நான் யார்! நான் யார்! நீ யார் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
புலவர் புலமைப்பித்தன் … நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …
புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இல்லத்திற்கு நண்பர்கள் புடைசூழ செல்வதும் அவருடன் உரையாடி மகிழ்வதும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் தொடங்கிய நாட்களில் வழக்கம்!! அவ்வகையில் அவர் இல்லம் சென்ற ஒரு நாளில் அவர்தம் வரவேற்பறையில் … அமர்வதற்கு இருக்கைகள் இருந்தபோதும் அவர் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தபின் நாங்கள் எல்லாம் தரையில் அமர்ந்தோம்! ஏன்? எல்லோரும் இருக்கையிலே அமருங்கள் என்றார். இல்லை ஐயா! நீங்கள் தரும் தமிழருவி இன்பத்தைத் தரையில் இருந்து பருக விரும்புகிறோம் என்றோம்!! அப்போது புரட்சித்தலைவர் பற்றி அவர் பகிர்ந்த ஒரு விஷயம் மிக மிக சுவாரஸ்யமானது!! சுவையானது!! எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தத்தில் இன்னும் எத்தனை பக்கங்கள் என்கிற கேள்வியை எழ வைக்கக்கூடியது!
ஆம்! சைதை மாந்தோப்பு பள்ளியில் தமிழ் வாத்தியாராகப் பணிபுரிந்துவந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களை நான் யார் … நான் யார் என்கிற பாடல் வழியே திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த புரட்சித்தலைவர் … புலவரின் தமிழுக்குத் தலைவணங்கி … அவருக்குத் தான் நடிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு தந்து வந்தது வழக்கமானது! அவற்றைத் தாண்டி … தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினராய் பொறுப்பேற்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
அந்தப் பதவியின் போது கன்னிப்பேச்சு வழங்கினார் புலவர் புலமைப்பித்தன். அச்சமயம் தன் வாழ்க்கையை உயர்த்தி வைத்த வள்ளலுக்கு வாயாரப் புகழுரைகள் சாற்றிட எண்ணியிருந்தார். தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் புலவரின் கன்னிப்பேச்சை நேரடியாய் பங்கேற்று சிறப்பிக்க விரும்பினாலும் புலவரின் உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகள் இடம்பெயரும் என்பதை உணர்ந்த தனது அறையில் பிரத்தியேக ஏற்பாட்டின்படி புலமைப்பித்தனின் பதவியேற்பையும் அவர்தம் கன்னிப்பேச்சையும் கேட்டார். வருவார் வள்ளல் என்று காத்திருந்த புலவர் கடைசி நேரத்தில் மத்திய அரசிடம் தொலைபேசியில் தலைவர் அவசரப்பணியில் இருப்பதாகச் செய்தியறிந்து தனது முதல் உரையை சட்டமன்ற மேலவையில் வழங்கினார்.
புலமையும் திறமையும் இணைந்திருந்த புலமைப்பித்தன் தன் நன்றியறிதலை புகழ்வாய்ந்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் … மேலவையில் … ஆற்றிய உரை உணர்வுப் பூர்வமானது!! உள்ள பூர்வமானது! புரட்சித்தலைவரைப் பற்றி என்ன சொல்லலாம் … தாய் என்பதா? தந்தை என்பதா? வழிகாட்டி என்பதா? நண்பர் என்பதா? உற்றதொரு துணைவர் என்பதா? உள்ளம் தழுதழுக்க … ஒருவழியாக புதிய பாணியில் அவர் சொன்ன வரி இதோ …
நான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து என்னை உயர்த்தியவன் …
நன்றியை இதைவிடவா எடுத்துரைக்க முடியும்? நற்றமிழ் துணைபுரிய புத்தம் புதிய வார்த்தைப் பதங்களை பொருத்தமாய் பதித்த தமிழ்ப் புலவனின் கன்னியுரை மக்கள் திலகத்தின் கண்களில் ஒருசிலத் துளிகளை வரவேற்றிருக்குமே!!
குடியிருந்த கோயிலுக்காக … திரைப்பாடல் எழுத முதன்முதலில் புலவருக்கு வாய்ப்பு வழங்கப்பட … இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர் … அதில் மனநிலை பாதித்த பாத்திரம் ஏற்றிருந்த கதாநாயகன் பாடுவதாக அமையும் பாடல்! முதல் பாடலே முற்றிலும் புதிய சூழலுக்காக … எழுதப்பட வேண்டியிருந்தது. அதையும் சவாலாக ஏற்று … தத்துவ முத்திரைகள் பதித்திட புரட்சித்தலைவருக்கு மிகவும் பிடித்துப்போனது! அரிய கருத்துக்களை அள்ளி வழங்கி … புதிய திரைப்படப் பாடலாசிரியரின் வருகையைப் பதிவு செய்த பாடலாகவும் அமைந்தது!
நான் யார் நான் யார் நீ யார்
நான் யார் நான் யார் நீ யார்
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்
உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீயாரோ
வருவார் இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார் யார் யாரோ
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ
எதிர்ப்பார் யார் யாரோ ஓ … .ஓ … .ஓ … .
[நான் யார் நான் யார் நீ யார்]
பிணியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணையார் வருவாரோ
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளைக்கு யார் யாரோ
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ
முடிந்தார் யார் யாரோ
[நான் யார் நான் யார் நீ யார்]
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
படம்: குடியிருந்த கோயில்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
குரல்: டி. எம். சௌந்தரராஜன்
காணொளி: https://youtu.be/ciE9Lrnd-X8
https://youtu.be/ciE9Lrnd-X8