கவியோகி வேதம்

yoga

நமது முன்னோர்கள் எப்போதும் ‘நமக்கு மேல் ஒன்று’ எக்கணமும் நம்மைக் கண்காணிப்பதாக நம்பினார்கள். அந்த ‘ஒன்றோ’டு ஒன்றி’– நாம் இணைந்து கொண்டால் புதிய அந்த கன்ணுக்குப் ‘புலப்படாத உலகத்தட்டு’ (Plane of consciousness) நமக்கு நிச்சயம் நன்மை செய்யும் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தனர். இதற்கு யோகம் அவர்களுக்கு உதவி செய்தது., தீவிர தியானத்தில் பல யோகிகள் கடவுளுடன் பேசியிருக்கிறார்கள். பலருக்கும்  இறைவனிடம் பதில் கேட்டு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்கள். சிக்கல்களையும் நோயையும் தீர்த்துவைத்திருக்கிறார்கள். இதற்குப் பரமஹம்ச யோகாநந்தர் ஓர் உதாரணம்.

நம்மைச்சுற்றிய வாயுத்திரள், பிரபஞ்ச அணுக்கள், இவற்றில் இன்னதென்று இனம் காண முடியாத ஒரு எனர்ஜி (ஊக்க அணு), ஒரு காந்தம், ஒரு ஈர்ப்பு, ஒரு திரண்ட சக்தி எந்நேரமும் பொங்கிப்பொங்கி வருவதைக் கண்டார்கள், ; நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

மேலும் அவற்றைக் கும்பிட்டு, பணிந்து, புகழ்மாலை (ஸ்தோத்ரம்) சூடுவதன் மூலம் தமக்குள் அது மூளை, மற்றும் உடலுள்ளே புகுந்து யாண்டும் புதிய

புதிய சக்திகளைத் தருவதாக உணர்ந்தார்கள். இந்தப் புதிய ‘சக்திகள்-உணர்வை’ Feel energies என்று ஜெர்மானியரும், சில ஆங்கிலேயர் அதை metaphysics, என்றும்,  விஞ்ஞான ரீதியாக நூலில்  எழுதிவைத்துள்ளார்கள்.

..   ஆம்!  கடவுளுடன் அப்படிப்பேசிய அவர்களே மகான்கள். இந்த உண்மையை நாத்தழும்ப நாத்திகம் பேசும்

அன்பர்கள் இன்னும் மறுக்கின்றார்கள். இதனால் சூஷ்மச் சக்திகளைத்தேடி அவற்றை ஸ்வீகரித்துப் பயன் அடையும் மானுடர்க்கு யாதொன்றும் நஷ்டமில்லை.

அது அவரவர் வந்த வழி. கர்ம வினை! அழகியகுளிர்ச் சோலையில் பற்பல குயில்கள் இனிமைக்குரலில் பாடுகின்றன என்று அங்கு செல்லும்  ‘இயற்கை ரசிகன்’ கண்டும் கேட்டும் உடல் சிலிர்க்கப்புளகாங்கிதம்

அடைகின்றான். கவிஞனோ கவியில் அதை அனுபவித்து ப் பாடியிருக்கிறான்.

  .. இல்லை, இல்லை, அப்படி ஒன்றும் இனிமைக்குரலில்

குயில்கள் பாடா’ என்று நாத்திகன் சொல்வதால் அப்படி அனுபவிக்கும் ரசிகனுக்கு நஷ்டமுண்டோ? அவன் அல்லவோ அந்த இனிமைக்குரல் மூலம் தன் உடம்பில், நரம்பில் புதிய ஜீவனை ஜிவ்வென்று ஏற்றுகிறான்!

இன்னும் பல கிராமங்களில் போய்ப்பாருங்கள்! மழையே பெய்யவில்லையா நீண்ட நாட்களாக! கவலை ஏன்? என்று உடனே ஆஸ்தீக அன்பர்கள் கூடி

வேத வித்துக்களையும் மந்திர உச்சாடனத்தில் துறைபோகிய, பிரசித்திபெற்ற ஹோம வல்லுநர்களையும் தேடிப்பிடித்து, தாங்களே கிராம மக்களிடம் பணம் வசூலித்து வேத விற்பன்னர்களை நெய் ஆகுதி சொரிந்து, யாகம், ஹோமம்

 முதலிய செய்வித்து இரண்டு நாளைக்குள் மேகங்களைத் திரளச் செய்துவிடுகிறார்கள். இது யானே அனுபவ பூர்வமாக எங்கள் கிராமத்திலும் திருநெல்வேலியின் –அத்தாழநல்லூர்– மற்றும் பக்கத்து ஊரான ‘ரெங்க சமுத்திரத்திலும்’ நேரடியாகக்

கண்டறிந்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

  … ஆம்! அது 1956 ஆம் வருடம். யான் அப்போது திருநெல்வேலி கல்லூரியில் பட்டப்படிப்பு முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். கோடை விடுமுறை

விட்டார்கள். சரியான வெய்யில்! மொத்தம் இரண்டு மாதம் வரை தகித்தது.

பயிர்களுக்குப் போதுமான நீர் இல்லை. இருக்கின்ற ஒரே ஆறு தாமிரவருணியும் வேகமாக வற்றத்தொடங்கிய காலம். பாட்டிமார் புடவையின் ‘கொசுவம்’ போல் ஒரு மெல்லிய ஓடையில்தான் ஜலம் ஓடிக்கொண்டிருந்தது அந்த நதியில்!

சில அயல்நாடுகளில் போய் வேலை பார்த்து ஊருக்குத்திரும்பிய எங்கள் தாத்தா மந்திர சக்தி மிகுந்த பாரதியார் பாடல்கள், வேத மந்திரங்கள், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்தம் எல்லாம் பொருள்பொதிந்த வியாக்யானத்தோடு

 கற்றறிந்தவர். கிராமத்து ஜனங்களில் மிகப்பெரியவர். ஆஜானுபாகுவான உயர்ந்த தோற்றம். முகமோ ரொம்ப வசீகரம்! அவரிடம் வந்து ஊர்மக்கள் ஆலோசனை

 கேட்டார்கள். அவர்தான்  கேட்டவர்களிடம் நான் மேலே சொன்ன  “‘கவலை ஏன்?  நெய் ஆகுதி யாகம்

செய்யுங்கள், நிச்சயம் மழை பெய்யும். ஏற்பாடு செய்யுங்கோ, நான் கலந்துகொள்கின்றேன்”’ என்று உத்தரவு போட்டு அவர்கள் கை நிறையக் காசு தந்து ‘முதல் ஆசி’யை

வழங்கினார்.

  …யான் அப்போது கல்லூரி விடுமுறையினால் கிராமத்து வீட்டில் இருந்தேன்.

பெரியவரே ஆசிதந்து விட்டார்; ஆரம்பிங்கடா என்று இளைஞர்களும், பள்ளி ஆசிரியர்களும், வாத்யார்களும், (விசேடங்களை நடத்தித்தருபவர்கள்), உற்சாகமாக

களத்தில் இறங்கினர். அப்போது ஜூன் (கடும் அக்னி நட்சத்திர) மாதம்…

  …  தெரு அடைத்துப் பெரிய பந்தல் போடப்பட்டது. யாக குண்டங்கள் பன்னிரண்டு தோண்டப்பட்டு பெரிய பெரிய ஆழமான குழிகளில் அக்னி வளர்த்து மந்திர, வேத வல்லுநர்களால் இரண்டு நாட்கள் மிக மிக நம்பிக்கையுடன் மந்திர கோஷத்துடன் ஹோமம் செய்யப்பட்டது. பலவித வாசனைப் பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள், அற்புதச் சொல் பலத்தோடு வருண பகவானை அன்போடு அழைக்கும் விதமாய் யாகக் குண்டத்தில் போடப்பட்டன.

மொத்தம் 24 பண்டிதர்கள் இடைவிடாமல் வேத கோஷம் முழங்கினால், வருணனால்

ஆகாய மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே சும்மாச் சும்மா, சதா ரம்பை,

 ஊர்வசி நடனத்தைப்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? கீழே இறங்கி பூமிக்கு வரத்தானே வேணும்? யான் அந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் என் இள வயதில் உற்சாகமாய் (பல உதவிகள் செய்துகொடுத்து) ரசித்துக்கொண்டிருந்தேன். உண்மையாகச் சொல்கின்றேன். மூன்றாவது நாள் அதிகாலை இடி மத்தளம் போல் முழங்க, மின்னல்

ஒவ்வொன்றும் சாட்டை சாட்டையாய் ஆகாயத்திலிருந்து மண்ணில் கோடு கிழித்து,

 கன்னிப்பெண்கள் ஒரு கயிறு விளையாட்டு விளையாடுவார்களே அதுபோலச் சுற்றிச்

சுற்றி வர, கரும் மேகங்கள் வெடித்து முன்னும் பின்னும் சுழன்று மூன்று நாட்கள் புயல்

மழை கொட்டியது பாருங்கள்! இன்னும் என்னால் மறக்கவே முடியாத பயங்கர நிகழ்ச்சி அது!  …    …………தாமிரபர்ணியில் சட்டென வெள்ளம் கரைபுரண்டோடியது, கரையோரமாய் ஓடி

ஓடி பசங்கள் நாங்கள் வேடிக்கை பார்த்தது நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.

அப்படிப் பதிந்த அந்த சம்பவத்தின் மூலம்தான் நான் பாரதியைக் கற்றேன்.

   “தேவர்களைக் கவர்ந்து கீழே இழுக்கும்  மந்திரச் சொல் ஒன்று வேண்டும் அம்மா!”.. ஆம்!  நன்கு மழை பொழியச் செய்த சொற்களின் வலிமை எல்லாம் புரிந்தது. அம்மட்டோ! மந்திரம், யோக சாஸ்திரம், சொல் நுட்பப் பயிற்சி

முறைகள், ப்ராணிக் ஹீலிங் மூலம் எப்படிப் பிறர் உடல் நோய் தீர்ப்பது, மிக ஆழ்ந்தபிராணாயாமப் பயிற்சிகளை எப்படிப் பெற்றால், எப்போதும் உற்சாகமாக மனமும் உடம்பும் திடகாத்திரமாக வேலை செய்யும், ஆசனங்களை எந்த அளவு கற்றால், நம்

மூளைக்கு சக்திகளைப் பிரபஞ்ச (force) ஈர்ப்புச் சுரங்கத்திலிருந்து கொணர்ந்து வேகமாய்

 உள்ளே பாய்ச்சும் என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் ஒரு தீவிரக் காதலன்போல் பயின்றேன். என்ன, இவை என்னுள் முழுமை பெற ஒரு 12 ஆண்டுகள் ஆயின!

இந்த ‘அமிர்தக் கிண்ணங்’களைப் பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியாயிருந்த ஆசான்கள் பல பேர். முதலில் எங்கள் ஊர் மகாதேவ சாஸ்திரிகள். அவரிடமிருந்து ஆரம்பித்து, சிங்கப்பெருமாள் கோவில் சக்தி உபாசகர் ஸ்ரீ ‘ராமய்யங்கார்’ ஸ்வாமிகளும், பின்பு

எனக்குள் நயன தீட்சை கொடுத்து ‘மூன்றாம் கண்’ என்றால் என்ன என்று காண்பித்த ஸ்ரீ காஞ்சி மகானும் (பெரியவா), ஆசனங்கள், யோக முத்ரா, அஸ்வினி முத்ரா இவை மூலம் மூளை மற்றும், நரம்புகட்குள் அட்டகாசமாய்ச் சக்தி ஏற்றலாம்டா; உனக்குக்

கஷ்டமே இல்லை என்று கற்றுக்கொடுத்த பெரியவர் வேதாத்ரி மகரிஷியும் என இத்தனை

குருமார் ஆவர். யானும் தீவிரப்பயிற்சியில் இறங்கி விடாப்பிடியாகக் கற்று நாடி நரம்பில் ஒளிச்சக்தி ஏற்றிக்கொண்டு, பிறர்க்கும் இவற்றைப் பயிலுவித்தேன்.

ஆகவே, இதெல்லாம் ஒரு அனுபவ உண்மையாக, பிரத்யட்சப் பிரமாணமாக ஏன் விரிவாய்ச் சொல்கின்றேன் என்றால் நம் பெற்றோர்களும் தத்தம்

குழந்தைகட்கு பள்ளிக்கூடப் பாடங்களோடு இந்த சூட்சும சக்தி ‘யோக’ வழிகளையும் ஒரு தகுந்த ஆசான் மூலம் கற்பிக்க வேணும் என்பதற்கே. இதனால்

 நம் வருங்கால சந்ததிகள், குழந்தைகள், அற்புத ஞானமுடன் வளர்வதோடு, பல புதிய விஞ்ஞான வழிகள் மற்றும் கருவிகளையும் இந்தப்பிரபஞ்ச நுட்ப சக்திகளிலிருந்து கண்டுபிடிப்பார்கள். உண்மை இது!  சமுதாயத்திற்கே இது நல்ல உபயோகம் இல்லையா?

 நம் குழந்தைகள் வெறும் சினிமா மாயையில் மட்டுமே சிக்கிச் சுழல வேண்டுமா? தம் அறிவினால் அகில உலகப்புகழ் பெறவேண்டாமா? ஏன் நம் மகாகவி பாரதியே சொல்லிச் சொல்லி மிக மகிழ்வோடு கூத்தாட வில்லையா?

..   “நம் பாரதம்தான்  உலக முழுமைக்கும் ஆன்மிக ஞானத்தைக் கற்பிக்கும்! ஆம்! நிச்சயம் கற்பிக்கும்! ”– என்று!” (தொடரும்)

 ********************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.