மீனாட்சி பாலகணேஷ்.

 

gopuluஅழகழகான சித்திரங்களை வரைந்து என்னைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஓவியர் திரு. கோபுலு காலமாகி விட்டதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய உறவினரான எங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் சென்று அன்னாரைச் சந்தித்து உரையாடியதை இங்கு பகிர்ந்து கொண்டு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

மிகச் சிறு வயதிலிருந்தே திரு. கோபுலுவின் ஓவியங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைகள், விகடனில் வெளிவந்த சரித்திர, சமூக நாவல்கள், அனைத்தையும், அவருடைய படங்களுக்காகவே சேகரித்து வந்தேன். தில்லானா மோகனாம்பாள், ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், துப்பறியும் சாம்பு- ஆஹா! அது ஒரு பொற்காலம். நினைத்தாலே இனிக்கிறது,

சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு அவர் வரைந்த அழகிய படம் சட்டமிடப்பட்டு எங்கள் பூஜை அறையை அலங்கரித்தது. அந்த ஸ்லோகத்தை தினமும் ஒருமுறையாவது நான் சொல்லாமல் இருந்ததில்லை. படிப்பு, பாடும் திறன், வாக்கு வன்மை எல்லாம் தரும் ஸ்லோகம் அது.

விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம் (66)

எத்தனையோ ஆண்டுகளின் பின்பு, எங்கள் சொந்த வீட்டில் குடியேறியதும், கூடத்தின் பெரிய சுவரில் இந்தச் சித்திரத்தைப் பெரிதாக வரைய ஆசைப்பட்டுப் பின்பு, அதனைப் பெரிய சைஸில் ஒரு பலகையில் வரைந்தேன். இதற்கு முன்னும் பின்னும் எனக்குத் துளிக்கூட ஓவியப் பயிற்சி கிடையாது. ஆர்வம் மட்டுமே உண்டு.

கோபுலு அவர்களின் ஓவியங்கள், அதிலும் பெண்களின் ஓவியங்கள் அவற்றின் கண்ணழகுக்குப் பிரசித்தி பெற்றவை. ஆதலால் நான் ‘காப்பி’ செய்யும் இந்தச் சித்திரத்திற்கு முதலில் முகம், கண்கள் இவற்றை வரைந்து, அவை அழகாக வந்த பின்னரே மற்றவற்றை வரைந்து முடித்தேன். கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் ஆயின. என் தந்தையாரும் கணவரும், மகனும் இந்த முயற்சிக்குப் பெருத்த ஆதரவு தந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறைவு செய்த சித்திரத்தைக் கூடத்தில் மாட்டியும் ஆயிற்று. பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.

எங்கள் நண்பரான பேராசிரியர் மகாதேவன் (Indian Institute of Science) ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது அந்தச் சித்திரத்தைக் கண்ணுற்றவர், திரு. கோபுலு தனது உறவினர் என்றும் அவரைக் காணத் தான் சென்னை சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். என்ன ஆச்சரியம்! நானும் வேறு வேலையாகச் சென்னை சென்று கொண்டிருந்தேன். ஆகவே, திரு. மகாதேவன் திரு. கோபுலுவைச் சந்திக்கச் செல்லும் சமயம் நானும் அவரைக் காணச் செல்வதாக முடிவு செய்து கொண்டோம்.

செல்லும் போது திரு. கோபுலுவிற்குக் காண்பித்து அவருடைய ஆசியைப் பெற, நான் வரைந்த அவருடைய சித்திரத்தைப் புகைப்படம் எடுத்து, பெரிதாக இரு பிரதிகள் செய்து கொண்டேன்.

agopu

திரு. கோபுலுவைச் சந்தித்தது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. “எனக்கு ஒரு குறையும் இல்லை அம்மா! நான் உள்ளம் நிறைவாக இருக்கிறேன்,” என்று புன்னகைத்தார். தயங்கியபடியே நான் வரைந்த சித்திரத்தின் புகைப்படத்தை அவரிடம் காட்டி அதைப்பற்றி விளக்கினேன். அவரை எனது மானசீக குருவாகக் கொண்டு நான் வரைந்த (காப்பியடித்த) ஒரே ஒரு சித்திரம் என்றேன். சிரித்தபடி மகிழ்ச்சியாக என்னை ஆசிர்வதித்தவர், எனது பிரதியில், “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்,” என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை இப்போதும் பொக்கிஷமாகக் காப்பாற்றி வருகிறேன். நாட்பட்டதால், அவர் எழுதியது சிறிது மங்கி விட்டது.

இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தைத் தமிழிலொரு பாடலாக்கி, நவராத்திரியில் பாடியும் வருகின்றேன். அதனையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

பல்லவி
நாதன் பெருமைதனை நாத வீணையினில்
வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

அனுபல்லவி
யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

சரணம்
இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

அத்தனை பெரிய உள்ளம் கொண்ட ஒரு அற்புத மனிதரைச் சந்திக்க இயன்றதை என் வாழ்வின் பாக்கியங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published.