திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (12)
இசைக்கவி ரமணன்
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார் (10)
கடவுளின் திருவடியை அடைந்தவரால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது.
யார் இறைவனடியைச் சேர்கிறார்களோ அவர்களே பிறவியாகிய பெருங்கடலைத் தாண்டுகிறார்கள். அறம், பொருள், இன்பம் என்னும் கடல்களைக் காட்டிலும் விரிந்ததும் மருட்சி தருவதுமானது பிறவி என்னும் பெருங்கடல். அதனால்தான் அதனை சம்சார சாகரம் என்கிறோம்; பவக்கடல் என்கிறோம்; ஏன், கவலைக் கடல் என்றுகூடச் சொல்கிறோம்.
இந்தக் கொடுங்கடலை எப்படிக் கடப்பது? முயற்சியின்றி மூழ்கிப் போவதா? மணலைத் தூவித் தூர்க்க முனைவதா? கரை எங்கோ அதுவரை பாலம் கட்டப் புறப்படுவதா?
கடலைத் தாண்டப் பாலம் எதற்கு, படகே போதாதா?
ஆம், அந்தப் படகுதான் இறைவனின் தாள்கள்; இறைவனின் திருநாமம்.
கடவுளின் தாளைப் பணிவதால் மட்டுமே அதைக் கடக்கமுடியும், மீண்டும் பிறவாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறார் வள்ளுவர். இல்லையெனில், மறுபடி மறுபடிப் பிறவிக் கடலில் அழுந்தும் துயரே தொடரும் என்பது முடிவு. ஆயின், வினை, அதன் விளைவாகிய பிறப்பு, முற்பிறவி இவை உண்டு என்றுதான் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
`என்பால் சித்தத்தை வைத்தோரை, விரைவில் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கிறேன்,` என்கிறான் கண்ணன். (கீதை:12:07)
இறைவனைப் பணிதலே துவக்கமும், முடிவும், ஒவ்வொரு மனிதனின் பணியும் என்பதை மிக உறுதியாகவும் அன்போடும் கருணையோடும் எடுத்துச் சொல்கிறார்.
இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்றார். நீந்துவர் என்னும் சொல் தனியே நிற்பதுபோல் தோன்றுகிறதல்லவா? இங்கே உவமை சொல்லப்படவில்லை. ஒன்றைச் சொல்லி, இன்னொன்று சொல்லாமல் சொல்லப் படுகிறது. இதை இசையெச்சம் எனலாம். இது ஏகதேச உருவகம் அல்லது ஏகாங்க உருவகம் எனப்படும்.
இன்னொரு சிறப்பையும் காண்போம்:
இந்தப் பத்துக் குறள்களில், அனைத்துக்கும் ஆண்டவனே முதல் என்பதை முதலிலேயே முடிவாகச் சொல்லிவிடுகிறார். அவனுடைய புகழைப் பாடுவதே இருவினைகளில் இருந்து மீளும் வழி என்பதை ஓரிடத்தில் சொல்கிறார். ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார் என்று ஓரிடத்தில் கூறுகிறார். ஆக, எவன் அனைத்துக்கும் துவக்கமோ அவன் புகழைப் பாடுவதும், அவனை அடைய விதிக்கப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பதுமே வேலை என்கிறார்.
இஃதல்லாமல், பத்து குறள்களில் ஏழு குறள்கள் இறைவனுடைய தாள்களைப் பணியச் சொல்கின்றன:
- வாலறிவன் நற்றாள்
- மலர்மிசை ஏகினான் மாண் அடி
- வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
- தன்க்குவமை இல்லாதான் தாள்
- அறவாழி அந்தணன் தாள்
- எண்குணத்தான் தாள்
- இறைவன் அடி
தாளைப் பணியவே தலை. தாளில் ஆளில்லை. அதில் தலைவைத்துத்தான் நமது அடையாளங்கள் யாவும் தீர்ந்து நாம் ஆளாவோம்! அவனுக்கே ஆளாவோம்! தாளில், புகலிடம் என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லை. முக பாவனை இல்லை. கைகளும் ஆயுதங்களும் இல்லை. வாழ்வில் தள்ளாடி வரும் நம்மை ஒருபோதும் தள்ளாது தாள்!
இறையருளே இணையடி!
அவனே அனைத்தும் என்பதால், அவனைப் பணிதலே அனைத்துக்கும் வழி என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
தொடருவோம்