அமரதீபம் திரைப்படத்திற்காக டி. சலபதிராவ் மற்றும் ஜி.இராமநாதன் இசையில் ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல். பாடலை இயற்றியிருக்கிறார் கவிஞர் மாயவநாதன், 1956ல் வெளிவந்த இப்படத்தின் பாடல் இன்றும் மக்கள் மனதில் வசந்தகீதமாய் வலம்வருகிறது!
கேட்டாலே கிறங்க வைக்கும் இனிய இசையில், பாடும் குயில்களாக ஏ.எம்.ராஜா., பி.சுசீலா தமிழமுதம் பொழிய, இயற்கையின் எழில்தனை வார்த்தைகளாக்கி வரைந்துவைத்த கவிதையிது!
காதலின் இன்பம் என்று எதை நாம் சொல்ல முடியும்? கவிதையும் இசையும் இப்படி கைகோர்த்து வருகிற காட்சி தவிர, கண்கள் காணும் காட்சி இதுவே காதலுக்கு சாட்சியாக, எழில்மேலும் கவிவண்ணம் இசையோடு சேர்ந்து இங்கு என்னென்ன சொல்கிறது கேளுங்கள்!!
மனதின் மூலை முடுக்கெல்லாம் இந்தப் பாடலின் ரீங்காரம் ஓங்காரமிட நல்ல தமிழ்ப் பாடல் வரிகளிவை என்று நாளைய சமுதாயமும் அடையாளம் காண மாயவநாதன் எழுதிவைத்த பாட்டு!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடிகையர் திலகம் சாவித்திரியும் இணைந்து வழங்கிய பாட்டு!!! இதய அரங்கில் இனிமை தவழ என்றைக்கும் கேட்கலாம்… எத்தனை முறை வேண்டுமானாலும்!!!
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ பூங்கொடியே நீ சொல்லுவாய்
வீணை இன்பநாதம் எழுந்திடும் விநோதம் விரலாடும் விதம் போலவே காற்றினிலே தென்றல் காற்றினிலே காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய் புதுமை இதில் தான் என்னவோ ஓஓஓஓ புதுமை இதில் தான் என்னவோ?
மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு மென்காற்றே நீ சொல்லுவாய் ஓஓஓஓ மென் காற்றே நீ சொல்லுவாய்
கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு களித்தாடும் விதம் போலவே.. கலையிதுவே வாழ்வின் கலையிதுவே கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே காணாததுமேன் வாழ்விலே ஓஓஓஓ காணாததுமேன் வாழ்விலே
கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ? கலைமதியே நீ சொல்லுவாய் ஒஓஓஓ கலைமதியே நீ சொல்லுவாய் ஓஓஓ ஓஓஓ
பாடல் தோன்றிய கதை: ஆற்காடு முதலி தெரு, தி.நகரில் மக்கள் திலகம் இல்லத்திலிருந்து புறப்படுகையில் புலவர் புலமைப்பித்தன் வந்து சேர்கிறார். தமிழைத் தன் உயிராய் நேசித்த தலைவன் அல்லவா? உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், , நா.காமராசன் என கவிஞர் பெருமக்களைக் கவர்ந்திழுந்த கதாநாயகன் அல்லவா? புலவரைக் கண்டதும் புளகாங்கிதம் அடைகிறார்! நல விசாரிப்புகள் தொடர்கின்றன.
அடுத்து புலவரை நோக்கி, நான் மதிய உணவிற்கு இங்குதான் வருகிறேன். நீங்கள் இங்கு தங்கியிருந்து ஒரு இனிய பல்லவியை எழுதி வையுங்கள்! அந்தப் பல்லவி என்னை அசத்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துப் புறப்படுகிறார்.
புலவர் கையில் ஏடெடுத்து, எழுதும் கோலெடுத்து, கற்பனை வானில் உலா வருகிறார். பொன்மனச்செம்மலின் புகழ்மணம் பற்றி புதிதாய் என்ன சொல்ல? அவரின் புற அழகை வர்ணிக்கவா? அக அழகை எண்ணிப்பூரிக்கவா? என்ன எழுதலாம் என்று எண்ணத்தேரோட்டம் நடத்துகிறார். தமிழன்னையின் இனிய முகவரி அது! என்னென்ன சொன்னாலும் கவிதைதானே!! கிடைத்துவிட்டது பல்லவி!!
நீ என்னென்ன சொன்னாலும் …
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன செய்தாலும் புதுமை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை … இனிமை… இளமை…
புரட்சித்தலைவர் மதிய உணவிற்கு இல்லம் திரும்புகிறார். வாசலிலே நின்று வரவேற்ற புலவரை, எங்கே பல்லவி என்று கேட்க, ஏடெடுத்து தான் எழுதி வைத்ததைக் காட்ட, உச்சிமுகந்து மெச்சிப்புகழ்ந்த பல்லவியாய் அது ஆனது!
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன செய்தாலும் புதுமை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை
பல்லவியைத் தொடர்ந்து சரணங்களை மதிய உணவிற்குப் பின் எழுதிவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூற, புலவரோ, தலைவா எந்த ஒரு புலவனும் பசித்திருக்கும்போது சிந்தனைப் பிரவாகமெடுக்கும்! நீங்கள் குளித்துவிட்டு உணவு மேசைக்கு வரும் முன்னர் எழுதிவிடுகிறேன் என்றார்!
அவ்வண்ணமே பாடல் முழுமை அடைகிறது!
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன செய்தாலும் புதுமை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை ( நீ )
சின்னஞ் சிறுமலர் பனியினில் நனைந்து என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து முத்துச் சரமென குறுநகை புரிந்து ( நீ )
பொன்னில் அழகிய மனதினை வரைந்து பொங்கும் தமிழினி ல்கவிதைகள் புனைந்து பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து கங்கை நதியென உறவினில் கலந்து உறவினில் கலந்து… ( நீ )
வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து இந்த உலகினை ஒருகணம் மறந்து ஒருகணம் மறந்து… ( நீ )
சுகமான தமிழல்லவா? சுந்தர மொழியல்லவா? தன் நெஞ்சில் நிறைந்து அன்பில் ஆளும் தலைவனுக்காக இசையமைப்பாளர் அருகில் இல்லாமல், தயாரிப்பாளர் அருகில் இல்லாமல், இயக்குனர் கூட அருகில் இல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் தமிழே அருவியாய் பொழிந்த மழை! இது “நேற்று இன்று நாளைக்காக!!” ஆம்… மூன்று காலத்திற்கும் பொருந்தும் கவிதையை, காதல் கீதத்தை மெல்லிசை மன்னரின் கூட்டணியில் பாடும் குயில்களாக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாட இதோ …
‘நல்ல நேரம்’ திரைப்படத்திற்காக நாயகன் பாடும் பாடல்! காட்டுவிலங்காம் யானைகள் வைத்து தேவர் எடுத்த படம்! உழைப்பின் மேன்மையை உயர்த்திக்காட்டும் புலவரின் கைவண்ணம்! எழுத்தில் எழுந்துநிற்கும் உயர்ந்த கோபுரம்! வாழ்க்கைப் பாடத்தை வரிகளில் காட்டியிருக்கும் அற்புதக் கவிதை!
உழைப்பின் பெருமை என்னவென்று உலகறியும்! உழவன் முதல் கவிஞன் வரை உழைப்பு ஒன்றுதான் மனித முன்னேற்றத்திற்கு முதல்படி! இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் உழைப்பதில் பின்வாங்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், உழைக்க மறுப்பவனுக்கு உண்ணுவதற்கு உரிமை கிடையாது என்றே இலக்கணம் வகுக்கலாம். அதுவும் தனக்காக வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதிலேதான் அர்த்தமிருக்கிறது! ஆனந்தமிருக்கிறது! இந்த தத்துவ தரிசனத்தைத் திரைப்பாடலில் கொண்டுவரும் சாமர்த்தியம் புலவர் புலமைப்பித்தன் போன்ற பிதாமகர்களுக்கே கைகூடும்!
இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும்போதெல்லாம் என் மகனை முன் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களை முணுமுணுப்பது வழக்கம்! என் மகன் விவேகானந்தன் சுமார் 6 வயது இருக்கும்போது முதலில் உரக்கப்பாடிய வரிகள் இவைதான்…
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் கூட கேட்டேன். என்ன விவேக், பல்லவியெல்லாம் விட்டுவிட்டு சரணத்தில் உள்ள வரிகளைப் பாடுகிறாயே என்று! அப்பா, அதில் கருத்து இருக்கிறது என்றான். அவன் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவான். வெற்றி மேல் வெற்றி பெறுவான் என்று உணர்ந்தேன். தற்போது பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதோடு, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பூரண ஆசிகளால் குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறான்.
உலகம் முழுமைக்கும் உரிய பாடலிது! அறநெறி போற்றி ஆயிரம் செய்யுள்களைவிட இந்த ஒரு திரைப்பாடல் அதைவிட மக்கள் மனதில் எளிதாகச் சென்று சேரத்தக்கது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
1234 … அப்… அப்…
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும் ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி இதை அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும் இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லிப்போடு
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும் நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும் – நாட்டுக்குப் படிப்பினைத் தந்தாகணும்.
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும் ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது.
வெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூடலை கொண்டாட்டம் போட காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா. களிநடனம் புரிய மங்கையாக ரம்யா கிருஷ்ணன். இசையும் பாடலும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட, திரையிலும் வரவேற்பு மிக அதிகமாகவே இருந்தது.
ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெள்ளித்திரை கண்ட வெற்றி சித்திரம். பிரம்மண்டாமான பொருட்செலவில் அடர்ந்த காடுகளின் இடையே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். காதால் கேட்ட கதைதான், செய்தித் தாள்களில் வாசித்தகதைதான் என்றாலும் தக்க பாத்திரங்களை பொருத்தி அக்கதையை முழுமையாக நம் கண்களுக்கு விருந்தாக்கி படைக்கப்பட்ட இப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதும், இப்படத்திற்குப் பிறகு அவர் கேப்டன் என்றே அழைக்கப்படுவதும் கூடுதல் தகவல்களாகும்.
மறைந்த பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் இனிமையும், புதுமையும், நிறைய துள்ளலும், ஆட்டமும் முழுவதும் நிரம்ப அசத்தலான நடனம்புரிந்த ரம்யா கிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் நடனமாடும் மங்கையின் குறி வில்லனை நோக்கித்தான், அந்த வகையில் இந்தப்பாடல் நம்மைக் கவர்ந்த ஒன்று என்பது நிச்சயம்.
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் வலை போடுறேன் பாடுறேன் பதில் தேடுறேன்
ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி ராக்கோழி சத்தம் கேட்குது – என் ராசாவே… பூ வாசம் வட்டம் போடுது வீராப்பு கண்ணில் பட்டது – நீ என்னை தேட மாராப்பு மெல்ல தொட்டது பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..)
யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு கண்ணாலே கட்டி வைக்கவா – அட மாமா என் கையாலே பொட்டு வைக்கவா பூ பந்தல் போட சொல்லவா – அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா.. (ஆட்டமா..)
தமிழ்த்திரையுலகில் பாட்டு சாம்ராஜ்ஜியத்தை தனக்கென படைத்துக் காட்டிய கவியரசு கண்ணதாசன் அவர்கள் காட்சிகள், திரைக்கதை, இவற்றின் ஓட்டம்எதிர்மறையாய் அமையும் போதிலும் நேர்மறை வார்த்தைகளை இட்டுநிரப்பிய பாடல்களால் நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்!
ஆம், அன்றைய காலக்கட்டத்தில் சோகக் காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் ஒன்று பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா… உலகம் இதுதானா… அருமையான பாடல்! ஆழ்ந்த சோகத்தை பிரதிபலிக்கும் இனிமையான இசை! இவற்றை நம் இதயங்களில் கொண்டு சேர்க்கும் குரல்! இவற்றின் கூட்டுக்கலவையில் கவிஞர் கா.மு.ஷெரீப்.
இந்த எதிர்மறை வார்த்தைகளை மாற்றி தன் பாணியில் இதே போன்றசூழலுக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ என்று ஆனந்த ஜோதியில் எழுதி வைத்தார் கண்ணதாசன்!
அவரது பாணியைப் பின்பற்றி கவிஞர் வாலி, ‘உறவு என்றொருசொல்லிருந்தால்’ என்று அதே சூழ்நிலைக்கு பாடல் எழுதி தன் பங்கினைஅளித்தார். இந்தச் செய்தியை அண்மையில் மறைந்த கவிஞர் வாலி என்னுடன் பகிர்ந்தது இன்னும் மனதில் பசுமையாக!!
இன்னும் சுவையாக சொன்னதெல்லாம், அட … இந்தப் பாடலைவெள்ளிக்கிழமைகளில் விவிதபாரதியில் காலையில போட்டால், யாரும்மாஅது… அந்த ரேடியோவை சப்தம் குறைச்சு வைம்மா… வெள்ளிக்கிழமையும் அதுவுமா… என்று குரல் வரும்.
அதே நேரத்தில் நினைக்கத்தெரிந்த மனமே… உறவு என்றொருசொல்லிருந்தால்… போன்ற பாடல்கள் ஒலிபரப்பானால், கொஞ்சம் சப்தம்கூட்டிவைங்களேன் என்று அந்தக் குரல் எழும் என்றார். என்றாலும் இந்தப் பாடல் காலத்தை வென்று நிற்கிற பாடல்களின்வரிசையில் நமக்கு மிக நெருக்கமான தோழிபோல நெஞ்சிற்கு அருகில்நிற்கிறது!!
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா? பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு நிம்மதி இழந்தாச்சு தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு நிம்மதி இழந்தாச்சு தீராத பழியாச்சு …
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார் பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார் உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே ஊராரும் அறிவாரோ? உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே ஊராரும் அறிவாரோ? என் வாழ்வை அழிப்பாரோ?
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா? பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
படம்: டவுன் பஸ்
பாடலாசிரியர்: கவி கா.மு.ஷெரீப்
இசை : கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: எம். எஸ். ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ராதா ஜெயலட்சுமி
காணொளி: https://www.youtube.com/watch?v=Yn6uMEOg-sk
பச்சை ஆடை கட்டிய பருவப் பெண்ணைப்போல பார்க்குமிடமெல்லாம் பசுமை நிறைந்திருக்கும்! வீசும் தென்றலுமே அங்கே விளையாட வந்திருக்கும்! விழி பேசும் காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்! மொழி பேச நினைத்தாலோ காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!
வாலியின் பாட்டு நினைவுக்குள் வந்து நிற்கும்! இசையோடு இணைந்து வந்து டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பி.சுசீலா குரல்கள் நம்மை வசப்படுத்தும்! திருமணம் என்பது நிச்சயிக்கப்பட்ட வேளை இரு மனங்களிலும் இன்பநதி ஓடும்! இளமை சுகம் தேடும்! இனிமை நிறைந்தாடும்!
இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘உரிமைக்குரல்’ தந்து உள்ளம் தொடும் பாடல்! கிராமத்து மண்வாசனையோடு வயல்களிலே விளைந்திருக்கும் நெற்கதிர்கள் தலைசாய்த்தது கூட இந்தக் காதலர்கள் செய்கை பார்த்துதானோ? வாலி எண்ணத்தில் உழவு செய்து இன்பப்பயிர் விளைவித்திருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் நடிகை லதாவும் இணைசேர்ந்து நடிக்க மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ஆபரணம் பூட்ட, இதோ கல்யாணன் வளையோசை கேட்கிறது!
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
மாமன் என் மாமன் மாமன் என் மாமன் கஞ்சி வரக் காத்திருக்க கண்ணிரண்டும் பூத்திருக்க வஞ்சி வரும் சேதி சொல்லு வந்த பின்னால் மீதி சொல்லு
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
பாய் விரிக்க புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க கையோடு நெய் வழிய கண்ணோடு மை வழிய அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ ஆசை இருக்காதோ
கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இங்கு வந்தாளே இள வாழம் தண்டு வாடாத வெண்முல்லை செண்டு
ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க ஆஆ இடை பிடிக்க நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க நெஞ்சு நெகிழ்ந்திருக்க ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க பொன்னான நெல் மணிகள் கண்ணே உன் கண்மணிகள் தண்ணீரிலே செவ்வாழை போல் தாவிச் சிரிக்காதோதாவிச் சிரிக்காதோ
கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள வாழம் தண்டு வாடாத வெண்முல்லை செண்டு
புலவர் புலமைப்பித்தனின் தமிழுக்கென்று தனியோர் சிறப்பு உண்டு. இளமை துள்ளி விளையாடும். இன்பம் வந்து அலை மோதும். கவிதை சொல்லும் அழகில் நாம் காணாமல் போவதுண்டு …
காதல் சொல்ல வந்தால் கன்னித்தமிழும் அங்கே மணக்கும்!!
இதய வீணை திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில், டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா குரல்களில் வரும் குற்றால அருவி இதோ …
காஷ்மீரின் எழில் கொஞ்சும் பகுதிகளில் இடம்பெறும் பாடல் என்பதால் அழகைப் பருகி அள்ளி மகிழ நம்மையும் அழைக்கிறார் புலவர் …
இதமான இசையால் இளங்காற்று வீசுவதுபோல் வரும் இசையும் நம்மை மயக்க, இன்பத் தேரில் உலா வரும் இருவர் எம்.ஜி.ஆர். மஞ்சுளா … திரையில் …
பாடல் கேட்கும்போது … அந்த நந்தவனத்திற்கு நாமும் கடத்தப்படுகிறோம். பொன் அந்தி மாலைப் பொழுது ….
பொன் அந்தி மாலைப்பொழுது பொங்கட்டும் இன்ப நினவு அன்னத்தின் தோகை என்ற மேனியோ அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய் (பொன்)
மலைமகள் மலருடை அணிந்தாள் வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள் தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில் இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில் மலர்களும் விழிக்கட்டுமே (பொன்)
கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி என்னைத் தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை வண்ணம் நூறு பாடி வர
மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை
என்னேரமும் உன்னோடு நான் ஒன்றாகி வாழும் உறவல்லவோ (பொன்)
ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக
கண்ணோடு கண் பண் பாடுமோ பெண் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும் ஆனந்த அருவியில் சுகம் பல தேடும் (பொன்)
தானே ஒரு திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரித்து இந்தப் படம் ஓடினால் நான் மன்னன்… இல்லையேல் நாடோடி என்று கருத்து தெரிவித்து படத்திற்கு நாடோடி மன்னன் என்று பெயருமிட்ட எம்.ஜி.ஆர். பிக்சர்ஸாரின் முதல் தயாரிப்பு.
முதல் பாதி கருப்பு வெள்ளை… பிற்பாதி கேவா கலர்… (வண்ணம்).
முதல் பாதியில் கதையின் நாயகி வேறு… பிற்பாதியில் நாயகி வேறு… என்று எத்தனை முத்திரைகளை தன்னுள் அடக்கி வெளிவந்த படம் தெரியுமா அது?
மக்கள் தொடர்பு அதிகாரி… என்கிற ஒரு புதிய பதவியை திரைத்துறையில் ஏற்படுத்தி… இன்றும் திரைத்துறை வரலாற்றைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களை அப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவுக்கு நியமித்தார் எம்.ஜி.ஆர்!
திரைப்படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் ஒன்றி்ரண்டு கவிஞர்களால் எழுதப்பட்டதல்ல… தனக்கு நெருக்கமான… பழக்கமான அனைத்துக் கவிஞர்களையும் பயன்படுத்தி… ஏராளமான பாடல்களை படத்தில் இடம் பெறச் செய்தார் எம்.ஜி.ஆர்.
இப்படத்திற்கு வசனம் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்!! இப்படத்திற்கு பாடல் எதுவும் அவர் எழுதவில்லை என்பது கூடுதல் தகவல்!
பட்டுக்கோட்டையார் தந்த பாடல்கள் இரண்டு என்று நினைக்கிறேன். ஒன்று தூங்காதே தம்பி தூங்காதே… சூப்பர் டுப்பர் ஹிட் என்று சொல்லலாமா?
அடுத்து… இந்தப் பாடல்… சும்மா கிடந்த நிலத்தை கொத்தி …
நானே போடப் போறேன் சட்டம்… நன்மை புரிந்திடும் திட்டம் என்கிற வரி… எழுதப்பட்ட நாளில் நிச்சயம் எம்.ஜி.ஆருக்கே தெரியாது தமிழகத்தின் முதலமைச்சராக ஆகப்போகிறார் என்பது.
வரகவிகளின் நாவில் சரஸ்வதி வந்து அமர்ந்திருக்கிறாள் என்பது எத்தனை உண்மை என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி!
எம்.ஜி.இராமச்சந்திரனும் நடிகை பானுமதியும் இணைந்து நடித்த பாடல் காட்சி… எதார்த்தமாய் அந்த மாட்டுவண்டியில் பாட்டுப்பாடி தொடரும் பயணத்தில்தான் எத்தனை ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இசையை வழங்கியிருப்பவர்… எஸ்.எம்.சுப்பையா நாயுடு…
டி.எம்.எஸ் அவர்களுடன் பானுமதி அவர்களும் இணைந்து பாடிடும் பாட்டு! பாட்டுவரிக்குள் வருங்கால தமிழக்தின் வரலாறு பதியப்பட்டிருக்கிறதே அதுவே சிறப்பு!! எம்.ஜி.ஆர் என்கிற காலச் சரித்திரத்தின் சுவட்டில் இப் பாடல் பொன்னேட்டில் பதிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்!
சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பல் இல்லாம ஏர் நடத்தி கம்மா கரையை ஒசத்தி கட்டி கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி சம்பா பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு அட காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம் கையும் காலும் தானே மிச்சம் அட காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே மண்ணை பொளந்து சுரங்கம் வச்சு பொன்னை எடுக்க கனிகள் வெட்டி மதிலு வச்சு மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும் வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே பட்ட துயரினி மாறும் ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
அட காடு விளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம் கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளயட்டும் பொண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே நமக்கு காலம் இருக்குது பின்னே
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி.
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்?
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ?
நிலவுக்கு ஆடைகட்டிய முதல் கவிஞன் தமிழனாகத்தான் இருக்க முடியும்! அதுவும் பண்பாடு, கலாச்சாரம், இவற்றை தன் வரிகளில்கூட விட்டுக்கொடுக்காத பட்டுக்கோட்டையார் வரைந்த பாடல்! டி.ஆர்.மகாலிங்கம் – பி.சுசீலா குரல்களில் அமுதவல்லி திரைப்படத்தில் அமர்க்களமாய் அமைந்த பாட்டு! விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் விளைந்த பாட்டு!
சில பாடல்கள் இன்னார் பாடியதால்தான் பெருமை பெறுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அவ்வகையில் டி.ஆர்.மகாலிங்கம் தவிர வேறு எந்தக் குரல் இப்பாடலுக்கு பொருத்தமானதாய் அமைந்திருக்க முடியும்? இசையமைப்பாளர் இசைவடிவம் தேர்ந்தெடுப்பதுபோலவே இன்னார் பாடினால் இந்தப் பாடல் நன்றாக வரும் … ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்வதிலும்கூட வெற்றியின் ரகசியம் அமைந்திருக்கிறது!
மடைதிறந்த வெள்ளமாய் கவிதையெனச் சொல்லும் திறம் என்ன சொல்ல? இப்பாடல் மெட்டுக்காக எழுதப்பட்டதா… அல்லது எழுதப்பட்டபின் இசையமைக்கப்பட்டதா என்பது உருவாக்கியவர்களுக்கே வெளிச்சம்… கேட்கின்ற போது மனம் துள்ளச் செய்வது என்னமோ நிச்சயம்!!
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ இவள் ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள் தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள் கிளை தான் இருந்து கனியே சுமந்து தனியே கிடந்த கொடி தானே கண்ணாளன் உனைக் கலந்தானந்தமே பெற காவினில் வாழும் கிளி நானே துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
அந்தி வெய்யில் நிறத்தவளோ குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ உந்தி உந்தி விழும் நீரலையில் ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம் தந்த மயில் இவள் தானோ ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
ஆஹா…ம்ம்…லாலா… அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து இருவர் மகிழ்ந்து உறவாட நன் நேரமிதே மனம் மீறிடுதே நன் நேரமிதே மனம் மீறிடுதே மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம் [ஆடை கட்டி வந்த நிலவோ]
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” திரைப்படம்: அமுதவல்லி கவிஞர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியோர்: டி ஆர் மகாலிங்கம், பி சுசீலா காணொளி: https://youtu.be/G8QcPKPYc2Y
தமிழக பாரம்பரியக் கலைகளுள் ஒயிலாட்டமும் ஒன்று. எத்தனையோ கலைகள் அழிந்து வருகின்றன… அவற்றைக் காப்பதும் பராமரிப்பதும் நமது கடமை… இதற்கென உரிய நடவடிக்கைகள் எடுப்பது தமிழக அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. நமக்கான அடையாளம்… நம் மண்ணுக்குரிய பெருமை… நம் முன்னோர்களின் தனித்திறம்… நமது கலாச்சார பிம்பங்கள்… இவைகளை விடுத்து தமிழனின் வாழ்வியலை நாளைய தலைமுறைக்கு சொல்லிவிட முடியாது. கலை என்பது மக்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று. இன்று அதன் வடிவங்கள் மாறியிருக்கலாம். ஆனாலும் இன்றைய நவீனங்களுக்கு மூலம் … வித்து… வேர் எல்லாம் நமது பாரம்பரியக் கலைகளே என்பதை மறுக்க முடியாது.
தமிழ் வளர்த்த மதுரையை மையமாக வைத்து இன்று மட்டுமல்ல … அன்று முதல் படங்களும்… பாடல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வைகை ஆறும் அதன் வளமும்… மனித வாழ்வின் தொடக்கம் நதிக்கரை நாகரீகங்களே என்கிற அடையாளங்களாய் … ஒரு சமூகப் பின்னணியோடு… சமுதாயப் பிரதிபலிப்புகளை கலை என்கிற ஊடகம்தான் காலங்களைத் தாண்டி இட்டுச் செல்கிறது.
கவிஞர் மருதகாசி எழுதியிருக்கும் இந்தத் திரைப்பாடலில் மண்ணின் மனம் மணக்கும். மாற்றுக்குறையாத தங்கம்போன்ற தமிழர்தம் பெருமைகள் இருக்கும். அவர்தம் வாழ்வியல் எப்படி இருந்தது … அகத்துறை ஆட்சி எப்படி நடந்தது போன்ற சங்கதிகளும் தெரியும். கலை என்பது மக்களிடம் இசையையும் மொழியையும் இணைத்து… நடனமும் கூட்டித் தரும்போது அதை விரும்பாத உள்ளங்கள் ஏது?
பாடலின் தொடக்கத்தைக் கேளுங்கள்… வளம் எப்படி இருந்தது என்று கவிஞர் விளக்கம் தருகிறார்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பாத்திரப்படி ஒரு கையில் ஊனமாக நடிப்பில்… உச்சம் தொட்டிருக்கிறார். அப்படியே ஆடலில் அவர் காட்டியிருக்கும் உற்சாகம் … வியக்க வைக்கும். குழுவினர் கூடி ஆடிப் பாடும் இது போன்ற அனைத்து அம்சங்களும் அமைந்த பாடல் நம் மனதை மறக்க முடியாமல் செய்கிறது.
ஓ..ஓஓஓ.. பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார் ஆ…ஆ..ஆ.. ஓஓஓ பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ.. ஆ..ஆ… ஓ..ஓ மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார் தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே ஓ..ஓ….
தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய் தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென தங்க வளையல்கள் ஐய வந்தோமென தங்க வளையல்கள் ஐய வந்தோமென கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர் ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
சித்திரை மாதம் முத்துகள் வித்து திரும்பி இங்கே வருவதென்றே சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா
வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும் விரிச்ச வலையில் விழுந்து விட்டார் உன்னையும் என்னையும் மறந்து விட்டார் உண்மையைச் சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர் ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
புலவர் புலமைப்பித்தன் … நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …
புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இல்லத்திற்கு நண்பர்கள் புடைசூழ செல்வதும் அவருடன் உரையாடி மகிழ்வதும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் தொடங்கிய நாட்களில் வழக்கம்!! அவ்வகையில் அவர் இல்லம் சென்ற ஒரு நாளில் அவர்தம் வரவேற்பறையில் … அமர்வதற்கு இருக்கைகள் இருந்தபோதும் அவர் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தபின் நாங்கள் எல்லாம் தரையில் அமர்ந்தோம்! ஏன்? எல்லோரும் இருக்கையிலே அமருங்கள் என்றார். இல்லை ஐயா! நீங்கள் தரும் தமிழருவி இன்பத்தைத் தரையில் இருந்து பருக விரும்புகிறோம் என்றோம்!! அப்போது புரட்சித்தலைவர் பற்றி அவர் பகிர்ந்த ஒரு விஷயம் மிக மிக சுவாரஸ்யமானது!! சுவையானது!! எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தில் இன்னும் எத்தனை பக்கங்கள் என்கிற கேள்வியை எழ வைக்கக்கூடியது!
ஆம்! சைதை மாந்தோப்பு பள்ளியில் தமிழ் வாத்தியாராகப் பணிபுரிந்துவந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களை நான் யார் … நான் யார் என்கிற பாடல் வழியே திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த புரட்சித்தலைவர் … புலவரின் தமிழுக்குத் தலைவணங்கி … அவருக்குத் தான் நடிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு தந்து வந்தது வழக்கமானது! அவற்றைத் தாண்டி … தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினராய் பொறுப்பேற்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
அந்தப் பதவியின் போது கன்னிப்பேச்சு வழங்கினார் புலவர் புலமைப்பித்தன். அச்சமயம் தன் வாழ்க்கையை உயர்த்தி வைத்த வள்ளலுக்கு வாயாரப் புகழுரைகள் சாற்றிட எண்ணியிருந்தார். தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் புலவரின் கன்னிப்பேச்சை நேரடியாய் பங்கேற்று சிறப்பிக்க விரும்பினாலும் புலவரின் உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் இடம்பெயரும் என்பதை உணர்ந்த தனது அறையில் பிரத்தியேக ஏற்பாட்டின்படி புலமைப்பித்தனின் பதவியேற்பையும் அவர்தம் கன்னிப்பேச்சையும் கேட்டார். வருவார் வள்ளல் என்று காத்திருந்த புலவர் கடைசி நேரத்தில் மத்திய அரசிடம் தொலைபேசியில் தலைவர் அவசரப்பணியில் இருப்பதாகச் செய்தியறிந்து தனது முதல் உரையை சட்டமன்ற மேலவையில் வழங்கினார்.
புலமையும் திறமையும் இணைந்திருந்த புலமைப்பித்தன் தன் நன்றியறிதலை புகழ்வாய்ந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் … மேலவையில் … ஆற்றிய உரை உணர்வுப் பூர்வமானது!! உள்ள பூர்வமானது! புரட்சித்தலைவரைப் பற்றி என்ன சொல்லலாம் … தாய் என்பதா? தந்தை என்பதா? வழிகாட்டி என்பதா? நண்பர் என்பதா? உற்றதொரு துணைவர் என்பதா? உள்ளம் தழுதழுக்க … ஒருவழியாக புதிய பாணியில் அவர் சொன்ன வரி இதோ …
நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …
நன்றியை இதைவிடவா எடுத்துரைக்க முடியும்? நற்றமிழ் துணைபுரிய புத்தம் புதிய வார்த்தைப் பதங்களை பொருத்தமாய் பதித்த தமிழ்ப் புலவனின் கன்னியுரை மக்கள் திலகத்தின் கண்களில் ஒருசிலத் துளிகளை வரவேற்றிருக்குமே!!
குடியிருந்த கோயிலுக்காக … திரைப்பாடல் எழுத முதன்முதலில் புலவருக்கு வாய்ப்பு வழங்கப்பட … இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் … அதில் மனநிலை பாதித்த பாத்திரம் ஏற்றிருந்த கதாநாயகன் பாடுவதாக அமையும் பாடல்! முதல் பாடலே முற்றிலும் புதிய சூழலுக்காக … எழுதப்பட வேண்டியிருந்தது. அதையும் சவாலாக ஏற்று … தத்துவ முத்திரைகள் பதித்திட புரட்சித்தலைவருக்கு மிகவும் பிடித்துப்போனது! அரிய கருத்துக்களை அள்ளி வழங்கி … புதிய திரைப்படப் பாடலாசிரியரின் வருகையைப் பதிவு செய்த பாடலாகவும் அமைந்தது!
நான் யார் நான் யார் நீ யார் நான் யார் நான் யார் நீ யார் நான் யார் நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார் தாய் யார் மகன் யார் தெரியார் தந்தை என்பார் அவர் யார் யார் நான் யார் நான் யார் நீ யார்
உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீயாரோ வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ எதிர்ப்பார் யார் யாரோ ஓ … .ஓ … .ஓ … . [நான் யார் நான் யார் நீ யார்]
பிணியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணையார் வருவாரோ நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் நாளைக்கு யார் யாரோ பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார் முடிந்தார் யார் யாரோ முடிந்தார் யார் யாரோ [நான் யார் நான் யார் நீ யார்]
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது – கவிஞர் மருதகாசி… மாடப்புறாவிற்காக…
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா… அதிகமாக பரிச்சயமில்லாத ஒருசில திரைப்படங்களில் இதுவும் ஒன்று! என்றாலும் வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது இதிலும் உண்மையாகவே தோன்றுகிறது!
ஊருக்கும் தெரியாது… யாருக்கும் புரியாது … பல்லவி தருகின்ற குரல் சற்றே வித்தியாசமாகப் பட.. யார் பாடுகிறார் என்று உற்றுக்கேட்டால்… அட… பக்திப்பாடல்களில் புகழ்பெற்ற சூலமங்கலம் ராஜலட்சுமியின் குரல்… அதிகமாக திரைப்பாடல்கள் பாடியிராத காரணத்தால் சற்று கவனமுடன் கேட்கவேண்டியிருந்தது. எனினும் கனகச்சிதமான குரல்… கருத்தையள்ளும் பாடல்!
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
வித்தியாசமான கதையமைப்பில் அக்கதைக்கேற்ற கருவைச் சுமந்துவருகிற பாடலாய் அமைந்தாலும் மக்கள் நெஞ்சில் அதிகம் வலம் வராத பாடாகவே இருக்கிறது!
காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது
காதல் நெஞ்சில் எழுகிறபோது அதை சொல்லவும் முடியாமல்… சொல்லாமல் இருக்கவும் முடியாமல்… தவிக்கிற தவிப்பையும் தந்துசெல்கிற கவிஞர் மருதகாசியின் பாடல்! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில்… சுகம்தரும் வசந்தமாக வீசுகிறது…
படம்: மாடப்புறா பாடல்: மருதகாசி இசை: கே.வி.மகாதேவன் குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் காணொளி: https://youtu.be/ff2Xtqty4p4
https://youtu.be/ff2Xtqty4p4
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னுடனே நான் இருக்கும் என்னுடனே நீ இருக்கும் உன்னுடனே நான் இருக்கும் என்னுடனே நீ இருக்கும் உண்மையை உலகம் அறியாது உண்மையை உலகம் அறியாது உன்னை இன்றி வாழ்க்கை ஏது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் அமைந்த பாடல்கள்போல் அதன்பின் வந்தகாலங்கள் அமையவில்லையே ஏன் என்கிற வினா அனேகமாக எல்லோரது நெஞ்சங்களிலும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.
பின்னணி இசையில் முன்னணியில் கவிதை வரிகளாய் பாடல்! ஏற்றதோர் குரல்கள் தேர்ந்தெடுத்து பாட்டுக்கு முக்கியத்துவம் தந்தமையால் அத்திரைப்படங்கள் பெட்டிக்குள் சென்றபின்னரும் இப்பாடல்களே காற்றில் என்றும் தவழும் ஜீவிதம் கொண்டவையாகத் திகழ்கின்றன!
தேவிகா, சாவித்திரி இருவரும் இணைந்து தோன்றும் காட்சி! திரைப்படம் பந்தபாசம், இசையமைப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலாசிரியர் கவிஞர் மாயவநாதன் காட்சியமைப்பும் கதையின் ஓட்டமும் சரியான களமிது என்று பாடலுக்கு வழியமைக்க.. இருவரும் காதலில் தோல்விமுகம் கண்டதனால்.. இணையாக பல்லவியிலும் சரணங்களும் ஒருசேரப் பாடுகின்ற காட்சியும்.. அதற்கான பாடல் வரிகளும் சபாஷ் போட வைக்கின்றன!
எளிய வார்த்தைகளால் இனிய இசையோடு இதயம்நுழையும் பாடல் பி.சுசீலா எஸ்.ஜானகி குரல்களில் கேளுங்கள்… நடிகையர் திலகம் சாவித்திரியுடன் நம் அபிமான நடிகை தேவிகா திரையில்…
புலவர் புலமைப்பித்தனின் பூந்தமிழ்வரிகள்… இளையராஜாவின் இசையில் துள்ளிகுதிக்க… டி.எல்.மகராஜனுடன் பி.சுசீலா குரல்கள்…மணிரத்னம் இயக்கத்தில் பாலகுமாரன் வசனம் எழுத… சுஜாதா புரொடக்ஷன்ஸாரின் படைப்பில் உலக நாயகன் கமலஹாசன் நடித்த படம்! கமலஹாசன் நடித்த படங்களில் முன்னிலை வகிக்கும் அளவு முத்திரை பதித்த படம்!
கதையின் நாயகன் தங்களைக் காப்பாற்றும் தருணத்தை ஊரே கூடி மகிழ்கிறது! அந்த மகிழ்ச்சியை ஒரு திரைப்பாடலில் தரலாம் என்று எண்ணி அதற்கேற்ற பின்னணிகளை வடிவமைத்திருக்கிறார்கள். ஹோலி பண்டிகையின்போது அள்ளித்தெளிக்கும் வண்ணக்கோலங்கள் ஒருவர்மீது ஒருவராய் வீசப்பட… அன்பின் பரிமாணமாக அது பரிமாறப்படுகிறது!
கமலஹாசனுடன் சரண்யா இணைசேர்ந்து நடிப்பில் வரலாறு படைத்த படம்! இசைஞானியின் இசையில் நாம் அந்தக் கதையோடு ஒன்றிவிடுகிறோம். இந்திய திரை வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும் பொன்னெழுத்துக்களில் மின்னும் படமாக நாயகன்… வேலு நாயக்கர் என்னும் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்தந்திருக்கும் உன்னத நடிப்பும் சரி… இப்பாடலில் சேற்றிலும்கூட விழுந்து புரண்டு எழுந்து நடக்கும் நடையிலும் சரி… முற்றிலும் புதிய கமலஹாசனை வடித்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் கேமராவில் பதிவான பவித்ரமான கலைப்படைப்பு என்னும் தகுதியை இந்தக் கூட்டணி பெறுகிறது!
சந்தோஷம் என்பது சங்கீதத்தோடு சேரும் போது… வருகின்ற சந்தங்களைப் பாருங்கள்!
புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாட்டுவரிகள்… இசையில் பவனிவரும்போது… இன்பத்தின் துள்ளல்கள் இந்தப் பாட்டு முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது!
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம் எங்களுக்கும் காலம் வந்ததென பாடும் பெருநாளாம் ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம் எங்கள் தெரு எங்கும் தேரோடும் தேரோடும் திரு நாளாகும் நாள் தோரும் இங்கு ஊர்கோலம் [அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]
நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம் நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம் தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம் [அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]
பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள் ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள் வீடுதோரும் மங்களம் இன்று வந்தது காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம் [அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்]
ஒருசில தலைமுறைகளுக்கு முன்னர் தமிழ்த்திரையை ஆட்சி செய்த ஏழிசைவேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் … தமிழ்மக்களின் ஏகோபித்த கதாநாயகன்! மூன்று தீபாவளிகளைத் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் அவரது என்கிற வரலாறு முறியடிக்கப்பட முடியாத அத்தியாயமாய் இன்றும் உள்ளது!
இதற்கான காரணங்கள் நாம் அறிந்த ஒன்றே … அந்தக் காலத்தில் அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை … பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகமில்லை.. இந்தக் காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எழுதப்பட்டிருக்கும் வரலாறு நம்மை வியக்கவே வைக்கிறது! ஆம்! ஹரிதாஸ் திரைப்படத்தின் மற்றுமொரு மதுரகீதமிது! மறக்க முடியாத பாடலாகவும்… மக்கள் இன்றைக்கும் முணுமுணுக்கும் பொற்காலப் பாடலாகவும் உருவெடுத்த பாடல்!
பாபநாசம் சிவன், ஜி.ராமனாதன், எம்.கே.தியாகராஜ பாகவதர் கூட்டணியில் விளைந்த கானாமிர்தம்! கருப்பு வெள்ளையில் 1944ல் வரையப்பட்ட அட்டகாசமான காதல் பாடல் என்கிற பெருமையை இப்பாடல் இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
யுவன்சங்கர் ராஜா இசையில் உருவான இக்காலப் பாடல் ஒன்றின் இடையே இப்பாடலின் ஸ்ருதி சேர்க்கப்பட்டு … இசைக்கோர்வையில் ஒரு புதுமை புகுத்தப்பட்டபோது அதுவும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது என்பது கூடுதல் செய்தியாகும்!
பாடல்: மன்மத லீலையை படம்: ஹரிதாஸ் (1944) பாடல்: பாபநாசம் சிவன் இசை: ஜி. ராமநாதன் குரல்: எம்.கே. தியாகராஜ பாகவதர் ______________________________
மன்மத லீலையை வென்றார் உண்டோ? மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்? மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்? மன்மத லீலையை வென்றார் உண்டோ?
நின் மதி வதனமும் … நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு ரம்பா! … ஸ்வாமி! … நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு என் மதி மயங்கினேன் நான் என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும் என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ? என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ? உனை எந்நாரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை எந்நாரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ? உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? மனம் கவர் மன்மத லீலையை வென்றார் உண்டோ? என் மேல் உனக்கேனோ பாராமுகம்? மன்மத லீலையை வென்றார் உண்டோ?