இசைக்கவி ரமணன்

நடமாடும் கவிதையாக – என்னை n31
நவகாளி மாற்றிவிட்டாள்!
திடமான சிந்தைதந்தாள் – மனத்
தீமையைத் திகிரியாய்ச் சுழலவைத்தாள்
விடமுண்ட சிவனின்பாதி – எங்கள்
வீரத்தி லேயொளிரும் விரிவான சோதி!
வடமின்றித் தேரிழுத்தாள் – சுழலும்
வாஞ்சை வஞ்சமென்னும் கண்களைக் கொண்டாள்!

சுகமான ராகமுண்டு – சில
சுமைதீர்ந்து போய்த்தொலைய சொல்மீண்டும் பூத்தசைய!
அகவானில் மேகமுண்டு – நெஞ்சம்
அழுவதே தொழிலாக அர்ச்சிப்ப துண்டு
இகமான பரமுண்டுதான்! – இதில்
இதமான மரணங்கள் இயல்பான நியாயம்தான்!
நகுமாறு கண்பனிக்கும்! இஃது
நாடகம் அல்லவே நவகாளி யம்மே!?

உடலெங்கும் உயிரானது! இங்கு
ஒருகோடி வீணைக்கும் உற்ற வழியானது download
கடலிங்கு கலமானது! அட
காலம்வெளி என்கின்ற கட்டுக் கழன்றது!
மடமையச் சம்கலியெலாம் – வெறும்
மண்மேடு போலச் சரிந்தேகலாச்சு
தொடவேங்கும் வானமெல்லாம்! அவள்
தோற்றமே பாடுமென் கானமெல்லாம்!

புகவிடேன் புன்மைகளை! நான்
பூசிக்கும் மன்றிலே புல்லரைக் கள்ளரை
நகவிடேன் பேய்மனத்தை – சற்றும்
நகரவும் விடேனிந்த நாதவொளி நடனத்தை
சுகம்கெடேன் சுருதி மாறேன்! – துளி
சோர்வுறேன் மூர்க்கம் கொள்ளேன்
அகம்விடா தன்னைநின்றாள்! அவள்
அனலான பாதங்கள் புனலாய் நடிக்குமே!

மூச்செலாம் அவள்நாமமே! விழிகள்
முன்விண்டு பார்ப்பதும் அவள்தோற்றமே!
பேச்செலாம் அவள்கருணையே! என்
பிடரிவரை பதறுமவள் பெரும்வெம்மையே!
காற்சிலம் பெதிரொலிக்கும்! ரத்தக்
களரியில் மலராகக் கவிதைக ளசையும்!
ஆச்சரிய மாயை அன்னாய்! வந்து
அருள்செய்வ தன்றிவே றறியாத பிள்ளாய்!

 

படத்திற்கு நன்றி:

http://navarathrii.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *