இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(147)
—சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
பணிவான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு வாரம் மனந்திறப்பதில் மகிழ்கிறேன்.
“அரசியலை வெறுக்கிறேன் ” , “அரசியல்வாதிகளை கண்களில் காட்டவே கூடாது ” இப்படியான பல வாதங்களை நாம் பல இடங்களிலே கேட்டிருப்போம்.
அரசியல் என்பது எமக்கு அப்பாற்பட்டதா ? நாம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் எனும் எண்ணங்களோடு வாழ்ந்தாலும் அரசியல் எம்மை விட்டு ஒதுங்கி விடுமா?
இல்லை அதுதான் சாத்தியமா ?
நாம் அனைவரும் துறவிகளல்ல, நாம் வாழ்வின் அத்தனை ஆசாபாசங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வாழ்பவர்களல்ல. சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்களின் அடிப்படையிலேயே உலகின் பொருளாதாராம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நாம் விரும்பியோ விரும்பாமலோ நாமனைவரும் ஏதோ ஒருவகையில் அரசியலில் சம்பந்தப்பட்டிருக்கிறோம். அதாவது ஜனநாயகத் தேர்தல் நடைமுறையிலிருக்கும் எந்தவொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் தனது வாக்குரிமையால் அந்நாட்டின் அரசியலை மாற்றியமைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளான் என்பதுவே உண்மை.
ஆனால் நாட்டின் நடப்புகளையும் அரசியல்வாதிகளின் செய்கைகளையும் கண்டு மனதில் தோன்றும் விரக்தியினால் நாம் வாக்களிக்கக் கூடாது எனும் முடிவுக்கோ அன்றி எமது ஒரு வாக்கினால் நாட்டில் அப்படி என்ன பெரிய மாறுதல் வந்துவிடப்போகிறது ? எனும் எண்ணத்தில் எம்மில் பலர் வாக்களிக்காமல் இருந்துவிடும் நிலைகளும் உண்டு.
நாம் வாக்களித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது ? என்று எண்ணுவது போல நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் மட்டும் ஏதோ பெரிய மாறுதல் வந்து விடப்போகிறதா ? என்றும் எண்ணலாம் அல்லவா ?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றி அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி அமைக்கக்கூடிய அதிகாரம் கொண்ட வாக்குரிமை வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தோர் அனேகம் பேர்.
அவ்வதிகாரம் கையிலிருந்து அதை உபயோகிக்காமல் வீணடிப்போரும் பலர் உண்டு.
எதற்காக இந்த அலசல் என்று நீங்கள் கேட்கலாம். இது இங்கிலாந்தில் தேர்தல் காலம். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்நாடு போகப்போகும் திசையைத் தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறப் போகிறது.
யார் அதிகார நாற்காலியில் உட்காரப் போகிறார்கள் என்பதில் பெரிதாக எவ்விதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை.
வழமை போல கன்சர்வ்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான டேவிட் காமரனோ அன்றி எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் அவர்களோ தான் பிரதமர் எனும் அந்தஸ்தைப் பெறப் போகிறார்கள்.
கடந்த தேர்தலில் அரிதிப் பெரும்பான்மை பெற முடியாததினால் லிபரல் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தார் டேவிட் காமரன்.
இம்முறையும் தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறது. ஏனெனில் பொதுக் கருத்துக்கணிப்புகளின் படியும் , பிரபலமான அரசியல் அவதானிகளின் படியும் இந்த இரு பெரிய கட்சிகளில் இரண்டும் அரிதிப் பெரும்பான்மை பெறுவது கடினம் எனும் கருத்து முன் வைக்கப்படுகிறது.
அப்படியாயின் அவ்விரு கட்சிகளும் கூட்டரசாங்கம் அமைக்கும் முயற்சிகளில் எவை அதிக ஆசனங்களைப் பெறும் முயற்சியில் வெற்றி பெறுகிறதோ அதுதான் அரசமைக்க முடியும்.
இப்போது அரசிலிருக்கும் கன்சர்வ்வேடிவ் கட்சி யூகிப் , யூடிஎப் , லிபரல், டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத் தான் நாட முடியும்.
அதே போல லேபர் கட்சி எஸ்என்பி , கிரீன் , லிபரல் டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத்தான் நாட முடியும்.
லேபர் கட்சிக்கு இப்போது ஒரு புதுப் பிரச்சனை முளைத்துள்ளது. ஒவ்வொருமுறையும் தேர்தலில் ஸ்காட்லாந்தில் ஏறத்தாழ முப்பதிற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறு லேபர் கட்சி இம்முறை அங்கு ஒரு இடத்தில் வெற்றி பெறுவது கூடச் சந்தேகம் என்கிறார்கள்.
காரணம் என்ன ?
கடந்த வருடம் மிகவும் அமோகமாகப் பேசப்பட்ட ஸ்காட்லாந்து நாடு பிரிவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்தில் மாநில அரசில் அதிகாரத்திலிருக்கும் எஸ்என்பிபி (SNP) எனும் கட்சி பிரிவினைவாதத்தில் மிகவும் குறைந்த வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
விளைவு !
அவர்களுக்கு ஸ்காட்லாந்து பகுதியில் இருந்த செல்வாக்கு பன்மடங்கு பெருகியது அதன் விளைவாக இதுவரை ஸ்காட்லாந்து நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த லேபர் கட்சி தனது செல்வாக்கை பலமாக இழந்துள்ளது.
இந்நிலையில் கூட்டரசாங்கம் அமைப்பதுதான் லேபர் கட்சியின் முன்னால் உள்ள ஒரே ஒரு தீர்வு. ஆனால் அவர்கள் எஸ்என்பி எனும் கட்சியுடன் கூட்டு வைத்தால் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று வாதிடுகிறார்கள் மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
தாங்கள் ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டுச் சேர மாட்டோம் என்கிறார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் . . . . .
நம்பாதீர்கள் . . . . என்று ஒலிக்கிறது பல குரல்கள்.
இந்நிலையில் எம் கைகளில் இருக்கும் வாக்குகளை நாம் வீணடிப்பது நாம் வாழும் நாட்டிற்கு நாம் செய்யும் துரோகமாகாதா ?
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே வாக்காக நமது வாக்கு இல்லா விட்டாலும் பல வாக்குகளில் ஒன்றாக இருந்தோம் எனும் நிம்மதி கிடைக்குமல்லவா ?
அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan