Category: இசைக்கவியின் இதயம்

இசைக்கவியின் எண்ணச் சிதறல்கள்

  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (13)

    இசைக்கவி ரமணன்

    முடிவுரை

    kural-4-1-1

    இப்படி, மனதால் நினைத்தல், வாயாற் புகழ்தல், உடம்பால் வணங்குதல் மூன்றையும் சேர்த்துக் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வைத்தார். இறைவன், இறை, தெய்வம் என்னும் சொற்களைப் பயன்படுத்தும் வள்ளுவரின் குறளில் கடவுள் என்னும் சொல் இல்லை. மன்னனும் இறை, இறைவன் போன்ற சொற்களால் குறிக்கப்படுகிறான். (உ-ம் இறைமாட்சி) `விஷ்ணுவின் அம்சம் உடையவனே மன்னன், ரிஷியின் அம்சம் உடையவனே கவிஞன்,` என்பது நமது பண்டைய கூற்று. அரசன் என்பவன், இறைவனின் பிரதிநிதியாகவே பிற நாடுகளிலும் கருதப்பட்டான். ஆனால், இங்கே, முதல் அதிகாரத்தில் அவர் மன்னனைக் குறிக்கவில்லை, கடவுளைத்தான் சொல்கிறார். எனவேதானோ, இது, கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் போன்ற நூல்களிலும் நூலுக்கு முகமனாகக் கடவுள் வாழ்த்து உண்டு. இங்கே. நூலின் ஓர் அங்கமாகக் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது. இதைப் பனுவலாகக் கொள்ளலாம். ஏனெனில், நூல் முழுதும் அவர் அறிவுறுத்த விழைவது கடவுளைப் பணிவதே.

    `கடவுள்` என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், அல்லது, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை எனலாகாது. `தமிழ்` என்ற சொல் குறளில் ஓரிடத்திலும் இல்லை. `தாய்` என்றார், `அம்மா` என்றார், `தந்தை` என்றவர் `அப்பா` என்று சொல்லவில்லை. இவற்றை வைத்து ஏதேனும் முடிவுக்கு வரவேண்டுமா என்ன?

    மேலும், நூலின் வேறுபல இடங்களிலும் அவர் கடவுளைக் குறிப்பிடுகிறார்:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

    இறையென்று வைக்கப் படும் (39:இறைமாட்சி:388) என்னும்போது இறை என்ற சொல்லால் கடவுளைக் குறிக்கிறார்.

    தென்புலத்தார் தெய்வம்..(43) தெய்வம் தொழாஅள் (55) தெய்வத்தான் ஆகாதெனினும் (619) தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023) என்ற குறள்களில் கடவுளை தெய்வம் என்கிறார். பல இடங்களில், தெய்வம் என்பது விதி என்னும் பொருளிலும் வருகிறது. தென்புலத்தார் (43) என்று தொடங்கும் குறள், தீயினாற் சுட்டபுண்.. குறளைப் போல மஹாபாரத வாசகத்தின் மொழிபெயர்ப்பு போலவே தெரிகிறது. யக்‌ஷ ப்ரச்னத்தில், யக்‌ஷன், `எவன் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும், உலகத்தால் துதிக்கப்பட்டாலும், வெறுமே சுவாசிக்கும் ஜீவனாகக் கருதப்படுகிறான்?` என்று கேட்கிறான். அதற்கு தருமர், `தேவ, அதிதி, ப்ருத்யானாம், பித்ருனாம், ஆத்மன: ச ய: ந நிர்வபதி,` என்கிறார். அதாவது, `எவன் தேவர்கள், விருந்தினர்கள், தன்னைச் சார்ந்தவர்கள், பித்ருக்கள், ஆன்மா இவற்றுக்குச் சேவை செய்யவில்லையோ, அவன் வெறுமே சுவாசிக்கும் ஜீவி,` என்று பதில் கூறுகிறார்.  மேலும்,

    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

    எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்

    என்று புறநானூற்றுப் பாடல் (9) பேசுகிறது.  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுத்தல் என்பது தொன்மையான தமிழ் மரபே என்பது இதனாலும் உறுதியாகிறது.

    எனவே, தென்புலத்தார் என்பது பித்ருக்களைக் குறிக்கவில்லை என்ற வாதம் சரியில்லை.

    செம்பொருள் காண்ப தறிவு (358) மெய்ப்பொருள் காண்பதறிவு (356) தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் (249), கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டவர்தான் பிறவாத பெருநிலையை எய்துவர் என்று, பொருள், செம்பொருள், மெய்ப்பொருள் போன்ற சொற்களின் மூலமும் அவர் கடவுளையே சுட்டுகிறார்.

    உள்ளது (357) என்றும் கடவுளையே என்றும் உள்ளவன் என்கிறார். உள்ளது நாற்பது என்று ரமண மகரிஷி அருளியதை நினைவில் கொள்க. வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு விளக்கம்போல் அமைந்திருக்கும் பற்றற்றான் (350) என்னும் சொல்லாலும் கடவுளையே சுட்டுகின்றார். சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (359) என்னும் குறளில் எவ்வுயிர்க்கும் நிலையான சால்பு என்று கடவுளைத்தான் சொல்கிறார். வகுத்தான் (377) என்னுங்கால் இன்ப துன்பங்களை வகுத்த கடவுளைத்தான் பேசுகிறார். ஒருபடி மேலே சென்று, மற்றவர் வறுமையைத் தாங்க மாட்டாது பரந்து கெடுக உலகியற்றியான் (1062) என்றும் கடவுளைச் சாடுகிறார். பாரதியின், `தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,` என்னும் கர்ஜனை இந்தக் குறளின் எதிரொலியே.

    மேலும், அப்படிப்பட்ட கடவுளைப் பணிவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பொருள்சார்ந்த பட்டியலிடாமல், நாம் என்ன ஆவோம் என்பதையே சொல்லத் தலைப்படுகிறார். இறைவனைப் பணிவது, பிறவித் துன்பத்திலிருந்து நீங்குவதற்காகவே என்பதை வலியுறுத்துகிறார்:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10) மற்றீண்டு வாரா நெறி (356) பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357) பிறப்பென்னும் பேதைமை நீங்க (358) என்கிறார். பிறப்பு, அதனால் இறப்பு இவற்றுக்குக் காரணமான பற்று அறுபடுவது அவனைப் பற்றினால் மட்டுமே (350) என்பார்.

    இவ்விதம், பல்வேறு இடங்களில் அவர், கடவுளையும், அவனைப் பணிய வேண்டிய அவசியத்தையும், அந்தப் பணிதலால் நேரும் அறுதி விளைவையும் எடுத்துச் சொல்கிறார் – தாயனைய கருணையுடன், தந்தையின் கண்டிப்புடன், தோழனின் வாஞ்சையுடன்.

    இது மட்டுமல்லாமல் இந்திரன் போன்ற தேவர்களைக் குறிப்பிடுகிறார் : இந்திரனே சாலும் கரி (25) வேந்தனும் வேந்து கெடும் (899) என்பார். `வேந்தன் மேய தீம்புனல் உலகமும்..` என்னும் தொல்காப்பியம் (அகத்திணை, 5) வேந்தன் என்னும் சொல்லால் இந்திரனைக் குறிக்கும். (சாலும் கரி என்றால், போதுமான பிரத்யக்ஷமான சாட்சி)

    பெண்ணின் மெல்லிய தோள்களில் தூங்கும் இனிமைக்கு, திருமால் வாழும் வைகுண்டமும் நிகரோ என்று தாமரைக் கண்ணான் உலகு (1103) என்கிறார்.

    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு (179) வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு (519) இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்னும் இடங்களில் இலக்குமியைத்தான் சொல்கிறார். அவளையேதான், அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல் (84) அவ்வித்து அழுக்காறு உடையவனைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (169) என்னும் இடங்களில் பேசுகிறார். அவளையேதான் மடியிலான் தாளுளாள் தாமரையினாள் (617) என்பார். அவளுக்கு நேர்மாறான மூத்தவளான மூதேவியைத்தான் தவ்வையைக் காட்டிவிடும் (169) மடியுளாள் மாமுகடி (617) அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936) என்று காட்டுகிறார். அதுபோல, நிலமென்னும் நல்லாள் (1040) என்று பூமி தேவியைச் சொல்கிறார்.

    காமத்துப் பாலைப் பாடியவர் மன்மதனைச் சொல்லாமல் விடுவாரா? பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197) என்று அங்கே மன்மதனைச் சொல்கிறார்.

    குறளின் குறிக்கோளே அறத்தை வலியுறுத்துதல்தான். அறம்தான் இந்த நூலின் கதாநாயகன். அறம் என்பது நல்வினை, புண்ணியம். மறம் என்பது, அறமல்லாதது, தீவினை, பாவம், பொருளல்லாதது. எனவே, எல்லோரையும் ஒரேவிதமாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான விளைவுகளை இம்மியும் பிசகாமல் வழங்கும் அறத்தைக் கடவுளாகக் காட்டுகிறார். வடமொழியில், இந்த அறம் என்னும் சக்தி, மூன்று விதமாகச் செயல்படுவதைக் குறிப்பார்கள்:

    1. ம்ருத்யு : உயிரை உடலிலிருந்து எடுத்துச் செல்லும் சக்தி. இதைக் கூற்றுவன் எனலாம். ஏனெனில், உடலிலிருந்து உயிரைக் கூறு செய்பவன் கூற்றுவன் என்பது விளக்கம். கூறு என்றால் பங்கு, பிரிவு, பாதி, அம்சம், வகை, கூறிட்ட பொருள் என்றெல்லாம் பொருள்படும்
    2. காலன் : உடம்பில் உயிர் நிலவும் காலத்தை, அதாவது ஆயுளை நிர்வகிக்கும் சக்தி
    3. எமன் : இவனே தர்மராஜன் எனப்படுகிறான். இவனே இருவினைப் பயனை, உயிர்களுக்கு, உரிய விதத்தில், உரிய காலத்தில் சேர்ப்பிப்பவன்

    இந்த விளக்கத்தை மனத்தில் கொண்டு, திருவள்ளுவர் அறக்கடவுளைப் பற்றியும், கூற்றுவனைப் பற்றிச் சொல்வதையும் கூர்ந்து நோக்குவது சுவாரசியமானது.

    என்பிலதனை வெயில்போலக் காயுமே

    அன்பிலதனை அறம் (77)

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130)

    மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.

    மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின்

    அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)

    இவற்றில், அறக்கடவுளின் கடுமையை, சமாதானமற்ற கூர்ந்த பார்வையை, பிழைசெய்வோரை தண்டிக்கும் கண்டிப்பைச் சொல்கிறார்.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் (269) கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள் மீது செல்லாது உயிருண்ணுங் கூற்று (326) கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (765) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (894) உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்கிறார். சுருங்கச் சொன்னால்,

    1. தவவலிமையால் கூற்றுவனை வெல்லக் கூடும்
    2. கொல்லாமை விரதம் பூண்டவன் அற்ப ஆயுளில் இறப்பதில்லை, துர்மரணம் அவனுக்கில்லை
    3. படைவீரம் என்பது கூற்றுவனே எதிர்நின்றாலும் தீரத்துடன் போரிடுவது
    4. ஆற்றலுள்ள நல்லோருக்குத் தீங்கிழைத்தல், கூற்றுவனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்கு நிகர்
    5. பொருளே இல்லாத போதும் மனதில் துறவு மனப்பான்மை வரவில்லையென்றால், அவன் அண்டை வீடுகளிலுள்ள பொருட்களுக்குக் கூற்றுவனாவான்

    என்று பலவிதமாகக் கூற்றுவனைக் குறிப்பிடுகிறார்.

    கூற்றுவனின் கொடுமையை அவர் காமத்துப் பாலிலும் காட்டுவது அற்புதமான உத்தி:

    பண்டறியேன் கூற்றென்பதனை; இனியறிந்தேன்

    பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

    கூற்றமோ? கண்ணோ? பிணையோ? மடவரல்

    நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

    என்று பெண்ணின் கண்ணுக்குக் கூற்றுவனை இணையாகப் பேசுகிறார். கூறு என்றால் பிரிவு, பங்கு, அம்சம், பாதி, வகை என்றெல்லாம் பொருள்படும்.

    சரி. பிறப்பு, இருவினை, அறம், கூற்றுவன், இறப்பு என்றெல்லாம் பேசுபவர், இறந்து போன முன்னோர்களாகிய பித்ருக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா என்றால், அவர்களைத் தென்புலத்தார் (43) என்கிறார். ஞானியர், யோகியர், பேரடியார் இவர்களெல்லாம் வடபுலம் ஏகியவர்கள். மற்றை மானிடர்கள், தென்புலத்தார். அவர்கள், பூமியில் வாழும் மனிதர்களின் சடங்குகளின் மீது ஆதாரப்பட்டிருக்கிறார்கள்.

    மனிதர்களில் கயவர்கள், பதடிகளைப் பற்றிச் சொன்னவர், மனிதரல்லாத அமானுஷ்ய ஜீவிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்:

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை

    மாதர்கொல்? மாலும் என் நெஞ்சு (1081)

    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

    தானைக்கொண் டன்ன துடைத்து (1081)

    அணங்கைப் பெண் எனலாம்; பேயெனலாம்; பெண் தெய்வம் எனலாம். தாக்கணங்கை மோகினி எனலாம்! இவை போதாதென்றோ,

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

    பேஎய்கண் டன்ன துடைத்து (565)

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து

    அலகையா வைக்கப் படும் (850)

    என்று, பேயைக் கொண்டு வருகிறார்.

    உடனே, வள்ளுவருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்று வினாவெழுப்ப வேண்டா! `என்னடா பேயறைந்தாற்போல் இருக்கிறாய்?` என்றால் கேட்டவர் அதற்கு முன்பு தன்னையோ பிறரையோ பேயறைந்து பார்த்திருக்கிறார் என்று பொருளல்ல! அது ஒரு manner of expression.

    ஆனால், அவர் தேவர்களைப் பற்றிச் சொல்வது, பேய்களைப் பற்றிச் சொன்னதுபோல் ஒரு பேச்சுக்காக இல்லை.

    சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)

    அகல்விசும்புளோர் கோமான் இந்திரன் (25)

    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50)

    நல்விருந்து வானத்தவர்க்கு (86)

    புத்தேளுலகத்தும் (213)

    புலவரைப் போற்றாது புத்தேளுலகு (234)

    கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு (290)

    அவியுணவின் ஆன்றார் (413)

    தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

    தேவர் அனையர் (1073)

    புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ (1323)

    இவைபோன்ற குறள்களைப் பார்க்கும்போது, தேவர்கள், வானுலகம் இவை, வள்ளுவரின் வெறும் நம்பிக்கையாக இல்லாமல் அவர் அறிந்த நிதர்சனமாக இருந்தனவோ என்று தோன்றுகிறது.

    தேவர்களைக் குறிப்பிட்டால் அமிழ்தத்தைக் குறிப்பிடாமல் இருப்பாரோ?

    தான் அமிழ்தம் (11)

    சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று (82)

    அமிழ்தினும் ஆற்ற இனிதே (64)

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720)

    மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை (968)

    அமிழ்தின் இயன்றன தோள் (1106)

    தேவர்கள், அவர்கள் உறையும் சுவர்க்கம், அமிழ்தம் இவற்றைச் சொன்னவர், நரகத்தையும் குறிப்பிடத் தவறவில்லை:

    அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் (121)

    ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

    தான்புக் கழுத்தும் அளறு (835)

    புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (919) என்றெல்லாம் சொல்லி, அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்:சேர்ந்த இன்னா உலகம் புகல் (243) என்பார்.

    இம்மையை மாயையென்று கொண்டவரில்லை வள்ளுவர். அங்ஙனம் கொண்டிருந்தால், வாழ்வின் எல்லாத் தளங்களுக்கும் பொருத்தமான அறங்களை ஏன் சொல்வார்? தேவர்கள், அவர்கள் வதியும் இடம் என்பவற்றைப் பற்றியும் பேசுவாராதலின், அவர் மறுமையை நம்பியவர் என்றே உறுதியாய்ச் சொல்லலாம். இங்கு வாழ்ந்து உயிர் நீத்தபின் எய்தும் நிலையும் அதன்பிறகு நேரும் பிறப்புமே மறுமை.

    மனநலத்தின் ஆகும் மறுமை (459)

    மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)

    மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

    என்ற குறள்களில் மறுமையைச் சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்தே இரண்டு இடங்களில் கையாள்கிறார்:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

    இம்மையும் இன்பந் தரும் (98)

    இன்மை எனவொரு பாவி மறுமையும்

    இன்மையும் இன்றி வரும் (1042)

    இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அவருக்கே உரிய முறையில் கச்சிதமாகச் சொல்கிறார்.

    அதை,

    வானென்னும் வைப்பு (24)

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)

    புக்கில் (340)

    வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)

    வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

    என்றெல்லாம் வீட்டை விவரித்து மற்றீண்டு வாரா நெறியே (356) மனிதன் கடைபிடிக்க வேண்டியது என்று அறிவுறுத்துவார்.

    ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும், பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும், அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை) அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும், அதற்குக் காரணம் பற்று (347) என்றும், பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346) காமம், வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் பிறவி என்பது தொடரும் என்றும், ஒரு பிறவியில் செய்த வினையின் விளைவு ஏழு பிறவிகளில் தொடரும் என்றும், (107, 126, 398, 538) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (360) என்றும் சொல்லி, பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349) என்றும் படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

    பற்று நீங்கினால், இந்த உலகத்தில் இந்த உடலில் இருக்கும்போதே விடுதலை எய்தி வீடு பேற்றை அடையலாம் என்பதை,

    இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்

    துன்பத்துள் துன்பம் கெடின் (369)

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நினைவே

    பேரா இயற்கை தரும் (370)

    என்னும் குறள்களில் உறுதிமொழி தருவதுபோல் விளக்குகிறார்.

    திருவள்ளுவர் காட்டும் நெறியில் நின்றால், யாண்டும் இடும்பை இல என்பதே உறுதி.

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (12)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    kural-4-1-1

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

    இறைவ னடிசேரா தார் (10)

     

    கடவுளின் திருவடியை அடைந்தவரால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது.

    யார் இறைவனடியைச் சேர்கிறார்களோ அவர்களே பிறவியாகிய பெருங்கடலைத் தாண்டுகிறார்கள். அறம், பொருள், இன்பம் என்னும் கடல்களைக் காட்டிலும் விரிந்ததும் மருட்சி தருவதுமானது பிறவி என்னும் பெருங்கடல். அதனால்தான் அதனை சம்சார சாகரம் என்கிறோம்; பவக்கடல் என்கிறோம்; ஏன், கவலைக் கடல் என்றுகூடச் சொல்கிறோம்.

    இந்தக் கொடுங்கடலை எப்படிக் கடப்பது? முயற்சியின்றி மூழ்கிப் போவதா? மணலைத் தூவித் தூர்க்க முனைவதா? கரை எங்கோ அதுவரை பாலம் கட்டப் புறப்படுவதா?

    கடலைத் தாண்டப் பாலம் எதற்கு, படகே போதாதா?

     

    ஆம், அந்தப் படகுதான் இறைவனின் தாள்கள்; இறைவனின் திருநாமம்.

    கடவுளின் தாளைப் பணிவதால் மட்டுமே அதைக் கடக்கமுடியும், மீண்டும் பிறவாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறார் வள்ளுவர். இல்லையெனில், மறுபடி மறுபடிப் பிறவிக் கடலில் அழுந்தும் துயரே தொடரும் என்பது முடிவு. ஆயின், வினை, அதன் விளைவாகிய பிறப்பு, முற்பிறவி இவை உண்டு என்றுதான் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

    `என்பால் சித்தத்தை வைத்தோரை, விரைவில் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கிறேன்,` என்கிறான் கண்ணன். (கீதை:12:07)

    இறைவனைப் பணிதலே துவக்கமும், முடிவும், ஒவ்வொரு மனிதனின் பணியும் என்பதை மிக உறுதியாகவும் அன்போடும் கருணையோடும் எடுத்துச் சொல்கிறார்.

    இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்றார். நீந்துவர் என்னும் சொல் தனியே நிற்பதுபோல் தோன்றுகிறதல்லவா? இங்கே உவமை சொல்லப்படவில்லை. ஒன்றைச் சொல்லி, இன்னொன்று சொல்லாமல் சொல்லப் படுகிறது. இதை இசையெச்சம் எனலாம். இது ஏகதேச உருவகம் அல்லது ஏகாங்க உருவகம் எனப்படும்.

    இன்னொரு சிறப்பையும் காண்போம்:

    இந்தப் பத்துக் குறள்களில், அனைத்துக்கும் ஆண்டவனே முதல் என்பதை முதலிலேயே முடிவாகச் சொல்லிவிடுகிறார். அவனுடைய புகழைப் பாடுவதே இருவினைகளில் இருந்து மீளும் வழி என்பதை ஓரிடத்தில் சொல்கிறார். ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார் என்று ஓரிடத்தில் கூறுகிறார். ஆக, எவன் அனைத்துக்கும் துவக்கமோ அவன் புகழைப் பாடுவதும், அவனை அடைய விதிக்கப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பதுமே வேலை என்கிறார்.

    இஃதல்லாமல், பத்து குறள்களில் ஏழு குறள்கள் இறைவனுடைய தாள்களைப் பணியச் சொல்கின்றன:

    1. வாலறிவன் நற்றாள்
    2. மலர்மிசை ஏகினான் மாண் அடி
    3. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
    4. தன்க்குவமை இல்லாதான் தாள்
    5. அறவாழி அந்தணன் தாள்
    6. எண்குணத்தான் தாள்
    7. இறைவன் அடி

    தாளைப் பணியவே தலை. தாளில் ஆளில்லை. அதில் தலைவைத்துத்தான் நமது அடையாளங்கள் யாவும் தீர்ந்து நாம் ஆளாவோம்! அவனுக்கே ஆளாவோம்! தாளில், புகலிடம் என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லை. முக பாவனை இல்லை. கைகளும் ஆயுதங்களும் இல்லை. வாழ்வில் தள்ளாடி வரும் நம்மை ஒருபோதும் தள்ளாது தாள்!

    இறையருளே இணையடி!

    அவனே அனைத்தும் என்பதால், அவனைப் பணிதலே அனைத்துக்கும் வழி என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

     தொடருவோம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை  – 10

    kural-4-1-1

    கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை (09)

     

    எட்டுக் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், தத்தமக்குரிய செயல்களைச் செய்யாத ஐம்பொறிகளைப் போலப் பயனற்றவையாகும்.

    கோள் இல் = கொள்ளுவது கோள். கிரகங்களுக்கும் பொருந்தும். கிரஹணம் = பற்றுதல். பாணிக் கிரஹணம் = கைத்தலம் பற்றுதல்

    பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் கர்மேந்திரியங்கள். Sensory organ. புலன்கள் ஞானேந்திரியங்கள். பொறிவைத்துப் பிடித்தல்! Senses

     

    இலக்கணம்

    குணத்தான்-குணங்களை உடையவன்.  ஆண்பால் படர்க்கை (third person) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் இவற்றின் அடியால் வருபெயர்.  இங்கே குணத்தின் அடிப்படையால் வரும் பெயர்.

     

    கண் இருக்கிறது. ஆனால், கண்ணா பார்க்கிறது? இல்லை, கண்வழியே பார்ப்பது நாம்.

    நாமா பார்க்கிறோம்? நம்மைப் பார்க்க வைக்கின்ற மஹாசக்தி ஒன்று உள்ளது அல்லவா?

    ய: சக்‌ஷுஷா ந பச்யதி யேன சக்ஷுகும்ஸதி பச்யதி

    ததேவ ப்ரம்ம த்வம் வித்தி நேதம் யதிதம் உபாஸதே (கேனோபநிடதம்)

     

    எதைக் கண்ணால் பார்க்க முடியாதோ, எது கண்ணைப் பார்க்கச் செய்கிறதோ அதுவே ப்ரம்மம் என்றறி, என்கிறது கேனோபநிடதம். இது, மற்ற எல்லாப் புலன்களுக்கும் பொறிகளுக்கும் அவயவங்களுக்கும் பொருந்தும் என்பதை விளக்கிச் சொல்லவேண்டியதில்லை. அந்த மஹாசக்திதான், கண்ணன் சொல்கின்ற `க்ஷேத்ரக்ஞன்.` என் குருநாதர் சொல்கின்ற ‘Truth of the inner fellow.’ ஆக, அவன் இல்லையென்றால், அவன் அருளில்லையென்றால், நாம் எதையும் பார்க்கவோ, கேட்கவோ, முகரவோ, சுவைக்கவோ, தொட்டறியவோ முடியாது. இது இந்தக் குறளின் அடிப்படைப் பொருள்.

    இனி, வள்ளுவர் அடுத்த அடிக்கு இட்டுச் செல்வதைப் பார்ப்போம்.

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவை புலன்கள் எனப்படும். இவை senses எனப்படும். மெய், வாய், கண், மூக்கு, செவி இவை பொறிகள் எனப்படும். இவைதான் ஞானேந்திரியங்கள் எனக் குறிக்கப்படுகின்றன. (உபத்ரம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு என்பவை கன்மேந்திரியங்கள்)

    பொறிகள் கருவிகளே. அவை தன்னிச்சையாக இயங்க முடியாது. புலன்களோடு பொருந்தியிருப்பதால் மட்டுமே அவை தத்தம் அமைப்புக்கேற்பத் தொழிற்படுகின்றன. காது என்கின்ற கருவி, கர்மேந்திரியம், கேட்டல் என்னும் சக்தியோடு பொருந்தியிருக்கும்போதுதான் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது. இல்லையேல் காது கேட்காது. எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது எதிரே நடப்பவர் கண்ணில் படுவதில்லை. ஒருவர் கூப்பிடுவது காதுகளில் விழுவதில்லை. உறக்கத்திலிருந்து நம்மை எழுப்ப, சும்மா தொட்டால் போதுமானதாக இருக்கிறதோ? உலுக்க வேண்டியிருக்கிறதே! கவலையில், நாவுக்குச் சுவை தெரிவதில்லை. உறக்கத்தில் ஏது வாசனை?

    பில் கேட்ஸ், தன் கைப்படத் தயாரித்துப் பரிசளித்த கணினியே என்றாலும், `ப்ளக்`கை மின்சார இணைப்போடு செருகாமல் அது இயங்குமா? கணினிதான் பொறி. (கணிப்பொறி என்று சரியாய்த்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்!) மின்சாரம், புலன். பில் கேட்ஸ் நாம். இறைவன் பில்லுக்குப் பாட்டனுக்கும் பாட்டன். எனவே, புலன்களும் பொறிகளும் இணைந்திருக்கும்போதுதான் இயக்கம் சரிவர நடக்கின்றது. இல்லையெனில், உயிரும் உணர்வும் இருந்தும் அவை இல்லாதது போலவே நாம் ஜடமாக இருக்கும் அவலத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

    பொறி என்பது கருவி; அதற்கு அறிவுடைமை, விவேகம், பிரத்யட்சம் என்றெல்லாம் கூடப் பொருள்கள் உண்டு. புலன் என்பது அறிவு. குழம்ப வேண்டாம்! பல இடங்களில் பொறி, புலன் இவை ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். புலன் – பொறி, இவை இணைப்போடிருந்தால்தான் அந்தந்தப் பொறிக்கான தொழில் நடைபெறுகிறது. அதாவது, பொறி, புலனோடு பொருந்தியிருக்க வேண்டும்.

    கண், பார்த்தல் என்னும் அறிவுச் சக்தியோடு இணைந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது குணமற்றதே.

    இந்த இயக்கத்திற்குக் காரணம் பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வாலறிவன். அவனை வணங்கித்தான் நம்மில் எதுவும், நம் மூலம் எதுவும், நம்மாலும் சீராக இயங்க முடியும். புலன்களோடு பொருந்திக் கொள்ளாத பொறிகள் எப்படிப் பயனற்றவையோ, அதுபோலவே எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை வணங்காத தலை, அதாவது மனித வாழ்க்கை பயனில்லை என்கிறார்.

    நம் பிஞ்சுவிரல், வள்ளுவரின் உள்ளங்கையின் வெதுவெதுப்பை நிலையாக அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமோர் அடியெடுத்து வைக்கலாமே!

    எல்லாப் பொறிகளுமே புறம்நோக்கித்தான் பொருத்தப்பட்டிருக்கின்றன. புலன்களும் பொறிகளும் சேர்ந்து புறப்பொருட்களோடு ஓயாமல் தொடர்புகொண்டபடிதான் இருக்கின்றன. இந்தத் தொடர்புகளே, நம் சித்தத்தில் பாளம் பாளமாகப் பதிந்திருக்கும் பழைய வாசனைகளைக் கிளறி, அவை ஆசைகளாய் எழுந்து, அதன்பின்னே நாம் சென்று விழுகிறோம். காற்று வந்த ஜன்னல் வழியே நாம் கீழே விழுவதுபோல், நமக்கு வந்த தபால்களின் குவியலில் நாமே மூழ்கிப் போவதுபோல், புலன்கள், பொறிகள் இவற்றின் இயற்கையான இயக்கத்தில், நாம் தொலைந்துபோகிறோம். வாழ்க்கை என்பது பிரகிருதி நம்மோடு ஆடும் ஆட்டமே. நாம் இன்பம், துன்பம் என்று சொல்வதெல்லாம், நாம் பிரகிருதியில் காணும் அனுபவங்களே. இதை உணர்ந்தவன் இன்பத்தில் ஆடுவதுமில்லை; துன்பத்தில் வீழ்வதுமில்லை. இவையிரண்டுமே இந்திரியங்களின் விளையாட்டு; அவற்றின் பின்னே இருக்கும் மனத்தின் ஓயாத சஞ்சலம்; இவையெதுவும் மேலானவை அல்ல, உண்மையல்ல, நிரந்தரமல்ல; எனவே இவை நானல்ல என்றும் உணர்ந்து, தனது இதயக் கமலத்தில் இடைவிடாது பேரொளியாய் வீற்றிருக்கும் இறைவனைச் சரணெய்துகிறான். அங்கே, ஆசாமி, சாமியாகிறான்!

    வள்ளுவர் நம்மை அழைத்துச் செல்லும் தொலைவு, அளக்க முடியாதது!

    சொல்லுக்குச் சொல் பொருள்கண்டு சுவைப்போம்.

     

    (1) கோள்

    ஒப்புரவினால் வரும் கேடெனெனின் அஃதொருவன்

    விற்றுக்கோள் தக்க துடைத்து (22 ஒப்புரவு 220)

    பரோபகாரத்தால் நமக்குக் கேடு வருமாயின், அந்தக் கேடு, நம்மையே விற்றுப் பெறத்தக்கது.

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

    இரந்துகோள் தக்க துடைத்து (78 படைச்செருக்கு 78)

    தன்னை ஆதரித்த மன்னனின் கண்முன்னே, அவன் விழிநீர் சொரிய, போர்க்களத்தில் மாய்வது என்பது, கெஞ்சியேனும் பெறத்தக்கது.

    ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

    மேவார் இலாஅக் கடை (106 இரவு 1059)

    பிச்சை கேட்டுப் பொருள்கொள்வோர் இல்லாத போது கொடுப்பவருக்குப் புகழ் ஏது?

    இந்த மூன்று குறள்களிலும், கோள் என்றால் கொள்ளுதல் என்று பொருள் வருகிறது.

     

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (32 இன்னா செய்யாமை 311)

    சிற்ப்பைத்தரும் செல்வம் பெறுவதாயிருந்தாலும் இன்னொருவருக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (32. இன்னா செய்யாமை 312)

    ஒருவன் தம் மீது பகைகொண்டு துன்பம் புரிந்தாலும், திரும்ப அவனுக்குத் துன்பம் விளைவிக்காமல் இருப்பதே குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

    மாட்சியின் மாசற்றார் கோள் (65 சொல்வன்மை 646)

    தான், பிறர் விரும்பும்படி சொல்லி, பிறர் சொல்லும்போது அதன் பயனை ஆராய்தல் குற்றமற்ற நெஞ்சினரின் கொள்கை.

    ஊறொரால், உற்றபின் ஒல்காமை, இவ்விரண்டின்

    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (67 வினைத்திட்பம் 662)

    இந்த மூன்று குறள்களிலும் கோள் என்பது கொள்கை என்னும் பொருளில் வந்தது. கொள்கை என்பது துணிபு (முடிவு) என்றும் சொல்லப்படும்.

     

    (2) பொறி

     

    பொறிவாயில் என்றபோதும் பொறியில் என்னும்போதும் பொறி என்பது ஐம்பொறி என்னும் பொருளில் வருகிறது.

    பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து

    ஆள்வினை இன்மை பழி (62 ஆள்வினை உடைமை 618)

    அனுபவிக்கும் ஊழ் இல்லாது போதல் பழியாகாது. ஆனால், அறிவோடு முயற்சி எடுக்காதிருப்பதே பழி.

    இந்தக் குறளில் பொறி என்பது விதி அல்லது ஊழ் என்னும் பொருளில் வருகிறது.

     

    கோளில் பொறியில். பொறியில் = பொறியின் = பொறிபோல என்று பொருள் புரிந்துகொள்ள வேண்டும்.

    (3) தாள்

     

    கடவுள் வாழ்த்தில் காணப்படும் தாள் என்னும் சொல் அடி என்னும் பொருளில்தான் வருகிறது. அஃதல்லாமல்,

    தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

    வேளாண்மை செய்தற் பொருட்டு (22 ஒப்புரவறிதல் 212)

    உழைத்துச் சம்பாதிப்பது உரியவர்க்கு உதவுதற்கே.

    மடியுளாள் மாமுகடி என்ப, மடியிலான்

    தாளுளாள் தாமரையினாள் (62 ஆள்வினையுடைமை 617)

    மூதேவி சோம்பலிலும், திருமகள் முயற்சியிலும் வாழ்கிறாள்.

    தெண்ணீர் அடுபுற்கை யாயினும், தாள்தந்தது

    உண்ணலி னூங்கியது இல் (107 இரவச்சம் 1065)

    நீர்த்த கஞ்சியானாலும், அது தான் உழைத்துச் சமைத்ததானால், அதைவிட உயர்ந்தது இல்லை.

    இந்த மூன்று குறள்களில் தாள் என்பது முயற்சி என்னும் பொருளில் வருகிறது. மேலும்,

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

    வேளாண்மை என்னும் செருக்கு (62 ஆள்வினையுடைமை 613)

    பிறருக்கு உதவும் மேலான நிலைமை, முயற்சி என்னும் பண்பில்தான் உள்ளது

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை

    வாளாண்மை போலக் கெடும் (ஆள்வினையுடைமை 614)

    முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி, பேடியின் கையில் வாளைப் போல.

    இவ்விரண்டு குறள்களிலும் தாள், தாளாண்மையாகி, முயற்சி என்னும் பண்பு என்று பொருள் படுகிறது.

     

    (4) தலை

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

    பசும்புல் தலைகாண் பரிது. (02 வான்சிறப்பு 16)

    மழையில்லை என்றால் புல்கூடத் தலைகாட்ட முடியாது.

    செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

    காணின் கிழக்காம் தலை (49 காலம் அறிதல் 488)

    பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும். அவர் காலம் முடியும்போது அவர் தலை கீழே விழும்

    இங்கே தலை என்பது முடி என்னும் பொருளில்தான் வருகிறது.

     

    ஐம்புலத்தார் ஓம்பல் தலை (5:இல்வாழ்க்கை:43) முயல்வாருள் எல்லாம் தலை (5:இல்வாழ்க்கை:47)  மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (6:வாழ்க்கைத் துணைநலம்:57) இகழ்வார்ப் பொறுத்தல் தலை (16:பொறையுடைமை:151) என்பன போன்ற (இன்னும் நிறைய உண்டு) குறள்களில் தலை என்பது முதன்மை, சிறப்பு என்னும் பொருளில் வருகிறது.

     

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

    உட்கோட்டம் இன்மை பெறின் (12:நடுவுநிலைமை:119)

    இங்கே, தலை என்பது உறுதி என்று பொருள்படும்.

     

    `தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்,` என்னும் பாரதியின் அமர வாசகம் இங்கே ஓரத் தக்கது.

     

    ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (36:மெய்யுணர்தல்:357)

    இங்கே தலை என்பது தெளிவு என்று பொருள்படும்.

    தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்ளாத பொறிகளால் பயனில்லை. அதுபோலத்தான் எட்டு குணங்களை உடைய இறைவனின் தாளை வணங்காத தலை. தலை என்பது இங்கே உடம்பையல்ல, மனிதனின் வாழ்வையே சுட்டுகிறது.

    ஆக,

    கொள்ள வேண்டியது அவன் தாள்களை

    கொள்கை என்பது அவன் தாள்களைப் பற்றிக்கொள்வதே

    பொறிகள் நமக்கு வாய்த்திருப்பது அவன் தாள்களில் பொருத்திக்கொள்ளவே

    ஊழ் என்பது உயிரான அவன் தாள்களைச் சரணெய்தியே தீரும். `ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்` என்று இளங்கோ அடிகள் பேசும்போது அங்கே தீவினை குறிக்கப்படுகிறது. திருவள்ளுவரின் ஊழ் என்பது நல்வினை, தீவினை இரண்டும் சேர்ந்தது. பிறப்பும் இறப்பும் இல்லாத பெருநிலை எய்துதற்கு நல்வினையும் ஒரு தடையே ஆதலின் `இருள்சேர் இருவினை` என்றார். எனவே, இறைவனின் தாள்களைச் சரணெய்தினால், விளைவுகளுக்குக் காரணமான ஊழ் தீரும், ஒருமை நேரும் என்று புரிந்துகொள்கிறோம். வினை என்றால் செயல். செயல் நேர்ந்தால் விளைவு என்னும் பயன் எழுந்தே தீரும். அது வினையாற்றியவனைப் பற்றத்தான் செய்யும். நமது வினைகளின் ஒட்டுமொத்தமான விளைவுகளின் தொகுதி, அவை விளையும் ரீதி, விதம், இவற்றுக்கே விதி என்று பெயர். அது, விதிக்கு உட்படாத, எந்த விதிக்கும் மூலமான இறைவனின் திருவடிகளைப் பற்றித்தான் தீரும் என்பதே வள்ளுவர் நமக்குக் கற்பிக்கும் பாடம்.

    தாள் பணிவதே நம் முயற்சி என்னும் கடன்

    தாளைப் பணிவதே முயற்சி என்னும் பண்புக்கு முத்திரை

    தாள்களே தலைக்கான இடம்.

    தாள் பணிவதே முதன்மைக் கடன்

    தாள் பணிந்து வாழ்வதே தலையாய சிறப்பு

    தாள்களில் உறுதியாக நிற்கவே தலை

    தாள்பணிந்து வருவதே தெளிவு.

    (5) எண்

     

    எண் என்றால் கணக்கு, தருக்கம்

    எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

    கண்ணென்ப வாழும் உயிர்க்கு (40:கல்வி:392)

    எண் என்று சொல்லப்படும் அறிவியலும் (Science) எழுத்து என்று சொல்லப்படும் கலை இயலும் (Arts) உண்மையாக வாழ்கின்றவர்கட்குக் கண்கள் என்று சொல்லுவார்கள்.

    எண் என்றால் எண்ணம்

    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு, எஞ்ஞான்றும்

    பெண்சேர்ந்தாம் பேதைமை இல் (91: பெண்வழிச் சேறல்:910)

    சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.

    எண் என்றால் எளிமை

    எண்பொரு ளாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

    நுண்பொருள் காண்ப தறிவு (43:அறிவுடைமை:424)

    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

    தண்பதத்தான் தானே கெடும் (55:செங்கோன்மை:548)

    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

    ஏனை இரண்டும் ஒருங்கு (76:பொருள்செயல்வகை:760)

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

    பண்புடைமை என்னும் வழக்கு (100:பண்புடைமை:991)

    ஆக,

    கணக்கு, தருக்கம் எல்லாம் கடவுளின் பாதத்தில் முடிகின்றன. நெஞ்சுறுதி என்பது இறைவனின் தாள்களில் நிலைத்து நிற்பதே.

    இறைவனே நெருங்குதற்கு எளியன். அவன்தாள் பணிந்தால் எதுவுமே எளிமையாகிவிடும்.

    இனி

    எண்குணத்தான் தாள் என்னும்போது குணம், வடிவம் உடைய கடவுளை மக்கள் வழிபடுவது வள்ளுவருக்கு ஏற்புடையதுதான் என்று தோன்றுகிறது.

    இப்போது எண்குணத்தான் என்றாரே, அந்த எட்டுக் குணங்கள் என்னவென்று பார்ப்போம்:

    சுயேச்சையானவன், தூய்மையே உடம்பானவன், இயற்கை உணர்வினன், அனைத்தும் அறிந்தவன், இயல்பாகவே பற்று நீங்கியவன், பேரருள் கொண்டவன், எல்லையில்லா ஆற்றல் உடையவன், அளவற்ற இன்பமுடையவன் என்று சைவாகமம் கூறும்.

    அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் அட்டமா சித்திகளே இறைவனின் எண்குணம் என்றொரு கூற்றுண்டு.

    அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், பெயரில்லான், கோத்திரமில்லான், அவாவில்லான், அழியா இயல்புடையான் என்று இன்னொரு வரிசை கூறும்.

    இன்னும் சிறப்பான பொருளும் இதற்குண்டு….

    இது ஒன்பதாவது குறள். இதற்கு முன் சென்ற எட்டுக் குறள்களிலும் இறைவனது எட்டுக் குணங்கள் கூறப்பட்டுள்ளன:

    1. ஆதிபகவன் = இறை இறைவன். ஐஸ்வரியம், வீரியம், புகழ், ஞானம், திரு, வைராக்கியம் இவை பகம் என்னும் சொல்லுக்குப் பொருளாகும். உலகத்துக்கு அவனே முதல்
    2. வாலறிவன் = தூய அறிவே வடிவானவன் pure, effulgent intelligence
    3. மலர்மிசை ஏகினான் = இதய மலரில் உறைவோன். நினைத்தால் உள்ளே தெரிபவன்
    4. வேண்டுதல் வேண்டாமை இலான் = அனைத்திலும் சமமாயிருப்பவன். விருப்பு வெறுப்பற்றவன்
    5. இருள்சேர் இருவினையும் சேரான் = நன்மை, தீமை பயக்கும் வினைகளுக்கு அப்பாற்பட்டவன். வினையிலான், வினையின் மூலம் எய்த முடியாதவன்
    6. பொறிவாயில் ஐந்தவித்தான் = புலன்கள், பொறிகள் என்னும் வரம்பில்லான். பொறிகளுக்கு மூலமாய் ஆனால் பொறிகளின் தொடர்பின்றியே இருப்பவன்
    7. தனக்குவமை இல்லாதான் = ஒப்பு, உயர்வு, நிகரில்லான். தனக்கு இணையில்லாத பெருமை உடையான்
    8. அறவாழி அந்தணன் = தருமக் கடல், அதில் தெப்பம். அறத்தின் இருப்பிடம், அருளாளன்
    9. எண்குணத்தான் – மேலே குறிப்பிட்ட எட்டு குணங்களுடையான்

     தொடருவோம்

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(10)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9)

    kural-4-1-1

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    பிறவாழி நீந்த லரிது (8)

    அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை அடைந்தாருக்கு அல்லாமல், மற்றவர் பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடக்க முடியாது.

    ‘தருமத்தின் பாதை சூட்சுமமானது, கரடுமுரடானது` என்று மகாபாரதம் சொல்லும். அறம் என்பது பல பொருள் கொண்டது. காலம், இடம், சூழல், மனிதனின் நிலை இவற்றுக்கேற்பப் பொருள் மாறுவது. மிகவும் விரிந்தது. மிக மிக நுண்மையானது. இறைவனுக்குச் சொல்லப்படும் பல தன்மைகள் தருமத்திற்கும் பொருந்தும். எனவே தருமத்தை, அறத்தைக் கடல் எனலாம். ஆனால், இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டவனுக்குப் பாதை கரடுமுரடாக இருக்காது.

    அறவாழி என்றால் தருமக் கடல். அந்தணன்? செந்தண்மை பூண்டொழுகுபவன்! எதிர்பார்ப்பற்ற கருணை பூண்டவன், காரணமற்ற கருணை உள்ளவன். காருண்ய வேகம் உள்ளவன். செயற்பூர்வமான தயை உள்ளவன்.

    இறைவனே அறக்கடல். பெரியது, அளவற்றது, ஆழமானது, ரத்தினங்களைக் கொண்டது என்பதற்காக அவனைக் கடல் என்கிறோம். இது மருட்டும் கடல் அல்ல. நம்மை ஆச்சரியத்தில் நிறுத்திவைக்கும் அருட்கடல். வற்றாதது. அவனது திருவடிகளைச் சேர்வதும் அறக்கடலை அளப்பதும் ஒன்றே. அவனது திருவடிகளாகிய ஓடத்தின் மூலம் பிற கடல்களாகிய பொருள், இன்பம் இவற்றையும் கடக்கலாம். அறம், புரியாமல் போகலாம். ஆனால், பொருள், இன்பம் இவற்றில் மயக்கம் ஏற்பட்டு மனிதன் திசைதவறிப் போக வாய்ப்பு அதிகமுண்டு.

    இறைவனின் தாள்களே அறக்கடல். அவன் தாள்களே தெப்பம். அவன் தாள்களே மற்றைய கடல்களைக் கடக்க உதவும் ஓடம்.

    `அறவழியை ஏற்காத மனிதர்கள், என்னை அடையாமல் இன்ப துன்பங்களில் உழல்கிறார்கள்,` என்பது கண்ணன் வாக்கு, (கீதை:09:03)

    இந்தக் குறளிலும் முந்தைய குறளிலும் அரிது என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதன் சிறப்பைப் பார்ப்போம்:

    அரிது என்றால் அருமையான (precious) அரிதான (rare) என்று பொருள். அருமை என்ற சொல்லுக்கு இன்மை, இல்லாதது  (non-existent) என்றும் பொருள். அரிது என்றால் உண்டாகாது, தோன்றாது (impossible) என்றும் பொருள். இந்த நான்கு பொருள்களிலும் அரிது என்னும் சொல்லை ஆள்கிறார் வள்ளுவர்.

    பசும்புல் தலைகாண் பரிது; வெகுளி கணமேனும் காத்தல் அரிது; வானகமும் வையகமும் ஆற்றல் அரிது; மாண்டற் கரிதாம் பயன்; புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே;  தீப்பிணி தீண்டல் அரிது; அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது; தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது; வணங்கிய வாயினராதல் அரிது; அரியவற்று ளெல்லாம் அரிதே; உறைநிலத்தோடு ஒட்டல் அரிது; அரிய கற்றும் ஆசற்றார்; மாண்பயன் எய்தல் அரிது; இகல்வெல்லல் யார்க்கும் அரிது; போற்றின் அரியவை போற்றல்; கொளற்கரிதாய்; மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது; செறுவார்க்கும் செய்தல் அரிது; பொன்றாமை ஒன்றல் அரிது; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.

    இன்னும் இப்படிப் பல குறள்களில் அவர் அரிது என்னும் சொல்லை ஆண்டிருக்கும் விதம் ஆய்ந்து அறியத்தக்கது.

     தொடருவோம்

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (8)

    kural-4-1

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    மனக்கவலை மாற்ற லரிது (7)

     

    தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகள் அடைந்தவருக்கு அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையைப் போக்க முடியாது.

     

    சொற்பொருள்

    தாள் = காகிதம், பாதம்

    கவலை = கவலுதல், ஒன்று, இரண்டாகப் பிரிதல். என் மனம் கவல்கிறதே. கவலை என்பது இருமை

    அரிது = சாத்தியமன்று

    ஆங்கில இணைச் சொற்கள்

    தனக்கு உவமை இல்லாதான் = Peerless one, Incomparable

    கவலை +Worry, anxiety, forking

    அரிது = dear, difficult, rare, impossible

     

     

     

    இலக்கணம்:

    தனக்கு – நான்காம் வேற்றுமை உருபு.விரித்தல்

    உறவுப் பொருள் = நான்காம் வேற்றுமை = எனக்கு

    உடைமைப் பொருள் = ஆறாம் வேற்றுமை = என்னுடைய

    தாள் – சினையாகு பெயர். சினை என்றால் உறுப்பு. தாள் என்றால் பாதங்கள் அல்லவா? இங்கே கால்கள், தாள் என்றது, அவற்றையுடைய கடவுளைக் குறிப்பிடுகிறதல்லவா? உறுப்பைச் சொல்லி அதன் மூலம் அந்த உறுப்புக்கு உடையவனைச் சுட்டுகிறது. தலைக்குப் பத்து ரூபாய் கூலி என்பது போல

    அல்லால்-எதிர்மறை, குறிப்பு வினையெச்சம்.  அன்றி என்று பொருள்படும்.

    மனிதனை பாதிக்கும் முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று மனம். இன்னொன்று கவலை. மனனம் செய்பவன் மனிதன். தான் என்னும் நினைப்பிருப்பவன் மனிதன். தான் உள்ளோம் என்பது மனிதனுக்குத் தெரியும். பசுவுக்குத் தான் பசு என்பது தெரியாது. மனிதனுக்குத் தான் இருப்பதும் தெரியும்; பசுவும் தெரியும். இதற்குக் காரணம் மனம்!

    `கவலைப் படுதலே கடுநரகம்மா,` என்பான் பாரதி. நரகம் என்று ஒன்று எங்கோ இல்லை. கவலையே நரகம். `கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல்,` என்றும் பாடுவான் பாரதி. துக்கத்தில் ருசி கொண்டுவிட்டால் அந்த மனிதன் தொலைந்தே போகிறான். கவலையும் ஒரு போதையாகி மனிதன் அதற்கு அடிமைப்பட்டுப் போகிறான்.

    யாருக்கும் எதற்கும் நிகரில்லாதவன் இறைவன். ஒப்பிட முடியாதவன் இறைவன். எனவே அதுபோல் இதுபோல் என்னும் உவமைகளுக்கு உட்படுத்த முடியாதவன்.

    அவன் ஒருவன். ஒன்றே அவன். இருமைகள் நீங்கியே அந்த ஒருமையின் அருமையை உணர முடியும். இருமையே நமக்குத் துன்பம் தருவது. இருமை என்றால் என்ன? ரெண்டாட்டம். மனம் எப்போதும் சஞ்சலிக்கிறது – நடக்குமா-நடக்காதா? கிடைக்குமா-கிடைக்காதா? இருக்குமா-இருக்காதா? போன்ற இடைவிடாத இருமைகளால் பந்தாடப் படுகிறோம். இருமைதான் கவலை.

    கவலை என்பது `கவற்சி` என்னும் சொல்லிலிருந்து வருவது. கவண், கவடு, இவை forking என்பதை, பிரிந்து போகிற பாதை என்பதை, அதாவது ஒன்றாயிருந்தது இரண்டுபடுவதைக் குறிக்கின்றன. தாமாய் இருந்தோம். நானும் நீயுமானோம். நாமாகித் தாமாக விழைகிறோம். அதுவே விடுதலை. `கவலையற்றிருப்பதே முக்தி,` என்றும் சொன்னான் பாரதி. அது எப்படி சாத்தியம்?

    நோய் என்பது எப்போது நீங்கும்? இன்னொரு நோயாளியிடம் சென்று பயனில்லை. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கிக் கொள்ளவேண்டும். மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொண்டால். அதுமட்டும் போதுமா? நாம் இருமல் தொல்லை தாங்க முடியாமல் மருத்துவரிடம் சென்றால், அவரும் ஓயாமல் இருமிக் கொண்டிருந்தால், அவரிடம் மருந்து வாங்கிக்கொள்ள நமக்கு மனம் வருமா?  நாம் நம்புவது மருந்தை அல்ல, மருத்துவரை! முகம்தெரியாத ஓட்டுனரை நம்பித்தான் ரயிலில் ஏறுகிறோம். ஏறிய பிறகும் சுமைகளைச் சுமப்பானேன்? இறக்கிவைத்துவிட்டு நீட்டிப் படுக்க வேண்டியதுதானே என்பார் ரமணர். ஆக, கவலை நீங்க வேண்டுமானால் முதலில் நமக்கு நம்பிக்கை வேண்டும். `என்னைக் காப்பது உன் பொறுப்பு. நான், நீ புனைந்த கவிதை. நீ ஆசையுடன் தோற்றுவித்த பிள்ளை,` என்கின்ற நினைப்பு நமக்கு இறைவனிடம் இருக்க வேண்டும். இரண்டாவது, நல்ல ஆர்வம் இருக்க வேண்டும். `நான் இருப்பது நாற்றம் பிடித்த சேறு. இதிலிருந்து எப்படியும் நான் வெளியே வரவேண்டும்,` என்னும் ஆர்வம் இருக்கவேண்டும். நாற்றத்தில் வெறுப்பின்றி நலம் நமக்கு நேராது. எந்தக் கவலையும் எப்போதும் இல்லாதவன் இறைவன் மட்டும்தான்.

    அதுபோல், கவலை என்பது எப்போது நீங்கும்? அது இல்லாதவனை நாடும்போதுதான். அவனை யாரோடும் எதனோடும் ஒப்பிட முடியாது. எனவே தனக்குவமை இல்லாதவன். இதுபோல் அதுபோல் என்று அவனைச் சொல்ல முடியாது. எனில், அவனுக்கு நிகரும் இல்லை.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

    உலகு இன்பக் கேணி

    என்றான் பாரதி. இறைக்க இறைக்க இன்பமே தரும் கேணியாக இந்த உலகம் எப்போது தோன்றும்? இருப்பது ஒன்றே. அதுவே பரம்பொருள். நாம் அதனுடைய குழந்தைகள் என்கின்ற செம்மாந்த நினைப்பு தோன்றும்போதுதான்!

    இறைவன் கவலையாகிய இருமை இல்லாதவன். ஆண்டவனுக்குக் கவலை கிடையாது. அவன் அவனைப் பற்றியோ நம்மைப் பற்றியோ கவலைப் படுகிறவன் அல்லவே! அவனுடைய ஈரடிகளும் ஒன்றே! இதை விளக்குமுகமாகவும் அவனை ஏகபாதனாய் வருணிப்பார்கள். `யதங்க்ரி கமல த்வந்தம், த்வந்த தாப நிவாரணம்`  என்கிறது குரு ஸ்துதி. அவனுடைய சீரடிகளாகிய ஈரடிகளைச் சேர்ந்தால்தான் நம் இருள்சேர் இருவினைக்குக் காரணமான இருமை தீரும்.

    `மாற்றல்` என்றால், துயரத்திற்கு மாற்று. அல்லது இருமையை ஒருமையாய் மாற்றல். கவலையின் திசையை மாற்றி விடுகிறான் கடவுள். காமத்தின் மீது குரோதம், என்று ஒன்றை ஒன்றின் மீது ஏவி விடுவதே இது! ஆவக்காய் ஊறுகாயில் உள்ள பொருட்கள் ஒன்றுக்கு ஒன்று மாற்றாக இருக்கும். ஒன்று கூடிச் சுவையை நல்கும். ஆக, அவனிடம் பற்றுக்கொண்டு, அவன் அருளைப் பற்றியே கவலைப் பட்டால், வேறு கவலைகள் யாவும் விடுபடும்.

    கவலை யாவும் கன்னியராகி

    அவர்கள் நடுவில் கண்ணன்..

    கவலைகளே கன்னியராகி அவர்கள் நடுவில் கண்ணன் காட்சி தருகிறான்.

    திசைதொலைந்து திணறும் போது

    தெருவின் முனையில் கண்ணன்

    இதுதான் மனக்கவலை மாற்றல்.

    `அரிது` என்பது `இயலாது` என்றும் பொருள்படும். பொதுவாக, பெரியோர்கள் ‘அரிது’ என்றால் அது ஆகிற காரியமே இல்லை என்று புரிந்துகொள்வது நல்லது. இங்கே ‘அரிது’ என்றவர் திருவள்ளுவர் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது!

     தொடருவோம்

     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (8)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7)

    kural-4

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

    நெறிநின்றார் நீடுவாழ்வார் (6)

     

    ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஆசைகளை அகற்றி, கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நீண்ட காலம் வாழ்வார்.

    புலன்களும் பொறிகளும் யாரிடமிருந்து வந்தன? இறைவனிடமிருந்துதானே? ஆனால் அவனோ பொறிவாயில் ஐந்தவித்தான்! அவனைத் தொழுதால் நமக்கும் அப்படித்தான். மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்ன? இறைவன் தன்னில் தானாய் நிலைத்தவன். மனிதன் பொறிவழி மனம் சென்று எங்கும் சிதறிக் கிடப்பவன். சிதறிக் கிடப்பவன் எவ்விதம் தன்னை நிறுவிக்கொள்வான்?

    அவித்தல் என்றால் பக்குவப் படுத்துதல். மொச்சைக் கொட்டை அவித்தல், சோறவித்தல் என்பது போல.

    பக்குவமே பரமன் இயல்பு. அவனைப் பணிந்து அவனியல்பையே நாமும் பெறுவோம்.

    பொறிகள் நம் கைப்பிடியில் இருந்தால், புவனம் நம் காலடியில் இருக்கும் என்பார்கள் பெரியோர்.

    வீடுபேறு என்னும் விடுதலையை நாடுவதே வழி. அதற்கு முதல்படியே புலனடக்கம். அதற்குமேல் பெரிதாய்ப் படிகள் இல்லை, காலத்தின் தாக்கம் மட்டும்தான். இறைவன் எப்படியோ அப்படியே வாழும் முறையே பொய்தீர் ஒழுக்க நெறி.

    அவ்விதம் வீட்டு நெறியைக் கடைபிடிப்பவர்கள் நெடுநாள் நன்கு வாழ்வார்கள். நெடுநாள் வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் அடிப்படை விருப்பம் என்றும் அதனால்தான் அன்றிலிருந்து இன்றுவரை, பெரியவர்களை நாம் வணங்கினால், அவர்கள் ‘பல்லாண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! ஆயிரம் பிறைகள் காண்க,’ என்றெல்லாம் வாழ்த்துகிறார்கள் என்றும் இறைவனை வணங்குவதன் மூலம் இது சாத்தியம் என்று வள்ளுவர் நமக்கு ஊக்கம் தருகிறார் என்றும் அதே சமயம், நீடு வாழ்வார் என்பது நீண்ட ஆயுளை மட்டும் குறிக்கவில்லை, அவர்கள் பெயர் மன்னுலகில் நீடித்து நிலைத்திருக்கும் என்றும் பொருள்படும் என்றும் ஏற்கெனவே பார்த்தோம். அவர்களுடைய நினைவே மற்றவர்களும் அதே வீட்டு நெறியைப் பின்பற்ற வழிகோலும். நீடு வாழ்வார் என்பது அவர்கள் விட்டுச் செல்லும் தவத்தைக் குறிக்கும்.

    வாழ்க்கை என்றால் என்ன? எது இறைவனின் நெறியோ அதில் நின்று நீடுவாழ ஒரு வாய்ப்பு. இறைநெறி என்பதைத் தெளிவாகக் கற்று அதில் ஆழ்ந்து கிடப்பதற்கு ஒரு வாய்ப்பு. மனிதன், முழுமையான மனிதத் தன்மையை அடைவதற்கு ஒரு வாய்ப்பு. எது கையில் வசப்படாது என்று கருதப்படுமோ, அந்த இறைமையே தன்னுள் கனிந்து காண்பதற்கு ஒரு வாய்ப்பு. இதை ஒரே வாய்ப்பு என்று கருதுபவர்களே உயர்கிறார்கள். இதற்குத்தான் நீடு வாழ்தல் என்று பெயர். அப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாகிறது. அவர்களுடைய வார்த்தையே பாதையாகிறது.

    சரி இறைவனின் ஒழுக்க நெறி என்பது என்னவாக இருக்க முடியும்? முந்தைய குறளிலேயே சொல்லிவிட்டாரே, வேண்டுதல் வேண்டாமை இலான்! இன்னொன்று, பொய்யின்றி வாழ்தல். 12 வருட காலம் உண்மையே பேசும் விரதம் பூண்டால், அதன்பிறகு அவன் சொல்வது யாவுமே உண்மையாகிப் போகிறது என்பார்கள். மனத்துக்கண் மாசிலனாதன் அனைத்தறன் என்று தெளிவாய்ச் சொல்கிறார்.

    அஸ்வத்தாமன் விடுத்த பாணத்தால் உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசு கரிப்பிண்டமாக வெளியே விழுகிறது. `நித்ய பிரம்மச்சாரி தொட்டால் இந்தப் பிண்டம் உயிர் பிழைக்கும்,` என்கிறார் வியாசர். எல்லோரும் தயங்குகிறார்கள். கண்ணன் கால் கட்டை விரலால் தொடுகிறான். கரிப்பிண்டம் களையான குழந்தையாக எழுகிறது. அதுவே பரீட்சித்! கண்ணனே மனத்துக்கண் மாசிலன்!

    `யோக: சித்த வ்ருத்தி நிரோத:` என்கிறது பதஞ்சலியின் முதல் சூத்திரம். பொருளால் ஈர்க்கப்பட்டு, பொறிகள் வழியே மனம்சிதறிப் போகாமல், பொறிகளை மனதிலும், மனதைப் புத்தியிலும், புத்தியைச் சித்தத்திலும், சித்தத்தை ஆன்மாவிலும் பொருத்திக் கொள்வதே சித்த வ்ருத்தி நிரோதம். அதுதான் பொறிவாயில் ஐந்தவிப்பது. அதுவே பொய்தீர் ஒழுக்க நெறிநிற்பது.

    `நீத்தார் பெருமை` என்னும் மூன்றாவது அதிகாரத்திலேயே `ஒழுக்கத்து நீத்தார் பெருமை,` `உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான், `ஐந்தவித்தான் ஆற்றல்,` என்றெல்லாம் பேசி,

    சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு

    என்றும் சொல்கிறார்.

    `ஆற்றலுடையோய்! யாருடைய பொறிகள் புலன்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுள்ளது,` என்பது கண்ணன் வாக்கு. (கீதை:2:68)

    கொம்பூதும் ஓசையால் சிக்கிக் கொள்கிறது மான். பூவின் வாசம் வண்டை இழுக்கிறது. இலை தழைகளைப் பின்பற்றி இரையாகிறது ஆடு. நெருப்பைக் கண்டு ஈர்க்கப்பட்டு அதில் வீழ்ந்து மாய்கிறது விட்டில். இப்படி ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு பொறி எதிரியாக இருக்கிறது. மனிதனுக்கோ எல்லாப் பொறிகளும் எதிரிகள்தாம்! அவன் எல்லாப் பொறிகளின் வழியாகவும் விழுந்து மாய்கிறான்.

    ஆதியிலேயே ஐந்தும் அவித்தவனின் பக்குவம் என்னும் இயல்பாகிய நெறியில் நின்றால்தான் நீடு வாழ முடியும்.

    கானக் குழல் ஒன்று கன்னக்கோலாய் ஆச்சு

    கன்னம் வைத்த இடம் காதுகளாச்சு

    ஆன காவல் ஐந்தும் ஆடரங்கமாச்சு

    அந்தந்தோ என்மனம்தான் கொள்ளை கொள்ளையாகப் போச்சு!

     

    என்று ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடுவதையும்,

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்த சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

     

    என்று திருமூலர் பாடும் போதும்,

    எந்தப் பொறிகள் நமக்கு இடர்விளைவிக்குமோ அவற்றையே அவனாடும் மேடையாக்கி அவற்றை அவிக்கலாம், பக்குவப்படுத்தலாம் என்று புரிகிறது.

    பொய்தீர் என்றால், அவன் ஏற்கெனவே பொய்கள் தீர்ந்தவன், பொய்மை இல்லாதவன் என்றும், பணியும் நம்முடைய பொய்மையைத் தீர்க்கின்றவன் என்றும் பொருள்.

     தொடருவோம்

     


     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (5)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி – 4

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார் (01:3)

    kural-2-1 

    அன்பரின் நெஞ்ச மலரில் பொருந்தியிருக்கும் கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர், உலகில் நிலையாக வாழ்வார்.

     

    இங்கே மலர் நமது இதயக் கமலமே! `ஹ்ருதய குஹர மத்யே` என்று விளக்குவார் ரமணர். யோகத்தில், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அனாஹதமே இதயக் கமலம் எனப்படுகிறது. அதற்கு மேலும் ஆதாரங்கள் உண்டெனினும், மனித ஆன்மா விடுதலை பெறுவது அனாஹதக் கமலத்தில் இறங்குவதால் மட்டுமே சாத்தியமாகிறது என்பது ராஜயோகம். அங்குதான், மிகச் சிறிய, ஆனால் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசமுடைய புள்ளியாய் பரமாத்மா துலங்குகிறது. `தஸ்மாஸ் சிகாயை மத்யே பரமாத்மா விவஸ்திதஹ,` என்கிறது கடோபநிடதம்.

    ஆக, இதயக் கமலமே ஆதி பகவனாகிய வாலறிவனின் இருப்பிடம். அதில் நுழைந்தவன் அவனடி சேர்ந்தவனாகிறான்!

    குருவின் அருளால், இடைவிடாத அப்பியாசத்தால் இதயக் கமலத்தில் நுழைந்தால் அங்கே இறைவன் எழுந்தருளுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் ஏகினான் என்ற கடந்த காலத்தைக் குறிக்கும் சொல், ஏற்கெனவே நடந்து முடிந்த செயலை, அவன் ஏற்கெனவே எப்போதுமே அங்கிருக்கிறான் என்பதைச் சுட்டுகிறது. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்கிறார் மாணிக்க வாசகர். அது எப்படிச் சாத்தியமானதாம்? சிவனவன் என்றன் சிந்தையுள் நின்ற அதனால் என்று எத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறார்! என் சிந்தையில் ஏற்கெனவே சிவன் வந்து நின்றுகொண்டிருக்கிறான். நான் உணர்ந்தேனில்லை. ஆனால், என்னில் அவனுடைய இருப்பே அருளாய் விரிந்தது. அந்த அருள் என்ன? அவன் தாளை வணங்கச் சொன்னது. வணங்கினேன். அவன், என் சிந்தையில் ஏற்கெனவே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது! நான் என் முயற்சியில் அவனுடைய திருவடிகளை வணங்கி, அதன்பின் அவனுடைய அருளைப் பெற்று, அதற்குப் பிறகு என்னுள் அவனைக் காணவில்லை. அவன் அருள், ஒரு நினைப்பாக வந்து அவன் தாள்களைப் பணியச் சொன்னது. பணிந்தேன். அவன் சிந்தையில் ஏற்கெனவே இருந்தான் என்று புரிந்தது! இதுதான் மலர்மிசை ஏகினான் என்பது.

    `அழைத்தால் வருபவனே ஆண்டவன்,` என்பது தெலுங்குப் பழமொழி. `யார் உன்னை எவ்விதம் கருதுகிறார்களோ, அவர்களுக்கு நீ அம்மட்டே!` என்பது அன்னமாசார்யாவின் கீர்த்தனை. ஆக மலர்மிசை ஏகினான், அழைத்தால் வருபவன் இல்லை. அழைக்கும் பொழுது அவன் அங்கேயேதான் இருக்கிறான் என்று உணரப்படுபவன்! எங்கே? இதயக் கமலத்தில். அவன் இல்லாத இடம் உண்டா? எனில், அழைத்து, அதன்பின் வருபவனா அவன்?

    நீண்ட கைகள் கவளம் நாடி

    நடுங்குகின்றேன் அமிழ்த மழையில்

    ஞானமா? வெறும் நாணமா? வினை

    வீழ்கையில் உயிர் கூசுமா?

     

    என்று என்னைப் பாடவைத்தது. பரிபூரண ஆன்ம விடுதலை என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில் பல படிகள் இருக்கின்றன. ஒவ்வொரு படியிலும் நாம் அதுவரை கொண்டிருந்த கொள்கைகள், பிடிவாதமாக நம்பியிருந்த சித்தாந்தங்கள் தவிடுபொடியாகி நாணமே மிஞ்சுகிறது. அதில் தலையாய நாணம் உள்ளே ஏற்கனவே எப்போதிலிருந்தோ இருப்பவனை ஊரெங்கும் தேடி உரக்க உரக்க அழைத்தோமே என்பதுதான்!

    என்

    இதயக் கமலம் உந்தன் இருகண் கதிரால் திணறும்

    இசைநாடும் முடிவே நீ வருக! என்

    இறைவா தலைவா வருக!

     

    என்று என் குருநாதரை வரவேற்றுப் பாடினேன். `குரு பார்த்ததால் இதயக் கமலம் திறந்ததா, இல்லை, இதயக் கமலம் திறந்ததால் குரு பார்த்தாரா?` என்று அவரே கேள்வி எழுப்பி, அவரே விடையும் தந்தார்,`இரண்டும் ஒரே கணத்தில் நிகழ்வன!` என்று. அழைத்தால்தான் அவன் ஏற்கெனவே உள்ளே இருப்பது புரிகிறது. அழைக்கச் செய்ததும், அழைத்தபின் உள்ளே ஏற்கனவே இருந்துகொண்டிருக்கிறான் என்பதை உணரச் செய்ததும் அவனுடைய அருளே.

    எனவே, மலர்மிசை ஏகினான் என்று அற்புதமாகச் சொன்னார். எளிமையாகச் சொன்னால், வாசலில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அம்மா உள்ளிருந்து அழைக்கிறாள். குழந்தை, `இதோ வந்துட்டேம்மா!` என்றுதானே சொல்கிறது! ‘இதோ வருகிறேன்’ என்றோ ‘வரப்போகிறேன்’ என்றோ இலக்கண சுத்தமாகச் சொல்வதில்லை அல்லவா? அன்பால் அழைத்த அடியார் மனத்தில் அவர்கள் நினைத்த கணத்தில் விரைந்து தோன்றுகிறான் என்பதே ஏகினான் என்ற சொல்லுக்கு விளக்கமாகும்.

    தரிசனம் என்பது முதலில் தற்செயலாகத் தட்டுப்படும் அதிசயம். யோகி, யோகத்தில் நிலைபெறும்போது, யோகநிலை என்பது காலவரம்பின்றி, தான் எப்போதுமே அப்படி இருந்துவந்ததுபோல் தோன்றுகிறது.

    அப்படிப்பட்ட யோகியே `வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான்! இங்கிருக்கும்போது அங்கிருப்பவனாகக் கருதப்படுகிறான். அங்கே இறுதியாய்ச் சென்றபின்னும் இங்கேயே இருப்பதுபோலும் கருதப்படுகிறான்!

    `எல்லோருடைய உள்ளத்திலும் நான் நன்கு வீற்றிருக்கிறேன்.` (கீதை : 15:15) என்கிறான் கண்ணன்.

    மாணடி என்றால் மாண்புள்ள அடி. அது மட்டுமல்ல மாண்பு தரும் அடி! கல்வி, செல்வம், கலைகள், அழகு, திறமை, பதவி இவையெல்லாம் மாண்புகளைத் தரா. மலர்மிசை ஏகியுள்ளவனின் திருவடிகளைப் பணிவதன் மூலமே நிலையான மாண்பு பெறப்படுகிறது. அவன் திருவடிகளைப் பணிந்திருத்தலே மாண்பு.

    நிலமிசை நீடு வாழ்வார் என்பதைப் பரிமேலழகர் மிசை நிலம் என்று கொண்டு, வீடு பேற்றைக் குறிப்பதாக விவரிப்பார். பொதுவாக, மனிதன் நீண்டநாள் வாழவே விரும்புவான். இதனால்தான் நாம் பெரியவர்களை வீழ்ந்து வணங்கும்போது அவர்களும் `நூறாண்டு வாழ்க! பல்லாண்டு வாழ்க! நீடு வாழ்க! நெடிது வாழ்க!` என்றெல்லாம் நம்மை வாழ்த்துகிறார்கள். `நீண்ட காலம் வாழ்வார் தரைமீது,` `கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே,` என்று பாடுகிறான் பாரதி. எனவே, இறைவனின் திருவடிகளைப் பணிவதன் மூலம், இந்த உலகிலேயே நெடுங்காலம் எந்தக் குறைவுமின்றி வாழலாம் என்றும் கொள்ளலாம்.

    நாம் அறநெறியினின்று பிறழாமல் வாழ்வோமானால், இந்த உலகைவிட்டு நாம் நீங்கிய பின்னும், நாம் நீண்ட காலம் நினைத்துப் போற்றப்படுவோம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்துவிட்ட எத்தனையோ மாமனிதர்களை, முனிவர்களை நாம் இன்னும் நினைத்துப் போற்றுகிறோமே, அதுதான் நீடு வாழ்தல். வள்ளுவர் போல்!

    நிலம் என்னும் சொல்லை வேறிடங்களில் வள்ளுவர் எப்படிப் பயன்படுத்தி உள்ளார் என்பதைப் பார்க்கும்போதும் அவர் உட்கிடக்கையை நாம் விளங்கிக் கொள்ளலாம்:

    யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

    தான்நோக்கி மெல்ல நகும் (1094)

    இதைத்தான் கண்ணதாசன் அழகாக,

    உன்னை நான் பார்க்கும்போது

    மண்ணை நீ பார்க்கின்றாயே

    விண்ணை நான் பார்க்கும்போது

    என்னை நீ பார்க்கின்றாயே!

     

    என்று பாடுவார்.

    நிலமென்னும் நல்லாள் நகும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல, நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும், நிலத்தறைந்தான் என்று பலவிடங்களிலும் நிலம் என்ற சொல்மூலம் இந்த மண்ணை, மண்ணுலகத்தைத்தான் குறிக்கின்றார்.

     தொடருவோம்


     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (4)

    இசைக்கவி ரமணன்

    kural-2

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 3

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின் (2)

    தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்க்குக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன?

    ஆய = ஆகிய, ஆன, இறந்த காலம், பெயரெச்சம்

    வாலறிவன் = எங்குமுளான் யாவும்வலான் யாவுமறிவான் என்று தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே என்பான் பாரதி. இங்கே வாலியோன் அறிவன் (Omnisicient)

    ஆசிரியர் சொல்வார். `கொள்கை வேறு, கோட்பாடு வேறு. நாம் கொள்வது கொள்கை. நம்மைக் கொள்வது கோட்பாடு.` பாரத நாட்டில், இறை அல்லது இறைநம்பிக்கை என்பது கொள்கை அல்ல, கோட்பாடு. அவனே தலைவன் என்பது அடிப்படை அறிவு, நம்பிக்கை, மற்றும் பிரகடனம்.

    இப்படி இருக்க, கற்று முடித்தேன் என்று நினைத்துக்கொள்ளலாமா, எல்லாவற்றுக்கும் காரணமான, வேரான, முதலான, மூலமான அவன்தாள் பணியாமல்? `பிலக்கணம் பாடும் நேரத்தில் இலக்கணம் துணைவருமா?` என்று கேட்கிறாரே சங்கரர்?

    தாள் தொழுதல் என்பதைச் சிலர் வள்ளுவர் உருவ வழிபாட்டைச் சுட்டுவதாகவும், சிலர் அது ஒரு குறியீடு என்றும் கொள்வர். `தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே` என்ற அப்பர் வாக்கும் இங்கு நினைந்தோரத் தக்கது.

    கற்றதனால் என்ன பயன் என்று கேட்கிறவர்தான் இன்னோரிடத்தில் கற்க என்கிறார். எனில், கல்வி என்பது எதற்காக? நம் கசடுகள் நீங்குவதற்காக. இதைத்தான் சித்த சுத்தி என்பார்கள் பெரியோர். சித்த சுத்தி எதற்காக? இறைவனை அடைவது, உண்மையை உணர்வது, தன்னை அறிவது என்பதெல்லாம் சித்த சுத்தி இல்லாமல் சாத்தியமே இல்லை. எல்லாவற்றுக்கும் மூலம் `ஆதிபகவன்` என்ற உணர்வுதான் மனிதனுக்கு மிகப்பெரும் தன்மையாகிய பணிவு என்பதைத் தரும். பணிவற்ற மனிதன், இரக்கம் நீங்கி, அரக்கனாக மாறும் அபாயம் இருக்கிறது. பணிவு என்பது என்ன? `யாரையும் சமமாகக் கருதுதல்; ஐயம் வந்தால், எவரையும் நம்மைவிட உயர்வாகக் கருதுதல்,` என்பார் என் குருநாதர்! இதனால்தான், ஞானத்திற்குப் பிறகு யோகம் பயில்வதே பாதுகாப்பானது என்பார்கள். ஞானம்தான் குருநாதர் சொன்ன பணிவு என்னும் மனப்பான்மையை நல்கும். பணிவின்மை, உயர்த்துவதுபோல் உயர்த்தி, மனிதனை வீழ்த்திவிடும். பணிவற்ற வித்தை படிகாட்டி, மாலை அணிவித்துக் கீழுருட்டுமாம்.’ பணிவுள்ள மனிதன், மனிதருள் தெய்வமாக மதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அடக்கம் என்பது, மனிதப் பண்புகளின் ஆதாரம். பணிவு என்பது, மனிதப் பண்புகளின் சிகரம். ஏன்? அதுதான் வாழ்வின் இலக்கான இறைவனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும். யார் உயிர்களின் தலைவனான ஆதி பகவனோ, அவனைப் பணியாமல் கல்வி ஒருவனைப் பண்புள்ளவனாக ஆக்காது.

    எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொல்வார். ஒரு பெரிய செல்வந்தர் இருக்கிறார். கொடைவள்ளலாகவும் இருக்கிறார். அவரிடம் ஏராளமான பசுமாடுகள் இருக்கின்றன. ஒருவர் அவரிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது. ஒரு பசுவைத் தருகிறீர்களா?` என்று இறைஞ்சுகிறார். வள்ளல், `ஒன்றென்ன, இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி அத்தோடு முடிகிறது அது என்பதை அப்போது அவர் உணரவில்லை. என்ன? பசுவைக் கட்டிக் காப்பாற்றுவதென்பது எளிதான காரியமா என்ன? இருபத்து நான்கு மணிநேர வேலையாகிவிடுகிறது. நிம்மதியாய் உறங்கவும் முடியாது போகிறது.

    இன்னொருவர், அதே வள்ளலிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது,` என்கிறார். வள்ளல், `இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவர், `வேண்டாம் ஐயா, தினமும் எனக்கு இரண்டு லிட்டர் பாலை நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தால் மகிழ்வேன்,` என்றார். வள்ளலும் புன்னகையுடன் சம்மக்கிறார்!

    திருஞானசம்பந்தர் தந்தையைக் காணாமல் குளக்கரையில் அழுதார். தந்தையும் தாயுமான அம்மையப்பனைக் கண்டார். அம்மையிடமிருந்து பாலருந்தினார். ஞானமாகிய பாலை அருந்தி ஞானமயமான பாடல்களைப் பாடினார். என்ன குறிப்பு? இறைவனைப் பணிந்து பெறக்கூடிய கல்வி, கலைகள், திறமைகள் எல்லாமும் ஞானமயமாக இருக்கும். மற்றவர்க்கு நலம்சேர்க்கும் விதமாக அமையும். `தந்தது உன்றனை; கொண்டது என்றனை,` என்னும் மாணிக்க வாசகரின் பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது. நாம் பணியாமல், நம்மைக் கொடுக்காமல் அவனைப் பெறமுடியாது. நம்மைத் தந்தால் தன்னைத் தருவதே அவனியல்பு.

    பணிவு என்ற சொல்லின் முழுவடிவம் அனுமன். ராமபிரானை அனுமன் சந்திக்கும்போது அனுமன் என்னவாக இருந்தான்? யோகி, ஞானி, மாவீரன், நவ வியாக்கிரண வேத்தா அட இழுப்பானேன், ருத்திரனல்லவா அனுமன்? எனில், ராமனை அனுமன் சந்திக்கிறபோது, ராமனிடமிருந்து எதையும் பெறவேண்டிய தேவை அனுமனுக்கு இல்லை. இருப்பினும் அவனே தன் தலைவன், தான் என்றும் அவனுடைய தொண்டன் என்றல்லவா கருதுகிறான்! இதைத்தான் என் குருநாதர், ‘Goalless faith,’ என்பார். இலக்கற்ற, எதிர்பார்ப்பில்லாத நம்பிக்கை.

    பணிவாலன்றிப் பரமனை அடைய முடியாது. இறைவனைப் பணியாமல் பணிவும் வராது! இறைவனைப் பணிந்தவன் எல்லா உயிரிடத்தும் இறைவனைக் காணும் நிலையை எய்துகிறான். எல்லார்க்கும் இனியனாகிறான்.

    மனித வடிவம் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. மனிதனுக்கென்று சில பண்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பேணி வளர்ப்பதன் மூலமே ஒருவன் மனிதனாகிறான். அந்தப் பண்புகளை அடைய ஒருவனுக்குக் கல்வி, செல்வம், அழகு, திறமை போன்றவை இருக்கவேண்டும் என்பதில்லை. இவையேதும் இல்லாமலே ஒருவன் பண்பாளனாகத் திகழ முடியும். சொல்லப்போனால், இவற்றையெல்லாம் மீறித்தான் ஒருவன் பண்பாளனாக இருக்க வேண்டியுள்ளது! அந்தப் பண்புகளில் தலையாயது பணிவு.

    எவன் இறைவனைப் பணிகிறானோ அவனுக்குப் பணிவு இயல்பாக வருகிறது. அந்தப் பணிவே அவனை முழு மனிதனாக்குகிறது. அவனுடைய கல்வி, செல்வம், திறமை, அழகு, பதவி அனைத்திற்கும் கெளரவம் தருகிறது. `எல்லோரையும் நம்மைப்போலே கருதுதல், அல்லது நமக்கு உயர்வாய் நினைத்தல்,` என்னும் பணிவு, இறைவனைத் தொழுதல் மூலமே வருகிறது.

    நலமே விளைவிக்கும் தாள் என்பதால் நற்றாள். தலையும் அடியும் சேர்வது சமயக் கோட்பாடு. தலை என்பது தலைமை. அடியிலிருந்துதான் அடிமை. ஆனால், இங்கே சுவாரசியம் என்னவென்றால், இறைவனுடைய நற்றாளாகிய அடிதான் தலைமை! அதை நம் தலை அடிமையாகிப் பணிவதில்தான் நமக்கு விடுதலை!

    இறைவனைத் தொழுதுதான் இறைவனை அடைய முடியும். பகவனைத் தொழுதே ஆதியில் கலக்க முடியும். அதுவே வாழ்வின் இலக்கு. அதற்காக வாய்த்ததுவே மனிதப் பிறவி.

    பரம்பொருளே பேரறிவு. அதற்கே உயிர்களையும் உலகையும் அறியவல்ல வாலறிவு உண்டு என்கிறது உபநிடதம்.

    ஆக, கற்றது கழலடி தொழவே! அதற்கே அப்பர் சொல்லும் இந்த `மனித்தப் பிறவி.`

    இறைவன்தான் தலைவன் என்று சொன்ன வள்ளுவர், அவன் எங்குமுளான், யாவும் வல்லான் என்று விளக்கவில்லை. ஆனால், அவன் யாவுமறிந்தவன், அதாவது வாலிய அறிவுடையவன் என்பதில் மட்டுமே நிற்கிறார். இறைவன் தூய அறிவுடையோன். இதைத்தான் சத்-சித்-ஆனந்தம் என்போம். சத் என்பது மாற்றம் வளர்ச்சி இவற்றுக்கு உட்படாத சத்தியம் அல்லது இருப்பு. சித் என்பது அந்த இருப்பின் விகசிப்பு, அல்லது, அறிவின் விரிவு. சித் என்பது aura அதாவது ஒளிவட்டம் அல்ல! அது கல்லுக்கும் மரத்திற்கும்கூட உண்டு. மரத்தின் ஒளிவட்டம் aura. முனிவனின் ஒளிவட்டம் சித் என்று புரிந்துகொள்ளலாம். ஆனந்தம் என்பது ecstasy மட்டுமல்ல. அது அமைதியின் வெளிப்பாடு. அமைதி, நிறைவால் வருவது.

    ஆன்மாவுக்கு, குணம் கிடையாது. ஆனால், அதற்கு ஒரு தன்மை உண்டென்று கருதினால் அது அமைதிதான். சீரான, தொடர்ந்த அமைதி. மனத்துக்கு அமைதி கிடையாது, தெரியாது. சஞ்சலம், அதாவது அசைவு என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனம், அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. இப்போது சித் நமக்கு நன்றாக விளங்குகிறதல்லவா. இதுதான் வாலிய அறிவு, அல்லது pure intelligence.

    தொடருவோம்

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (3)

    இசைக்கவி ரமணன்

    kural

     

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 2

     

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு. (01:01)

     

    எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டவை.

     

    சொற்பொருள் – இலக்கணம்

     

    அ = அந்த, (அப்பசியை, அவ்வூன்) உடைய

    அகரம் = சாரியை பெற்ற எழுத்து

    சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இஃது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.

    ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ (சொல்லோ), வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும் போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல் உண்டு. வாராதிருத்தலும் உண்டு.

     

    முதல = முதலை உடையன = அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று

     

    எழுத்து = எழுதப் படுவது. எழும் எண்ணம் வரிவடிவம் பெறுவது எழுத்து.

     

    ஆதி = முதல் (அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் 55:செங்கோன்மை:543) வடமொழி, காலப் பெயர்

     

    பகவன் = கடவுள், ஆரியம் பகவான். ஆண்பால், பொருட்பெயர். பகவு என்றால் பிளவு, எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு 89: உட்பகை:889)

     

    ஆதி பகவன் = Primal Deity

     

    முதற்றே = முதலையுடையது, அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று.

     

    உலகு = உலகம், இடப்பெயர்

     

    படைப்பு என்பது மூன்று குணங்களாலானது. அவற்றின் விகிதாசார வேறுபாடுகளே மலையும், மனிதனும், விண்மீனும், புழுவும், புயலும், ஐம்பூதங்களும்! அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அறியப்படும். அவற்றுள், சத்வத்தால் அறமும், ரஜஸால் பொருளும், தமஸால் காமமும் விளைகின்றன என்பது உரை. இந்த மூன்று குணங்களும் ஒரு சரிசமமான முக்கோணமாக அமையும்போது மனிதன் என்பவன் தெய்வமாகிறான். அவற்றை எப்படிச் சமநிலையில் அமைத்துக்கொள்வது என்பதைச் சொல்லவே வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துப் பாடினார்.

    அகரம் என்பது எல்லா எழுத்துக்களுக்கும் மூலம். `அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்` என்று கீதையில் கண்ணன் மொழிகிறான். (10:33) `அ` என்னும் எழுத்து கடவுளைக் குறிப்பதாக வடமொழி அகராதி நமக்குச் சொல்லும். `அ` என்பது எழுத்து மட்டுமல்ல, படைப்பின் ஆதாரமான நாதத்தின் ஆரம்பம். `அ` ஓர் எழுத்தாகத் தனியாகவும் நிற்கும். மற்றைய எழுத்துக்களுக்கு ஏற்பாகவும், அவற்றோடு இணைந்தும் நிற்கும். இறைவன், அவனளவில் தன்னந் தனியன். ஆயினும், தான் படைத்த படைப்பில் உட்புகுந்து ஊடுருவியும் நிற்பவன்.

    ஆக, எழுத்துக்களுக்கு அகரம் மூலம். உலகுக்கு ஆதிபகவன் மூலம். பகவனாய் அறியப்படும், வேறுவிதம் அறியமுடியாத ஆதி.

    மேலும், நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் முதல்முதல் வாயைத் திறந்ததும் வெளிப்பட்ட ஒலி `அ` தானே! நமக்கு, இதைச் செய்வதற்கே கூட, உடம்பு, வயிறு, தொண்டை எல்லாம் தேவைப்பட்டன. ஆனால் இறைவனுக்கு? அவன் `அ` என்று சொல்லுமுன் தோன்றி முடிந்துவிட்டதுதானே படைப்பு! அவ்வளவு அநாயாசம்!

    ஆதி என்றால் பழமை என்று மட்டுமா பொருள்? அனைத்துக்கும் மூலம் அவன் என்றுமல்லவா புரிந்துகொள்ள முடிகிறது!

    ஓரொலி உள்ளொளி ஓம்.

    இதைப் பிரபஞ்ச ரீங்காரம், பிரணவமாகிய ஓங்காரம் என்று நாம் அறிவோம். அதிலிருந்துதான் சிருஷ்டி என்னும் படைப்பு தோன்றியது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஒலியின் சிறப்பு என்ன? இது விகாரமற்ற நாதம். அதாவது, இதில் வளர்ச்சி, தேய்வு போன்ற மாற்றங்கள் எதுவும் இல்லை. அதன் ஒலி கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. அது யாரும் ஏற்பாடு செய்த ஒலியில்லை. அது தான்தோன்றியாய், தன்னிச்சையாய் இடையறாது ஒரே ரீதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒலி `ஓ` என்று தொடங்கி `ம்` என்று முடிவதில்லை. `ஓம் ஓம்` என்றும் ஒலிப்பதில்லை. ஒரே ஓம். ஓம் ஒன்றே. இது அது என்று இதனை விளக்க முடியாததால், இது, எதுவுமேயில்லை எனப்படுகிறது. இது, எதுவுமே இல்லை என்பதால்தான் இதுவே அனைத்தும் என்றாகிறது. ‘Om, like Guru, is the biggest nothing; that is why, it is everything,’ என்பார் என் குருநாதர்.

    இந்த ஒலி, ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒலிக்கிறது. இதயம் என்றால் பெளதிகமான இதயம் அல்ல. நட்ட நடு நெஞ்சு. யோக மொழியில் அனாஹதம் என்னும் நிலையம். `ஆஹதம்` என்றால் இரண்டு பொருட்கள் மோதுவதால், உரசுவதால், அல்லது தொடர்புகொள்வதால் விளையும் ஒலி. `அனாஹதம்` என்றால் எதன் விளைவாகவும் இல்லாமல் தன்னிச்சையாக விளங்கிக்கொண்டிருக்கும் ஒலி. குருவருளாலும், இடைவிடாத பயிற்சியாலும் ஒருவன் இந்த ஒலியைத் தன்னகத்திலிருந்து கேட்கிறான். அப்போது பிரபஞ்சம் மட்டுமல்ல, படைப்பு முழுதும் பரவியும், அனைத்திலும் ஊடுருவியும், எதனாலும் விகாரப்படாமலும் இருக்கும் ஒலியை உணர்ந்துகொள்கிறான். உள், வெளி போன்ற பேதங்கள் தொலைந்து, விரிவில் ஒடுங்குகிறான்.

    ’அ உ ம’ சேர்ந்ததுதான் ஓம் என்று கேள்விப்படுகிறோம். இப்போது `அகர முதல` அதாவது எல்லாவற்றுக்கும் தலைமை `அ` என்பது விளங்குகிறதல்லவா? `அ` என்பது எழுத்துக்களுக்கு மட்டும் தலைமை அல்ல. படைப்புக்கே அதுதான் தலைமை. `அ` வின் விளைவு எழுத்துக்கள் மட்டுமல்ல, நாம் காணும், நாம் இன்னும் காணவிருக்கின்ற பிரபஞ்சமுமே என்று புரிகிறதல்லவா?

    இதைப் பேராசிரியர் தி. வேணுகோபாலன் அவர்கள் நயம்பட விளக்குவார்:

    • காணப்படுவது உலகம். அது த்ருஷ்டம். காணப்படாதது கடவுள். அது அத்ருஷ்டம். காணப்படுவதை வைத்துக் காணப்படாததைச் சொல்வது அனுமானப் பிரமாணம். மரமும் வேரும் போல! மரம் என்ற ஒன்று காணப்படுமானால், அது வேர் என்ற ஒன்று இருப்பதால்தான்.
    • `முதற்றே உலகு` என்னும்போது அந்த முதலுக்கு உரியது உலகு; கடவுளுடைய உடைமை உலகம். உலகுக்கு உடமை கடவுளன்று என்று புரிந்துகொள்ள வேண்டும்.
    • நாதம் என்பது உருவமில்லாதது. அதன் வரிவடிவம் `அ.` அதேபோல் கடவுள் உருவமற்றவன், அவனுக்குக் கணக்கற்ற வடிவங்கள். அகரம் பலவித எழுத்து உருவங்களாய் விரிகிறது. கடவுளுக்கும் பல பெயர்கள். வடிவம், வண்ணம், பயன்படுபொருள் எல்லாம் எழுத்துக்கும் இறைவனுக்கும் ஒற்றுமையாய் இருக்கிறது என்பதை விளக்கவே இந்த உவமை.
    • அகரமே ஆதி; மற்றவை யாவையும் அதன் விளைவே.
    • `எழுத்தெல்லாம்` என்று நீட்டியது ஏன்? மீண்டும் எழுத்தையும் உலகத்தையும் இணைத்துப் பார்ப்போம். அங்கே உயிரெழுத்து, இங்கே உயிர்கள். அங்கே மெய்யெழுத்து, இங்கே சடப்பொருட்கள். அங்கே வல்லினம், மெல்லினம், இடையினம். இங்கே தூலம், திரவம், வாயு. அங்கே உயர்திணை, அஃறிணை. இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர். அங்கே வினைமுற்று, வினையெச்சம். இங்கே செயலை முடித்தவன், முடிக்காமல் விட்டுவைத்திருப்பவன். உலகம் எழுத்தைப் போலவே அல்லவா இருக்கிறது! எழுத்துகளுக்கு அகரம். உயிர்களுக்கு இறைவன்.
    • `முதல` என்றவர், மீண்டும் `முதற்றே,` என்கிறார். முதல் என்னும் சொல்லுக்கு இறைவன் என்று பொருள் சொல்கிறது நிகண்டு!
    • முதல் என்றால் வேர் என்று பொருள். ஊடி அவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்தற்று (1304) (நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்) என்னும் குறளில் முதல் என்பது வேரைத்தானே குறிக்கிறது? வேர், மரத்திலிருந்து வேறுபட்டதா? ஆம், இல்லை இரண்டுமே சரிதான்! அலை, கடலிலிருந்து வேறுபட்டதா? மரத்தை வெட்டினாலும் மறுபடி முளைவிடும். ஆனால் வேரின்றி அமையாது மரம்.
    • முதல் என்றால் காரணம் என்று பொருள். எப்படி? நோய்நாடி நோய்முதல் நாடி` என்கிறாரே! காரணம் கடவுள். காரியமாகிய விளைவு உலகம். காரணம் அகரம். விளைவு எழுத்தெல்லாம்.
    • முதல் என்றால் மூலதனம் என்று பொருள். விவசாயி, விதைநெல்லை வித்துமுதல் என்பான். வியாபாரத்திற்காகச் செலவிட வேண்டியதைக் கைமுதல் என்பான். அறுவடைக்குப் பின்வருவதைக் கண்டுமுதல் என்பான். இன்னும் கொள்முதலும் உண்டுதானே? இந்த முதல் எல்லாம் எதற்கு? ஊதியத்திற்கு. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை, என்கிறாரே! எனவே, அகரம் என்னும் முதல் இல்லையென்றால் பிற எழுத்துக்கள் என்னும் விளைவாகிய ஊதியம் இல்லை. ஆண்டவன் என்னும் முதல்தான் உலகம், வாழ்க்கை என்னும் ஊதியத்திற்குக் காரணம்.
    • முதல் என்றால் எண்ணிக்கையில் முதல் என்று பொருள். ஒன்று என்பது ஒன்று. இரண்டு என்பது இரண்டு ஒன்று. கோடி என்பது கோடி ஒன்று. ஆக ஒன்றுதானே யாவும்? எந்த எண்ணிலும் ஒன்றுதானே ஒன்றியிருக்கிறது? எல்லாம் ஒடுங்குவது அந்த ஒன்றில்தானே? தொகை என்பதில் மருளாமல் அதன் ஆதாரமாகிய துளியைக் காண்பவர்கள் வித்தகர்கள். வள்ளலார் `மயில், குயிலாச்சுதடி` என்றதும், திருமூலர் `மரத்தை மறைத்தது மாமத யானை` என்றதும் இதைத்தானே?

    எழுத்துக்களுக்கு அகரம் முதல். உயிர்களுக்கு ஆண்டவன் முதல். இடையில் அதுபோல் என்ற சொல்லில்லை. ஒன்றுக்கொன்று உவமையில்லை. இரண்டு தனிப்பட்ட கூற்றுகள், இங்கே சொல்லப்பட்டன என்பர் சிலர்.

     

     தொடருவோம்


     

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (2)

    இசைக்கவி ரமணன்

    kural

     

     திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 1

    1. கடவுள் வாழ்த்து

    கடவுள் வாழ்த்து – முன்னுரை

    கடவுள் என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை எத்தனை விளக்கங்கள்!

    ‘எல்லா விளக்கங்கள், விவரிப்புகளையும் கடந்து, உள்ளே இருப்பவன்,’ என்றொரு பொருள்.

    ‘கடந்தால் உள்’ என்பார்கள். எதைக் கடப்பது? உடம்பு, மனம், புத்தி, சித்தம், அகங்காரம், என்பவனவற்றைக் கடந்தால் உள்ளே திகழ்வதே கடவுள் என்பார்கள்.

    `கடவு` என்னும் சொல்லே சிந்திக்கத்தக்கது. கடவுச்சொல் என்றால் password என்று நமக்குத் தெரியும். உள்ளே இருப்பவனே கடவுள் என்ற உணர்வே, நம்பிக்கையே அந்த password.

    கடவு என்றால் திசை. வழி. பாதை. முதலில் தெரிவது திசை; புலப்படுவது வழி; விரிவது பாதை! முதலில் அலைச்சல்; பிறகு தேடல்; தொடர்வது பயணம்!

    கடவுதல் என்றால் செலுத்துதல், முடுக்குதல்.

    கடவுள் என்றால், வாக்குக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டவன். வானவன். முனிவன். குரு. நன்மை. என்று பலவிதமாகப் பொருள் சொல்வதுண்டு. சிவம் என்றால் சுபம், மங்களம் என்பதுபோல் கடவுள் என்றால் நன்மை என்கிறது தமிழகராதி.

    இறை என்ற சொல்லும் அப்படிப் பல சிறப்பான பொருட்கள் உடையதுதான் : உயரம், தலை, சிவன், பிரமன், அரசன், தலைமை, நடுவுநிலைமை, உயர்ந்தோன், தமையன், கணவன், சிறகு என்று பல. இன்னும், தங்கல், ஆசனம், விடை, விரலிறையளவு, அணு, கை, மூலை என்றும் பொருளுண்டு. இவை ஒவ்வொன்றையும் உள்ளத்தில் போட்டு அவனை அதில் பொருத்தி ஆனந்திக்கலாம்.

    இறைவனை மூத்தோன் என்கிறது அகராதி!

    பொதுவாக, கடவுள் என்றால், எங்கும் உள்ளான், யாவும் வல்லான், யாவும் அறிந்தவன் என்போம்.

    பரமாய் உணரப்படும்போது அது.

    பகுப்பில் வரும்போது அவன் அல்லது அவள்.

    பலவிதமாய் வகுக்கும்போது பற்பல வடிவங்கள் குணங்கள்.

    பரமே இறை. பகவன் இறைவன். ஆதி பகவன் என்னும்போது பரமாகிய பகவன். இறையாகிய இறைவன். அல்லது இறையும் இறைவனுமாய் ஒருசேர விளங்குதல். வடிவம், குணம், மாற்றம், அழிவு, குறை இவையேதும் அற்றதை வேறெவ்விதம் விவரிக்க?

    கடவுளை நம்பாதவர்களால்கூட, கடவுளைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பிரெஞ்சு அறிஞர் வால்டேர் சொல்லுவாராம் : `கடவுளை நம்புவதென்பது சாத்தியமே இல்லை. ஆனால், கடவுளை நம்பாதிருப்பது முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. கடவுள் இல்லையெனில், ஒரு கடவுளை ஏற்படுத்தி வைத்திருப்பதே நல்லதெனத் தோன்றுகிறது!` அதிகம் பேசப்படுகிற, அதிகம் மறுக்கப்படுகிற ஒன்று கடவுள்தான்.

    என் குருநாதர் சொல்வார், `ஒருவன், தான் கடவுளை மறுக்கிறேன் என்று சொல்லும்போதே கடவுளைத் தொட்டுவிடுகிறானே!`

    கடவுள் வாழ்த்து திருக்குறளின் முதல் அதிகாரம். இதையேகூட இடைச்செருகல் என்பாருமுண்டு. அந்த சர்ச்சை நமக்கு வேண்டாம்.. வேண்டுமானால், தலைச்செருகல் என்றுகூடச் சொல்லிக்கொள்ளட்டுமே!

    இதில், திருவள்ளுவர், கடவுளைப் பணிந்து எதையும் தனக்காகக் கோரவில்லை. உலகத்தாருக்கு, கடவுளைப் பணிதல் எத்துணை தேவையான ஒன்று என்பதை விளக்குகிறார். சுருங்கச் சொன்னால், மக்களுக்குக் கடவுளின் வாழ்த்தைப் பெற்றுத்தர முன்வருகிறார். அதை நாம் எப்படிப் பெறுவது என்பதையும் புரியவைக்கிறார். எங்கே தலை பணிகிறதோ, அங்கே இதயம் மலர்கிறது. 

     

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு. (01:01)

    எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டவை.

    சொற்பொருள் – இலக்கணம்

    அ = அந்த, (அப்பசியை, அவ்வூன்) உடைய

    அகரம் = சாரியை பெற்ற எழுத்து

    சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும். இஃது ஒரு வினைச்சொல்லில் இடைநிலைக்குப் பின்னரும் விகுதிக்கு முன்னரும் வரும். சாரியைக்கு என்று தனிப்பட்ட பொருள் எதுவும் இல்லை.

    ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியோ, பதமோ (சொல்லோ), வேறொரு உருபோ, புணருமிடத்து (சேரும் போது) ஒரு சாரியை அல்லது பல சாரியைகள் வருதல் உண்டு. வாராதிருத்தலும் உண்டு.

     

    முதல = முதலை உடையன = அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று

     

    எழுத்து = எழுதப் படுவது. எழும் எண்ணம் வரிவடிவம் பெறுவது எழுத்து.

     

    ஆதி = முதல் (அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் 55:செங்கோன்மை:543) வடமொழி, காலப் பெயர்

     

    பகவன் = கடவுள், ஆரியம் பகவான். ஆண்பால், பொருட்பெயர். பகவு என்றால் பிளவு, எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு 89: உட்பகை:889)

     

    ஆதி பகவன் = Primal Deity

     

    முதற்றே = முதலையுடையது, அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கை, குறிப்பு வினைமுற்று.

     

    உலகு = உலகம், இடப்பெயர்

     

    படைப்பு என்பது மூன்று குணங்களாலானது. அவற்றின் விகிதாசார வேறுபாடுகளே மலையும், மனிதனும், விண்மீனும், புழுவும், புயலும், ஐம்பூதங்களும்! அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அறியப்படும். அவற்றுள், சத்வத்தால் அறமும், ரஜஸால் பொருளும், தமஸால் காமமும் விளைகின்றன என்பது உரை. இந்த மூன்று குணங்களும் ஒரு சரிசமமான முக்கோணமாக அமையும்போது மனிதன் என்பவன் தெய்வமாகிறான். அவற்றை எப்படிச் சமநிலையில் அமைத்துக்கொள்வது என்பதைச் சொல்லவே வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று வகுத்துப் பாடினார்.

    அகரம் என்பது எல்லா எழுத்துக்களுக்கும் மூலம். `அக்ஷரங்களில் நான் அகரமாயிருக்கிறேன்` என்று கீதையில் கண்ணன் மொழிகிறான். (10:33) `அ` என்னும் எழுத்து கடவுளைக் குறிப்பதாக வடமொழி அகராதி நமக்குச் சொல்லும். `அ` என்பது எழுத்து மட்டுமல்ல, படைப்பின் ஆதாரமான நாதத்தின் ஆரம்பம். `அ` ஓர் எழுத்தாகத் தனியாகவும் நிற்கும். மற்றைய எழுத்துக்களுக்கு ஏற்பாகவும், அவற்றோடு இணைந்தும் நிற்கும். இறைவன், அவனளவில் தன்னந் தனியன். ஆயினும், தான் படைத்த படைப்பில் உட்புகுந்து ஊடுருவியும் நிற்பவன்.

    ஆக, எழுத்துக்களுக்கு அகரம் மூலம். உலகுக்கு ஆதிபகவன் மூலம். பகவனாய் அறியப்படும், வேறுவிதம் அறியமுடியாத ஆதி.

    மேலும், நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் முதல்முதல் வாயைத் திறந்ததும் வெளிப்பட்ட ஒலி `அ` தானே! நமக்கு, இதைச் செய்வதற்கே கூட, உடம்பு, வயிறு, தொண்டை எல்லாம் தேவைப்பட்டன. ஆனால் இறைவனுக்கு? அவன் `அ` என்று சொல்லுமுன் தோன்றி முடிந்துவிட்டதுதானே படைப்பு! அவ்வளவு அநாயாசம்!

    ஆதி என்றால் பழமை என்று மட்டுமா பொருள்? அனைத்துக்கும் மூலம் அவன் என்றுமல்லவா புரிந்துகொள்ள முடிகிறது!

    ஓரொலி உள்ளொளி ஓம்.

    இதைப் பிரபஞ்ச ரீங்காரம், பிரணவமாகிய ஓங்காரம் என்று நாம் அறிவோம். அதிலிருந்துதான் சிருஷ்டி என்னும் படைப்பு தோன்றியது என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஒலியின் சிறப்பு என்ன? இது விகாரமற்ற நாதம். அதாவது, இதில் வளர்ச்சி, தேய்வு போன்ற மாற்றங்கள் எதுவும் இல்லை. அதன் ஒலி கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. அது யாரும் ஏற்பாடு செய்த ஒலியில்லை. அது தான்தோன்றியாய், தன்னிச்சையாய் இடையறாது ஒரே ரீதியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒலி `ஓ` என்று தொடங்கி `ம்` என்று முடிவதில்லை. `ஓம் ஓம்` என்றும் ஒலிப்பதில்லை. ஒரே ஓம். ஓம் ஒன்றே. இது அது என்று இதனை விளக்க முடியாததால், இது, எதுவுமேயில்லை எனப்படுகிறது. இது, எதுவுமே இல்லை என்பதால்தான் இதுவே அனைத்தும் என்றாகிறது. ‘Om, like Guru, is the biggest nothing; that is why, it is everything,’ என்பார் என் குருநாதர்.

    இந்த ஒலி, ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒலிக்கிறது. இதயம் என்றால் பெளதிகமான இதயம் அல்ல. நட்ட நடு நெஞ்சு. யோக மொழியில் அனாஹதம் என்னும் நிலையம். `ஆஹதம்` என்றால் இரண்டு பொருட்கள் மோதுவதால், உரசுவதால், அல்லது தொடர்புகொள்வதால் விளையும் ஒலி. `அனாஹதம்` என்றால் எதன் விளைவாகவும் இல்லாமல் தன்னிச்சையாக விளங்கிக்கொண்டிருக்கும் ஒலி. குருவருளாலும், இடைவிடாத பயிற்சியாலும் ஒருவன் இந்த ஒலியைத் தன்னகத்திலிருந்து கேட்கிறான். அப்போது பிரபஞ்சம் மட்டுமல்ல, படைப்பு முழுதும் பரவியும், அனைத்திலும் ஊடுருவியும், எதனாலும் விகாரப்படாமலும் இருக்கும் ஒலியை உணர்ந்துகொள்கிறான். உள், வெளி போன்ற பேதங்கள் தொலைந்து, விரிவில் ஒடுங்குகிறான்.

    ’அ உ ம’ சேர்ந்ததுதான் ஓம் என்று கேள்விப்படுகிறோம். இப்போது `அகர முதல` அதாவது எல்லாவற்றுக்கும் தலைமை `அ` என்பது விளங்குகிறதல்லவா? `அ` என்பது எழுத்துக்களுக்கு மட்டும் தலைமை அல்ல. படைப்புக்கே அதுதான் தலைமை. `அ` வின் விளைவு எழுத்துக்கள் மட்டுமல்ல, நாம் காணும், நாம் இன்னும் காணவிருக்கின்ற பிரபஞ்சமுமே என்று புரிகிறதல்லவா?

    இதைப் பேராசிரியர் தி. வேணுகோபாலன் அவர்கள் நயம்பட விளக்குவார்:

    • காணப்படுவது உலகம். அது த்ருஷ்டம். காணப்படாதது கடவுள். அது அத்ருஷ்டம். காணப்படுவதை வைத்துக் காணப்படாததைச் சொல்வது அனுமானப் பிரமாணம். மரமும் வேரும் போல! மரம் என்ற ஒன்று காணப்படுமானால், அது வேர் என்ற ஒன்று இருப்பதால்தான்.
    • `முதற்றே உலகு` என்னும்போது அந்த முதலுக்கு உரியது உலகு; கடவுளுடைய உடைமை உலகம். உலகுக்கு உடமை கடவுளன்று என்று புரிந்துகொள்ள வேண்டும்
    • நாதம் என்பது உருவமில்லாதது. அதன் வரிவடிவம் `அ.` அதேபோல் கடவுள் உருவமற்றவன், அவனுக்குக் கணக்கற்ற வடிவங்கள். அகரம் பலவித எழுத்து உருவங்களாய் விரிகிறது. கடவுளுக்கும் பல பெயர்கள். வடிவம், வண்ணம், பயன்படுபொருள் எல்லாம் எழுத்துக்கும் இறைவனுக்கும் ஒற்றுமையாய் இருக்கிறது என்பதை விளக்கவே இந்த உவமை
    • அகரமே ஆதி; மற்றவை யாவையும் அதன் விளைவே
    • `எழுத்தெல்லாம்` என்று நீட்டியது ஏன்? மீண்டும் எழுத்தையும் உலகத்தையும் இணைத்துப் பார்ப்போம். அங்கே உயிரெழுத்து, இங்கே உயிர்கள். அங்கே மெய்யெழுத்து, இங்கே சடப்பொருட்கள். அங்கே வல்லினம், மெல்லினம், இடையினம். இங்கே தூலம், திரவம், வாயு. அங்கே உயர்திணை, அஃறிணை. இங்கே உயர்ந்தோர், தாழ்ந்தோர். அங்கே வினைமுற்று, வினையெச்சம். இங்கே செயலை முடித்தவன், முடிக்காமல் விட்டுவைத்திருப்பவன். உலகம் எழுத்தைப் போலவே அல்லவா இருக்கிறது! எழுத்துகளுக்கு அகரம். உயிர்களுக்கு இறைவன்.
    • `முதல` என்றவர், மீண்டும் `முதற்றே,` என்கிறார். முதல் என்னும் சொல்லுக்கு இறைவன் என்று பொருள் சொல்கிறது நிகண்டு!
    • முதல் என்றால் வேர் என்று பொருள். ஊடி அவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்தற்று (1304) (நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்) என்னும் குறளில் முதல் என்பது வேரைத்தானே குறிக்கிறது? வேர், மரத்திலிருந்து வேறுபட்டதா? ஆம், இல்லை இரண்டுமே சரிதான்! அலை, கடலிலிருந்து வேறுபட்டதா? மரத்தை வெட்டினாலும் மறுபடி முளைவிடும். ஆனால் வேரின்றி அமையாது மரம்.
    • முதல் என்றால் காரணம் என்று பொருள். எப்படி? நோய்நாடி நோய்முதல் நாடி` என்கிறாரே! காரணம் கடவுள். காரியமாகிய விளைவு உலகம். காரணம் அகரம். விளைவு எழுத்தெல்லாம்.
    • முதல் என்றால் மூலதனம் என்று பொருள். விவசாயி, விதைநெல்லை வித்துமுதல் என்பான். வியாபாரத்திற்காகச் செலவிட வேண்டியதைக் கைமுதல் என்பான். அறுவடைக்குப் பின்வருவதைக் கண்டுமுதல் என்பான். இன்னும் கொள்முதலும் உண்டுதானே? இந்த முதல் எல்லாம் எதற்கு? ஊதியத்திற்கு. முதல் இலார்க்கு ஊதியம் இல்லை, என்கிறாரே! எனவே, அகரம் என்னும் முதல் இல்லையென்றால் பிற எழுத்துக்கள் என்னும் விளைவாகிய ஊதியம் இல்லை. ஆண்டவன் என்னும் முதல்தான் உலகம், வாழ்க்கை என்னும் ஊதியத்திற்குக் காரணம்.
    • முதல் என்றால் எண்ணிக்கையில் முதல் என்று பொருள். ஒன்று என்பது ஒன்று. இரண்டு என்பது இரண்டு ஒன்று. கோடி என்பது கோடி ஒன்று. ஆக ஒன்றுதானே யாவும்? எந்த எண்ணிலும் ஒன்றுதானே ஒன்றியிருக்கிறது? எல்லாம் ஒடுங்குவது அந்த ஒன்றில்தானே? தொகை என்பதில் மருளாமல் அதன் ஆதாரமாகிய துளியைக் காண்பவர்கள் வித்தகர்கள். வள்ளலார் `மயில், குயிலாச்சுதடி` என்றதும், திருமூலர் `மரத்தை மறைத்தது மாமத யானை` என்றதும் இதைத்தானே?

    எழுத்துக்களுக்கு அகரம் முதல். உயிர்களுக்கு ஆண்டவன் முதல். இடையில் அதுபோல் என்ற சொல்லில்லை. ஒன்றுக்கொன்று உவமையில்லை. இரண்டு தனிப்பட்ட கூற்றுகள், இங்கே சொல்லப்பட்டன என்பர் சிலர்.

    தொடருவோம்

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை

     

    பாயிரவியல்

     

     

    இசைக்கவி ரமணன்

     (தொடர் சொற்பொழிவுகள்)

     kural

    வாழ்த்து

     

    கவலைக் கடலைக் கடியும் கனலாய்

    கவிதை சொன்னவன் பாரதி

    காதும் காதும் வைத்தாற் போலக்

    காவியம் செய்தவன் கம்பன்

    திவலைக் குள்ளே கடலைக் காட்டிய

    தெய்வப் புலவர் வள்ளுவர்

    திரிகோணத்தின் நடுமுற்றத்தே

    தேனகலாய்த் தமிழ் வளரும்!

     

    ஒருவா னத்திற் கொருகதிர் போதும்

    உலகில் உயிர்கள் வாழும்

    ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்

    உயிரே ஒளிமய மாகும்

    திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்

    திசையை விழியறியாது

    வருவதைச் சென்றதை வந்ததை அவர்போல்

    வகுத்தவரே கிடையாது!

     

    அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்

    அவர்கரம் பற்றி நடப்போம்

    அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய

    ஒளியில் அனைத்தும் கடப்போம்

    இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச

    இங்கொரு முடிவைப் படைப்போம்

    இன்பம் துன்பம் என்று மயக்கும்

    இடர்களைத் தெருவில் உடைப்போம்!

     

    வாழ்வின் எந்தத் தருணத்திற்கும்

    வள்ளுவர் வாக்கு பொருந்தும்

    வாசலில் சூரியன் அறையில் தென்றல்

    வளரும் கொல்லையில் நிலவு

    தாழ்வில் லாமல் ஏழ்மையைத் தழுவும்

    தகைமையை வள்ளுவம் காட்டும்

    தருக்கில் லாமல் தலையை நிமிர்த்தி

    நடக்கும் மாண்பை ஊட்டும்!

     

    உலகில் எவர்க்கும் ஒருவழி காட்ட

    நிலவும் கதிரே குறள்

    ஊழ்வினை தாண்டி உயிரமு தாகிடும்

    வாழ்வின் வழியே குறள்

    வலமும் இடமும் நலமே இசைத்துத்

    துலங்கும் துணையே குறள்

    வானும் புவியும் கலந்து விளைந்திடும்

    தேனின் மொழியே குறள்!

     

    வளர்ந்திட வளர்ந்திட வானைப் போலே

    வளரும் வள்ளுவரே!

    வாசற் திண்ணையில் வார்த்தைகள் சொல்லி

    வாழ்த்தும் அதிசயமே!

    தளர்ந்திடும் நெஞ்சில் கனலாய் விசைக்கும்

    தமிழெனும் தெள்ளமுதே!

    தனிமையில் மனதினை முனிவ னாக்கிடும்

    தாழ்வாரக் காற்றே!

     

    குறளே! வானின் குரலே! மண்ணில்

    குடிலே! தாய்மடியே!

    கோடுகள் நீக்கிப் பாடு களைந்திடும்

    கோட்பாட்டின் நிதியே!

    துறவே திறமை நிறைவே தனிமை

    இயல்பே தவமென்று

    தொட்டுக் காட்டித் தொடரும் உயிரின்

    துணையே! துல்லியமே!

     

    ஏழுலகங்களும் வாழும் வரைக்கும்

    எழுசீர் எழில் தொடரும்

    எல்லாம் சொல்லிய பின்னும் வள்ளுவர்

    இளநகை ஒளிபடரும்

    வாழப் பிறந்த வாசகம், அறத்தில்

    வாழ்ந்தே புரிவது வள்ளுவம்

    வான்மறை தந்த நான்முகனை நாம்

    வாழ்ந்து காட்டியே வணங்குவோம்!

     

     

    நெஞ்சார்ந்த நன்றி…

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சென்னைத் தலைவர் திரு. எம். முரளி. அவரை என் நண்பர், நலம்விரும்பி என்றெல்லாம் சொல்வதைவிட, அவர் என் சகோதரர் என்பதே உண்மையானது. ஆம், பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன். முரளியால், பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!!

    நாள்தோறும் பலப்பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி, மக்கள் பலவிதமான வழிகளில், நம் திருநாட்டின் ஆதாரமான அறத்தின் அழகை அறியும்படிச் செய்யவேண்டும் என்பதே அவருடைய இடைவிடாத அவா. பூசை, பாராயணங்களிலிருந்து தொடங்கி, இசைக் கச்சேரிகள், இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள், கூட்டுப் பிரார்த்தனைகள், நாடகங்கள், சுய முன்னேற்றப் பட்டறைகள் என்று கணக்கற்ற முறையில் நல்ல கருத்துகளைப் பரப்பி வருபவர். பாரத நாட்டுப் பண்பாட்டிலும், அதன் மையமாம் அறத்திலும் அவருக்கு இருக்கும் பக்தியும், அக்கறையும் போற்றுதலுக்குரியன. அவரும், விருந்தோம்பல், எளிமை இவற்றுக்கு உதாரணமாகத் திகழும் அவர்களுடைய குடும்பத்தாரும் நெடுங்காலம் இனிது வாழ்க!

    ஒருநாள் முரளி அவருக்கே உரித்தான சத்தமில்லாத கீழ்க்குரலில், ‘நீங்கள் வாரந்தோறும் திருக்குறளைப் பற்றிப் பேசுங்களேன்,’ என்றார். எனக்கு திருக்குறளில் நுனிப்புல் பரிச்சயமும், மரியாதையும் உண்டேயொழிய, அதிலே ஆழங்கால் பட்ட அறிவு கிடையாது (என் தந்தையார் இருந்திருந்தால் பின்னாலிருந்து ‘அதிலும்’ என்று கிண்டலடித்திருப்பார்!) என்றேன். “அதனால் என்ன, படியுங்களேன்!” என்றார் இயல்பாக. உடனே சரி என்றேன். ஏன்? இதைவிடத் திருக்குறளை ஒழுங்காகப் படிக்க வாய்ப்பு ஏது? அதைவிடவும் நம் அகத்தைக் கழுவிக்கொண்டு உய்ய வழியேது?

    ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், சென்னை தி.நகரிலுள்ள, கிருஷ்ண கான சபாவிலுள்ள மிக அழகான காமகோடி அரங்கில் சொற்பொழிவு நடக்க ஏற்பாடானது. செப்டம்பர் 27, 2011 அன்று, முரளியின் முன்னிலையில் இயக்குநர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்கள் முதல் சொற்பொழிவைத் தொடங்கிவைத்து வாழ்த்தினார். வாரம் ஓர் அதிகாரம் என்னும் வரம்புக்கு உட்பட என்னால் இயலாது என்பதை உடனேயே முரளிக்குத் தெரிவித்துவிட்டேன். எதற்குத்தான் அவர் ஒத்துக்கொள்ளவில்லை?! ஒவ்வொரு சொற்பொழிவும் சரியாக மாலை 6.30க்குத் தொடங்கி 8.00 மணிக்கு முடியும். முதல்நாள் முன்னுரைக்கே சரியாய்ப்போனது. கடவுள் வாழ்த்து நான்கு செவ்வாய்க் கிழமைகளை விழுங்கியது. வான் சிறப்பில் நுழையும்போது, முரளிக்கு ஒரு மின்னல். ஒவ்வோர் அதிகாரம் முடிந்து அடுத்த அதிகாரம் துவங்கும்போது, முந்தைய அதிகாரத்தைப் பற்றிப் பேசிய பேச்சை அச்சடித்து வழங்கலாமே என்பது அவருடைய எண்ணம். காற்றோடு போய்விடக் கூடாது என்பதற்காகவும், முறையாகத் தயார்செய்து கொள்ளாமல் பேசுதல் எனக்கு ஒத்துவராது என்பதாலும், நான் விரிவாகவே குறிப்புகள் தட்டச்சு செய்துகொள்வேன் என்பதை நான் முரளிக்குச் சொன்னது அவருக்கு இந்த யோசனையைத் தோற்றுவித்திருக்கக் கூடும்.

    முரளி எனக்களித்த இந்த அரிய வாய்ப்பு, என் அகவாழ்வின் அந்தரங்கப் பயணத்தில் ஒரு திருப்பு முனையாய் அமைந்துவிட்டது. அதில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு நான் நன்றி சொல்லி முடித்துவிட முடியாது. என்றாலும், இருகரம் கூப்பி வணங்கி நெகிழ்வதல்லால் என்னால் வேறென்ன செய்ய முடியும்?

    என் பள்ளி நாட்களிலிருந்து, என்னை முன்னிறுத்தி அதில் இன்பம் காணும் அதிசய நண்பன் ஹரிகிருஷ்ணன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இன்று பெரிதும் மதிக்கப்படும் அறிஞன். நான் வியந்து போற்றுகின்ற கவிஞன். அவன் கற்றதில் நூற்றில் ஒருபங்கே கற்றவர்களை ஊர், அறிஞர்கள் என்று கொண்டாடுகிறது. இவனோ, பெங்களூரில், தனது நோயாளும் உடலிலே நூலாடும் உயிரை முருகனிடம் ஒப்புவித்துவிட்டு, தமிழில் தோய்ந்திருப்பதே தவமாக, உற்சாகமாக, எளியார்க்கும் எளியனாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். நான் திருக்குறளைப் பற்றிப் பேசப்போகிறேன் என்றதும் அவனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. குறளை எப்படிப் படிப்பது, உரைவேற்றுமைகளை எப்படிப் புரிந்துகொள்வது, குறளின் பொருளோடு அறிவியல் தகவல்கள், நடப்பியல்கள் இவற்றை எப்படித் தொடர்புபடுத்துவது போன்ற பலப்பல நுணுக்கங்களை, தினந்தோறும் தொலைபேசியில் சொல்வான். என் சொற்பொழிவின் ஒலிப்பதிவை அவனுக்கு அனுப்பிவைப்பேன். அதை முழுவதுமாகக் கேட்டு, அதிலுள்ள பிழைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவான். எங்கள் ஆசிரியர் ‘நாகநந்தி’ என்ற புனைபெயர் கொண்ட அமரர் திரு. தி. வேணுகோபால் அவர்களின் திருக்குறள் சொற்பொழிவின் ஒலிப்பதிவுகளை அவ்வப்போது அனுப்பிவைத்துக் கேட்குமாறு செய்வான். எங்கிருந்தோ வந்தான்..நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் நின்றான்.

    அவனுக்கே இன்று நூலாகிவிட்ட இந்தச் சொற்பொழிவுக் குறிப்புகளை அர்ப்பணிக்கிறேன், சின்ன மலர்களாய். அவன் மூலம், எங்கள் ஆசிரியர் திரு. தி. வேணுகோபால் அவர்களின் திருவடிகளுக்கும் இது வணக்கமாக அமையும்.

    என் இனிய முரளியும் அவருடைய மிகவினிய குடும்பத்தாரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ, இறைவனை இதயத்தின் அடித்தளத்திலிருந்து பிரார்த்திக்கிறேன்.

    வாரம் தோறும் தவறாமல் வந்து கேட்பவர்களில் என் நண்பர்களும் உண்டு. முன்பின் தெரியாதவர்களும் உண்டு. ஆழ்ந்து கேட்டுக் குறிப்பெடுப்பாருமுண்டு. பாராட்டுவோர், கருத்துச் சொல்வோர், பிழைகளைச் சுட்டிக் காட்டுவோர் அனைவரும் உண்டு. அவர்கள் எனக்குக் காட்டிவரும் ஆதரவு மறக்க முடியாதது. மகத்தானது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    இந்த நூல் அரங்கேறும் முன் இதை என் நெடுநாள் நண்பரான, என் சக பயணியான, சின்மயா மிஷனின் துறவி தவத்திரு சிவயோகானந்தா அவர்களுக்கும், கனடாவில் வாழும் தமிழில் தன்னிதயத்தைப் பறிகொடுத்த, நான் செல்வா என்று உரிமையோடு அழைக்கும் திரு. சி.ஆர். செல்வக்குமார் அவர்களுக்கும் அனுப்பிவைத்தேன். பொறுமையுடன் படித்து, அவர்களுடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அவற்றுள் எனக்குப் புரிந்ததையும், ஏற்புடையனவாய் இருந்ததையும் இயன்ற அளவுக்கு எடுத்துக்கொண்டேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    என்னுடைய உரைக்குறிப்புகளை வரிசையாக நூல்களாக வெளியிட வேண்டும் என்பது திரு. முரளியின் அவா. அது வல்லமை மூலம் இணைய தளத்தடத்தில் பதிகிறது மகிழ்ச்சிக்குரியதே. அண்மையில் ஈரோடு சென்றிருந்தபோது பவளசங்கரியைச் சந்தித்தேன். அதாவது, அவர்கள் வீட்டில் வயிறார உண்டேன். அவரும், அவர்தம் கணவரும் தங்கள் அன்பால் என்னை நெகிழச் செய்து, ரயிலடிக்கு என் பொருட்களைச் சுமந்து வந்தார்கள். காத்திருந்தபோது, வல்லமையில் நான் பங்குகொண்டு நாட்களாயின என்ற பேச்சு வந்தது. நான் அனுப்பிய எழுத்துக்களையெல்லாம் துறைவாரியாகப் பிரித்து வெளியிட்டுப் பத்திரப்படுத்தி வரும் பவளாவுக்கு ஒரு சிறப்புப் பரிசாக இந்தக் குறிப்புகள் அமையும் என்று நம்புகின்றேன். எது எப்படி நிறைவேறுவதும் பராசக்தியின் அருள்.

    நான் திருக்குறள் என்னும் நூலின் கடை மாணாக்கன். கற்றோர் அவையில், குறளைச் சத்தமாகப் படிக்கிறேன்; அதைப்பற்றிச் சத்தமாகவே சிந்திக்கிறேன். அவ்வளவுதான்.

    இசைக்கவி ரமணன்


     

    முன்னுரை

     

    வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து

    வான்புகழ் கொண்டதமிழ் நாடு.

                              — பாரதியார்

    இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்த்தாயிற்று. நாடு முழுதும் சிலைகள் நட்டுவைத்தாயிற்று. இன்னும் இவர் யார்? இவர் பெயர் என்ன? இவர் எங்கே பிறந்தார்? என்ன செய்தார்? எப்போது மறைந்தார்? இந்தக் கேள்விகளும் ஓயவில்லை. இவற்றில் ஒன்றுக்கேனும் ஆதாரபூர்வமான விடை கிடைக்கவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் என்பது கூட குத்துமதிப்புதான். இவருடைய காலம் என்பது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று சிலரும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று சிலரும் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் அது அறிவியல், தொழில்நுட்பம் வளராத காலம். அன்று எது தமிழகமாக இருந்தது என்பது தெரியாது. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து அன்றைய காலத்தைப் பார்க்கும்போது அது அறிவு சுருங்கிய காலம் என்று கருத இடமுண்டு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல், 2000 ஆண்டுகளைக் கடந்தும் பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கிறதே என்பதை வியக்காமல் இருக்க முடியுமா?

    சரி, 1330 குறட்பாக்களை எழுதியிருக்கிறாரே, அவற்றுள் கிடைக்கும் சில துப்புகளை வைத்துக்கொண்டு இவரை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். ஊஹூம்!

    • ஏதாவதொரு மலை, ஆறு, அரசன் பெயர் வருகிறதா என்றால் இல்லை. (இமயம், மேரு, விந்தியம், என்று இலக்கியங்களில் வழங்கி வரும் மலைப் பெயர்கள்; கங்கை, காவேரி என்பன போன்ற ஆற்றுப் பெயர்கள் எதுவுமே இல்லை. நாம் காண்பதெல்லாம் ஆறு, நதி, மலை, குன்று, வேந்தன், இறைவன் என்பன போன்ற பொதுப்பெயர்கள் மட்டுமே.)
    • உவமைகளிலாவது, பாரியைப்போல், பாண்டியனைப்போல் என்பதாக ஏதேனும் இருந்தால் காலத்தை ஓரளவு நிர்ணயம் செய்துகொள்வோம் என்றால் ஒன்றுமே இல்லை.
    • சிவயோகி, சமணர், என்று பலரும் பலவிதமாக இவரைச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள். எந்தக் குறிப்பிட்ட கடவுளையும் இவர் குறிப்பிடவில்லை. எந்த மதத்தையும் பிரத்யேகமாக அடையாளம் காட்டவுமில்லை. தவறிப்போய் விழுந்திருப்பது, மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (61:மடியின்மை:10) சோம்பல் இல்லாத அரசன், தன் அடிகளால் இறைவன் உலகளந்த நிலப்பரப்பு யாவையும் ஒருசேர அடைவான். தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்  தாமரைக் கண்ணான் உலகு (தாம் விரும்பும் பெண்களின் மென்மையான தோளில் துயிலும் துயிலினும் இன்பந் தருமோ தாமரைக் கண்ணான் உலகு?) என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது என்றீர்களானால் அதற்கு எதிர்விளக்கம் வைத்திருக்கிறார்கள் சமணர்கள். ஆனால், ஹரிகிருஷ்ணன் சொல்வதுபோல், `இந்தக் கள்ளனுக்குத் தப்பியவன் அந்தக் குள்ளன்,` என்று சொல்லலாம். திரிவிக்கிரமாவதாரம் மட்டுமே அசைக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது. திரு என்பது திருமகளைக் குறிக்கிறது என்றால் அதற்கும் சமணர்களிடம் சமாதானம் இருக்கிறது. முகடி, தவ்வை என்ற மூதேவியின் அடையாளங்களை மட்டுமே தப்பாமல் காண முடிகிறது. ஆனால், இவை அன்றைய சமூகத்தில் புழக்கத்தில் இருந்த பொதுப்பெயர்கள் – அடியளந்தான் என்பதைத் தவிர  — என்பதால் உறுதியான அடையாளம் என்று அடித்துச் சொல்ல முடியவில்லை.
    • ஆயினும், உள்ளே ஆன்மிகம், வெளியே அறவாழ்க்கை என்னும் பழைய பாரதப் பண்பாட்டில் ஊறித் திளைத்தவர் வள்ளுவர் என்று கொள்வதற்கு, நுணுக்கமான ஆராய்ச்சிகள் தேவைப்படவில்லை என்பது என் கருத்து. திறந்த மனதோடு பார்க்குங்கால், இந்துமதம் என்று இப்போது குறிக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும், ஏன், பிளவுபட்டும் இருக்கும் அமைப்பின் தோற்றுவாயான சனாதன தர்மமே வள்ளுவரின் கோட்பாடு என்பது என் கருத்து. ஏனென்றால், அது அறிவு, ஆராய்ச்சி இவற்றைச் சார்ந்தது; அடுத்தவர் நம்பிக்கையைப் பழிக்காதது; உண்மையைத் தான் கண்டவிதம் சொல்லத் தயங்காதது; சமயங்களோடு பூசலின்றியே அவற்றைக் கடந்து நிற்பது; அனைவரின், அனைத்துயிரின் நலனையும் விழைவது. இது சனாதன தர்மத்தின் சுருக்கம். வள்ளுவரின் பக்கவெட்டுத் தோற்றமும் இதுவே!
    • ஒரு காவியம் காலங்கடந்து நிற்பதற்கு அதன் கதைப்பொருள் காரணமாக இருக்கலாம்; ‘தன்னேரில்லாத் தலைவனைக் கொண்டு’ என்று சொல்வார்களே, அதுபோன்ற, மக்களைக் கவரும் நாயகர்களுடைய பாத்திரப் படைப்பால் இருக்கலாம்.  ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் போலவோ, அல்லது புராணங்கள் போலவோ இதில் ஏதாவது கதையம்சம் இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு குட்டிக் கதைகூட இல்லை. நூற்றுக் கணக்கான கதைகளுக்கு ஆதாரமாகத் திருக்குறள் விளங்குகின்றது என்பது வேறு.  கதையம்சமோ, கதாபாத்திரமோ தேவைப்படாமலேயே மக்களைப் பற்பல நூற்றாண்டுகளாக வசியப்படுத்தி வைத்துள்ள நூல் திருக்குறள் என்பது முதல் வியப்பு.
    • இவருடைய பெயர் நூலில் எங்கும் இல்லை. தேவாரம், பிரபந்தம் போல சமய முத்திரை இல்லவே இல்லை. அடையாளம் காணத்தக்க சித்தாந்தங்கள் (schools of thought) எதுவும் காணப்படவில்லை. இது அடுத்த வியப்பு.

    இந்த நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது, குறட்பா யாப்பில் அமைந்திருக்கிறது என்பவற்றைத் தவிர வேறெதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதில் தமிழ் என்னும் சொல் ஓரிடத்தில்கூட வரவில்லை என்பது தூக்கி வாரிப்போடச் செய்யும் அடுத்த வியப்பு என்றாலும் இதை எழுதியவர் தமிழர் என்பதையேனும் நாம் நம்பலாம்தானே!!!

    எங்கும் வானம் நமக்கு வசதியாய் இருக்கும், வாழ்வு தரும். ஆனால், ஒருபோதும் அது வசப்படாது. வகுபடாது.

    அட, நூலுக்குக்கூட இவர் பெயர்வைத்ததாகத் தெரியவில்லை. பாக்களின் யாப்பு, குறட்பா வடிவத்தில் அமைந்திருப்பதால் இது குறள் எனவும், ஒரு சிறப்பு அடைமொழி கொண்டு திருக்குறள் எனவும் வழங்கி வருகிறது. இந்த யாப்பில் ஒரு நூல் என்பது பழங்காலத்தில் இல்லை என்பதும் இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமாயிருந்திருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வகுத்துச் சொல்லும் வெண்பா,

    நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

    கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.

    இந்த நூலைப் போற்றி 53 பேர் பாடிய 53 வெண்பாக்கள் அடங்கிய நூலுக்குத் `திருவள்ளுவ மாலை` என்று பெயர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய்ச் சொன்னாலும், `வள்ளுவர், வள்ளுவனார், வெண்பா, குறட்பா, அருங்குறள்` போன்ற குறிப்பிடல்கள் காணப்படுகின்றன. ஆனால், இதன் பெயர் திருக்குறள் என்று சாதிக்கும்படியான சான்றுகள் எதுவும் நமக்கு இல்லை. ஆனால், இதில் சில பாடல்கள் இதை `முப்பால்` என்றே குறிப்பதால் ஒருவேளை அதுதான் நூலாசிரியர் நூலுக்கு வைத்த பெயராய் இருக்கலாமோ என்பது சிலரின் ஐயம்.

    திருக்குறளுக்கு வேறு சில பெயர்களும் உண்டு:

    1. இரண்டு (இரண்டே அடி!)
    2. உத்தர வேதம் (உத்தரம் என்றால் இங்கே வடக்கு என்று பொருளில்லை. பூர்வம்-உத்தரம், முன்பு-பின்பு. பின்னால் எழுந்த இன்னொரு வேதம்)
    3. எழுதுண்ட மறை (மறை என்பது எழுதப்படாதது. இது, எழுத்துக்குள் இறங்கிவந்த, இசைந்துவந்த மறை)
    4. தமிழ்மறை
    1. திருவள்ளுவப் பயன் (வள்ளுவம் என்பது ஒரு சித்தாந்தம், அல்லது தத்துவம். அதன் வெளிப்பாடு அல்லது பயனே திருக்குறள்)
    2. திருவள்ளுவர்
    3. தெய்வ நூல்
    4. பழமொழி (எது பழமை? எது எப்போதும் புதிதாய்த் துலங்குகிறதோ அதுவே பழமை! எது எப்போதும் புதிதாய்த் துலங்கும்? எது, தானும் துலங்கி, நம்மையும் துலக்குகிறதோ, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருகிறதோ, எது முன்னேற்றத்திற்கு ஊக்கம் வழங்குகிறதோ அதுதான் பழமை; அதுவேதான் புதுமை. ஆறு, பழமை. அதில் நீர் புதுமை! கதிரவன் பழமை; அவன் ஒளி புதுமை)
    5. பால்முறை (அறம், பொருள், இன்பம் என்பது வரிசைக்கிரமம் அல்ல! அறவழியில் பொருள் சேர்த்தல், பொருள்மயமான உலகில் நெறியோடு வாழ்தல். அதுபோல் அறவழியில், வீழ்ந்துவிடாமல் இன்பத்தை அனுபவித்தல். வீடு? ஏன் சொல்லவில்லை? சொல்லாமற் சொல்லப்பட்டது. நாம் இருக்கும் இடத்தை வீடு என்கிறோம். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் விடுவதே வீடு என்பார்! சொல்லி உணர்வதல்ல; விட்டு மட்டுமே உணர்வது)
    6. பொது மறை (எல்லா நாடுகளுக்கும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்)
    7. பொய்யா மொழி (உண்மையே பேசும், அதையும் நின்று, உறுதியாகப் பேசும்)
    8. பொருளுரை (மெய்ப்பொருளுக்கான உரை!)
    9. முதுமொழி (அறிவும் தெளிவும் சேர்ந்த கனிவே முதுமொழி. எனக்கு 50 வயது, அப்பாவுக்கு 80 வயது என்று வைத்துக்கொள்ளுங்கள். 80 என்பதனாலா முதுமொழி? எனக்கு ஐந்து அவருக்கு 35 என்றபோதும் அப்பாவின் வார்த்தை எனக்கு முதுமொழிதானே! அட, ஐந்து வயதுக் குழந்தையாயிருந்தபோது சம்பந்தர் பாடிய பாடல் முதுமொழிதானே!)
    10. வள்ளுவ தேவன் வசனம்
    11. வள்ளுவ மாலை
    12. வள்ளுவர் வாய்மொழி
    13. வள்ளுவன் வாய்ச்சொல்
    14. வள்ளுவனார் வைப்பு (சட்டம், வழி, முறை, நெறி. வீடு பேற்றுக்கும் வைப்பு என்று பெயர்!)
    15. வாயுறை வாழ்த்து

    இவற்றில் ஒன்றுகூட, இன்றும் நமக்குப் பெயர் தெரியாத நூலாசிரியர் வைத்த பெயர் இல்லை என்பது தெளிவு.

    இப்படி, ஆளுடைய பெயர், ஊர், அட நூலுக்கு அவர் வைத்த பெயர்கூடத் தெரியாத ஒரு நூல், இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறதே எப்படி?

    ஒன்றை எண்ணிப் பாருங்கள்.  எல்லாப் பழைய நூல்களைப் போலவே திருக்குறளும் ஓலைச் சுவடிகளில்தான் எழுதப்பட்டிருக்கும். ஓலைச் சுவடியின் ஆயுள் சுமார் 200 ஆண்டுகள். மிகமிக நன்றாகப் பராமரித்தால் 300 ஆண்டுகள் வரை தாங்கும் என்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறிப்பிடுகிறார்.  திருக்குறளோ 2000 ஆண்டுகளை, அல்லது 60 தலைமுறைகளைத் தாண்டிவிட்டது. எனில், குறைந்தது பத்து முறையாவது இது நகல் எடுக்கப்பட்டிருக்கும், அச்சு வரும் வரை. கம்பனின் ராமாயணம் அச்சேறியபோது, அதற்கு முந்தைய தமிழ் ராமாயணங்கள் காணாமற்போய்விட்டிருந்தன. திருக்குறள் மட்டும் தலைமுறைகளைத் தாண்டிப் புழங்கி வந்தது, வருகிறது, என்றால், எத்தனை ஆயிரம் பிரதிகள் நகல் எடுக்கப்பட்டிருக்குமோ!

    ஒன்று மட்டும் தெளிவு. திருவள்ளுவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தியிருக்கிறார். எங்கேயும் தன்னைப் பற்றிய எந்தக் குறிப்பும் வந்துவிடக் கூடாது என்று அவர் முடிவுசெய்து விட்டதால்தான், பூகோள ரீதியாகவோ, வரலாற்று அடிப்படையிலோ அவரை அடையாளம் காட்டும் அகச்சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி நம்மிடையே புழங்கிவரும் விவரங்கள் யாவும் சுவாரசியமான கதைகளேயன்றி அவற்றுக்கு ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவுமில்லை.

    என் நண்பன் ஹரி கிருஷ்ணன் பேசுகிறான்:

    “ஒருவரிடம் சுமார் நூறு நூல்கள், ஓலைச்சுவடி வடிவில் உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.  அவற்றில் ஒரு 20 நூல்கள் 200 ஆண்டுகளைக் கடந்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.  ஓலையை எழுதுவதற்குத் தகுந்ததாகப் பதப்படுத்தி, இரண்டு விரற்கடை அளவுள்ள அந்தச் சுவடியில் எழுத்தாணி (Stylus) கொண்டு எழுதி, எழுதியதன் மேல் மஞ்சளையோ, விளக்கின் கருஞ்சாந்தையோ பூசி, படிப்பதற்கு எளிதாக்க வேண்டும்.  The preparation of stationery itself is a time consuming job.  It was not just as we buy a bundle of papers in the shop next to our doorstep.  இதற்குமேல், எழுத்தாணியால் எழுதுவது என்பது பெரிய ப்ராஸஸ். அதற்கு ஜெல் பேனாவில் எழுதுவதைப் போன்ற வசதி கிடையாது.  எனவே, 20 நூல்கள், ஒவ்வொன்றும் ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் செய்யுள்களைக் கொண்டது, காலச் செலவால் ஓலையின் தன்மை இறுகி வறண்டு வறண்டு, பசையற்று, உடைந்து நொறுங்கும் நிலையில் இருக்கின்றன என்றால், நான் அத்தனையையும் படி எடுத்தாக வேண்டும் என்றால், கை ஒடிய படி எடுக்க, நான் என்ன செய்வேன்?  எது மிக முக்கியமாக எனக்குப் படுகிறதோ அதை மட்டும் தேர்ந்துகொள்வேன்.  இப்படி, தமிழ்நாடெங்கிலும் சிதறிக் கிடந்த பல்வேறு புலவர்கள், பாதுகாக்கப்பட வேண்டியனவற்றுள் ஒன்று என்று பார்த்துப் பார்த்துத் திருக்குறளைத் தேர்ந்து படியெடுத்து—குறைந்தது பத்து முறையாவது—வந்திருக்கிறார்கள்; 50-60 தலைமுறை இதனை மிகமிகமிக முக்கியமான நூலாகக் கருதிப் படியெடுத்தும், உரைகளிலும், புதிதாகச் செய்யப்படும் நூல்களிலும் நேரடி மேற்கோளாகவே காட்டிக் காட்டி வந்திருக்கிறார்கள் என்பதொன்றே, இந்த நூலுக்குள்ள பெருமையைச் சொல்லும்.  இந்த ஒற்றை வாக்கியத்தைக் கடந்த பெருமையை உடைய நூல், நாம் இப்போது கலந்து கூடி கற்கத் தொடங்கியிருக்கும் நூல் என்பது நினைவிலிருத்தத் தக்கது.“

    வாகீச கலாநிதி திரு. கி.வா. ஜகன்னாதன் அவர்கள் திருக்குறளின் பலவகைச் சிறப்புகளை விரிவாகச் சொல்லியிருக்கிறார். சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்:

    1. குறளால் ஆன பழைய நூல் இஃதொன்றே
    2. தமிழின் முதல் எழுத்தான `அ` வில் தொடங்கி, இறுதி எழுத்தான `ன்` என்பதில் முடிகிறது
    3. ஆதியில் பத்துப் பேர் இதற்கு உரையெழுதியிருக்கிறார்கள். பரிமேலழகர், தருமர், மணக்குடவர், தாமத்தர், பரிதியார், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சர். அதற்குப்பின், எத்தனையோ அறிஞர் பெருமக்கள் உரையெழுதியிருக்கிறார்கள், உரையெழுதி வருகிறார்கள்!
    4. இதைப்போலப் பிறமொழிகளில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் இல்லை
    5. வேதத்தோடு ஒத்த சிறப்புடையது என்றும், வேதத்தைவிடவும் சிறப்புடையது என்றும் சில புலவர்கள் திருக்குறளைப் போற்றியுள்ளார்கள்
    6. எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொதுவான கருத்துக்களைச் சொல்கிறது

    நூலின் கட்டமைப்பு:

     

    திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. தர்மம், அர்த்தம், காமம் சொன்னவர், மோக்‌ஷமாகிய வீடு என்பதை ஏன் சொல்லவில்லை என்று கேட்பாருளர். அறிஞர்கள் கருத்து:

    • வீடு, அறத்திலேயே சொல்லப்பட்டு விட்டது
    • வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லாத நிலையம். எனவே நூல் வழியே கூறப்படுவது ஏனைய மூன்றுமேயாம் என்பது பரிமேலழகர் விளக்கம்
    • முப்பாலாகக் கூறி, வீடு பேற்றிற்கு நிமித்தம் கூறினார் என்பது நச்சினார்க்கினியரின் விளக்கம்

    அறம் 38, பொருள் 70, காமம் 25 என்று மொத்தம் 133 அதிகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பாலும் பல இயல்கள் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துப் பாடல்கள் என்பது பழைய மரபையொட்டியது.

     

    திருவள்ளுவரின் உத்தி

    திருக்குறள் எந்த வகையைச் சேர்ந்த நூல்?

    ஒவ்வொரு குறளும் ஒரு கதையைச் சொல்லத் தூண்டும். ஆனால் இது கதை நூல் அல்ல.

    பலவிடங்களிலும், குறிப்பாக, காமத்துப் பாலில் கவிதையின் ஆழத்தையும் அழகையும் மின்னல் வீச்சுகளாகக் காணலாம். ஆனால், இது கவிதை நூல் அல்ல.

    இதிகாசங்கள், (`இது நடந்தது` என்று பொருள்) புராணங்கள், சாத்திரங்கள் இவற்றில் வரும் நீதிகளைக் குறளிலும் காணலாம். ஆனால் இது இந்த மூன்று வகைகளில் வராது.

    சூத்திரமா என்றால், ஆமாம் என்றும் இல்லை என்றும் சொல்லத் தோன்றுகிறது. சுருக்கத்தை வைத்துப் பார்த்தால் சூத்திரம் என்று சொல்லலாம். ஆனால் சூத்திரம் என்பது விளக்கம் சொன்னாலொழிய விளங்காது. குறள் எவ்வளவு விளக்கினாலும் மேலும் விரியுமென்றாலும், எந்த விளக்கமுமின்றியே மிகக் குறைவான நூல் பயிற்சி உள்ளவருக்குக் கூட ஓரளவேனும் விளங்கும்.

    ஆனால், இதை அறநூல் என்று சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

    ஏழே சீர்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் காட்டும் கோயில் யானையின் சாவகாசம் பிரமிக்க வைக்கிறது. அது பிரமிக்கத்தக்க வேகத்தில் ஓடக்கூடியது என்பதை யானை ஓடிப் பார்த்தவர்கள் அறிவார்கள். யானை துரத்திப் பார்த்தவர்கள் இன்னும் நன்றாக அறிவார்கள்! `யானையால் யானையாத் தற்று,` யானையை வைத்து யானையை வசக்குவதுபோல், ஒரு செயலை இன்னொரு செயலின் மூலம் சிறப்பாக முடிக்கலாம் என்கிறார். (வினையழியத் தேவை வினை அதுபோல் பொய்மை மனமழியத் தேவை மனம், என்னும் என் குறள்) இன்னொன்று அறச்சீற்றம். `பரந்து கெடுக உலகியற்றியான்` என்பாரே! `முனிவர்களின் அறச்சீற்றமே இறையை இறைவனாக பூமிக்கு இறக்கியது,` என்பார் என் குருநாதர். (’It is the righteous indignation of the wise that made God to descend to the earth as Avatars’) அப்படிப்பட்ட வரிசையில் நிற்கிறவர்தான் திருவள்ளுவர். நையாண்டி, ஓரிடத்திற்கு மற்றோரிடத்தில் விளக்கம் இவைபோன்ற எத்தனையோ சிறப்புக்கள் `நவில்தொறும்` நமக்குத் தென்பட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

    மெதுவாய், சாதுவாய்த்தான் துவங்குவார். `தம்பி! இப்படிச் செய்து பார்க்கலாமே!` என்று தூண்டுவார். செய்தோமானால், அடுத்த நிலையைச் சுட்டிக் காட்டி நம் ஆர்வத்தை அதிகரிப்பார். அதையும் நாம் அடைந்தோமென்றால், இன்னும் உயர்வுகளைக் காட்டி, `நீ அடைந்ததென்ன பெரிதா? அதோ பார்!` என்று சொல்லி நம்மை மலைக்கவைத்துச் சென்றுவிடுவார். நாமோ அவருடைய மொழியின் பொருளில் ருசிகண்டுவிட்டதால் நம்மால் பின்னாலும் செல்ல முடியாது.

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

    நன்னயம் செய்து விடல்

    என்று நம்மை அவர் வழிக்குக் கொண்டுவருவார். நாம் நன்மை செய்த மகிழ்ச்சியில் சற்றே பெருமை கொண்டால்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

    என்ன பயத்ததோ சால்பு?

    என்று குட்டாமல் குட்டிவிட்டுப் போவார்!

    யாரையும் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆளைப்பார்த்து அலட்சியம் செய்யக்கூடாது. எவர் பேச்சையும் கவனமாகத்தான் கேட்கவேண்டும். அதில் என்ன சேதி இருக்கிறது என்று கண்டுகொள்ள வேண்டும் என்று,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    என்று சொல்வார். குழாயடிச் சண்டையில் நீதி, பிச்சைக்காரர்கள் பேச்செல்லாம் ஞானமொழி என்று நாம் கொள்ளத் தலைப்பட்டால், பின்னாலிருந்து,

    கல்லாதான் ஒட்பம் கழியநன்றாயினும்

    கொள்ளார் அறிவுடையார்

    என்பார் உறுதியாக!

    யோகத்தில், ஆசனங்களில் சில ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்கும். முறிவு இல்லை, மாற்று. ஒன்றினால் ஒருநிலை வரும். அதில் ஒரு விளைவு நேரும். நிலையை அப்படியே வைத்துக்கொண்டு, விளைவை மாற்றிக் கொள்ள இன்னொரு ஆசனம் உதவும். உதாரணமாக, சர்வாங்காசனத்திற்கு மத்ஸ்யாசனம் மாற்று. முந்தைய ஆசனத்தை அது முறிக்காது. மாறாக, சில அதிகங்களை (excesses) மாற்றும். இவ்விதம் குறளில் பல இடங்கள் உண்டு. அவற்றை முரண்பாடுகள் என்று கருதுபவன் அந்தோ, பெரும் பொக்கிஷத்தையே கோட்டை விடுகிறான்! வள்ளுவருக்கு வள்ளுவர்தான் அகராதி. குறள் தொடர்பாக எழும் எந்தக் கேள்விக்கும் வள்ளுவர் குறள் மூலமே விடை பகர்வார் என்பது அனுபவித்தவர்களின் முடிபு.

    இதை ஹரிகிருஷ்ணன் மூலமாகக் கேட்பது சுவாரசியமாக இருக்கிறது:

    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

    தீமை புரிந்தொழுகுவார் 915 (பிறனில் விழையாமை : 03)

     

    நம்பியவருடைய மனைவியை இச்சிக்கிறவன் பிணம் என்று கடுமையாகச் சாடுகிறார். ஆனால், தெரிந்து தெளிதல் (51:10) அதிகாரத்தில்

     

    தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

    தீரா இடும்பை தரும்

     

    என்கிறார். ஒருவனை ஆராயாமல் நம்புவதும், ஆராய்ந்து நம்பியவனை சந்தேகப்படுவதும், தீராத துன்பத்தைக் கொடுக்கும் என்கிறார். முன்னதற்குப் பின்னது முறிவா மாற்றா சொல்லுங்கள்!

     

    தேரான் தெளிவும் என்பதில் உள்ள ‘தெளிவும்’ என்ற சொல்லை, ‘தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகுவார்’ என்பதில் உள்ள தெளிந்தாரில் என்பதற்கு விளக்கமாக (definition) எடுத்துக் கொண்டால்தான்,

     

    • மனித சுபாவங்களில், தெளிந்துகொண்டவன், தெளிந்துகொள்ளப்பட்டவனை இதற்குமேல் ஐயப்பட இடமில்லை என்ற இடத்தில் வைக்கவேண்டும் என்பதும்;
    • அதே சமயத்தில், தெளியப்பட்டவன் என்பவன் மற்றொரு தனிமனிதன் (individual) என்பதால், அவனிடத்திலும் சபல வசப்படும் தன்மை மிச்சம் மீதி இருக்க இடமிருக்கிது என்பதும்;
    • தெளியப்பட்டான், தன் தோள்களின் மீதுள்ள பொறுப்பின் சுமையை உணரவேண்டும் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்கும்.  

     

    திருக்குறளைப் படிக்கும்போது, திருக்குறளுக்குத் திருக்குறளே அகராதி என்று கொண்டு, ஓரிடத்தில் பயின்று வரும் சொல்லை, வேறொரு இடத்தில் பயிலும் அதே சொல்லோடு கொண்டு கூட்டினால், அவ்வாறு எத்தனை குறட்பாக்கள் ஒன்றாகக் கொண்டுகூட்டப்படுகின்றனவோ, அத்தனையும் பொருட் செழிப்பில் கடலாகவும் அதற்கு மேலும் விரிந்துகொண்டே போவதைக் காணலாம். இதனால்தான் திரிவிக்கிரமாவதாரம் இந்தக் கள்ளனுக்கும் தப்பிய குள்ளனாக உள்ளே நுழைந்துவிட்டது போலும்!

     

    அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

    செல்வச் செவிலியால் உண்டு (76: பொருள்செயல்வகை:07)

     

    அன்பீன் (அன்பால் ஈனப்பட்ட, அன்பு ஈன்ற) குழந்தையே அருள். அது பொருள் என்னும் செல்வமாகிய செவிலித் தாயால் வளரும்! சரி, இன்னொரிடத்துக்கு வாருங்கள், அருளை ஒரு செவிலித் தாயைப் போல் போற்றிப் பாதுகாத்து, வளர்ப்பதற்கும் பொருள் தேவைப்படுகிறது; ஆகவே செய்க பொருளை என்று வலியுறுத்துகிறார் என்பது தெளிவாகிறது.  ஆனால் இன்னோரிடத்தில் சொல்வதைப் பாருங்கள்:

     

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

    கலந்தீமை யால்திரிந் தற்று (100: பண்புடைமை: 10)

     

    பாலானது, அது வைக்கப்பட்ட பாத்திரத்தில் உள்ள குறையினால் திரிந்து போவதுபோல, பண்பில்லாதவனின் செல்வம் யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்கிறார். பாலின் மேல் எந்தக் குற்றமும் இல்லை.  வைத்த பாத்திரத்தின் குற்றம் பாலைக் கெடுக்கிறது. அதுபோலவே, செல்வம் யாரிடம் போய்ச் சேர்கிறதோ, அவனுக்குள்ள பண்பின் அளவினதாகவே சமூகத்துக்குப் பயன்படுகிறது என்ற எச்சரிக்கைக் குறிப்பை வைக்கிறார். அதாவது, பொருள் சம்பாதிக்கிறாயா, சேர்க்கிறாயா, பலே பாண்டியா!  அதுதான் செய்ய வேண்டியது.  வாழ்க்கையில் முதல் அத்தியாவசியத் தேவை அது.  ஆனால் ஒன்று; பால். வைத்த பாத்திரம் சாம்பார் வைத்த பாத்திரமாக இருந்தால், பால் எப்படித் திரிந்து போகிறதோ, அப்படி, உன்னிடம் உள்ள செல்வம், நீ பண்பில்லாதவனாக இருந்தால், உனக்கே பயன்படாமல் போய்விடும் என்பதை முதலில் தெரிந்துகொள்.  நீ பண்புடையவனாக இருந்து செல்வமுடையவனாகவும் இருப்பதே, உனக்கும், சமூகத்துக்கும், நீ ஈட்டிய செல்வத்துக்கும் நல்லது என்பதைப் புரிந்துகொள் என்று பெற்ற தாயைப்போல் கனிந்து கனிந்து சொல்வார். இந்தக் காரணத்தால்தான் அவருக்கு மாதாநுபங்கி (தாயும் ஆனவன்) என்ற பெயர் உள்ளது. 

     

    அருளின்றேல், பொருளும் விகசிக்காதல்லவா?

    மேலும், குறளில் எங்கேனும் உவமை தென்பட்டால், நாம் அங்கேயே நின்றுவிட வேண்டும்! நிதானமாகிவிட வேண்டும். ஏனென்றால், பல நூல்களில் உவமை என்பது அலங்காரம். திருக்குறளிலோ அது அத்திவாரம்! நிதானமாக நின்று கவனித்தால் நமக்குப் பேருண்மைகள் புலப்படும்.

    ஒவ்வோர் உவமையும் எந்தக் காலத்திலும் புரிந்துகொள்ளக்கூடிய உவமையாக இருக்கும்.

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

    சால மிகுத்துப் பெயின்

    என்றால், இதில் உள்ள மயிற்பீலி என்றுவரை இருக்கிறதோ அன்றுவரை இதன் பொருளை உணர யாருக்கும் முயற்சியே தேவைப்படாது.  தேர், கட்டைவண்டி, மாட்டுவண்டி, குதிரை வண்டி, என்று எதையும் குறிப்பிடாமல் வெறுமனே சாகாடு என்றார்.   சகடு என்ற சொல் நீட்டல் விகாரமாக, சாகாடு என்றாகி இருக்கிறது.  ‘பீலியால் நிரப்பப்பட்ட சக்கரத்தோடு கூடிய வண்டி என்று சொல்லும்போது, சக்கரமும் புரிகிறது; சக்கரத்தை வண்டியோடு பிணிக்கும் அச்சும் புரிகிறது.  மாட்டுவண்டி போய் லாரி வந்தாலும், ட்ராக்டர் வந்தாலும், பொக்லைன் வந்தாலும், எந்த வண்டிக்கும் இந்தச் சக்கரமும், அச்சும் பொருந்திவிடும்.  நெருப்புக்குப் பிறகு, மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு சக்கரம். அது தலைமுறைகள் தாண்டிச் சுழன்றுகொண்டுதான் இருக்கும்! காலத்தையே சக்கரம் என்கிறோமே! ஆகவே, இந்த உவமை என்றில்லாமல் வள்ளுவ உவமைகள் ஒவ்வொன்றுமே எல்லாக் காலத்திலும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியவையே.  ஆனால் அறிய அறிய ஆழம் பெருகும் அதிசயத்தன்மை வாய்ந்தவை. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை , மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற இடங்களில் மட்டும், அனிச்சம் என்றால் இப்படிப்பட்ட தன்மை உடையது என்று விளக்கவேண்டி வருகிறது.  மற்ற எந்த உவமையிலும் இத்தகைய விளக்கம் தேவையே இருக்காது என்பது வள்ளுவ உவமையின் தனிச் சிறப்பு.  வேறெந்தக் கவிஞனும் சொந்தம் கொண்டாட முடியாத சிறப்பு.

    யாரையும் எதையும் ஒரு வரம்புக்கு உட்படுத்தி வகுத்துப் பார்த்து ஒரு முடிவைச் சொல்லியோ சொல்லாமலோ வைத்துக்கொள்வது நமக்கு வழக்கம். ஆனால், திருவள்ளுவரின் திருக்குறளின் பொதுமைத்தன்மை அதற்கு இடம்கொடுப்பதில்லை.

    எந்தத் தனிமனிதனும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் இருக்கிறது. அந்த நெறி பொதுவானது. ஆனால் அறம் என்று வரும்போது அது மாறுபடுகிறது. இதைச் சுருக்கமாக விளங்கிக்கொள்வோம்.

    • தனிமனிதனுக்கு ஒழுக்கம். சமுதாயத்திற்கு அறம். நல்லொழுக்கம் தீயொழுக்கம் இரண்டுக்குமே ஒழுக்கம் என்ற அடை பொருந்தும். அறத்துக்கு அது பொருந்தாது.  அறமல்லது மறம். மறம் என்ற வேறு சொல்லால்தான் அறமல்லதைக் குறிக்க முடியும். நாற்றம் என்பதைப் போல. நறுநாற்றம், துர்நாற்றம். என்பதைப் போலப் பொதுவாகப் பயன்படுத்தக் கூடியது ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது ஒழுகுவது.  தைலதாரை போலத் தொடர்ந்து நற்பண்புகளைப் பேணுவதே நல்லொழுக்கம். இடைவிடாத, சத்தமில்லாத, மென்மையான, சீரான தொடர்ச்சி!
    • தனிமனிதனுக்கு அறமும் உண்டு
    • ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுவானது. அறம், மாறுபடுவது
    • அறம் என்பது ‘Appropriateness in thought, action and attitude,’ ”எண்ணம், செயல், மனப்பாங்கு இவற்றில் கச்சிதமாக இருத்தலே அறம்,’ என்பார் என் குருநாதர். அறத்தை, சூழ்நிலை, காலம், அந்த மனிதன் வாழ்வில் இருக்கும் நிலை போன்ற பல அம்சங்கள் நிர்ணயிக்கும். கொல்லாமை அறம். ஒருவனைக் கொன்று நூறு பேரைக் காப்பதும் அறம். நூறு பேரைக் கொன்று ஒருவனைக் காப்பதும் அறம்.
    • இன்னொன்று. அஹிம்சா பரமோ தர்ம: அதாவது அஹிம்சையே தர்மங்களில் உயர்ந்தது என்னும் வாசகம் தனி மனிதனுக்குத்தான் பொருந்தும். தன்னை ஒருவன் தாக்கினால், தான் திருப்பித் தாக்குவதில்லை என்பது தனிமனித விரதமாக இருக்கலாம். அது சிறப்பும் கூட. ஆனால் அதை ஒரு சமூகமோ, நாடோ எப்படிக் கடைபிடிக்க முடியும்?
    • என்னுடைய கம்யூனிஸ்டு நண்பரொருவர் சொல்வார்: ‘ஆதிவாசிகள் எதிர்ப்பட்டவனைக் கொன்றார்கள். காட்டுமிராண்டிகள் கொன்றவர்களைத் தின்றார்கள். அதன் பிறகு வந்தவர்கள், தாங்கள் வென்றவர்களைக் கொல்லாமல் அடிமைகளாக வைத்துக்கொண்டார்கள். ஒன்றுக்கு இன்னொன்று முன்னேற்றம்தான்!’ நில்லாமல் மாறிக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளின் வெள்ள ஓட்டமான வாழ்க்கையில், இவற்றில் இதுதான் சரி என்று எதைச் சொல்வது? மானுடம், தொடர்ந்து பாடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறது.
    • மேலும், நாம் எவ்வளவோ மாறியிருந்தாலும், மாறாத சில ஆதி குணாம்சங்கள் நம் சித்தத்தின் வாசனைப் பாளங்களில் எங்கோ படிந்துதான் இருக்கின்றன.

    நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் குறள் ஒன்று கட்டாயம் நமக்குக் காத்திருக்கும். நமது நிலைக்கு அடுத்த நிலைக்கு அடுத்த நிலைக்குப் பொருத்தமான குறள் நம்மைக் குழப்பவே செய்யும்! இடைப்பட்ட நிலையில் இருந்து இன்னொரு குறள் நம்மை அன்புடன் அழைப்பதை நாம் செவியுற்றால் நம் குழப்பம் தீரும்!

    இயல்களை, வள்ளுவர் பிரிக்கவில்லை. அந்தப் பாகுபாடு பிற்பாடு வந்தது. அதுபோல், இது இல்லறத்தானுக்கு மட்டும், இது துறவிக்கு மட்டும் என்று அவர் தனித்தனியே அறம்சொல்லவில்லை, சில இடங்களைத் தவிர. தனிமனிதன் எங்கிருந்தாலும் பின்பற்ற வேண்டிய அறம், பொருளாய சமூகத்திற்குப் பொருந்துகின்ற அறம் என்று அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்.

    ஒரு நிலையை எய்திய பின்புதான் ஒரு குறள் புரியும் என்பது உண்மைதான். ஆனால், குறள் என்பது நம்மைப் படிப்படியாக உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் பயில்பவரை, குறளே அந்த நிலைகளில் கொண்டு சேர்க்கும்.

    `திருக்குறள் உறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும், விரிவும், அழகும்…` என்று பாரதி திருக்குறளின் மேன்மையைச் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கிறான்.

    சத்தியத்தில் உள்ள நம்பிக்கையால் உறுதி

    தர்மத்தில் நிலைப்பதால் தெளிவு.

    பிறர்நலம் கருதிப் பேசுவதால் ஆழம்.

    அனைவரையும் மனதில் கொண்டு பேசுவதால் விரிவு.

    இவை யாவும் கலந்து தமிழில் வந்ததால் அழகு!

    சத்தியம் என்பது இடம், காலம் இவற்றைத் தாண்டி ஒளிர்வது. சந்திக்காத, ஒருவரை ஒருவர் அறிந்திராத மனிதர்களின் மனங்களில் ஒரேவிதமாக சாந்நித்தியம் கொள்வது

    சத்தியம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதைச் சொல்லிலும் கொண்டுவந்து, பிறர் வாழ்க்கை பயனடையும்படிச் செய்பவர்களே ஞானியர், யோகியர், மஹா கவிகள். வேத ரிஷிகளும், திருவள்ளுவரும், தொல்காப்பியரும் ஒரேபோல்தான் எனக்குத் தென்படுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் ஒன்றேபோல் இருப்பதில் ஏது வியப்பு?

    பாரத நாட்டில், சூத்திரங்களும் நெடுங்கவிதைகளும் பல மொழிகளிலும் உள்ளன. குறட்பா என்னும் வடிவமும் அவ்விதமே. மேலை நாடுகளிலும் இப்படிச் சில உதாரணங்களைக் காட்ட முடியும்

    ஆனால், பாரதி சொல்லும் `திருக்குறள்  உறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும், விரிவும், அழகும்` இன்னொரு நூலில் காண்பதரிது. சூத்திரமாகவும் இல்லாமல், செய்யுளாகவும் நீளாமல் உள்ள ஒரு வடிவத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வள்ளுவர், எந்த மனிதனுக்கும் பொருந்தக் கூடிய நீதி, நியதி இவற்றைச் சொல்லியிருப்பதுதான் திருக்குறளை வேறெந்த நூலோடும் ஒப்பிட முடியாத ஒரு பெருநிலையில் வைத்திருக்கிறது என்று தோன்றுகிறது.

    பாரதத்தின் ஒற்றுமைக்கு பூகோள அமைப்போ அரசியலோ காரணமல்ல, இமயம் முதல் குமரி வரை ஒன்றாய் விளங்கிவரும் பண்பாடே காரணம். இது, மாநிலத்துக்கு மாநிலம், பழக்க வழக்கங்களில் பலவாக வேறுபட்டாலும், இதன் அடிநாதமான ஆன்மிகம்தான் ஒற்றுமைக்குக் காரணம். இதுதான் பற்பல நாடுகளாய்க் கிடந்த பாரதத்தில், ஒருவர்க்கொருவர் அரசர்கள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும், மக்களை இமயத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு யாத்திரை மேற்கொள்ள வைத்தது.

    இறை என்னும் மகாசக்தியே எல்லாவற்றுக்கும் தலைமையானது. மனித மனம் அதற்கு வடிவங்கள், ஏன் குணங்களையும் கூடக் கொடுத்து அழகு பார்த்தது. இந்த இறை நம்பிக்கை, இருவினை, இம்மை-மறுமை-வீடு, வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், அறம் — இவை பாரதம் முழுதும் பரவலாய்ப் பின்பற்றப்பட்டு வந்தன. பல இடைஞ்சல்களை எதிர்கொண்டன. நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மாமனிதர்கள் தோன்றி வாழ்ந்து காட்டி, வழி சொல்லி, வாசகங்களை விட்டுச் சென்றார்கள். அந்த வாசகங்களில் பொதுமை வாய்ந்தவை காலம் தாண்டித் தொடர்கின்றன.

    அவற்றுள், திருக்குறள், அதன் தன்மையால், எந்த விதமான விவாதமும் இன்றித் தலைமையிடம் வகிக்கிறது. இதை, பாரதி ஏற்கெனவே துல்லியமாகச் சொல்லியாயிற்று. இன்னும் விரிவாக அதன் சிறப்பைப் பற்றி ஏதேனும் சொல்லவேண்டுமானால், இவற்றைச் சொல்லலாம்:

    1. பொதுமை : ஆண்-பெண், இல்லறத்தார்-துறவியர், ஏழை-செல்வர், கற்றோர்-கல்லாதோர், குடிமக்கள்-அரசு, இளைஞர்-முதியோர் போன்ற அனைத்து விதமான மனிதர்களுக்குத் திருக்குறள் பொருந்தும்; தேவையும் கூட!
    2. உலகளாவியது : அதேபோல் எந்த நாட்டினருக்கும் திருக்குறள் வாழ்க்கைக்கான கையேடாக அமையும். மனித மனம், உலக நடப்பு இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த நூல் வடிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இது உலகப் பொதுமறை.
    3. மதத்தை வலியுறுத்தாத அறநூல் : சமயநூல், அல்லது பக்திநூல் என்பன கொள்ளத்தக்கவை என்பதில் ஐயம் வேண்டாம். தொடக்கத்தில், ஒழுக்கமும், ஒழுக்கம் சார்ந்த நியதிகளுமே சமயத்திற்கு அடிப்படைகளாக இருந்தன. சமுதாயத்தின் கட்டுக்கோப்பிற்கும், நாகரிகத்திற்கும் தேவையாகின. ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் காணப்படும் பக்தி, பாறையை இளக்கிப் பசுவெண்ணெய் ஆக்கவல்லது. அவற்றில் காணப்படும் தமிழ், உருக்கிய பொன்னும் தேனும் சேர்ந்து ஓடுவது. கம்பனின் ராமாயணம் இலக்கியச்சுவை மண்டிக் கிடக்கும் காவியம் என்றாலும், அதன் கதாநாயகன் கடவுளே. இவை யாவையுமே அறத்தை வலியுறுத்துவனதான். ஆனாலும், பக்தி என்ற தளத்தில் நில்லாமல், தனிப்பட்ட கடவுளைக் குறிக்காமல், அறத்தையே வலியுறுத்தி, அதே நேரத்தில், கடவுளின் தலைமையை ஆணித்தரமாகப் பேசும் அதிசய நூல் திருக்குறள். இதை secular ’மதச்சார்பற்ற’ என்று சொல்வது பொருந்தாது. இதை universal ’உலகளாவிய’ என்றே கூறவேண்டும்.

     

    திருவள்ளுவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாமற் போனாலும், அவருடைய நூல் மூலம் அவர் பாரத நாட்டின் சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்தான் என்பதைப் பொதுவில் சொல்லத் தயங்குவானேன்? தமிழகத்தில் நிலவிவரும் போலி நாத்திகம் ஒருபுறம்; அறிவுஜீவி என்றால் இந்தியாவின் அடிப்படை சமயக் கொள்கைகளைத் தாக்கிப் பேசுவதே என்று நிறுவிவிட்ட தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் ஒருபுறம். உண்மையில் நாட்டமுள்ளவன், தனது நாட்டின் வரலாற்றை அறிந்து அதன்மீது பக்தி கொண்டவன், தான் இந்த நாட்டில் பிறந்ததே பெருமைக்குரியது என்று நினைப்பவன், இவற்றைப் பொருட்படுத்த மாட்டான். திருவள்ளுவர் தெய்வ நம்பிக்கை உடையவர், அறவழி நடக்க வழங்கப்பட்ட வாய்ப்பே வாழ்க்கை என்று கருதியவர், அதற்கேற்பவே முன்னோர்கள் நியதிகளை வழிவகுத்து வைத்திருந்தார்கள் என்று நம்பியவர் என்பதைக் கண்கூடாக, எளிதாகக் காணலாம். அப்படி இல்லை என்று நிறுவத்தான் விபரீதமான விளக்கங்கள் தேவைப்படுகின்றன1

    1. தர்க்கம் : நூல் முழுதும் படிப்படியான நிலைகளும், அவற்றுக்கேற்பவே மாறுபடுவது போலத் தோற்றமளிக்கக்கூடிய வேறுவேறு விதமான அறிவுரைகளும் உள்ளன. இதைப் புரிந்துகொள்ளாமல்தான் திருக்குறளில் முரண்பாடுகள் மண்டிக் கிடக்கின்றன என்று பேசுவார்கள். இப்படியேதான் பகவத் கீதையையும் விமர்சித்து, கண்ணன் என்பவன் முரண்பாடுகளின் வடிவம் என்றெல்லாம் ‘அறிவார்ந்த’ முடிவுகளுக்கு வந்தார்கள் சிலர். ஒரே நீதியை, பலவிதமான  மன, அறிவு நிலைகளில் உள்ள மனிதர்களுக்கு, ஒரே விதமாகச் சொல்லிவிட முடியாது. அதேபோல், ஒரு நிலையிலிருந்து ஒருவனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்போது, அதே நீதியை முன்பு சொன்ன விதமாகவே எப்படிச் சொல்ல முடியும்? சற்றே திறந்த மனத்துடன், ஒரு பெரியவரை அணுக வேண்டிய மரியாதையுடன் இந்த நூலில் நுழைந்தால் குறளுக்குக் குறளே அகராதி என்பது புலனாகும். அசைக்க முடியாத தர்க்கம் இந்த நூலின் ஆதார சுருதியாக இழையோடிக்கொண்டிருக்கிறது என்பது புரியும்.

     

    நாம் உயர உயர, திருவள்ளுவர் உயர்ந்துகொண்டே போகிறார். நாம் இறங்க இறங்க, திருக்குறளின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது. நம் சித்தம் விரிய விரிய, குறளின் பொருளின் வீச்சும் விரிந்துகொண்டே போகிறது. எனவே, நீரில் மீனைப் போலே, வானில் பறவையைப் போலே நாம் என்றும் திருக்குறளில் திளைக்கலாம்; ஆனால், ஒருபோதும் அதை அளந்துவிட முடியாது. ஈரடியால் உலக வாழ்க்கை முழுவதையும் காலந்தாண்டி அளந்தவனை நம்மால் எப்படி அளக்க முடியும்? `வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து,` என்றானே பாரதி, இந்த உலகினுக்கே தந்து என்ற சிறப்பை வேறெந்தத் தமிழ்க்கவிஞனுக்கும் நாம் பொருத்த முடியாது. ஏன், திருவள்ளுவரை நாம் கவிஞர் என்ற சிமிழுக்குள்ளும் அடைக்க முடியாது.

    `தெய்வமாக்கவிகள் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்,` என்பார் ரஸ்கின். எங்கே? `உங்கள் வீட்டில், புத்தகங்களின் வடிவில்,` என்பார்! அப்படித்தான் வள்ளுவர் தனது வாக்கான குறள் மூலம் நம்மோடு பேசக் காத்துக்கொண்டிருக்கிறார்!  ஒரு முன்னுரைக்கு இவ்வளவு போதும்!

    வாருங்கள்! திருக்குறள் என்னும் தெவிட்டாத அமிழ்தம் பருகுவோம்!

    அனைவர்க்கு மான அறம்சொன்ன தெய்வ

    மனிதர்க்கே என்றன் மனம்!

     தொடருவோம்

    Share
  • காலகாலன்

    இசைக்கவி ரமணன்

     

    Share
  • ஆரத்தி ஏந்துக (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    பி.கு. திருமிகு இசைக்கவி ரமணன் அவர்கள் தற்பொழுது இமயமலை ஜாகேசுவரத்தில் இருப்பதால், நம்முடைய வேண்டுகோளுக்கிரங்கி மிகுந்த சிரமத்திற்கிடையில் பாடல் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார். அவருக்கு வல்லமையின் மனம் நிறைந்த நன்றிகள்.  அன்னையின் அருள் எங்கும் பூரணமாக நிறைந்திருக்க பிரார்த்தனைகள்!

     

    Share
  • சக்கரைக் கட்டி (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    சக்கரைக் கட்டி சந்தனக் குப்பி

    சந்நிதி எடுத்துக் கொண்டாளாம்
    சங்கரி சுந்தரி சாம்பவி பைரவி
    சாந்தமாக வந்தாளாம்
    சலங்கை குலுங்க சரிகைச் சட்டை
    சரசரக்க வந்தாளாம்
    தடையை உடைத்து, தவிக்கும் பிள்ளையைத்
    தழுவிக்கொள்ள வந்தாளாம்!

    தானே தன்னில் நிறைந்தவளாம்
    தன்னைத்தானே புனைந்தாளாம்
    வானே காணா வடிவழகை
    தானே அளைந்து அணிந்தாளாம்!

    அரற்றி புரண்டு அழுத பிள்ளையை
    ஆரத்தி எடுக்க விட்டாளாம்
    அகமும் புறமும் அறிந்தறியா
    தவனை மெல்லத் தொட்டாளாம்!

    தலையைப் பதித்த காலிலே, வெள்ளி
    நகத்தைக் காட்டிவிட்டாளாம்!
    தட்டுகிட்டுப் போன பிள்ளை வாயில்
    தானே ஊட்டி விட்டாளாம்!                     (தானே)

    சிரிக்கும் சிறுமி சிந்தையில் புகுந்து
    தித்திக்கத் தித்திக்கப் பேசுகிறாள்
    நரைத்த கிழவி அக்கறயோடு
    நடந்துவந்து பேசுகிறாள்

    இருந்த இடத்தில் இருந்துகொண்டு
    என்னென்ன வித்தை காட்டுகிறாள்! எங்கோ
    இருந்தவனை இங்கே அழைத்து
    எப்படி மயக்கி ஆளுகிறாள்!
                                                                            (தானே)

    Share
  • அழகு தாங்க முடியவில்லை (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    அழகு தாங்க முடியவில்லை
    அபலை தவிக்கிறேன், உன்
    அன்பு தாங்க முடியவில்லை
    அடிமை துடிக்கிறேன்
    பழகத் தெரியவில்லை அம்மா
    பாடு படுகிறேன், நான்
    பாமரன் நீ பராசக்தி
    பரிதவிக்கிறேன்.    (அழகு)

    விழலுக்கிறைத்த நீரைப்போலimages (1)
    விழிகள் அழுதன, காற்றில்
    விழுதுகள்போல் ஊசலாடிக்
    கைகள் தொழுதன
    அழுத கண்ணில் அமிழ்தமாக
    நீ எழுந்தனை, என்னை
    அழைத்துவந்து பிள்ளை என்று
    தழுவிக் கொண்டனை (அழகு)

    என்னசெய்தும் எந்தன் துன்பம்
    விலகவில்லையே! இந்த
    ஏழை வார்த்தை அம்பலத்தில்
    ஏறவில்லையே!
    முன்னம் செய்த வினையின் கோலம்
    முடியவில்லையே! நான்
    முட்டி மோதிப் பார்த்தும் இருள்
    விடியவில்லையே!

    அன்னை உந்தன் கண்ணில் கருணை
    ஊறிவிட்டதே! விழி
    அசைவில் எந்தன் விதியும் மதியும்
    மாறிவிட்டதே!
    புன்மை யாவும் ஒருகணத்தில்
    புனிதமானதே! இந்த
    புஷ்டி தேவி சந்நிதியில்
    பொழுது புலர்ந்ததே! (அழகு)

    Share