Author: சு.கோதண்டராமன்

  • அப்பரடிகளின் உவமைகள்

    சு. கோதண்டராமன்.

    Captureஉவமை என்பது அணிகளுக்குள்ளே முதன்மையானது; பிற அணிகளுக்கு அடிப்படையானதும் கூட. உவமை அணியைப் பயன்படுத்தாத புலவர் இல்லை. திருநாவுக்கரசு நாயனாரும் இதனை விரிவாகப் பயன்படுத்துகிறார்.

    இறைவனின் புகழ் உரைக்கும் அதே வேளையில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு பேசுவது அப்பரடிகளின் தனிச்சிறப்பு. அவரைத் தொடர்ந்து மணிவாசகரும், அருணகிரியாரும், பின்னர் ராமலிங்க வள்ளலாரும் இதே பாணியைப் பின்பற்றினர்.

    நாயனாரின் உவமைகளை பொருள் உவமை, நிகழ்வு உவமை என இருவகையாகப் பிரிக்கலாம். முத்து, பவளம், தேன், குன்று போன்ற உயர்ந்த பொருட்களை உவமையாக்குவது பொருள் உவமையாகும். இந்த உவமைகள் பெரும்பாலும் ஒரு சொல் அல்லது இரு சொல்லாக இருக்கும். பொதுவாக, இறைவனை வர்ணிக்கும்போது பொருள் உவமைகளைப் பயன்படுத்துகிறார்.

    வெள்ளிக் குன்றன்ன விடையான்
    கருமணிபோற் கண்டத்தழகன்
    முத்தினைப் பவளத்தை முளைத்த வெம் தொத்தினைச் சுடர் போலொளிப் பித்தனை
    சுடரைப் போலொளிர் சுண்ண வெண்ணீற்றனை
    கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

    ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

    தன் கீழ்மையைக் குறிப்பிடும்போது நிகழ்வு உவமைகளைப் பயன்படுத்துகிறார். சொல் தொடர்களாக உள்ள இவை ஒரு நிகழ்வாகவோ, ஒரு கதையின் சுருங்கிய வடிவமாகவோ அல்லது பழமொழியாகவோ இருக்கக் காண்கிறோம். அத்தகைய உவமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

    ஊருக்குப் புதியவன் ஒருவன் ஒரு குளத்துக்கு வருகிறான். அக்குளத்தின் ஆழம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். குளத்துக்கு ஒரு காவல்காரர் உண்டு. ஆனால் அவர் தன் கடமையைப் புறக்கணித்து எங்கோ போய்விட்டார். அந்நிலையில் குளக்கரையில் நின்று கொண்டிருந்த சிலரை அவன் வினவுகிறான். அவர்களோ வம்பர்கள். ‘குளத்தின் ஆழத்தை நீயே தெரிந்து கொள்’ என்று சொல்லி அவனைக் குளத்துக்குள் தள்ளிவிட்டார்கள். ஆழம் நிலை கொள்ளவில்லை. எந்தத் துறைப் பக்கம் சென்றால் கரையேற முடியும் என்பதை அறியாமல் அவன் தவிக்கிறான்.

    இந்த நிலையில் தான் இருப்பதாக அப்பர் தெரிவிக்கிறார். உய்யும் வழியை முறையாக அறிவிப்பாரின் நட்பு எனக்கு முன்னதாகக் கிடைக்கவில்லை. வீணர்களின் வார்த்தையைக் கேட்டு சமணம் என்னும் ஆழம் தெரியாத குளத்தில் விழுந்து தடுமாறி, சூலை நோயால் துன்புற்று நிற்கின்றேன். சிவபெருமானின் பெருமையை அறிந்தோரின் வார்த்தைகளை முன்னமே நான் கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே என்று வருந்துகிறார்.

    காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொளென்று சொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைகொள்ளும் வழித்துறை ஒன்றறியேன்
    வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் 4.1.5

    காம வயப்பட்டு இறைவனை மறந்து திரிவர் பலர். ஏதோ நல்வினைப் பயனால் அவர்களுக்கு இறையருள் நெறிக்குத் திரும்பும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஆனால் அவர்கள் மனமோ பழைய பொய்ந் நெறியிலேயே செல்ல விழைகிறது. உழுத வயலையே மறுபடியும் யாராவது உழுவார்களா? இந்தப் பேதை நெஞ்சம் மட்டும் ஏன் இப்படிப் பழைய பாதையிலேயே நாட்டம் கொள்கிறது என்று கேட்கிறார் அப்பர் பெருமான்.

    எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
    தொழுது போற்றி நின்றேனையுஞ் சூழ்ந்துகொண்டு
    உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
    இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே. 5.90.8

    நரி ஒன்று வாயில் கவ்விய நல்ல ஊனுடன் நீர் நிலையைக் கடந்து செல்லும் போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டு அதனை அடைய விரும்பி தன் வாயில் இருந்ததையும இழந்த கதை போல மக்கள் கிட்டாத பொருட் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிட்டியதாகிய சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். அத்தகையோருக்கும் சிவபெருமான் அருள் புரிவார்.

    நரிவரால் கவ்வச் சென்று
    நற்றசை இழந்தது ஒத்த
    தெரிவரால் மால்கொள் சிந்தை
    தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 4-27-5

    ஒரு நல்ல இல்லத்தரசி என்றால் நண்பகலில் பசிக்கும் என்பதை உணர்ந்து முற்பகலில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வாள். பேதையாக இருந்தால் முற்பகலை வீணே கழித்துவிட்டு, பசி வந்த பின் உணவு தயாரிக்க முற்படுவாள். அது போலப் பேதையாகிய நான் வாழ்வின் முற்பகுதியை வீணே கழித்து விட்டு, முதுமையில் உடல் நலிவுற்றபின் இறை வழியைத் தேடுகின்றேன் என்று தன்னை இகழ்ந்து கொள்கிறார் வாகீசப் பெருமான்.

    பின்பகல் உணங்கல் அட்டும்
    பேதைமார் போன்றேன் 4.28.1

    நீர்க் கரையில் நிற்கும் கொக்கு தனக்குத் தேவையான உணவைத் தேடிப் பெறுகிறது. மரத்தின் மீது அமர்ந்துள்ள கொக்கோ வயிற்றை நிரப்ப முயற்சி செய்யாமல் பசியால் வாடி வாய் விட்டு அலறுகிறது. அது போல மக்கள் துன்பத்தில் உழன்று அலறுகிறார்களே அன்றி உய்யும் வழியைக் கடைப்பிடிக்காமல் தீய குணங்கள் ஆகிய சரக்கைச் சுமந்து திரிகிறார்கள் என்கிறார் அடிகள்.

    மரக்கொக் காமென வாய்விட்டலறி
    சரக்குக் காவித் திரிந்து 5-75-1

    முன்னாள் சமணராகிய அவர் நகைப்புக்குரிய தன் பழைய நிலையை விவரித்து விட்டு, அதிலிருந்து தான் தப்பியதையும் கூறுகிறார்.

    சமணத் துறவிகள் பிச்சை உணவைக் கையில் ஏந்தி உண்பர். கைகளிலிருந்து நெய் கீழே சொட்டும்போது, அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாமல், கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்காகக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்பர். அத்தகைய கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய்யெனக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத் தீங்கினின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்தேன்.

    கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
    கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
    பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
    புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன் 6.11.9

    இறைவனை வழிபடுவதற்குரிய தலங்கள் உள்ளன. அங்கு சென்று உய்யும் நெறியிற் கலவாமல் மக்கள் இன்பத்தை எங்கெங்கோ தேடுகின்றனர். ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தில் தேடும் அறிவிலிகள் உண்டோ என்று வியக்கிறார் நாவுக்கரசர்.

    துன்மதியால்
    ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் தேடிய ஆதரைப்போற்
    காற்றிற் கெடுத்து உலகெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே. 4.97.6

    இறைவா, ஏன் அடியேனை அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்று செய்துவிட்டாய் என்று வினவுகிறார்.

    கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
    வித்தென்னைக் கோகுசெய்தாய் 4-100-2

    பயன் அற்ற பாழ் நிலத்தில், நல்ல நீரை வீணாகப் பாய்ச்சியது போன்ற தன் மடமையை வெளிப்படுத்துகிறார்.

    பாழுக்கே நீரிறைத்து
    வழியிடை வாழ மாட்டேன் 4-31-6)

    ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போலவும் தான் இருந்ததாக அப்பர் பெருமான் கூறுகிறார்.

    கழியிடைத் தோணி போன்றேன் 4.31.6

    செஞ்சுடர் விளக்கத்தில் (சூரிய உதயத்தில்) கூவுங் கோழியை விலக்குவார் உளரோ? கோழி தானே கூவித் தானே அடங்கும். அவ்வாறே தாம் தகாதன செய்யும் காலத்தில், விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே ஓய்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

    விலக்குவார் இலாமையாலே
    விளக்கத்திற் கோழி போன்றேன் 4.31.5

    துன்பத்தை அனுபவித்தால் தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாகத் தான் இருந்ததையும் குறிப்பிடுகிறார்.

    உற்றலாற் கயவர் தேறார்
    என்னும் கட்டுரையோடு ஒத்தேன் 4.31.8

    அப்பரடிகளின் தேவாரத்தில் பழமொழிப் பதிகம் என்றே ஒன்று உண்டு. பரம்பரைச் சைவராகிய அவர் சமண சமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்தது, பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கியது, சமணர்கள் செய்த செயல்களில் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றது, பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தது ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை உவமையாகக் காட்டுகிறார். அந்தப் பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.

    சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பினேன்.

    கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே. 4.5.1

    கைப்பற்றுதற்கு எளிதாகவும், உண்பார்க்குச் சுவையை உடையதுமான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய், கைக்கொண்டாலும் உண்ணத் தகுதியற்றதாய் உள்ள காக்கையின் பின் சென்ற அறிவிலியைப் போன்றவன் நான்.

    முயல்விட்டுக்
    காக்கைப் பின் போனவாறே. 4.5.2

    அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவன்.

    அறமிருக்க
    மறம் விலைக்குக் கொண்டவாறே. 4.5.3

    திரவ வடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போன்றவன்.

    பனிநீராற்
    பாவை செயப் பாவித்தேனே. 4.5.4

    ஒருவன் ஏற்படுத்திய சண்டையில் அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவது போலத் துன்புற்றேன்.

    ஏதன் போர்க்கு
    ஆதனாய் அகப்பட்டேனே. 4.5.5

    இருட்டறையில் மலட்டுப் பசுவைப் பால் வேண்டிக் கறக்க முனைந்து உதைபடும் அறிவிலி நான்.

    இருட்டறையின்
    மலடு கறந்து எய்த்தவாறே. 4.5.6

    விளக்கு இருக்கும்போது, மின்மினியினுடைய தீயைக் குளிர் காயக் கொள்வாரைப் போன்றவன்.

    விளக்கிருக்க
    மின்மினித்தீக் காய்ந்தவாறே. 4.5.7

    மக்கள் குடியில்லாத ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்த அறிவில் வறிஞன்.

    பாழூரிற்
    பயிக்கம் புக்கு எய்த்தவாறே. 4.5.8

    செய்தற்குரிய செயலாகத் தவம் இருக்கும்போது, அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டேன்.

    தவமிருக்க
    அவஞ்செய்து தருக்கினேனே. 4.5.9

    மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்தேன்.

    கரும்பிருக்க
    இரும்பு கடித்தெய்த்தவாறே. 4.5.10

    அப்பரடிகள் மக்களின் பொதுவான இயல்பினைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக இறைவனை வேண்டுகிறார். அவர் தம்மிடம் இருப்பதாகக் கூறும் தீக்குணங்கள் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளன. இந்த உவமைகளைக் கொண்டு அதை அழுத்தம் திருத்தமாக நம் உள்ளத்தில் பதிய வைப்பதன் மூலம் நம் குறைகளை நாம் உணர வைத்து முன்னேற வழி காட்டுகிறார் அவர்.

    படம் உதவி: http://www.artic.edu/aic/collections/artwork/34501

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 54

    சு. கோதண்டராமன்.

     

    என்னதான் இருக்கிறது வேதத்தில்

    இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி இது. கடந்த ஓராண்டு காலமாக இதைப் படித்து வந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், குறிப்பாக, இதைப் பெரிய வாசகர் வட்டத்துக்கு வாரம் தோறும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை விரும்பி மேற்கொண்டு நிறைவேற்றிய திருமதி தேமொழிக்கும் என் நன்றிகள்.

    இந்நூல் புத்தக வடிவில் வெளிவருகிறது. கிழக்கு பதிப்பகத்தார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கிழக்கு பதிப்பகம் வெளியிடும் என் நூலின் பெயர்:

    “வேதம் – சந்தேகங்களும் விளக்கங்களும்”

    மே இரண்டாவது வாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். விலை ரூ. 175. பிரதி வேண்டுவோர் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

                       போன்- 9445 97 97 97, 94459 01234

    *************************************************************************************

    சந்தேகம் தீர்ந்தது

    [ நிறைவுப் பகுதி ]

    முன்னுரையில் பாமரனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் பார்த்தோம். அவற்றிற்கு அவன் பெற்ற விடைகளை இங்கு பார்ப்போம்.

    கடவுளுக்கு உருவம் உண்டா?

    வேதத்தில் உருவச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி சொல்வது போல தெய்வத்தை நேரே கண்டு தொழும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. அந்தத் தெய்வங்கள் ரிஷிகளின் கண்ணுக்குப் புலனாயினர். தேவர்கள் ஒளிமயமாக இருந்தார்கள். அவர்கள் தங்க ரதத்தில் ஏறி வந்தார்கள். அவர்களுக்கு கை கால்கள் இருந்தன. தாடி மீசைகள் கூட இருந்தது சொல்லப்படுகிறது. தெய்வத்தை நம் மனக்கண் முன் நிறுத்தும் முயற்சியாக உருவச் சிலைகளைப் பயன்படுத்தல் வேத சம்மதமானதே. இந்தத் தேவர்களுக்கெல்லாம் அப்பால் உள்ள பரம்பொருளோ உருவமற்று, குணமற்று, பெயரற்று ஸத் (இருக்கிறது) என்னும் சொல்லால் மட்டுமே குறிப்பிடப்படுவதையும் காண்கிறோம். எனவே உருவமற்ற பரம்பொருளை மனதால் தியானிப்பதும் வேத சம்மதமானதே.

    முத்தி என்பது எது?

    தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு வித புருஷார்த்தங்கள் ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவதும் அங்கு இல்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். இயற்கை அழகை ரசித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் சமூகத்திலும் ஏழைகள் இருந்தார்கள், தீமை செய்பவர்கள் இருந்தார்கள், தர்ம சிந்தனை இல்லாமல் கறாரான வணிகத் தனத்துடன் நடந்து கொண்டவர்களும் இருந்தார்கள். குடும்பத்தைக் கவனிக்காத சூதாடிகள் இருந்தார்கள். குற்றவாளிகள் இருந்தார்கள், பகைவர்கள் இருந்தார்கள், போர்கள் நடந்தன. இதனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    வாழ்க்கையின் லட்சியமாக அவர்கள் கருதியது அமரத்வம் அடைவதைத்தான். அமரத்வம் என்பது உடல் சாகாமல் வாழ்வது அல்ல. உடலுக்கு நூறாண்டு வேண்டிய அவர்கள் தன் குழந்தை, பேரக்குழந்தைகள் மூலம் வம்சம் விருத்தி அடைவதை அமரத்துவமாகக் கருதினர். சோமத்தை அருந்தி காலம் கடந்த நிலையில் திளைப்பதை தற்காலிக அமரத்துவ அனுபவமாகக் கருதினர். அருஞ் செயல்கள் செய்து அதனால் வரும் புகழ் மூலம் என்றென்றும் வருங்கால சந்ததியினர் மனதில் இடம் பிடிக்கும் அமரத்துவமே அவர்களது வாழ்வின் மிகப் பெரும் குறிக்கோள். இயற்கை நியதிப்படி வாழ்வதும் தேவர்களை வணங்குவதும் உணவு முதலான உலகியல் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல. ஒளி உலகை அடைந்து ஒளிமயமாகச் சூரியன் போல, இந்திரன் போல, அக்னி போலப் புகழுடன் விளங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய பிரார்த்தனை.

    முழு முதல் கடவுள் எது?

    வேதத்தில் பல வகையான தேவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களில் அம்சன் போன்ற சிலர் ரிக் வேத காலத்திலேயே செல்வாக்கு இழந்த நிலையில் காணப்படுகின்றனர். அக்னி தேவர்களுக்குள்ளே மிக இளையவர் என்று போற்றப்படுகிறார். அவர் அக்காலத்தில் புதிதாக ஏற்பட்ட தெய்வமாக இருக்கலாம். தேவ நிலையை அடைவது மனித வாழ்வின் குறிக்கோள் என நிர்ணயித்துள்ள வேதம் காலம் தோறும் புதுப் புது தெய்வங்கள் தோன்றுவதற்கும் இடம் அளிக்கிறது. அவரவர் விருப்பமான தெய்வத்தை வழிபடலாம். இந்தப் பெயர்கள் உருவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரம்பொருள் உள்ளது என்பதையும் வேதம் எல்லா இடங்களிலும் நினைவூட்டுகிறது. என் தெய்வம் சிறந்தது, இதுவே பரம்பொருள் என்று பேசுவது தவறு இல்லை. உன் தெய்வம் மட்டமானது என்று கூறுவது வேதத்திற்கு உகப்பானது அல்ல.

    சிவன் மேலானவரா, விஷ்ணு மேலானவரா?

    இருப்பது ஒன்று. அதைப் பலரும் பல விதமாகப் பேசுகின்றனர். ஒருவர் சிவன் என்று அழைக்கிறார். மற்றவர் விஷ்ணு என்கிறார். எப்படிப் பெயரிட்டாலும் அது அந்த ஒன்றையே குறிக்கும். காடன், மாடன், காட்டேரி என்று அழைத்தாலும் அது பரம்பொருளே. யெஹோவா, அல்லா என்று அழைக்கப்படுவதும் அதே பரம்பொருள் தான்.

    இறப்புக்குப் பின் என்ன?

    இறப்புக்குப் பின் என்ன ஆகிறது என்ற கவலை ஸம்ஹிதை இயற்றிய ரிஷிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அங்கிரஸ், ப்ருகு, மனு போன்ற முன்னோர்களை மனித குலத்தின் மூதாதையர்களாக அவர்கள் பெரிதும் மதித்தார்கள். தாய் தந்தையர், தாத்தா பாட்டி இவர்களுக்கு சிராத்தம் செய்வது அல்லது வேறு ஏதேனும் வகையி்ல் வணங்குவது என்பது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். உறவினர்கள் இறந்தால் வருந்தினார்கள். அக்னியே, எங்கள் சோகத்தை மாற்று என்று வேண்டினார்கள். அருஞ்செயல்கள் செய்து புகழ் பெற்று உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் வீற்றிருக்கும் அமரத்வத்தை லட்சியமாகக் கொண்டார்கள். அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள். பலர் மர்த்யராகவே இறந்தனர். சிலர் நரர் என்ற நிலைக்கும், சிலர் ரிஷி நிலைக்கும் உயர்ந்தனர். சிலர் மகோனர்களாயினர். மிகக் குறைந்த சிலரே சூரிகளாயினர். அதிலும் மிகச் சிலரே தேவ நிலையை அடைய முடியும் என்பதை உணர்ந்திருந்தனர்.

    சிராத்தம் செய்வது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை என்றால் அது வேத விரோதமானதா?

    அல்ல. முன்னோரை வணங்கும் வழக்கத்தை ரிக் வேதம் ஏற்படுத்தி உள்ளது. மனு, அங்கிரஸ் போன்றோர் வணங்கப்படுகின்றனர். இப்படித் தான் வணங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. சிரத்தையின் உயர்வு பற்றிப் பேசுகிறது வேதம். அந்த சிரத்தை ஏற்படவேண்டும் என்பதற்காக, வேத மந்திரங்களைக் கூறி முன்னோர்களை வழிபடுவது வேத சம்மதமானதே.

    கோயில் வழிபாடு வேதத்தில் சொல்லப்படவில்லையே, அது வேத சம்மதமானதா?

    பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதையும் அதை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம் என்பதையும் வேதம் ஏற்றுக் கொள்கிறது. வேத காலப் பிரதான வழிபாட்டு முறை யக்ஞம் என்றாலும் யக்ஞம் மட்டுமே வழிபாட்டு முறை என்று வேதம் முடிவு கட்டி விடவில்லை. யக்ஞம் இல்லாத பிரார்த்தனையும் ஏற்புடையதே என்றும் கூறுகிறது. ஆகவே எந்த வழிபாட்டு முறையும் வேத சம்மதமானதே. நமக்கு மேலான சக்தி ஒன்று உண்டு என்பதை உணர்ந்து செய்யப்படும் எச்செயலும் யக்ஞமாகவே கருதப்படும்.

    வேதம் கற்காமல் பஜனை போன்றவற்றில் ஈடுபடலாமா?

    தவறில்லை. நாம ஜபத்தின் சிறப்பு பற்றி வேதம் புகழ்ந்து கூறுகிறது. இறைவனின் பல பெயர்களைப் பல விதமாக, அர்ச்சனையாகவோ, நாமாவளியாகவோ, பாட்டாகவோ எப்படிப் பேசினாலும் அது வேத சம்மதமானதே.

    தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கலாமா?

    மாமிச உணவு சாப்பிடுபவர்கள் கொடுக்கலாம். வேதத்தில் ஆடு, மாடு, குதிரை பலி கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உள்ளன. புதிய மந்திரம் இயற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் ரிஷிகள், உயிர்க் கொலையையும், யக்ஞங்களையும் நீக்கி பிரார்த்தனை ஒன்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர் என்பதையும் பார்க்கிறோம். புதிய ரிஷிகள் பழைய யக்ஞ முறைகளைக் கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பின்னர் யஜுர் வேத காலத்தில் மிருக பலியுடன் கூடிய யாகங்கள் பெருகியதையும் பார்க்கிறோம். புத்த சமண மதங்களின் பிரசாரத்தால் இந்து சமயத்தில் பலி இடுதல் குறைந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது. இது காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. அதனால் அவரவர் வழக்கப்படி செய்து கொள்வதை வேதம் தடுக்கவில்லை.

    மாமிச உணவு சாப்பிடலாமா?

    வேத ரிஷிகள் காலத்தில் மாமிச உணவைச் சாப்பிடுவது தவறாகக் கருதப்படவில்லை. எனவே இன்று மாமிசம் உண்பவர்களை நாம் வேத விரோதிகளாகக் கருதித் தாழ்வாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் வேதத்திலேயே உயிர்களைக் கொல்லாதீர்கள் என்ற கருத்தும் காணப்படுவதால், வேதம் தொகுக்கப்படுவதற்கு முன்னமேயே மாமிச உணவுக்கு எதிரான கருத்தும் தோன்றி விட்டது என்பதை அறிகிறோம். ஆடை அணியாதிருந்த மனிதன் வளர்ச்சி பெற்று ஆடை அணியத் தொடங்கினான். அது போல, உணவு விஷயத்திலும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மாமிசம் உண்பது மறையத் தொடங்கியது. சிந்தனை வளர்ச்சியில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து அவரவர் தத்தம் உணவுப் பழக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

    அஹம் ப்ரம்மாஸ்மி என்ற உபநிடதக் கருத்து ரிக் வேதத்தில் உள்ளதா?

    உள்ளது. த்ரஸதஸ்யு என்ற ரிஷி பரவச நிலையில் பாடிய ஒரு சூக்தத்தில் நானே வருணன், நானே இந்திரன் என்று பாடுகிறார். 4.42
    8.43.14 இல் ரிஷி தன்னை அக்னியுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
    3.26.7 இல் நானே அக்னி, நெய் எனது கண். அம்ருதம் எனது வாய். நான் வானை அளக்கும் சூரியன். நான் குறையாத வெப்பம். என் பெயர் ஹவிஸ் என்று எல்லாவற்றிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
    4.26.1-3 இல் நான் மனுவாக இருந்திருக்கிறேன். சூரியனாக, கக்ஷிவானாக, ரிஷியாக. நான் பூமியைக் கொடுத்தேன், மழையைக் கொடுத்தேன், ஆறுகளை ஓடச் செய்தேன். தேவர்கள் நான் சொன்னதைக் கேட்கிறார்கள். நான் இந்திரனாக இருந்து சம்பரனின் 99 கோட்டைகளை அழித்தேன் என்று சொல்லும் மந்திரம் அந்த ரிஷி நானே பரம்பொருள் என்னும் நிலையை அடைந்திருந்ததைக் காட்டுகிறது.

    (இது வரை பாமரன் படித்துத் தெரிந்து கொண்டது இவ்வளவு தான். ஆழ்ந்து படிக்கப் படிக்கப் புதிய கருத்துகள் தோன்றுகின்றன. அப்பொழுது இதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் திருத்தம் பெறலாம். வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் பலரை ஈடுபடுத்த இந்நூல் தூண்டும் என்றால் இதன் நோக்கம் நிறைவேறும்.)

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 53

    –சு. கோதண்டராமன்.

     

    வேதப் புதிர்கள் சில

     

    புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வேதம் ஒரு வைரச் சுரங்கம். வேதத்தில் உள்ள நூற்றுக்கணக்கான புதிர்களில் சில மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன:-

    முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா- இது நீண்ட நாள் பிரச்சினை. வேதத்தில் உள்ள இது போன்ற ஒரு புதிர்- தக்ஷன் அதிதியிடமிருந்து பிறந்தான். அதிதி தக்ஷனிடமிருந்து பிறந்தாள். 10.72.4

    ஒரு கால் உள்ளவன் இரு காலனைத் தாண்டிப் போகிறான். இரு காலன் முக்காலனை வெல்கிறான். இரு காலன் கூப்பிட்டால் நான்கு காலன் வருகிறான். ஐங்காலர் நின்று பார்க்கின்றனர். 10.117.8

    சோமன் தோத்திரங்களால் தூண்டப்பட்டு ஏழு நதிகளை மகிழ்விக்கிறார். அவை ஒரு கண்ணை வளர்க்கின்றன. 9.9.4

    தனியாகச் சஞ்சரிக்கும் ஒருவர் ஆறு பாரங்களைச் சுமக்கிறார். பசுக்கள் உயர்ந்த உண்மையை அடைகின்றன. மூன்று உலகங்கள் மேலே உள்ளன. அவற்றில் ஒன்று தெரிகிறது, இரண்டு மறைந்துள்ளன. 3.56.2

    இந்த இனிய தலை நரைத்த புரோகிதருடைய மூன்று சகோதரர்களில் நடுவர் மின்னல். மூன்றாமவர் நெய் முதுகு உடையவர். இங்கு நான் ஏழு புத்திரர்களை உடைய தலைவனைப் பார்க்கிறேன். 1.164.1

    அவர்கள் ஒற்றைச் சக்கரம் உள்ள தேருக்கு ஏழு குதிரைகளை இணைத்தனர். ஏழு பெயருடையதை ஒரு குதிரை சுமந்து செல்கிறது. மூன்று அச்சுகளை உடைய அழியாத சக்கரம் அது. எல்லா உலகங்களும் அதில் நிலைபெற்றுள்ளன. 1.164.2

    மூன்று தாய்மார்களையும் மூன்று தந்தைகளையும் தனியே சுமக்கிறார் அவர். அவர்கள் அவரைத் துன்புறுத்துவதில்லை. வானின் உச்சியில் அவர்கள் பேசுகிறார்கள். எல்லோருக்கும் தெரிந்த பேச்சு, எவரையும் கட்டுப்படுத்தாத பேச்சு. 1.164.10

    இவர்கள் ஆண்கள் என்று சொன்னார்கள். ஆனால் இவர்கள் பெண்கள். கண்ணுள்ளவன் பார்க்கிறான். இல்லாதவன் அறியமாட்டான். அறிவாளியான பிள்ளை அறிவான். இதைப் புரிந்து கொண்டவன் தந்தையின் தந்தை ஆவான். 1.164.16

    அந்த மரத்தின் உச்சியில் அழகிய இறக்கையுள்ள பறவைகள் இனிமையை உண்கின்றன. அவை அங்கே தங்கி முட்டை இடுகின்றன. அந்தப் பழம் இனியது என்று சொல்கிறார்கள். தந்தையை அறியாதவன் அதை அறியமாட்டான். 1.164.22

    நான்கு கொண்டைகள் கொண்ட அழகிய இளம்பெண் நெய்யினால் பளபளக்கும் முகத்துடன் அறிவை அணிந்து கொள்கிறாள். அவளிடத்தில் வலிமையுள்ள பறவைகள் இரண்டு வந்து அமர்ந்தன. அங்கு தான் தேவர்கள் தங்கள் பங்கைப் பெற்றுக் கொள்கின்றனர். 10.114.3

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 52

    சு. கோதண்டராமன்.

    வேதப் பொன் மொழிகள் சில

     

    இயற்கை நியதி
    இயற்கை நியதியைப் புரிந்து கொள்வது எளிதல்ல. 6.9 இல் வரும் பின் வரும் மந்திரங்களைக் கவனியுங்கள்.
    நாளின் ஒரு பகுதி கறுப்பாகவும் மற்றொரு பகுதி வெள்ளையாகவும் உள்ளது. ஆடை போல் நெய்யப்பட்ட இந்தச் சிக்கலான அமைப்பில் எனக்கு நெடுக்கு நூலும் புரியவில்லை, குறுக்கு நூலும் தெரியவில்லை. தந்தை உதவி இல்லாமல் எந்த மகனாவது இதைப் புரிந்து கொள்ள முடியுமா? அழிவில்லாத இவ்வுலகத்தின் காப்பாளன் கீழிறங்கி வந்து தானே பார்ப்பதை எவன் அறிகிறானோ அவனுக்கே இந்த ரகசியம் தெரியும்.

    விதி
    நதிகள் தலைகீழாகப் பாய்கின்றன. புல் தின்னும் மிருகம் சிங்கத்தை எதிர்க்கிறது. நரி காட்டுப் பன்றியைக் குகையிலிருந்து துரத்துகிறது. இதன் மர்மம் என்ன? 10.28.4
    பிறந்திருக்கும் அனைவரும் தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்ட வழிகளிலே சென்று முன்னோர்கள் சென்ற இடத்தை அடைகிறார்கள். 10.14.2
    குதிரை நுகத்தடியில் கட்டுப்பட்டிருப்பதைப் போல நான் கட்டுப்பட்டிருப்பதை நன்கு அறிகிறேன். எங்களுக்கு எது நன்மை செய்யுமோ அதைச் சுமக்கிறேன். நான் இதிலிருந்து விடுபட விரும்பவில்லை. திரும்பிப் போகவும் விரும்பவில்லை. எல்லாம் அறிந்த தலைவன் எனக்கு வழி காட்டுவானாக 5.46.1

    வாழ்க்கை நிலையாமை
    மனிதரில் எவனும் தன் ஆயுளை அறியான். 7.23.2
    நேற்று இருந்தவன் இன்று இல்லை. தேவனின் அறிவைப் பாருங்கள்.10.55.5

    ஒன்று பரம்பொருள்
    அக்னி ஒன்றுதான். பல வகையாக மூட்டப்படுகிறது. சூரியன் ஒன்றுதான். பலவற்றின் மீதும் ஆட்சி செலுத்துகிறது. உஷை ஒன்றுதான். அனைத்தையும் ஒளியூட்டுகிறது. இருப்பது ஒன்றுதான் அனைத்துமாகப் பரவி நிற்கிறது. 8.58.2

    பக்தி
    அசையும் பொருள், அசையாப் பொருள் எல்லாவற்றிற்கும் தலைவனே, தெய்வீக ஒளியே, கன்றுக்குப் பால் சுரந்து நிற்கும் பசுப்போல உன்னை நினைந்து கதறுகிறேன். 7.22.32

    தேவர்களின் சிறப்பு
    ஆதித்யர்கள் பல கண் உள்ளவர்கள். மனதுக்குள் இருப்பதையும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும், அறிவார்கள். 2.27.3
    தேவர்கள் எதைக் காக்கிறார்களோ அவை எல்லாம் நன்மையாகவே இருக்கும். 2.23.19
    தேவர்கள் விரும்பியது தான் நடக்கும். வேறு யாரும் அதை மாற்ற முடியாது. 8.28.4
    இந்திரன் கொடுக்க நினைப்பதை எவரும், தேவனோ, மனிதரோ, தடுக்க முடியாது. 8.14.4
    இந்திரனை முழுமையாகப் புகழ வல்லார் யார்? கால்களை மாற்றி மாற்றி வைத்து நடப்பது போல அவன் முன்னால் இருப்பவரைப் பின்னாலும் பின்னால் இருப்பவரை முன்னாலும் கொண்டு வைக்கிறான். 6.47.15
    அக்னியே, யார் உன்னிடம் பிரார்த்தனையுடன் வருகிறார்களோ, யக்ஞத்தின் தீவிரத்தையோ அல்லது துவக்கத்தையோ காட்டுகிறார்களோ அவருக்கு நீ வலிமையும் செல்வமும் தந்து காப்பாற்றுகிறாய். 6.15.11
    மாயையில் வல்லவர்களோ வலிமையில் மிக்கவர்களோ எல்லோரும் தேவர்களின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் ஆகவேண்டும். 3.56.1
    சூரிய கிரணங்கள் தலையிலிருந்து பாலைப் பொழிகின்றன. கால்களால் நீரைப் பருகுகின்றன. 1.164.7
    தேவர்கள் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை. நாம் ஒன்றும் கொடுக்காமலே கொடுக்கிறார்கள். நமது நாட்களை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறார்கள். 5.49.3

    தெய்வ வணக்கத்தின் அவசியம்
    தேவர்களின் மனத்தை மகிழ்விப்பவன் அவ்வாறு மகிழ்விக்காதவனைத் தோற்கடிக்கிறான். 8.31.15
    பலஹீனமானவனாயினும் மனதைத் தூய்மையுடன் (சூரியனுடன்) இணைத்துக் கொண்டுவிட்டால் அது பயத்தால் நடுங்காது. 5.44.9
    நேர்மையைப் போற்றுபவன் பகைவரை வெல்வான். தேவரை வழிபடுபவன், வழிபடாதவரை வெல்வான். ஊக்கமுள்ளவன் வெல்லமுடியாத பகையையும் வெல்வான். யக்ஞம் செய்பவன் யக்ஞம் செய்யாதவனின் உணவை வெல்வான். 2.26.1

    நமஸ்காரத்தின் சிறப்பு
    நமஸ்காரம் வலிமையானது. நான் அதை மேற்கொண்டுள்ளேன். மண்ணையும் விண்ணையும் தாங்குவது நமஸ்காரம். தேவர்களுக்கு நமஸ்காரம். அது அவர்களை ஆள்கிறது. செய்த பாவங்களை நமஸ்காரம் போக்குகிறது. 6.51.8

    யக்ஞத்தின் சிறப்பு
    புத்தி உள்ளவன் யக்ஞம் செய்ய விரும்புகிறான், இல்லாதவன் மூழ்குகிறான். 9.64.21
    யக்ஞம் செய்பவனும், சோமம் பிழிந்து தருபவனும், தேவர்களை வணங்குபவனும் அழிவதில்லை. 8.31.16
    யக்ஞம் இந்திரனை வலுப்படுத்துகிறது. யக்ஞம் செய்பவன், வீட்டிலுள்ள நீர் தாகத்தைத் தணிப்பது போல, விருப்பம் நிறைவேறப் பெறுகிறான். பொய்யான மனதுடன் வஞ்சகமாக வழிபடுபவன், வழி தவறியவன் போல, நோக்கம் நிறைவேறாமல் போகிறான். 1.173.11

    பிரார்த்தனை
    ப்ரஹ்ம வர்ம மமாந்தரம். – பிரார்த்தனையே எனது கவசம். 6.75.19
    அக்னியே, நாங்கள் குதிரைகளாலோ அல்லது பிரார்த்தனைகளாலோ மற்ற ஜனங்களின் மீது எங்கள் வலிமையைப் புலப்படுத்துவோமாக.2.2.10

    சில பிரார்த்தனைகள்
    அச்வின்களே, எங்கள் வழிபாடு இனிமையும் உண்மையும் கலந்ததாக இருக்கட்டும். 1.22.3
    எங்கள் அறிவால் செல்வத்தை அடைய எங்களுக்கு உதவுக, இந்திரனே.8.4.15
    வருணா, நாங்கள் ஒளியை விட்டு விலகாதிருப்போமாக. 2.28.7
    ஸவிதாவின் சிறந்த ஒளியைப் போற்றுகிறோம். அவர் எங்களது அறிவினைத் தூண்டுவாராக. 3.62.10
    தேவர்களுக்கு நலம் செய்யும் தூய கண்ணாகிய சூரியன் உதிக்கிறான். நாங்கள் அவனை நூறாண்டு காலம் பார்த்திருப்போமாக. நூறாண்டு வாழ்வோமாக. 7.66.16
    சவிதாவே, கெட்டதெல்லாம் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடத்தில் தூண்டுக. 5.82.5
    துன்பங்களைப் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடம் தோற்றுவிப்பாயாக. 5.82.5

    குடும்ப ஒற்றுமை
    கணவனும் மனைவியும் சேர்ந்து ஒற்றுமையாகத் தேவர்களைப் பூஜிப்பதால் வரும் பலன்கள்- துன்பங்களிலிருந்து விடுதலை, எதிரிகளின் அழிவு, குழந்தைச் செல்வம், உணவு, வலிமை, புகழ், முழு ஆயுள், ஆனந்தம், தர்ம வழியில் நடத்தல், தெய்வ வழிபாடில்லாதவர் மீது வெற்றி. 8.31

    தவறுக்கு வருந்தல்
    பாவத்தின் காரணங்கள்- மது, கோபம், சூது, அறியாமை, கனவு, விதி 7.86.6
    மனித பலஹீனத்தால் நாங்கள் தவறு செய்கிறோம். அதற்காக எங்களைத் தண்டிக்காதே. 7.57.4

    அமரத்வம்
    நாம் அமரத்துவம் அடையவேண்டும் என்பதற்காகத் தேவர்கள் நமக்குப் பிரார்த்தனைகளை அமைத்திருக்கிறார்கள். 7.97.5

    பேச்சு
    கேள்வி கேட்பதிலோ, மீண்டும் மீண்டும் தெய்வத்தின் பெயரைக் கூறுவதிலோ, உரையாடலிலோ எவன் மகிழ்வதில்லையோ அவன் ஆபத்தானவன். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று. 8.101.4
    பயனற்ற, அற்பத்தனமான, முடிவற்ற, குறைவான பேச்சினால் மக்கள் திருப்தி அடைவது இல்லை. 4.5.14

    உழைப்பின் சிறப்பு
    தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான். 8.47.6
    தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். 4.33.11
    விழிப்புடன் இருப்பவனை ரிக், சாமம் புகழ்கின்றன. நான் உன் நண்பன் என்று சொல்லிக் கொண்டு சோமம் உடன் வசிக்கிறது. 5.44.14
    சுறுசுறுப்புள்ளவனே வெல்கிறான், வளம் பெறுகிறான். கருமிகளுக்கு தேவர்கள் உதவுவதில்லை. 7.32.9

    பரோபகாரத்தின் சிறப்பு
    ஒருவருக்கும் தீங்கு செய்யாமல், மக்களுக்கு நன்மை செய்பவன் தன் வலிமையினாலேயே வளர்கிறான். நல்ல பாதுகாப்பான வீட்டில் இருக்கிறான். 7.74.6

    தான மகிமை
    கடவுளை வணங்காத, தானம் செய்யாத ஆணை விட பெண் உறுதியானவள், மேலானவள். 5.61.6
    பெண் துன்பப்படுபவனையும், வறுமையாளனையும் எதையாவது விரும்புபவனையும் அறிந்து கொள்கிறாள். 5.61.7
    அக்னியே, பிறருக்குத் தானம் செய்பவர்கள் சௌகரியமாக வாழட்டும். 7.16.10
    அக்னியே, மற்றவர்களுக்கு மிகுதியாகத் தானம் செய்பவருக்கு மிகுதியாகச் செல்வத்தை அளிக்கவும். 6.10.5
    கொடையாளியான இந்திரன் பிறருக்குத் தானம் செய்பவரையே ஆசீர்வதிக்கிறார். 7.32.8
    பசியை மரணத்தின் காரணமாகத் தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாகச் சாப்பிட வசதி உள்ளவனுக்கும் மரணம் ஏற்படுகிறது. வள்ளல் மனம் கொண்டவனின் செல்வம் குறைவதில்லை. பிறருக்குக் கொடுக்காதவன் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.1
    செல்வமுள்ளவன் பசியுடன் யாசகர் வரும்போது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டுவிட்டால் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.2
    ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். 10.117.3
    உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. அவன் இருப்பிடம் வீடு அல்ல. அவனை விட்டு நீங்கி, கொடுக்கக் கூடிய அன்னியன் ஒருவனை நாடுக. 10.117.4
    பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். அவன் நீண்ட கால வாழ்வைச் சிந்திக்க வேண்டும். செல்வம் இன்று ஒருவனிடம் இருக்கும், நாளை இன்னொருவனிடம் இருக்கும். தேர்ச் சக்கரம் போல சுழலக் கூடியது இது. 10.117.5
    அளிக்கத் தெரியாத அறிவிலி அடைந்த உணவு அவனுக்கு அழிவு தரும். நண்பனுக்கு உணவளிக்காமல் தனித்து உண்பவன் தனித்துத் துன்பப் படுகிறான். 10.117.6
    கலப்பை தன் பாதையைக் கால்களால் கீறி உணவைத் தருகிறது. கொடையாளியான உறவினன் கொடுக்காதவனை விட மேலானவன். இந்த வேதக் கருத்தை சொல்பவன் சொல்லாதவனை விட மேலானவன். 10.117.7

    சூது
    சூதை நாடுபவனுடைய மனைவியைப் பிறர் அபகரிப்பர். அவனது பெற்றோரும், சகோதரர்களும், ‘இவனை எனக்குத் தெரியாது. கட்டி இழுத்துச் செல்லுங்கள்’ என்பர். 10.34.4
    சூதாட்டக் காய்கள் கொக்கி போல் இழுப்பவை, துன்புறுத்துபவை. ஆரம்பத்தில் சிறு லாபங்களைத் தரும். முடிவில் அழித்து விடும். அவை தேன் தடவிய கொலையாளிகள். 10.34.7
    சூதாட்டக் காய்கள் கீழே உள்ளன, ஆனால் அவை நமக்கு மேலே ஏறி விடுகின்றன. கையில்லாத அவை கையுள்ளவர்களை வெல்கின்றன. குளிர்ச்சியாக இருந்து நம்மைத் தகிக்கின்றன.10.34.9
    சூதாடுபவனுடைய மனைவி துன்புறுகிறாள். கண்டபடி அலையும் அவனுக்காகத் தாய் வருந்துகிறாள். கடனாளியாகிறான். பயப்படுகிறான். பணத்தைத் தேடி இரவில் மற்றவர் வீட்டுக்குத் திருடப் போகிறான். 10.34.10
    சூதாடுபவன் மற்றவர்களின் சீரான குடும்பத்தையும் அவர்களின் அன்பான மனைவியையும் பார்த்துப் பொருமுகிறான். காலையில் குதிரை ஏறிப் போனவன் மதியத்தில் வெய்யிலில் அலைகிறான். 10.34.11
    சூதாடாதீர்கள். வேளாண்மையில் ஈடுபடுங்கள். அதில் வரும் செல்வத்தில் மகிழ்ச்சி அடையுங்கள். மனைவி, மாடுகள் போன்ற எல்லாச் செல்வங்களும் அதில் உண்டு. சவிதா இதை எனக்குச் சொன்னார். 10.34.13

    மனம்
    மக்கள் பார்ப்பதற்காக ஒரு நிலையான ஜோதி அமைந்துள்ளது. எல்லாத் தேவர்களும் அந்த ஒரே லட்சியத்தை நோக்கிச் செல்கின்றனர். என் காதுகள் அதை நோக்கித் திரும்பி உள்ளன. என் கண்கள் அதையே பார்க்கின்றன. பறக்கும் பொருள்களிலே மனம் தான் மிக வேகமானது. என் மனம் அதை நோக்கிச் செல்கிறது. நான் அதை எப்படி அறிவேன், எப்படிச் சொல்வேன்? 6.9.5
    குதிரையை வழிநடத்துவது கடிவாளக் கயிறு. அதை வழி நடத்துவது மனது. 6.75.6

    உலகியல்
    சொந்தப் பிள்ளையே சிறந்தவன். மற்றவர் பிள்ளை பிள்ளை ஆகமாட்டான். 7.4.7
    வீடு தான் சஞ்சரிக்கும் எல்லாப் பிராணிகளின் விருப்பமாகும். 2.38.6
    ஒன்று போல இருக்கும் இரு கைகளும் செயல் திறனில் வேறுபடுகின்றன. ஒரே நேரத்தில் ஈன்ற இரு பசுக்கள் ஒரே அளவு பால் தருவதில்லை. இரட்டையர்கள் கூட திறமையில் வேறுபடுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் வள்ளல் தன்மையில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 10.117.9
    ஊருக்குப் புதியவன் தெரிந்தவனிடம் வழி கேட்கிறான். சரியான நபரால் வழி காட்டப்பட்டு அவன் தொடர்ந்து பயணிக்கிறான். உண்மையில் இது தான் கல்வியின் சிறப்பு. கற்றவன் நேராகச் செல்லும் வழியை அறிந்து கொள்கிறான். 10.32.7, 9.70.9
    ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம். நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக. 2,33.2

    பக்தர்கள் பல வகை
    வலிமையுள்ளவன் பகனிடம் பாதுகாப்பை நாடுகிறான். வலிமையற்றவன் ரத்னத்தை நாடுகிறான். 7.38.6
    ரிஷிகள் உதவிக்காக வேண்டுகின்றனர். புரோகிதர்கள் உணவுக்காக வேண்டுகின்றனர். 7.94.5
    பக்தர்கள் சோமனைப் போற்றுகிறார்கள், பேரறிஞர்கள் யக்ஞம் செய்ய விரும்புகிறார்கள், விபரீத புத்தி உள்ளவர்கள் அமிழ்ந்து போகிறார்கள். 9.64.21
    நரர்கள் போரில் வெல்லவும் புத்திர பாக்கியம் பெறவும் விரும்புகிறார்கள். விப்ரர்கள் அறிவைப் பெற விரும்புகிறார்கள். 1.8.6

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 51

    சு. கோதண்டராமன்.

    ஓம்

    619px-Rigveda_MS2097

    வேதம் ஓதத் துவங்கும் போதும், முடிக்கும் போதும், ஓம் என்னும் மந்திரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது. இறைவனுக்கு எந்த மந்திரத்தைக் கூறி அர்ச்சனை செய்தாலும் அதற்கு முன் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. இது எல்லா வேதங்களின் சாரம் என்று சாந்தோக்கிய உபநிஷத்தும், ஓங்காரமே பிரம்மம் (பரம்பொருள்) என்று தைத்திரீய, பிரச்ன உபநிடதங்களும் கூறுகின்றன. பிற்கால வேத இலக்கியத்தில் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஓங்காரம் ரிக் ஸம்ஹிதையில் காணப்படவில்லை என்று பார்த்தோம். இது இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

    பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தாய் வேதமாகிய ரிக் ஸம்ஹிதையின் கருத்துக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவை வேதமாகக் கருதப்படும்.

    ஓங்காரம் வேதத்துக்கு ஏற்புடையதா என்று பார்ப்போம். ஓங்காரத்தின் பொருள் என்ன?

    ஓங்காரத்துக்குப் பொருளே சொல்ல முடியாது என்று சிலரும், இறைவன் தான் ஓங்காரத்தின் உட்பொருள் என்று சிலரும் கூறுவர். இன்னும் சிலர், உலகிலுள்ள அனைத்து ஒலிகளின் சங்கமமே ஓங்காரம் என்பர்.

    இறைவனை ஓங்கார வடிவினனாகச் சொல்வது ஏன்?

    ஓங்காரத்துக்கு இன்னொரு பெயர் பிரணவம் என்பது. ப்ரணவ என்ற சொல் ப்ர+நவ என்ற இரு சொற்களின் கூட்டு. ப்ர என்ற முன்னொட்டு முதன்மை அல்லது சிறப்பைக் குறிக்கும். நவ என்பதற்குப் புதுமை என்பது பொருள். எனவே ப்ரணவம் என்பது புதுமைக்குச் சிறப்பு என்று பொருள் தருகிறது.

    புதுமைக்குச் சிறப்பு அளித்தல் என்பது, அடிப்படையை மாற்றாமல் பிற விஷயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகும்.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளும் கணம் தோறும் மாறிக் கொண்டே, புதுமை அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரபஞ்சமே ஓங்கார ஸ்வரூபமாக உள்ளது. இந்த இடை விடாத மாற்றங்களின் காரண கர்த்தாவான இறைவனும் ஓங்கார ஸ்வரூபனாகக் கருதப்படுகிறான். இறைவனை முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே என்று போற்றிய மாணிக்கவாசகர் அடுத்த அடியில் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்று கூறுவதை நோக்குக.

    பதஞ்ஜலி யோக சூத்ர உரையில் பாரதி கூறுவதைக் கேட்போம். “ஓம் என்பது பிரணவ மந்திரம். இந்த மந்திரத்துக்கு ஆகமங்கள் கோடி வகைகளில் பொருள் சொல்கின்றன. ப்ரணவம் என்ற சொல் எப்போதும் புதுமையானது என்ற பொருள் தருவது.”

    ரிக் ஸம்ஹிதை புதுமையை ஆதரிக்கிறதா? ஆம்.

    சாதாரணமாகக் குழந்தைகள் தாம் புதுமையை விரும்புவார்கள். எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறையாகப் பார்ப்பது போல ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ரிஷிகள் அது போல அக்னி எரியும் அழகை ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்த்துப் பரவசப்பட்டு வர்ணித்தார்கள் என்பதை முன்பு பார்த்தோம்.

    வைகறைப் பொழுதைப் புகழ்ந்து ரிஷி பாடுகிறார். இதுவரை எத்தனையோ வைகறைகளைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறார் அவர். அது தான் பார்த்தாயிற்றே, இன்றைக்கும் அதே மாதிரித் தானே இருக்கப் போகிறது என்று அவர்கள் அலுப்பு அடையவில்லை. இன்றைய வைகறை இதற்கு முன்பாக வந்த மற்ற வைகறைகளை விட அழகானது என்று தினமும் சொல்கிறார்.1.123.10 ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகு தோன்றுகிறது அவருக்கு.

    ஒரு பிரபலமான மந்திரம் இது. நவோ நவோ பவதி என்று தொடங்குவது. இதில் ரிஷி தினமும் சந்திரனின் வடிவம் மாறுவதைக் கண்டு சந்திரன் தினமும் புதிதாகப் பிறப்பதாகக் கூறி பரவசப்படுகிறார்.

    நவோ நவோ பவதி ஜாயமானோ அஹ்னாம் கேதுருஷஸா மேத்யக்ரம், பாகம் தேவேப்யோ விததாத்யாயன் ப்ர சந்தரமாஸ் திரதே தீர்கமாயு: 10.85.19

    எனவே வேத ரிஷிகளுக்குப் புதுமையைக் கண்டு ஆனந்தம் ஏற்படுகிறதே அன்றி அலுப்பு ஏற்படுவது இல்லை.

    வேத ரிஷிகள் பல இடங்களில் நான் இந்தப் புதிய தோத்திரம் இயற்றியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். தேவர்களை வழிபட முந்தைய ரிஷிகள் செய்த மந்திரங்கள் போதும் என்று அவர்கள் இருந்து விடவில்லை. புதிய மந்திரங்களைப் படைக்கிறார்கள்.

    ரிக் ஸம்ஹிதையிலேயே, முந்திய ரிஷிகளின் கருத்துக்கு மாறுபட்ட புதிய கருத்துகள் காணப்படுகின்றன என்று பார்த்தோம். யக்ஞம் செய்தால் தான் தேவ நிலையை அடையலாம் என்று ஒரு கருத்தும் காணப்படுகிறது. ரிபு சகோதரர்கள் யக்ஞம் என்று எதுவும் செய்யவில்லை. சமீகள் மூலமாகவே யக்ஞத்தின் பலனை அடைந்தார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பசுக்களைக் கொன்று வேள்வி நடத்திய காலத்தில் பசுக்களைக் கொல்லாதீர்கள் என்ற புதிய கருத்தும் எழுகிறது. இந்தப் புதுமையை மக்கள் எதிர்க்கவில்லை. வேதத்தில் அந்தக் கருத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். இந்த நெறிப்படி, காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததால் தான் இந்து சமயம் எத்தனையோ சோதனைகள் வந்தும், அவற்றைக் கடந்து வந்து இன்று உலகளாவப் பரவத் தொடங்கியுள்ளது. ரிக் வேத ஸம்ஹிதையே இந்தப் பரந்த மனப்பான்மைக்கு அடித்தளம் இட்டது. பின்னர் எழுந்த நூல்களும் இத் தடத்திலேயே சென்றன. எனவே அவையும் வேதம் என்ற தலைப்பின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.

    வேதம் காலம் தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்த ஓங்காரமே சாட்சி.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 50

    சு. கோதண்டராமன்.

     

    ருத்ரம்

    619px-Rigveda_MS2097

    இந்த நூலில் ரிக் ஸம்ஹிதையின் கருத்துகளைப் பற்றி மட்டும் பார்த்தோம். வேதத்தின் மற்ற பகுதிகளான யஜுர், சாமம், அதர்வணம், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியன பொய்யா?

    ஆதியில் தோன்றிய வேதமான ரிக் ஸம்ஹிதையின் மையக் கருத்துக்கு இணக்கமாக இருப்பது பாமர மனிதனின் சொல்லாக இருந்தாலும் அது வேதமே என்பது பாரதியின் கருத்து.

    வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த
    மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்.

    வேத சாரம் என்ன? மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம் –
    பிரபஞ்சத்தை இயக்கும் நியதி ஒன்று உள்ளது. ருதம் என்பதும் தர்மம் என்பதும் வ்ரதம் என்பதும் அதுவே. அதை இயக்கும் சக்தியே பரம்பொருள். அதை எப்பெயரிட்டும் அழைக்கலாம். எந்த முறையிலும் வழிபடலாம். அது நம்மை விட மேலானது என்ற உணர்வோடு கூடிய பணிவு மனதில் இருத்தல் வேண்டும்.

    நியதிப்படியே பிரபஞ்சத்தில் எல்லாம் நடைபெறுகிறது. மனித நியதியாவது- மேலோரைப் பணிதலும், கீழோரைக் காத்தலும் ஆகும். இதுவே செயலாகப் பரிணமிக்கும்போது யக்ஞம் ஆகும். இந்த நியதியை மீறுவது தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும். துன்பம் நீங்க தெய்வத்தைச் சரணடைவது தவிர வேறு வழி இல்லை.

    யக்ஞமும் சமீ என்ற அருஞ்செயலுக்கான உழைப்பும் எல்லா நலன்களையும் தரும். இறுதி லட்சியமாகிய ஒளியை, அதாவது தெய்வ நிலையை, அடைவதும் அதனால் சாத்தியமாகும்.

    வேதத்தின் இந்த மையக் கருத்துக்கு உடன்பாடாக உள்ளவை உண்மையான வேதங்கள். வேதம் என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் இதற்கு மாறான கருத்தைக் கூறினால் அவை பொய் வேதங்களாகும்.

    ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி இதுவே மேலான தெய்வம் என்று சொல்லும் நூல் வேதம். இது தவிர மற்றவை எல்லாம் தெய்வமல்ல என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

    இந்த வழிபாட்டுமுறை சிறந்தது என்று ஏதேனும் ஒரு முறையைச் சுட்டிக் காட்டும் நூல் வேதம். மற்ற முறைகள் எல்லாம் உங்களை நரகத்துக்குக் கொண்டு சேர்க்கும் என்று சொல்லும் நூல் பொய் வேதம்.

    மனிதனின் இறுதி லட்சியம் தர்மத்தை அனுசரித்து, கடுமையாக உழைத்து, ரிஷி, மகோனர், சூரி நிலைகளைக் கடந்து ஒளி நிலையை அடைவது என்று கூறுவது வேதம். உண்டு உடுத்து உறங்கி, பிறர் துன்பம் பற்றிக் கவலைப்படாமல் தந்நலமே பெரிதாகக் கருதி உயிர் வாழ்வதுதான் மனித வாழ்வு எனப் போதிக்கும் நூல் பொய் வேதம்.

    இனி இந்தக் கண்ணோட்டத்தில் யஜுர்வேதத்தின் ருத்ரம் என்ற பகுதியை ஆராய்வோம்.

    ருத்ரம் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்ளுமுன் எல்லாத் தேவர்களும் ஒன்றே என்ற தலைப்பில் சொல்லப்பட்ட ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு-வருவோம்.

    ரிக் 10.54 மற்றும் 10.55 பரம்பொருளுக்கு இந்திரன் என்ற பெயர் அளித்து அவருடைய நான்கு மாவலிமைகளைக் குறிப்பிடுகிறது.
    1. கடந்த காலமாகவும் வருங்காலமாகவும் காலம் கடந்து நிற்றல்,
    2. விண் மண் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கடந்து நிற்றல்,
    3. சூரியன் முதலான எல்லாப் பொருளையும் படைத்தல்,
    4. புரிந்து கொள்ளப்படாத செயல்பாடுகள் கொண்டிருத்தல்.

    இதே கருத்தை ருத்ரம் தனக்கே உரிய வழியில் சொல்கிறது. இங்கு பரம்பொருளுக்கு ருத்ரன் என்று பெயர் அளிக்கப்படுகிறது.

    ருத்ரன் காலம் கடந்தவர் என்பது அழியாதவர்(விக்ஷீணக), பவ: (ஆதிமூலம்), முன்னே பிறந்தவர் (பூர்வஜ) பின்னே பிறந்தவர் (அபரஜ)என்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது.

    இடம் கடந்தவர் என்பது பல வகையாகக் குறிப்பிடப்படுகிறது. அவர் இருக்கும் இடங்களாகக் கூறப்படுபவை- ஆழமான மடு, ஆற்றுக் கரை, உப்பரிகை, களம், களர்நிலம், குறுகிய பாதை, பெரும்பாதை, சுக்கான் பூமி, சுனை நீர், புல்தரை, பயிர்நிலம், மணல் திட்டு, பெருவெள்ளம், இன்னும் பல.

    மந்திரியாகவும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் சபையினராகவும் அவர் இருக்கிறார். தச்சர், குயவர், கருமார் போன்ற வடிவிலும் அவர் உள்ளார். நல்லவர்களாக மட்டுமல்ல, தீயவராகவும் அவர் உள்ளார். திருடர்களில் பல வகையாகவும் ஏமாற்றுபவர்களாகவும் அவரே காட்சி தருகிறார். ஒருவராக மட்டுமல்ல, பலராகவும் காட்சி தருகிறார். உட்கார்ந்திருப்பவர்கள், நிற்பவர்கள், வழிநடப்பவர்கள், விரைந்து செல்பவர்கள், படுத்திருப்பவர்கள், தூங்குபவர்கள், விழித்திருப்பவர்கள், உரக்கக் கூவுபவர் என்று பல நிலை மனிதர்களாகவும் அவர் உள்ளார். மனிதராக மட்டுமல்ல, குதிரை, நாய் முதலான மிருகங்களாகவும் அவர் உள்ளார்.

    உயிரற்ற பொருட்களும் அவரே- மின்னல், மலை, மழை, மழையின்மை, மாட்டுக் கொட்டகை, தீவு, கட்டில், வீடு, இளம்புல், காய்ந்த சருகு, குகை, காட்டுமரம், குளம், ஒலி, எதிரொலி, மேகம், தேர், மரம், முரசு, முரசுக்குச்சி, முள்காடு, செடி கொடி, வீட்டுப் பொருள், காற்று, புழுதி, தூசி, இன்ன பிற.

    அனைத்தையும் தோற்றுவித்தவர் என்பது பவ என்னும் பெயரால் விளக்கப்படுகிறது.

    அவர் நம்மனோரால் புரிந்துகொள்ளப்பட முடியாதவர் என்பது நாம் முரணாகக் கருதுபவை எல்லாம் அவரிடத்தில் அழகாகப் பொருந்தி இருப்பதிலிருந்து தெரிகிறது. பெரியவர் (மஹத்), சிறியவர் (க்ஷுல்லக), உயரமானவர் (ப்ருஹத்), குட்டையானவர் (ஹ்ரஸ்வ), மகிழ்ச்சி தருபவர் (சம்பு), அழவைப்பவர் (க்ரந்தயத்), கருத்த கழுத்தர் (நீலக்ரீவ), வெண் கழுத்தர் (சிதிகண்ட), சடையர் (கபர்தீ), மொட்டையர் (வ்யுப்தகேச), காய்ந்ததில் உள்ளவர் (சுஷ்க்ய), பச்சையான பொருட்களில் உள்ளவர் (ஹரித்ய), சிவப்பு நிறத்தர் (அருண), மஞ்சள் நிறத்தர் (ஸஸ்பிஞ்சர) என்று அவர் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவர்.

    மைபடிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னினல்லான்
    ஒப்புடையனல்லன், ஒருவனல்லன், ஓரூரனல்லன், ஒருவன் இல்லி,
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும், அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இத்திறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே.
    என்று அப்பர் உரைத்தது இதைத்தான்.

    ருத்ரத்தின் சில தனித் தன்மைகளையும் பார்ப்போம். யஜுர் வேதம் தோன்றிய காலத்தில் அரசனது நிலப்பரப்பு பெருகியது. அவனது வேலைகளும் பொறுப்புகளும் பெருகின. அவனுக்கு ஆலோசனை சொல்ல மந்திரிகளும் ஆலோசனை சபையினரும் ஏற்பட்டுவிட்டார்கள். இந்த மாற்றங்கள் ருத்ரத்தில் காட்டப்படுகின்றன. ருத்ரன் மந்திரியாகவும் சபையினராகவும் காட்சி தருகிறார்.

    ருத்ரத்தின் மற்றொரு தனித்தன்மை- இதில் இறைவனின் கோப முகம் நன்றாகக் காட்டப்படுகிறது. இந்திரன் முதலானோரின் பெருவீரமும் எதிரிகளை அழிக்கும் வலிமையும் பல இடங்களில் பேசப்படுவது போல ருத்ரனும் நல்லோர்களின் தலைவராக இருந்து அவர்களின் எதிரிகளை அழிப்பதற்கு எல்லா ஆயுதங்களையும் தாங்கி எப்போதும் ஆயத்தமாக உள்ளார். 273 போற்றிகளில் 51 இத்தகைய படை வலிமையைப் பறைசாற்றுபவை தாம். இந்த வேறுபாடுகள் அடிப்படைக் கொள்கைக்கு மாறானவை அல்ல.

    இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. பவஸ்ய ஹேதி (பிறப்பை அறுக்கும் ஆயுதம்) என்று அவர் வர்ணிக்கப்படுகிறார். பிறப்பு என்பது இழிவானது என்ற கருத்து ரிக் வேதத்தில் காணப்படவில்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து அனுபவித்தனர். நீண்ட ஆயுள் வேண்டினர். ஆனால், மரணத்துக்கு அஞ்சவில்லை. இறந்தபின் என்ன ஆகிறோம் என்பது பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. எங்கும் பிறப்பு ஒரு சுமை என்று யாரும் கருதியதாகத் தெரியவில்லை. பிறப்பை அறுக்க வேண்டும், மீண்டும் பிறவாத நிலையை அடையவேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக யஜுர் வேதத்தில் தான் பார்க்கிறோம். அந்த வகையில் இது ஆதி வேதத்தின் மையக் கருத்திலிருந்து முரண்படுகிறது எனலாம்.

    தமிழ் போன்ற பிற மொழிகளில் தோன்றிய தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களும் ஆதி வேதத்தின் கருத்தைக் கூறும் அளவுக்கு வேதம் என்ற பெயருக்குத் தகுதி உடையன.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 49

    –சு. கோதண்டராமன்.

     

    வேதம் அபௌருஷேயமா?

    619px-Rigveda_MS2097

     

    வேதம் அபௌருஷேயம் (மனிதரால் இயற்றப்படாதது) என்பது ஒரு நம்பிக்கை. வேத மந்திரங்களின் பொருளை ஒரு முறையாவது படித்துப் பார்த்தவர்கள் அது மனிதரால்தான் இயற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வார்கள். “ப்ரஹ்ம அகாரி”- “நான் இந்த பிரார்த்தனையை இயற்றியிருக்கிறேன்” என்ற தொடர் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. (உதாரணம் 4.6.11, 4.16.20, 21) எனவே வேதம் ரிஷிகளால் இயற்றப்பட்டதுதான்.

    ஆனால் வேதம் அபௌருஷேயம் என்பதை மூட நம்பிக்கை என்றும் சொல்ல முடியாது. வேதப் பாடல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று முன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சில பாடல்கள் சாதாரணப் புலமை நிலையில் பாடப்பட்டவை. சில அருள் நிலையில் பாடப்பட்டவை. மேலும் சில பேரருள் நிலையில் பாடப்பட்டவை. சில, தன்னையே பரம்பொருளாக உணரும் அத்வைத நிலையில் பாடப்படவை.

    உதாரணமாக, ஆபோஹிஷ்டா மயோபுவ: என்ற மந்திரத்தைப் பார்ப்போம். 10.9.1 முதல் பாடலில், தண்ணீரே மகிழ்ச்சி தருகிறீர்கள் என்று கூறும்போது ரிஷி சாதாரணப் புலமை நிலையில் இருக்கிறார். தாய் போல என்னை நேசிக்கிறீர்கள். பாவத்தைப் போக்கி எனக்குக் குழந்தைப் பேற்றை அளிக்கும் உங்களிடம் நாங்கள் விரைந்து வருகிறோம். தெய்விகமான தண்ணீர் எங்களது வழிபாட்டுக்கும் குடிப்பதற்கும் இனியதாக இருக்கட்டும் எங்களைச் சுற்றி ஓடட்டும், நலம் தரட்டும். விலை மதிப்புள்ள பொருட்களின் ராணியே, மனிதரைக் கட்டுப்படுத்துபவர்களே, எங்களுக்கு மருந்துகள் தருக….. என்று இவ்வாறு பேசும்போது அவர் நீரைத் தெய்வமாகக் கருதுகிறார். இது அருள் நிலை.

    தண்ணீர் எப்படி மனிதர்களை நேசிக்கும், அது எப்படி மனிதரைக் கட்டுப்படுத்தும் என்று கேட்கும் பகுத்தறிவு வாதிகளால் இந்த அருள் நிலை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாது.

    அருட்செல்வம் மிகுந்த தண்ணீரே, எல்லாச் செல்வங்களும் உங்கள் கையில். நற்செயல்களும் அமரத்துவமும் கொண்டு தருபவர்கள் நீங்களே (10.30.12) என்று சொல்லும்போது அவர்கள் நீரை அமரத்துவம் அளிக்க வல்ல பரம்பொருளாகவே கருதுகிறார்கள்.

    இதற்கு மேற்பட்டதான நான்காவது நிலையில், காற்றும் புனலும் கடலுமே நான் என்று கூறிய பாரதி போலத் தன்னை எல்லாவற்றுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் ரிஷி. நானே அக்னி, நானே ஹவிஸ் என்று கூறும் 3.26.7 போன்ற பாடல்களும் சில வேதத்தில் உண்டு.

    இத்தகைய அருள் நிலைகளில் தோன்றிய பாடல்களைத் தெய்வ அருளால் தோன்றிய பாடல்கள் என்று கூறுவது உபசார வழக்கு. நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகனின் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அல்ல என்று வள்ளலார் கூறுவதை ஒப்பிட்டுப் பார்க்க.

    மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி என்று பாரதி கூறியதையும் நோக்குக.

    இத்தகைய அருட்கவிகள் கோடியில் ஒருவர் எப்பொழுதாவது தானே பிறப்பர். எனவே அவர்களது கவிதைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல விரும்பிய மக்களால் இவை மனப்பாடம் செய்யப்பட்டன. சிலர் எழுதியும் வைத்திருக்கலாம்.

    காலப்போக்கில் இவற்றில் பாடபேதங்கள் தோன்றின. காரணம் மனிதர்களின் இயல்பான மறதி தான். ஏதோ ஒரு எழுத்தோ, சொல்லோ மறந்துவிட்டால் அதை வேறு ஒன்றைக் கொண்டு நிரப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பர் என்று தெரிகிறது. உதாரணமாக, கீழ்க் கண்டவற்றை ஒப்பிடுக.
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜ: ரிக் 1.18.1
    ஸோமானம் ஸ்வரணம் க்ருணுஹி ப்ரஹ்மணஸ்பதே கக்ஷீவந்தம் ய: ஔஷிஜம் தைத்திரீய ஸம்ஹிதை 1.5.6
    கடைசியில் விசர்க்கத்திற்குப் பதிலாக ‘ம்’ வருகிறது.

    கீழ்க் கண்டதையும் ஒப்பிடுக.
    உத்வயம் தமஸஸ்பரி ஜ்யோதி: பச்யந்த: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – ரிக் 1.50.10
    உத்வயம் தமஸஸ்பரி பச்யந்த: ஜ்யோதி: உத்தரம் தேவம் தேவத்ரா ஸூர்யமகன்ம ஜ்யோதிருத்தமம் – தை.ஸம் 4.1.7
    இதில் இரு வார்த்தைகள் முன் பின்னாக இடம் மாறியுள்ளன.

    இந்த மாற்றங்கள் வேண்டுமென்று செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்டதாகத் தான் தெரிகிறது. இது போன்று நிறைய உள்ளன.

    தான் குருவிடமிருந்து கற்றுக் கொண்டதோடு கூட தன் சொந்தக் கவிதைகளையும் சேர்த்துத் தன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வழக்கமும் சிலருக்கு இருந்திருக்கும். நாளடைவில் இத்தகைய பாடபேதங்கள் அளவில் பெருகிய நிலையில் அவரவரும் தத்தம் பாடமே உண்மையான பாடம் என்று வாதிட்டிருப்பர். எதையும் தள்ள முடியாது. அந்த நிலையில் தான் பாடபேதங்களைப் பிரித்துத் தனிப் பெயரிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவம் தான் என்ற போதிலும் பல பாட பேதங்கள் இருந்ததால் சாம வேதம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டது. வேள்விக்கான மந்திரங்களும் உரைநடைப் பகுதிகளும் கலந்த பாடபேதம் யஜுர்வேதமாகப் பெயரிடப்பட்டது. இதை ஒரு தனி மனிதர் செய்திருந்தால் அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குமா என்பதும் நாடு முழுவதும் பரவி இருக்குமா என்பதும் சந்தேகமே. நாடு முழுவதும் உள்ள அறிஞர்கள் ஒன்று கூடி இதைச் செய்திருக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவராக வியாசர் இருந்திருப்பார்.

    இனி மேலும் இத்தகைய பாடபேதங்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணம் அந்த அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்காகத் தான் ஸ்வர முறையையும் க்ரமம், பதம், ஜடா, கனம் போன்ற பாட முறைகளையும் ஏற்படுத்தி வார்த்தைகள் இடம் மாறாதபடியும் உரு மாறாதபடியும் ஏற்பாடு செய்தனர். வேதத்தை எழுதிப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் அப்பொழுது தான் ஏற்பட்டிருக்க வேண்டும். வேதம் ஈச்வரனின் மூச்சுக் காற்று என்ற நம்பிக்கையையும் அப்பொழுது அவர்கள் பரப்பி இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை தான் வேதங்களை உரு மாறாமல் இன்று வரை காப்பாற்றி வந்திருக்கிறது. வேதக் கல்வி சிரத்தையுடன் கற்பிக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாக அமைந்து. வேதக் கல்வி தந்த சிரத்தை காரணமாக, பாரத சமுதாயம் பல துறைகளில் முன்னேற்றம் கண்டது.

    இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்னே வேதத்தில் ஏற்பட்ட இடைச் செருகல்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் விட்டிருக்க வேண்டும். அதனால் தான் வேதத்தின் சில பகுதிகள் மையக் கருத்துக்கு மாறான வகையில் செல்கின்றன. பிற்காலத்தில் வேத இலக்கியம், தர்ம சாஸ்திரம், புராணம் என்ற பெயரில் எழுந்த இலக்கியங்களில் சில இந்த மையக் கருத்துக்கு மாறானதாகச் செல்கின்றன. பாரதி அவற்றைத் தான் பொய் வேதங்கள் என்கிறார்.

    வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
    கோத்தபொய் வேதங்களும் –
    அவள்புனைந் தாள்; …… பாரதி

     

     

     

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 48

    சு. கோதண்டராமன்.

    வேதம் – மனித குல வரலாறு

    619px-Rigveda_MS2097

    வேதம் அநாதி, அதாவது அது உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது. வேதத்தை ஒரு நூல் என்று கருதினால் அதை அநாதி என்று கூற முடியாது. மனித இனம் தோன்றி நாகரிகம் வளர்ந்து மொழி வளர்ந்து அதற்கு இலக்கணம் ஏற்பட்ட பிறகு தான் வேதம் இயற்றப்பட்டது.

    ஆனால் வேறு ஒரு வகையில் வேதத்தை அநாதி என்று கூறலாம். இது அநாதி காலத்தில் பிரபஞ்சம் தோன்றியதை விவரிக்கிறது. மனித குலம் ஏற்பட்டு நாகரிகம் வளராத காலத்தைக் குறிப்பிடுகிறது. மனிதனுக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய நிலையைக் கூறுகிறது. வழிபாட்டு முறை ஏற்பட்ட காலத்தைத் தெரிவிக்கிறது. எனவே வேதத்தைப் பிரபஞ்ச வரலாற்றுச் சுவடி என்று கூறலாம். விரிவாகப் பார்ப்போம்.

    ரிக் 10 வது மண்டலம் 129வது சூக்தம் நாஸதீய சூக்தம் எனப்படுகிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory) ரிஷிகள் தங்கள் உள்ளுணர்வினால் அறிந்து சொன்னது நமக்குப் பெரு வியப்பைத் தருகிறது. அங்கு தெளிவில்லாத இருளான சூன்யம் மட்டுமே இருந்தது என்கிறார்கள்.

    அப்பொழுது இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை. காற்று இல்லை, வானமும் இல்லை. எது எதை மூடியிருந்தது? எங்கே மூடியிருந்தது? ஆழம் காண முடியாத நீர் இருந்ததா?

    மரணம் இல்லை, மரணமின்மை இல்லை. இரவையும் பகலையும் பிரிப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. மூச்சில்லாத ஒன்று தன் சொந்த வலிமையில் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தது. அது தவிர வேறு ஒன்றும் இல்லை.

    இருட்டு இருந்தது. அது இருளால் மூடப்பட்டிருந்தது. எல்லாமே இனம் புரியாத அந்தகாரம். இருந்ததெல்லாம் சூனியம். எதற்கும் உருவமில்லை. தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

    அதன் பின் இச்சை பிறந்தது. அதுவே மனதின் முதல் விதை. தங்கள் இதயத்திற்குள் தேடிய ரிஷிகள் ஸத்துக்கும் அஸத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டார்கள்.

    ஒளி பக்கவாட்டில் பரவியது. அதற்குக் கீழே என்ன இருந்தது? மேலே என்ன இருந்தது? வலிமையுள்ள அவர்கள் தோற்றுவிப்போர் ஆயினர். சுதந்திரச் செயல் கீழேயும் சக்தி மேலேயும் இருந்தது.

    இதை உண்மையில் அறிந்தோர் யார்? இதைக் கூறவல்லோர் யார்? எங்கிருந்து அது தோன்றியது? எங்கிருந்து இந்த சிருஷ்டி வந்தது? தேவர்கள் சிருஷ்டிக்குப் பின் தோன்றியவர்கள். எனவே அவர்களாலும் இதைச் சொல்ல முடியாது.

    படைப்பின் முதல்வனாகிய அவன் எல்லாவற்றையும் படைத்தானா? அல்லது அவன் படைக்கவில்லையா? அவனது கண் எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. அவனும் அறிவானோ மாட்டானோ?

    (இருள் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் படிப்படியாக விரிவடைகிறது. ஒரு காலத்தில் மீண்டும் சுருங்கத் தொடங்கி மீண்டும் இருள் புள்ளி நிலையை அடைகிறது. இவ்வாறு மாறி மாறி விரிதலும் சுருங்குதலும் ஏற்படுவதை வேத இலக்கியம் கூறுவதாக விவேகானந்தர் கூறுகிறார். ரிக் வேதத்தில் அவ்வாறு இருப்பதாக என் கண்ணில் படவில்லை.)

    பெரு வெடிப்புக்குப் பிறகு எல்லாமே விரைவில் நடந்தேறின. நிலம் உண்டாயிற்று. உயிரினங்கள் தாவரங்கள் தோன்றின. மனிதன் தோன்றினான். மனிதன் மிருகங்களைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தான். இந்நிலையில் அவனது வாழ்வில் பெரும் மாறுதலைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனிதன் தீயைக் கண்டுபிடித்த அந்த நிகழ்ச்சி மனித குல வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல். அது பற்றி வேதம், மாதரிச்வான் என்னும் காற்று ப்ருகுவிடம் அக்னியைக் கொண்டு வந்து கொடுத்தது, ப்ருகவர்கள் மரக் கட்டைகளைக் கொண்டு தீ மூட்டத் துவங்கினர் என்று கூறுவதிலிருந்து கீழ்க்கண்டவாறு நடந்திருக்கலாம் என ஊகிக்கலாம்.

    கற்களை எறிந்து மிருகங்களை வீழ்த்தும் அறிவில் மட்டுமே மிருகங்களிலிருந்து மனிதன் வேறுபட்டிருந்த காலம் அது. வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

    அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதர்க்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

    தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

    மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான்.

    பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

    கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

    த்வஷ்டா என்பவர் மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். ரிபு சகோதரர்கள் அதைச் சீர்திருத்தி மெல்லிய ஆனால் உறுதியான மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். வேதத்தில் இவர்கள் போற்றுதலுடன் நினைக்கப்படுகின்றனர்.

    மனித குல வரலாற்றின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியில் அங்கிரஸ் மற்றும் அவரது கூட்டத்தினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

    அங்கிரஸ் காலத்துக்கு முன்னரே மனிதர்கள் இயற்கையை உற்று நோக்கி அதில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதையும், மனிதனுக்கென்று ஒரு ருதம் இருப்பதையும் அறிந்து கொண்டனர். அங்கிரஸும் அந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றி நடந்தார். ஆனால் அவரது சிந்தனை இதைத் தாண்டி அப்பால் சென்றது. இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி இயக்கிக் கொண்டு இருப்பது யார் எனச் சிந்தனை செய்தார். அவரது கூட்டத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து ஆராய்ந்தனர். பல மாதங்கள் தவம் செய்தனர். ஒரு கூட்டம் ஒன்பது மாத முடிவில் கண்டு பிடித்த உண்மையை மற்றொரு கூட்டம் பத்து மாதத்தில் தெரிந்து கொண்டது. அவர்கள் என்ன தெரிந்து கொண்டார்கள்?

    ருதத்தை இயக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதற்கு தோற்றம் இறுதி இல்லை என்பது தான் அவர்கள் கண்ட உண்மை. அது என்றைக்கும் இருப்பது என்னும் பொருளில் அதற்கு ஸத் என்று பெயரிட்டனர். இப்படியாக அவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைந்தனர். அந்த ஸத்யத்தை வழிபட்டால் ஆனந்தம், கால உணர்வற்ற அமரத்துவ நிலை கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டனர். அதைச் சாமானிய மனிதர்கள் அடைய முடியாது தடுக்கும் தீய சக்தி எது என்பதையும் அவர்கள் அறிந்தனர்.

    நமக்கு உரிமையான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியாமல் யாரோ திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே எனச் சிந்தித்தனர். கடைசியில் நம்முடைய மனம் தான் நமக்கு எதிரி. நம்முடைய மனதில் உள்ள பகைவர்களை அழித்தால் ஆனந்தமாகிய பசுக்கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என அறிந்தார்கள். அந்த ஸத்தியத்தைத் தியானம் செய்யுங்கள் என்று சொன்னது அங்கிரஸ் கூட்டத்தினர் மனித குலத்துக்குச் செய்த ஒரு பேருபகாரம். வழிபாட்டின் சிறப்பை முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அங்கிரஸ்கள் என்கிறது வேதம். 10.67.2

    கண்ணுக்குத் தெரியாத ஸத்தியத்தைத் தியானம் செய் என்றால் அது எல்லோராலும் சாத்தியமா? அந்த நிலையில் தான் மனிதர்களுக்குத் தெய்வத்தைத் தொழுவதற்கான ஒரு எளிய முறையைக் கண்டுபிடித்த அதர்வன் தோன்றினார். அவர் தான் யக்ஞம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர். அக்னியைக் கண்ணால் பார்க்கலாம். மற்ற தேவர்களைக் கண்ணால் காண முடியாது. எனவே மற்ற தேவர்களுக்கான உணவை அக்னியில் சேர்த்து விடுங்கள். அவர் அதை அந்தந்தத் தேவர்களிடம் சேர்த்து விடுவார் என்று சொன்னார். தேவர்கள் பலரானாலும் எல்லோரும் ஒரே ஸத்யத்தின் பிரதிநிதிகள் தானே. அதனால் ஸத்தியத்தைத் தொழ விரும்பினால் உங்களுக்குப் பிடித்த தேவருக்கு அக்னி மூலமாக அவியுணவைக் கொடுத்து வழிபடுங்கள் என்று விளக்கினார். வேள்வி பிறந்தது.

    ப்ருகு, அங்கிரஸ், அதர்வன் ஆகிய இந்த முப்பெரும் மனித குல முன்னோர்களும் வேதத்தில் பல இடங்களில் போற்றப்பட்டு இன்றும் நம்மால் நன்றியுடன் நினைவு கூரப்படுகிறார்கள்.

    தர்ப்பணத்தின்போது இரண்டாவது ரிக்காகச் சொல்லப்படும் மந்திரம் இதற்கு ஓர் உதாரணம்.

    எங்கள் முன்னோர்களாகிய, ஒன்பது மாதம் தவம் செய்த அங்கிரஸ்கள், அதர்வாணர்கள், ப்ருகுக்கள் ஸோமபானம் தந்து வழிபடுவதற்கு உரியவர்கள். போற்றத் தகுந்த அவர்களது நல்லாசிகளில் நாம் வாழ்வோமாக. 10.14.6

    அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் யக்ஞியானாம் அபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம: 10.14.6

    இவ்வாறு பிரபஞ்சத் தோற்றம், தீயைக் கண்டுபிடித்தது, பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தது, வேள்வி மூலம் வழிபடும் முறையை ஏற்படுத்தியது ஆகிய மனித நாகரிக வளர்ச்சியின் சில முக்கிய மைல் கற்களைத் தொட்டுக் காட்டும் வேதத்தை மனித குல வரலாற்றுச் சுவடி என்று சொல்வது பொருத்தமே.

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 47

    சு. கோதண்டராமன்.

     

    சிரத்தை

    Sambrani Powder2

    பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி இல்லாமல் சிரத்தை வராது. சிரத்தை இல்லாத பக்தி பயன் தராது.

    சிரத்தை என்பது என்ன? இது பல அம்சங்கள் அடங்கியது.

    1. ஒரு செயல் செய்ய ஆரம்பிக்கும் முன் அதன் நோக்கம் என்ன, அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    2. அதை எப்படிச் செய்வது என்று அனுபவமுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    3. யாரிடம் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அவரை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். அவரிடத்தில் உள்ள நம்பிக்கை கடைசி வரை நிலையாக இருக்க வேண்டும். பாதி வேலையில் இருக்கும்போது நாம் செல்லும் பாதை சரியானது தானா என்ற சந்தேகம் வர இடம் கொடுக்கக் கூடாது.

    (சிரத்தையின் முக்கிய பகுதி இந்த நம்பிக்கை என்பதால் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் சொல்லப்படுகிறது. சிரத்தை என்பது விடாத நம்பிக்கை. நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார் பாரதி. ஆனால் நம்பிக்கை தவிர வேறு சில அம்சங்களும் கொண்டது சிரத்தை.)

    4. அவர் சொன்னபடி, இலக்கை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு சிறு அம்சத்தையும் விடாமல் கவனத்துடன் செய்ய வேண்டும்.

    5. அதற்கு மாறான செயல் எதுவும் செய்யக் கூடாது.

    6. இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால் மனம் தளராது தொடர்ந்து முயல வேண்டும்.

    சிரத்தையோடு படிக்கும் மாணவன் தன் இலக்கு 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது என்பதை எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்கிறான். எதை எதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் சொன்னபடி திட்டமிடுகிறான். அவர் மேல் முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்ன சொல் தவறாது படிக்கிறான். எல்லா முயற்சிகளையும் செய்கிறான். ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறான். கவனத்தைச் சிதறடிக்கக் கூடிய வேலைகளைப் புறக்கணிக்கிறான். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறான். அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளால் மனம் தளராமல் முழு கவனத்துடன் படிக்கிறான்.

    இத்தனையையும் மனதில் கொண்டு ஒரு செயலைச் செய்தால் அது சிரத்தையுடன் செய்யப்பட்டதாகிறது. சிரத்தையுடன் செய்யப்பட்ட செயல்கள் வெற்றி பெறும். சில சமயங்களில் தோல்வி ஏற்பட்டாலும் அதில் ஏற்பட்ட படிப்பினை அடுத்த முறை வெற்றி பெற நிச்சயம் உதவும். சிரத்தை இல்லாமல் செய்யப்படும் காரியம் பலன்  தராது. முயற்சி வீணாகும். மனதுக்கும் உடலுக்கும் துன்பம் தரும். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சிரத்தை பலன் தரும். சிரத்தை இல்லாதவர் வாழ்வு சீரழியும்.

    ரிக் வேதத்தில் 10வது மண்டலம் 151வது சூக்தம் ச்ரத்தா சூக்தம் எனப்படுகிறது. சிரத்தை என்னும் பண்பு இதில் போற்றப்படுகிறது. அதில் சொல்லப்பட்ட கருத்துகளைப் பார்ப்போம்.

    அக்னியை மூட்டுவதும் ஆகுதி அளிப்பதும் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும். பிறருக்குக் கொடுப்பதை சிரத்தையோடு கொடுத்தால்தான் பலன் கிடைக்கும். தேவர்களும் தங்களை விட வலிமை வாய்ந்தவர்கள் மீது சிரத்தை கொண்டிருக்கிறார்கள். சிரத்தை  செல்வம் தரும்.

    இப்படிப்பட்ட சிரத்தையை அடைவது எப்படி? அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தா தேவியைத் தியானித்தால்தான் சிரத்தை வளரும் என்கிறது வேதம். அதாவது சிறு செயல்களைச் சிரத்தையுடன் செய்ய முயன்றால் அதுவே பெரும் செயல்களிலும் சிரத்தையை வளர்க்கும். இதைச் சிறு வயதிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.

    சடங்குகள்:

    சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன. எப்படி என்று பார்ப்போம்.

    சந்தியா வந்தனம் முதலாக எத்தனையோ சடங்குகளை நாம் அனுசரிக்கிறோம். ஒவ்வொன்றிலும் பல மந்திரங்கள் உள்ளன. பல செயல்கள் அடங்கி உள்ளன. ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு செயலோடு இணைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். அவற்றுடன் மூச்சும் இணைய வேண்டும்.

    துவக்கத்தில் இதை எதற்காகச் செய்கிறோம் என்பதை நம் மனதுக்குள் நாமே தெளிவுபடுத்திக் கொள்கிறோம். அதுதான் சங்கல்பம் எனப்படுகிறது.

    நாமாகவே விரும்பி நம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது.

    சிராத்தம் என்பதற்குச் சிரத்தையுடன் செய்யப்படுவது என்பது பொருள். எல்லாச் சடங்குகளும் சிரத்தையாகத்தான் செய்யப்படவேண்டும். ஆனால் இறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் செய்யப்படும் சடங்கு மட்டும் சிராத்தம் எனப்படுவது ஏன் என்றால் இதில் கர்த்தா மட்டும் அல்லாது அவனது குடும்பத்தவரும் செய்து வைக்கும் புரோகிதரும் மற்றவர்களும் கூட சிரத்தையை அனுசரிக்க வேண்டும். இன்ன மாதிரித் தூய்மை செய்து கொள்ள வேண்டும், இன்னின்ன பொருள்களைப் பயன்படுத்தலாம், இன்னின்ன பயன்படுத்தக் கூடாது, இன்ன மாதிரி உடை அணிய வேண்டும், இலையின் நீளம் இவ்வளவு இருக்க வேண்டும், இன்னின்ன திசைகளில் உட்கார வேண்டும், குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆயிரக் கணக்கான கட்டுப்பாடுகள் இதில் உள்ளன. இது பல பேருடைய சிரத்தைக்கும் ஒரு சோதனைக் களம்.

    ஜப்பானியர் டீ குடிப்பதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதில் செய்யப்படும் முயற்சிகளில் ஒவ்வொரு நிலையிலும் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்கப்படுகிறது. நம் பல்வேறு சடங்குகளும் அது போன்ற மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் தாம். எல்லா வைதீகச் சடங்குகளிலும் ஏதோ சில வேத மந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பொருளைப் பார்த்தால் சடங்குக்கும்  சொல்லப்படும் மந்திரத்தின் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இராது.

    உதாரணமாக, தர்ப்பண மந்திரத்தில் வரும் மதுவாதா ருதாயதே என்ற மந்திரம் “என் கொள்ளுப் பாட்டனாரே, திருப்தி அடைவீர்களாக” என்று பொருள் தருவது அல்ல. இது தர்மத்தை அனுசரிக்கிறவனுக்கு உலகமே இனிமையாக உள்ளது என்பதைக் கூறுவது.

    சிராத்தத்தின் போது இலை போடப்படும் இடத்தைத் தர்ப்பையால் கூட்டும்போது சொல்லப்படும் மந்திரம், “இங்கிருந்து போய்விடுங்கள், இந்த இடம், இறந்து போன இந்த மனிதனுக்காகப் பித்ருக்கள் ஒதுக்கியது, யமன் இதை ஒளியாலும் நீராலும் அலங்கரித்துள்ளார்” என்பது.

    தெய்வத்துக்குச் சாம்பிராணி போடும் போது சொல்லும் தூரஸி தூர தூர்வந்தம் என்ற மந்திரம் என் பகைவனை அழி என்று வேண்டுவது. பரிஷேசனத்தில் சொல்லப்படும் மந்திரம் ஸவிதா என் புத்தியைத் தூண்டட்டும் என்ற வேண்டுகோளையும் ருதத்துடன் ஸத்யத்தை சேர்த்து உணர்ந்து வாழ்வோமாக என்ற அறிவுரையையும் கொண்டது.

    எதற்காக, இப்படி சம்பந்தமில்லாத வேத மந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்? உண்மை என்னவென்றால், வேத மந்திரங்களின் பொருள் முக்கியமல்ல. அவை சிரத்தையோடு கற்கப்பட்டவை, சிரத்தையோடு பாதுகாக்கப்படுபவை, சிரத்தைப் பயிற்சி பெற்ற வைதிகர்கள் அதை உச்சரித்து வழி நடத்துகிறார்கள் என்பதால் நமக்கும் சிரத்தை ஏற்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் வெவ்வேறு மந்திரங்களை வெவ்வேறு சடங்குகளுடன் இணைத்து வைத்தனர்.

    வேதம் பயிற்றுவிக்கப்படும் முறை பற்றி நாம் நன்கு அறிவோம். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடித்ததால் தான் வேதம் இன்றளவும் உருமாறாமல் இருக்கிறது. கடுமையான சிரத்தைப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவருவதால் தான் எல்லா வைதிகச் சடங்குகளிலும் புரோகிதர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடக்கின்றனர்.

    புரோகிதரின் பொறுப்பு மிகப் பெரியது. ஒரு சமுதாயத்தையே வழி நடத்தி முன்னேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் சிரத்தைக் குறைவு ஏற்பட்டால் சமுதாயம் முழுவதும் பாதிக்கப்படும். தானும் சிரத்தையுடன் நடந்து கொண்டு மற்றவர்களுக்கும் சிரத்தையை ஏற்படுத்துவது தான் அவர்களது முதல் லட்சியம், பணம் சம்பாதிப்பது அல்ல.

    சமிதா தான மந்திரம், அக்னியே எனக்குச் சிரத்தையைக் கொடு என்று வேண்டுகிறது. சிறு வயதிலிருந்து சந்தியா வந்தனம், சமிதா தானம் முதலானவற்றின் மூலம் சிரத்தைப் பயிற்சி ஏற்பட்டுவிட்டால் அவன் வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுகிறான். பிராமணர்களுக்கு என்று கடவுள் விசேஷமாக அறிவைக் கொடுக்கவில்லை. அவர்களது வளர்ப்பு முறையில் இந்தச் சிரத்தைப் பயிற்சி தான் அவர்களது அறிவைச் சுடர் விட்டு விளங்கச் செய்கிறது. தந்தை சந்தியா வந்தனத்தைக் கைவிடுவதன் மூலம் தன் சிரத்தைக் குறைவைக் காண்பித்தால் அவரையே முன் மாதிரியாகக் கொண்டு பையனும் கைவிடுகிறான். சமுதாயம் சீரழிய இது காரணமாகிறது.

    தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

    பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அடக்கு முறையால் அமல் நடத்தப்படுகின்றன, ஆசிரியர் இல்லாத நேரத்தில் கட்டுப்பாட்டை மீறும் ஆசை ஏற்படுகிறது. வீட்டில் வைதிகச் சடங்குகளின் கட்டுப்பாடுகள் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பதால் அவற்றை மீறும் துணிச்சல் ஏற்படுவதில்லை. அவற்றில் பயம், பக்தி, சிரத்தை மூன்றும் கலந்து இருப்பதால் அவை மாணவர்களின் ஒழுக்கத்தை நல்ல முறையில் வளர்க்கின்றன.

     

     

    படம் உதவி: https://anticastregoneria.wordpress.com/blog/page/22/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 46

    –சு. கோதண்டராமன்.

     

    பக்தி மாத்திரம்தான் உண்டு

     

    praying-figurine

     

     

    பொதுவாக, யக்ஞம் செய்வதை ஆதரிக்காத உபநிடதங்களை ஞான காண்டம் என்றும் அதை ஆதரிக்கும் ஸம்ஹிதை உள்ளிட்ட பிற வேதப் பகுதிகளைக் கர்ம காண்டம் என்றும் சொல்வது வழக்கம்.

    ஸம்ஹிதைகளைப் பொறுத்தவரை அவை யக்ஞங்கள் செய்வதை ஆதரிப்பதாகவும் கூற முடியாது, எதிர்ப்பதாகவும் கூற முடியாது. யக்ஞம்தான் உலகின் மையப் புள்ளி என்றும் யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று கூறும் ரிக் ஸம்ஹிதை, யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மூலமே தேவர்களை மகிழ்விக்க முடியும் என்றும், யக்ஞத்தை விட உழைப்பு மேலானது என்றும் கூறுவதை முன்பு கண்டோம். சாயணரின் விளக்கம்தான் அதைக் கர்மகாண்ட நூலாக்கியது. அதன் உண்மையான பொருளைப் பார்க்கும்போது அது ஒரு பக்தி நூலாகத்தான் தெரிகிறது.

    ஸம்ஹிதைகளைக் கர்ம காண்டமாகப் பார்க்கும் தத்துவமாகிய பூர்வ மீமாம்சை கர்மா செய்தால் அததற்குரிய பலன் தானே விளையும், இதற்குப் பலதாதாவாகிய ஈச்வரன் ஒருவன் அவசியமில்லை என்று கூறும்.

    இறைவன் என்று ஒருவன் இருப்பதையே மறுப்பதாகக் கூறப்படும் ஸம்ஹிதையில் பக்தி மாத்திரம்தான் உண்டு என்று பாரதி சொல்வதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

    பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

    இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இதுதான் பக்தியின் அடையாளங்கள்.

                புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று  நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது. 7.22.5

    கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இங்கு காணலாம். இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்று வேண்டுகிறது 7.32.22.

    அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல உன்னைத் துதிக்க வலிமையும் நீயேதான் கொடுக்க வேண்டும் என்று அக்னி வேண்டப்படுகிறார். 5.10.7

                இறைவன் என்னை அறிவான், நான் அவனது செல்வத்தை அனுபவிக்கிறேன். ஆனால் அவனை அறியவில்லை. 5.12.3

                மனதிற்கெட்டாதவன் இறைவன். 5.17.2

    தெய்வத்தை மிக உரிமையுடன் நெருங்கிப் பேசுகிறார் ரிஷி  விரூப ஆங்கிரஸர். அக்னியே, நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் நான் உன் வேண்டுகோளை உடனே நிறைவேற்றியிருப்பேன் என்கிறார். 8.44.23

    மற்றொரு ரிஷியான காண்வாயனர் என்பவர், நான் இந்திரனாக இருந்தால் என் பக்தன் நிறைய பசுக்களைப் பெறுவான். என்கிறார். 8.14.1 நான் எத்தனை சொன்னாலும் நீ காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே, தெய்வம் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா இருப்பது என்ற அவர்களது ஆதங்கம் அதில் தொனிக்கிறது.

    இந்திரன் விலை பேசப்படுகிறார். யாராவது இந்த இந்திரனை 10 மாடு கொடுத்து என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்திரனைக் கொண்டு, தங்கள் பகைவர்களை கொன்ற பிறகு, அவனை என்னிடம் திருப்பித் தரலாம் என்கிறது ஒரு மந்திரம். 4.24.10

    நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்கிறது ஒரு ரிக்.8.92.32

                இந்திரா, மற்றவர்களுடைய பூசைக்குச் செல்லாமல் முன்னதாக என் பிரார்த்தனைக்குச் செவி மடுப்பாயாக. 10.160.1

                இந்திரா, நீ பிறந்தது முதல் சகோதரனோ வேறு உறவோ இல்லாமல்  இருக்கிறாய். அதனால் என்னை உறவினன் ஆக்கிக் கொள்ள விரும்புகிறாய் என உறவு கொண்டாடுகிறார் ஒருவர். 8.21.13

                தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் 3.53.2 என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி.

    அக்னியை, இந்திரனைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் பல உள்ளன. இதோ ஒரு மந்திரம் மருத்துகளைத் தந்தையாகக் காண்கிறது. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? 1.38.1

    சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே என்ற மந்திரம் 8.45.34 கந்தர் சஷ்டி கவசத்தில் வரும் எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு, பொறுப்பது உன் கடன் என்ற வாக்கியத்தை நினைவூட்டுகிறது.

                உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரை யான் பின் செல்கேன் என்ற திருமுருகாற்றுப்படையின் பிற்சேர்க்கைப் பாடல் கருத்து  உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை  என்று 8.66.1 இல் காணப்படுகிறது.

                உன் மேல் நம்பிக்கை வைத்துத் தான், இந்திரா, நான் கதிர் அரிவாளுடன் களத்தில் நிற்கிறேன். கை நிறைய தானியங்களை அருள்வாய்  என்று தன் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ஒருவர். 8.78.10

    பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி.

                இந்திரன் எனக்கு மட்டுமே உரியவனாகட்டும் என்கிறார் ரிஷி. 1.7.10

    இந்திரன் என்றும் அக்னி என்றும் பல பெயர் கூறி அழைத்தாலும் எல்லாம் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே குறிப்பிடுகின்றன என்பதைப் பார்த்தோம்.  வேதத்தில் பல வேறு தெய்வங்களையும் அன்புடன் அழைத்து, தன் மன விருப்பங்களைத் தெரிவித்து அவற்றை நிறைவேற்றுமாறு உரிமையுடன் வேண்டுகின்ற பக்தி மணம் கமழும் மந்திரங்கள் பல உள்ளன.

    படம் உதவி:   http://www.crystalsrocksandgems.com/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 45

    –சு. கோதண்டராமன்.

    துன்பம் நீங்க வேதம் கூறும் வழி

    boston.com.bigpicture

     

    நம் விருப்பம் நிறைவேறாமல் தடுக்கும் தடையே துன்பம் என்பது. இது வேதத்தில் பல சொற்களால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும் துன்பத்தின் ஒரு குறிப்பிட்ட வகையைக் குறிக்கிறது.

    ரேபஸ் என்பது அங்கக் குறைபாட்டைக் குறிக்கும். தேவர்கள் ரேபஸ் இல்லாதவர்கள் என வேதம் கூறுகிறது.

    நோயைக் குறிக்க ரபஸ், அமீவா என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ருத்ரன் ரபஸை நீக்குபவராகக் கூறப்படுகிறார். (2.33.7)          மருத்துகளே, உடைந்த எலும்பைச் சரி செய்து ரபஸை நீக்குக என்கிறது மற்றொரு ரிக். (8.20.26)

    உயிர் வாழத் தேவையான உணவு, நீர் இவை கிடைக்காத நிலை, அதாவது வறுமை – அம்ஹஸ், அம்ஹதி என்ற சொற்களால் கூறப்படுகிறது. இந்திரா எங்களுக்கு செல்வம் கொடுத்து அம்ஹஸை நீக்குக என்கிறது ஒரு மந்திரம். (4.20.9) சிறையிலகப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல் முதலியனவும் இதே தலைப்பில் அடங்கும்.

    நமக்கு நெருங்கினவரது மரணத்தால் ஏற்படும் துன்பம் அகஸ் अघस्. எங்களது அகஸ்ஸைப் போக்கிச் செல்வத்தை அருளுக, அக்னியே என்கிறது வேதம். (1.97.1 )

    இந்த சூக்தத்தில் உள்ள எட்டு மந்திரங்களும் சிதைக்கு எரி மூட்டுவதற்கு முன்பாக, பிரேதத்தைச் சுற்றி வரும்போது சொல்லப்படுகிறது.

    அக்னியே எங்களை அகஸ்ஸுக்கோ, விஷகடிக்கோ உள்ளாக்காமல் காப்பாயாக.(1.189.5)    

     எங்களுக்குத் துன்பம் தருபவர்க்கு நீ அகஸ்ஸைக் கொடுப்பாயாக. (5.3.7)

    பிறருக்குக் கொடுக்காமல் உண்பவன், மரண துக்கம் வரும்போது அதைத் தனியாக அனுபவிக்கிறான் என்பதைக் கேவலாதி கேவலாக: என்று சுருக்கமாகக் கூறுகிறது ஒரு ரிக். (10.117.6)      

    பிரத்தியட்சமாக அனுபவிக்கும் துன்பங்கள் மட்டுமன்றி, வரவிருக்கும் துன்பம் வராமல் காப்பாற்ற வேண்டும் மந்திரங்கள், இந்திரா, எங்களைத் துன்பத்தில் தள்ளாதே (1.54.1)   போன்று பல உள்ளன.

    துரிதம் என்பது எல்லா வகையான துன்பங்களையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்.

    பெரும்பாலான மந்திரங்கள் எங்களது துன்பத்தை நீக்கு என்றுதான் வேண்டுகின்றன. என்னுடைய துன்பத்தை நீக்கு என்று வேண்டும் மந்திரங்கள் மிகக் குறைவு.

    துன்பத்தின் காரணத்தைப் பற்றிக் கூறும்போது, மனிதர்களால் ஏற்படுவது, தேவர்களால் கொடுக்கப்பட்டது என இரண்டு வகையாகப் பிரிக்கிறது வேதம் – மர்த்ய க்ருதம், தேவ க்ருதம். மனிதரால் ஏற்பட்ட துன்பத்தையும் தான் செய்த தவற்றினால் ஏற்படுவது, மற்றவர்கள் செய்த தவற்றினால் ஏற்படுவது என இரண்டாகப் பிரிக்கிறது.

    எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளிலிருந்தும் நாங்கள் செய்த தவறுகளிலிருந்தும் எங்களை விடுவிப்பாயாக. (7.86.5)           மற்றவர்கள் செய்த பாவத்தின் பலனை நாங்கள் அனுபவிக்காமல் இருப்போமாக.(2.28.9)

    திரிகளின் சாபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து (அபிசஸ்தி), காக்குமாறு வேண்டுகிறது. (1.18.3, 6.42.4)       

    தான் செய்த தவறு என்பது ஆகஸ் (आगस्) எனப்படுகிறது. அதுவே சிறியதாக இருந்தால் அது ஏனஸ் எனப்படுகிறது.

    எது பாவம்? ருதத்தை (இயற்கை நியதியை) மீறுவது பாவம். அதன் விளைவாகத் தேவர்கள் துன்பம் கொடுக்கிறார்கள். ருதம் என்பது மேலோரைப் போற்றலும் சார்ந்தோரைக் காத்தலும் ஆகும் என்பதை முன்னர் பார்த்தோம். மனிதன் ஏன் ருதத்தை மீறுதலாகிய பாவத்தைச் செய்கிறான்?

    பாவத்திற்குத் தூண்டு கோல்கள் யாவை என்று ரிஷி பட்டியல் இடுகிறார். அவை மது, கோபம், சூது, அறியாமை, கனவுகள் என அறிகிறார். பாவம் செய்யாதிருக்கப் புத்தி கொடு என்று வேண்டுகிறார். (7.86.6,7.)

    மற்றொரு மந்திரத்தில், அறியாமை, ஆணவம், கவனமின்மை, தூண்டுதல்களை எதிர்கொள்ள முடியாத பலவீனம் ஆகியவை பாவம் செய்வதன் காரணமாகக் கூறப்படுகின்றன. (4.54.3)   

    செயலால் செய்யப்படுவது மட்டும் பாவம் அல்ல. வாயினால் தவறாகப் பேசுவதும் பாவம் என்கிறது வேதம்.

        மற்றவர்களிடம் பேசுவதிலோ, மற்றவர்களைப் பற்றிப் பேசுவதிலோ, தெரிந்தோ தெரியாமலோ தூங்கும்போதோ விழித்திருக்கும்போதோ நாங்கள் என்ன தவறு செய்தாலும் அதை வருங்காலத்திலும் செய்யாமல் காப்பாயாக. (10.164.3)

    பாவத்திலிருந்தும் அதன் விளைவான துன்பத்திலிருந்தும் தப்புவது எப்படி? பிரார்த்தனை ஒன்றுதான் வழி. தேவர்களைச் சரணடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் துன்பங்களிலிருந்து நீங்க வேதம் கூறும் ஒரே மார்க்கம்.

    தேவர்களைச் சரணடைந்து விட்டால் துன்பங்களிலிருந்து தப்பித்து விடலாம் என்ற துணிச்சலில் பாவம் செய்து கொண்டே இருக்கலாமா? முடியாது. தேவ பூசைக்கு முன்னதாக நாம் நம்மைப் பாவங்கள் இல்லாதவர்களாகச் செய்து கொள்ள வேண்டும்.

    “பாவம் நீங்கினால்தான் தேவ பூசை செய்யலாம், தேவரைப் பூசித்தால்தான் பாவம் நீங்கும்” என்பது குழப்பமாகத் தோன்றும். இதன் பொருள் என்னவெனில், பாவத்தைப் போக்கிக் கொள்ள நம்முடைய முயற்சியும் அவசியம், அதாவது செய்த பாவங்களுக்காக நாம் மனமார வருந்த வேண்டும் என்பதுதான். மனதில் பாவ நாட்டம் இல்லாமல் தூய்மை செய்து கொண்டால்தான் பூசை செய்வதற்கு உரிய தகுதி கிடைக்கும். பூசை செய்வதன் மூலம் பாவத்தின் விளைவுகளைத் தேவர்கள் நீக்குவார்கள்.

    தேவர்களைப் பூசிப்பதால் செய்த பாவங்கள் போவது மட்டுமல்ல, இனி வருங்காலத்தில் பாவம் செய்வதற்குக் காரணமான எண்ணங்களும் நீக்கப்பட்டு மனம் தூய்மை அடையும் (10.63.8)  என்பது தெரிகிறது. ஆண்டாளின் திருப்பாவையில் வரும் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா?

    பாவக் கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி:

    புராண காலத்தில் ருதம் என்ற கருத்துரு மறைந்து முழுமுதல் கடவுள் என்ற கோட்பாடு உண்டாயிற்று. அந்நிலைக்கு சிவனை உயர்த்தின சில நூல்கள். விஷ்ணுவை உயர்த்தின வேறு சில நூல்கள்.

    ருதம் வழக்கு ஒழிந்ததால் ருதத்தை மீறுதல் பாவம் என்பதும் மறைந்தது. பிறர்க்கு துன்பம் தருவது தான் பாவம் என்ற எண்ணம் பரவலாயிற்று. அத்துடன் பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம் என்ற புதிய கருத்தும் வளர்ந்தது. பரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம்.

    இது புத்த சமயத்தின் தாக்கமாக இருக்கக் கூடும்.

     

     

     

    Picture Source: http://www.boston.com/bigpicture/2013/04/daily_life_march_2013.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 44

    –சு. கோதண்டராமன்.

    ரிஷிகள் வேண்டிய செல்வம்

    atllUXQ

     

    (இதுவரை வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்களான, தேவ, யக்ஞ, ருதம் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி வேதத்தின் வேறு சில குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.)

    ரிக் வேதத்தின் முதல் மந்திரம் அக்னியை வேண்டுவது. அதில் அக்னி செல்வம் தருபவராகப் போற்றப்படுகிறார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் அக்னியைச் செல்வத்தின் தலைவராகவும் செல்வம் தருபவராகவும் கூறுகிறது வேதம்.

    அக்னி மட்டுமல்ல, வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள், சூரியன், உஷை ஆகிய எந்தத் தெய்வத்தை வேண்டினாலும் அவர்களிடம் “எங்களுக்குச் செல்வம் கொடு” என்ற கோரிக்கை முன் வைக்கப் படுகிறது.

    இவ்வாறு நூற்றுக்கணக்கான இடங்களில் இந்தப் பிரார்த்தனை திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கும் போது ரிஷிகள் செல்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே என வியப்புத் தோன்றும். இது பற்றி ஆராய்வோம்.

    செல்வம் என்பதற்கு அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – வஸு, ரயி, ரேக்ண, தனம், ராதஸ் முதலியவையாம். இவை அனைத்தும் ஒரு பொருட்சொற்கள்.

    செல்வம் என்றால் எத்தகைய செல்வம்? அவர்கள் பிரார்த்தனையில் எங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு, மக்கட்பேறு கொடு, உணவு கொடு என்பதோடு கூட செல்வமும் கொடு என்று வேண்டுவதால் செல்வம் என்பது மேலே கண்டவை அல்லாத வேறு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என அறிகிறோம்.

    அது பணமா? அக்காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்ததால் பொருளாதாரப் பரிவர்த்தனைச் சாதனமாக தங்கமோ வெள்ளியோ பயன்படுத்தப்படவில்லை என்பதையும்  அறிகிறோம். அவர்கள் தங்கம் வெள்ளியை அறிந்திருந்தும் கூட எங்கும் தங்கம், வெள்ளி கொடு என்று வேண்டவில்லை.

    தெய்வங்களைப் போற்றும்போது பொன் வண்ணமுடையவர் என்று போற்றுகின்றனரே அன்றி ஆடவரோ, பெண்டிரோ தங்க நகை அணிந்து மகிழ்ந்ததற்குச் சான்றான குறிப்புகளும் அங்கு இல்லை. தெய்வத்திடம் கேட்டுப் பெற்ற செல்வத்தை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்களும் இல்லை.

    எனவே அவர்கள் கோரிய செல்வம் என்பது வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இன்னும் ஆராய்வோம்.

    ரிஷிகள் வேண்டிய மற்ற பொருள்களான உணவு, நீண்ட ஆயுள், மக்கட் பேறு இவை உலக வாழ்வின் பௌதிகத் தேவைகளை நிறைவு செய்து சந்தோஷம் தருவன. செல்வம் என்பது ஆனந்தம் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் ஆனந்தம் சந்தோஷம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே தமிழில் மகிழ்ச்சி என்று மொழிபெயர்க்கப்பட்டாலும் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உண்டு. சந்தோஷம் என்பது திருப்தியடை என்ற பொருளுள்ள ‘துஷ்’ என்ற வேரிலிருந்து பிறந்தது. ஆனந்தம் என்பது மகிழ்ச்சி அடை எனப் பொருளுடைய ‘நந்த்’ என்ற தாதுவிலிருந்து தோன்றியது. நமக்கு ஒரு தேவை இருந்து அது நிறைவேறுவதால் ஏற்படும் திருப்திக்குப் பெயர் சந்தோஷம். தேவைகள் அற்ற நிலையில் உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்குத்தான் ஆனந்தம் என்பது பெயர்.

    உதாரணமாக, பசியினால் வருந்தும் ஒருவனுக்கு உணவு கிடைத்தால் அவனது தேவை நிறைவடைகிறது. அந்த திருப்தி உணர்வு சந்தோஷமாகும். பசி முதலான உடல் தேவைகள் தீர்ந்த குழந்தை தனக்குத் தானே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் அடையும் உணர்வு ஆனந்தம். அவ்வாறே மனநலம் சரியில்லாத ஒருவன் எந்தக் காரணமுமின்றி சிரித்துக் கொள்கிறான். அதுவும் ஆனந்தமே. (இந்த இரண்டாவது உதாரணம் வியப்பூட்டலாம். ஆனால் ஆதி சங்கரர் பஜகோவிந்தம் என்னும் நூலில் பிரம்மத்தில் ஈடுபட்ட ஞானியின் சித்தம் அளவற்ற ஆனந்தம் அடைவதாகவும் குழந்தைகள் போலவும் பித்தர்கள் போலவும் ரமிப்பதாகவும் கூறுகிறார்.)

    யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ. 19

    யோகீ யோக நியோஜித சித்தோ ரமதே பாலோன்மத்தமதேவ 22

    கவிஞர்கள் இந்த ஆனந்தத்தைத்தான் பெரிதாக மதித்தார்கள். அன்றாட வயிற்றுப் பாட்டுக்குக் காணி நிலத்துக்கு மேல் ஆசைப்படாத பாரதி, அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிற் பட வேண்டும் என்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலாவை உணர்ந்து இன்பம் காண்கிறார். பார்க்கும் மரங்களில், காக்கைச் சிறகினில் எல்லா இடங்களிலும் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்.

    ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

    I gazed—and gazed—but little thought

    What wealth the show to me had brought:

    நான் அந்த டாபோடில் மலர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு எத்தகைய செல்வம் தந்தது என்பதை அப்பொழுது உணரவில்லை.   பின்னர் வீட்டில் தனிமையில் நாற்காலியில் சாய்ந்து அமைதியான மன நிலையில் இருந்தபோது அது என் உள்ளத்தை ஆனந்தத்தால் நிறைத்து மலர்களுடன் நடனமாடச் செய்தது என்று கூறுகிறார்.

    நம்மைச் சுற்றிலும், இறைவனால் படைக்கப்பட்ட அழகான இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஆனந்திக்கும் மனம் வேண்டும். ரசிக்கும் மனம் இல்லாவிட்டால் எந்தப் பொருளும் ஆனந்தம் தராது. அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பொருளிலும் அழகைப் பார்க்க முடியும். அத்தகைய மனம் தம்மிடம் என்றும் மாறுதலின்றி இருக்க வேண்டும் என்று ரிஷிகள் விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் செல்வம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் என்றும் குறையாத இச்செல்வம் பிறரால் களவாடப்பட முடியாதது. இது ஒன்று இருந்து விட்டால் உலகத் தேவைகளில் ஒரு சில குறைந்திருந்தாலும் குறையாகத் தோன்றாது.

    இதோ இந்தக் கவிதையைப் பாருங்கள். மதுவாதா ருதாயதே என்று தொடங்கும் இது ரிக் முதல் மண்டலம்  90 வது சூக்தத்தில் உள்ளது.

    ருதத்தைப் பின்பற்றுபவனுக்குக் காற்று இனியது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன.

    செடிகொடிகள் எங்களுக்கு இனியவையாக இருக்கட்டும்.

    இரவும் பகலும் எங்களுக்கு இனியன. மண் இனியது. விண் இனியது.

    சூரியன் இனியவன், பசுக்கள் இனியன.

    இந்தக் கருத்தைத்தான் பாரதி தன் வசன கவிதையில் இப்படிப் பாடுகிறார்.

    இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

    காற்றும் இனிது. தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது.

    ஞாயிறு நன்று, திங்களும் நன்று.

    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

    மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது.

    கடல் இனிது, மலை இனிது, காடு இனிது.

    ஆறுகள் இனியன.

    சூரியன் தன் தெய்வீக வசுக்களுடன் தோன்றுகிறான் என்னும் போது அது இயற்கை எழிலைத்தான் குறிக்கிறது என அறிகிறோம். வைகறைப் பொழுதை வியந்து போற்றும் ரிக் 1-113 இன் மொழிபெயர்ப்பை முன்பு பார்த்தோம். அதில் ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

    உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

    எண்ணிலா விடியல் கண்டு களித்து

    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

    உஷையின் ஒளி கண்டு உள்ளம்    மகிழ்ந்திட

    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

    புதிய மக்கள் நாளை வருவர்

    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

    பாரதியும் வேர்ட்ஸ்வொர்த்தும் மற்றும் உயர்ந்த கவிஞர்கள் பிறரும் எதைச் செல்வம் என்று கருதினரோ, அந்த இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று ரிஷிகள் கருதினர் என்று அறிகிறோம். மழையைக் குறித்தும் புயற் காற்றைக் குறித்தும் பிற இயற்கைத் தோற்றங்களைக் குறித்தும் அவர்கள் பாடிய கணக்கற்ற பாடல்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன.

    இந்த ரயி (செல்வம்)ஒருவருக்குக் கிடைக்கப் பெற்றால் அவருக்கு வாழ்க்கையாகிய போர்க் களத்தில் தோல்வி என்பதே இல்லை. அவருக்குப் பகைவர்கள் இல்லை.

                ஜயத்திற்கு மூலமாயிருப்பதும், பகைவர்களைத் தாழ்த்துவதுமான ரயியை எங்களுக்கு அளிக்கவும். குதிரை மீது செய்யப்படும் போரிலோ அல்லது கைகலந்து செய்யும் போரிலோ அந்தச் செல்வத்தால் நாங்கள் பகைவர்களை வெல்வோமாக. 1.8.1,2

    இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்ல. வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அடையவும் இந்த  ரயி உதவும் என்பது இதை ஒளியை அறிய உதவும் செல்வம் (ஸ்வர்விதம் ரயிம்) 8.13.5 என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

    Picture Source: http://viralscape.com/city-nature-cinemagraphs/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 43

    சு. கோதண்டராமன்.

    யக்ஞமும் ருதமும்

    PhotosVallalar9

     

    யக்ஞம் என்ற சொல் முதலில், தீ மூட்டிச் செய்யப்படும் வழிபாட்டை மட்டும் குறித்தது; பின்னர், நமக்கு இதற்கு முன் உதவி செய்த, அல்லது இனிமேல் உதவி செய்யக்கூடிய மேலோரிடம் காட்டப்படும் நன்றியையும் வணக்கத்தையும் குறிப்பதாக வளர்ந்தது என்று பார்த்தோம். இதன் பொருள் மேலும் வளர்ந்தது.

    மேலோரிடம் உதவி கோரி வணங்குகிறோம். தன்னைச் சரணடைந்தோருக்கு உதவி செய்ய வேண்டுவது மேலோரின் கடமை ஆகிறது. எனவே யக்ஞம் என்பது மேலோரைப் போற்றல் மட்டுமல்ல, கீழோரைக் காத்தலும் யக்ஞம் என்பதன் பொருள் ஆயிற்று.

    ருதத்தின் பல பண்புகளில் சார்ந்தோரிடம் பரிவு காட்டுவதும் ஒன்று என்று பார்த்தோம். அப்பொழுது பரிவு காட்டப்பட்டவர்களின் கடமை உதவி செய்தோரிடம் நன்றியுடனும் வணக்கத்துடனும் இருத்தல் என்று ஆகிறது. எனவே ருதம் என்பது கீழோரைக் காத்தலும் மேலோரைப் போற்றலும் என்று ஆகிறது.

    இவ்வாறு பொருள் விரிவடைந்த நிலையில் யக்ஞத்துக்கும் ருதத்துக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது. எனவே ருதம் என்ற சொல்லுக்குச் சாயணர் பெரும்பாலான இடங்களில் யக்ஞம் என்றே பொருள் கூறுகிறார். ருதத்தின் செயல் வடிவம் தான் யக்ஞம்.

    உதவி செய்வோருக்கு வணக்கம் செலுத்துவது மட்டும் யக்ஞம் அல்ல, நம்மைச் சார்ந்தோருக்கு உதவி செய்வதும் யக்ஞமே என்பதன் அடிப்படையில் தான் பிற்கால ரிஷிகள் நாம் தினசரி செய்ய வேண்டிய கடமையாகப் பஞ்ச மஹா யக்ஞம் என்ற ஐந்து வகை யக்ஞங்களை ஏற்படுத்தினார்கள். அவற்றில் தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம் என்பவை மேலோருக்குச் செய்யப்படும் வணக்கம் ஆகும். நம்மை அண்டி வாழும் பசு முதலான பிராணிகளைக் காப்பாற்றுவது பூத யக்ஞம். அதிதிகளுக்கு உணவளித்தல் ந்ருயக்ஞம். சமூகத்தில் குழந்தைகள், முதியவர்கள், ஏழைகள் முதலான நம்மைச் சார்ந்து வாழும் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை வேதம் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. யக்ஞத்தை பஞ்சயாம (ஐந்து வழிகள் உடையது) என வர்ணித்திருப்பது இதைத்தான் குறிப்பதாக இருக்க வேண்டும்.

    இந்த விரிந்த பொருளில் யக்ஞம் செய்வதுதான் வாழ்வாங்கு வாழும் முறையாகும். தஸ்யுக்கள் யக்ஞம் செய்வதில்லை. அவ்வாறு யக்ஞம் செய்யாதவர்களை மித்ரனும் வருணனும் அழிக்கிறார்கள். (10.52.4, 10.124.1)

    யக்ஞம் செய்வோரின் குலம் பெருக வேண்டும் என்றும் யக்ஞம் செய்யாதவரின் எண்ணிக்கை வர வரக் குறைய வேண்டும் என்றும் ஒரு மந்திரம் வேண்டுகிறது. (7.61.4)

    யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.

    யக்ஞம் செய்யாதவர் தடுமாற்றம் அடைகிறார்கள்.
    யக்ஞம் என்பது உலகத்தின் நாபி, மையப்புள்ளி ஆகும். (8.13.29)
    அது மனிதர்களை ரிஷி நிலைக்கு உயர்த்தும். (10.130.6)
    அது இந்திரனின் நட்பைப் பெற்றுத் தரும். (10.62.1)
    அது இந்திரனை வலுப்படுத்துகிறது.(6.34.4)
    அது மனதைத் தூண்டுகிறது. (8.92.21)
    தந்தை மகனுக்குச் செய்வது போல, உறவினர் மற்றொரு உறவினருக்குச் செய்வது போல, நண்பன் தன் நண்பனுக்குச் செய்வதைப் போல அக்னி யக்ஞம் செய்கிறார் என்று கூறுகிறது வேதம். (1.26.3)

    இதிலிருந்து யக்ஞம் என்பது அன்புடன் செய்யப்பட வேண்டிய உதவி என்பது தெரிகிறது.

    Picture Source: https://www.auro-ma-ramalingam.org/BiographicalPaintings_vallalar.php

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 42

    சு. கோதண்டராமன்.

     

    ஸத்யமும் ருதமும்

    ravi அர்த்தநாரீஸ்வரர்

     

    ஸத்யம் த்வா ருதேன பரிஷிஞ்சாமி  என்பது இறைவனுக்கு உணவு படைக்கும்போது சொல்லப்படும் மந்திரம். ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன் என்பது பொருள்.

    ருதம் என்பது இயற்கை நியதியைக் குறிக்கிறது என்று பார்த்தோம். இனி, ஸத்யம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் பற்றிப் பார்ப்போம். ஸத்யம் என்பது ஸத் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு உள்ளது என்று பொருள். எது உள்ளதோ அது உண்மை, ஸத்யம்.
    (தமிழில் உள்ளது, இருக்கிறது ஆகிய இரு சொற்களும் ஒரே பொருள் உடையவை ஆயினும் உள்ளது என்ற சொல்லுக்கு மட்டும் இறந்த காலமும் வருங்காலமும் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் வினையாகும்.)

    ஸத்யம் என்பது முக்காலத்திலும் எது இருக்குமோ அதைக் குறிப்பிடுகிறது. காலத்ரய அபாத்யம் (மூன்று காலங்களிலும் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்பது) என்று சாஸ்திரங்கள் ஸத்யத்திற்கு விளக்கம் அளிக்கின்றன. எனவே ஸத்யம் என்பது பரம் பொருளைக் குறிப்பது அறியப்படுகிறது.

    ஸத்யம் தோற்பதில்லை:
    ஸத்யம் ஏவ ஜயதே என்ற உபநிடத வாக்கியத்தை, ‘வாய்மையே வெல்லும்’ என்று மொழி பெயர்த்து, கடைசியில் என்றோ ஒரு நாள் ஸத்யம் வெல்லப்போகிறது என நாம் கருதுகிறோம். அது சரியான பொருள் அல்ல.

    ஜயதே என்ற சொல் முக்காலத்திலும் வெல்கிறது என்று பொருள் தரும் நிகழ்கால வினை ஆகும். என்றும் வென்று நிலை நிற்பது உண்மையே (பரம் பொருளே) என்பதுதான் சரியான பொருள்.

    ருதமும் ஸத்யமும்:
    ருதம் என்பது பிரபஞ்சத்தின் ஒழுங்கு முறை. அதன் இயக்கத்துக்குக் காரணமான நியதி. இது இறைவனின் செயலாக்கத்தைச் சுட்டுவது. ஸத்யம் என்பது பரம்பொருளின் இருப்பைக் கூறுகிறது. பரம் பொருள் வெறுமனே இருக்கிறது, அது வேறு ஒன்றும் செய்வதில்லை (It just exists)என்னும் போது அது ஸத்யம் எனப்படுகிறது.

    உபநிடதக் காலத்தில் பரம்பொருளின் செயல்படும் தன்மையை ஸகுண ப்ரம்மம் என்றும் செயலற்று எந்த விதமான மாற்றமும் இன்றி இருக்கும் தன்மையை நிர்க்குண ப்ரம்மம் என்றும் கூறினர்.

    அதற்கும் பிந்திய புராணக் காலத்தில் தேவர்களாகிய இயற்கைச் சக்திகளை உண்டாக்கி அவற்றை இயங்கச் செய்யும் ருதத்தை சக்தி என்றும் செயலற்றுத் தன்னில் தான் அடங்கிச் சிவனே என்று இருக்கும் ஸத்யத்தைச் சிவன் என்றும் அழைத்தனர்.

    தூய்மையானவர்கள், பிறரைத் தூய்மைப்படுத்துபவர்கள், ருதத்தைப் பின்பற்றுபவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைகிறார்கள். 7.56.12

    ருதத்தின் மூலம்தான் ஸத்யத்தை உணர முடியும் எனக் கூறப்படுவதால் ருதத்தைத் தாயாகவும் ஸத்யத்தைத் தந்தையாகவும் கருதி, தாயினுடைய பரிந்துரையின் பேரில்தான் தந்தையின் அருளைப் பெற முடியும் என்ற கருத்து பிறந்தது. இதுவே வைணவத்தில் தாயாரின் கருணை பெற்றுத்தான் பெருமாளின் திருவடியை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.

    பரம்பொருளின் இந்த இரு தன்மைகளும் பிரித்துப் பேசப்பட்டாலும் அவை பிரிக்க முடியாத ஒரே பரம்பொருளிடம் அமைந்திருப்பதால் சிவனும் சக்தியும் அம்மையப்பனாக ஒரே உடலில் இருப்பதாகக் கூறினர்.

    அன்ருதமும் அஸத்யமும்:
    ருதம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்பதை வேதம் கூறுகிறது. தர்மத்திற்கு மாறாக ஒருவன் பேசினாலோ, நடந்தாலோ அது அன்ருதம். இதைத் தேவர்கள் தண்டிக்கின்றனர் என்கிறது வேதம். ஸத்யம் என்ற சொல்லுக்கும் அன்ருதம் என்பது தான் எதிர்ச் சொல். அஸத்யம் என்ற சொல் வேதத்தில் காணப்படவில்லை.

    அஸத்யம் என்பது முக்காலத்தும் உள்ள பரம் பொருள் ஒன்று இல்லை என்று பொருள் ஆகிறது. அவ்வாறு யார் சொல்ல முடியும்? பல வேறு மதக்காரர்களும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பர். ஆனால் பரம்பொருள் இல்லை என்று சொல்வதில்லை. நாத்திகர்கள் வணக்கம் அவசியமில்லை என்பரே அன்றி என்றும் நிலைத்திருக்கும் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதை மறுப்பதில்லை. அதனால் ஸத்யம் என்பதற்கு எதிர்ச் சொல்லான அஸத்யம் என்ற சொல் வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை.

    பரம்பொருளின் செயல்படும் சக்தி வடிவையும் உருவற்ற, குணமற்ற, வேண்டுதல் வேண்டாமை அற்ற, சுத்த சத்துவ நிலையையும் ஒரு சேர நினைக்கிறேன் என்ற கருத்தைத்தான் ஸத்யத்தை ருதத்தால் நனைக்கிறேன் என்ற மந்திரம் கூறுகிறது.

    சக்தியின் திறமையைப் பெற்று நாம் செயலாற்றுகிறோம். சிவத்தின் மௌனத்தில் நம்மை ஆழ்த்தி அமைதியுறுகிறோம்.

     

     

     

    படம் உதவி: வல்லமை ஓவியர் திரு. சு. ரவி

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 41

    –சு. கோதண்டராமன்.

     

    தேவ ரிஷி பித்ருக்களும் ருதமும்

     

    yoga

    பித்ருக்களும் ருதமும்:
    பித்ருக்கள் ருதத்தை நன்கு அறிந்துள்ளார்கள், அதன்படி நடப்பவர்கள், அதை வளர்ப்பவர்கள் அதனால் அவர்களும் ருதக்ஞ, ருதாவான், ருதாவ்ருத என்ற அடைமொழி பெறுகின்றனர்.

    அவர்கள் தங்கள் வம்சத்தவருக்கு ருதம் பற்றிய அறிவைப் போதித்து வந்தனர். நான் என் தந்தையிடமிருந்து ருதம் பற்றிய ஆழ்ந்த அறிவை அடைந்தேன் (8.6.10) என்கிறார் ரிஷி.

    ரிஷிகளும் ருதமும்:
    ரிஷிகளும் புரோகிதர்களும் ருதத்தைப் பின்பற்றி நன்மை அடைந்துள்ளனர். ரிஷிகள் ருதத்தின் இடத்தைக் காப்பாற்றி உயர்ந்த பெயர்களை அதனுள் மறைத்து வைக்கின்றனர். (10.5.2)

    புரோகிதர்கள் ருதத்தைப் பற்றிச் சிந்தித்து வலன் என்ற அரக்கனைக் கொன்றார்கள். குத்ஸரைப் பற்றிச் சிந்தித்து அஹி என்னும் விருத்திரனைக் கொன்றார்கள். (10.138.1)

    தேவர்களும் ருதமும்:
    எல்லாத் தேவர்களும் ருதத்திலிருந்து தோன்றியவர்களாகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் ருதத்தை அறிந்தவர்களாகவும் ருதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ருதத்தின் நண்பர்கள், ருதத்தைக் காப்பாற்றுகின்றனர், ஒரு தேரோட்டி போல வழி நடத்திச் செல்கின்றனர், ருதத்தைப் புகழ்கிறார்கள், வணங்குகிறார்கள், மக்கள் ருத வழி நடக்கத் தூண்டுகிறார்கள், அவர்களது பாதையைச் செம்மைப்படுத்தித் தருகிறார்கள். அவர்கள் ருதத்தின் ஆறுகளாகக் கூறப்படுகின்றனர். இந்திரன் வேத தெய்வங்களுக்குள் மிகுந்த வலிமை உடையவராக, பல அருஞ் செயல்களைச் செய்தவராகப் போற்றப் பட்டாலும் அவர் அச்செயல்களை ருதத்தின் உதவியால்தான் செய்ய முடிந்தது என்கிறது வேதம்.

    ருதத்தின் எண்ணங்களைக் கொண்டும் ருதக் குதிரைகளைக் கொண்டும் இந்திரன் பிளக்க முடியாத மலைகளைப் பிளந்தார். (6.39.2)

    ருதத்தின் ஆணைகள் இந்திரனை வலுப்படுத்துகின்றன.(6.68.2)

    எல்லாத் தேவர்களும் ருதத்தைப் பாதுகாத்தாலும் வருணன், மித்ரன், அர்யமான் ஆகிய மூவருக்கும் இதில் சிறப்பான இடம் கூறப்பட்டிருக்கிறது. அதிலும் வருணன் மிகச் சிறப்பான இடம் பெறுகிறார். இம்மூவரும் ருதத்தின் சிறப்பான காவலர்கள். இவர்கள் ருதத்தை நிலைநாட்டி அதைக் கவனமாகக் கண்காணிக்கிறார்கள்.

    ருதத்தை மீறியவர்-களைத் தண்டிக்கிறார்கள். மித்ரா வருணா, அன்ருதத்தை வென்று எங்களை ருதத்தோடு இணைத்து வைப்பீராக. (1,152.1)

    மித்ர வருண அர்யமான்கள் ருதத்தை நிலை நாட்டிக் கண்காணிப்பவர்கள் என்றாலும் அவர்களும் ருதத்திற்கு மேம்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ருதத்தில் தோன்றியவர்கள். அவர்களது வலிமைக்கு ருதமே காரணம் என்பதும் சொல்லப் பட்டிருக்கிறது.

    மித்ர, வருண, அர்யமான்கள் அன்ருதத்தைக் கண்டுபிடித்து ருதத்தின் இருப்பிடத்தில் வலிமையாக வளர்கிறார்கள். (7.60.5)

    வருணன் சூரியனுக்கு ஒரு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளின் அலைகளை உண்டாக்கினார். ருதத்தை அனுசரித்து அவர் இரவையும் பகலையும் பிரித்து வைத்தார். (7.87.1)

    வருணன் விண்ணில் பறக்கும் பறவைகளின் பாதைகளை அறிந்துள்ளார்(1.25.7) என்று கூறப்படுவதிலிருந்து இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ருதப்படியே, வருணனின் ஆணைப்படியே நடக்கிறது என்பதை அறிகிறோம். அதனால்தான் இன்றும் எல்லா வைதிகச் சடங்குகளிலும் வருணனைத் தியானிக்கிறோம்.

    த்ருவம் தே ராஜா வருணோ த்ருவம் தேவோ ப்ருஹஸ்பதி: த்ருவம் ச இந்த்ரச்ச அக்னிச்ச ராஜ்யம் தாரயதாம் த்ருவம் என்ற மந்திரம் வருணன் முற்காலத்தில் பெற்றிருந்த தேவர்களின் ராஜா என்ற பெருமையின் நினைவுச் சின்னமாக இன்றும் ஒவ்வொரு வைதிகச் சடங்கிலும் முதலில் ஓதப்படுகிறது.

    ருதமும் முழுமுதல் கடவுளும்:
    ருதத்தை அமல் நடத்துகின்ற வருணனைப் படைத்ததே ருதம்தான் என்று கூறப்பட்டிருப்பதால் அது முழு முதல் கடவுளுக்கு நிகரானதாக மதிக்கப்பட்டது என்று அறிகிறோம். படைப்பின் துவக்கத்தில் கடவுளையும் ஸ்வதாவையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. (10,129.5)

     

     

     

    Picture Credits:
    http://www.herbalsafari.com/2011/09/ayurveda-yoga-perspective.html

    Share