பாயிரவியல்

 

 

இசைக்கவி ரமணன்

 (தொடர் சொற்பொழிவுகள்)

 kural

வாழ்த்து

 

கவலைக் கடலைக் கடியும் கனலாய்

கவிதை சொன்னவன் பாரதி

காதும் காதும் வைத்தாற் போலக்

காவியம் செய்தவன் கம்பன்

திவலைக் குள்ளே கடலைக் காட்டிய

தெய்வப் புலவர் வள்ளுவர்

திரிகோணத்தின் நடுமுற்றத்தே

தேனகலாய்த் தமிழ் வளரும்!

 

ஒருவா னத்திற் கொருகதிர் போதும்

உலகில் உயிர்கள் வாழும்

ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்

உயிரே ஒளிமய மாகும்

திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்

திசையை விழியறியாது

வருவதைச் சென்றதை வந்ததை அவர்போல்

வகுத்தவரே கிடையாது!

 

அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்

அவர்கரம் பற்றி நடப்போம்

அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய

ஒளியில் அனைத்தும் கடப்போம்

இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச

இங்கொரு முடிவைப் படைப்போம்

இன்பம் துன்பம் என்று மயக்கும்

இடர்களைத் தெருவில் உடைப்போம்!

 

வாழ்வின் எந்தத் தருணத்திற்கும்

வள்ளுவர் வாக்கு பொருந்தும்

வாசலில் சூரியன் அறையில் தென்றல்

வளரும் கொல்லையில் நிலவு

தாழ்வில் லாமல் ஏழ்மையைத் தழுவும்

தகைமையை வள்ளுவம் காட்டும்

தருக்கில் லாமல் தலையை நிமிர்த்தி

நடக்கும் மாண்பை ஊட்டும்!

 

உலகில் எவர்க்கும் ஒருவழி காட்ட

நிலவும் கதிரே குறள்

ஊழ்வினை தாண்டி உயிரமு தாகிடும்

வாழ்வின் வழியே குறள்

வலமும் இடமும் நலமே இசைத்துத்

துலங்கும் துணையே குறள்

வானும் புவியும் கலந்து விளைந்திடும்

தேனின் மொழியே குறள்!

 

வளர்ந்திட வளர்ந்திட வானைப் போலே

வளரும் வள்ளுவரே!

வாசற் திண்ணையில் வார்த்தைகள் சொல்லி

வாழ்த்தும் அதிசயமே!

தளர்ந்திடும் நெஞ்சில் கனலாய் விசைக்கும்

தமிழெனும் தெள்ளமுதே!

தனிமையில் மனதினை முனிவ னாக்கிடும்

தாழ்வாரக் காற்றே!

 

குறளே! வானின் குரலே! மண்ணில்

குடிலே! தாய்மடியே!

கோடுகள் நீக்கிப் பாடு களைந்திடும்

கோட்பாட்டின் நிதியே!

துறவே திறமை நிறைவே தனிமை

இயல்பே தவமென்று

தொட்டுக் காட்டித் தொடரும் உயிரின்

துணையே! துல்லியமே!

 

ஏழுலகங்களும் வாழும் வரைக்கும்

எழுசீர் எழில் தொடரும்

எல்லாம் சொல்லிய பின்னும் வள்ளுவர்

இளநகை ஒளிபடரும்

வாழப் பிறந்த வாசகம், அறத்தில்

வாழ்ந்தே புரிவது வள்ளுவம்

வான்மறை தந்த நான்முகனை நாம்

வாழ்ந்து காட்டியே வணங்குவோம்!

 

 

நெஞ்சார்ந்த நன்றி…

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சென்னைத் தலைவர் திரு. எம். முரளி. அவரை என் நண்பர், நலம்விரும்பி என்றெல்லாம் சொல்வதைவிட, அவர் என் சகோதரர் என்பதே உண்மையானது. ஆம், பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன். முரளியால், பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது!!

நாள்தோறும் பலப்பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி, மக்கள் பலவிதமான வழிகளில், நம் திருநாட்டின் ஆதாரமான அறத்தின் அழகை அறியும்படிச் செய்யவேண்டும் என்பதே அவருடைய இடைவிடாத அவா. பூசை, பாராயணங்களிலிருந்து தொடங்கி, இசைக் கச்சேரிகள், இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள், கூட்டுப் பிரார்த்தனைகள், நாடகங்கள், சுய முன்னேற்றப் பட்டறைகள் என்று கணக்கற்ற முறையில் நல்ல கருத்துகளைப் பரப்பி வருபவர். பாரத நாட்டுப் பண்பாட்டிலும், அதன் மையமாம் அறத்திலும் அவருக்கு இருக்கும் பக்தியும், அக்கறையும் போற்றுதலுக்குரியன. அவரும், விருந்தோம்பல், எளிமை இவற்றுக்கு உதாரணமாகத் திகழும் அவர்களுடைய குடும்பத்தாரும் நெடுங்காலம் இனிது வாழ்க!

ஒருநாள் முரளி அவருக்கே உரித்தான சத்தமில்லாத கீழ்க்குரலில், ‘நீங்கள் வாரந்தோறும் திருக்குறளைப் பற்றிப் பேசுங்களேன்,’ என்றார். எனக்கு திருக்குறளில் நுனிப்புல் பரிச்சயமும், மரியாதையும் உண்டேயொழிய, அதிலே ஆழங்கால் பட்ட அறிவு கிடையாது (என் தந்தையார் இருந்திருந்தால் பின்னாலிருந்து ‘அதிலும்’ என்று கிண்டலடித்திருப்பார்!) என்றேன். “அதனால் என்ன, படியுங்களேன்!” என்றார் இயல்பாக. உடனே சரி என்றேன். ஏன்? இதைவிடத் திருக்குறளை ஒழுங்காகப் படிக்க வாய்ப்பு ஏது? அதைவிடவும் நம் அகத்தைக் கழுவிக்கொண்டு உய்ய வழியேது?

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், சென்னை தி.நகரிலுள்ள, கிருஷ்ண கான சபாவிலுள்ள மிக அழகான காமகோடி அரங்கில் சொற்பொழிவு நடக்க ஏற்பாடானது. செப்டம்பர் 27, 2011 அன்று, முரளியின் முன்னிலையில் இயக்குநர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்கள் முதல் சொற்பொழிவைத் தொடங்கிவைத்து வாழ்த்தினார். வாரம் ஓர் அதிகாரம் என்னும் வரம்புக்கு உட்பட என்னால் இயலாது என்பதை உடனேயே முரளிக்குத் தெரிவித்துவிட்டேன். எதற்குத்தான் அவர் ஒத்துக்கொள்ளவில்லை?! ஒவ்வொரு சொற்பொழிவும் சரியாக மாலை 6.30க்குத் தொடங்கி 8.00 மணிக்கு முடியும். முதல்நாள் முன்னுரைக்கே சரியாய்ப்போனது. கடவுள் வாழ்த்து நான்கு செவ்வாய்க் கிழமைகளை விழுங்கியது. வான் சிறப்பில் நுழையும்போது, முரளிக்கு ஒரு மின்னல். ஒவ்வோர் அதிகாரம் முடிந்து அடுத்த அதிகாரம் துவங்கும்போது, முந்தைய அதிகாரத்தைப் பற்றிப் பேசிய பேச்சை அச்சடித்து வழங்கலாமே என்பது அவருடைய எண்ணம். காற்றோடு போய்விடக் கூடாது என்பதற்காகவும், முறையாகத் தயார்செய்து கொள்ளாமல் பேசுதல் எனக்கு ஒத்துவராது என்பதாலும், நான் விரிவாகவே குறிப்புகள் தட்டச்சு செய்துகொள்வேன் என்பதை நான் முரளிக்குச் சொன்னது அவருக்கு இந்த யோசனையைத் தோற்றுவித்திருக்கக் கூடும்.

முரளி எனக்களித்த இந்த அரிய வாய்ப்பு, என் அகவாழ்வின் அந்தரங்கப் பயணத்தில் ஒரு திருப்பு முனையாய் அமைந்துவிட்டது. அதில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு நான் நன்றி சொல்லி முடித்துவிட முடியாது. என்றாலும், இருகரம் கூப்பி வணங்கி நெகிழ்வதல்லால் என்னால் வேறென்ன செய்ய முடியும்?

என் பள்ளி நாட்களிலிருந்து, என்னை முன்னிறுத்தி அதில் இன்பம் காணும் அதிசய நண்பன் ஹரிகிருஷ்ணன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இன்று பெரிதும் மதிக்கப்படும் அறிஞன். நான் வியந்து போற்றுகின்ற கவிஞன். அவன் கற்றதில் நூற்றில் ஒருபங்கே கற்றவர்களை ஊர், அறிஞர்கள் என்று கொண்டாடுகிறது. இவனோ, பெங்களூரில், தனது நோயாளும் உடலிலே நூலாடும் உயிரை முருகனிடம் ஒப்புவித்துவிட்டு, தமிழில் தோய்ந்திருப்பதே தவமாக, உற்சாகமாக, எளியார்க்கும் எளியனாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். நான் திருக்குறளைப் பற்றிப் பேசப்போகிறேன் என்றதும் அவனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. குறளை எப்படிப் படிப்பது, உரைவேற்றுமைகளை எப்படிப் புரிந்துகொள்வது, குறளின் பொருளோடு அறிவியல் தகவல்கள், நடப்பியல்கள் இவற்றை எப்படித் தொடர்புபடுத்துவது போன்ற பலப்பல நுணுக்கங்களை, தினந்தோறும் தொலைபேசியில் சொல்வான். என் சொற்பொழிவின் ஒலிப்பதிவை அவனுக்கு அனுப்பிவைப்பேன். அதை முழுவதுமாகக் கேட்டு, அதிலுள்ள பிழைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவான். எங்கள் ஆசிரியர் ‘நாகநந்தி’ என்ற புனைபெயர் கொண்ட அமரர் திரு. தி. வேணுகோபால் அவர்களின் திருக்குறள் சொற்பொழிவின் ஒலிப்பதிவுகளை அவ்வப்போது அனுப்பிவைத்துக் கேட்குமாறு செய்வான். எங்கிருந்தோ வந்தான்..நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய் நின்றான்.

அவனுக்கே இன்று நூலாகிவிட்ட இந்தச் சொற்பொழிவுக் குறிப்புகளை அர்ப்பணிக்கிறேன், சின்ன மலர்களாய். அவன் மூலம், எங்கள் ஆசிரியர் திரு. தி. வேணுகோபால் அவர்களின் திருவடிகளுக்கும் இது வணக்கமாக அமையும்.

என் இனிய முரளியும் அவருடைய மிகவினிய குடும்பத்தாரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ, இறைவனை இதயத்தின் அடித்தளத்திலிருந்து பிரார்த்திக்கிறேன்.

வாரம் தோறும் தவறாமல் வந்து கேட்பவர்களில் என் நண்பர்களும் உண்டு. முன்பின் தெரியாதவர்களும் உண்டு. ஆழ்ந்து கேட்டுக் குறிப்பெடுப்பாருமுண்டு. பாராட்டுவோர், கருத்துச் சொல்வோர், பிழைகளைச் சுட்டிக் காட்டுவோர் அனைவரும் உண்டு. அவர்கள் எனக்குக் காட்டிவரும் ஆதரவு மறக்க முடியாதது. மகத்தானது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த நூல் அரங்கேறும் முன் இதை என் நெடுநாள் நண்பரான, என் சக பயணியான, சின்மயா மிஷனின் துறவி தவத்திரு சிவயோகானந்தா அவர்களுக்கும், கனடாவில் வாழும் தமிழில் தன்னிதயத்தைப் பறிகொடுத்த, நான் செல்வா என்று உரிமையோடு அழைக்கும் திரு. சி.ஆர். செல்வக்குமார் அவர்களுக்கும் அனுப்பிவைத்தேன். பொறுமையுடன் படித்து, அவர்களுடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அவற்றுள் எனக்குப் புரிந்ததையும், ஏற்புடையனவாய் இருந்ததையும் இயன்ற அளவுக்கு எடுத்துக்கொண்டேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

என்னுடைய உரைக்குறிப்புகளை வரிசையாக நூல்களாக வெளியிட வேண்டும் என்பது திரு. முரளியின் அவா. அது வல்லமை மூலம் இணைய தளத்தடத்தில் பதிகிறது மகிழ்ச்சிக்குரியதே. அண்மையில் ஈரோடு சென்றிருந்தபோது பவளசங்கரியைச் சந்தித்தேன். அதாவது, அவர்கள் வீட்டில் வயிறார உண்டேன். அவரும், அவர்தம் கணவரும் தங்கள் அன்பால் என்னை நெகிழச் செய்து, ரயிலடிக்கு என் பொருட்களைச் சுமந்து வந்தார்கள். காத்திருந்தபோது, வல்லமையில் நான் பங்குகொண்டு நாட்களாயின என்ற பேச்சு வந்தது. நான் அனுப்பிய எழுத்துக்களையெல்லாம் துறைவாரியாகப் பிரித்து வெளியிட்டுப் பத்திரப்படுத்தி வரும் பவளாவுக்கு ஒரு சிறப்புப் பரிசாக இந்தக் குறிப்புகள் அமையும் என்று நம்புகின்றேன். எது எப்படி நிறைவேறுவதும் பராசக்தியின் அருள்.

நான் திருக்குறள் என்னும் நூலின் கடை மாணாக்கன். கற்றோர் அவையில், குறளைச் சத்தமாகப் படிக்கிறேன்; அதைப்பற்றிச் சத்தமாகவே சிந்திக்கிறேன். அவ்வளவுதான்.

இசைக்கவி ரமணன்


 

முன்னுரை

 

வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து

வான்புகழ் கொண்டதமிழ் நாடு.

                          — பாரதியார்

ரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்த்தாயிற்று. நாடு முழுதும் சிலைகள் நட்டுவைத்தாயிற்று. இன்னும் இவர் யார்? இவர் பெயர் என்ன? இவர் எங்கே பிறந்தார்? என்ன செய்தார்? எப்போது மறைந்தார்? இந்தக் கேள்விகளும் ஓயவில்லை. இவற்றில் ஒன்றுக்கேனும் ஆதாரபூர்வமான விடை கிடைக்கவும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் என்பது கூட குத்துமதிப்புதான். இவருடைய காலம் என்பது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று சிலரும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று சிலரும் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் அது அறிவியல், தொழில்நுட்பம் வளராத காலம். அன்று எது தமிழகமாக இருந்தது என்பது தெரியாது. இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து அன்றைய காலத்தைப் பார்க்கும்போது அது அறிவு சுருங்கிய காலம் என்று கருத இடமுண்டு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு தமிழ் நூல், 2000 ஆண்டுகளைக் கடந்தும் பொருத்தமாகவும் தேவையாகவும் இருக்கிறதே என்பதை வியக்காமல் இருக்க முடியுமா?

சரி, 1330 குறட்பாக்களை எழுதியிருக்கிறாரே, அவற்றுள் கிடைக்கும் சில துப்புகளை வைத்துக்கொண்டு இவரை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். ஊஹூம்!

 • ஏதாவதொரு மலை, ஆறு, அரசன் பெயர் வருகிறதா என்றால் இல்லை. (இமயம், மேரு, விந்தியம், என்று இலக்கியங்களில் வழங்கி வரும் மலைப் பெயர்கள்; கங்கை, காவேரி என்பன போன்ற ஆற்றுப் பெயர்கள் எதுவுமே இல்லை. நாம் காண்பதெல்லாம் ஆறு, நதி, மலை, குன்று, வேந்தன், இறைவன் என்பன போன்ற பொதுப்பெயர்கள் மட்டுமே.)
 • உவமைகளிலாவது, பாரியைப்போல், பாண்டியனைப்போல் என்பதாக ஏதேனும் இருந்தால் காலத்தை ஓரளவு நிர்ணயம் செய்துகொள்வோம் என்றால் ஒன்றுமே இல்லை.
 • சிவயோகி, சமணர், என்று பலரும் பலவிதமாக இவரைச் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறார்கள். எந்தக் குறிப்பிட்ட கடவுளையும் இவர் குறிப்பிடவில்லை. எந்த மதத்தையும் பிரத்யேகமாக அடையாளம் காட்டவுமில்லை. தவறிப்போய் விழுந்திருப்பது, மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (61:மடியின்மை:10) சோம்பல் இல்லாத அரசன், தன் அடிகளால் இறைவன் உலகளந்த நிலப்பரப்பு யாவையும் ஒருசேர அடைவான். தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்  தாமரைக் கண்ணான் உலகு (தாம் விரும்பும் பெண்களின் மென்மையான தோளில் துயிலும் துயிலினும் இன்பந் தருமோ தாமரைக் கண்ணான் உலகு?) என்பது வைகுந்தத்தைக் குறிக்கிறது என்றீர்களானால் அதற்கு எதிர்விளக்கம் வைத்திருக்கிறார்கள் சமணர்கள். ஆனால், ஹரிகிருஷ்ணன் சொல்வதுபோல், `இந்தக் கள்ளனுக்குத் தப்பியவன் அந்தக் குள்ளன்,` என்று சொல்லலாம். திரிவிக்கிரமாவதாரம் மட்டுமே அசைக்க முடியாத ஆதாரமாக விளங்குகிறது. திரு என்பது திருமகளைக் குறிக்கிறது என்றால் அதற்கும் சமணர்களிடம் சமாதானம் இருக்கிறது. முகடி, தவ்வை என்ற மூதேவியின் அடையாளங்களை மட்டுமே தப்பாமல் காண முடிகிறது. ஆனால், இவை அன்றைய சமூகத்தில் புழக்கத்தில் இருந்த பொதுப்பெயர்கள் – அடியளந்தான் என்பதைத் தவிர  — என்பதால் உறுதியான அடையாளம் என்று அடித்துச் சொல்ல முடியவில்லை.
 • ஆயினும், உள்ளே ஆன்மிகம், வெளியே அறவாழ்க்கை என்னும் பழைய பாரதப் பண்பாட்டில் ஊறித் திளைத்தவர் வள்ளுவர் என்று கொள்வதற்கு, நுணுக்கமான ஆராய்ச்சிகள் தேவைப்படவில்லை என்பது என் கருத்து. திறந்த மனதோடு பார்க்குங்கால், இந்துமதம் என்று இப்போது குறிக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும், ஏன், பிளவுபட்டும் இருக்கும் அமைப்பின் தோற்றுவாயான சனாதன தர்மமே வள்ளுவரின் கோட்பாடு என்பது என் கருத்து. ஏனென்றால், அது அறிவு, ஆராய்ச்சி இவற்றைச் சார்ந்தது; அடுத்தவர் நம்பிக்கையைப் பழிக்காதது; உண்மையைத் தான் கண்டவிதம் சொல்லத் தயங்காதது; சமயங்களோடு பூசலின்றியே அவற்றைக் கடந்து நிற்பது; அனைவரின், அனைத்துயிரின் நலனையும் விழைவது. இது சனாதன தர்மத்தின் சுருக்கம். வள்ளுவரின் பக்கவெட்டுத் தோற்றமும் இதுவே!
 • ஒரு காவியம் காலங்கடந்து நிற்பதற்கு அதன் கதைப்பொருள் காரணமாக இருக்கலாம்; ‘தன்னேரில்லாத் தலைவனைக் கொண்டு’ என்று சொல்வார்களே, அதுபோன்ற, மக்களைக் கவரும் நாயகர்களுடைய பாத்திரப் படைப்பால் இருக்கலாம்.  ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் போலவோ, அல்லது புராணங்கள் போலவோ இதில் ஏதாவது கதையம்சம் இருக்கிறதா என்று பார்த்தால் ஒரு குட்டிக் கதைகூட இல்லை. நூற்றுக் கணக்கான கதைகளுக்கு ஆதாரமாகத் திருக்குறள் விளங்குகின்றது என்பது வேறு.  கதையம்சமோ, கதாபாத்திரமோ தேவைப்படாமலேயே மக்களைப் பற்பல நூற்றாண்டுகளாக வசியப்படுத்தி வைத்துள்ள நூல் திருக்குறள் என்பது முதல் வியப்பு.
 • இவருடைய பெயர் நூலில் எங்கும் இல்லை. தேவாரம், பிரபந்தம் போல சமய முத்திரை இல்லவே இல்லை. அடையாளம் காணத்தக்க சித்தாந்தங்கள் (schools of thought) எதுவும் காணப்படவில்லை. இது அடுத்த வியப்பு.

இந்த நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது, குறட்பா யாப்பில் அமைந்திருக்கிறது என்பவற்றைத் தவிர வேறெதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இதில் தமிழ் என்னும் சொல் ஓரிடத்தில்கூட வரவில்லை என்பது தூக்கி வாரிப்போடச் செய்யும் அடுத்த வியப்பு என்றாலும் இதை எழுதியவர் தமிழர் என்பதையேனும் நாம் நம்பலாம்தானே!!!

எங்கும் வானம் நமக்கு வசதியாய் இருக்கும், வாழ்வு தரும். ஆனால், ஒருபோதும் அது வசப்படாது. வகுபடாது.

அட, நூலுக்குக்கூட இவர் பெயர்வைத்ததாகத் தெரியவில்லை. பாக்களின் யாப்பு, குறட்பா வடிவத்தில் அமைந்திருப்பதால் இது குறள் எனவும், ஒரு சிறப்பு அடைமொழி கொண்டு திருக்குறள் எனவும் வழங்கி வருகிறது. இந்த யாப்பில் ஒரு நூல் என்பது பழங்காலத்தில் இல்லை என்பதும் இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமாயிருந்திருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வகுத்துச் சொல்லும் வெண்பா,

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.

இந்த நூலைப் போற்றி 53 பேர் பாடிய 53 வெண்பாக்கள் அடங்கிய நூலுக்குத் `திருவள்ளுவ மாலை` என்று பெயர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய்ச் சொன்னாலும், `வள்ளுவர், வள்ளுவனார், வெண்பா, குறட்பா, அருங்குறள்` போன்ற குறிப்பிடல்கள் காணப்படுகின்றன. ஆனால், இதன் பெயர் திருக்குறள் என்று சாதிக்கும்படியான சான்றுகள் எதுவும் நமக்கு இல்லை. ஆனால், இதில் சில பாடல்கள் இதை `முப்பால்` என்றே குறிப்பதால் ஒருவேளை அதுதான் நூலாசிரியர் நூலுக்கு வைத்த பெயராய் இருக்கலாமோ என்பது சிலரின் ஐயம்.

திருக்குறளுக்கு வேறு சில பெயர்களும் உண்டு:

 1. இரண்டு (இரண்டே அடி!)
 2. உத்தர வேதம் (உத்தரம் என்றால் இங்கே வடக்கு என்று பொருளில்லை. பூர்வம்-உத்தரம், முன்பு-பின்பு. பின்னால் எழுந்த இன்னொரு வேதம்)
 3. எழுதுண்ட மறை (மறை என்பது எழுதப்படாதது. இது, எழுத்துக்குள் இறங்கிவந்த, இசைந்துவந்த மறை)
 4. தமிழ்மறை
 1. திருவள்ளுவப் பயன் (வள்ளுவம் என்பது ஒரு சித்தாந்தம், அல்லது தத்துவம். அதன் வெளிப்பாடு அல்லது பயனே திருக்குறள்)
 2. திருவள்ளுவர்
 3. தெய்வ நூல்
 4. பழமொழி (எது பழமை? எது எப்போதும் புதிதாய்த் துலங்குகிறதோ அதுவே பழமை! எது எப்போதும் புதிதாய்த் துலங்கும்? எது, தானும் துலங்கி, நம்மையும் துலக்குகிறதோ, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருகிறதோ, எது முன்னேற்றத்திற்கு ஊக்கம் வழங்குகிறதோ அதுதான் பழமை; அதுவேதான் புதுமை. ஆறு, பழமை. அதில் நீர் புதுமை! கதிரவன் பழமை; அவன் ஒளி புதுமை)
 5. பால்முறை (அறம், பொருள், இன்பம் என்பது வரிசைக்கிரமம் அல்ல! அறவழியில் பொருள் சேர்த்தல், பொருள்மயமான உலகில் நெறியோடு வாழ்தல். அதுபோல் அறவழியில், வீழ்ந்துவிடாமல் இன்பத்தை அனுபவித்தல். வீடு? ஏன் சொல்லவில்லை? சொல்லாமற் சொல்லப்பட்டது. நாம் இருக்கும் இடத்தை வீடு என்கிறோம். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் விடுவதே வீடு என்பார்! சொல்லி உணர்வதல்ல; விட்டு மட்டுமே உணர்வது)
 6. பொது மறை (எல்லா நாடுகளுக்கும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்)
 7. பொய்யா மொழி (உண்மையே பேசும், அதையும் நின்று, உறுதியாகப் பேசும்)
 8. பொருளுரை (மெய்ப்பொருளுக்கான உரை!)
 9. முதுமொழி (அறிவும் தெளிவும் சேர்ந்த கனிவே முதுமொழி. எனக்கு 50 வயது, அப்பாவுக்கு 80 வயது என்று வைத்துக்கொள்ளுங்கள். 80 என்பதனாலா முதுமொழி? எனக்கு ஐந்து அவருக்கு 35 என்றபோதும் அப்பாவின் வார்த்தை எனக்கு முதுமொழிதானே! அட, ஐந்து வயதுக் குழந்தையாயிருந்தபோது சம்பந்தர் பாடிய பாடல் முதுமொழிதானே!)
 10. வள்ளுவ தேவன் வசனம்
 11. வள்ளுவ மாலை
 12. வள்ளுவர் வாய்மொழி
 13. வள்ளுவன் வாய்ச்சொல்
 14. வள்ளுவனார் வைப்பு (சட்டம், வழி, முறை, நெறி. வீடு பேற்றுக்கும் வைப்பு என்று பெயர்!)
 15. வாயுறை வாழ்த்து

இவற்றில் ஒன்றுகூட, இன்றும் நமக்குப் பெயர் தெரியாத நூலாசிரியர் வைத்த பெயர் இல்லை என்பது தெளிவு.

இப்படி, ஆளுடைய பெயர், ஊர், அட நூலுக்கு அவர் வைத்த பெயர்கூடத் தெரியாத ஒரு நூல், இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறதே எப்படி?

ஒன்றை எண்ணிப் பாருங்கள்.  எல்லாப் பழைய நூல்களைப் போலவே திருக்குறளும் ஓலைச் சுவடிகளில்தான் எழுதப்பட்டிருக்கும். ஓலைச் சுவடியின் ஆயுள் சுமார் 200 ஆண்டுகள். மிகமிக நன்றாகப் பராமரித்தால் 300 ஆண்டுகள் வரை தாங்கும் என்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறிப்பிடுகிறார்.  திருக்குறளோ 2000 ஆண்டுகளை, அல்லது 60 தலைமுறைகளைத் தாண்டிவிட்டது. எனில், குறைந்தது பத்து முறையாவது இது நகல் எடுக்கப்பட்டிருக்கும், அச்சு வரும் வரை. கம்பனின் ராமாயணம் அச்சேறியபோது, அதற்கு முந்தைய தமிழ் ராமாயணங்கள் காணாமற்போய்விட்டிருந்தன. திருக்குறள் மட்டும் தலைமுறைகளைத் தாண்டிப் புழங்கி வந்தது, வருகிறது, என்றால், எத்தனை ஆயிரம் பிரதிகள் நகல் எடுக்கப்பட்டிருக்குமோ!

ஒன்று மட்டும் தெளிவு. திருவள்ளுவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அதீத கவனம் செலுத்தியிருக்கிறார். எங்கேயும் தன்னைப் பற்றிய எந்தக் குறிப்பும் வந்துவிடக் கூடாது என்று அவர் முடிவுசெய்து விட்டதால்தான், பூகோள ரீதியாகவோ, வரலாற்று அடிப்படையிலோ அவரை அடையாளம் காட்டும் அகச்சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி நம்மிடையே புழங்கிவரும் விவரங்கள் யாவும் சுவாரசியமான கதைகளேயன்றி அவற்றுக்கு ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவுமில்லை.

என் நண்பன் ஹரி கிருஷ்ணன் பேசுகிறான்:

ஒருவரிடம் சுமார் நூறு நூல்கள், ஓலைச்சுவடி வடிவில் உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.  அவற்றில் ஒரு 20 நூல்கள் 200 ஆண்டுகளைக் கடந்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.  ஓலையை எழுதுவதற்குத் தகுந்ததாகப் பதப்படுத்தி, இரண்டு விரற்கடை அளவுள்ள அந்தச் சுவடியில் எழுத்தாணி (Stylus) கொண்டு எழுதி, எழுதியதன் மேல் மஞ்சளையோ, விளக்கின் கருஞ்சாந்தையோ பூசி, படிப்பதற்கு எளிதாக்க வேண்டும்.  The preparation of stationery itself is a time consuming job.  It was not just as we buy a bundle of papers in the shop next to our doorstep.  இதற்குமேல், எழுத்தாணியால் எழுதுவது என்பது பெரிய ப்ராஸஸ். அதற்கு ஜெல் பேனாவில் எழுதுவதைப் போன்ற வசதி கிடையாது.  எனவே, 20 நூல்கள், ஒவ்வொன்றும் ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் செய்யுள்களைக் கொண்டது, காலச் செலவால் ஓலையின் தன்மை இறுகி வறண்டு வறண்டு, பசையற்று, உடைந்து நொறுங்கும் நிலையில் இருக்கின்றன என்றால், நான் அத்தனையையும் படி எடுத்தாக வேண்டும் என்றால், கை ஒடிய படி எடுக்க, நான் என்ன செய்வேன் எது மிக முக்கியமாக எனக்குப் படுகிறதோ அதை மட்டும் தேர்ந்துகொள்வேன்.  இப்படி, தமிழ்நாடெங்கிலும் சிதறிக் கிடந்த பல்வேறு புலவர்கள், பாதுகாக்கப்பட வேண்டியனவற்றுள் ஒன்று என்று பார்த்துப் பார்த்துத் திருக்குறளைத் தேர்ந்து படியெடுத்துகுறைந்தது பத்து முறையாவதுவந்திருக்கிறார்கள்; 50-60 தலைமுறை இதனை மிகமிகமிக முக்கியமான நூலாகக் கருதிப் படியெடுத்தும், உரைகளிலும், புதிதாகச் செய்யப்படும் நூல்களிலும் நேரடி மேற்கோளாகவே காட்டிக் காட்டி வந்திருக்கிறார்கள் என்பதொன்றே, இந்த நூலுக்குள்ள பெருமையைச் சொல்லும்.  இந்த ஒற்றை வாக்கியத்தைக் கடந்த பெருமையை உடைய நூல், நாம் இப்போது கலந்து கூடி கற்கத் தொடங்கியிருக்கும் நூல் என்பது நினைவிலிருத்தத் தக்கது.“

வாகீச கலாநிதி திரு. கி.வா. ஜகன்னாதன் அவர்கள் திருக்குறளின் பலவகைச் சிறப்புகளை விரிவாகச் சொல்லியிருக்கிறார். சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்:

 1. குறளால் ஆன பழைய நூல் இஃதொன்றே
 2. தமிழின் முதல் எழுத்தான `அ` வில் தொடங்கி, இறுதி எழுத்தான `ன்` என்பதில் முடிகிறது
 3. ஆதியில் பத்துப் பேர் இதற்கு உரையெழுதியிருக்கிறார்கள். பரிமேலழகர், தருமர், மணக்குடவர், தாமத்தர், பரிதியார், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், நச்சர். அதற்குப்பின், எத்தனையோ அறிஞர் பெருமக்கள் உரையெழுதியிருக்கிறார்கள், உரையெழுதி வருகிறார்கள்!
 4. இதைப்போலப் பிறமொழிகளில் பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் இல்லை
 5. வேதத்தோடு ஒத்த சிறப்புடையது என்றும், வேதத்தைவிடவும் சிறப்புடையது என்றும் சில புலவர்கள் திருக்குறளைப் போற்றியுள்ளார்கள்
 6. எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொதுவான கருத்துக்களைச் சொல்கிறது

நூலின் கட்டமைப்பு:

 

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. தர்மம், அர்த்தம், காமம் சொன்னவர், மோக்‌ஷமாகிய வீடு என்பதை ஏன் சொல்லவில்லை என்று கேட்பாருளர். அறிஞர்கள் கருத்து:

 • வீடு, அறத்திலேயே சொல்லப்பட்டு விட்டது
 • வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லாத நிலையம். எனவே நூல் வழியே கூறப்படுவது ஏனைய மூன்றுமேயாம் என்பது பரிமேலழகர் விளக்கம்
 • முப்பாலாகக் கூறி, வீடு பேற்றிற்கு நிமித்தம் கூறினார் என்பது நச்சினார்க்கினியரின் விளக்கம்

அறம் 38, பொருள் 70, காமம் 25 என்று மொத்தம் 133 அதிகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பாலும் பல இயல்கள் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துப் பாடல்கள் என்பது பழைய மரபையொட்டியது.

 

திருவள்ளுவரின் உத்தி

திருக்குறள் எந்த வகையைச் சேர்ந்த நூல்?

ஒவ்வொரு குறளும் ஒரு கதையைச் சொல்லத் தூண்டும். ஆனால் இது கதை நூல் அல்ல.

பலவிடங்களிலும், குறிப்பாக, காமத்துப் பாலில் கவிதையின் ஆழத்தையும் அழகையும் மின்னல் வீச்சுகளாகக் காணலாம். ஆனால், இது கவிதை நூல் அல்ல.

இதிகாசங்கள், (`இது நடந்தது` என்று பொருள்) புராணங்கள், சாத்திரங்கள் இவற்றில் வரும் நீதிகளைக் குறளிலும் காணலாம். ஆனால் இது இந்த மூன்று வகைகளில் வராது.

சூத்திரமா என்றால், ஆமாம் என்றும் இல்லை என்றும் சொல்லத் தோன்றுகிறது. சுருக்கத்தை வைத்துப் பார்த்தால் சூத்திரம் என்று சொல்லலாம். ஆனால் சூத்திரம் என்பது விளக்கம் சொன்னாலொழிய விளங்காது. குறள் எவ்வளவு விளக்கினாலும் மேலும் விரியுமென்றாலும், எந்த விளக்கமுமின்றியே மிகக் குறைவான நூல் பயிற்சி உள்ளவருக்குக் கூட ஓரளவேனும் விளங்கும்.

ஆனால், இதை அறநூல் என்று சொல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஏழே சீர்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் காட்டும் கோயில் யானையின் சாவகாசம் பிரமிக்க வைக்கிறது. அது பிரமிக்கத்தக்க வேகத்தில் ஓடக்கூடியது என்பதை யானை ஓடிப் பார்த்தவர்கள் அறிவார்கள். யானை துரத்திப் பார்த்தவர்கள் இன்னும் நன்றாக அறிவார்கள்! `யானையால் யானையாத் தற்று,` யானையை வைத்து யானையை வசக்குவதுபோல், ஒரு செயலை இன்னொரு செயலின் மூலம் சிறப்பாக முடிக்கலாம் என்கிறார். (வினையழியத் தேவை வினை அதுபோல் பொய்மை மனமழியத் தேவை மனம், என்னும் என் குறள்) இன்னொன்று அறச்சீற்றம். `பரந்து கெடுக உலகியற்றியான்` என்பாரே! `முனிவர்களின் அறச்சீற்றமே இறையை இறைவனாக பூமிக்கு இறக்கியது,` என்பார் என் குருநாதர். (’It is the righteous indignation of the wise that made God to descend to the earth as Avatars’) அப்படிப்பட்ட வரிசையில் நிற்கிறவர்தான் திருவள்ளுவர். நையாண்டி, ஓரிடத்திற்கு மற்றோரிடத்தில் விளக்கம் இவைபோன்ற எத்தனையோ சிறப்புக்கள் `நவில்தொறும்` நமக்குத் தென்பட்டுத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மெதுவாய், சாதுவாய்த்தான் துவங்குவார். `தம்பி! இப்படிச் செய்து பார்க்கலாமே!` என்று தூண்டுவார். செய்தோமானால், அடுத்த நிலையைச் சுட்டிக் காட்டி நம் ஆர்வத்தை அதிகரிப்பார். அதையும் நாம் அடைந்தோமென்றால், இன்னும் உயர்வுகளைக் காட்டி, `நீ அடைந்ததென்ன பெரிதா? அதோ பார்!` என்று சொல்லி நம்மை மலைக்கவைத்துச் சென்றுவிடுவார். நாமோ அவருடைய மொழியின் பொருளில் ருசிகண்டுவிட்டதால் நம்மால் பின்னாலும் செல்ல முடியாது.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

என்று நம்மை அவர் வழிக்குக் கொண்டுவருவார். நாம் நன்மை செய்த மகிழ்ச்சியில் சற்றே பெருமை கொண்டால்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு?

என்று குட்டாமல் குட்டிவிட்டுப் போவார்!

யாரையும் குறைவாக மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆளைப்பார்த்து அலட்சியம் செய்யக்கூடாது. எவர் பேச்சையும் கவனமாகத்தான் கேட்கவேண்டும். அதில் என்ன சேதி இருக்கிறது என்று கண்டுகொள்ள வேண்டும் என்று,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று சொல்வார். குழாயடிச் சண்டையில் நீதி, பிச்சைக்காரர்கள் பேச்செல்லாம் ஞானமொழி என்று நாம் கொள்ளத் தலைப்பட்டால், பின்னாலிருந்து,

கல்லாதான் ஒட்பம் கழியநன்றாயினும்

கொள்ளார் அறிவுடையார்

என்பார் உறுதியாக!

யோகத்தில், ஆசனங்களில் சில ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்கும். முறிவு இல்லை, மாற்று. ஒன்றினால் ஒருநிலை வரும். அதில் ஒரு விளைவு நேரும். நிலையை அப்படியே வைத்துக்கொண்டு, விளைவை மாற்றிக் கொள்ள இன்னொரு ஆசனம் உதவும். உதாரணமாக, சர்வாங்காசனத்திற்கு மத்ஸ்யாசனம் மாற்று. முந்தைய ஆசனத்தை அது முறிக்காது. மாறாக, சில அதிகங்களை (excesses) மாற்றும். இவ்விதம் குறளில் பல இடங்கள் உண்டு. அவற்றை முரண்பாடுகள் என்று கருதுபவன் அந்தோ, பெரும் பொக்கிஷத்தையே கோட்டை விடுகிறான்! வள்ளுவருக்கு வள்ளுவர்தான் அகராதி. குறள் தொடர்பாக எழும் எந்தக் கேள்விக்கும் வள்ளுவர் குறள் மூலமே விடை பகர்வார் என்பது அனுபவித்தவர்களின் முடிபு.

இதை ஹரிகிருஷ்ணன் மூலமாகக் கேட்பது சுவாரசியமாக இருக்கிறது:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்தொழுகுவார் 915 (பிறனில் விழையாமை : 03)

 

நம்பியவருடைய மனைவியை இச்சிக்கிறவன் பிணம் என்று கடுமையாகச் சாடுகிறார். ஆனால், தெரிந்து தெளிதல் (51:10) அதிகாரத்தில்

 

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்

 

என்கிறார். ஒருவனை ஆராயாமல் நம்புவதும், ஆராய்ந்து நம்பியவனை சந்தேகப்படுவதும், தீராத துன்பத்தைக் கொடுக்கும் என்கிறார். முன்னதற்குப் பின்னது முறிவா மாற்றா சொல்லுங்கள்!

 

தேரான் தெளிவும் என்பதில் உள்ள தெளிவும்என்ற சொல்லை, ‘தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகுவார்என்பதில் உள்ள தெளிந்தாரில் என்பதற்கு விளக்கமாக (definition) எடுத்துக் கொண்டால்தான்,

 

 • மனித சுபாவங்களில், தெளிந்துகொண்டவன், தெளிந்துகொள்ளப்பட்டவனை இதற்குமேல் ஐயப்பட இடமில்லை என்ற இடத்தில் வைக்கவேண்டும் என்பதும்;
 • அதே சமயத்தில், தெளியப்பட்டவன் என்பவன் மற்றொரு தனிமனிதன் (individual) என்பதால், அவனிடத்திலும் சபல வசப்படும் தன்மை மிச்சம் மீதி இருக்க இடமிருக்கிது என்பதும்;
 • தெளியப்பட்டான், தன் தோள்களின் மீதுள்ள பொறுப்பின் சுமையை உணரவேண்டும் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்கும்.  

 

திருக்குறளைப் படிக்கும்போது, திருக்குறளுக்குத் திருக்குறளே அகராதி என்று கொண்டு, ஓரிடத்தில் பயின்று வரும் சொல்லை, வேறொரு இடத்தில் பயிலும் அதே சொல்லோடு கொண்டு கூட்டினால், அவ்வாறு எத்தனை குறட்பாக்கள் ஒன்றாகக் கொண்டுகூட்டப்படுகின்றனவோ, அத்தனையும் பொருட் செழிப்பில் கடலாகவும் அதற்கு மேலும் விரிந்துகொண்டே போவதைக் காணலாம். இதனால்தான் திரிவிக்கிரமாவதாரம் இந்தக் கள்ளனுக்கும் தப்பிய குள்ளனாக உள்ளே நுழைந்துவிட்டது போலும்!

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு (76: பொருள்செயல்வகை:07)

 

அன்பீன் (அன்பால் ஈனப்பட்ட, அன்பு ஈன்ற) குழந்தையே அருள். அது பொருள் என்னும் செல்வமாகிய செவிலித் தாயால் வளரும்! சரி, இன்னொரிடத்துக்கு வாருங்கள், அருளை ஒரு செவிலித் தாயைப் போல் போற்றிப் பாதுகாத்து, வளர்ப்பதற்கும் பொருள் தேவைப்படுகிறது; ஆகவே செய்க பொருளை என்று வலியுறுத்துகிறார் என்பது தெளிவாகிறது.  ஆனால் இன்னோரிடத்தில் சொல்வதைப் பாருங்கள்:

 

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று (100: பண்புடைமை: 10)

 

பாலானது, அது வைக்கப்பட்ட பாத்திரத்தில் உள்ள குறையினால் திரிந்து போவதுபோல, பண்பில்லாதவனின் செல்வம் யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்கிறார். பாலின் மேல் எந்தக் குற்றமும் இல்லை.  வைத்த பாத்திரத்தின் குற்றம் பாலைக் கெடுக்கிறது. அதுபோலவே, செல்வம் யாரிடம் போய்ச் சேர்கிறதோ, அவனுக்குள்ள பண்பின் அளவினதாகவே சமூகத்துக்குப் பயன்படுகிறது என்ற எச்சரிக்கைக் குறிப்பை வைக்கிறார். அதாவது, பொருள் சம்பாதிக்கிறாயா, சேர்க்கிறாயா, பலே பாண்டியா!  அதுதான் செய்ய வேண்டியது.  வாழ்க்கையில் முதல் அத்தியாவசியத் தேவை அது.  ஆனால் ஒன்று; பால். வைத்த பாத்திரம் சாம்பார் வைத்த பாத்திரமாக இருந்தால், பால் எப்படித் திரிந்து போகிறதோ, அப்படி, உன்னிடம் உள்ள செல்வம், நீ பண்பில்லாதவனாக இருந்தால், உனக்கே பயன்படாமல் போய்விடும் என்பதை முதலில் தெரிந்துகொள்.  நீ பண்புடையவனாக இருந்து செல்வமுடையவனாகவும் இருப்பதே, உனக்கும், சமூகத்துக்கும், நீ ஈட்டிய செல்வத்துக்கும் நல்லது என்பதைப் புரிந்துகொள் என்று பெற்ற தாயைப்போல் கனிந்து கனிந்து சொல்வார். இந்தக் காரணத்தால்தான் அவருக்கு மாதாநுபங்கி (தாயும் ஆனவன்) என்ற பெயர் உள்ளது. 

 

அருளின்றேல், பொருளும் விகசிக்காதல்லவா?

மேலும், குறளில் எங்கேனும் உவமை தென்பட்டால், நாம் அங்கேயே நின்றுவிட வேண்டும்! நிதானமாகிவிட வேண்டும். ஏனென்றால், பல நூல்களில் உவமை என்பது அலங்காரம். திருக்குறளிலோ அது அத்திவாரம்! நிதானமாக நின்று கவனித்தால் நமக்குப் பேருண்மைகள் புலப்படும்.

ஒவ்வோர் உவமையும் எந்தக் காலத்திலும் புரிந்துகொள்ளக்கூடிய உவமையாக இருக்கும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

என்றால், இதில் உள்ள மயிற்பீலி என்றுவரை இருக்கிறதோ அன்றுவரை இதன் பொருளை உணர யாருக்கும் முயற்சியே தேவைப்படாது.  தேர், கட்டைவண்டி, மாட்டுவண்டி, குதிரை வண்டி, என்று எதையும் குறிப்பிடாமல் வெறுமனே சாகாடு என்றார்.   சகடு என்ற சொல் நீட்டல் விகாரமாக, சாகாடு என்றாகி இருக்கிறது.  ‘பீலியால் நிரப்பப்பட்ட சக்கரத்தோடு கூடிய வண்டி என்று சொல்லும்போது, சக்கரமும் புரிகிறது; சக்கரத்தை வண்டியோடு பிணிக்கும் அச்சும் புரிகிறது.  மாட்டுவண்டி போய் லாரி வந்தாலும், ட்ராக்டர் வந்தாலும், பொக்லைன் வந்தாலும், எந்த வண்டிக்கும் இந்தச் சக்கரமும், அச்சும் பொருந்திவிடும்.  நெருப்புக்குப் பிறகு, மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு சக்கரம். அது தலைமுறைகள் தாண்டிச் சுழன்றுகொண்டுதான் இருக்கும்! காலத்தையே சக்கரம் என்கிறோமே! ஆகவே, இந்த உவமை என்றில்லாமல் வள்ளுவ உவமைகள் ஒவ்வொன்றுமே எல்லாக் காலத்திலும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியவையே.  ஆனால் அறிய அறிய ஆழம் பெருகும் அதிசயத்தன்மை வாய்ந்தவை. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை , மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற இடங்களில் மட்டும், அனிச்சம் என்றால் இப்படிப்பட்ட தன்மை உடையது என்று விளக்கவேண்டி வருகிறது.  மற்ற எந்த உவமையிலும் இத்தகைய விளக்கம் தேவையே இருக்காது என்பது வள்ளுவ உவமையின் தனிச் சிறப்பு.  வேறெந்தக் கவிஞனும் சொந்தம் கொண்டாட முடியாத சிறப்பு.

யாரையும் எதையும் ஒரு வரம்புக்கு உட்படுத்தி வகுத்துப் பார்த்து ஒரு முடிவைச் சொல்லியோ சொல்லாமலோ வைத்துக்கொள்வது நமக்கு வழக்கம். ஆனால், திருவள்ளுவரின் திருக்குறளின் பொதுமைத்தன்மை அதற்கு இடம்கொடுப்பதில்லை.

எந்தத் தனிமனிதனும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் இருக்கிறது. அந்த நெறி பொதுவானது. ஆனால் அறம் என்று வரும்போது அது மாறுபடுகிறது. இதைச் சுருக்கமாக விளங்கிக்கொள்வோம்.

 • தனிமனிதனுக்கு ஒழுக்கம். சமுதாயத்திற்கு அறம். நல்லொழுக்கம் தீயொழுக்கம் இரண்டுக்குமே ஒழுக்கம் என்ற அடை பொருந்தும். அறத்துக்கு அது பொருந்தாது.  அறமல்லது மறம். மறம் என்ற வேறு சொல்லால்தான் அறமல்லதைக் குறிக்க முடியும். நாற்றம் என்பதைப் போல. நறுநாற்றம், துர்நாற்றம். என்பதைப் போலப் பொதுவாகப் பயன்படுத்தக் கூடியது ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது ஒழுகுவது.  தைலதாரை போலத் தொடர்ந்து நற்பண்புகளைப் பேணுவதே நல்லொழுக்கம். இடைவிடாத, சத்தமில்லாத, மென்மையான, சீரான தொடர்ச்சி!
 • தனிமனிதனுக்கு அறமும் உண்டு
 • ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுவானது. அறம், மாறுபடுவது
 • அறம் என்பது ‘Appropriateness in thought, action and attitude,’ ”எண்ணம், செயல், மனப்பாங்கு இவற்றில் கச்சிதமாக இருத்தலே அறம்,’ என்பார் என் குருநாதர். அறத்தை, சூழ்நிலை, காலம், அந்த மனிதன் வாழ்வில் இருக்கும் நிலை போன்ற பல அம்சங்கள் நிர்ணயிக்கும். கொல்லாமை அறம். ஒருவனைக் கொன்று நூறு பேரைக் காப்பதும் அறம். நூறு பேரைக் கொன்று ஒருவனைக் காப்பதும் அறம்.
 • இன்னொன்று. அஹிம்சா பரமோ தர்ம: அதாவது அஹிம்சையே தர்மங்களில் உயர்ந்தது என்னும் வாசகம் தனி மனிதனுக்குத்தான் பொருந்தும். தன்னை ஒருவன் தாக்கினால், தான் திருப்பித் தாக்குவதில்லை என்பது தனிமனித விரதமாக இருக்கலாம். அது சிறப்பும் கூட. ஆனால் அதை ஒரு சமூகமோ, நாடோ எப்படிக் கடைபிடிக்க முடியும்?
 • என்னுடைய கம்யூனிஸ்டு நண்பரொருவர் சொல்வார்: ‘ஆதிவாசிகள் எதிர்ப்பட்டவனைக் கொன்றார்கள். காட்டுமிராண்டிகள் கொன்றவர்களைத் தின்றார்கள். அதன் பிறகு வந்தவர்கள், தாங்கள் வென்றவர்களைக் கொல்லாமல் அடிமைகளாக வைத்துக்கொண்டார்கள். ஒன்றுக்கு இன்னொன்று முன்னேற்றம்தான்!’ நில்லாமல் மாறிக்கொண்டே ஓடிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளின் வெள்ள ஓட்டமான வாழ்க்கையில், இவற்றில் இதுதான் சரி என்று எதைச் சொல்வது? மானுடம், தொடர்ந்து பாடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறது.
 • மேலும், நாம் எவ்வளவோ மாறியிருந்தாலும், மாறாத சில ஆதி குணாம்சங்கள் நம் சித்தத்தின் வாசனைப் பாளங்களில் எங்கோ படிந்துதான் இருக்கின்றன.

நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் குறள் ஒன்று கட்டாயம் நமக்குக் காத்திருக்கும். நமது நிலைக்கு அடுத்த நிலைக்கு அடுத்த நிலைக்குப் பொருத்தமான குறள் நம்மைக் குழப்பவே செய்யும்! இடைப்பட்ட நிலையில் இருந்து இன்னொரு குறள் நம்மை அன்புடன் அழைப்பதை நாம் செவியுற்றால் நம் குழப்பம் தீரும்!

யல்களை, வள்ளுவர் பிரிக்கவில்லை. அந்தப் பாகுபாடு பிற்பாடு வந்தது. அதுபோல், இது இல்லறத்தானுக்கு மட்டும், இது துறவிக்கு மட்டும் என்று அவர் தனித்தனியே அறம்சொல்லவில்லை, சில இடங்களைத் தவிர. தனிமனிதன் எங்கிருந்தாலும் பின்பற்ற வேண்டிய அறம், பொருளாய சமூகத்திற்குப் பொருந்துகின்ற அறம் என்று அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்.

ஒரு நிலையை எய்திய பின்புதான் ஒரு குறள் புரியும் என்பது உண்மைதான். ஆனால், குறள் என்பது நம்மைப் படிப்படியாக உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன் பயில்பவரை, குறளே அந்த நிலைகளில் கொண்டு சேர்க்கும்.

`திருக்குறள் உறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும், விரிவும், அழகும்…` என்று பாரதி திருக்குறளின் மேன்மையைச் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கிறான்.

சத்தியத்தில் உள்ள நம்பிக்கையால் உறுதி

தர்மத்தில் நிலைப்பதால் தெளிவு.

பிறர்நலம் கருதிப் பேசுவதால் ஆழம்.

அனைவரையும் மனதில் கொண்டு பேசுவதால் விரிவு.

இவை யாவும் கலந்து தமிழில் வந்ததால் அழகு!

சத்தியம் என்பது இடம், காலம் இவற்றைத் தாண்டி ஒளிர்வது. சந்திக்காத, ஒருவரை ஒருவர் அறிந்திராத மனிதர்களின் மனங்களில் ஒரேவிதமாக சாந்நித்தியம் கொள்வது

சத்தியம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதைச் சொல்லிலும் கொண்டுவந்து, பிறர் வாழ்க்கை பயனடையும்படிச் செய்பவர்களே ஞானியர், யோகியர், மஹா கவிகள். வேத ரிஷிகளும், திருவள்ளுவரும், தொல்காப்பியரும் ஒரேபோல்தான் எனக்குத் தென்படுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் ஒன்றேபோல் இருப்பதில் ஏது வியப்பு?

பாரத நாட்டில், சூத்திரங்களும் நெடுங்கவிதைகளும் பல மொழிகளிலும் உள்ளன. குறட்பா என்னும் வடிவமும் அவ்விதமே. மேலை நாடுகளிலும் இப்படிச் சில உதாரணங்களைக் காட்ட முடியும்

ஆனால், பாரதி சொல்லும் `திருக்குறள்  உறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும், விரிவும், அழகும்` இன்னொரு நூலில் காண்பதரிது. சூத்திரமாகவும் இல்லாமல், செய்யுளாகவும் நீளாமல் உள்ள ஒரு வடிவத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வள்ளுவர், எந்த மனிதனுக்கும் பொருந்தக் கூடிய நீதி, நியதி இவற்றைச் சொல்லியிருப்பதுதான் திருக்குறளை வேறெந்த நூலோடும் ஒப்பிட முடியாத ஒரு பெருநிலையில் வைத்திருக்கிறது என்று தோன்றுகிறது.

பாரதத்தின் ஒற்றுமைக்கு பூகோள அமைப்போ அரசியலோ காரணமல்ல, இமயம் முதல் குமரி வரை ஒன்றாய் விளங்கிவரும் பண்பாடே காரணம். இது, மாநிலத்துக்கு மாநிலம், பழக்க வழக்கங்களில் பலவாக வேறுபட்டாலும், இதன் அடிநாதமான ஆன்மிகம்தான் ஒற்றுமைக்குக் காரணம். இதுதான் பற்பல நாடுகளாய்க் கிடந்த பாரதத்தில், ஒருவர்க்கொருவர் அரசர்கள் போரிட்டுக் கொண்டிருந்த காலத்திலும், மக்களை இமயத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு யாத்திரை மேற்கொள்ள வைத்தது.

றை என்னும் மகாசக்தியே எல்லாவற்றுக்கும் தலைமையானது. மனித மனம் அதற்கு வடிவங்கள், ஏன் குணங்களையும் கூடக் கொடுத்து அழகு பார்த்தது. இந்த இறை நம்பிக்கை, இருவினை, இம்மை-மறுமை-வீடு, வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், அறம் — இவை பாரதம் முழுதும் பரவலாய்ப் பின்பற்றப்பட்டு வந்தன. பல இடைஞ்சல்களை எதிர்கொண்டன. நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மாமனிதர்கள் தோன்றி வாழ்ந்து காட்டி, வழி சொல்லி, வாசகங்களை விட்டுச் சென்றார்கள். அந்த வாசகங்களில் பொதுமை வாய்ந்தவை காலம் தாண்டித் தொடர்கின்றன.

அவற்றுள், திருக்குறள், அதன் தன்மையால், எந்த விதமான விவாதமும் இன்றித் தலைமையிடம் வகிக்கிறது. இதை, பாரதி ஏற்கெனவே துல்லியமாகச் சொல்லியாயிற்று. இன்னும் விரிவாக அதன் சிறப்பைப் பற்றி ஏதேனும் சொல்லவேண்டுமானால், இவற்றைச் சொல்லலாம்:

 1. பொதுமை : ஆண்-பெண், இல்லறத்தார்-துறவியர், ஏழை-செல்வர், கற்றோர்-கல்லாதோர், குடிமக்கள்-அரசு, இளைஞர்-முதியோர் போன்ற அனைத்து விதமான மனிதர்களுக்குத் திருக்குறள் பொருந்தும்; தேவையும் கூட!
 2. உலகளாவியது : அதேபோல் எந்த நாட்டினருக்கும் திருக்குறள் வாழ்க்கைக்கான கையேடாக அமையும். மனித மனம், உலக நடப்பு இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த நூல் வடிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இது உலகப் பொதுமறை.
 3. மதத்தை வலியுறுத்தாத அறநூல் : சமயநூல், அல்லது பக்திநூல் என்பன கொள்ளத்தக்கவை என்பதில் ஐயம் வேண்டாம். தொடக்கத்தில், ஒழுக்கமும், ஒழுக்கம் சார்ந்த நியதிகளுமே சமயத்திற்கு அடிப்படைகளாக இருந்தன. சமுதாயத்தின் கட்டுக்கோப்பிற்கும், நாகரிகத்திற்கும் தேவையாகின. ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் காணப்படும் பக்தி, பாறையை இளக்கிப் பசுவெண்ணெய் ஆக்கவல்லது. அவற்றில் காணப்படும் தமிழ், உருக்கிய பொன்னும் தேனும் சேர்ந்து ஓடுவது. கம்பனின் ராமாயணம் இலக்கியச்சுவை மண்டிக் கிடக்கும் காவியம் என்றாலும், அதன் கதாநாயகன் கடவுளே. இவை யாவையுமே அறத்தை வலியுறுத்துவனதான். ஆனாலும், பக்தி என்ற தளத்தில் நில்லாமல், தனிப்பட்ட கடவுளைக் குறிக்காமல், அறத்தையே வலியுறுத்தி, அதே நேரத்தில், கடவுளின் தலைமையை ஆணித்தரமாகப் பேசும் அதிசய நூல் திருக்குறள். இதை secular ’மதச்சார்பற்ற’ என்று சொல்வது பொருந்தாது. இதை universal ’உலகளாவிய’ என்றே கூறவேண்டும்.

 

திருவள்ளுவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாமற் போனாலும், அவருடைய நூல் மூலம் அவர் பாரத நாட்டின் சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்தான் என்பதைப் பொதுவில் சொல்லத் தயங்குவானேன்? தமிழகத்தில் நிலவிவரும் போலி நாத்திகம் ஒருபுறம்; அறிவுஜீவி என்றால் இந்தியாவின் அடிப்படை சமயக் கொள்கைகளைத் தாக்கிப் பேசுவதே என்று நிறுவிவிட்ட தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் ஒருபுறம். உண்மையில் நாட்டமுள்ளவன், தனது நாட்டின் வரலாற்றை அறிந்து அதன்மீது பக்தி கொண்டவன், தான் இந்த நாட்டில் பிறந்ததே பெருமைக்குரியது என்று நினைப்பவன், இவற்றைப் பொருட்படுத்த மாட்டான். திருவள்ளுவர் தெய்வ நம்பிக்கை உடையவர், அறவழி நடக்க வழங்கப்பட்ட வாய்ப்பே வாழ்க்கை என்று கருதியவர், அதற்கேற்பவே முன்னோர்கள் நியதிகளை வழிவகுத்து வைத்திருந்தார்கள் என்று நம்பியவர் என்பதைக் கண்கூடாக, எளிதாகக் காணலாம். அப்படி இல்லை என்று நிறுவத்தான் விபரீதமான விளக்கங்கள் தேவைப்படுகின்றன1

 1. தர்க்கம் : நூல் முழுதும் படிப்படியான நிலைகளும், அவற்றுக்கேற்பவே மாறுபடுவது போலத் தோற்றமளிக்கக்கூடிய வேறுவேறு விதமான அறிவுரைகளும் உள்ளன. இதைப் புரிந்துகொள்ளாமல்தான் திருக்குறளில் முரண்பாடுகள் மண்டிக் கிடக்கின்றன என்று பேசுவார்கள். இப்படியேதான் பகவத் கீதையையும் விமர்சித்து, கண்ணன் என்பவன் முரண்பாடுகளின் வடிவம் என்றெல்லாம் ‘அறிவார்ந்த’ முடிவுகளுக்கு வந்தார்கள் சிலர். ஒரே நீதியை, பலவிதமான  மன, அறிவு நிலைகளில் உள்ள மனிதர்களுக்கு, ஒரே விதமாகச் சொல்லிவிட முடியாது. அதேபோல், ஒரு நிலையிலிருந்து ஒருவனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்போது, அதே நீதியை முன்பு சொன்ன விதமாகவே எப்படிச் சொல்ல முடியும்? சற்றே திறந்த மனத்துடன், ஒரு பெரியவரை அணுக வேண்டிய மரியாதையுடன் இந்த நூலில் நுழைந்தால் குறளுக்குக் குறளே அகராதி என்பது புலனாகும். அசைக்க முடியாத தர்க்கம் இந்த நூலின் ஆதார சுருதியாக இழையோடிக்கொண்டிருக்கிறது என்பது புரியும்.

 

நாம் உயர உயர, திருவள்ளுவர் உயர்ந்துகொண்டே போகிறார். நாம் இறங்க இறங்க, திருக்குறளின் ஆழம் கூடிக்கொண்டே போகிறது. நம் சித்தம் விரிய விரிய, குறளின் பொருளின் வீச்சும் விரிந்துகொண்டே போகிறது. எனவே, நீரில் மீனைப் போலே, வானில் பறவையைப் போலே நாம் என்றும் திருக்குறளில் திளைக்கலாம்; ஆனால், ஒருபோதும் அதை அளந்துவிட முடியாது. ஈரடியால் உலக வாழ்க்கை முழுவதையும் காலந்தாண்டி அளந்தவனை நம்மால் எப்படி அளக்க முடியும்? `வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து,` என்றானே பாரதி, இந்த உலகினுக்கே தந்து என்ற சிறப்பை வேறெந்தத் தமிழ்க்கவிஞனுக்கும் நாம் பொருத்த முடியாது. ஏன், திருவள்ளுவரை நாம் கவிஞர் என்ற சிமிழுக்குள்ளும் அடைக்க முடியாது.

`தெய்வமாக்கவிகள் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்,` என்பார் ரஸ்கின். எங்கே? `உங்கள் வீட்டில், புத்தகங்களின் வடிவில்,` என்பார்! அப்படித்தான் வள்ளுவர் தனது வாக்கான குறள் மூலம் நம்மோடு பேசக் காத்துக்கொண்டிருக்கிறார்!  ஒரு முன்னுரைக்கு இவ்வளவு போதும்!

வாருங்கள்! திருக்குறள் என்னும் தெவிட்டாத அமிழ்தம் பருகுவோம்!

அனைவர்க்கு மான அறம்சொன்ன தெய்வ

மனிதர்க்கே என்றன் மனம்!

 தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை

 1. “திருவள்ளுவரெனும் தீபமில் லாமல் திசையை விழியறி யாது” . அருமையிலும் அருமை! இதன் தொடர்ச்சியை விரைவில் காண விழைகிறது உள்ளம் ! மிக்க நன்றி !

 2. மனதுக்கினியது எழுதப்பட்டுப் பார்வைக்கு வரும்போது அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமோ.. கவிஞரே! தொடருங்கள்!! – திவாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *