“தத்வமசி”

சுவாமி சின்மயானந்தாவின் பிரதம சீடரான் சுவாமி தயனந்தா அவர்கள் ஒரு சமயம் இந்துக்களின் வேத சாரம் என்றழைக்கப் படும் உபநிஷத்துக்கள் பற்றி உரையாற்றினார். அப்போது “சந்தோக்ய” உபநிஷத் பற்றிப் பேசும்போது, ‘தத்வமசி’ என்னும் வார்த்தை வந்தது.

கூட்டத்தில் ஒருவர் கேட்டார், சுவாமிஜி இந்த வார்த்தையை எளிதில் புரிந்து கொள்ளும்படியாக விளக்குங்களேன் என்று.
சுவாமி தயானந்தா அவர்கள் ஒரு கதை சொன்னார்.

வருவாய் பொருத்த மட்டில் நல்ல நிலையில் இருந்த ஒரு வண்ணான் கால்நடைகள் சந்தைக்குச் சென்று நான்கு கழுதைகள் வாங்கி வந்தான். வீட்டை அடைந்ததும் கழுதை மீது அமர்ந்தபடி தான் வாங்கி வந்த கழுதைகளை எண்ணிப் பார்த்தான், ‘,ஒண்ணு’ ரெண்டு, மூணு’ என்று. ஆனால் அவன் அமர்ந்திருந்த கழுதையைக் கணக்கில் சேர்க்காமல், “அய்யயையோ! ஒரு களுதையைக் காணுமே” என்று உரக்கக் கத்தினான். அதைக் கேட்ட அவன் மனைவி வெளியே வந்து கேட்டாள், “என்ன ஆச்சு?” என்று.

வண்ணான் நடந்ததைச் சொன்னான். மனைவி கேட்டாள், “என்னது நாலு களுதெங்க வாங்கியாந்தியா அஞ்சில்லெ நிக்கிது இங்கெ?” என்று.

வண்ணான் கேட்டான், “அஞ்சு களுதெகளா இருக்குது? நாலுதான் நான் வாங்கினேன். வார வளிலெ ஒரு களுதெ குட்டி போட்டீட்டு இருக்குமோ?

“குட்டிக் களுதெ ஒண்ணும் இங்கெ இல்லெ. எல்லாமே பெரிய களுதைங்க தான்” என்று சொல்லிய அவள், “ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு” என ஒவ்வொரு கழுதையின் தலையிலும் தட்டிக் கொண்டு வந்து கடைசியாக “ஐந்து” என்று சொல்லி அவன் தலையிலும் தட்டினாள். நீதான் அது, அந்த ஐந்தாவது கழுதை, என்று அவள் சொல்லாமல் சொன்னாள்.
கதையை முடித்தார் தயானந்தர்.

சந்தேகப் பிராணி மீண்டும் கேட்டார், “சுவாமிஜீ எனக்கு இன்னொரு சந்தேகம். நீ தான் அது, எல்லாமே ஒன்றுதான் என்றால் பின் அவை வெவேறாகத் தெரிவதேன்?”

“அது தான் மாயை. மாயையைப் பற்றி நாளை பார்க்கலாம்” எனச் சொல்லி அன்றைய பிரசங்கத்தை முடித்தார் சுவாமி தயானந்தர்.

தத்வமசி என்ற சமிஸ்கிருத வார்த்தையின் பொருள் நீ தான் அது என்பதாகும். நீ என்பது இந்த உடலையும், அது என்பது இறைவனையும் குறிக்கும் சொற்களாகும். ஆங்கிலத்தில் இதை That thou art (That you are) என்று சொல்வார்கள்.
உன்னுள் உறைந்து உன்னை இயக்குபவன் இறைவனே. அவனைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆன்மீகம்.

(தொடரும்…..)

நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.