சிறுகை அளாவிய கூழ் – 24
-இவள் பாரதி
வெறுங்கால்களுடன்
தெருவில் இறங்கி நடக்கிறாள்
செல்ல மகள்!
கல்லும் மணலும்
சிவந்த மென்கால்களைப்
பதம்பார்க்க…
ஒவ்வொரு அடியையும்
விரைவாக எடுத்துவைத்து
நடந்தே ஓடுகிறாள்!
நான்காம் வீட்டிலிருக்கும்
நாய்க்குட்டிக்கு
மாலை வணக்கம் சொல்லிவிட்டுத்
தன் வாயிலிருக்கும்
இட்டிலித் துண்டை
இருவிரலாலெடுத்து
அங்கே வைத்துவிட்டு
மீண்டும் வாசல் வருகிறாள்!
சிறுதுளையிட்ட தண்ணீர்ப் புட்டியை
உறிஞ்சிவிட்டு
மீண்டும் தெருவில் இறங்கி ஓடுகிறாள்
நான்காம் வீட்டு வாசலுக்கு
இரும்புக் கம்பிகளின் வழியே
உற்றுப் பார்க்கிறது நாய்க்குட்டி!