ஷேக் சிந்தா மதார்

mgrநேற்று இன்று நாளை

‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்பவும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற தனது சொல்லுக்கேற்பவும் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகில் நடிகராக நுழைந்து, இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.

‘மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்’ என்ற இயற்பெயரைச் சொன்னால் பெரும்பாலா-னோரால் புரிந்துகொள்ள இயலாது. சுருக்கமாக எம்.ஜி.ஆர் என்றால் இளைய தலைமுறை-யினர்கூட புரிந்து புன்முறுவல் பூக்கின்றனர்.

1917 ஜனவரி 17 அன்று கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியருக்கு மகனாக இலங்கையில் பிறந்து, இள வயதில் கேரளாவில் வளர்ந்தார் அவர். சென்ற தலைமுறையும் இந்தத் தலைமுறையும் மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளும் அவர் புகழைப் பேசும்.

உழைக்கும் கரங்கள்

தந்தையின் மறைவுக்குப்பின் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் நடிகராகச் சேர்ந்த எம்.ஜி.ஆர், சதி லீலாவதி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மந்திரிகுமாரி மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகியவை அவரைப் பிரபலமாக்கின.

நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகியவை அவர் இயக்கிய திரைப்படங்கள்.. இவற்றில் நாடோடி மன்னன் அவரது சொந்தத் தயாரிப்பாகும். அவர் தயாரித்த மற்றுமொரு படம் அடிமைப்பெண். சிறந்த நடிகருக்கான விருதுகள் எங்க வீட்டுப் பிள்ளைக்கும் ரிக்ஷாக்காரனுக்கும் அவருக்குக் கிடைத்தன. அடிமைப்பெண் சிறந்த படமாகத் தேர்வு பெற்றது. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு முந்தைய எல்லா ரிக்கார்டுகளையும் முறியடித்து வசூலில் சாதனை புரிந்தது. அவர் நடித்த கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.

அவரது கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து அவரது மறைவுக்குப்பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

தாயின் மடியில்

பொதுமக்களின் – குறிப்பாகத் தாய்க்குலத்தின் – மனங்களைக் கொள்ளை கொள்ளும் கதாபாத்-திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்தார், எம்.ஜி.ஆர். கன்னித்தாய், தெய்வத்தாய், தாய்க்குப்பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, என்று தாயை மையமாக வைத்தே பல படங்களில் நடித்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார்.

நினைத்ததை முடிப்பவன்

இதர கதாநாயகர்களைப் போலன்றி, எம்.ஜி.ஆர் தன் படங்களில் பாடல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார். பாடல் பதிவின்போதும் இசையமைப்பிலும் கூடவே இருந்து உன்னிப்பாகக் கவனிப்பதுடன் சில திருத்தங்களும் சொல்வார். தான் நினைத்தபடியே பாடல் திருப்திகரமாக வரும்வரை அவர்களை விடமாட்டார். அதனாலேயே வர்த்தகரீதியாக வெற்றி பெறாத அவரது சில படங்களில்கூடப் பாடல்கள் இனிமையாக அமைந்தன.

தனிப்பிறவி

அவரது திரைப்படப் பாடல்கள் சிலவற்றில் அவரது புனைப்பெயர்கள் இடம் பெற்றதுண்டு (புரட்சித் தலைவன் நீ, பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ? வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?). திரையுலகில் அவருக்குச் செல்லமாக ‘சின்னவர்’ என்றொரு பெயர் இருந்தது. அதையும் விட்டு வைக்கவில்லை நம் பாடலாசிரியர்கள் (சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் அந்தச் சின்னவரைப் போய்க் கேளும்).

வேறு பல நடிகர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருந்தபோதிலும் அவை அந்த நடிகர்களின் பாடல்களில் இடம் பெறவில்லை. இந்தப் பெருமை எம்.ஜி.ஆர். ஒருவருக்கே சொந்தம்.

என் கடமை

கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு கொண்டு ‘தன் படங்களுக்கு அவர் பாடலே எழுதக்கூடாது’ என்று தீர்மானித்திருந்தார். ஆனால் பணத்தோட்டம் படத்திற்கு அவர் எழுதியிருந்த ‘பேசுவது கிளியா?” என்ற பாடலில் ‘சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?’ என்ற வரியை ரசித்தவாறே கோபம் தணிந்து அதைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பில் இருந்த சமயம் ஒருநாள் கவிஞர் வாலியிடம், “இந்தப் படத்தில் நீ கிடையாதய்யா” என்று எம்.ஜி.ஆர். சொல்ல, வாலி “அதெப்படி? என் பேரு இல்லாம இந்தப் படம் வெளியாயிடுமா?” என்று வாதிட்டார். இறுதியில் கவிஞர், “சரி, அப்படின்னா ‘வாலி’ங்கற என் பேரே இல்லாமே இந்தப் படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு மாத்தி வெளியிடுங்க, பார்ப்போம்?” என்றார். வாய்விட்டுச் சிரித்த எம்.ஜி.ஆர், அவருக்கும் அதில் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.

ஒருமுறை டி.எம். சவுந்தரராஜன் மேல் கோபம் கொண்டு, தனது சொந்தப் படமான அடிமைப்பெண்ணுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை விட்டே பாட வைத்து ஒலிப்பதிவு செய்தார். ஆனால் ‘தாயில்லாமல் நானில்லை, ‘உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது போன்ற உணர்ச்சி கொந்தளிக்கும் பாடல்களை இந்தப் புதிய குரலில் கேட்க மக்கள் துணிவார்களா?’ என்ற சந்தேகம் தோன்றவே, தன் வைராக்கியத்தைத் தளர்த்திக்கொண்டு டி.எம்.எஸ்.ஸையே திரும்ப அழைத்துப் பாடச் செய்தார். எஸ்.பி.பி. கேட்டுக்கொண்டதன் பேரில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை மட்டும் தக்க வைத்துக்கொண்டார் (அந்தப் பாடல்தான் எஸ்.பி.பி.யின் திரையுலக வாழ்க்கைக்கே திருப்புமுனையாக அமைந்தது).

தன் எதிரிகளையும்கூட அன்புடனும் நேசத்துடனும் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன் கடமையாகவே கருதிச் செயல்பட்டார்.

இதயக்கனி

ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணாவின் வசீகரப் பேச்சுகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார். பின்னாளில் அண்ணாவே எம்.ஜி.ஆரின் வசீகரத்தால் கவரப்பட்டு அவரைத் தன் இதயக்கனி என்று அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாவின் மறைவுக்குப் பின் பொருளாளரானார்.

1972யில் கருணாநிதி தன் மகன் மு.க. முத்துவைத் திரையுலகில் களமிறக்கினார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். மாதிரியே ஒப்பனைகள் செய்து நடிக்க வைத்தார். ‘திரையுலகை விட்டுத் தன்னை விரட்டவே கலைஞர் நாடகமாடு-கிறார்’ என்பதை சூசகமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, “கட்சியின் கணக்குகளைக் காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார். கோபமுற்ற கருணாநிதி அவரைக் கட்சியிலிருந்தே நீக்கினார்.

‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார், எம்.ஜி.ஆர்.. அவரது சினிமா பாப்புலாரிட்டியால் கோடிக்கணக்கான மக்கள் அதில் இணைந்தனர். 1977யில் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். திரைப்பட நடிகராக இருந்து முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல் நபர் அவர்தான். 1987யில் முதலமைச்சர் பதவியிருந்தபோதே மரணமடைந்தார்.

முகராசி

1967யில் சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தயாராகிக்கொண்டிருந்தபோது அண்ணாவிடம் எம்.ஜி.ஆர், “தேர்தல் நிதியா நான் எவ்வளவு தரணும்ண்ணா?” என்றதற்கு அண்ணா, “உன் பணம் தேவையில்லே தம்பி, உன் முகம்தான் தேவை. பிரச்சாரக் கூட்டங்கள்லே நீ வந்து முகத்தைக் காட்டு. அப்புறம் நமக்குத்தான் ஓட்டு” என்றார். அதன்படியே எம்.ஜி.ஆரின்  பிரச்சாரங்களிலெல்லாம் கூட்டம் அலை மோதியது. அதிக வாக்குகளுடன் தி.மு.க. வென்றது.

சிரித்து வாழ வேண்டும்

எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றபோது, நடிகர் நடிகைகள் அனைவரும் பேசி முடித்தபின் கடைசியாகப் பேச வந்தார் எம்.ஜி.ஆர். அப்போது கூடுதலாக இன்னொரு மைக் வைக்கப்பட்டது. உடனே நம்பியார் வந்து, “நாங்க இத்தனை நடிகர் நடிகைங்க பேசறப்போ ஒரே ஒரு மைக்கை வச்சிட்டு இப்போ உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு?” என்றார். “படத்திலேதான் என்கூட ஒரே சண்டை போட்டீங்க, இங்கேயுமா?” என்று எம்.ஜி.ஆர். பதில் சொல்ல, கூட்டம் ஆர்ப்பரித்தது. “இப்படியெல்லாம் பிரச்னையைத் திசை திருப்பாதீங்க, உங்களுக்கு மட்டும் ஏன் ரண்டு மைக்? அதுக்கு விளக்கம் சொன்னாலே ஆச்சு” என்றார் நம்பியார், விடாப்பிடியாக. உடனே எம்.ஜி.ஆர், “நான் படத்திலே ரண்டு வேஷத்திலே நடிச்சேனில்லையா? அதனாலேதான்” என்று ஒரு கணம்கூடத் தயங்காமல் சொல்லவும், சிரிப்பலை அடங்க வெகுநேரமாயிற்று.

நல்ல நேரம்

1967யில் ஒருநாள் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர். ராதா சென்றபோது பெற்றால்தான் பிள்ளையா படம் குறித்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது, சட்டென்று தன் கைத்துப்பாக்கியால் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரைச் சுட, இரு குண்டுகள் அவரது காதைத் துளைத்தன. இந்தச் சம்பவத்திற்குப் பின் எம்.ஜி.ஆரின் இடது காது பழுதடைந்து போய், பேசும் சக்தியும் பாதிக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு குரலை மட்டும் ஓரளவு நிவர்த்தித்துக் கொண்டார். அவரது நல்ல காலம், பாதிப்பு காதுடன் நின்று போனது.

நாடோடி மன்னன்

மிகுந்த பொருட்செலவில் முதல் சொந்தப் படமாக நாடோடி மன்னனைத் தயாரித்தபின், ‘படம் நன்றாக ஓடுமா?’ என்று எம்.ஜி.ஆருக்கே கவலை பிடித்துக்கொண்டது. அண்ணாவிடம் சென்று தன் கவலையை வெளியிட்டார். அண்ணா தனக்கேயுரிய நகைச்சுவை உணர்ச்சி-யுடன் சொன்னாராம். “ஓடிட்டா நீ மன்னன், ஓடாமப் போனா  நாடோடி”

தர்மம் தலை காக்கும்

வறுமையுற்ற ஏழைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளலாய்த் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். புயல், வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின்போது தாராளமாக நிதியுதவி செய்வார். 1962யில் சீனாவுடன் போர் மூண்டபோது யுத்தநிதியாக ரூ. 75 ஆயிரம் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாதபோதிலும் கேரளாவிலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு அரைக் கிலோ எடையுள்ள தங்க வாள் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். அவரது தர்ம குணம்தான் பல சந்தர்ப்பங்களில் அவரது உயிரைக் காப்பாற்றியது என்பது மக்களின் திடமான நம்பிக்கை.

பாசம்

புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் அமெரிக்கா சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இருவரும் வெளியேறியபின் கமலாவை மட்டும் உள்ளே அழைத்த எம்.ஜி.ஆர். “கமலா, தம்பிக்கு அதிகமா கருவாடு கொடுக்காதேம்மா” என்றார். “நான் அதிகமாக் கருவாடு சாப்பிட்டதாலே உப்புச் சத்து கூடிப் போய், ஆஸ்பத்திரியிலே வந்து கிடக்கறேன். இந்தக் கதி தம்பிக்கு வந்திடக் கூடாதும்மா” என்று அவர் சொன்னதும், ‘அவர் இவ்வளவு கஷ்ட நிலையில் இருக்கும்போதும் தன் கணவர்மேல் இத்தனை பரிவும் பாசமும் காட்டுகிறாரே’ என்றெண்ணிய கமலாவுக்குக் கண்ணீரே வந்துவிட்டதாம்.

ஆயிரத்தில் ஒருவன்

‘அவரது திரைவாழ்க்கை அரசியலுக்கு உதவியதா, அல்லது அரசியல்தான் திரையுலகுக்கு ஆதரவாக இருந்ததா?’ என்று கேட்பது, ‘முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா?’ என்று கேட்பதற்கு ஒப்பாகும். அரசியலில் அவர் கால் பதித்தபின் இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே இருந்தன.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற தன் கேள்விக்கு, தானே பதிலாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் அவர். அவரது புகழ் நீடூழி வாழ்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *