Category: கவிப்பேழை

  • சக்கரைக் கட்டி (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    சக்கரைக் கட்டி சந்தனக் குப்பி

    சந்நிதி எடுத்துக் கொண்டாளாம்
    சங்கரி சுந்தரி சாம்பவி பைரவி
    சாந்தமாக வந்தாளாம்
    சலங்கை குலுங்க சரிகைச் சட்டை
    சரசரக்க வந்தாளாம்
    தடையை உடைத்து, தவிக்கும் பிள்ளையைத்
    தழுவிக்கொள்ள வந்தாளாம்!

    தானே தன்னில் நிறைந்தவளாம்
    தன்னைத்தானே புனைந்தாளாம்
    வானே காணா வடிவழகை
    தானே அளைந்து அணிந்தாளாம்!

    அரற்றி புரண்டு அழுத பிள்ளையை
    ஆரத்தி எடுக்க விட்டாளாம்
    அகமும் புறமும் அறிந்தறியா
    தவனை மெல்லத் தொட்டாளாம்!

    தலையைப் பதித்த காலிலே, வெள்ளி
    நகத்தைக் காட்டிவிட்டாளாம்!
    தட்டுகிட்டுப் போன பிள்ளை வாயில்
    தானே ஊட்டி விட்டாளாம்!                     (தானே)

    சிரிக்கும் சிறுமி சிந்தையில் புகுந்து
    தித்திக்கத் தித்திக்கப் பேசுகிறாள்
    நரைத்த கிழவி அக்கறயோடு
    நடந்துவந்து பேசுகிறாள்

    இருந்த இடத்தில் இருந்துகொண்டு
    என்னென்ன வித்தை காட்டுகிறாள்! எங்கோ
    இருந்தவனை இங்கே அழைத்து
    எப்படி மயக்கி ஆளுகிறாள்!
                                                                            (தானே)

    Share
  • அழகு தாங்க முடியவில்லை (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    அழகு தாங்க முடியவில்லை
    அபலை தவிக்கிறேன், உன்
    அன்பு தாங்க முடியவில்லை
    அடிமை துடிக்கிறேன்
    பழகத் தெரியவில்லை அம்மா
    பாடு படுகிறேன், நான்
    பாமரன் நீ பராசக்தி
    பரிதவிக்கிறேன்.    (அழகு)

    விழலுக்கிறைத்த நீரைப்போலimages (1)
    விழிகள் அழுதன, காற்றில்
    விழுதுகள்போல் ஊசலாடிக்
    கைகள் தொழுதன
    அழுத கண்ணில் அமிழ்தமாக
    நீ எழுந்தனை, என்னை
    அழைத்துவந்து பிள்ளை என்று
    தழுவிக் கொண்டனை (அழகு)

    என்னசெய்தும் எந்தன் துன்பம்
    விலகவில்லையே! இந்த
    ஏழை வார்த்தை அம்பலத்தில்
    ஏறவில்லையே!
    முன்னம் செய்த வினையின் கோலம்
    முடியவில்லையே! நான்
    முட்டி மோதிப் பார்த்தும் இருள்
    விடியவில்லையே!

    அன்னை உந்தன் கண்ணில் கருணை
    ஊறிவிட்டதே! விழி
    அசைவில் எந்தன் விதியும் மதியும்
    மாறிவிட்டதே!
    புன்மை யாவும் ஒருகணத்தில்
    புனிதமானதே! இந்த
    புஷ்டி தேவி சந்நிதியில்
    பொழுது புலர்ந்ததே! (அழகு)

    Share
  • தீர்ந்தேன் நான்

    இசைக்கவி ரமணன்

    kamakshi

    வானில் வசிப்பது தெரியாமல்தான்
    வண்ண நிலவு சுடர்கிறது
    மீனின் கதையும் அப்படித்தான்
    இயற்கையில் எல்லாம் இப்படித்தான்
    நானிங்கு எதற்கு மயங்குகிறேன்?
    நானா எதையும் நடத்துகிறேன்?
    நமச்சிவாயன் முன்னிலையில்
    நந்திபோல் வாழ்ந்தால் நான் பிழைத்தேன்!

    தேனில் எழுதிய இதழ்களுடன்
    தேவி ஒருத்தி இருக்கின்றாள்
    தேடுவோர்க்குப் புதிராவாள்
    தெரிந்தவருக்கோ பதிலாவாள்
    கானில் அவளே பெருமெளனம்
    கடலில் அவளே பேரோசை
    கவிதையில் இரண்டும் அவளாகிக்
    கலந்து விரிந்து சிரிக்கின்றாள்!

    நெற்றியில் கமலக் கரம்வைத்து
    நித்திரை கலைத்து நீங்குகிறாள்
    நெஞ்சின் ஒவ்வொரு நினைவினையும்
    நேரே அவள்தான் தாங்குகிறாள்
    பற்றிய வினையை நீக்குகிறாள்
    பாவ நிழலையும் போக்குகிறாள்
    பாமரன் எனக்குப் பரம்காட்டிப்
    பல்லாங் குழியாய்ச் சிரிக்கின்றாள்!

    உருப்படாத கூளத்தை
    உயர்ந்த வீட்டில் வைத்திருந்தேன்
    உயிர்க்குயிரான வடிவத்தை
    உடைத்தும் வருந்தா துண்டிருந்தேன்
    விருத்த வடிவில் சயனத்தில்
    விவரம் கேட்டாள் சினந்தேன் நான்
    வீணனை ராஜா என அழைத்தாள்
    விழியைத் திறந்து விம்மவைத்தாள்

    சித்துகள் நித்தம் ஆடுகிறாள்
    சிறிதே உயிரைச் சூடுகிறாள்
    சென்ற கணக்கின் விதம் காட்டி
    சேர்த்த பிணக்கை அழிக்கின்றாள்
    மத்து கடைந்தாள் நொந்தமனம்
    மறுகணமே அது நந்தவனம்
    மல்லாந்தவள்விழி பார்க்கின்றேன்
    மடியின் மையலில் ஆடுகிறேன்

    இருவினை என்பதும் இனியில்லை
    இரவும் பகலும் தனியில்லை
    இன்பமும் துன்பமும் இல்லாத
    இவளே இவளே என் எல்லை
    தெருவின் முனையில் திருக்கோயில்
    தேவ தருக்களின் ஒருகாவில்
    தெரிந்த வழியே சேர்ந்தேன் நான்
    தேவியின் அருளால் தீர்ந்தேன் நான்

    Share
  • விடாது வந்த வினையெலாம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

    விடாது வந்த வினையெலாம்
    தொடாமல் எங்கு சென்றன?
    தொடாத அந்த உயர்வெலாம்
    விடாமல் என்னைத் தொடர்ந்தன
    படாமல் பட்ட பாடெலாம்
    அவன் கை பட்டு நின்றன (விடாது)

    மனத்தில் இன்று வரையிலும்
    இலாத மெளனம் வந்தது
    நினைப்பு நின்ற போதிலும்
    நில்லாமல் இன்பம் நீண்டது

    வனத்திலே சுனைக்குளே
    இனித்திடும் தனிமை வந்தது
    நினைப்பிலே நிஜத்திலே
    நிழலில்கூட இனிமை வந்தது
    எனக்குளே எனக்குளே எனக்குளே எல்லாம் நின்றது (விடாது)6

    நினைத்ததே நடந்ததால்
    நெஞ்சம் வேர்த்தது
    நிழல்களும் நிஜங்களும்
    கொஞ்சிப் பார்த்தது

    வனத்திலே தனித்தவோர்
    கணத்திலே யாவும் நேர்ந்தது
    தனித்தவோர் கணத்திலே
    வளைக்கரம் வழிமறித்தது

    கடலொடுங்கி மலையெழுந்து
    மரம்விளைந்து மலர்சிரித்தது
    (விடாது)

    Share
  • ஜாகேச்வரத்தில் நான்…

    இசைக்கவி ரமணன்

    BAJNATH

     

     

    ஆடா மரங்கள் அணிவகுத்து நின்றிருக்கும்
    மூடாத வானில் முகடு முளைத்துவரும்
    நாடா நலம்யாவும் நாடி நமையழைத்து
    வீடாய் விளங்கும் வியன்மிகுஜா கேச்வரத்தில்

    கோடானு கோடி கொடியவினை யால்பட்ட
    பாடாவும் தூளாகிப் பாட்டாகப் பல்கிவர
    ஈடேது மில்லாத இன்பத் தனிமையிலே
    ஓடெல்லாம் வானாய் உருகி இனிக்குதம்மா!

    காயாத பிஞ்சு கனியாவ தென்றென்றே
    வேயாத வானை வெறித்தபடிப் பார்த்தவன்தான்
    தாயத்தே தோற்றதெல்லாம் தான்மீண்டும் பெற்றதாய், ஓர்
    மாயத் தலைவி மடியில் விழுந்தெழுந்தேன்

    மாயத் திரைநீக்கி, மன்னவனாய் என்னையாக்கி
    நேயத் தறியினிலே நெய்ததெல்லாம் நெஞ்சாக்கி
    காயைக் கனியாக்கி, சாறாக்கி, கிண்ணத்தே
    தோய அதையூற்றித் தூக்கினாள் வான்சிலிர்க்க!
    வெட்ட வெளியெங்கும் விந்தை மிகுநீலம்
    கொட்டிக் கிடக்க, குளிர்மலையின் கூர்முடியைத்
    தொட்டுவந்த காற்று துளைக்கும் உயிர்மீது
    பட்ட கரத்தைப் பராசக்தி என்பேனா?

    கொட்ட மடிக்கின்ற கூத்தன்கை என்பேனா?
    பட்ட மறுந்த பரவசம் என்பேனா?
    நட்டநடு நெஞ்சில் நமச்சிவா யன்வந்து
    தொட்டுச் சிரிக்கின்ற தூயவுண்மை என்பேனா?

    நாள்முடிந்து, ஓடை கருத்த இரவினிலே
    தாள்பதித்து சம்போ நடமாடும் பூமியிது
    தோள்தொட்டுப் பின்னே முறுவலித்து, பேச்சுக்குச்
    சூள்கொட்டிச் சூலமுடன் கூடவரும் சாமியிது

    நிற்பனவெல் லாம்வெறும் நெட்டை மரங்களல்ல
    விற்பனர்கள்! வேத விழிதிறந்தோர்! சத்தியத்தைச்
    சொற்பட வைத்துச் சுருதி இசைத்தவர்கள்!
    முற்பட்ட மாமனிதர்! முன்னோர்கள்! மாமுனிவர்!

    பண்டை உமையரசி பாதச் சதங்கையெனத்
    தண்டை குலுங்கச் சடகங்கா செல்கிறது
    உண்மையினைக் கண்டுரைத்த ஒப்பற்ற சங்கரன்
    தண்டுவைத்த கோயிலைத் தான்தழுவி நீள்கிறது

    கண்ணெதிரே தேவியின் கன்னம் வியர்க்கிறது
    விண்குலவும் பாதத்தில் வெள்ளிநகம் பூக்கிறது
    மண்ணதிர மாதேவன் மத்தநடை கேட்கிறது
    பண்ணவொன்று மின்றிப் பரநிலை வாய்க்கிறது

    வேந்தரும் யோகியரும் வித்தகரும் தாமுவந்து
    சார்ந்த தவநிலையம்! சார்ந்தோர்க்கு முக்தியை
    ஏந்தி வழங்க எமதுசிவன் கால்நடந்து
    பூந்துகள் காற்றில் பொலியும்ஜா கேச்வரத்தில்

    ஏழையைப் பிள்ளையென ஏற்ற குருநாதன்
    வாழவைத்துத் தான்மகிழ வையத்தில் தானிறங்கிச்
    சூழ்ந்த வினைமலையைச் சுண்டுவிரல் தட்டியவன்
    ஆழ்ந்த தவம்கலையா தாசி மழைபொழிவோன்

    கூட்டிவந்தான்; தானாய்க் கொலுவிருக்கும் தேவனுடன்
    கூட்டிவைத்தான்; நான்முயன்று கூடாத இன்பத்தைக்
    கூட்டுக்குள் கொட்டிவைத்தான் கூடாமல் எட்டிநின்றான்
    கூட்டுக்குள் வீட்டைப்போய்க் குந்தி இருக்கவைத்தான்

    எந்தைத் திருவருளால் ஏகாந்த வாசத்தில்
    சிந்தை தெளிவாச்சு; சித்தம் ஒளியாச்சு;
    முந்தை வினையோ முற்றும் விழுந்தாச்சு
    மொந்தைக்கள் ளின்தயவில் மொத்தமும் நேராச்சு

    தேகம் வசப்பட்டு சிந்தை உருப்பட்டோர்
    யோகம் ஒருப்பட்டு ஞானம் வெளிப்பட்டு
    சோகச் சுவடுமின்றி, சொல்லாய் அமர்ந்துள்ளேன்
    ஜாகேச் வரத்தில் தனித்து.

    Share
  • எனது தேவி புஷ்டிமா (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

     

    (ஜாகேஷ்வரில் மஹிஷாஸுர மர்த்தினியாய் வீற்றிருக்கும் அன்னை, புஷ்டி தேவி என்னும் பெயருடன் விளங்குகிறாள். தேசம் காக்க அவளைத் தேரிலேறி வரச்சொல்லும் கூட்டுப் பாடல்)

     

     

     

    எனது தேவி புஷ்டிமா
    எழுந்து வெளியில் வருக
    தேசம் காவல் வேண்டுதம்மா
    தேரில் ஏறி வருக
    உனது காலில் தலைபதித்து
    உயிரைத் தந்தோம் வருக
    உலகம் போற்ற உனது நாட்டை
    உயர்த்தி அருள வருக!

    உனது இமையை உயர்த்தி எம்மை
    ஒருமுறை நீ பார்க்க
    உடலை மனதை உயிரையெல்லாம்
    உன்னிடத்தில் சேர்க்க (எனது)

    கலியின் பழைய கடிகாரம்
    காளி முன்பு செல்லுமோ? நீ
    காலைவைத்தால் உன்னைத் தடுக்க
    எங்கும் எதுவும் எண்ணுமோ?
    புலியில் ஏறி வருக! சிங்கப்
    புரவி ஏறி வருக!
    புயலைப் போலச் சீறிச் சினந்து
    பொய்யைப் புடைக்க வருக!
    புனிதம் நெஞ்சில் தருக! (எனது)

    நீசர் கையில் வாடுதம்மா
    நீ நடந்த தேசம்
    நினைக்க நெஞ்சில் துணிவுமில்லை
    நிழலும் கூட மோசம்
    நேசம் வாழ வேண்டும், தர்ம
    நீதி வாழ வேண்டும்
    நீ வளர்த்த பிள்ளைகளாய்
    நாங்கள் மாறவேண்டும், பழைய
    நலங்கள் சேரவேண்டும்! (எனது)

    Share
  • நவராத்திரி நாயகி (2)

     

    இசைக்கவி ரமணன்

     

    nishkrodh-copy

    என் தேச நாயகி
    எனையாளும் உன்மணி
    என் நேச ராணி நீ
    எப்போதும் தேவை நீ

    என் நினைவும் என் கனவும்
    நின் விரலில் சோழி
    இடையில் நீ இளைப்பாறும்
    ஏகாந்த ரேழி
    உன் கண்கள் உன் கால்கள்
    போதாது நாழி
    உயிருக்குள் முத்தமிடும்
    ஒய்யாரத் தோழி
                                                                 (என் தேச)

    உற்றுற்றுப் பார்க்கின்ற
    ஒற்றை விழி ஒன்று
    ஒருபோதும் திறவாத
    மர்மவிழி ஒன்று
    பற்றுற்று நோகாமல்
    பாலிக்கும் நின்று
    பாதமே பாரென்று
    பணிக்கின்ற தின்று
    என்றைக்கும் என் வாழ்க்கை
    நீகொண்ட கொள்ளை
    எதுவந்து போனாலும்
    என்றுமுன் பிள்ளை
    சற்றைக்கும் அகலாமல்
    சந்நிதியில் வாழ்வேன்
    சங்கீத மணிகேட்டு
    மலர்ப்பாதம் வீழ்வேன்
                                                                     (என் தேச)

    Share
  • நவராத்திரி நாயகி (1)

     

    இசைக்கவி ரமணன்

     

    இமயமலை – ஜாகேஷ்வரிலிருந்து திரு இசைக்கவி ரமணன் அவர்களின் தேவி வந்தனம்!

     

    amman

    ஆடவருக தேவி
    ஆடவருக
    அகலாத வினையாவும்
    அடியோடு பெயர்ந்தோட
    பகலிரவு புரியாமல்
    பரவெள்ளம் தரைமேவ
    இகமோடு பரம்யாவும்
    இதழ்சேர்ந்து விளையாட
    சுகமான பலஜதிகள்
    சுவையாக நான்பாட
                                                               (ஆட)

     

    பாடவருக தேவி
    பாடவருக
    கண்ணோடு காதலென
    பண்ணோடு கவிபெருகி
    மண்ணோடு விண்குலவி
    மானுடம் இன்பமுற
    எண்ணங்கள் ஒவ்வொன்றும்
    இசையென்னும் சிறகேறி
    மண்வீட்டில் மகனோடு
    மடித்தாளம் போட்டபடி
                                                               (பாட) 

     

    கூடவருக! தேவி
    கூடவருக!
    கூட்டுக்குள் வானத்தை
    கொண்டுவருக தேக
    ஓட்டுக்குள் அமிழ்தத்தை
    ஊற்றிவிடுக என்றன்
    பாட்டுக்குள் பண்ணாகப்
    பண்ணில் கவியாக, இனி
    கூட்டுக்குள் மீளாமல்
    கூட வருக! என்றும்
    கூடவருக!

    Share
  • இறைவா! இறைவா! இறைவா!

    இசைக்கவி ரமணன்

    images

     

     
    எங்கும் நீயே நிறைந்தாலும்
    எங்கோ இருப்பது போலிருப்பாய்
    எதிரில் ஒருமுறை வருவாயா?
    என்னுள் சிரிக்கும் இறைவா?
    என்னுயிர் ஆளும் தலைவா?

    நீயும் நானும் ஒன்றென்றால்
    யாரே யாரைத் தேடுவது
    நானும் நீயும் வேறென்றால்
    எங்கே உன்னைச் சேருவது?
    நாயேன் ஒன்றும் அறியவில்லை, இந்த
    நரகத்தின் காரணம் புரியவில்லை
    நீயாய்த் திரையை நீக்காமல்
    நெஞ்சினில் நிம்மதி வருவதில்லை

    கண்ணோ உன்னைக் காணாது
    மனமோ உன்னை மறவாது
    எண்ணம் உன்னைத் தீண்டாது, உன்னை
    எண்ணாதிருக்க முடியாது
    இறைவா! இறைவா! இறைவா!

    தவறுகளே என் தவமேடை
    தவிப்பே எந்தன் ஆராதனை
    வருவாய் வருவாய் என்றேதான்
    நம்பி நம்பி தினம் ஏங்குகிறேன்
    கண்ணீர்த் துளிகள் மலராகி
    கணந்தோறும் உன்னைப் பூசிக்கிறேன்\
    கருணைக் கடலே உன் முன்னே, ஒரு
    கவளம் ஏழை யாசிக்கிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

    ஏதோ வந்ததைப் பாடுகிறேன்
    இமைகளை மெதுவாய் மூடுகிறேன்
    மடியில் ஓரிடம் தேடுகிறேன், நான்
    மரணமில்லாமல் வாடுகிறேன்
    இறைவா! இறைவா! இறைவா!

     
    25.03.2015 / புதன் / 09.

    Share
  • தாயே சரணம்

    இசைக்கவி ரமணன்

    sakthy

    விசைத்துநிற்கும் சூலம் வியந்தடங்கும் காலம்
    விரல்கள்பத்தும் தங்கம் நகங்கள் வெள்ளிமின்னும்
    இசைக்குளே ஸ்வரங்களாய்த் துளிர்க்கும் விந்தைக் கோலம்
    இதற்குமேல் பதங்களில் அகப்படாத மாயம்

    சிலிர்த்த தங்க அருவிபோலச் சிங்கமொன்றின் பிடரி
    பணிந்துவென்ற வாழ்வினைப் பரப்பும் இன்பப் புலரி
    புலிக்குகை புகுந்தமான் நிலைநிகர்த்த பாதம்
    இகம்பரம் சுகம்துயர் இலாது நீளும் மாயம்

    சினக்கணப்பி னுள்ளே புனத்துழாயின் வாசம்durga
    தனிக்கணத்தில் வந்து தனைக்கவிழ்க்கும் நேசம்
    இனிப்பிறப்பிறப்பிலாத இன்பம் மண்டும் பாதம்
    அணுக்கணுப் பிளந்துபொங்கும் அந்த மந்தகாசம்

    வினாக்களில் விடைகளாய் விளங்கும் ஞான வெள்ளி
    விடைகளில் வினாக்களாய்க் குழப்பும் மோனக் கள்ளி
    அனைத்தும்நீ எனப்பணிந்த போதொடுங்கும் புள்ளி
    நினைப்பிலா வியப்பிலே தனைவழங்கும் அள்ளி

    நரைவிழாத நெஞ்சம் கறைபடாத சித்தம்
    மறைவிலாத காதல் மனம்விடாத போதை
    குறைவிலாத வாழ்வெலாம் இவள்கொடுத்த பிச்சை
    நிறைவெலாம் தகர்த்து மீறும் இவள்பதத்தின் இச்சை

    அனைத்திலும் இவள்முகம் ஜனித்து நெஞ்சம் கூசும்

    அகத்திலே சுகந்தமாய் அமிழ்தவார்த்தை பேசும்
    இதற்குமேலும் ஏதுமில்லை என்றெழுந்த சொல்லைச்
    சிதைக்கவே மனத்திலே சிலிர்த்தெழுந்த முல்லை

    தலைவணங்கும் போது தனைவழங்கும் தேவி
    தலைமணக்கும் தமிழின் தரம்வளர்க்கும் ஆவி
    கரங்களும் ஒடுங்க கண்ணில் கங்கை வந்து பொங்க
    கரைகிறேன் கரைகிறேன் உன் கால்கள் மட்டும் தங்க

    தொடர்ந்துகொஞ்சும் தோழியேவுன் தோள்கள் சரணம் சரணம்
    தொடர்ந்திடும் வினைவிரட்டும் வாள்கள் சரணம் சரணம்
    படர்ந்தகண்கள் பட்டுவீழ்ந்த பாதம் சரணம் சரணம்
    தடங்கள் தீர்த்துத் தழுவிக்கொண்ட
    தாயே சரணம் சரணம்!

    Share
  • கொடு இல்லை கொண்டு போ

    இசைக்கவி ரமணன்

    Tamil-Daily-News-Paper_20323908330
    அடர்ந்தி ருக்கும் காட்டிலே அமர்ந் திருக்கும் சோதியே
    படர்ந் திருக்கும் அண்ட ரண்டம் பார்த்தி ருக்கும் ஆதியே
    குடங்க விழ்த்த நீரெனத் தடம்பு ரண்ட வாழ்வுதான்
    அடங்க வேண்டி அண்டினேன் அள்ளிக் கொள்க கையிலே

    எனைப்பி றக்க வைத்தனை உனைம றக்க வைத்தனை
    வினைதுளைக்க வைத்தனை விதிக்கு நேர்ந்து விட்டனை
    எனைமறித்த பின்னும்நீ சுனையடைத்த தென்னவோ
    உனைமதித்த என்னைநீ தினம்மிதிப்ப தென்னவோ?

    வெடித்து வீழ்ந்த தொருவிதை புதைத்தெழுந்த தொருவிரல்
    துடித்துநின்ற உயிருளே நுழைந்துகொண்ட தொருதுளி
    வடித்தகஞ்சி வழியவும் சோறுவாயு வானதே
    கடித்த கார மொன்றுதான் கடைவழிக்கு மிச்சமே

    கூட்டிவைத்த என்குரு கூடவந்த என்குரு
    மாட்டிவைத்த தேதுக்கோ மறந்துவிட்ட தென்னமோ
    ஆட்டிவைக்கும் மாயமோ ஆடுகின்ற தாயமோ
    ஈட்டிமுனையில் உயிருடன் ஏழைவாழ்கி றேனடா!

    உற்றதுன்பம் தீர்த்திடு, இல்லை உயிரினைப் பறித்திடு
    உன்றன்சித்தம் என்னும் தங்க ஓடையில் கலந்திடு
    பெற்றவுன்னை அன்றியிந்தப் பிள்ளை வேறும் அறியுமோ
    பேச்சுபோதும் வாழ்வுதா! இல்லை மூச்சைக் கொண்டுபோ

    04.01.2015 / ஞாயிறு / 23.30

    Share
  • திருவாதிரை விண்ணப்பம்

    இசைக்கவி ரமணன்

    scale

    ஆதிரைத் திருநாள் அலர்ந்திடவே
    அம்பலத் தரசே ஆடுகவே
    அண்ட மனைத்தும் ஆட்டத்தில்
    அதிர்ந்த அதிர்வில் உயிர்பெறவே
    பாதி மதிக்கும் முழுமைகதி
    பாயும் கங்கைக்கும் தந்தாய்
    பாரே வியக்கும் படியிந்தப்
    பாவியின் குடிலில் ஆடுகவே!

    அருளை நம்பிப் பிழைக்கின்றேன்
    அறிவுக் கெங்கே நான்போவேன்
    அன்பே உயிரின் இயல்பானேன்
    அமெரிக் கைக்கோ என்செய்வேன்
    இருளைத் துழவிய விழியிடையே
    எதிர்ப்பட் டாயே சுடராக
    இதுவே தருணம் வந்திடுக
    ஏழைக் கொருகதி தந்திடுக

    நம்பீ! உன்னை நம்பித்தான்
    நாளும் இரவும் நடக்கிறது
    நம்பு கின்றாய் என்றேதான்
    நடுநெஞ்சில் உயிர் துடிக்கிறது
    நம்பிக் கிடக்கும் என்னை நீ
    நம்ப மறுத்தால் அம்மம்மா
    நானென் செய்வேன் என்னுயிரே
    நரக மனைத்தும் மயிர்க்காலே

    அருந்தவம் செய்தவர் உனையடைந்தார்
    ஆணவக் காரரும் உனையடைந்தார்
    அன்பால் எளிதாய் உனையடைந்தார்
    ஆலயம் தொழுதே உனையடைந்தார்
    ஒருசிறு தரமும் இல்லாமல்
    ஓரத் தினில்நான் கிடந்தாலும்
    உன்னவன் தானே என்னன்பே
    உதைத்தருள் புரிவாய் என்னுயிரே

    உலக மனைத்தும் உனதன்றோ
    ஒழியெனில் எங்கே நானொழிய? நீ
    ஒன்றே என்றன் உறவன்றோ
    ஒன்றில் என்றும் பிரிவுண்டோ?
    கலக மனதின் நடுமார்பில்
    காலை அழுத்தி வைத்திடுக
    கண்ணைச் சிறிதே திறந்திடுக
    கவிஞனை எரித்துப் பூசிடுக!

    04.01.2015 / ஞாயிறு / 23.00

    Share
  • மார்கழி மலர்கள் – கல்லுக்கு நன்றி

    இசைக்கவி ரமணன்

     

    கல்லுக்கு நன்றி

    380px-Threejewels.svg

    நேற்றைக்கு நீ என்றன்
    நெற்றியில் எறிந்த கல்
    குறிதவறாமல், முகத்தைக்
    கோணல்சிவப்பாய் ஆக்கிய கல்
    உடனே சிரித்த ஊரார்கள் ஊடே நீ
    தடமின்றி மெல்லக் கடந்து சென்றாய்

    என்மீது விழுந்த கல்
    என்னைக் கடந்து எங்கே செல்லும்!
    உன்போல இன்னும் சிலர்
    உரிமையோடு எறிந்த
    ஒவ்வொரு கல்லையும்
    ஒழுங்காக அடுக்கித்தான்
    உறுதியாக நின்றுகொண்டு
    உங்களுக்கு நன்றிசொல்லிக்கொண்டிருக்கிறேன்!

    ஊட்டி வளர்த்த பலரை விடவும்
    உதைத்து வளர்த்த உங்கள் உதவிக்கு
    மாட்சிமை அதிகமையா
    கல்லெறிந்த மண்ணின் மைந்தர்களே!

    அவமானம், வலி
    அவையேதும் இன்றில்லை
    காறித் துப்பிக் கழுவிய நீரும்
    கங்கையாய் எங்கோ விரைவது போலே
    கல்லெல்லாம் அனுபவமாகிக்
    களைப்பாறிப் பாடுகின்றேன்

    என்
    நெற்றியைப் பார்க்கும் போது
    வரத்தான் செய்யும்
    நேற்றைய நினைப்பு உங்களுக்கு
    தயங்காமல் வருக!
    தழுவக்காத்திருக்கின்றேன்
    கல்லெறிந்த கையைக்
    கனிவோடு தடவிக்
    கண்ணிலொற்றிக் கொள்வேன்

    03.01.2015 / சனி / 9.50

     

    படத்திற்கு நன்றி

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

    Share
  • மார்கழி மலர்கள் – புதிய வருடமும் பழைய கோயிலும்

    இசைக்கவி ரமணன்

     

    புதிய வருடமும் பழைய கோயிலும்

    Tamil-Daily-News-Paper_14554560185

    தேதிகள் கிழிந்தன சேதிகள் மறந்தன
    தெருமட்டும்
    களைத்ததுபோல் தென்பட்டாலும்
    சலிக்காமல் கிடக்கிறது
    சதா வளைந்து

    அந்தத்
    தெருவின் முனையில்
    மீண்டுமொரு தொடுவான நெருடல்
    தோதுபடாது என்றே
    தோன்றுகிறது எனக்கு

    திருவிழா இல்லாத வெறும் நாட்களில்
    தேரடியில் சும்மா இருக்கும் மொட்டை ரதம்போல்
    அனுபவ விழைவுகள் அடங்கிவிட்டன
    ஆர்வங்களும் ஆச்சரியங்களும்
    அயர்ச்சியின்றியே ஒடுங்கிவிட்டன
    மூடும்போது உள்ளே
    மூச்சை இழுத்துக்கொள்ளும் சுருதிப்பெட்டி போல

    கால்வைத்ததுமே
    கடந்தகாலக் காட்சிகள், நம்மைக்
    கண்பனிக்க வைப்பதற்கு முன்பே
    நேரே ஆன்மாவை நெருடுகின்ற
    நிலத்தில் வேறெங்கும் இல்லாத வாசனையோடு
    நிகழ்ந்தது நிகழ்ந்தபடி
    நெளிவுகளும் சுளிவுகளுமான சிற்பங்கள்
    நிறைந்திருக்கும் ஒரு
    கோயிலைக் கோருகிறேன்

    பலபேர் நடந்த கடற்கரை மணலை விடவும்
    பலமுகில் திரிந்த பரந்த வானத்தை விடவும்
    பரமும் இகமும் பல்லாங்குழி ஆடும்
    பழைய கோவில் விசேடமானது

    ஒரு
    காய்ச்சல் நேரத்துக் கனவில், அதிலோர்
    காலைப் பனியின் தேவதை நெளிவுகளின் நடுவே
    பாசை நடுவே பளபளக்கும் வெள்ளி மூக்குத்திபோல
    மொத்தமாய்க் கோயிலொன்று
    முளைத்து நிற்கிறது

    நெய்தொட்டுத் திரிவருடி, முத்துச் சுடர்களை
    நிமிர்த்திய விரல்களைத் தரிசிக்க ஆசை, அது
    நிழலிருட்டில் கன்னம் வருடி
    தழலேந்தியவனின் சினமுகத்தில்
    தருவித்திருக்கலாம் புன்னகையை
    யாரோ சிந்திய கண்ணீர்த் துளி
    தீரா விளக்காய் எரிந்துகொண்டிருக்கலாம்
    சிவகாமியின் ஒற்றைச் சதங்கை
    பவசாகரமாய்ப் பதறிக்கொண்டிருக்கலாம்

    கவலைகள் கவலைகளாய்
    களிப்புகள் களிப்புகளாய்
    அமைதி அயராத அமைதியாய்
    களேபரமில்லாத ஒரு கம்பீரத் தனிமையில்
    எம்பெருமான்
    ஓசையின்றி ஒரு களிநடம் புரிந்துகொண்டிருக்கலாம்

    பழைய கோயில்! ஆ!
    பழைய கோயில்!
    தமிழ்தந்த பேரிறைவன் தலையசைத்து ரசிப்பதற்காய்
    தரையிறங்கித் தானமர்ந்த கவிக்காவில்!

    எப்போதுமே யாருமே வராதது போலவும்t3
    இப்போதுதான்
    குந்தவை வந்து சந்தனம் தடவிச் சென்றது போலவும்
    மாயம் செய்கிறது, என்
    மாதேவன் கோயில்

    எட்டுவைத்தால்
    எத்தனை எத்தனையோ கண்கள் என்னை
    உற்றுப் பார்ப்பதுபோல்
    உயிரில் ஒரு மயிலிறகு வருடல்

    மீண்டுவிடவே முடியாத சரிவுகளில்
    மீண்டும் மீண்டும் என்னைத்
    தூண்டித் தள்ளிய துளிமனம்தான்
    மீளவே முடியாத தாளடியை நெருங்குகையில்
    தஞ்சத்திற்கு மிகவஞ்சித் தடுக்கிறது

    திசைகளொடுங்கும் மாடத்தில்
    தியானத்தில் இருந்து திமிர்ந்தெழுந்து
    திரியொன்று சிரிக்கிறது

    அதுவோ? அவளோ?

    சிறிய சிரிப்பில் பெருங்கோயில் மறைந்திருக்கத்
    திரும்பிய வேளையில்
    தொலைந்துபோய் விட்டிருந்தது
    தெரு

    03.01.2015 / சனி / 9.15

    Share
  • மார்கழி மலர்கள் – இது மாசுகள் நிறைந்த உலகம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]//https:www.mixcloud.com/Vallamai/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/[/mixcloud]

    36b30z-dhakshinamurti

    இது
    மாசுகள் நிறைந்த உலகம், இதில்
    மாண்புகள் எங்கே ஜெயிக்கும்
    காசுகள் தானே நம்மைப் பார்த்துக்
    கையைக் கொட்டிச் சிரிக்கும்

    விதி
    ஆசையை நம்பிப் பிழைக்கும், அதன்
    ஆட்சி வேறெங்கு பலிக்கும்
    ஈசா நீதான் கதியென நின்றேன்
    என்கதை எப்படி நடக்கும்

    ஏதோ தெருவில் ஏதோ பாடி
    எங்கோ செல்வது நன்று
    ஏழையென்றாலும், பசியென நின்று
    ஏந்தாதிருப்பது நன்று
    ஆதரவிங்கே யாரும் இல்லை
    அவரவர்க் கவரவர் பாடு
    அன்பே தெய்வம் என்றே பாடி
    அழகாய்க் கண்ணை மூடு (இது)

    வென்றது கருமம் நின்றது தருமம்
    ஏதடி இதிலே மர்மம்
    வேதனை யாவும் வெகுமதி என்றே
    வேதம் பாடும் உள்ளம்
    சென்றது செலவு வந்தது வரவு
    ஏதடி உறவு பிரிவு
    சின்னஞ் சிறுவுயிர் சிறகு விரிக்க
    எத்தனை எத்தனை கதவு!

    அது
    ஆலய மணியின் ஓசை, அதன்
    ஓசையில் ஓயும் ஆசை
    காலன் வந்தெனைத் தழுவும் முன்னே
    கவிதையை முடிக்க ஆசை

    ஒரு
    தேகம் கொடுத்த ஈசா, மலைத்
    தேனாய் இனிக்கும் நேசா
    தாகம் பசியெனக் கையேந்தாமல்
    சாகும் தரத்தை நீ தா

    29.12.2014 / திங்கள் / 22.00

    Share