நவராத்திரி நாயகி (1)
இசைக்கவி ரமணன்
இமயமலை – ஜாகேஷ்வரிலிருந்து திரு இசைக்கவி ரமணன் அவர்களின் தேவி வந்தனம்!
ஆடவருக தேவி
ஆடவருக
அகலாத வினையாவும்
அடியோடு பெயர்ந்தோட
பகலிரவு புரியாமல்
பரவெள்ளம் தரைமேவ
இகமோடு பரம்யாவும்
இதழ்சேர்ந்து விளையாட
சுகமான பலஜதிகள்
சுவையாக நான்பாட
(ஆட)
பாடவருக தேவி
பாடவருக
கண்ணோடு காதலென
பண்ணோடு கவிபெருகி
மண்ணோடு விண்குலவி
மானுடம் இன்பமுற
எண்ணங்கள் ஒவ்வொன்றும்
இசையென்னும் சிறகேறி
மண்வீட்டில் மகனோடு
மடித்தாளம் போட்டபடி
(பாட)
கூடவருக! தேவி
கூடவருக!
கூட்டுக்குள் வானத்தை
கொண்டுவருக தேக
ஓட்டுக்குள் அமிழ்தத்தை
ஊற்றிவிடுக என்றன்
பாட்டுக்குள் பண்ணாகப்
பண்ணில் கவியாக, இனி
கூட்டுக்குள் மீளாமல்
கூட வருக! என்றும்
கூடவருக!