–சு. கோதண்டராமன்.

 

பக்தி மாத்திரம்தான் உண்டு

 

praying-figurine

 

 

பொதுவாக, யக்ஞம் செய்வதை ஆதரிக்காத உபநிடதங்களை ஞான காண்டம் என்றும் அதை ஆதரிக்கும் ஸம்ஹிதை உள்ளிட்ட பிற வேதப் பகுதிகளைக் கர்ம காண்டம் என்றும் சொல்வது வழக்கம்.

ஸம்ஹிதைகளைப் பொறுத்தவரை அவை யக்ஞங்கள் செய்வதை ஆதரிப்பதாகவும் கூற முடியாது, எதிர்ப்பதாகவும் கூற முடியாது. யக்ஞம்தான் உலகின் மையப் புள்ளி என்றும் யக்ஞம் செய்யாதவர்கள் அழிகிறார்கள் என்று கூறும் ரிக் ஸம்ஹிதை, யக்ஞம் இல்லாமல் பிரார்த்தனை மூலமே தேவர்களை மகிழ்விக்க முடியும் என்றும், யக்ஞத்தை விட உழைப்பு மேலானது என்றும் கூறுவதை முன்பு கண்டோம். சாயணரின் விளக்கம்தான் அதைக் கர்மகாண்ட நூலாக்கியது. அதன் உண்மையான பொருளைப் பார்க்கும்போது அது ஒரு பக்தி நூலாகத்தான் தெரிகிறது.

ஸம்ஹிதைகளைக் கர்ம காண்டமாகப் பார்க்கும் தத்துவமாகிய பூர்வ மீமாம்சை கர்மா செய்தால் அததற்குரிய பலன் தானே விளையும், இதற்குப் பலதாதாவாகிய ஈச்வரன் ஒருவன் அவசியமில்லை என்று கூறும்.

இறைவன் என்று ஒருவன் இருப்பதையே மறுப்பதாகக் கூறப்படும் ஸம்ஹிதையில் பக்தி மாத்திரம்தான் உண்டு என்று பாரதி சொல்வதன் விளக்கத்தைப் பார்ப்போம்.

பக்தி என்பது என்ன? பாரதி வரையறுக்கிறார்- எப்போதும் எப்போதும் எப்போதிலும் எதிலும் எங்கும் நம்மைக் கடவுள் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல் பக்தி என்று சொல்லப்படும்.

இறைவனை, என்றும் எங்கும் நம்மைக் காப்பவராக, தனக்கு மிக நெருங்கியவராக- தாயாக, தந்தையாக, நண்பனாக, குழந்தையாகக்- கருதுவது, அவனையே சரணடைவது, அவன் புகழைக் கூறுவது, அவனிடம் தன் குறைகளைத் தெரிவித்து நீக்குமாறு வேண்டுவது, அவனன்றி வேறு ஒருவரையும் நாடாமல் இருப்பது – இதுதான் பக்தியின் அடையாளங்கள்.

            புகழுள்ள உன் நாமத்தை நான் எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பேன் என்று  நாம ஜப மஹிமை பற்றிப் பேசுகிறது. 7.22.5

கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே என்ற மாணிக்க வாசகர் கூற்றின் ஆழ்ந்த பக்தியை இங்கு காணலாம். இந்திரா, நாங்கள் உன்னை மடி நிரம்பிக் கன்றை அழைக்கும் பசுப் போலக் கதறி அழைக்கிறோம். எங்கள் பிரார்த்தனையைச் செவி மடுப்பாயாக என்று வேண்டுகிறது 7.32.22.

அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல உன்னைத் துதிக்க வலிமையும் நீயேதான் கொடுக்க வேண்டும் என்று அக்னி வேண்டப்படுகிறார். 5.10.7

            இறைவன் என்னை அறிவான், நான் அவனது செல்வத்தை அனுபவிக்கிறேன். ஆனால் அவனை அறியவில்லை. 5.12.3

            மனதிற்கெட்டாதவன் இறைவன். 5.17.2

தெய்வத்தை மிக உரிமையுடன் நெருங்கிப் பேசுகிறார் ரிஷி  விரூப ஆங்கிரஸர். அக்னியே, நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் நான் உன் வேண்டுகோளை உடனே நிறைவேற்றியிருப்பேன் என்கிறார். 8.44.23

மற்றொரு ரிஷியான காண்வாயனர் என்பவர், நான் இந்திரனாக இருந்தால் என் பக்தன் நிறைய பசுக்களைப் பெறுவான். என்கிறார். 8.14.1 நான் எத்தனை சொன்னாலும் நீ காதில் போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே, தெய்வம் என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா இருப்பது என்ற அவர்களது ஆதங்கம் அதில் தொனிக்கிறது.

இந்திரன் விலை பேசப்படுகிறார். யாராவது இந்த இந்திரனை 10 மாடு கொடுத்து என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இந்திரனைக் கொண்டு, தங்கள் பகைவர்களை கொன்ற பிறகு, அவனை என்னிடம் திருப்பித் தரலாம் என்கிறது ஒரு மந்திரம். 4.24.10

நீ எங்களுடையவன், நாங்கள் உன்னுடையவர்கள் என்கிறது ஒரு ரிக்.8.92.32

            இந்திரா, மற்றவர்களுடைய பூசைக்குச் செல்லாமல் முன்னதாக என் பிரார்த்தனைக்குச் செவி மடுப்பாயாக. 10.160.1

            இந்திரா, நீ பிறந்தது முதல் சகோதரனோ வேறு உறவோ இல்லாமல்  இருக்கிறாய். அதனால் என்னை உறவினன் ஆக்கிக் கொள்ள விரும்புகிறாய் என உறவு கொண்டாடுகிறார் ஒருவர். 8.21.13

            தந்தையின் ஆடை முனையைப் பிடித்திழுக்கும் மகனைப் போல நான் உன்னை என் பிரார்த்தனையால் பிடித்திழுக்கிறேன் 3.53.2 என்பது சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே என்று மாணிக்க வாசகர் கூறுவதற்கு முன்னோடி.

அக்னியை, இந்திரனைத் தந்தையாக, உறவினனாக, நண்பனாகப் பாவித்துப் போற்றும் மந்திரங்கள் பல உள்ளன. இதோ ஒரு மந்திரம் மருத்துகளைத் தந்தையாகக் காண்கிறது. மருத்துகளே, தந்தை மகனை அணைத்துக் கொள்வது போல, நீங்கள் என்னை எப்பொழுது இருகைகளாலும் அணைத்துக் கொள்வீர்கள்? 1.38.1

சூரனே, நீ எங்களை ஒரு குற்றத்துக்காகக் கொல்லாதே, இரு குற்றங்களுக்காகக் கொல்லாதே, மூன்று குற்றங்களுக்காகக் கொல்லாதே, பல குற்றங்களுக்காகக் கொல்லாதே என்ற மந்திரம் 8.45.34 கந்தர் சஷ்டி கவசத்தில் வரும் எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு, பொறுப்பது உன் கடன் என்ற வாக்கியத்தை நினைவூட்டுகிறது.

            உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரை யான் பின் செல்கேன் என்ற திருமுருகாற்றுப்படையின் பிற்சேர்க்கைப் பாடல் கருத்து  உன்னையன்றி எனக்கு சுகப்படுத்துபவன் எவரும் இல்லை  என்று 8.66.1 இல் காணப்படுகிறது.

            உன் மேல் நம்பிக்கை வைத்துத் தான், இந்திரா, நான் கதிர் அரிவாளுடன் களத்தில் நிற்கிறேன். கை நிறைய தானியங்களை அருள்வாய்  என்று தன் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ஒருவர். 8.78.10

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன் என்று மணிவாசகர் கூறியதின் முன்னோடி ரிக் 1.7.7 இல் காணப்படுகிறது. இந்திரனைப் புகழும் வகையை நான் அறியேன் என்கிறார் ரிஷி.

            இந்திரன் எனக்கு மட்டுமே உரியவனாகட்டும் என்கிறார் ரிஷி. 1.7.10

இந்திரன் என்றும் அக்னி என்றும் பல பெயர் கூறி அழைத்தாலும் எல்லாம் ஒன்றேயான அந்தப் பரம்பொருளையே குறிப்பிடுகின்றன என்பதைப் பார்த்தோம்.  வேதத்தில் பல வேறு தெய்வங்களையும் அன்புடன் அழைத்து, தன் மன விருப்பங்களைத் தெரிவித்து அவற்றை நிறைவேற்றுமாறு உரிமையுடன் வேண்டுகின்ற பக்தி மணம் கமழும் மந்திரங்கள் பல உள்ளன.

படம் உதவி:   http://www.crystalsrocksandgems.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *