சக்கரைக் கட்டி (பாடல்)
இசைக்கவி ரமணன்
சக்கரைக் கட்டி சந்தனக் குப்பி
சந்நிதி எடுத்துக் கொண்டாளாம்
சங்கரி சுந்தரி சாம்பவி பைரவி
சாந்தமாக வந்தாளாம்
சலங்கை குலுங்க சரிகைச் சட்டை
சரசரக்க வந்தாளாம்
தடையை உடைத்து, தவிக்கும் பிள்ளையைத்
தழுவிக்கொள்ள வந்தாளாம்!
தானே தன்னில் நிறைந்தவளாம்
தன்னைத்தானே புனைந்தாளாம்
வானே காணா வடிவழகை
தானே அளைந்து அணிந்தாளாம்!
அரற்றி புரண்டு அழுத பிள்ளையை
ஆரத்தி எடுக்க விட்டாளாம்
அகமும் புறமும் அறிந்தறியா
தவனை மெல்லத் தொட்டாளாம்!
தலையைப் பதித்த காலிலே, வெள்ளி
நகத்தைக் காட்டிவிட்டாளாம்!
தட்டுகிட்டுப் போன பிள்ளை வாயில்
தானே ஊட்டி விட்டாளாம்! (தானே)
சிரிக்கும் சிறுமி சிந்தையில் புகுந்து
தித்திக்கத் தித்திக்கப் பேசுகிறாள்
நரைத்த கிழவி அக்கறயோடு
நடந்துவந்து பேசுகிறாள்
இருந்த இடத்தில் இருந்துகொண்டு
என்னென்ன வித்தை காட்டுகிறாள்! எங்கோ
இருந்தவனை இங்கே அழைத்து
எப்படி மயக்கி ஆளுகிறாள்!
(தானே)
மிக அருமையான தத்துவங்கள் உள்ளடிக்கிய பாடல். பாராட்டுக்கள்.
க. பாலசுப்ரமணியன்