ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்யாயம்: பத்து

அவனுக்குக் கதை கேட்கும் அனுபவத்தைத் தந்தது, வடக்கு மாடத் தெருவில் இருக்கும் பஜனை மடம்தான். இன்னும் ஓரிரு வருடங்களில் அதற்கு நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. எத்தனையோ கச்சேரிகளும், திவ்யநாம பஜனைகளும், கதை நிகழ்ச்சிகளும், ருக்மிணி, சீதா கல்யாண வைபவங்களும் அங்கு நடந்திருக்கிறது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. கோகுலாஷ்டமி , கிருஷ்ணனின் பிறந்த தினத்தில் இருந்து (ஆவணி மாதம் அஷ்டமி முதல்) பத்து தினங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படும். இறுதி நாளில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெறும். அன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயரைப் போல வேடம் அணிந்து ரதவீதி சுற்றி வருவார்கள். அனேகமாக லக்ஷ்மண வாத்தியார் வீட்டு “விஸ்வம்”தான் ஆஞ்சநேயராக வேடம் போட்டுக் கொள்வார். இரவு நேரம் ஆனதால் வீதியில் தங்கள் வீட்டு வாசலில் சிலர் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களைத் திடீரென எழுப்பி அவர்கள் முன்பாக ஆஞ்சநேயர் வேடம் தாங்கிய விஸ்வம் “ஹோய்” என்று கத்துவார். தூக்கத்தில் விழித்த அவர்கள் பயந்தாலும், அந்த “அனுமனின்” முகத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள்.

avis
அவனது பள்ளி நாட்களில், கோகுலாஷ்டமி உற்சவத்திற்கு வடக்கு மாடத் தெருவில் பாதித்தெருவுக்கு மேல் நன்றாக அடைத்துப் பந்தலிட்டு, பந்தலின் ஒவ்வொரு தூணிலும் மின்விளக்குக் கட்டியும், தோரணங்களால் அழகு செய்தும் இருப்பார்கள். பந்தலின் முகப்பில் கட்டி இருக்கும் பெரிய வாழைமரங்கள் அவனையும், அவனது நண்பர்களையும் “வா வா …வந்து இங்கே விளையாடுங்கள்” என்று அழைக்கும். அவர்கள் ஒவ்வொரு பந்தல் தூண்களையும் ஓடி ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். “எலேய்…பாத்துடா…கீழ விழுந்துடாதேங்கோடா” என்று வெங்கட்ராமையர் மென்மையாக அவர்களை கடிந்து கொண்டே பஜனை மடத்துக்குள் செல்வார். அவர்தான் இந்த பஜனை மடத்திற்கு முக்கியமான பெரிய மனிதர். நிறைய நல்ல தர்மங்களை பஜனை மடத்திற்கும், ஸ்ரீ ஆதிவராகர் கோவிலுக்கும் அவர் செய்திருக்கிறார்.

பஜனை மடத்தில் ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர்தான் முக்கிய ஆராதனை தெய்வங்கள். கிருஷ்ணரும் உண்டு. ஸ்ரீராமநவமி ஒரு நாளும், ஸ்ரீராம அகண்ட நாமம் ஒருநாளும், தீபப் பிரதக்ஷிணம், சனிக்கிழமை பஜனை என்று கோலாகலமாகத்தான் இருக்கும். கண்ணனின் கோகுலாஷ்டமியையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கோவிலின் பூஜைகளை நீண்டகாலம் ஸ்ரீ ஐயாத்துரை வாத்தியார்தான் செய்து வந்தார். நல்ல ஆசார சீலர். வேதம் அறிந்தவர். மிகுந்த சிரத்தையுடன் தனது இறுதி காலம் வரை பூஜைகள் செய்து வந்தார்.

கோகுலாஷ்டமி, கண்ணனின் பிறந்த தினம். பஜனை மடத்தில் அன்று மாலை ஏழு மணிக்கு “ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்” கதையை ப்ரும்மஸ்ரீ வேங்கடசுப்ரமணிய சாஸ்திரிகள்தான் சொல்லுவார். அவரை “கீனா சார்” என்று எல்லோரும் அன்பாக அழைப்பார்கள். அவனும், நண்பர்களும் அவருக்கு முன்பாக அமர்ந்து கொண்டு “ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்” கதையை நிறையக் கேட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் யாரேனும் பேசிக் கொண்டிருந்தாலும் அவர் அதையெல்லாம் கவனிக்காமல் கதையை ரசித்துச் சொல்லிக் கொண்டிருப்பார். அவனும் அதைக் கூர்ந்து கவனித்து கண்ணனின் கதைகளை ரசித்துக் கேட்பான். அவனுக்கு விளையாட்டுப் புத்தி இருந்தாலும் கதை கேட்பதில் ஒரு தனி ருசி இருந்தது.

keena“கீனா சார்”தான் பின்னாளில் (1987ல்) சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்தரின் தியான ஸ்லோகமான “அக்யானாம் ஜான்ஹவி தீர்த்தம் வித்யாதீர்த்தம் விவேகினாம் ஸர்வேஷாம் சுகதம் தீர்த்தம் ஸ்ரீ பாரதீ தீர்த்தம் ஆஸ்ரயே” என்ற மந்திரத்தைக் கூறி, அவனை மூன்று முறை சொல்லச் சொல்லி , “கங்கை எப்படி நம் புற அழுக்குகளை நீக்குகிறதோ அதுபோலத் தூய அறிவு நமது அக்ஞானத்தை நீக்கும். அப்படிப பட்ட உயர்ந்த ஞானத்தை, நல்லறிவை அருளக் கூடிய குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்தரை நான் ஆராதிக்கிறேன்.” என்று அர்த்தமும் கூறி அவனுக்கு ஆசிரியருமானார். “ஸ்ரீ சாரதா மாதா” என்று அவன் எழுதிய சிறிய கவிதைப் புத்தகத்தில் வரும்,

கிண்ணத்தில் அமுது வைத்துக்
கிட்டத்தில் இருந்து கொண்டு
எண்ணத்தில் தூய்மை யோடு
இந்தா “சாரதை” என்றால்
பண்ஒத்த பண்பு கொண்டாள்
பருகுவாள் பசியும் தீர்ப்பாள்”

ammanவரிகளை அவனிடம் சொல்லி ,” நீ நானா எழுதிருக்காய்..இத நான் பூஜையின் போது சொல்லி அம்பாள நமஸ்காரம் பண்ணறேன் தெரியுமோ..” என்று அவன் தலையில் தன் வலது கைவைத்து ஆசீர்வதித்தார். அவன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது அவர்தான் “இந்தி” ஆசிரியர். அப்பொழுது எழுந்த இந்தி எதிர்ப்பலையில், அவனுக்குத் தமிழின் மீது உள்ள காதலால் இந்திப் பக்கமே திரும்பவில்லை. அப்படி ஒரு மொழியைக் கற்காமல் விட்டது அவனுக்கு இழப்புதான் என்று இப்போது நன்கு உணர்கிறான். கற்காமல் விட்டதில் உள்ள ஒரே நன்மை, அவனை இந்தியில் யார் திட்டினாலும் அவன் பதிலுக்குப் புன்னகைக்கத் தெரிந்து கொண்டிருப்பதுதான்.

பஜனை மடத்தில் கிருஷ்ண பாகவதரின் கதை கட்டாயம் இருக்கும். அவர் அம்பாசமுத்திரத்திலிருந்து புறப்பட்டு மாட்டு வண்டியில் மாலை ஐந்தரை மணிக்கு வெங்கட் ராமையர் வீட்டில் வந்து இறங்குவார். அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு ஆறரை மணிக்கு பஜனைமடத்திற்கு வருவார். சுவாமி தரிசனம் செய்தபின் ஏழு மணிக்குக் கதையை “பலபீமா..பலபீமா” என்ற பாட்டுடன் துவங்குவார். பந்தல் நிறைத்து கூட்டம் இருக்கும். அவருக்கு பக்க வாத்தியமாக மிருதங்கத்துக்கு “நானாச்சி” மாமாவும், ஹார்மோனியத்துக்குச் “சங்கரனும்” இருப்பார்கள். நானாச்சி மாமா பஜனைக்கும், கச்சேரிகளுக்கும் மிருதங்கம் வாசிப்பார். வெளியூர்களில் இருந்து வரும் பெரிய பாகவதர்களுக்கெல்லாம் அவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார். கச்சேரி நாட்களில் வெள்ளை வேஷ்டியும், காதுகளில் கடுக்கனும், நெற்றியில் விபூதிக் குங்குமமுமாக அழகாய் இருப்பார். பஜனை மடத்துக்கு சுவாமி நெய்வேத்தியமும் அவர்தான் செய்வார். மேலமாடத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் அவர் குடி இருந்தார். அப்பொழுதெல்லாம் அவன் மதியம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, நானாச்சி மாமா அவர் வீட்டு வாயிற் திண்ணையில் அமர்ந்து கொண்டு மிருதங்கம் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவன் சிறிது நேரம் ஒரு தூணில் சாய்ந்த படி அதைக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுக்கு மிருதங்க நாதம் மிகவும் பிடிக்கும். அவனுக்கு நண்பன் ரகு, நானாச்சி மாமாவிடம் சிறிது காலம் மிருதங்கம் கற்றுக்கொண்டான். போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் நானாச்சி மாமா சமையல் வேலை, பிராம்மணார்த்தம் என்று தனது கடேசி காலத்தைக் கழித்து விட்டார். கிருஷ்ண பாகவதர் “பக்த ராமதாஸ்” கதையை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். இடையில் “தானிஷா” என்று ஒரு சத்தம் கொடுப்பார். அதற்கு நானாச்சி மாமா மிருதங்கத்தில் பதில் கூறும் நாதம் இப்பொழுதும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரை நாயகனாக்கி “மிருதங்கம்” என்ற சிறுகதையை அவன் எழுதி இருந்தான். அதை மஞ்சரி ஆசிரியாராக இருந்த “லெமன்” என்று அழைக்கப் படும் லக்ஷ்மணன் (சாருகேசியின் சகோதரர்) அவர்கள் விரும்பி மஞ்சரியில் வெளியிட்டார்கள். அந்தக் கதை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றது.

கிருஷ்ணபாகவதரின் பாட்டுக்கு ரொம்ப அழகாக “சங்கரன்” தனது ஹார்மோனியத்தில் வாசிப்பதைக் கேட்பது ஒரு தனி ஆனந்தம். விரல்கள் ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும். சிரமமே இல்லாமல் வாசிப்பார். கதைக்கு நடுவில் பாகவதர் ஒரு ராகம் பாடி விட்டு சங்கரனைப் பார்ப்பார். சங்கரன் தனது ஹார்மோனியத்தில் அந்த ராகத்தை விரல்களால் வீடு கட்டி கிரஹப்பிரவேசமே செய்து விடுவார். சிறந்த வித்வானின் கைகளில் கலைமகள் தானே வந்து சேவை செய்வதைப் பார்த்துப் பார்த்து அவன் வியந்திருக்கிறான்.

கிருஷ்ண பாகவதர், கிருஷ்ணனின் லீலைகளைச் சொல்லும் பொழுது பெண்களைப் போலவே நளினமாக ஜாடை செய்து ,”ஏண்டி …எசோதே ஒன்னோட புள்ள செய்த காரியாத்தப் பாருடி..” என்று நடித்துக் காட்டுவார். அந்த பாணி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் சொன்ன கதைகளெல்லாம் அவனது மனதில் பசுமரத்தாணிபோல நன்றாகப் பதிந்திருக்கிறது. முன்பெல்லாம் ஹரிகதை சொல்பவர்களுக்கு இந்தக் காலத்தைப் போல அப்படி ஒன்றும் அள்ளிக் கொடுத்து விட மாட்டார்கள். கதை சொல்பவர்களும் பணத்துக்காகச் சொன்னவர்களும் இல்லை. ஆத்மார்த்தமாக இருந்தார்கள். பக்தியுடன் இருந்தார்கள். அதனால்தான் அவனைப்போல எத்தனையோ சிறுவர்கள் கதையில் இறைவனைக் கண்டு வணங்கினார்கள். கேட்கும் கதைகளால் பாடம் கற்றார்கள். இன்று அவனுக்குக் கதை, கவிதை சொல்வதற்கும், எழுதுவதற்கும், வேத வாழ்வில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் காரணமே அந்த எளியோர்களின், போலித்தனம் இல்லாத வெளிப்படையான நடத்தையும், வெள்ளையான வாக்கும்தான். கிராமமல்லவோ அவனுக்கு ஆசிரியனாக இருந்து இவைகளையெல்லாம் கற்றுக் கொடுத்தது. கிராமத்தானாகவே இருப்பது எத்தனை சுகமானது. அதனால் அவன் கிராமத்தானேதான்….

இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவன், அது , ஆத்மா (10)

  1. நான் படிக்கும் 70களில் அவர் ஸ்கூல் லைப்ரரியிலும், யாராவது டீச்சர் வராவிட்டால் கிளாசை மேயபதிலும் அமர்ந்திருப்பார் . பரம சாது. ஸ்கூல் அசம்ப்ளி அவர் சொல்லும் வேத மந்திரத்துடன் தான் ஆரம்பிக்கும் .முதலியப்பபுரம் ஆர் எஸ் ஏ சங்கரய்யர் காலமானதும் , எல்லா வைதீகர்களுக்கும் தானம் கொடுக்கப்பட்டது . வெள்ளி, தங்கம், உப்பு, தானியம் முதலிய பல வகை. தானம் பெற்ற பிறகு எல்லா வைதீகர்களும் கூட்டமாக தாங்கள் வாங்கிய தான பாத்திரங்களுடன் வாய்க்கால் நோக்கி வந்தனர் .  கீனா சார் தானியம் நிரம்பிய ஒரு பெரிய குத்துப்போணியை பெருமையுடன் தூக்கி வந்ததை இப்போதும் நினைவு கூர்கிறேன் (பிராமணனுக்கு தானம் கொடுக்கவேண்டும் , மற்றும் தானம் வாங்க வேண்டும் என்பது நியதி. அதுதான் கன்யா தானம் பெற்றுக்கொள் கிறோம் /கொடுக்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *