்பட முடியலையே என்றெல்லாம் மனத்தைப்போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

எப்போதும் இயல்பாக இருங்கள்.அமைதியுடனும், நிதானமாக அதேநேரம் காலம் அறிந்து அதற்குள் செயல்படுவதும் நிச்சயம் உங்களால் முடியும். ஒரு உண்மையான உதாரணம் சொல்லவா!

எனக்குத்தெரிந்த ஒரு வயதான அம்மா இருந்தாள். கமலா மாமி என்று பெயர். 82 வயது. யார் என்ன சொன்னாலும் அவள் ‘அப்ஸெட்’… அதாவது கலங்கிவிடமாட்டாள். பதட்டமே இல்லாமல் எப்போதும் செயல்படுவாள். சிக்கல் ஒன்று திடீர்என வந்தாலும் இனி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதிலேயே குறியாயிருப்பாள். எதனால் இச்சிக்கல், தடை வந்தது என குழம்பமாட்டாள். மனத்தைப்போட்டுக் கசக்கமாட்டாள். அவளிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றேன். அவளிடம் நானும் என் தம்பியும் “எப்படி மாமி! எப்பவும் உங்களால் நிதானமாக, அதேசமயம் சொன்ன நேரத்திற்குள் எல்லாம் முடிக்கமுடிகிறது?” என்று கேட்டோம். அவள் டக்கென்று உடனே ஒரு பதில் சொன்னாளே பார்ப்போம்!

‘அதாவது கண்ணா! நான் ராத்திரி ராத்திரி ஒரு குழந்தையாய் மாறிவிடுவேன். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்’.

எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. “புரியலையே மாமி”என்றோம். அவள் நிதானமாகச் சொன்னாள்.

பகல் பூராவும் என் கணவர்க்காகவும், மற்ற மகன்கள், மகள்கள், பேரப்பசங்கள் இவர்களுக்காகவும் உழைத்து என்னால் முடிந்ததை ஈஸ்வர அர்ப்பணமாக, அதாவது என் ஸ்வாமி கண்ணனுக்காகத்தான் அவ்வளவும் செய்கின்றேன் என்று மனத்தில் சங்கல்பம் பண்ணிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செய்வேன். அதனால் எனக்குக் களைப்பே தெரிவதில்லை.

பிறகு ராத்திரி நேரம் ஒரு மணிநேரம் கண்ணன் படம் முன்பு உட்கார்ந்து, அமைதியாகத் தியானம் செய்வேன். அப்போது கண்ணா! நான் பகலில் எனக்கு வந்த கவலைகள், திடீர்ச்சிக்கல்கள், குழப்பங்கள் யாவையும் இப்போது உன் பாதங்களில் வைத்துவிட்டேன். இனி உன்பாடு. அதன்பாடு! எதுவும் என்னோடது இல்லை. உன் பிரச்னைகளாகத்தான் அவைகளைக் கருதுகிறேன். ஆகவே நீதான் நாளை அவற்றுக்கு ஒரு நல்ல முடிவு கண்டுதரணும். சரியா கண்ணா? என்பேன். அவனும் சரி என்று தலையாட்டுவான். (அது நிச்சயம் என் மன(உள்)க் கண்ணுக்குத்தான் தெரியும்!).

ஏதாவது சொல்லி பிறரை நான் புண்படுத்தியிருந்தால் என் கண்ணனிடமே இரவு மன்னிப்புக் கேட்டுவிடுவேன். புண்பட்டவர் சார்பில் தீவிரப் பிரார்த்தனையும் செய்வேன். என் பாரம் குறையும். என்னை அறியாமல் உடனே என் கண்ணனிடமிருந்து சில்லென ஒரு தென்றல் வந்து மனத்துள் பரவும். அவன் என்னைச் சட்டெனத் தழுவுவதுபோல் ஒரு காட்சி விரியும். என் கண்ணில் நீர் துளிர்க்கும்! பின் எப்படி எனக்கு டென்ஷனோ, பரபரப்போ வரும்? சொல்லுங்கள் என் கண்மணிகளா! என்பாள்.

கேட்கிற எங்களுக்கு மயிர்க்கூச்சல் எடுக்கும். தினசரி நாங்கள் அவளைச் சீண்டினாலும் பதறாமல் இப்படியே பரவசமாய் ஒரு பதில் சொல்வாள். இந்த மாமி மாதிரி நாம் அனைவரும் இருக்க முயலவேண்டும்; பிரார்த்தனை செய்யவேண்டும். அந்த அம்மா சொன்னபிறகு அலுவலகத்தில் நான் யார் எனக்கு என்ன நெருக்கடி கொடுத்தாலும், இவர்களுக்காக மட்டுமின்றி யான் என் குருநாதர்(பாபாஜி)க்காகவே எல்லாம் செய்கின்றேன் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டேன். அதன்பிறகு என் உள்ளத்தில் மகிழ்ச்சியே நிலவியது.

எந்தச் சிக்கலுக்கும் உடனுக்குடன் யார் மூலமாவது விடையும் கிடைத்தது. இதுதான் உண்மை. இப்படியே நடந்துகொண்டு யான் எந்த டென்ஷனையும் தவிர்த்துவிட்டேன். பின் எதற்காக நாம் இங்கே வாழ்கிறோம்? வீணாய் டென்ஷனில் ஆட்பட்டு, இருக்கிற கொஞ்சநஞ்சம் சக்தியையும் இழப்பதற்கா? நீங்களே சொல்லுங்கள்! இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் இளைஞர்க்குக்கூட டென்ஷன் என்கிற மனோவியாதி(!) வந்துவிடுகிறது.

இதைக் களைய வழியை அன்றே அர்ஜுனன் மூலம் கண்ணன் நமக்குச் சொன்னான். “அர்ஜுனா! பிறரைக் கொல்லப் போவதும், தான் ஜெயிக்கப்போவதும் என்ற எண்ணம் எல்லாம் நானே விளைவிக்கின்றேன். நீ இதை ஒரு பெரியச் சுமையாகக் கருதிக்கவலைப்படாதே! எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிட்டு நீ அமைதியாகச் செயல்படு. நான் உன் கூடவே எப்போதும் இருக்கும்போது நீ வீணாக ஏன் மனத்தைக்குழப்பிக்கொள்கிறாய்.” இதன் பிறகே அர்ஜுனன் மனத்தெளிவடைந்து தன் கடமையைச் சரியாகச் செய்யமுயன்றான். என்பது வரலாறு.

ஆகவே நாமும் எது செய்தாலும் நம் ஆண்டவனே என்னைக் கருவியாகக் கொண்டு செயல்படவைக்கிறான் என்ற திண்ணமான மனம் கொண்டால் ஒருவித ஹார்ட் அட்டாக்கும் நமக்கு வரவே வராது. சரிதானா அன்பர்களே?

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேகமும் யோகமும் (10)

  1. கமலா மாமி கருத்தும் அதை கவிஞர் வேதம் சொன்ன அழகும் அருமை. நல்ல பாடம்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published.