இசைக்கவி ரமணன்

kamakshi

வானில் வசிப்பது தெரியாமல்தான்
வண்ண நிலவு சுடர்கிறது
மீனின் கதையும் அப்படித்தான்
இயற்கையில் எல்லாம் இப்படித்தான்
நானிங்கு எதற்கு மயங்குகிறேன்?
நானா எதையும் நடத்துகிறேன்?
நமச்சிவாயன் முன்னிலையில்
நந்திபோல் வாழ்ந்தால் நான் பிழைத்தேன்!

தேனில் எழுதிய இதழ்களுடன்
தேவி ஒருத்தி இருக்கின்றாள்
தேடுவோர்க்குப் புதிராவாள்
தெரிந்தவருக்கோ பதிலாவாள்
கானில் அவளே பெருமெளனம்
கடலில் அவளே பேரோசை
கவிதையில் இரண்டும் அவளாகிக்
கலந்து விரிந்து சிரிக்கின்றாள்!

நெற்றியில் கமலக் கரம்வைத்து
நித்திரை கலைத்து நீங்குகிறாள்
நெஞ்சின் ஒவ்வொரு நினைவினையும்
நேரே அவள்தான் தாங்குகிறாள்
பற்றிய வினையை நீக்குகிறாள்
பாவ நிழலையும் போக்குகிறாள்
பாமரன் எனக்குப் பரம்காட்டிப்
பல்லாங் குழியாய்ச் சிரிக்கின்றாள்!

உருப்படாத கூளத்தை
உயர்ந்த வீட்டில் வைத்திருந்தேன்
உயிர்க்குயிரான வடிவத்தை
உடைத்தும் வருந்தா துண்டிருந்தேன்
விருத்த வடிவில் சயனத்தில்
விவரம் கேட்டாள் சினந்தேன் நான்
வீணனை ராஜா என அழைத்தாள்
விழியைத் திறந்து விம்மவைத்தாள்

சித்துகள் நித்தம் ஆடுகிறாள்
சிறிதே உயிரைச் சூடுகிறாள்
சென்ற கணக்கின் விதம் காட்டி
சேர்த்த பிணக்கை அழிக்கின்றாள்
மத்து கடைந்தாள் நொந்தமனம்
மறுகணமே அது நந்தவனம்
மல்லாந்தவள்விழி பார்க்கின்றேன்
மடியின் மையலில் ஆடுகிறேன்

இருவினை என்பதும் இனியில்லை
இரவும் பகலும் தனியில்லை
இன்பமும் துன்பமும் இல்லாத
இவளே இவளே என் எல்லை
தெருவின் முனையில் திருக்கோயில்
தேவ தருக்களின் ஒருகாவில்
தெரிந்த வழியே சேர்ந்தேன் நான்
தேவியின் அருளால் தீர்ந்தேன் நான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.