Author: மீ. விசுவநாதன்

  • சிவபிரதோஷம் “புகழுடம்பே”

    மீ.விசுவநாதன்

    pradosha-moorthi
    அந்திப் பொழுதில் அருமைத் தமிழில் அரந்தனையே
    சிந்தித் திருந்தால் சிதையா மனத்தைச் செதுக்கிடலாம் !
    நந்தி மறையை நமது செவியுள் நகர்த்துவதை
    மந்தி ரமாக மதித்தே துதித்தல் மகத்துவமே !

    மெய்யாம் தவத்தை மெதுவாய்க் கலைத்த ஒருவனது
    மெய்யை எரித்து விபூதி யளித்த சிவபெருமான்
    மெய்யே எனநான் மிகவும் விரும்பித் தொழுவதற்குப்
    பொய்யாம் உடம்பு புரியும் உதவி புகழுடம்பே!

    (கட்டளைக் கலித்துறை)
    (பிரதோஷ தினம் : 05.04..2016)

    Share
  • “இறைவன் சொத்து”

    மீ.விசுவநாதன்

    சின்ன தாக வீடு கட்டி
    சிறப்புடனே வாழ்வ தற்கும்
    முன்ன தாக தான தர்மம்
    கொஞ்சமேனும் செய்ய வேண்டும் !
    தன்ன தான பொருள்க ளேதும்
    தனக்கென்று கிடையா தென்னும்
    உன்ன தமான எண்ணம் வந்தால்
    உலகமெலாம் நமது வீடே !

    ஓட்டு வீடு தங்கக் கூரை,
    ஒருவேளை நல்ல தூக்கம்,
    பாட்டி னாலே இன்பங் கொண்டு
    பசிமறக்கும் அன்பு நட்பு,
    கூட்ட மாகச் சேர்ந்து வாழ்தல்
    கொற்றவனை வெல்லு மென்பேன் !
    வாட்ட மேதும் கொள்ள வேண்டாம்
    வருவதெல்லாம் இறைவன் சொத்து !
    (03.04.2016)

    Share
  • “கர்வம்”

     
    மீ.விசுவநாதன்
    பிறக்கும் முன்னே கருவிலே – நல்ல
    பிடிப்புடன் வளர்ந்தான் கர்வியாக !
    துறக்கும் உள்ள உருவிலே – ஒரு
    துளியென இருப்பான் மர்மமாக !

    ஆன மட்டும் பார்கிறேன் – என்
    ஆணவம் அடங்க மறுக்கிறது !
    போன திசைகள் யாவிலும் – தனை
    புத்தனைப் போல நினைக்கிறது !

    தாடி வைத்துக் கொள்கிறேன் – பெரும்
    தவசியே நான்தான் என்கிறது !
    மூடி யில்லா நெஞ்சிலே – கர்வ
    மூர்க்கனின் ஆட்சி நடக்கிறது !

    காற்றைக் காட்டி விற்கிற – பொய்
    கலைதனைச் செய்தே ஏய்க்கிறது !
    சோற்றுக் காக வேடமே – தினம்
    துணிவுடன் போட்டுச் சிரிக்கிறது !

    எழுத்தை எண்ணிப் படிக்கிற – தன்
    இருப்பினை மறந்து துள்கிறது !
    பழுத்த பழமாம் ஞானியை – தன்
    பணத்தினைக் கொண்டே அளக்கிறது !

    கூச்ச மின்றித் தன்னையே – வந்து
    கும்பிடச் சொல்லி அழைக்கிறது !
    மூச்சு நிற்கும் போதிலே – அந்த
    மூலனை மறந்தே அழுகிறது !

    (30-03-2016)

    Share
  • அழகிய முரண்!

    -மீ.விசுவநாதன்

    இன்னுமின்னும் கேட்கின்றேன் இன்பமே – வந்த
    எளிமையான இன்பத்தில் தவிக்கின்றேன்!
    மின்னுகின்ற தகரத்தின் தன்மையை – ஒரு
    வெள்ளிமீன் தகடென்றே எடுக்கின்றேன்!
    தொன்னையிலே நெய்மணக்க ருசித்திட – நாவு
    தொந்தரவின் சூழ்ச்சியென நகைக்கின்றேன்!
    அன்னையிடம் பால்குடித்த அற்புதம் – பின்
    ஆளான  போதவளைப் பகைக்கின்றேன்!
    மெல்லமெல்ல வான்நிலவைப் பிடித்திட – என்
    பிஞ்சுக்கை விரல்களையே அனுப்புகின்றேன்!
    மெல்லவந்த வார்த்தைகளோ மறந்திட – என்|
    சொந்தங்கள் சிரித்திடவே வாழுகின்றேன்!
    கல்லெடுத்துச் சிற்பமொன்று செய்திட – நான்
    கற்கையிலே கற்பனைத்தேர் ஏறுகின்றேன்!
    சொல்லெடுத்துக் கவிபொழியும் போதிலே – செடி
    பூமலர நறுமணத்தில் புதை(யு)கின்றேன்!

     

     

     

    Share
  •  நாக்கு!

    -மீ.விசுவநாதன்

    நாக்கில் நரம்பை வைக்கவில்லை – அது
    நல்லதோ தீதோ தெரியவில்லை!
    தாக்கும் நோக்கில் பேசுகிறேன் – அதில்
    தாயது பிறப்பை விளாசுகிறேன்!

    காதல் உறவைக் கொச்சையாக்கி – ஒரு
    கணமதில் தீச்சொல் வீசுகிறேன்!
    ஈதல் அறத்தைப் பிச்சையென – கை
    நீட்டுற அவனைத் துரத்துகிறேன்!

    வேதம் சொல்லும் நாவினையே – வேறு
    விதமெனச் சொல்ல வைக்கின்றேன்!
    பேதம் நாவில் இல்லையடா – புத்தி
    பிறழ்கிற அவல வேளையடா!

    பாலும் விடமும் எதுவென்றே – சரி
    பார்க்கிற நாவை அடக்குகிறேன்!
    தோலும் சதையும் எரியுமுன்னே -நல்ல
    தோழனைப் போலப் பழக்குகிறேன்!

     

     

    Share
  • பொம்மைக்காரன்

    -மீ.விசுவநாதன்

    களிமண் சேர்த்துச் செய்கின்றான் – எழில்
    காளியைக் கண்முன் தருகின்றான்!
    துளிவிண் தீயைக் கக்குதல்போல் – விழி  clayidol
    துலங்கிட பொம்மை படைக்கின்றான்!

    வண்ணம் பலவாய்க் குழைத்தாலும் – கலை
    வடிவினை அருளால் இழைக்கின்றான்!
    பண்ணும் தொழிலை இறைக்காக – இவன்
    பசிதனை மறந்தே உழைக்கின்றான்!

    மண்ணை நம்பி இருக்கின்றான்  – கை
    மகத்துவத் தாலே சிறக்கின்றான்!
    எண்ணம் போல வாழ்கின்றான்  – இவன்
    எதையுமே கலையாய் ரசிக்கின்றான்!

    சிலையைச் செய்து கடவுளிடம் – நம்
    சிந்தனை ஒன்ற வைக்கின்றான்!
    அலையைப் போன்ற ஆசைகளை – அதில்
    அழித்திட  அவன்தான் உதவுகிறான்!

     

     

    Share
  • ஓர் வேண்டுதல்

    -மீ.விசுவநாதன்

    ஓர்வில்வம் நானெடுத்து உந்தன் தாளில்
    –உரிமையுடன் வைத்தபின் னொன்று கேட்டேன்!
    ”பேர்செல்வம் ஞானமுடன் ஊரில் உள்ள
    –ஏழைகளுக் குதவுகிற உள்ளம் தன்னில்
    நேர்மையுடன் கருணையையும் வைப்பாய்” என்று!
    –நிமிர்ந்தவுடன் புன்சிரிப்பால் நீயும் என்னை
    ஆர்வமுடன் பார்த்துவிட்டு ,”எல்லாம் முன்பே
    –அளித்துள்ளேன் “புத்தி”யாலே தேடு என்றாய்”!

     

    Share
  • வாக்குமூலம்

    -மீ.விசுவநாதன்

    ஓடியோடிப் போகின்றேன் – உயிர்
    ஓட்டப் பந்தய வீதியிலே!
    ஆடியாடிக் களிக்கின்றேன் – அதில்
    ஆசை பொங்கிட வேர்க்கின்றேன்!

    வாசலிலே கோலத்தில் – கலை
    வாசம் செய்வதை ரசிக்கின்றேன்!
    நேசமிகு சேய்களுடன் – தினம்
    நெகிழ்ந்து கரைவதை உணர்கின்றேன்!

    கற்றகல்வி கர்வமெலாம் – சல்லிக்
    காசுக் கீடிலை அறிகின்றேன்!
    உற்றதுணை சுற்றமுடன் – மனம்
    ஒத்து வாழ்ந்திட நினைக்கின்றேன்!

    ஆடுமாடு பறவையுடன் – என்
    ஆத்ம ஈர்ப்பிலே பழகுகிறேன்!
    கூடுவிட்டுக் கூடுபாய்ந்து – கவி
    கொஞ்சிக் கூத்திட உருகுகிறேன்!

    நல்லிசையைக் கேட்டபடி – செவி
    நரம்பு ஆழ்ந்திட விரும்புகிறேன்!
    மல்லிகைப்பூ வாசமென – நான்
    மற்றவர் மகிழ்ந்திட அரும்புகிறேன்!

     

     

    Share
  • சிவபிரதோஷம்

    “சாமவேத சிவன்”
    (மீ.விசுவநாதன்)
    காமத்தின் வேகத்தில் கண்கேட்டுப் போனவனின்
    சாமவேத நல்லிசையில் சந்தோஷ மானவனே
    பாதியைத் தந்து பலர்போற்றும் பெண்மைக்குப்
    போதிய சக்தியான பொன்.
    (பிரதோஷ தினம் : 20.03.2016)

    Share
  • இதுதான் வாழ்க்கை!

    -மீ.விசுவநாதன்

    பொதிய மலைக்குப் போறேன் – என்
    புருசங் கூட நானும்!
    அதிக ஆசை இல்ல – சேந்து
    அருவி குளிச்சி வாறேன்!

    மஞ்சப் பூசி நானும் – அந்த
    மதகு நீரில் நிப்பேன்!
    பிஞ்சு விரலப் பிடிச்சு – அவர்
    பேசச் சிலையா நிப்பேன்!

    கடல முட்டாய் வாயில் – வச்சுக்
    கடிச்சுக் கடிச்சுத் தருவேன்!
    சொடல மாடன் முன்னே – அவர்
    சொகத்த வேண்டிக் கிடுவேன்!

    ஆத்துத் தண்ணி போல – தேன்
    அன்பு சொட்டும் புருசன்!
    தோத்துப் போக மாட்டேன் – அவர்
    தோளக் கட்டி நடப்பேன்!

    ஒண்ணு ரெண்டு புள்ள – அவர்
    கொணத்தப் போல பெறுவேன்!
    மண்ணு வெளங்க ரெண்டும் – நல்ல
    மனுச னாக்கி விடுவேன்!

     

     

    Share
  • பறவையின் பயணம்

    -மீ.விசுவநாதன்

    நீண்ட தூரப் பயணமதில்
          நின்று போகப் பொழுதிலை!
    கூண்டில் சிக்கித் தவித்திடாத
          குஷிக்கு ஈடு இணையிலை!   flyingbirds
    குடும்ப மாக உறவுடனே
          கொண்ட உணவில் குறையிலை!
    கொடும்ப கைமை எதுவுமின்றிக்
          குறித்த வாழ்வில் பழுதிலை! 

    விரிந்த வான வெளிப்பரப்பில்
          விதவித வண்ணப் பறவைகள்
    தெரிந்த திசையில் கவனமுடன்
          தினந்தினம் செல்லும் அழகிலே
    மறந்து நிற்பேன் எனையிழந்து
          மனிதன் அதுபோல் பழகினால்
    சிறந்து வாழ முடியுமென
          சிந்தித் திருப்பேன் தனியிலே! 

     

    Share
  • பம்பரம்

    -மீ.விசுவநாதன்

    பம்பரம் விட்டேன் தெருவினிலே – சிறு
    பாப்பா வான நிலையினிலே!
    அம்பலத் தெய்வச் சிலையதுபோல் – அது
    அங்கே நின்று சுழன்றதுவே!

    என்பலம் மொத்தம் கயிற்றினிலே – வைத்து
    இழுத்து விட்டேன் சுற்றிடவே!
    தன்பலம் மட்டும் ஆடியபின் – அது
    தரையில் மெல்லப் படுத்ததுவே!

    ஆடிய நேரம் அனைவருக்கும் – மன
    அமைதி தந்து இருந்ததுவே!
    தேடிய இன்பம் அடைந்தவுடன் – தான்
    தெளிந்தே ஆட்டம் நிறுத்தியதே!

    மானிட னெனக்கு அதன்நுட்பம் – ஒரு
    மௌன நிலையில் புரிந்ததுவே!
    ஊனிட முள்ள உறவெல்லம் – உள்
    உயிர்தான் மறைய விலகிடுமே!

     

     

    Share
  • அவன், அது, ஆத்மா (47)

    “நண்பர் வெ.கி. திருமாறன்”

    அவன் வசந்தாமேன்ஷன் அறையில் இருந்த பொழுது அவனுக்கு சில நெருக்கமான அரசியல் தலைவர்ளின் பழக்கம் இருந்தது. அதில் ஒருவர் வெ.கி. திருமாறன். அவர் காமராஜரின் தொண்டர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பழ. நெடுமாறன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். வெ.கி. திருமாறன் அவர்களுக்கு தாயார் வழியில் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம். மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் ஊரைச் சேர்ந்தவன் என்று பெருமிதமாகக் கூறுவார். பாரதியாரின் கவிதைகளின் நல்ல ஈடுபாடு கொண்டவர்.

    திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பேருந்து நிலையம் பக்கத்தில் வெ.கி. திருமாறன் அவர்களின் வீடு இருந்ததால் அவனுக்கு அவரை அடிகடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனது வசந்தமேன்ஷன் அறைக்கும் அவர் வருவது உண்டு. அப்படி அவர் ஒரு முறை வந்த பொழுது, ” விஸ்வநாதா…நீ ஆதிசங்கரரின் வாழ்க்கையை வெண்பாவில் எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை…செய்வாயா என்றார்”..அவன் முயற்சி செய்கிறேன் என்றான். ஆனால் அவன் அப்பொழுது அதைச் செய்ய வில்லை. அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது “மே” மாதம் 2006ல்தான். அதுவும் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கையை அவன் அறுசீர் விருத்தத்தில்தான் எழுதி இருந்தான். வெண்பாவில் எழுத வில்லையே என்ற ஏக்கம் அவனுக்கும் இருந்தது. அந்த ஏக்கத்தை அவன் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் வாழ்க்கையை வெண்பாவில் எழுதி அது “அம்மன் தரிசனம்” மாத இதழில் ஜூலை மாதம் 2010 முதல் டிசம்பர் 2011வரைத் தொடராக வெளிவந்ததில் மகிழ்ச்சி கொண்டான். குருவின் வாழ்க்கையை வெண்பாவில் எழுத வேண்டும் என்ற ஆசைக்குத் தூண்டுகோல் நண்பர் வெ.கி. திருமாறன் அவர்கள்தான்.

    1977ம் வருடம்தில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி மதுரைக்கு வந்த பொழுது அவருக்கு தி.மு.க. வினர் கறுப்புக் கொடி காட்டியதில் வன்முறை நடந்து, அதில் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் தாக்கப் பட்டு, மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார். சென்னையில் மெரீனா கடற்கரையில் ஒரு பிரும்மாண்டப் பொதுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அவன் செல்ல விரும்பினான். தன் விருப்பத்தை அவன் திருமாறன் அவர்களிடம் சொன்னபொழுது, அவனை அழைத்துக் கொண்டு சென்று கூட்டத்தில் முக்கியமானவர்கள் அமரும் வரிசையில் அமர வைத்தார். பாரதப் பிரதமரின் பேச்சை அவன் மிக அருகில் இருந்து கேட்டான். அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவனை மயிலாப்பூரில் சோலையப்பன் தெருவில் இருந்த காங்கிரஸ் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, “இவர் என் நண்பர், கவிஞர் விஸ்வநாதன்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அவன் தான் ஒரு காமராஜர் விஸ்வாசி என்று சொன்னபொழுது பழ. நெடுமாறன் அவர்கள் அவனை கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    ஒருநாள் மாலையில் அவனுடைய அறைக்கு வெ.கி. திருமாறன் வந்திருந்த பொழுது அவனுக்கு நண்பன் சுரேஷ்ம் இருந்தான். அவர் அவனை நடிகரும், இலக்கியவாதியுமான ஸ்ரீகாந்த் அவர்களின் கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். ஸ்ரீகாந்த் அவர்கள் திரைபடத் துறையில் உச்சத்தில் இருந்த நேரம். த. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், தங்கப்பதக்கம் போன்ற வெற்றிப் படங்கள் அவரது நடிப்பைப் பாராட்டிக் கொண்டிருந்த காலம். திருமாறனும், ஸ்ரீகாந்த் அவர்களும் நல்ல நண்பர்கள். இருவரும் காமராஜரின் பக்தர்கள். ஸ்ரீகாந்த் அவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்த பொழுது அப்பொழுதான் வெளிவந்திருந்த த. ஜெயகாந்தன் அவர்களின் “மகாயக்யம்” நாவலின் ஒரு பிரதியை அவனுக்குப் படிக்கக் கொடுத்தார். மேலும் இரண்டு ஆங்கில நாவல்களையும் படிக்கக் கொடுத்து விட்டு, ” நீங்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வாருங்கள்” என்றார். அதன் பிறகு அவன் திருமாறன் அவர்களுடனும், தனியாகவும் பலமுறை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறான். எப்பொழுது போனாலும் அன்போடு உபசரித்துப் பேசுவார். இது போன்ற நல்ல தொடர்புகளைத் தந்த நண்பர் வெ.கி. திருமாறன் அவர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைத்தது வருத்தமாகத்தான் இருக்கிறது.

    “நண்பர் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்”

    அவனுக்கு கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களின் தொடர்பு அவனுக்கு தாய்மாமா மூலம் கிடைத்தது. அவனுக்கு மாமாவும், ஏர்வாடி இராதாகிருஷ்ணனும் சென்னை பாரிமுனையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தனர். ஒருநாள் அவனுக்கு மாமா அவனை கவிஞர் ஏர்வாடி அவர்களிடம் அறிமுகப் படுத்தி வைத்தார். அப்பொழுது ஏர்வாடி இராதாகிருஷ்ணன் சென்னையில் மேடை நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். சென்னை தொலைகாட்சியிலும், வானொலியிலும் அவரது படைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஒருநாள் கவிஞர் ஏர்வாடி அவர்கள் அவனை சென்னை வானொலி நிலையத்திற்கு வரச்சொன்னார். அவன் அங்கு சென்ற பொழுது, அங்கு நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்த “லீலா” அவர்களிடம், ” இந்தத் தம்பி நல்ல கவிதைகள் எழுதுகிறார்…இவரைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் சென்னை வானொலியில் நிறைய கவிதைகளும், சிறுகதைகளும் அவன் வாசித்திருக்கிறான்.

    1977ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒருநாள் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் கோவேந்தன் அவர்களையும் அழைத்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் அவன் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்தார். அவனிடம், “விசு…நாங்க கவிதை உறவு என்ற அமைப்பைத் துவங்கியிருக்கிறோம். அதன் செயலாளராக நான் இருக்கிறேன். தலைவராக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் இருக்கிறார். நீங்கள் பொருளாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. மாதம் ஒரு கூட்டம் அண்ணாசாலையில் இருக்கும் மத்திய நூலகத்தில் நடக்கும். அதற்குக் கட்டணமாக பத்துரூபாய் கட்டவேண்டும். தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளை நாம் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்” என்று சொல்லி ஊக்கப் படுத்தினார். தொடர்ந்து மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் அருமையாக நடந்து வந்தது.

    1978ம் வருடம் ஜனவரி மாதம் சந்திக்கும் பொழுது, ” விசு…நாம் இன்னும் சில கவிஞர்களுடன் சேர்ந்து மார்ச் மாதத்தில் “வண்ணங்கள்” என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் வெளியிட வேண்டும். கவிஞர் வேதம், கவிஞர் மதிவண்ணன், ரிசர்வ் வங்கியில் வேலை செய்து வந்த கவிஞர் பகத்சிங், கவிஞர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு பத்து பேர்களது கவிதைகளைத் தொகுத்து வெளியிட திட்டமிருக்கிறது. நீங்களும் உங்களது படைப்பைத் தாருங்கள்” என்றார். அவரே அனைவருடனும் தொடர்பு கொண்டு கவிதைகளைப் பெற்றுத் தொகுத்து, முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களிடம் நூலுக்கு ஒரு வாழ்த்துரையும், பாரதிகலைக் கழகத்தின் தலைவர் , பாரதி இரா. சுராஜ் அவர்களிடம் மதிப்புரையும் வாங்கினார்.

    ae5eac49-bf5b-4947-8a48-d4819cb1b750

    புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்திக்க மயிலாப்பூரில் இருந்த அவரது இல்லத்திற்கு கவிஞர் கோவேந்தனுடன் அவனையும் அழைத்துப்போய் அவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார். “…மீசை வைத்ததனால் இவர் மீ.விசுவநாதன் ஆனாரோ” என்று அவனை கவிஞர் கு.மா.பா. தட்டிக் கொடுத்தார். கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர்களை அறிமுகப் படுத்தும் பொழுதும் அவனை இப்படித்தான் சொல்லி கவிஞர் கு.மா.பா. அறிமுகம் செய்தார். விழாவில் கவிதை நூலை வெளியிட்டு அப்பொழுது அறநிலைத் துறையின் அமைச்சராக இருந்த திரு. R. M . வீரப்பன் அவர்களும், வாழ்த்துரையாக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், பாரதி இரா.சுராஜ் போன்ற பெரியோர்களும் பேசினார்கள்.

    கவிதை உறவு என்ற அமைப்பை இன்றுவரைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் “கவிதை உறவு” என்ற இலக்கிய மாத இதழையும் கவிஞர் ஏர்வாடி இராதகிருஷ்ணன் நடத்தி வருகிறார். அதில் அவர் எழுதிவருகிற “என் பக்கம்” பகுதியில் நல்ல சிந்தனைகளைப் பதிவு செய்து வருகிறார்.

    கவிஞர் ஏர்வாடி அவர்களை மாத்திரம் இன்றி அவரது குடும்பத்தினர்களுடனும் அவனுக்குத் தொடர்பு இருந்து வருகிறது. அவருக்கு சங்கர் என்ற மகனும், சுதா என்ற மகளும் உண்டு. அவரது மகள் சுதா பெயரில்தான் “சுதா பதிப்பகம்” என்ற பதிப்பகத்தைத் துவங்கினார். சுதா பதிப்பகம் மூலமாகத்தான் “வண்ணங்கள்” கவிதைத் தொகுப்பும் வெளியானது.

    கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவனுக்கு என்றும் ஒரு நல்ல நண்பர்.

    11.03.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • தேரோட்டம்

    -மீ.விசுவநாதன்

    ஊர்கூடி வந்து ஒன்றாகச் சேர்ந்து
    தேரிழுக்கும் போது தெரியாது சாதி    temple chariot
    மதமென்னும் பாப மதவெறியும் அங்கே
    முதலான தெய்வம் முகமூடி இன்றி
    அருள்கொண்டு கொட்ட அள்ளிடுவர் பக்தர்!
    இருள்நீங்கி உள்ளே ஏகாந்த வெளியில்
    சுகமாக இருந்து சூழ்நிலையை மறப்பர்!
    இகவாழ்வில் கிட்டும் இந்தவோர் இன்பம்
    தேரோட்ட நாளில் தெருவிலே மக்கள்
    சீரோடு என்வீட்டு திருவாசல் முன்னம்
    சிலநொடிகள் நின்று சென்றிடும் நேரம்
    பலஜென்ம பாபம் பறந்தோடிப் போகும்!
    நகரத்தில் கிராமத்தில் நடக்கின்ற
    சிகரமாம் திருவிழா தேரோட்டந் தானே!

     

     

    Share
  • கிருஷ்ணப் பருந்து!

    -மீ.விசுவநாதன்

    அங்கே பருந்தொன்று பறக்கிறது – அது
    அகண்ட வானத்தை அளக்கிறது!
    சங்கத் தமிழ்போலச் சிறகடித்து – அது  black-eagle
    சத்தம் போடாமல் விரைகிறது !

    சிறகை மடல்போல விரித்தபடி- அந்திச்
    சிவப்பை அணைக்கத்தான் முயல்கிறது!
    பறவை இனத்திற்குப் பெருமைதர -விஷ்ணு
    பாத மிரண்டைத்தோள் சுமக்கிறது!

    சொந்த இரையெடுக்க நினைத்தாலோ – ஒரு
    சுற்றில் சடாரென்று இறங்கிவரும்!
    பந்தைக் குழந்தைகள் எடுப்பதுபோல் – நன்கு
    பற்றி மேலேறிப் பறந்துவிடும்!

    அந்தி நேரத்தில் நதிக்கரையில் – அதை
    அறவோர் கும்பிட்டு மகிழ்ந்திடுவர்!
    எந்த உயரத்தில் இருந்தாலும் – தன்
    இறைவன் பெருமாளை நினைத்திருக்கும்! 

     

     

    Share