மார்கழி மலர்கள் – புதிய வருடமும் பழைய கோயிலும்

இசைக்கவி ரமணன்

 

புதிய வருடமும் பழைய கோயிலும்

Tamil-Daily-News-Paper_14554560185

தேதிகள் கிழிந்தன சேதிகள் மறந்தன
தெருமட்டும்
களைத்ததுபோல் தென்பட்டாலும்
சலிக்காமல் கிடக்கிறது
சதா வளைந்து

அந்தத்
தெருவின் முனையில்
மீண்டுமொரு தொடுவான நெருடல்
தோதுபடாது என்றே
தோன்றுகிறது எனக்கு

திருவிழா இல்லாத வெறும் நாட்களில்
தேரடியில் சும்மா இருக்கும் மொட்டை ரதம்போல்
அனுபவ விழைவுகள் அடங்கிவிட்டன
ஆர்வங்களும் ஆச்சரியங்களும்
அயர்ச்சியின்றியே ஒடுங்கிவிட்டன
மூடும்போது உள்ளே
மூச்சை இழுத்துக்கொள்ளும் சுருதிப்பெட்டி போல

கால்வைத்ததுமே
கடந்தகாலக் காட்சிகள், நம்மைக்
கண்பனிக்க வைப்பதற்கு முன்பே
நேரே ஆன்மாவை நெருடுகின்ற
நிலத்தில் வேறெங்கும் இல்லாத வாசனையோடு
நிகழ்ந்தது நிகழ்ந்தபடி
நெளிவுகளும் சுளிவுகளுமான சிற்பங்கள்
நிறைந்திருக்கும் ஒரு
கோயிலைக் கோருகிறேன்

பலபேர் நடந்த கடற்கரை மணலை விடவும்
பலமுகில் திரிந்த பரந்த வானத்தை விடவும்
பரமும் இகமும் பல்லாங்குழி ஆடும்
பழைய கோவில் விசேடமானது

ஒரு
காய்ச்சல் நேரத்துக் கனவில், அதிலோர்
காலைப் பனியின் தேவதை நெளிவுகளின் நடுவே
பாசை நடுவே பளபளக்கும் வெள்ளி மூக்குத்திபோல
மொத்தமாய்க் கோயிலொன்று
முளைத்து நிற்கிறது

நெய்தொட்டுத் திரிவருடி, முத்துச் சுடர்களை
நிமிர்த்திய விரல்களைத் தரிசிக்க ஆசை, அது
நிழலிருட்டில் கன்னம் வருடி
தழலேந்தியவனின் சினமுகத்தில்
தருவித்திருக்கலாம் புன்னகையை
யாரோ சிந்திய கண்ணீர்த் துளி
தீரா விளக்காய் எரிந்துகொண்டிருக்கலாம்
சிவகாமியின் ஒற்றைச் சதங்கை
பவசாகரமாய்ப் பதறிக்கொண்டிருக்கலாம்

கவலைகள் கவலைகளாய்
களிப்புகள் களிப்புகளாய்
அமைதி அயராத அமைதியாய்
களேபரமில்லாத ஒரு கம்பீரத் தனிமையில்
எம்பெருமான்
ஓசையின்றி ஒரு களிநடம் புரிந்துகொண்டிருக்கலாம்

பழைய கோயில்! ஆ!
பழைய கோயில்!
தமிழ்தந்த பேரிறைவன் தலையசைத்து ரசிப்பதற்காய்
தரையிறங்கித் தானமர்ந்த கவிக்காவில்!

எப்போதுமே யாருமே வராதது போலவும்t3
இப்போதுதான்
குந்தவை வந்து சந்தனம் தடவிச் சென்றது போலவும்
மாயம் செய்கிறது, என்
மாதேவன் கோயில்

எட்டுவைத்தால்
எத்தனை எத்தனையோ கண்கள் என்னை
உற்றுப் பார்ப்பதுபோல்
உயிரில் ஒரு மயிலிறகு வருடல்

மீண்டுவிடவே முடியாத சரிவுகளில்
மீண்டும் மீண்டும் என்னைத்
தூண்டித் தள்ளிய துளிமனம்தான்
மீளவே முடியாத தாளடியை நெருங்குகையில்
தஞ்சத்திற்கு மிகவஞ்சித் தடுக்கிறது

திசைகளொடுங்கும் மாடத்தில்
தியானத்தில் இருந்து திமிர்ந்தெழுந்து
திரியொன்று சிரிக்கிறது

அதுவோ? அவளோ?

சிறிய சிரிப்பில் பெருங்கோயில் மறைந்திருக்கத்
திரும்பிய வேளையில்
தொலைந்துபோய் விட்டிருந்தது
தெரு

03.01.2015 / சனி / 9.15

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.