Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

தேகமும் யோகமும்.. பகுதி12

 கவியோகி வேதம்

 யோக நிலையும்,மனித உதாரணமும்

 

yoga211

 நம் மனிதர்களில் பாதி சதவிகிதம் பேராசையினாலும், தீவிர இச்சைகளாலும் ,உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மன வலிமை இழந்து, அதனால் உடல் பலத்தையும் இழந்து விரைவில் நோய்க்கு ஆளாகின்றனர். மனோ பலம் இல்லாததால் எந்த மருந்தும் அவர்களைக் குணப்படுத்த முடியாமல் போகிறது.

 உதாரணத்துக்கு… பேரைச் சொல்லாமல் சொல்லுகின்றேன். பிரபல சிரிப்பு நடிகர்.. அவர் திரைக்கு வந்து இரண்டு மூன்று தடவை முகத்தையும், காலையும் அஷ்ட கோணலாக ஆக்கிக் காட்டினாலே போதும் விழுந்து விழுந்து ஜனங்கள் சிரிப்பர். அப்பேர்ப்பட்ட நடிகர் சும்மா இருக்கக்கூடாதா! நானும் படம் தயாரிக்கிறேன் என்று சொல்லி ஆசை வலைக்குள் வீழ்ந்து, அதில் தோல்வியுற்று துக்கம் தாங்க முடியாமல் குடிவெறிக்கு ஆளாகி  இறந்தும் போனார். இன்னொரு குணசித்திர நடிகையும் அப்படியே. படத்தயாரிப்பில் விழுந்து நஷ்டப்பட்டு அந்தச் சோகத்தால் கஞ்சா முதலிய போதைக்கு அடிமையாகி நெடுநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இந்த இருவர்க்கும் யோகா மூலம் மேலே ஏற, மீண்டும் தன்னம்பிக்கை ஒளியை அவர்கள் உள்ளே புகுத்தி வாழுமாறு செய்ய  யாரும் வழி காட்ட வில்லை.அதுவே உண்மை.

….இப்படி நடிகர்கள் மட்டுமல்ல. நிறைய பணக்காரர்களும் கூட நண்பர்களால் கெட்ட  வழியில் ஈர்க்கப்பட்டு, அவமானம் தாங்காமல் தற்கொலை வரை போகின்றனர்.  ‘வாழ்க்கை’ என்பது தானும் ஒழுங்காக வாழ்ந்து, பிறரையும் நல்வழிக்குத் திருப்பி, கூடுமானவரை சிக்கலில் மாட்டியோர்க்கும், ஏழைகட்கும் தீவிரமாக உதவுவதே என்ற கோட்பாட்டை மறக்கின்றனர்.

..இன்று உலகம் முழுதும் ‘யோகா ’ தினம் அனுஷ்டிக்கப்படுகிறது..  உடல், மன உணர்ச்சிகளை தியானம் மற்றும் யோக ஆசனங்களாலும்  கட்டுப்படுத்தி, அல்லது ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவந்தால் யாவரும் இன்பமாய் வாழலாம் என்று எல்லா யோகாசிரியர்களாலும் போதிக்கப்படுகிறது. மன வலிமையையும் , காரியத்தை வெற்றிகரமாகச் சாதிக்கும் திறனையும்  யோகா மூலமே மேம்படுத்தலாம்  என்று இன்றைய டெம்ப்டேஷன் (தூண்டுதல்) சூழ்நிலையில் அனைவராலும் அறிவு பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. பெரிய அரச போக வாழ்க்கை கிட்டினாலும் கௌதம புத்தர் தம் மன வலிமையால் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி, இந்த போக வாழ்க்கையில் நான் மூழ்க மாட்டேன். அனைவரும் எப்போதும் மனத்தில் மகிழ்ச்சியும் அமைதியும்  பெறவேண்டும் ;அதற்கான வழிவகை காண்பேன்

 என்று மனைவியை, மகவை, அரச வாழ்க்கையைத் துறந்து காட்டுக்கு ஏகவில்லையா? அதனால் மனம் ஒன்றே துக்கத்துக்கும், மட்டற்ற மகிழ்ச்சிக்கும் அமைந்த ஒரே சாதனம் என்று தெரியவில்லையா? சந்தோஷம் என்பது வெளியில் இல்லை, வெளியில் கிடைக்கின்ற பொருள்களால் இல்லை, உனக்குள் ஆழ்ந்து அறியும் ஞான மனத்தால்தான்  என்று வேதாந்திகள் மட்டுமின்றி இன்று சாதாரண கிராமத்தானும் உணர்கிறான். அதனால் ,..எனக்கு இது போதும், இன்று கிட்டும் பணம் போதும், மனத்துக்கு இன்று நிம்மதி கிடைக்கிறதா அதுவே எனக்கு இறைவன் அளித்த பெரிய கொடை என்று அனுபவத்தால் உணர்கின்றான். எந்தத் தீவிர இச்சைகளும், இலவசமாகக் கிட்டும் எந்தப்பொருளுக்கும்  உண்மையாக உழைக்கின்ற விவசாயி ஆசைப்படுவதில்லை.

 …. எல்லா மனிதருள்ளும் ஏதோ ஒன்றைச் சாதிக்கும்  வெறியும், உழைப்பு உணர்வும் ஆழ் மனத்தே அமைந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி இறைவனிடம் நம்பிக்கை பூண்டால் அவனுக்கு அபாரமான  இன்ப வாசல் திறக்கிறது.  ஒரு கதவு பூட்டப்பட்டாலும் அவனுக்கு இன்னொரு வாசல் நிச்சயம் திறக்கிறது…

 …..எனக்குத் தெரிந்த ஒரு துணி வியாபாரி சில வருடங்களாக வெற்றிப்பாதையில் போய் நிறைய லாபம் சம்பாதித்தார். அதனால்  ஒரு பெரிய கடையைத் தொடங்கி அதனை நிர்வகிக்கும் பொறுப்பை வேலைகிட்டுமோ என்று தவிப்பில் இருந்த தன் மைத்துனனுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து வழங்கினார். யாவற்றையும் கற்று, வியாபார நுணுக்கமெல்லாம் தெரிந்துகொண்டு மூன்றே வருடத்தில் அவருடைய பணம் பூராவும் சுருட்டிக்கொண்டு  அந்த மைத்துனன் வட நாட்டுக்கு ஓடிவிட்டான்.

 அவனைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

 போலீஸும் உதவவில்லை.  ஆயின்  தனக்கு  ‘யோகா’ சொல்லிக்கொடுத்த ஒரு ராமகிருஷ்ண மடத்து சன்னியாசியின் ஆசிகள் மூலம்  தன்னிலை உணர்ந்தார். தைர்யமும் அவரால் பெற்றார். அவர் இதை ஒரு கர்ம பலன் என்று ஒதுக்கித் திரும்பவும் முதலில் இருந்து உன் வியாபாரத்தை ஆரம்பி என்றார். உனக்கு நஷ்டம் கொடுத்தவன் உன் உறவினன்தானே, சரி அவனுக்கு நானே மேல் நிலைக்கு வர உதவினேன் என்று மனத்தில் ஒரு மகிழ்வு நிலையை ஏற்படுத்திக்கொள் என்று உபதேசம் செய்தார்.

 .. தெளிந்தார் அவ்வியாபாரி. சரி போனது போகட்டும் என் அறிவு மழுங்கவில்லையே, அனுபவம் இன்னும் என் மூளைக்குள் ஒளிர்கிறதே என்று திரும்பவும் உண்மையாக  உழைத்து,ஒரு வங்கியை அணுகி கடன் பெற்று படிப்படியாக மேல் நிலைக்கு வந்துவிட்டார். இன்று அவருக்கு தென்னிந்தியாவில் ஆறு கடைகள் உள்ளன.  நிறைய சோதனைகள் வைத்த பிறகே, டெபாஸிட் முதலியன பெற்ற பிறகே தகுதியான ஆட்களுக்குக் கடையில் வேலை கொடுப்பார் இன்று.. அனுபவமும், யோகாவும் இப்போது அவரிடம் பேசுகின்றன அன்றோ?

 … இதுபோல் யான் நிறைய நல்ல பணக்காரர்களைச் சந்தித்திருக்கின்றேன்.

  அதில் ஒருவர், ..அவர் எந்த இரண்டு இன்ப எல்லைக்கோ,அல்லது பிறரின் தூண்டுதலுக்கோ ஆளாகாமல், தனது உண்மைநிலை, தன்  செயல்திறன்,தன்னால்  முடிந்த எல்லை இவற்றைக்கணித்து எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பார்.

 உலகம் மாயை என அவர் ஒப்பார், ஞானி ஜனகர் போல் இங்கேயே இருந்துகொண்டு பிறர்க்கும் உதவி செய்து கடமை ஒன்றையே பெரிதெனக்கொண்டு வாழ்கிறார். படாடோபம் கிடையாது அவரிடம்;தனது குடும்பத்தாரை மட்டுமின்றி, பறவைகளையும் நேசிக்கிறார். இயற்கையையும் நேசிக்கின்றார்.ஏழைகட்கும், கலைஞர்கட்கும் தன்னால் முடிந்தவரை உதவுகின்றார். யோகம்  உண்மையாகக் கற்பிக்கும் ‘மனிதத்தன்மை’ எனில் என்ன? என்பதற்கு உதாரணம் அவர்.எப்போதும் சிரித்த முகத்தால் நேர்மையான பேச்சால், நடவடிக்கைகளால் எல்லோரையும் அவர் கவர்கின்றார். யோகத்தன்மை என்பது இதுவே. ‘நல்லி’ என்று நல்லதே செய்யும் அவருக்கு மக்கள் வழங்கிய  பெயர்…(தொடரும்)

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க