Category: கவிப்பேழை

  • ஒரு நாள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக! – (1)

     

    காலத்தால் அழியாதது காதல் மட்டுமே. கவிஞர்களுக்கு இந்த காதல் மட்டுமே தங்களின் இருப்பை உணர்த்துகிறதோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு, ஆண்டவனிடம் தொடங்கி, ஆயர்பாடி ஆடு மற்றும் மாடுகளிடம்கூட அற்புதமாக காதல்மொழி பேசும் வல்லமையை இவர்கள் எங்கிருந்துதான் பெறுகிறார்களோ! அந்த வகையில் நம் இசைக்கவி ரமணன் அவர்களின் ‘உனக்கே உனக்காக’ என்ற காதல் கவிதைகளின் தொகுப்பின் முதல் பகுதியாக இப்பாடலை அவர்தம் இனிய குரலிலேயே கேட்டு மகிழலாம்.

    ஒருநாள்..

    (பாடல்)

     

    ஒரு நாள்images

    மலராகப் பிறக்க வேண்டும்

    உன் கூந்தலில்

    சிலநேரம் இருக்க வேண்டும்

    ஒருநாள்

    தென்றலாய்ப் பிறக்க வேண்டும்

    உன் மடியினில்

    குழந்தைபோல் தவழ வேண்டும்  (ஒருநாள்)

     

    இருந்ததுவும் ஓரிதயம், அதைக்

    கவர்ந்து கொண்டாய்

    இமைவிளிம்பில் ஒரு பார்வையில், உன்

    நெஞ்சைத் தந்தாய்

    உன் மடியில், கண் மூடி

    என் பாடல் காற்றில் மிதந்திடவே  (ஒரு நாள்)

     

    உன்னிடமே என்னென்னமோ நான்

    சொல்லிட வந்தேன்

    கண்ணெதிரில் உன்னைக் கண்டதும் நான்

    என்னை மறந்தேன்

    என்னுயிரே! என் துணையே!

    என் தெய்வம் என்றும் நீதானே!  (ஒரு நாள்)

     

     

    Share
  • இசைக்கவியின் காணொலிகள்

     

     

    திரு.இசைக்கவி ரமணன் அவர்களின் மேடை நிகழ்ச்சிகளின் காணொலித் தொகுப்பு:

     

    _13425035721
    https://www.youtube.com/watch?v=RPG44eLlXsQ (கண்ணதாசன் – கேபி)
    https://www.youtube.com/watch?v=u7MfHGLCM5g (கண்ணதாசன் – கேபி 2)
    https://www.youtube.com/watch?v=MwA4kTp-lkg (கண்ணதாசன் – கேபி 3)
    https://www.youtube.com/watch?v=HIWCumXT1Bs (ATN Interview – 2 Canada)
    https://www.youtube.com/watch?v=EGv0cdZu9HQ (சொற்களே வருக வருக)
    https://www.youtube.com/watch?v=oWjDKLBWWzE (மனச வாட்டுறது)
    https://www.youtube.com/watch?v=cymfj8DQO2I (ஓடம் கரையேறி)
    https://www.youtube.com/watch?v=j_iN-j1Fhtk (ஓலைக் குடிசையிலே)
    https://www.youtube.com/watch?v=mJHrd4Dv4fQ (கங்கா ஆரத்தி என் வீடியோ)
    katharnath 133
    https://www.youtube.com/watch?v=8HwX2RxM0Gc (Rishikesh-Jageshwar-VruddhaJageshwar)
    https://www.youtube.com/watch?v=paJlioG05nk (Amritsar Wagah Border my video)

     

     

    Share
  • அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்

    இசைக்கவி ரமணன்

     

    எந்த உறவு சொந்தமுடன்
    எனது குறைகளைச் சுட்டிக் காட்டுமோ
    எந்த உறவு சுட்டிக் காட்டினால்
    இடைமறிக்காமல் ஏற்றுக்கொள்ளுமோ
    அந்த உறவே அமையவேண்டும்
    அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்
    எந்த உறவும் அந்த உறவாய்
    இயற்றி விட்டால் பாடுகின்றேன்!

    அவரவர் போக்கில் அவரவர் பயணம்
    அவரவர் மனதில் அவரவர் சலனம்
    அழுகையும் சிரிப்பும் அவரவர் அனுபவம்
    அறியாமைகளில் ஆயிரம் தனித்துவம்!
    எவரெவர் எப்படி இருந்தால் என்ன?
    எதையும் பேச நமக்கே துரிமை?
    இருக்கும் உரிமைகள் புகழவும் போற்றவும்
    இறங்கி மேலும் இறங்கிப் பணியவும்
    ஏதும் அறியான் போலே இருப்பதும்
    இங்கிதமாக விலகவும் தானே??!!

    நேசம் இருப்பதால் நெஞ்சு பதைக்கலாம்
    நெஞ்சு பதைப்பதை நேரில் சொன்னால்
    நெருடல் முளைக்கலாம்; உரிமை மீறலாய்க்
    கருதப் படலாம்; கலகம் நேரலாம்
    வாசம் வண்ணம் வழங்குதற்கப்பால்
    வாழ்ந்து உதிரும் மலர்க்கென்ன உரிமை?!
    வாழ்த்தி வணங்கி நகர்வதல்லவா
    வழிப்போக்கர்க்கு வாய்த்த கடமை!

    தவறும் சரியும் முறையாய்த் தெரிந்தால்
    தவமும் எதற்கு? தவிப்புகள் ஏது?
    அவர்கள் அறியார்; ஆயினும் அன்பர்;
    அறிந்ததாய் எண்ணி அயரும் மழலையர்!

    ரசனைகளின் ராட்சதத்தனங்களும்
    நாகரீகத்தின் மோக முகங்களும்
    கல்வியிருந்தும் காதலிருந்தும்
    கண்ணில் ஏனோ படுவதில்லையே!
    கசடு தெரியுமா கண்ணில் இருந்தால்?
    கண்டவர் சொன்னால் மனதுதான் ஏற்குமா?
    கடவுளே! என்குறை அன்றி வேறெதும், என்
    கண்ணில் படாமல் காத்தருள்கவே!

    நான்
    நேசிக்கின்ற இதயங்களுக்காய், என்னை
    நேசிக்கின்ற நெஞ்சங்களுக்காய், உன்னை
    யாசிக்கின்றேன் ஒருவரம் அருள்வாய்!
    ஊசிமுனை அளவு கூட, அவர்கள்
    உள்ளத்தினிலே குறையின்றிக் களைக!
    உலகில் அவர்கள் நலமாய் வாழ்க!
    ஒருபிழையும் அவர் செய்யாதிருக்க!
    ஒருதீங்கும் அவரை அண்டாதிருக்க!
    வலமும் இடமும் எதிரும் பின்னும்
    மேலும் கீழும் உள்ளும் புறமும்
    நீயே இருந்தவரைக் காவல் செய்க
    நலமே அந்த நல்லவர்க்கருள்கவே!

    16.06.2014 / திங்கள் / 22.43

    Share
  • பெரிய ஆசைகள்

    இசைக்கவி ரமணன்

     

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    மண்ணில் விழுந்த
    மழைத்துளி என்னும் ஆச்சரியக்குறியை
    உள்ளங்கையில் பம்பரம்போல் ஏந்தி
    உற்றுப் பார்க்கவேண்டும்

    ஒய்யாரி ஆடும் மழையின் இழைகளில்
    ஒருதுளியும் நனையாமல்
    கண்ணா மூச்சு ஆடவேண்டும்
    காற்றோடு

    நிலவில் வெண்ணெய் எடுத்து
    உலவும் முகிலில் ஒன்றைத் திரியாக்கி, என்
    கவிதையைச் சுடராக்கி, அவள்
    கண்ணில் படும்படி வைத்துவிட்டு, அவள்
    கண்ணில் படாமல், அவள்
    கண்களைப் பார்க்கவேண்டும்

    கால்பட்ட இடமெல்லாம்
    கார்மழை பொழியவேண்டும்
    கைபட்ட இடமெல்லாம்
    கலயம் பொங்கவேண்டும்

    காதலே கவிதையாய்
    கவிதையே கண்களாய்
    கண்களே நெஞ்சமாய்
    நெஞ்சோடு எல்லோரையும்
    நேசத்தால் அணைக்கவேண்டும்

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    கர்பத்திலிருந்தே மரணம்
    கழுத்தைக் கவ்விப் பிடித்தபடிதான் இருக்கிறது
    கால்வைத்த இடமெல்லாம் பொய்மை
    கப்பித்தான் கிடக்கிறது

    எனினும்
    அழகான இந்த ஆசைகள்தான்
    அற்ப உலகில்
    அடுத்த அடியை எடுத்துவைக்க
    ஆணையிடுகின்றன

    வாழத்தானா பிறந்தோம்? மற்றவரை
    வாழ்த்துவதே வாழ்க்கைக்கு
    வலுவான காரணம். என்
    வாசலெங்கும் சூறையிலும்
    வரவேற்கும் தோரணம்

    நிறைவேறிவிடுகின்ற ஆசைகளில்
    நெஞ்சுக்கு லயிப்பில்லை
    மின்னல்களை வகைபிரித்து
    மீட்டும் வரை, என்பாடலை
    இசைக்கப் போவதேயில்லை
    எதற்கும் பொறுத்திருங்களேன்!
    மீண்டும் நான் வருவேன்
    மிரளாத வானத்தில்
    மின்னலுக்குப் பஞ்சமேது

    16.06.2014 / திங்கள் / 19,53

    Share
  • காலம் என்பது!

    இசைக்கவி ரமணன்

     

    காலம் என்பது காளி நடத்தும்http://www.dreamstime.com/royalty-free-stock-image-antique-clock-rococo-image22441246
    கண்கட்டு வித்தை அல்லவா? அது
    கனவில் ஒருவிதம் நினைவில் பலவிதம்
    மாறும் விந்தை அல்லவா?
    தூலம் உறங்கும் வேளை, காலம்
    தொலைந்தே போகும் அல்லவா?
    தொட்ட பூமியை விட்ட போததன்
    தூரிகை மாறும் அல்லவா?

    கடிகாரத்தால் காலம் என்றும்
    கட்டுப் படுவதே இல்லை
    கடமையைச் செய்து பயன்கருதார்க்கோ
    மட்டுப் படுவதே இல்லை
    இடையில் நெளியும் நாகம் போலே
    இதனை அணிந்தவர் முனிவர்
    இன்றில் வாழ்ந்து நேற்றையும் நாளையும்
    இழந்தவர் அவரே தலைவர்!

    காலம் என்பது கடவுளுடையதுclock
    வளர்வதும் தேய்வதும் இல்லை
    நேரம் என்பதோ மனிதனுடையது
    கரைவது தானதன் எல்லை
    காலம் என்பது எதையும் என்றோ
    கவளம் விழுங்கி விட்டது! அதன்
    கவனம் சற்றே தளர்ந்த போது
    கவிதை அதனைத் தொட்டது!!

     

     

     

     

    Share
  • குருவாக வந்த சிவனே!

     

    இசைக்கவி ரமணன்

    25-1385353941-bangalore-shiva

     

    வினையின்றிப் புதியதோர் வெளியிலே நிற்கிறேன்
    விரல்களால் விண்தொடுகிறேன் 10312399_510682082371830_6844174118360453666_n
    வேதங்கள் கொண்டாடும் பாதங்க ளில்சின்ன
    வெள்ளிமல ராய்க்குழைகி றேன்
    மனையொன்றின் கூடத்தில் மத்யான நேரத்தில்
    மவுனம்சி லிர்த்தநொடி யில்
    மாகேச்வ ரன்முன்பு ஞானக்க னல்பட்டு
    மண்டியிட் டேன்மடிந் தேன்
    நினைவோடு நான்வீழ்ந்த நிஜமான தருணத்தில்
    நிகரற்ற நீயெழுந்தாய்
    நிசியோடு பகலும்விழ நினைவோடு கனவும்கெட
    நெஞ்செலாம் நீநுழைந்தாய்
    முனையின்றி எங்கெங்கும் முழுதான வானமே!
    முன்பின் னிலாஞான மே!
    மோனக் குகைவிட்டு ஞானக் கதைபேச
    முன்வந்த மூலவுயிரே!
    எனையின்று காக்கவே என்றிருந் தோபுவியில்
    என்றைக்கும் வாழும் திருவே!
    எங்கோ கிடந்தவனை ஏழையை மடிமீதில்
    ஏற்றியருள் பொழியுமழை யே!
    நினையன்றி வேறேதும் நினையாமல் நின்னடியின்
    நீழலில் நான்வாழ வே!
    நேரத்தில் வந்தெந்தன் பாரத்தைத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே! (1)

    ஒருதுளியும் மிஞ்சாமல் ஊட்டினாய்; சலியாமல் nataraja.gif_480_480_0_64000_0_1_0 (1)
    உறுதிமேல் உறுதிதந் தாய்
    உயரங்கள் காட்டினாய் உதிரத்தில் உன்னன்பை
    ஊற்றியென் னுயிர்மீட்டி னாய்
    மறுபடியும் நான்துன்ப மடுதேடி விரைகையில்
    மறவாமல் படியேற்றினாய்
    மாலைபக லிரவென்றும் மாறாமல் எப்போதும்
    மலராகத் தேனூற்றினாய்
    கருவங்கள் தலைதூக்கும் கணமெலாம் கண்ணோரம்
    கனலாகக் கணைவீசினாய்
    காலங்க ளிநன்துன்ப நீளங்க ளைவெட்டிக்
    கணத்தில் யுகம்தேக்கினாய்
    தெருவெங்கி லோவீழ்ந்து தேம்பிக் கிடந்தவனைத்
    தேரேற்றி ஊர்காட்டினாய்
    திரையெங்கும் நீயாகி திசையெங்கும் முகமாகித்
    திரிபற்றச் சுடராகினாய்
    திருவாகி இடையின்றித் தித்திக்கும் இன்பமே!
    தீண்டமுடி யாத்தூய்மை யே!
    திவலைமன தைப்பருகிக் கவலையவலந் திருகிச்
    சீறிடும் கங்கையாறே!
    சிறுவனெனைத் துருவமெனச் சிகரத்தில் வைத்தன்பு
    சீராட்டும் ஆச்சர்யமே!
    செப்பரிய உன்பெருமை செகமெங்கும் ந்ஆன்செப்பக்
    குருவாக வந்த சிவனே! (2)

    உனைமட்டும் வேண்டியே உனைமட்டும் நாடியே 8-1
    உன்முன்பு நிற்கவேண்டும்
    உன்முன்பு நிற்கின்ற ஒப்பற்ற உண்மையை
    உள்ளம்மற வாமைவேண்டும்!
    வினை, சுட்ட விதையாகி விதி, பட்ட மரமாகி
    வீழ்ந்தகதை நம்பவேண்டும்
    வீரத்தி லேஞான தீரத்தி லேநித்தம்
    வெற்றிநடை போடவேண் டும்
    பனைதொட்ட மின்னலில் மழைதொட்ட மட்டைபோல்
    பற்றெலாம் பற்றியெரி யப்
    பாதிநில வேந்திவரும் பரமசிவ னேயின்று
    பாலகன் நான்பிறந்தேன்!
    அனைவர்க்கும் உயிரான ஆண்டவா இன்றுன்னை
    அனைத்துமாய் நான்பருகி னேன்!
    ஆராத னையென்னும் போராட்ட மில்லாமல்
    அத்தனுன் னுள்கலந் தேன்
    வினையெச்சம் தீர்ந்தாலும் நினைவெச்சம் அறியாமல்
    வீணாக நானஞ்சினேன்
    வெற்றுநிழ லைப்பற்றி வீண்சண்டை போட்டதால்
    வெட்கியுன் முன்னிற் கிறேன்
    எனைச்சற்றும் நோக்காமல் உனைமுற்றும் பார்க்கின்ற
    ஏகாந்தம் அருளவேண் டும்
    எருவளரும் புன்னெஞ்சில் திருமலர வைக்கவே
    குருவாக வந்தசிவ னே! (3)

     

    4

    அறியாமை பூண்டபல அபிமான வேடங்கள் 73671_473465409355865_356357631_n
    அறிவென்று போய்நம்பி னேன்
    அரைநொடியும் நில்லாத ஆகாயக் குமிழிகளை
    அமரவாழ் வெனநம்பி னேன்
    தறிகெட்டுக் கவலையெனும் தறிபட்டு நெறிசிதறித்
    தாறுமா றாயலைந் தேன்
    தாகத்தி லும்வீழ்ந்த சோகத்தி லும்கங்கைத்
    தண்ணீரை நான்மறந் தேன்
    அறிவோடு நான்செய்த அரியபல பிழைகளால்
    ஆற்றுமணல் பிறவிகண் டேன்
    அல்லல்க ளால்வந்த அரைஞான அவலத்தில்
    அபலைபோல் கதறியழு தேன்
    முறியாத கவலையெனும் முளையிலே கட்டுண்டு
    முன்பின்னி லாதலைந் தேன்
    மூளாத முன்வினைகள் வாளா யறுக்கநான்
    மூச்சயர்ந் தேனைய னே
    சரிவொன்றின் ஓரத்தில் சரியான நேரத்தில்
    சற்றுநீ கைப்பற்றினாய்
    சரணங்க ளைத்தந்து மரணங்க ளைக்கொன்று
    சரியாக்கி அழகுபார்த்தாய்
    குறிவைத்த துன்கருணை கொலையுண்ட தென்துயரம்
    கொல்லையினில் தில்லைநட னம்
    குப்பையில் மேய்ந்தவனைக் கோவில்விளக்காக்கவே
    குருவாக வந்தசிவ னே!

     

    5

    வெட்கத்தை விட்டுநடு வீதிக்கு வந்துபல 148514_454117937957279_1723256555_n
    வேடங்க ளிட்டபதரை
    வேதநெறி யைவிட்டுப் பாதம்மிக வும்சுட்டு
    வீணாகிப் போனபுலையைப்
    பக்கத்தில் வைத்தமுது பரிந்தூட்டும் காட்சியைப்
    பாரென்றும் கண்டதுண்டோ?
    பாழான பிள்ளைக்குத் தோழனாய்த் துணைநிற்கும்
    பாசத்தைப் பார்த்ததுண்டோ?
    சொர்க்கங்க ளற்பமாய்த் தோன்றுபல லோகங்கள்
    சுலபமாய்த் தருவதுண்டோ?
    சொல்தந்து பொருள்தந்து சுவைதந்து சுடர்தந்து
    சொந்தமாய் ஏற்பதுண்டோ?
    தர்க்கங்க ளில்லாமல் தாழ்நீக்கி யுள்வந்து
    தன்னையாட் கொள்வதுண்டோ?
    தானுவந் தெதிர்நின்று தடையின்றி மொத்தமாய்த்
    தன்னையே தருவதுண்டோ?
    கற்பனைக் கெட்டாத கருணைக்குக் கால்களும்
    கண்களும் கையுமுண்டோ?
    ககனத்து மணியெலாம் கவியான போதுமுன்
    கால்நிழல் சொல்லில்வருமோ?
    கர்ச்சிக்கும் மெளனமெனும் கனலிலே எனைநாட்டிக்
    கண்சிமிட் டும்விந்தையே!
    கயிலாய மலைவிட்டுக் கடையனைக் காக்கவே
    குருவாக வந்தசிவ னே!

     

    6

    சிந்தனையில் கவிதைபோல் செஞ்சடையில் துளிநிலவு 3840_468056386563434_338569680_n
    சித்தம் சிலிர்க்க மின்ன
    செப்பரிய மெளனமெனும் செம்மையொரு வடிவாகிச்
    சிலைபோ லமர்ந்துதிக ழ
    வந்தனைகள் செய்யவரும் வானவரும் ஞானியரும்
    வடிவழகில் வாய்புதைக்க
    வாசலெது வானத்தில் பேசலெது ஞானத்தில்
    வார்த்தைகள் தீர்ந்துபோக
    சந்ததமும் சாட்சியாய் வந்தருளும் திரிசூலம்
    சன்னிதியில் மின்னல்வீச
    சார்ந்தமலை வெண்மையில் சங்கரனின் முழுநீலம்
    சங்கீத வண்ணமாக
    அந்தவிதம் அக்காட்சி அவ்வண்ணம் யாவையும்
    அங்ஙனே அங்கிருக்க
    ஆளரவம் மட்டுமே நாளிரவும் எழுமுலகில்
    அய்யனே எங்குவந்தாய்?
    விந்துவிழ விம்மிவிழும் விடிவற்ற தேகத்தில்
    விந்தைநீ யேன்நுழைந்தாய்?
    விதிசெய்யும் கோலங்கள் பதியாத மனதோடு
    வீதியெல் லாம்நடந் தாய்?
    பொந்துக்குள் அல்லாடும் பூச்சிக்கு முக்திதர
    பூமிக்கு வந்த சிவனே!
    கொல்லாமல் எனைக்கொன்று கொள்ளாமல் எனைக்கொள்ள
    குருவாக வந்த சிவனே!

     

    7

    ‘உள்’ளென்றனை யெந்தன் உடலவிழ மனமவிழarthanareeswarar
    உள்ளெலாம் வெளியானதே!
    ஊரறிய முடியாத ஒப்பற்ற வோர்நீலம்
    உள்ளத்தின் மடுவானதே!
    கள்மயக் கம்தரும் கட்டைவிரற் கனலொன்று
    ககனத்தின் நடுவானதே!
    காலத்தின் கட்டவிழக் கண்கள் திறந்தபடிக்
    கணமுறைந் தேபோன தே!
    முள்ளொன்றின் முனைபோல மூச்சொடுங் கிப்போக
    முன்பின்னி லாதான தே!
    மூடாத வானத்தின் முறுவலாய்த் தீவட்டம்
    மோதிரம் போல்சுற்று தே!
    வெள்ளியினைக் காய்ச்சியதில் புள்ளிவைத் ததுபோல
    விரலொளியின் இதயமின்ன
    வெற்றுடலின் மையத்தில் வெட்டவெளி யைக்காட்டி
    விந்தையொளி நடம்புரிந்தாய்
    கள்ளியினை அமுதாக்கிக் காலத்தை மலராக்கிக்
    கார்த்திகைச் சுடராக்கினாய்
    காணமுடி யாதமெய்ஞ் ஞானானு பூதியினைக்
    கண்ணுக்குள் கொண்டுவந்தாய்!
    வெள்ளிமலை தனைவிட்டு வீதியி லெனைத்தொட்டு
    விளையாட வந்தகுரு வே!
    விடையாக வந்தென்னை முடிவாகத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    8

    எண்ணமே தாயினும் எந்தையே உன்னெண்ணம்!download
    ஏந்திவரும் சொல்லுந்தன் சொல்!
    எச்செயலும் உன்செய்கை! எவ்விளைவும் உன்சித்தம்!
    எந்நிலையும் உந்தன்நிலைதான்!
    வண்ணங்க ளாய்விரியும் மனமாற்றம் யாவையும்
    வானமே உந்தன் கோலம்!
    தாக்கமும் பாதிப்பும் தர்க்கமும் முடிவுகளும்
    தலைவனே உந்தன் லீலை
    கண்காணும் காட்சியும் கண்மூட வரும்கனவும்
    கருணையே உந்தனுருவம்!
    காலத்தின் மாற்றமும் காயத்தின் தேய்வுமுன்
    கானத்தின் சுருதிலயமே!
    நண்ணும்பல உயர்வுகளும் நாட்டமும் ஏக்கமும்
    நாயகா! உந்தன் மாயம்!
    நன்மைகளும் தீமைகளும் நம்பியே! உன்நடனம்!
    நான்பொறுப் பாவதிலையே!
    புண்ணியமும் பாவமும் பூசனையும் விண்டுபோய்ப்
    புல்லில்பனி யாய்நிற்கி றேன்
    புவனங்க ளத்தனையும் பூரிக்கும் ஒளியுன்னைத்
    துளிபருகித் தீர்ந்துபோ வேன்
    அண்ணலே! நீயன்றி அணுவளவும் நானில்லை
    அன்றில்லை நாளையிலையே!
    ஆனந்த மையத்தின் அமைதியில் எனைநாட்ட
    குருவாக வந்தசிவ னே!

    9

    கனல்வீசும் உன்முன்பு கண்ணீர் ததும்புமென்11-1
    கண்முன்பு நானிறந்தேன்..
    கருணைத் தடாகமே! காலங்கள் தீண்டாத
    கமலமாய் நானெழுந்தேன்
    அனல்வீசும் சன்னிதியில் ஆள்தீர்ந்து போயிந்த
    ஆசாமி சாமியானேன்
    அத்தனே! நானென்ப தத்தனையும் தீர்ந்துபோய்
    ஆச்சர்ய மாய்மிஞ்சி னேன்
    அனுமானம் காணாத ஆதிசிவ வெள்ளத்தில்
    அற்புதத் திவலையானேன்
    அவனாகி இவனாகி அதுவாகி உவனாகி
    அறுதியில் சிவனாகினேன்
    வனமான வினைஞானக் கனலாக வானுயர
    வாழ்வின்றி நான்வாழ்கிறேன்
    வண்ணங்க ளேற்கின்ற வானமாய்க் குழந்தைபோல்
    வடிவத்தில் குணமேற்கிறேன்
    இனமான சிவஞானம்! இதமான குருபாதம்!
    இடையற்ற பரபோதமே!
    இற்றுவீழ்ந் தாலும்துளி இன்னும்வீ ழாதநான்
    இவைபருகி உயிர்வாழுமே!
    மனமான மாயைக்கும் மதமான புத்திக்கும்
    மாண்பொன்று தந்தபதியே!
    மருமத்தைக் காட்டியென் கருவத்தைத் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    10
    உன்சொற்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கிள்ளவும்ebbaf6cd-84df-466e-a66f-34819146668c_S_secvpf
    உயிருயிர்க் குயிரூட்டவும்
    உச்சியினில் கள்ளவிழ உடலெங்கும் ஒளிபதற
    உன்மத்தம் நிலையாகவும்
    உன்சொற்கள் என்மெளனம்! என்மெளனம் உன்சொற்கள்!
    உண்மையிது நிஜமாகவும்
    ஊரெங்கும் நான்சென்று உன்பெருமை தான்பேச
    உயிரெங்கும் கனல்வீசவும்
    உன்முன்பு நிற்பதும் உன்னில்நான் வாழ்வதும்
    என்னில்நான் நீயானதும்
    உடலெங்கும் உன்வடிவம் உயிரெங்கும் உன்னருவம்
    ஒன்றிலொன் றாய்நிறைவ தும்
    தன்முன்பு தான்நிற்கும் தன்மைக்குப் பெயரின்றித்
    தடுமாற்றம் கொள்வதாரோ?
    தாளாத ஞானத்தை மாளாத யோகத்தில்
    தான்தேக்கி நிற்பதாரோ?
    என்கதையும் தீர்ந்ததே! எதுவும்சிவ னானதே!
    எமனுக்குப் பணிபோனதே!
    ஏறாதி றங்காத மாறாத மெளனத்தில்
    எதுவுமொன் றாய்ப்போனதே!
    உன்வடிவம் மொத்தவொளி! உன்னாமம் ஓங்காரம்!
    உன்வீடு வெட்டவெளியே!
    உருவத்தை அருவத்தை ஒன்றாக்கித் தீர்க்கவே
    குருவாக வந்தசிவ னே!

    (‘குருவாக வந்த சிவனே’ பதிகம் நிறைவு பெற்றது)

    Share
  • ஆச்சரிய மாயை அவள்

     

    இசைக்கவி ரமணன்

    நடமாடும் கவிதையாக – என்னை n31
    நவகாளி மாற்றிவிட்டாள்!
    திடமான சிந்தைதந்தாள் – மனத்
    தீமையைத் திகிரியாய்ச் சுழலவைத்தாள்
    விடமுண்ட சிவனின்பாதி – எங்கள்
    வீரத்தி லேயொளிரும் விரிவான சோதி!
    வடமின்றித் தேரிழுத்தாள் – சுழலும்
    வாஞ்சை வஞ்சமென்னும் கண்களைக் கொண்டாள்!

    சுகமான ராகமுண்டு – சில
    சுமைதீர்ந்து போய்த்தொலைய சொல்மீண்டும் பூத்தசைய!
    அகவானில் மேகமுண்டு – நெஞ்சம்
    அழுவதே தொழிலாக அர்ச்சிப்ப துண்டு
    இகமான பரமுண்டுதான்! – இதில்
    இதமான மரணங்கள் இயல்பான நியாயம்தான்!
    நகுமாறு கண்பனிக்கும்! இஃது
    நாடகம் அல்லவே நவகாளி யம்மே!?

    உடலெங்கும் உயிரானது! இங்கு
    ஒருகோடி வீணைக்கும் உற்ற வழியானது download
    கடலிங்கு கலமானது! அட
    காலம்வெளி என்கின்ற கட்டுக் கழன்றது!
    மடமையச் சம்கலியெலாம் – வெறும்
    மண்மேடு போலச் சரிந்தேகலாச்சு
    தொடவேங்கும் வானமெல்லாம்! அவள்
    தோற்றமே பாடுமென் கானமெல்லாம்!

    புகவிடேன் புன்மைகளை! நான்
    பூசிக்கும் மன்றிலே புல்லரைக் கள்ளரை
    நகவிடேன் பேய்மனத்தை – சற்றும்
    நகரவும் விடேனிந்த நாதவொளி நடனத்தை
    சுகம்கெடேன் சுருதி மாறேன்! – துளி
    சோர்வுறேன் மூர்க்கம் கொள்ளேன்
    அகம்விடா தன்னைநின்றாள்! அவள்
    அனலான பாதங்கள் புனலாய் நடிக்குமே!

    மூச்செலாம் அவள்நாமமே! விழிகள்
    முன்விண்டு பார்ப்பதும் அவள்தோற்றமே!
    பேச்செலாம் அவள்கருணையே! என்
    பிடரிவரை பதறுமவள் பெரும்வெம்மையே!
    காற்சிலம் பெதிரொலிக்கும்! ரத்தக்
    களரியில் மலராகக் கவிதைக ளசையும்!
    ஆச்சரிய மாயை அன்னாய்! வந்து
    அருள்செய்வ தன்றிவே றறியாத பிள்ளாய்!

     

    படத்திற்கு நன்றி:

    http://navarathrii.blogspot.in/

    Share
  • உனக்கே உனக்காக – 3 : திருவரங்கம்

    இசைக்கவி ரமணன்

    காதல் தலைநகரம்

     
    திருவரங்கம்
    பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்
    காதல் தலைநகரம்

    உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள
    தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்
    சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்
    அது
    அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்
    பதறி ஏறினர் முதிய தம்பதியர்

    மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு
    மகாராணியின் பல்லக்கைப்போல

    நடைமேடையெங்கும்
    கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்
    அவர்கள் கைகளில்
    நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்
    நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்
    மல்லிகைச் சரங்களாய்….

    Share
  • வள்ளுவருக்கு வணக்கம்

    இசைக்கவி ரமணன் thiruvalluvar

    கவலைக் கடலைக் கடியும் கனலாய்க்
    கவிதை சொன்னவன் பாரதி
    காதும் காதும் வைத்தாற் போலக்
    காவியம் செய்தவன் கம்பன்
    திவலைக் குள்ளே கடலைக் காட்டிய
    தெய்வப் புலவர் வள்ளுவர்
    திரிகோணத்தின் நடுமுற்றத்தே
    தேனகலாய்த் தமிழ் வளரும்!

    ஒருவா னத்திற் கொருகதிர் போதும்Kanyakumari
    உலகில் உயிர்கள் வாழும்
    ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும்
    உயிரே ஒளிமய மாகும்
    திருவள்ளுவர் எனும் தீப மிலாமல்
    திசையை விழியறியாது
    வருவதை சென்றதை வந்ததை அவர்போல்
    வகுத்தவரே கிடையாது!

    அறமெனும் ஒருவழிப் பாதையில் நித்தம்
    அவர்கரம் பற்றி நடப்போம்
    அதன்முடி வில்நமை அழைக்கும் சத்திய
    ஒளியில் அனைத்தும் கடப்போம்
    இறப்பும் பிறப்பும் கவரிகள் வீச
    இங்கொரு முடிவைப் படைப்போம்
    இன்பம் துன்பம் என்று மயக்கும்
    இடர்களைத் தெருவில் உடைப்போம்!

     

     

     

    Share
  • உனக்கே உனக்காக – 2

    இசைக்கவி ரமணன்

    04_air

    எப்படி?

    எப்படி வந்தாய் உள்ளே?
    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க
    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க
    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி
    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

    எப்படி வந்தாய் உள்ளே?
    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே
    போதுமென்று புன்னகைக்கிறாயா?
    கன்னம் மேவும் மின்னலினாலே
    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

    எப்படி? ம்…எப்படி?
    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்
    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு
    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க
    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

    எப்படி? வேறெப்படி? ம்..?
    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்
    காலைப் பிடித்து சாதித்தாயா?
    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?
    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?
    ஊஹூம்…
    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?
    சாவகாசமாக அமர்ந்து
    சாகடித்த கதைகளை வரிவரியாய்
    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?
    ஓ!
    முற்றும் என்னை முடித்துவிட்டு
    முகத்தில் அதென்ன கோணல்?
    ஆ!
    வந்திருக்கிறார்களாம்!
    வரவேற்கவில்லையாமாம்!!

    அழைத்தோ அழைக்காமலோ
    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்
    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்
    அத்துமீறி வந்தவர்களுக்கு
    ஆரத்தி கேட்கிறதா?
    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு
    திவ்யப் பிரபந்தமா?!

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்
    நெஞ்சைப் பிசைகிறது…

    சரி சரி
    அந்த அறையில்
    மேசையில் இருக்கும் என்
    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

    Share
  • வாழ்வாங்கு வாழ்க!

    இசைக்கவி ரமணன்

    images (3)

    அன்புக் குழந்தைகளே!

    வணக்கம்!

    நன்றியுள்ள தந்தை வணங்குவதும் நன்றுதான்! ram1
    நல்லன்பில் வாழ்த்துவதும் வணங்குவதும் ஒன்றுதான்!
    என்வாழ்வில் பூரணத்தை எய்தியநாள் இன்றுதான்!
    எல்லோர்க்கும் என்போலே பிள்ளைவாய்த்தால் நன்றுதான்!

    ஏழைவீட்டுக் கூரையிலே சுரைக்கொடிதான் அலங்காரம்
    என்றிருந்த நாட்களிலே வந்து பிறந்தீர்! என்னை
    வாழவைக்கும் வளமாக வாசலிலே வரமாக
    வகைவகையாய்க் கண்முன்னே வளர்ந்து சிறந்தீர்!
    மோழையிலே மெளனத்தே மூச்சடக்கும் யோகியினை
    மூட்டைகொஞ்சம் தூக்கவைத்து முன்பு நடந்தீர்! உங்கள்
    வாழ்வையுங்கள் வழியில்சென்று வாழ்ந்துகாட்டுகின்ற போது
    வலியெல்லாம் சர்க்கரையாய் இனிக்க வைக்கிறீர்!

    நமதுகுணம் பிள்ளைகளின் சுமையாகும் என்னும்வார்த்தை
    நல்லவேளை பொய்க்கவைத்தீர் நன்றி நன்றி!!
    உமதுகுணம் மலரின்மணம் ஊறிவரும் நிலவின்நிறம்
    உம்மைப்பார்த்து வியக்கின்றேன் இன்றும் இன்றும்!!

    என்மகவாய் எப்படித்தான் வந்து பிறந்தீர்!ram2
    எந்தக்கடன் தீர்ப்பதற்காய் என்னை அடைந்தீர்!
    பொன்னிலவு பழங்குடிசை விரிசலின் வழியே
    புன்னகைத்தல் போலாநீர் என்னிடம் வந்தீர்?

    உம்மைவாழ்த்தும் முன்பு இந்த உலகை வாழ்த்துவேன்
    உள்ளத்தின் அடியிலிருந் தொன்று சொல்லுவேன்
    எம்மைப்போலப் பிள்ளைச்செல்வம் எவர்க்கும் வாய்க்கவே!
    எங்களைப்போல் எல்லோரும் இனிது வாழ்கவே!

    கண்முன்னே கதிரவனாய் நீங்கள் விரிக
    கமலம்போல் கண்டுகண்டு நாங்கள் மலர்க
    பண்ணிசைந்த கவிதைபோல் மனைவி மக்களும்
    பக்கத்தே அன்புசெய்யப் பரந்து வாழுக!

    ஆயிரமாய்ப் பிறைகளுடன் நூறு வசந்தம்
    ஆரோக்யம் ஆன்மபலம் ஆன்ற சாதனை
    தாயினும்சி றந்ததேசம் வாழ உழைத்து
    தந்தையோரம் கண்பனிக்கத் தழைத்து வாழ்கவே!

    ரமணன்

     

    Share
  • இங்கே எப்படி நீ?

     

    உனக்கே உனக்காக – 1

    tumblr_static_catch-a-dream-spirit-alchemy

    இடிந்து கிடக்கிறது கோயில்
    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே
    காரை பெயர்ந்து, ஒரு
    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்
    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து
    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி
    பொருத்தமற்ற இடத்தில்
    பூவும் அருவருப்பு

    இது மெளனமல்ல
    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்
    வாழ்வில்லாத நிசப்தம்

    அது சந்நிதியல்ல
    அது கடவுள் காலி செய்துவிட்ட,
    ஒரு
    மாறுதலையாவது தரும்
    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்
    ஆம்
    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்
    சித்திரிக்கப்படுகின்றன..

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்
    வெளவால்களின்
    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன
    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.
    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்
    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

    இங்கே..இங்கே!!
    எப்படி நீ? எதற்கு?
    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்
    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்
    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்
    எழுந்தருளியிருக்கிறாய்?.

    சொச்சமாய் இன்னும்
    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்
    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்
    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்
    ஒற்றைத் துளியின் உணர்வு
    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்
    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக
    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!
    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

    இல்லை, ஒருவேளை
    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்
    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்
    காதல் என்னும் பேதைமையைப்
    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?
    யாருக்கு?!

    முடிவில்லாத ஒரு முறிவு
    முயற்சியின்றிக் கிடக்கிறது
    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது
    எதையோ தூண்டுவதற்கு
    முதலொன்று வந்து
    முன்னே நிற்கிறது

    வெற்றிகாண முடியாத வெறுமையும்
    தோல்வியறியாத முழுமையும்
    எதிரெதிரே நிற்கின்றன
    என்ன நடக்கும் என்பது
    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்
    ஏறிவந்தாலாவது தெரியுமா?

     

    Share
  • நானும் நீயும்

    இசைக்கவி ரமணன்

    1303925-bigthumbnail
    நான் கொடுக்கவுமில்லை
    நீ எடுக்கவுமில்லை
    எந்தன் இதயத்தில்
    உந்தன் இடம்

    தானும் தானுமாய் இருந்தது
    நானும் நீயுமாய்ப் பிரிந்தது
    தேனும் பாலுமாய்க் கலந்தது
    வானும் வானுமாய் இணைந்ததோ?

    கிழக்கு ஜன்னல் வானமும்
    மேற்கு ஜன்னல் வானமும்
    மொட்டை மாடி வானத்தில்
    கைகுலுக்கி முத்தமிட்டுக்
    காணாமற்போய்த் தானானதோ?

    இல்லை. அப்படி இல்லை இன்னும்.

    இறுகத் தழுவிக்கொள்ளும் போதெல்லாம்
    இடம் மாறுகின்றன இதயங்கள்
    இதனால்தான்
    இழந்ததாகவும் நுழைந்ததாகவும் அடைந்ததாகவும்
    ஏதேதோ உணர்வுகளும் விழைவுகளும்
    எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன

    ஒன்று, தன்னை
    உணரத்தான்
    ஒன்றுபோல் இரண்டாய்
    இரண்டுபோல் ஒன்றாய்த்
    தானே மயங்கும் மாயத்தில்
    தயக்கமின்றித் தலைப்பட்டது

    சத்தியத்திற்குப் பாதைகள் கிடையாது, அந்த
    சந்நிதிக்குக் கதவுகள் கிடையாது, இது
    தத்துவமில்லை தரிசனம் என்பதைக்
    காதலைப்போல் வேறெதுவும் காட்டித் தராது

    என்னுயிரின் தேனூற்றே!
    எதிரே வா!
    இருமை இலாத அருமையை
    இருமையே உணர்த்தும் பெருமையை
    இவர்களுக்குக் காட்டுவோம் வா!
    இறுகத் தழுவியபடி
    இதழ்கள் அழுந்திப் பொருந்தியபடி
    இதயமொன்று இதயமொன்றில்
    இடைவிடாமல் தன்னைக் கரைத்தபடி……

     

    Share
  • நிற்கிறேனா? நடக்கிறேனா?

    இசைக்கவி ரமணன்

    Man-treadmill_cmyk_flat2-1024x682

     

    நின்ற இடத்தில்தான் நிற்கின்றேன்
    நில்லா தெங்கோ நடக்கின்றேன்
    என்றிக் கூத்து முடிந்திடுமோ?
    எப்படித் தானிது விடிந்திடுமோ?

    நெற்றியில் வியர்வை உயிர்க்கிறது
    நிலத்தை நனைக்கத் துடிக்கிறது
    வற்றிக் கிடந்த நெஞ்சத்தில்
    வயிரக் கனலொன் றெழுகிறது

    ஒரே இடத்தில் நின்றபடி
    ஓயா தெப்படி நடக்கின்றேன்?
    ஒரே இடத்தில் நடந்தபடி
    தொலைவை எவ்விதம் கடக்கின்றேன்?

    பாதம் விரைந்த காரணத்தால்
    பாதை விளைந்த நாள்போக
    பாதை கீழே விரைகிறது
    பாதம் அதனால் அசைகிறது

    பாதை நிற்கப் போகிறதா?
    பாதம் நிற்கப் போகிறதா?
    ஏதும் முடிவொன் றிதற்குண்டா?
    இதனைத் தான் தவம் என்கிறதா??!!

    31.05.2014 / சனிக்கிழமை / 09.55

    Share
  • மந்த்ராலயம்

    கே.ரவி

    1980-களில் இசைக்கவி ரமணன் எழுதிப் பாடி எங்கள் குழுவில் மிகப் பிரபலமான பாடல். பல்லவியில் ஹூங்காரமாக ஒரு ஹம்மிங்! அதற்கே வசப்பட்டு ஒரு போதையில் நாங்கள் எல்லாரும் அதையே ஹம் செய்து கொண்டிருப்போம். இந்தப் பாட்டும் என் இசையமைப்பில் (மெட்டு அப்படியே ரமணன் போட்டது. பின்னணி இசை மட்டும் எனது) அமரத்வனி இசைப்பேழையில் ராஜுவின் குரலில் பதிவானது. (அமரத்வனி பேழை 1987 ஆகஸ்ட் மாதம் ம்யூஸிக் அகடமியில் திருமதி ஹேமமாலினி முன்னிலையில் திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.)

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய பாடலை, கே.ரவியின் பின்னணி இசையில், ராஜகோபால் குரலில் இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam_new3.mp3

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய இதே பாடலை அவர் மகன் ஆனந்த் பாடுகிறார். அதனை இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam-Ananda.mp3

    ======================================

    என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம் – ம்ம்ம்ம்
    என்நேரமும் உன்நாமமே சங்கீர்த்தனம்images
    அந்தநாள் பாலைவனம் – உன்
    அன்பிலே ப்ருந்தாவனம் – என்
    அன்னை உன்னில் கனவும் நினைவும் துயிலும்
    (என்மனம்)
    பனித்த கண்கள் குவிந்த கைகள்
    பாதிக் கண்கள் திறந்த பண்கள்
    தனித்த வனத்தில் தாயைத் தேடும்
    மானைப் போல மருளும் நெஞ்சம்
    இனியும் பாதை தேடுவேனோ
    இமையை மறந்தும் மூடுவேனோ
    மலரைத் தேடிப் புலர்ந்த வானம்
    சரணம் சரணம் ராகவேந்த்ரம்

    நினைத்ததில்லை நெகிழ்ந்ததில்லை
    நீண்ட பாதை நடந்ததில்லை
    கனத்த நெஞ்சம் உனது பாதம்
    கனவில் கூடத் தொழுததில்லை
    கங்கையோடு பொங்கும் போது
    கண்கள் அழுத சுவடும் ஏது
    நான்விழுந்த கரையின் ஓரம்
    நாணலாகும் ராகவேந்த்ரம்
    (என்மனம்)

    (ரமணன்)

     

    கே.ரவி

    Share