படக்கவிதைப் போட்டி (34)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
யெஸ்ஸெம்கே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.10.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
தோல்விகள் உனக்கேது!
துவளாத மனதோடு போராடு!
வெற்றி நடை போடு!
புதிய உலகினில் பூத்த பூக்களும்
நித்தம் போராடிதான் ஜெயிக்குதம்மா!
நடந்து போனாலும்
இலஞ்ச மேம்பால இடிகற்கள்
தலைமேல் தாக்குமம்மா!
தலைக் கவசம்தான்
தங்கத்தமிழ் நாட்டிற்குத்தான்
இன்று முதல் தேவையம்மா!
ஒரு முறை பிறந்தே அலுத்து வாழும்
பெண் பிறவி உனக்கு துன்பமாகுமா!
உடைந்த கனவுகள் நனவுகள்
ஆகிட நீயும் கொஞ்சம்
உன்னை மாற்றி பழகிடணும்!
பகட்டு ஆடை உலகமில்லை
ஆணைப் போல வேடம் தரிக்க
ஜீன்ஸ் மட்டும் போதாது!
பொருத்தமில்லா உடையனைத்தும்
தமிழ்நாட்டு இயற்கைக்கு
பொருத்தமில்லை!
உடலாலே நோய் பலவும்
பொருத்தமில்லா உடையாலே
ஏன் வருந்தி அழைக்கின்றாய்?
பாலியல் தொல்லை அகல
பாங்காய் நீயும் உடை உடுத்து!
மது போதை பேய்களினால்
உண்டாகும் தொல்லை
அனைத்தும் களைந்திட
தற்காப்புக் கலை பழகிடுவாய்!
புவனமதைக் காத்திடுவாய்!
ஆசைப்படுத்தும் பொருள்
மோகமில்லை
நிலைகெட்ட வாழ்வில்
ஆறடி மண்நிலம்கூட
சொந்தமில்லை!
பிறர்வாழ வாழ்ந்திடவே
உன்னை நீயும்
செதுக்கிடணும்!
விளக்கு ஒளியின்
வெளிச்சம்போல பிறர்
வாழ வாழ்ந்திடணும்!
பெண்ணென்ற பெருமையெல்லாம்
சலங்கை அணிந்த பாதம்
மட்டும் இல்லையம்மா!
பிறர் மெச்ச வாழும்
வாழ்க்கை உண்மை உலகை
காட்டிடுமே!
ஆண் சமுதாய அடித்தளமே
ஆணித்தர அன்பில்தான்!
ஆணி வேரின் பிடியை
உந்தன் உள்ளங்கையில்
இறுக்கிப் பிடித்தால்
புவி முழுவதும்
சொந்தமாகுமே!
உன்னால் முடியும் என்றே
உலகை நீ நடத்த
துயரங்களைத் துடைத்துவிடு!
கருமுகில் துயரங்கள்
களைந்தோட வெண்ணிலவாய்
வெளி வருவாயோ!
ஆணுடன் இணைந்தே நீயும்
புவி வெல்ல வருவாயோ!
நாம் நிதானத்தோடு நடந்தாலும்
நம்மில் நிதானமாய் நடக்காதவர் முன்
நடக்க நடமாடும் நமக்குத் தேவை
தலைகவசம்.
தவறின் நடக்க நேரிடும் திவசம்.
கருத்தில் கொள்…
உயிரதைக் காக்கும் கவசமதை
உடலில் அணியச் சோம்பலினால்
உயிரை யிழக்கும் மனிதர்முன்
உறுதுணை யாக்கிடு அதையணிந்தே,
பயிரது சிறிதாய் இருக்கையிலே
பாது காக்கக் கற்றுவிடு,
உயிர்தான் உயர்ந்தது வாழ்வினிலே
உணர்ந்ததைக் கொண்டிடு கருத்தினிலே…!
-செண்பக ஜெகதீசன்…
நடைபோடு நடைபோடு
நன்மைதீமை பகுத்துணர்ந்து
நடைபோடும் பாதையெலாம்
நல்லவர்க்கெனும் வகையோடு.
மேடுபள்ளம் இடறவைக்கும்,
மிகக்கவனம் நீகொள்ளு!
காடுவழி மலையெனவும்
கண்களுக்குத் திரைபோடும்,
வாழ்க்கையிங்கு வாழ்வதற்கு,
வழிதவறிப் போகவல்ல!
சூழ்ச்சிகளை முறியடித்து
சொந்தவழி நீகண்டு
வீழ்ச்சியிலே முடங்கிடாமல்
வெற்றிதரும் பாதைகண்டு
வாழும்வழி கண்டுபிடி
வாழ்க்கையினி சொர்க்கமடி!
தலைகாக்கும் கவசந்தான்
தனக்கான ஒருவழி,
நிலைகாத்துக் கொள்ளவோ
நிறையவழி இங்குண்டு.
மலைபோல இடர்வரலாம்
மாறாத மனக்கவசம்
கலையாத கவசமெனக்
காலமெலாம் காத்துநிற்கும்.
உலகத்தில் உனக்கென்றே
ஒருவழி,அது நிச்சயமாய்
உலகத்தோடொ ழுகுகின்ற
உன்னதந்தரும் வழியாகும்.
பலபெரியோர் அனுபவத்தால்
பார்த்துவந்த வழியாகும்
வலம்வந்தே நடைபோட்டால்
வாழ்க்கையெலாம் சொர்க்கமன்றோ!
“இளவல்” ஹரிஹரன், மதுரை.
நாதியற்ற இனம்
நட்ட நடு சாலையில்
உச்சி வெயில் வேளையில்
வாகனம் ஏதுமின்றி
தலை கவசத்துடன் செல்லும் நீ
நிச்சயமாய்
தமிழ் சிறுவனாய்த்தான்
இருக்க வேண்டும்
முகத்தை மூடிக் கொண்டு
உலவ வேண்டிய
துர்பாக்கிய நிலை
நமக்கு மட்டுமே
நிகழ்கிறது
இலங்கையின்
குடிமகனாய் இருந்தாலும்
அரபு நாட்டிற்கு
பணியாளாய் சென்றாலும்
காவேரிக் கரையோரம்
நடந்து சென்றாலும்
முல்லைப் பெரியாற்றில்
குளித்தெழுந்தாலும்
ஆழ்கடல் நடுவே
மீன் பிடிக்க நினைத்தாலும்
வாழ்ந்து தொலைக்க
மரக் கூலியாய் சென்றாலும்
நம்மை நோக்கியே
இரக்கமற்றவர்களால்
ஏவுகணைகள் எய்யப்படுகிறது
தங்கள் வணிகத் தேவைக்கேற்ப
உலக நாடுகள்
நமக்காக அனுதாபப்படுகின்றன
இல்லையேல்
அலட்சியப்படுத்துகின்றன
இந்தியத் தாய் நாடும்
விதிவிலக்கல்ல என்பதே
வேதனையின் உச்சம்!
தமிழர்
உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு
நாதியற்றுப் போன இனமென
நாளைய விக்கிபீடியா
நம்மை வர்ணிக்குமோ?
பயணியின் கடன்
உலை வைக்க உயிருக்கு
அலைவது போல திரிகிறார்.
தலை திருப்பிப் பார்த்திட
தலைக்கவசமணிந்தாலும் மறக்காதே நீ
மூன்று வயதிலேயே தொடங்குகிறாரிங்கு
மூச்சை தலையைக் காப்பாற்ற.
மூக்கணாங்கயிறு போன்றது தலைக்கவசம்.
மூக்குக் கண்ணாடியாய் அணிந்திடலாம்.
நேராக நிமிர்ந்த பார்வையோடு
தேரென்று நினைப்பிலவசரமாய் ஓட்டுவார்.
கூர்மையாய் நினைத்துப் பின் பற்று
பார்! நமது காப்பிது.
அலட்சியம், அலுப்பு அடைவது
இலட்சிய வாழ்வைத் தறித்திடும்.
பாதையில் நம்மைக் காத்தல்
பாதசாரி பயணியின் கடன்.
வரியாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-10-2015