இசைக்கவி ரமணன்

sakthy

விசைத்துநிற்கும் சூலம் வியந்தடங்கும் காலம்
விரல்கள்பத்தும் தங்கம் நகங்கள் வெள்ளிமின்னும்
இசைக்குளே ஸ்வரங்களாய்த் துளிர்க்கும் விந்தைக் கோலம்
இதற்குமேல் பதங்களில் அகப்படாத மாயம்

சிலிர்த்த தங்க அருவிபோலச் சிங்கமொன்றின் பிடரி
பணிந்துவென்ற வாழ்வினைப் பரப்பும் இன்பப் புலரி
புலிக்குகை புகுந்தமான் நிலைநிகர்த்த பாதம்
இகம்பரம் சுகம்துயர் இலாது நீளும் மாயம்

சினக்கணப்பி னுள்ளே புனத்துழாயின் வாசம்durga
தனிக்கணத்தில் வந்து தனைக்கவிழ்க்கும் நேசம்
இனிப்பிறப்பிறப்பிலாத இன்பம் மண்டும் பாதம்
அணுக்கணுப் பிளந்துபொங்கும் அந்த மந்தகாசம்

வினாக்களில் விடைகளாய் விளங்கும் ஞான வெள்ளி
விடைகளில் வினாக்களாய்க் குழப்பும் மோனக் கள்ளி
அனைத்தும்நீ எனப்பணிந்த போதொடுங்கும் புள்ளி
நினைப்பிலா வியப்பிலே தனைவழங்கும் அள்ளி

நரைவிழாத நெஞ்சம் கறைபடாத சித்தம்
மறைவிலாத காதல் மனம்விடாத போதை
குறைவிலாத வாழ்வெலாம் இவள்கொடுத்த பிச்சை
நிறைவெலாம் தகர்த்து மீறும் இவள்பதத்தின் இச்சை

அனைத்திலும் இவள்முகம் ஜனித்து நெஞ்சம் கூசும்

அகத்திலே சுகந்தமாய் அமிழ்தவார்த்தை பேசும்
இதற்குமேலும் ஏதுமில்லை என்றெழுந்த சொல்லைச்
சிதைக்கவே மனத்திலே சிலிர்த்தெழுந்த முல்லை

தலைவணங்கும் போது தனைவழங்கும் தேவி
தலைமணக்கும் தமிழின் தரம்வளர்க்கும் ஆவி
கரங்களும் ஒடுங்க கண்ணில் கங்கை வந்து பொங்க
கரைகிறேன் கரைகிறேன் உன் கால்கள் மட்டும் தங்க

தொடர்ந்துகொஞ்சும் தோழியேவுன் தோள்கள் சரணம் சரணம்
தொடர்ந்திடும் வினைவிரட்டும் வாள்கள் சரணம் சரணம்
படர்ந்தகண்கள் பட்டுவீழ்ந்த பாதம் சரணம் சரணம்
தடங்கள் தீர்த்துத் தழுவிக்கொண்ட
தாயே சரணம் சரணம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.