இசைக்கவி ரமணன்

scale

ஆதிரைத் திருநாள் அலர்ந்திடவே
அம்பலத் தரசே ஆடுகவே
அண்ட மனைத்தும் ஆட்டத்தில்
அதிர்ந்த அதிர்வில் உயிர்பெறவே
பாதி மதிக்கும் முழுமைகதி
பாயும் கங்கைக்கும் தந்தாய்
பாரே வியக்கும் படியிந்தப்
பாவியின் குடிலில் ஆடுகவே!

அருளை நம்பிப் பிழைக்கின்றேன்
அறிவுக் கெங்கே நான்போவேன்
அன்பே உயிரின் இயல்பானேன்
அமெரிக் கைக்கோ என்செய்வேன்
இருளைத் துழவிய விழியிடையே
எதிர்ப்பட் டாயே சுடராக
இதுவே தருணம் வந்திடுக
ஏழைக் கொருகதி தந்திடுக

நம்பீ! உன்னை நம்பித்தான்
நாளும் இரவும் நடக்கிறது
நம்பு கின்றாய் என்றேதான்
நடுநெஞ்சில் உயிர் துடிக்கிறது
நம்பிக் கிடக்கும் என்னை நீ
நம்ப மறுத்தால் அம்மம்மா
நானென் செய்வேன் என்னுயிரே
நரக மனைத்தும் மயிர்க்காலே

அருந்தவம் செய்தவர் உனையடைந்தார்
ஆணவக் காரரும் உனையடைந்தார்
அன்பால் எளிதாய் உனையடைந்தார்
ஆலயம் தொழுதே உனையடைந்தார்
ஒருசிறு தரமும் இல்லாமல்
ஓரத் தினில்நான் கிடந்தாலும்
உன்னவன் தானே என்னன்பே
உதைத்தருள் புரிவாய் என்னுயிரே

உலக மனைத்தும் உனதன்றோ
ஒழியெனில் எங்கே நானொழிய? நீ
ஒன்றே என்றன் உறவன்றோ
ஒன்றில் என்றும் பிரிவுண்டோ?
கலக மனதின் நடுமார்பில்
காலை அழுத்தி வைத்திடுக
கண்ணைச் சிறிதே திறந்திடுக
கவிஞனை எரித்துப் பூசிடுக!

04.01.2015 / ஞாயிறு / 23.00

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *