Category: Peer Reviewed

  • (Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்

    (Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    முன்னுரை

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படினும் தமிழிலக்கிய உலகில் தனித்தும் தலைமை சான்றும் விளங்குவது திருக்குறளே. நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டு திகழும் தமிழின் தலைமைப் பனுவலான அதற்கு உரைகண்ட சான்றோருள் பரிமேலழகரும் ஒருவர். அவருடைய உரையழகை அவர் மேல் ஏற்றி இக்கட்டுரையில் இனி அவர் ‘அழகர்’ என்றே குறிக்கப்படுவார். திருக்குறளின் முதல் உரையாசிரியர்கள் பதின்மருள் காலத்தால் பிற்பட்ட அழகரின் உரை ஏனைய உரைகளை எல்லா உரைக்கூறுகளிலும் விஞ்சிக், காலத்தை வென்றும் கடந்தும் நிற்கும் சிறப்பினை உடையதாக விளங்குகிறது. அத்தகைய சிறப்புக் கூறுகளுள் ஒன்றான திருக்குறள் அதிகார முறைவைப்பினுக்கு அழகர் கூறும் விளக்கத்தினைச் சுருக்கமாக எடுத்துரைப்பதையே இக்கட்டுரை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    1. அழகரின் உரை மாண்பு

    எப்பொருளைப் பற்றியும் எழுதுவதற்கு முன்னால் அதுபற்றிய முந்தைய அறிஞர்தம் கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வது ஆய்வு நெறிகளுள் தலையாயதாகும். செந்நெறியாகிய அந்நெறியைப் பின்பற்றிய அறிஞருள் அழகரும் ஒருவர். இவர் உரைக்கு முன்னோடியாக இருந்த உரை மணக்குடவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே ஆகும். தமிழ் மரபார்ந்த அவ்வுரை ‘செந்தமிழ்ச் செம்மல்’ வ.உ.சி. அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற சிறப்பினையுடையது. “பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார்” என்னும் கருத்து அழகர் உரை ஆதரவாளரும் எதிர்ப்பாளரும் சிந்தனையுள் இருத்த வேண்டிய ஒன்றாகும்.

    1.1. அழகரின் உரை நெறி

    தமிழிலக்கிய உரை வரலாற்றில் அழகரின் திருக்குறள் உரை தனிச்சிறப்பினைப் பெற்று நிலைத்திருப்பதற்குப் புறக்காரணங்களைவிட அவ்வுரையின் கட்டுமானமாகிய அகக்காரணமே தலையானதாகும். வேறு எந்த இலக்கிய உரைகளிலும் காண்பதற்கு அரியனவாகிய அக்கட்டுமானச் சிறப்புக்கள்  எளிய புரிதலுக்காகப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.

    1. குறட்பாவுக்கு உரையெழுங்கால் ஏனையோர் எழுதிய உரைகளை நினைவிற் கொள்கிறார்.
    2. பாடவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிறார்.
    3. பொருத்தமற்ற பாடங்களை விலக்குகிற இவர் தவறான உரையைக் காரணம் காட்டி மறுக்கின்றார்.
    4. மதிக்கத்தக்க பிற உரைகளை ‘என்பாரும் உளர்’ எனச் சுட்டிச் செல்கிறார்.
    5. மாறுபட்ட கொள்கைகளையும் மதிக்கும் பண்பாளரான இவர், போற்றத்தகுந்த வேறுபாடுகளைப் போற்றுகின்றார்.

    மேற்சொல்லப்பட்ட அழகரின் இத்தகைய உரை மாண்புகள், அவ்வுரையில் காணப்படும் இலக்கண மற்றும் இலக்கிய சிறப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் தனித்தனித் தொகுப்புக்கும் ஆய்வுக்கும் உட்படும் சிறப்புக்குரியன. அவற்றுள் ஒன்றான அதிகார முறைவைப்புக்கான விளக்கம் பற்றிய ஆய்வு பின்வரும் பத்திகளில் தொடர்கிறது.

    1.2. அழகர் நோக்கில் இயல்களுக்குள் அதிகாரங்கள்

    மானுடத்திற்கான நெறிமுறைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துணர்த்தும் திருக்குறளில் அறத்துப்பால், ‘பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்’ என நான்காகவும், பொருட்பால், ‘அரசியல் அங்கவியல், ஒழிபியல்’ என மூன்றாகவும், காமத்துப்பால், ‘களவியல், கற்பியல்’ என இரண்டாகவும் அமைந்து நூல் நிறைகிறது. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதும் திருக்குறள் தன்னுள் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதுமான ஒற்றுமை வியப்பானதாகக் கருதப்படலாம். அழகர் திருக்குறள் அதிகாரங்களை ஒன்றிலிருந்து இறுதிவரை நிரலாக நோக்குவதில்லை. ஒவ்வொரு இயலையும் தனித்தனிப் பொருண்மை கூறும் பகுதிகளாகக் கொண்டு அவற்றுள் அடங்கியிருக்கிற அதிகாரங்களுக்கேற்றபடியே வைப்புமுறை கூறி விளக்குவதை அறிய முடிகிறது.

    1.2.1 இயலுக்குள் அதிகாரங்கள் ஒரு சிந்தனை

    இயலுக்குள் ‘அதிகாரம்’ என்னும் வரையறையால் தமது உரையில் பொருட்சிதைவோ மயக்கமோ ஏற்படுவதற்கான வாய்ப்பினை அழகர் தவிர்த்து விடுகிறார். அதாவது இல்லறவியல் அதிகாரக் கருத்துக்கள் அவ்வியலுக்கு உரியன, துறவறவியலில் உரைக்கப்பட்ட கருத்துக்கள் துறவறவியலுக்குரியன என்னும் தெளிவை முன்னிறுத்திக் கொள்கிறார். இந்தத் தெளிவு ஒவ்வொரு பாலிலும் அவர் பிரித்தமைத்துக் கொண்ட இயலிலும் இயலுக்குள் அமைந்த அதிகாரங்களுக்குள்ளும் புலனாவதை அறியலாம். சான்றாகத் திருக்குறளில் ஒரே அதிகாரம் ஒரு இயலாக அமைந்திருப்பது ‘ஊழ்’ என்னும் அதிகாரமாகும். இது துறவறவியலின் இறுதியாக அமைந்திருப்பது. இது அவ்வியலோடு இணையாது தனித்ததொரு இயலாக அமைந்ததன் காரணத்தை அறிய முயல்கிறார் அழகர். ‘ஊழ்’ என்பது அறத்தோடு தொடர்புடையது என்பதும் பொருளுக்கோ இன்பத்திற்கோ தனித்தனியான தொடர்பற்றது என்பதும் அவருக்குத் தெரிந்த உண்மை. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதாலேயே,

    “இது பொருள் இன்பங்கள் இரண்டற்கும் பொதுவாய் ஒன்றனுள்
    வைக்கப்படாமையானும் அறத்தொடு இயைபுடைமையானும் அதனது
    இறுதிக்கண் வைக்கப்பட்டது.”

    என அதிகார வைப்பு முறைக்கு விளக்கம் கூற முடிகிறது. வேறுவகையாகச் சொன்னால் 38ஆவது அதிகாரமாக உள்ள ஊழ் என்பது 109ஆவது அதிகாரமாக அமைக்கப்படாததற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறார் என்பதாம். ‘ஊழ்’ தனி இயலானதற்கும் அது அறத்துப்பாலின் இறுதியில் வைக்கப்பட்டதற்கும் அழகரின் இந்த விளக்கமே துணை புரிகிறது. ஓர் இயலின் தொடக்கமாகவும் இறுதியாகவும் அமைந்துள்ள ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தின் வைப்புமுறை பெரிதும் நுட்பமானது., சிந்திகக்கத்தக்கது. இத்தகைய நுட்பமான சிந்தனை சார்ந்த அதிகார வைப்புமுறைகள் ஒருசில எடுத்துக்காட்டுக்களால் விளக்கப்படுகின்றன.

    1.3. அழகரின் அதிகார வைப்புமுறைக் கோட்பாடுகள்

    பொதுவாக ஒவ்வொரு அதிகாரத் தொடக்கத்தில் அதிகாரத் தலைப்புக்கான விளக்கத்தைக் கூறி அதற்கும் அதற்கு முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பால் வைப்புமுறையை விளக்குவது அழகருக்கு இயல்பு. ஆனால் ஒருசில நேர்வுகளில் முற்றிலும் மாறுபட்டுப் பெரிதும் நுட்பமாக வைப்புமுறை கூறுவது அவர்க்கேயுரிய தனிச்சிறப்பாகும்.

    1. அதிகாரத் தலைப்புக்கான பொருளை விளக்குவதன் மூலம் இரண்டு அதிகாரங்களின் வைப்புமுறைப் பொருத்தத்தை விளக்குதல்
    2. முந்தைய அதிகாரத்தின் இறுதியிலேயே பின்வரும் அதிகாரத்திற்கான வைப்புமுறையை விளக்குதல்
    3. பொருள் விளக்கத்தை மட்டுமே கூறி வைப்புமுறையைக் கற்பாரே உணரச் செய்தல்
    4. இரண்டுக்கும் மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருளை விளக்குவதன் மூலம் அதிகார வைப்புமுறைக்கான பொருத்தத்தை விளக்குதல்.
    5. இயலின் இறுதியில் வைப்புமுறைக்கான காரணத்தை விளக்குதல்

    என்னும் ஐந்து முறைகளில் திருக்குறள் அதிகார வைப்புமுறைக்கான காரணங்களைப் அழகர் விளக்குவதாகக் கொள்ளலாம்.

    1.4. அதிகாரத் தொடக்கத்தில் வைப்புமுறைப் பொருத்தம்

    அதிகார வைப்புமுறையை விளக்குவதில் அழகர் பெரிதும் இம்முறையையே பின்பற்றியுள்ளார்.  சான்றாக,

    “இது பெரும்பாலும் அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய
    அதனைப் (சிற்றினத்தைப்) பொருந்தின், பெரியாரைத் துணைக்கோடல்
    பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன் (பெரியாரைத்
    துணைக்கோடலின்) பின் வைக்கப்பட்டது”

    எனச் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகார வைப்பிற்குக் காரணம் சுட்டுவதும்,

    “தகை அணங்குற்ற தலைமகன் இது (குறிப்பறிதல்)
    வேண்டுமாகலான் அணங்குறுத்தலின் பின் வைக்கப்பட்டது”

    எனக் காமத்துப்பாலின் குறிப்பறிதல் (110) அதிகார வைப்பிற்குக் காரணம் காட்டுவதும் சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம்.

    1.5. முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்பு முறை பொருத்தம்

    திருக்குறள் அறத்துப்பால் ஆறாவது அதிகாரம் ‘வாழ்க்கைத் துணைநலம்’ ஏழாவது அதிகாரம் ‘புதல்வரைப் பெறுதல்’ (இதனை ‘மக்கட்பேறு’ என்றே அழைக்கவேண்டும் என்று பெண்ணியச் சிந்தனையாளர் பலரும் கூறுவர். ஆனால் இந்த மாற்றத்தைப் பரிமேலழகருக்கு முன்பே பரிதியார் முதலியோர் உரைகளிலும் காணமுடிகிறது) (419) ‘புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத் தொடக்கத்தில்,

    “இறுபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன்
    மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர்கடன்
    வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும்
    அல்லது இறுக்கப்படாமையின் அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்
    மக்களைப் பெறுதல்”

    எனப் பொருள் விளக்கம் கூறிய அழகர், ‘அதிகார முறைமை மேலே பெறப்பட்டது’ என முந்தைய அதிகாரத்தின் இறுதியில் அமைந்த அவர்தம் உரைப்பகுதியை அவரே சுட்டிக்காட்டுகிறார். ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் முந்தைய அதிகாரத்தில் அமைந்த இறுதிக் குறளான,

    “மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு”

    என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய அழகர்,

    “வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி
    வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய்
    செய்யப்பட்டது”

    என அதிகாரங்களின் அமைப்பு முறைக்கு விளக்கமளிப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு அழகர் உரையெழுதுவதற்குக் காரணமே திருக்குறள் கட்டமைப்பை அவர் ஊன்றி நோக்கியதேயாகும். அதாவது ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் ஏனைய ஒன்பது குறட்பாக்களும் மனைவியின் மாட்சிமையைப் பேச, இவ்வொரு குறட்பா மட்டும் தனித்துநின்று மக்களைப் பற்றிப் பேசுகிறது என்னும் நுட்பத்தை அழகர் புரிந்து கொள்ளுகிறார். கொண்டு, இல்வாழ்க்கையின் நலம் மக்கட்பேறே என்னும் முடிவுக்கு வந்து அடுத்த அதிகாரம் அதனைப் பற்றியே பேசுகிறது என்பதைப் பெறவைத்து விடுகிறார். வாழ்க்கைத் துணை, துணையின் நலம், (இல்வாழ்க்கையின் நலம்) மக்கட்பேறு என்னும் கருத்து நிரலும், ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறட்பா அமைப்பும் அடுத்து நின்ற ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத் தலைப்பும் அழகரின் நுண்மாண் நுழைபுலமும் ஒரே இழையில் ஊடாடுவதை இதனால் புரிந்து கொள்ள இயலும். இவ்வாறு எதிர்வரும் அதிகாரத்தின் வைப்புமுறைக்கு முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்புமுறை விளக்கம் கூறும் இவர்தம் உரைப்போக்கினை நன்றியில் செல்வம் (101), நல்குரவு (105) முதலிய அதிகாரங்களிலும் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.

    1.6. வைப்புமுறை அமைதியைக் கற்பாரே உணரச் செய்தல்

    அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் விளக்கம் கூறி, வைப்புமுறைக்கான காரணத்தைக் கூறும் நெறிக்கு அடுத்த நிலையில் பெரும்பான்மையான இடங்களில் அழகர் பின்பற்றும் நெறி இதுதான். வைப்புமுறைக்கான காரணம் தெளிவாகுமாறு விளக்கம் அமைந்து விடுதலின் அதற்கான காரணத்தை அவர் தனித்துச் சுட்டாதிருந்திருக்கலாம். மேலும் கற்பாரின் ‘புரிதிறனை’ உயர்வாகக் கருதும் அவரது உயர்பண்பாட்டின் வெளிப்பாடாகவும் கருதலாம். கல்வியின் சிறப்பை முதலில்  உடன்பாட்டால் கூறித் தொடர்ந்து ‘கல்லாமை’ என அதன் சிறப்பையே எதிர்மறை முகத்தால் பெறவைத்த திருவள்ளுவர் கேள்வியினால் கல்விச்சிறப்பை நிறைவு செய்கிறார். இவைகளின் விளைவாக அமைவது செயற்கை அறிவு. இச்செயற்கை அறிவுடன் இயற்கையில் அமையும் உண்மையறிவு இணைந்தாலேயே அறிவுடைமை முழுமை பெறும். கல்வி, கல்லாமை, கேள்வி என்னும் நிரலில் அமைந்திருக்கும் ‘அறிவுடைமை’ (43) என்னும் அதிகாரம் உண்மையறிவின் இன்றியமையாமையை வற்புறுத்துவது.

    “கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மையறிவு
    உடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்”

    எனக் கூறி விடுக்கிறார் அழகர். வான்சிறப்பு (2), அறன்வலியுறுத்தல் (4), வாழ்க்கைத் துணைநலம் (6), அன்புடைமை (8), துறவு (35), அவா அறுத்தல் (37), பெரியாரைத் துணைக்கோடல் (45), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடமறிதல் (50), தெரிந்து வினையாடல் (52), இடுக்கண் அழியாமை (63), வினைத்திட்பம் (67), வினைசெயல்வகை (68), அவையஞ்சாமை (73), நாடு (74), படைமாட்சி (77), படைச்செருக்கு (78), நட்பு (79), நட்பாராய்தல் (80), பண்புடைமை (100), நாணுடைமை (102), இரவு (106), இரவச்சம் (107), புணர்ச்சி மகிழ்தல் (111), படர்மெலிந்திரங்கல் (117), நெஞ்சொடு புலத்தல் (130), புலவி (131), புலவி நுணுக்கம் (132), ஊடலுவகை (133) என்னும் அதிகாரங்களில் எல்லாம் ‘அதிகார முறைமையும் இதனானே விளங்கும்’ என்ற தொடரின் மூலம் வைப்புமுறை அமைதியைக் கற்பாரை உணரச் செய்யும் வகையில் உரையெழுதியுள்ளார் அழகர்.

    1.7. ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் வைப்புமுறை

    இன்னதற்குப் பின் இது என்பது நிரலான வைப்புமுறை. இன்னவைகளுக்குப் பின் இன்னது என்பது கூடுதல் நிரலாகக் கொள்ளப்படலாம் அழகர் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்திற்கான வைப்புமுறையைப் பதிவு செய்கிற போது அதற்கு முந்தைய அதிகாரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது  ஒன்றுக்கு மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருண்மைகளைக் கருத்திற் கொண்டு வைப்புமுறைக்குப் பொருத்தம் காண்பதை அறிய முடிகிறது. இது பற்றிய விளக்கம் ஒருசில சான்றுகளால் பின்வரும் பத்தியில் ஆராயப்படுகிறது.

    1.7.1.  அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை

    அழுக்காறாமை, வெஃகாமைக்குப் பின் புறங்கூறாமை வைத்தது பற்றிய விளக்கத்தை அழகர் இப்படிப் பதிவு செய்திருக்கிறார். அழுக்காறு, வெஃகுதல், புறங்கூறுதல் ஆகியன மனம், மொழி, மெய் என்னும் களங்களில் தோன்றும் பாவங்களாகும். மனக்குற்றம் ஏனைய குற்றங்களுக்குக் காரணமாகிறது.  புறங்கூறுதல் மொழிக்குற்றம். பிறர் ஆக்கம் கண்டவழி அழுக்கறுத்தல், தனக்குரியதல்லாத பொருளை வெஃகுதல் முதலியன மனக்குற்றங்கள். ‘புறங்கூறாமை’ (19) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை எழுதும் அழகர், இதனைக் கருத்திற் கொண்டு,

    “மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், அஃது
    அழுக்காறாமை, வெஃகாமைகளின் பின் வைக்கப்பட்டது.”

    என எழுதும் உரைப்பகுதியால் குற்றங்களைக் காரண காரியத்தோடு பகுத்து நோக்கும் அழகர் திறம் புலப்படுவதை அறிய முடிகிறது.

    1.7.2. இனியவை கூறல் புறங்கூறாமை, பயனில சொல்லாமை

    அறத்துப்பாலில் இனியவை கூறல் (18), புறங்கூறாமை (19) என்னும் அதிகாரங்களை அடுத்துப் பயனில சொல்லாமை (20) என்னும் அதிகாரம் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தின் இட வைப்புமுறை பற்றிச் சிந்திக்கும் அழகர், அறத்துப்பால் முழுமையையும், அதன்கண் அமைந்துள்ள இயல் அனைத்தையும் ஓரலகாகக் கொள்கிறார். கொண்டு,

    “பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்லாமை என வாக்கின்கண்
    நிகழும் பாவம் நான்கனுள் பொய், துறந்தார்க்கல்லது ஒருதலையாக்
    கடியலாகாமையின் அஃதொழித்து, இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை
    மூன்றனுள், கடுஞ்சொல், இனியவை கூறலானும் குறளை
    புறங்கூறாமையானும் விலக்கி நின்ற பயனில சொல் இதனால்
    விலக்குகின்றார் ஆகலின் இது புறங்கூறாமையின் பின்
    வைக்கப்பட்டது.”

    என வைப்புமுறை கூறுவதைக் காணமுடிகிறது. இதனால் பாவங்களை அதிகாரப்படுத்துங்கால் திருவள்ளுவர் கொண்டிருந்த நோக்கத்தையும் கருத்தையும் அறியும் அழகரின் ஆர்வம் புலப்படுவதை உணர முடியும்.

    1.7.3. பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை.

    தீ நெறி விலக்கி நன்னெறி செலுத்தும் பெரியாரைத் துணைக்கோடல் (45) என்னும் அதிகாரத்தில் நேர்முகமாகவும் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகாரத்தில் எதிர்முகமாகவும் கூறிய திருவள்ளுவர், தெரிந்து செயல்வகை (47) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை கூறும்பொழுது,

    “அச்செயல் (தெரிந்து செயல்வகை) பெரியாரைத் துணைக்கோடல்
    பயனுடைத்தாயவழி அவரோடும் செய்யப்படுவது ஆகலின் இது
    சிற்றினஞ்சேராமையின் பின் வைக்கப்பட்டது”

    என விளக்கிக் காட்டுகிறார். ‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தை அடுத்துள்ள ஓர் அதிகாரப் பொருளை (47) அதற்கு இரண்டு அதிகாரங்கள் முன்னதாக உடைய ‘பெரியாரைத் துணைக்கோடல்’ (45) என்னும் அதிகாரப் பொருண்மையோடு இயைபு கண்டு வைப்புமுறை உரைக்கும் அழகரின் சதுரப்பாடு அறியத்தக்கது.

    1.7.4. புணர்ச்சி மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல்

    தமிழ் அகத்திணை மரபின் நுட்பமான பகுதிகளை அழகர் சிந்தித்திருப்பதற்குக் காமத்துப்பாலுக்கான அவரது உரையே கரியாகிறது. காதலைத் தலைவனுக்கு வெளிப்படையாகக் கூறுவதோ, காதல் மீக்கூரும் நிலையில் மடலேறுவதோ தலைவிக்கு மரபன்று. ஆயினும் தலைவனோடு புணர்ச்சி நிகழ்ந்துழித் தலைவன்மீது தான் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தும் உரிமை அவளுக்கு உண்டு. இதனைத்தான் திருவள்ளுவர் காதற்சிறப்புரைத்தல் (113) என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுகிறார். இந்த அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் (111), நலம்புனைந்துரைத்தல் (112) ஆகிய அதிகாரங்களின் பின் வைக்கப்பட்டதற்கான காரணத்தை,

    “இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், புணர்ச்சி
    மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது”

    என முறைவைப்பு விளக்கமாகக் கூறி அமைகிறார்.

    1.8.  இயல் இறுதியில் அதிகார வைப்புமுறை

    நூல் பாலாகவும் பால் இயல்களாகவும் இயல் அதிகாரங்களாகவும் அதிகாரம் குறட்பாக்களாகவும் தன்னிறைவு பெறுகின்றன. இயலின் உள்ளடக்க இறுதியாக அதிகாரம் அமையும். அழகர் இயல் இறுதியைப் பால் இறுதியாகக் கணித்து அதிகார அமைப்பு முறை வகுத்திருப்பதையும் காணமுடிகிறது. பொருட்பாலில் அரசியலையும் அங்கவியலையும் தொடர்ந்து ஒழிபியல் அமைந்திருக்கிறது. ஒழிபியலின் இறுதி அதிகாரமாக அமைந்திருப்பது ‘கயமை’ என்பதாகும். ‘கயமை’ என்பது பண்பாகுபெயராய்க் கீழோரைக் குறித்தது. இந்த அதிகாரத்திற்கு முன்பாக அமைந்த ‘இரவச்சம்’ என்னும் அதிகாரத்திற்கும் ‘கயமை’ என்னும் அதிகாரத்திற்கும் ஏற்புடைய இயைபு காண அழகர் பொருட்பால் முழுமையையும் ஒருசேர நோக்கிப் பொருட்பாலின் ஏனைய இயல்களாகிய அரசியலையும் அங்கவியலையும் கருத்திற் கொண்டு ‘கயமை’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கான பொருள் விளக்கத்தையும் அதிகார வைப்புமுறையையும் சுட்டிக்காட்டுவது பெரு வியப்பளிப்பதாக அமைந்திருக்கிறது. அதிகார நிரலாக வைப்புமுறை, ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்கள் நோக்கிய வைப்புமுறை முதலியவற்றினின்றும் இம்முறை பெரிதும் வேறுபாடு உடையது என்பதை அறியலாம்.

    “மேல் அரசியலுள்ளும் அங்கவியலுள்ளும் சிறப்பு வகையால்
    கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிப்பினால் யாவர்க்கும்
    எய்த வைத்தமையின், ஆண்டுக் குறிப்பால் கூறியனவும் ஈண்டு
    ஒழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவும் 
    இலராய கீழோரது தன்மை. அதனால் இது எல்லாவற்றிற்கும் பின்
    வைக்கப்பட்டது”

    பால், இயல், அதிகாரம், குறட்பா என ஒவ்வொரு கூறுகளையும் தனித்தும் இணைத்தும் நோக்கி உரையெழுதும் பேராற்றல் உடைய பேராசிரியராகவே அழகர் திகழ்ந்திருக்கிறார். இனிக், ‘கயமை’ என்னும் அதிகாரம் காமத்துப்பாலைத் தவிர்த்த ஏனை பொருட்பகுதியின் இறுதியில் அமைந்திருப்பதற்கு அழகர் குறிக்கும் ‘’எல்லாவற்றிற்கும்’ என்னும் சொல்லின் நுட்பத்தை உணர்தல் வேண்டும். காமத்துப்பால் இருக்கவும் ‘எல்லாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம் சிந்தித்தற்குரியதே. இதனால் அதிகார வைப்புமுறையைப் பாலின் அடிப்படையிலும் சிந்தித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மேலும்  இறைவனில் தொடங்கி கயவரில் நிறைவு செய்திருக்கும் திருவள்ளுவரின் சதுரப்பாடும் பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது.

    முடிவுரை

    அழகர் திருக்குறளுக்கு உரையெழுதுவதற்கு முன் பன்முறை அதனை நன்கு ஊன்றிப் பயின்றுள்ளார் என்பதற்கு அதிகார வைப்புமுறை பற்றிய அவர் கொள்கையும் ஒரு வலிமையான சான்றாகத் திகழ்கிறது. நிரலாகப் படித்துக் கொண்டே எழுதியிருந்தால் இவ்வாறு பல்வகை முறைமைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. திருவள்ளுவரின் உள்ளத்தை அறிந்து கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சி ‘நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்று’ என்றே கூறலாம். அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்புமுறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்புமுறை கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது. அந்தக் காரணங்களைத் தம் புலமைத்திறம் தோன்ற அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். உரையாசிரியர் பெருமக்களுள் அழகரைப் போல பெருமையுற்றோர் பலர். ஆனால் அவரைப் போலப் பன்முகத் தாக்குதலுக்கு ஆளானவர் யாருமிலர். அவருடைய உரை மாண்புகளை வகைமாதிரிகளாகக் (GENRE) கொண்டு அவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படல் வேண்டும். ஏனைய உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிட்டுக் காணும் முயற்சி பல்க வேண்டும். தமிழிலக்கிய வரலாற்றில் திருக்குறள் தனித்து விளங்குவது போலவே அழகர் உரையும் தனிச்சிறப்புடன் விளங்குவது உண்மை. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?”

    “பரிமேலழகரின் உரையை மறுக்கும் முயற்சிகள் பரிமேலழகர்
    புலமைப் பாறையைச் சுற்றியடிக்கும் அலைமோதல்களாக
    அமைந்தனவேயன்றி அப்பாறையின் உருக்கோட்டம் கண்டு செப்பம்
    செய்யும் சிற்றுளிகளாகக் கூட அமையவில்லை”.

    இது திராவிட இயக்கக் கொள்கைச் சார்பாளரும் பன்மொழிப் புலவருமான உயர்திரு க. அப்பாத்துரையார் அழகர் உரைக்குத் தந்திருக்கும் சான்றிதழ். இந்தச் சான்றிதழைக் கற்பார் பார்வைக்கு வைப்பதையே தனது தலையாய கடனாகக் கொண்டு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    துணைநூற் பட்டியல்

    1. திருக்குறள் பரிமேலழகர் உரை, வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன், உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009

    2. திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல், புலவர் ச.சீனிவாசன், மெய்யப்பன் தமிழாய்வு மையம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001, முதற்பதிப்பு – 2002

    3. பன்முகப் பார்வையில் பரிமேலழகர், முனைவர் நா.பாலுசாமி, அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007, முதற்பதிப்பு – 2005

    4. உரையாசிரியர்கள், மு.வை.அரவிந்தன், 8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108, முதற்பதிப்பு – 1968


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழ் இலக்கிய இலக்கண வல்லாளர்களால் வலுவான அடிப்படைக் காரணம் இல்லாது புறக்கணிப்புக்கு ஆளான பேரறிஞர் நிரலில் வரும் இருவரில் ஒருவர் பரிமேலழகர். மற்றொருவர் நச்சினார்க்கினியர். எழுதப்பட்ட ஏனைய  உரைகளெல்லாம் தமிழ் மரபை மட்டுமே சார்ந்திருப்பது போலவும் பரிமேலழகர் ஒருவர்தான் வடமொழிச் சார்ந்த உரையெழுதினார் என்பது போலவும் கருக்கொண்ட எண்ணம் பலருடைய புலமை இழப்பிற்கே பெரிதும் காரணமாயிற்று. அழகரை ஆய்வுப் பொருளாகத் தேர்ந்த ஆய்வாளரின் புலமைத் துணிச்சல் பாராட்டுக்குரியது.

    1. திருக்குறள் அதிகார வைப்புக்கான அழகர் தரும் காரணங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் குழப்பம் ஏதுமில்லாமலும் நிரல்பட விளக்குவது எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய ஆய்வாளரின் சிந்தனைத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.
    2. பகுப்புக்கேற்ற தரவுகள் எண்ணிக்கையில் பல இருப்பினும் அளவு கருதி வரையறுத்துக் கொண்டது கட்டுரையைச் செறிவாக்கும் முயற்சியாகவே கருதப்படலாம்.
    3. ‘புறங்கூறாமை’ என்னும் அதிகார வைப்பிற்கு அழகர் தாம் சொல்ல வந்த விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட முயற்சியும் அதனைக் கண்டறிந்து ஆய்வுலகப் பார்வைக்கு வைப்பதற்கு ஆய்வாளர் எடுத்துக் கொண்ட முயற்சியும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்துள்ளது.
    4. ‘அதிகார வைப்பிற்கான விளக்கம்’ எனக் கருதுகோளைத் தெளிவாக அமைத்துக் கொண்டதால் கருதுகோளை விளக்கி உறுதிப்படுத்துவதற்கான தரவுகளைத் தொகுப்பதில் கட்டுரையாளர் தமது இடர்ப்பாடுகளைக் குறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஏனைய ஆய்வாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய கருதுகோள் பற்றிய உண்மை இது. அடிப்படையான தரவுகளையும் சான்றுகளையும் மனத்தளவில் பதித்துச் சிந்தித்துப் பார்த்தாலொழிய வலிமையான கருதுகோள் அமைவது கடினம். கருதுகோள் தெளிவானால் கட்டுரை தெளிவாகும்.
    5. “காமத்துப்பால் இருக்கவும் ‘எலலாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம்  சிந்தித்தற்குரியதே.”  என்னும் கட்டுரையாளரின் பதிவு சரியே. காமத்துப்பாலில் திருவள்ளுவரின் கருத்தேதும் இல்லை.  இருபத்தைந்து அதிகாரங்களும் அகப்பொருள் மாந்தர் கூற்றாகவே அமைந்து போனதே அழகரின் (ஆசிரியர் கூற்றாக அமைந்த)  ‘எல்லாவற்றிற்கும்’ என்பதற்கான காரணம் என் பணிவான கருத்து.
    6. “அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்பு முறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்பு முறை  கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது.” என முடிவுரைப் பதிவு மிகவும் ஆற்றல் வாய்ந்த பதிவு. இதனால் திருக்குறள் அதிகாரவைப்புக்களைப பரிமேலழகரே உண்டாக்கினார் என்னும் வாதம் வேர்பிடிக்காப் பயிராகிவிடுவதைக் காணலாம்.
    7. கட்டுரையாளர் சான்றெண் பதிவுகளுக்கான எண்களையோ நூல்களையோ குறிப்பிடாது துணைநூற்பட்டியல் மட்டும் கூறியிருப்பதற்கான காரணம் புலப்படவில்லை.
    8. வைப்புமுறையில் அழகரோடு மாறுபடும் தற்கால உரையாசிரியர்களின் பதிவுகளையும் ஒப்பிட்டு உண்மையைச் சொல்லியிருந்தால் கட்டுரையின் ஆய்வுச்செறிவு கூடியிருக்கக்கூடும்.

    கருதுகோள் அமைப்பு, கருதுகோளுக்கிணங்க, தரவுகள் மற்றும்  குறுந்தலைப்புகள் பகுப்பு என முப்பரிமாணத்திலும் தெளிவே முன்னிற்பதால் கட்டுரை சிறக்கிறது. அறிவு தெளிவின் மேற்று! ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது மகாகவி வாக்கு. இதுபோன்ற கட்டுரைகள் வல்லமையின் கொள்கைக் ‘குரலை’ முழக்கமாக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை!


     

    Share
  • (Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்

    (Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்

    முனைவர் பீ. பெரியசாமி,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,                  
    விளாப்பாக்கம் – 632 521.  தமிழ்நாடு, இந்தியா.

    மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com    

    முன்னுரை

    திருவருட்பா – திரு + அருள் + பா எனப் பிரியும்.  இறையருளால் பாடப்பெற்ற பாக்கள் என்றும் இறையருள் வேண்டிப் பாடப்பெற்ற பாக்கள் என்றும் பொருள் கொள்ளலாம். திரு என்பது மேன்மை என்ற பொருளில் வந்துள்ளது. இறைப் பற்றாளர்களின் அருள் அனுபவத்தால் ஊற்றெடுப்பவையே அருட்பாக்கள். இவை வள்ளற் பெருமானின் திருவாக்கினில் ஞானியர்களின் சிந்தனைகளில் சித்தர்கள் யோகிகளின் அனுபவங்களில் இழையோடுவதைக்  காணமுடிகின்றது. வள்ளற் பெருமான் உலகினில் இறைவனை அடையவும் இறவாநிலை பெறவும் ஒரோவழி உலகினில் வாழும் அனைத்து உயிர்களிடத்தும் மனிதநேயத்தோடு நாம் நடந்துகொள்வதே என்கிறார் என்பதை உரிய உதாரணங்களோடு வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

    உயிர் இரக்கமே உயர்ந்த பண்பு

    “வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட
    மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த
    ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ
    இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ
    மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு
    மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ
    கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன்
    கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!”1

    எனத் தன்னைப் பற்றிக் கூறியவர். பகைவரும் வணங்கக் கூடிய பண்பாளர் நம் வள்ளற் பெருமான்.  உயிர் இரக்கமே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்.

    “மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை
    மதித்துளம் வருந்திய பிறர்தம்
    கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்
    கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
    நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை
    அழைத்தபோ தடியனேன் எண்ணா
    தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி
    ஏன்எனல் மறந்தனன் எந்தாய்”2

    துயருற்றோரைப் பார்த்துக் கண்ணீர் விடத் தொடங்கியவர் பிறர் அழைத்தபோதும் ஏன் எனல் மறந்தாராம்.

    “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.”3

    என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் நம் வள்ளல் விளங்கியதை அறிய முடிகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர், மனிதர் படுகின்ற துன்பங்களைப்,“பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை”4 என்று  வகைப்படுத்துகின்றார். இத்துன்பங்களால் மனிதன் வேதனையுறுகிறான். இவற்றைத் தவிர்க்க எனக்கு வரம் கொடுக்க வேண்டுமென்று வேண்டுகிறார்.

     “கருணையே வடிவாய் பிறர்களுக் கடுத்தகடுந்துயர் அச்சமா திகளைத்
    தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புல்கொலை இரண்டும்
    ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
    மருவிய புகழைவழுத்தவும் நிண்ணை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்”5

    உலக உயிர்களுக்கு வரும் இடையூறுகளைத் தூர நின்று வேடிக்கை பாராமல் விரைந்து சென்று அதைப் போக்க எண்ணுபவனே சன்மார்க்கி.

    இதனை, ““வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை”6 “இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்”7 என்று திருக்குறள் ஈதலின் சிறப்பைக் கூறுகிறது. அறங்களிலேயே சிறந்தது உயிர்களுக்கெல்லாம் உணவளிப்பதுதான்.  எவ்வுயிரும் பட்டினியால் மடியாமல் பாதுகாக்கப்படவேண்டும்.  இந்த உண்மையை வலியுறுத்துவது மணிமேகலை,

    “மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
    ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
    பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
    தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்
    மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட
    எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென்.”8

    “பசியும் பிணியும் பகையும் நீங்கி
    வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
    மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்”9

    “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”10

    “கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று
    அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே ”11

    “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.”12

    என எல்லா அற நூல்களும் பசிப்பிணி போக்குதலையும் கொல்லா விரதத்தையும் போற்றுகின்றன. ஈஸ்வர பக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருத்தலை அறிதலாகும். ஜீவகாருண்யம் உண்டானால் அருள் உண்டாகும். அருள் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு உண்டானால் சிவானுபவம் உண்டாகும். நேயம் ஐந்து வகை என்கிறார் வள்ளலார். இறை அனுபவம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்றால் உயிர்கள் தன்னலத்தைப் பெரிதாகக் கருதாமல் மற்ற உயிர்களுக்கும் பணிபுரிவதுதான் இதுவே வழிபாடு ஜீவகாருண்ய ஒழுக்கம். ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எனப்பெருமான் கூறுகின்றார். இதுதான் சுத்த சன்மார்க்கத்தின் இலட்சியம்,  ஐந்து நேயங்கள் நேயம் என்பதும் அன்பே! இந்திரிய நேயம் என்பது பொறி புலன்களிடம் அன்பு காட்டுவது, கரண நேயம் என்பது கொள்கையில் ஈடுபடுவது, ஜீவநேயம் என்பது மனிதாபிமானத்தைக் குறிப்பது, ஆன்ம நேயம் எல்லா உயிர்களிடத்தும் உருக்கம் காட்டுவது, சிவநேயம் என்பது கடவுள் வழிபாடு.

    நடமாடும் உயிர்களுக்குச் சேவை

    இந்திரிய நேயம் மிக்கவர்கள் தங்கள் உடலை அழுகு படுத்துவதிலும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதிலுமே குறிக்கோளாய் வாழ்வர்.  இவ்வாறு வாழும் வாழ்க்கை சுயநலம் மிக்கதாகும்.  சாமானிய மனிதர்களின் வாழ்க்கை பெரும்பாலும் இவ்வாறே அமைந்து தங்கள் பிறப்பின் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைவதாக உள்ளது.  கரண நேயம் மிக்கவர்கள் தாம் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் இருப்பர். ஜீவநேயம் என்பது மனிதர்களிடையே தோன்றும் நேயமாகும். இங்கே மற்ற ஜீவராசிகள் மீது இரக்கம் என்பது பின்பற்றப்படுவதில்லை.  எல்லா ஜீவராசிகளும் தங்கள் இனத்தின் மீது காட்டும் நேயமும் இதுவே ஆகும்.  ஆன்ம நேயம் என்பது தம் இனம் மட்டுமின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்டும் நேயமாகும்.  வள்ளலார், புத்தர் போன்றோர் இந்நேயத்தோடு வாழ்ந்து மனிதர்களையன்றி எல்லா உயிர்களையும் மதித்துள்ளனர்.

    “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு”13

    உயிர் காத்தலைத் தவமாகப் போற்றுபவர்களாவர் இவர்கள்.

    “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”14

    என்கிறார் திருமூலர். நடமாடும் உயிர்களுக்குச் சேவை செய்தலே இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்று உணர்ந்தவர்களின் நிலையாகும். அடுத்து ஐந்து சிவநேயம் என்பது கடவுள் வழிபாடு.  உயிர்கள் மீது நேயம் காட்டுதலையே கடவுள் வழிபாடாகக் கொள்வதாகும். வள்ளற் பெருமான் கடவுளை வழிபடவே சாதனம் வகுத்துக் கூறியுள்ளார் அது சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவர் ஒருவரே என்றும் அவரை உண்மையின்பால் வழிபட வேண்டும்.  அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்துக்கு  உரிய  கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை.  பரோபகாரம் – என்பது தேகத்தாலும், வாக்காலும், பொருளாலும் உபகாரம் செய்வன, சத்விசாரம் – என்பது நேரிட்ட பக்ஷத்தில் ஆன்ம நேய சம்பந்தமான  தயாவிசாரத்தோடு  இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையையே  கடவுளிடம் விண்ணப்பித்தல் என்பதாகும். இவ்வகையில் நம்பெருமான் இறைவனிடம் தன் பல்வேறு விண்ணப்பங்களைக் கூறி இறையருளை வேண்டியுள்ளார் என்பது விளங்குகிறது.

     “அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
    அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே!”15

    என அகவல் கூறுகிறது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற தத்துவத்தின் பொருள் இதன் மூலம் விளங்குவதை அறிய முடிகிறது.  ஆன்ம நேயமே மனிதனின் அடையாளம் என்று வாழ்ந்து காட்டிய பெருமான் சாகாவரம் தான் பெற்று விட்டதாகவும் அதைப் பெறுவதற்கான வழியையும் நமக்கு எடுத்துரைக்கின்றார்.

    “நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
    சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
    பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
    யார்உளர்நீ சற்றே அறை.”16

    “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
    நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
    நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
    நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
    வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
    மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
    சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.”17

    “யானே பொய் என் நெஞ்சும் பொய்
    என் அன்பும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால்
    உன்னைப் பெறலாமே
    தேனே அமுதே கரும்பின்
    தெளிவே தித்திக்கும்
    மானே அருளாய் அடியேன்
    உனை வந்து உறுமாறே!”18

    என்கிறார் மாணிக்கவாசகரும். அதோடு மட்டுமின்றி மனித சமுதாயத்தின் குறிக்கோள் ஞானத்தை அடைவதே ஆகும்.  இன்பம் மனித வாழ்வின் இலட்சியமன்று. ஞானம் ஒன்றுதான் மனித வாழ்வின் இலட்சியம்.  இன்பமும், மகிழ்ச்சியும், துன்பமும் அழியக் கூடியவை.  எனவே உண்மையான ஞானத்தைப் பெறுவதே சிறந்தது.  அழியாத ஞானத்தைப் பெற வள்ளலார் கூறிய ஒழுகலாறுகள், ஜீவகாருணிய ஒழுக்கம், பசித்துயர் போக்குதல், ஆன்ம நேய ஒருமைப்பாடு, சாதி மதம் கடந்த சமரசம், ஒளி வழிபாடு என்பவை.  மேற்கண்ட உபாயங்களால் அழியாத உடம்பைப் பெறுவது உறுதி. இதனையே, “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்”19 எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.

    “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
    பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
    பற்றின் வருவது முன்னது பின்னது
    அற்றோர் உறுவது அறிக.”20

    என்கிறது மணிமேகலை.  தாம் பெற்ற வரத்தைக் கூறுகையில்,

    “சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
    சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
    மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
    மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
    ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
    எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
    தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.”21

    ஒட்டுமொத்த திருவருட்பாவில் கூறப்பட்ட செய்திகளைப் பிள்ளைச்சிறு விண்ணப்பத்திலேயே கூறியுள்ளார் என்று அறுதியிட்டுக் கூறலாம். தன்னை மகனாகப் பாவித்து தனக்கு வரமருள வேண்டியதின் உண்மையான தவிப்பை, ஒவ்வொரு பாடலிலும் உணர முடிகிறது.

    உயிரிரக்கத்தால் பிறர் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவற்றைக் கண்டபோது இரக்கப்படுதலே ஆன்ம உருக்கமாகும். எவ்வுயிரும் பின்பற்றக் கூடிய ஒழுக்கத்தை நிறுவிய வள்ளலார் மனிதன் இதை ஏன் செய்ய வேண்டும் என்று விளக்குகிறார். “மனிதப் பிறவி மிகச்சிறந்த பிறவி கிடைப்பதற்கு அறிய பிறவி மனித தேகத்தில் தான் ‘அருள்’ விளக்கம் விளங்குகிறது. முக்தி இன்பத்திற்குரிய தேகமிது – வழி சன்மார்க்கம். மனித தேகமே அறிவைப் பெறக்கூடியது மனிதனே பிறர் உணர்வை உணரக் கூடியவன்.”22 இவ்வாறே இறையுணர்வையும் பெறக் கூடியவன்  முறையான சாதனம் பயின்றால் தான் இறைவனை உணரமுடியும் என்பதை இராமகிருஷ்ண பரமஹம்சர்,

    “பாலில் உள்ள வெண்ணெய்யைக் கண்களால்
    பார்க்க முடிகின்றதா! வெண்ணெய்யைக் காணவேண்டி
    மத்து இட்டுக் கடைய வேண்டுமன்றோ! இதைப்
    போலவே இறைவனைக் காணவேண்டினும்
    சாதனம் பயில வேண்டும்”23

    “ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
    அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
    நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
    என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.”24

    இரக்கப்படுதலே ஆன்ம உருக்கம்

    ஒரு மனிதனுக்குத் தெய்வ நம்பிக்கை உண்டாகிவிட்டால் செல்வத்தின் மீது உண்டான அவா நீங்கும். காணும் உயிர்களிலெல்லாம் பொருட்களிலெல்லாம் இறைவனையே காண்பான்.  அதனால்தான் எந்த உயிரும் துன்பப்படுவதை விரும்புவதில்லை.  தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவ்வுயிருக்கு வந்த துன்பத்தை அகற்றுகின்றான்.  கண்ணப்ப நாயனாரும் அவ்வாறே தன் கண்ணைப் பெயர்த்து இறைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை அகற்ற முற்படுகின்றார்.  உடல் எடுத்ததன் பயனே உயிர்களைக் காவல் செய்யவே ஆகும்.

    “தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.”25

    என்று கேள்வி கேட்கிறார் வள்ளுவர்.

    “இன்றைய உலக சமுதாய சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்கு தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனை புகையையும், துன்பங்கள், சிக்கல்கள் இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட நிறுவனமே ‘உலக சமுதாய சேவா சங்கமும்’ அதன் செயல்வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்ம  யோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக  வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும்.”26 என்கிறார் அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

    மனிதனுக்கு உரிமையுணர்ச்சி பிறவியிலேயே அமைகிறது.  ஆனால்  கட்டுப்பாட்டுணர்ச்சி  பயிற்சியால் தான் கிடைக்கிறது என்கிறார் மு.வ.  தங்கத்தைச் சுடச்சுட பல்வேறு உருவம் எடுப்பதுபோல் வைரம் பட்டை தீட்டத் தீட்ட ஒளிர்வது போல் மனிதன் எத்துணை துன்பங்கள் வந்தாலும் இறைவனையே கைவிடாது தொழுதல் வேண்டும். அடுத்தடுத்த துன்பங்களே அவனைச் சோதிக்கும் பயிற்சிகளாகின்றன.

    “வருத்தப்பட்டுப்  பாரஞ்சுமக்கிறவர்களே!  நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்”27 என்கிறார் இயேசு கிறிஸ்து.

    பல மதனிகளும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர்.  துன்பம் இடைவிடாமல் நேர்ந்தாலும்   கொள்கையில் மாறாத அடியார்களின் கூட்டுறவால் ஞானசுத்த சன்மார்க்க சங்கம் காண விழைகிறார் வள்ளலார்.  அச்சங்கம் சார்பாகத் திருக்கோயில் கண்டிடவும்  நல்விளக்கமே   தரும  சன்மார்க்க  சங்கம்   நிடூழி  வாழவும் அந்தச் சங்கத்தில்தான் ஈடுபாட்டுடன் மனம் குளிர அருட்ஜோதி ஆண்டவனை நினைத்துப் பாடவும் ஆடவும் நமக்கு விருப்பமுள்ளதாய்ப் பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் விளக்கி உரைக்கின்றார்.

    ”தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
    சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
    துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
    அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.”28

    எனவரும் அடிகள் இதனை மெய்ப்பிக்கும்.

    வள்ளலாரது சிந்தனை வளர்ச்சி

    பிற சமயவாதிகள்,  தத்துவக் கொள்கைவாதிகள்,  துறவிகள், மதகுருமார்கள், மக்களுக்கு ஆன்மீக ஞானத்தை போதனை அளவில் புகட்டுவதைப்போலன்றி நடைமுறையில் பயன்பெற வழிவகுத்தவர் இவர்.  இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர். தம் உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பல்வேறு ஒழுக்க நியதிக்கு உட்படுத்திப் புடம் போட்ட பொன்னாக ஆக்கிக் கொண்டு பிறரும் அந்த வாய்ப்பைப் பெற வழிகாட்டியவர். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தி ஒளி வழிபாட்டைத் துவங்கி வைக்கிறார். இறைவன் உருவமற்ற ஒளிவடிவானவன் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

    “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”

    என்ற தாரக மந்திரத்தையும் போதித்தருளினார் நம் பெருமான். இந்த மகாமந்திரத்தில் உள்ள எழுத்துக்கள் 33 தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களின் தொகையும் 33. நம் முதுகெலும்பிலுள்ள எலும்புகள் 33 மனித மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒளி வடிவங்களும் 33 தான் இவற்றை ‘ஒலியன்கள்’  என்பர். இம்மகாமந்திரத்தில் உள்ள மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால் வரும் எழுத்துக்கள் 25 இவை 25 அனுபவங்களைக் குறிக்கின்றன.  இவை ஜீவ அனுபவம் 5, பர அனுபவம் 5, நின்மல அனுபவம் 5, குரு அனுபவம் 5, இறை அனுபவம் 5 ஆக 25 அனுபவங்கள். சன்மார்க்கக் கொடி ஒன்றையும் நம் பெருமான் உருவாக்கியருளினார். சன்மார்க்கக் கொடியில் மேல் 3/4 பாகம் வெண்மைநிறம் கீழ் 1/4 பாகம் பொன்மை நிறம் மகாமந்திரத்தில் அருட்பெருஞ்ஜோதி 3 முறை வருவது வெண்மையைக் குறிக்கும். தனிப்பெருங்கருணை ஒரு முறை வருதல் பொன்மையைக் குறிக்கும். வெண்மை தூய்மையைக் குறிப்பதோடு அறியாமையையும் குறிக்கும்.  அறியாமை நீங்க வேண்டுமானால் தொடர்ந்து உயிர்ப்பணி புரிதல் வேண்டும்.

    உயிர்ப்பணி புரியச் சத்திய தருமச் சாலை

    1867-இல் சத்திய தருமச்சாலையை நிறுவி அணையா அடுப்பேற்றி வைத்து அங்கு வருவோர்க்குப்  பசியாற உணவளித்தாராம்.  இன்றும் அந்த அடுப்பு வடலூரில் எரிந்த வண்ணம் உள்ளது. பசித்தோரின் வயிறு குளிர்ந்த வண்ணம் உள்ளது. கொலை புலை தவிர்த்தோர் உறவினத்தார் என்றும்,

    “உயிர்க்கொலையும் புலைப்பசிப்பும் உடையவர்கள்
    உறவினத்தார் அல்லர் அவர் புறவினத்தார் அவர்க்குப்
    பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
    புரிந்த மற்றைப் பண்புரையேல் நன்புத வேலிங்கே
    நயப்புறும் சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
    நம் ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே””29

    உறவினத்தார், புறவினத்தார் என்று இரண்டு வகையான மனிதர்களைப் பற்றிப் பாடலில் கூறியுள்ளார். சாதி, சமய பேதமற்று மனிதர்களின் பசியைப் போக்க எழுப்பிய இத்தருமச் சாலையில் உறவினத்தார்க்கு (கொலை, புலை, தவித்தோர்) மட்டுமே உணவு என்று மாற்றி விடுவார்களோ என்றஞ்சிய வள்ளற் பெருமான் புறவினத்தார்க்கும் உணவிட்டுப் பசியாற்று விக்குமாறு ஆணையிடுகிறார்.  ஆணையிட்டு ஒருவரின் தீய குணங்களை யாராலும் மாற்ற இயலாது.  பசியாறியவுடன் புறவினத்தார் தம் குணத்தைப் பற்றி யோசித்து தாம் கூறிய வழியில் தானாகவே நடக்க முன்வருவார் என்று பெருமான் நம்புகிறார்.

    பஞ்சோபாயம்

    நயமாகப் பேசி நல்லவர்களாக்குதல், பொருளைக் கொடுத்து வசப்படுத்தல், வேறுபாடு காட்டி திருத்துதல், வணங்கி வழிக்குக் கொண்டு வருதல், இறைவனிடம் வழிபாடு செய்து திருத்துதல் என்பன பஞ்சோபாயமாகும். இதனை,

    “முதல் நான்கு உபாயங்களைவிட ஐந்தாவது உபாயம்
    மிகச் சிறந்தது, உயர்ந்தது.  தீய மனம் படைத்தவர்களை
    சன்மார்க்கிகள் தகுந்த அணுகுமுறையை மேற்கொண்டு
    பஞ்சோபாயத்தால் வென்று திருத்தி உயர்த்த வேண்டும்”30

    “சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
    நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
    வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
    மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”31

    என்று மக்களின் தவறான செயல்களை எடுத்துக்கூறி வேறுபாடு காட்டி சன்மார்க்க நெறிக்கு அழைக்கிறார் நம்பெருமான்.

    “பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
    புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
    கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
    களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
    ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
    அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்
    மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
    மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!”32

    என்று பலவாறு கூறி சிறுமையினைத் திருத்த முற்படுகின்றார் பெருமான்.

    “மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
    கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
    பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
    உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
    நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
    அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
    உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
    கண்டனையாகு …”33

    என்று சீத்தலைச்சாத்தனாரும் அறிவை மயக்கும் கள்ளையும் பிறவுயிரைக் கொல்லும் செயலையும் அறிவுள்ளோர் வெறுத்து அகற்றினர். மேலும், நல்ல அறங்கள் செல்வோர் துறக்கம் பெறுவர். தீய அறம் (பாவம்) செய்வோர் கொடிய நரகம் அடைவர் என்று கூறி எச்சரிப்பதைக் காணலாம். மணிமேகலை என்ற புத்தமதக் கொள்கையை வலியுறுத்தும்  காவியத்தில் மேற்கண்ட கருத்துக்கள் பல நிரம்பியுள்ளன. மதங்கள் வேறானாலும் மார்க்கங்கள் பலவானாலும் கொள்கைகள் ஒன்றே என்பதை அறிய முடிகிறது.  சத்திய தருமச்சாலையில் பசியாற்றுதல் என்ற உயர் தர்மம் ஒன்றே இன்றளவும் பின்பற்றப்பட்டு பெருமானின் ஆணைக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர் பெரியோர்.

    முதல் திருமுறை முதல் ஆறு திருமுறைகள்

    நாயன்மார்கள் ஆழ்வார்களைப் போல் பாடல்களை மனமுருகப்பாட ஆரம்பித்தவர் தன் சிந்தனையில் செயலில் வேறுபட்டவராக நமக்குக் காட்சியளிக்கின்றார். முருகனின் அழகை வர்ணித்துப் பாடுகையில், “சீர் கொண்ட வதனங்கள் ஆறும்”34 என்று மனமுருகப் பாடியவர். மேலும் பிள்ளையாரை, திருமாலை,  வடிவுடைய  மாணிக்கவல்லியை,  தியாகேசப் பெருமானை என முதலில் உருவ வழிபாட்டில் மனம் லயித்தவராய் காண்கிற நம்மால் அவருடைய எண்ணம் வித்தியாசமான சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை அறிய முடிகிறது.

    “வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
    மயில் குயிலாச்சுதடி – அக்கச்சி
    மயில் குயிலாச்சுதடி
    துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
    வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி
    வள்ளலைக் கண்டேனடி
    சாதி சமயக் சழக்கைவிட் டேனருள்
    ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி
    ஜோதியைக் கண்டேனடி”35

    என்ற வரிகள் மூலமாகத் தம்முடைய மாற்றத்தைத் தானே கூறுவதை நம்மால் உணர முடிகிறது. சர்வ அழகு பொருந்திய பறவை மயில் கண்ணுக்குத் தெரியக் கூடியது.  ஆனால், குயிலோ எங்குள்ளது என்றே நம்மால் அறிய முடியாது.  ஆனால், இனிய ஓசை மட்டும் நம் காதுகளில் வந்து ஒலிக்கும்.  இந்த அழகான உவமையை எழுத்துக்குக் கூறியுள்ள விதம் எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாகும். மனிதனின் மனம் ஒருமைப்பட ஒரு உருவம் தேவைப்படுவது உண்மை.  நாளாக ஆகப் பக்தியில் பயிற்சியில் மேம்பட மேம்பட உருவமற்ற ஒரு சோதி வடிவில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறான் மனிதன் தானே இறைவனாக இரண்டற்ற ஒரு நிலைக்கு வந்து விடுகிறான்.  நம் பெருமானும் அவ்வாறே முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டில் ஈடுபட்டவராய் காணப்படுகிறார்.

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். ”36

    என்பார் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில். ஓரறிவுடைய புல், பூண்டாக, ஊர்வன, பறப்பனவாக விலங்காக பிறவியெடுத்த உயிர் தன் பரிணாம வளர்ச்சியால் மனிதனாகப் பிறக்கிறது.  ஆறறிவு கொண்ட மனிதனுக்குப் பல சிறப்புகள் உள்ளன. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ மானிடப் பிறவியில் மட்டுமே தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் ஆறாவது அறிவு உருவாகிறது. இரக்கத்தாலும் அன்பாலும் கருணையாலும் மனிதன் இந்த உலகையே ஆட்கொள்கிறான்.  தன் பிறப்பின் பொருள் தேடுகிறான்.  தான் யார் என்று ஆராய்கிறான்.  தன்னை உணர்ந்தவன் தலைவனை (இறைவனை) அறிகிறான்.  இவ்வுலகிற்குத் தான் வந்ததன் குறிக்கோளை மனதிற் கொண்டு செயல்படுகிறான். நம்பெருமானும் அவ்வாறே தன் இலட்சியத்தைக் கூறுகிறார். உலகில் பெரும்பாலான மக்கள் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.  ஒரு நூறு பேய்கள் ஆட்டமாடும் பிணக்காடாய் இருக்கும் உள்ளத்தை மறைத்து உடலை ஆடை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொண்டு வலம் வருகின்ற மக்களைப் போல் வாழ்க்கை வாழ்பவர்களைக் கிறிஸ்துவ வேத நூல், “வெள்ளையடிக்கப் பட்ட கல்லறை போல் இருப்பதாகக் கூறுகிறது”37  இவர்களைத் திருத்தி உள்ளும் புறமும் மாற்றமின்றி தூயவராய் மாற்றவே தான் இவ்வுலகிற்கு  வந்துள்ளதாகக்  கூறுகிறார் பெருமான்.  இதையே திருக்குறள்,

    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
    ஆகுல நீர பிற” 38

    என்கிறது.

    “பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றும்
    இந்தப் பிறவியிலேயே இறையனுபூதி பெற முயலாதவன்
    வீணில் பிறந்தவனே!”39

    மானிடர் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையையும் பெற்று இறையனுபூதி அடைய வேண்டும் என்று பாடுபட்டவர் நம் பெருமானார். தான் கண்ட ஆனந்த  அனுபவத்தைப் பாடல்களாக்கினார் அன்பர்கள் இதைத் தொகுத்து நமக்குத் தந்துள்ளனர்.

    திருவருட்பாவின் ஒவ்வொரு திருமுறைப் பகுதிகளும் படித்துப் படித்துப்பார்த்து எண்ணியெண்ணி இன்புறத்தக்கதாகும். பெருமானின் அனுபவங்கள் நமக்குப் பாடமாகவும் நற்பேறுடைய ஓர் வழியாகவும் உள்ளது.

    “நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.”40

    நல்ல வழியில் ஆராய்ந்து நாம் அருள் என்ற பண்பையே கடைப்பிடிக்க வேண்டும்.  ஏனெனில் பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக விளங்குகிறது என்கிறது உலகப் பொது மறை. அந்த வகையில் திருவருட்பா நமக்குக் காட்டும் அருள்வழியில் அன்பு வழியில் நாம் நடந்தோமேயானால் வாழ்வில் இன்புறலாம்.

    “யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
    யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே”41

    முடிவுரை

    உலகினில் பிறந்த மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லர். அடுத்த உயிரின் மீது யார் அதிக பாசமும் நேயமும் கொண்டு விளங்குகிறார்களோ அவர்களே சிறந்த மனிதர்கள் என்பதை வள்ளலாரின்  பாடல்களிலிருந்து  நாம் உணர்ந்து கொள்ளலாம். அவர், உயிர் இரக்கமே மற்ற பண்புகளைக் காட்டிலும் உயர்ந்த பண்பு என்கிறார்.  நடமாடும் உயிர்களுக்கு நாம் செய்யும் சேவை கடவுள் சேவைக்கு நிகரானது என்கிறார். உயிர்கள் வருத்தப்படும்போது வருந்துவதே ஆன்ம உருக்கம் என்கிறார். வள்ளலார் ஆரம்பத்தில் உருவ வழிபாடு கொண்டு வழிபட்டுப் பிறகுத தன் ஆத்ம ஞானத்தினால் ஒளி வழிபாட்டினை மேற்கொண்டார். அவ்வாறு ஒளி வழிபாட்டினை மேற்கொண்டவர் அனைத்து மத மனிதர்களும் சாதி, மதப் பாகுபாடின்றி  பசியிலிருந்து விடுபடச்  சத்திய  தருமச்சாலையை நிறுவினார். இதன் வழி அவர் ஓர் உயிருக்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை உணவளித்தல் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். பஞ்சோபாயம் என்பது கடவுள் வழிபாடு என்பது உயிர்களைக் கொல்லாது, துன்புறுத்தாது காத்தலே என்பதை உணர்த்துதலாகும். இதையே அனைத்துத் திருமுறைகளும் உணர்த்துகின்றன. இவற்றின் வழி வள்ளலார் பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் மனிதநேயமே கடவுளை அடையவும் இறவாநிலை பெறவும் ஒரோவழி என்கிறார் என்பதை நாம் உணரலாம்.

    ”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
    வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
    நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
    ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
    (திருவருட்பா பாடல்:3471)

    அடிக்குறிப்புகள்

    1. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.469.
    2. மேலது, பா. எண்.269.
    3. திருவள்ளுவர், திருக்குறள், 71.
    4. இராமலிங்கர், ஜீவகாருண்ய ஒழுக்கம், ப – 8.
    5. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.210.
    6. திருவள்ளுவர், திருக்குறள், 221.
    7. மேலது, 223.
    8. ஊரன் அடிகள், புத்தரும் வள்ளலாரும், ப – 46.
    9. மேலது, ப – 93.
    10. மேலது, ப – 77.
    11. தாயுமானவர், தாயுமான சுவாமி பாடல்கள், ப – 314.
    12. திருவள்ளுவர், திருக்குறள், 260.
    13. மேலது, 261.
    14. திருமூலர், பெரியபுராணம், ப – 130.
    15. சேலம் சேக்கிழார், வள்ளலாரும் இராமகிருஷ்ணரும், ப – 142.
    16. அப்பாய் செட்டியார். கோ.அ, அருட்பெருஞ்சோதி அகவல், ப – 26, பா. எண்.2.
    17. மேலது, பா. எண்.1530.
    18. மாணிக்கவாசகர், திருவாசகம், ப – 377.
    19. டாக்டர்குருசாமி. மா.பா, வாழ்விக்க வந்த வள்ளலார், ப – 17.
    20. சீத்தலைச் சாத்தனார், புத்தரும் வள்ளலாரும், ப – 40.
    21. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.743.
    22. இராமலிங்கர், ஜீவகாருண்ய ஒழுக்கம், ப – 11.
    23. இராமகிருஷ்ண பாமஹம்சர், வள்ளலாரும் இராமகிருஷ்ணரும், ப – 108.
    24. பட்டினத்தார், சித்தர் பாடல்கள், ப – 65.
    25. திருவள்ளுவர், திருக்குறள், 251.
    26. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், ப – 67.
    27. புதிய ஏற்பாடு, ப – 17.
    28. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.209.
    29. மேலது
    30. இராமலிங்கர், சன்மார்க்க பேருபதேசம், ப – 28.
    31. மேலது, ப – 1005.
    32. இராமலிங்கர், சன்மார்க்க பேருபதேசம், ப – 1476.
    33. ஊரன் அடிகள், புத்தரும் வள்ளலாரும், ப – 53.
    34. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.53.
    35. மேலது.2211.
    36. மாணிக்கவாசகர், திருவாசகம், ப – 121.
    37. புதிய ஏற்பாடு, ப – 36.
    38. திருவள்ளுவர், திருக்குறள், 242.
    39. இராமகிருஷ்ணர், ஞானமுரசு, ப – 29.
    40. திருவள்ளுவர், திருக்குறள், 242.
    41. திருமூலர், சித்தர் பாடல்கள், ப – 85.

    பயன்பட்ட நூல்கள்

    1. அரு. இராமநாதன் (பதி), சித்தர் பாடல்கள், 13-ஆம் பதிப்பு – 2005, பிரேமா பிரசுரம், 35, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24.
    2. ஊரன் அடிகள், சன்மார்க்க தேசிகன், புத்தரும்வள்ளலாரும், மு.ப. 2005, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர்.
    3. தாயுமானவர்,  ஸ்ரீ தாயுமானசுவாமி பாடல்கள், மு.ப. 1980, ஸ்ரீ ராம கிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639 115, எலமனூர் ரயில்வே ஸ்டேஷன், திருச்சி ஜில்லா.
    4. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா, ஆறாம் திருமுறை, மூ.ப. 2004, சிந்தாமணி பிரிண்டர்ஸ், மயிலாடுதுறை – வடலூர் – 607 303.
    5. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், சன்மார்க்கம் பேருபதேசம், மு.ப.2003, திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர் – 607 303.
    6. பரிசுத்த வேதாகமம், பதிப்பு 2000-2001, இந்திய வேதாகமச் சங்கம், 206, மகாத்மா காந்தி, பெங்களுர் – 560 001.
    7. வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள் (நாள் ஒரு நற்சிந்தனை), மு.ப. மார்ச் 2003, வேதாத்திரி பதிப்பகம், 156 காந்திஜி சாலை, ஈரோடு – 638 001.
    8. இராமகிருஷ்ணர், ஞான முரசு, மு.ப. 2001, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை – 4.
    9. சித்பவானந்தர் ஸ்ரீமத் சுவாமி (உ.ஆ.), திருவாசகம், மூ.ப. 1975, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639 115. எலமனூர் ஸ்டேஷன், திருச்சி ஜில்லா.
    10. சேக்கிழார். கொ. அ. (சேலம்) அப்பாய் செட்டியார், வள்ளலாரும் ராமகிருஷ்ணரும், மு.ப. டிசம்பர் 1988, மணிவாசகர் பதிப்பகம், 55. லிங்க தெரு, சென்னை – 1.
    11. திருமுருக கிருபானந்த வாரியார், பெரிய புராணம், மு.ப. 2003, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 107 சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை – 2.
    12. திருஅருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா உரை – நடைப்பகுதி, மு.ப. 5.10.2000, திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.
    13. குருசாமி. மா.பா, வாழ்விக்க வந்த வள்ளலார், மு.ப. 2006, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், நெ.41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

    பிள்ளைச் சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம் என்னும் இக்கட்டுரை திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதனைய அருட்கோட்பாடுகளைப் பிழிவாக எடுத்து மொழிகிறது. வள்ளற் பெருமானின் உயிரிரக்கக் கொள்கை தோன்றுவதற்குக் காரணமான முந்தைய இலக்கியங்களின் சாரத்தையும் மேற்கோள்கள் வாயிலாக இக்கட்டுரை நிறுவியுள்ளது.

    மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக உள்ள உணவே பசித்த வயிறுகளுக்குக் கிட்டாத காரணத்தால் சிக்கல்களுக்கும் காரணமாக உள்ளது என்பது வள்ளற் பெருமானின் அடிப்படைக் கொள்கை. இதனைத் தொடக்கத்திலிருந்தே தமிழ் இலக்கியங்கள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றன என்பதையும் இக்கட்டுரை நிறுவுகிறது.

    வள்ளல் பெருமானின் வழிகாட்டுதலின்படி நடாமாடும் எல்லா உயிர்களுக்கும்  அன்பு செய்து அவை உற்ற துயர்களைத் தீர்ப்பதே சன்மார்க்கியின் தலையாய கடன் என்பதையும், அதற்கான வழிமுறைகளைத் தந்துள்ள திருவருட்பாக் கருத்துகளையும் இக்கட்டுரை எடுத்து மொழிகிறது. அவற்றுள் முக்கியமானதாக விளங்கும் பஞ்சோபாயம் சன்மார்க்கிகளுக்கான தனிச்சிறப்பு என்பதையும் உணர்த்துகிறது.

    எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு திருமுறைகளாக உள்ள திருவருட்பாக்களின் மொத்தப் பிழிவும் அவர் இயற்றிய பிள்ளைச் சிறுவிண்ணப்பத்திலேயே நிறைந்திருக்கிறது என்பதை இக்கட்டுரை நிறுவ முயல்கிறது.

    கட்டுரையாசிரியர் தம் கருத்துக்கு உரமாகச் சேர்க்கும் அருளாளர்களின் பாடல்களைப் பிழையில்லாமல் கையாளக் கற்றுக் கொள்ளுதல் அவசியம்.


     

    Share
  • (Peer Reviewed) சிலம்பில்  கோவில் வழிபாட்டு முறைகள்

    (Peer Reviewed) சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகள்

    முனைவர் மூ.சிந்து
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    காளப்பட்டி, கோவை – 6410428
    மின்னஞ்சல் – sindujasms@gmail.com

    முன்னுரை

    ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம். சிலம்பை மையமாகக் கொண்டு எழுந்த காரணத்தால் இப்பெயர் பெற்றமையை உணரமுடிகிறது. சிலப்பதிகாரம் அறம், பொருள். இன்பம் என்ற மூன்று நிலைகளில் அறத்தினை உட்புகுத்தி மக்களிடையே அறவுணர்வினை உட்புகுத்தும் நோக்கில் அமைத்தமையை உணரலாம். வழிபாட்டு முறைகளைப் பகுத்தும் விரித்தும் கூறுவதாக இவ்வாய்வு அமைகிறது.

    நோக்கம்

    சிலப்பதிகாரம் அகம் , புற நிகழ்வுகளைச் சுட்டினாலும் ஊழ்வினை நிலையை வெளிப்படுத்தும் போக்கில் அமையப் பெற்றும் அதில் அறம் சார்ந்த வழிபாட்டு நிலையில் இறைவனை வழிபட்ட நிலையையும் எடுத்துக் கூறுவதாக அமைகிறது.

    வழிபாடு

    சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதும், இயற்கையானது மாறும் போது அதனோடு போராடும் சூழலில் தனக்கு மேலான சக்தி ஒன்று உள்ளது என்பதை உணர்ந்து அதை நம்பினர். அந்த சக்தியே பின்னாளில் தெய்வமாக மாறி அவற்றைப் பின்பற்றி வந்த முறையானது வழிபாடாக மாறியது.

    வழிபாடு என்பது தெய்வத்தையோ அல்லது இயற்கை சக்தியை நோக்கி முறையான அல்லது முறைசாராத குழுக்கள் அல்லது அதற்கென நியமிக்கப்பட்டவரால் மேற்கொள்ளப்பட்ட முறை வழிபாடாகும்.

    வழிபாடு என்பது வணங்குதல், பூசை செய்தல் என்பதாம். இது வழக்கமாகச் செய்தல் என்னும் பொருள்களில் வழங்கப்படுகிறது.

    வழிபாட்டு முறை

    வழிபாடானது பாடல்கள் பாடியோ, மந்திரங்கள் கூறியோ பொருட்களைப் படைத்தோ நடைபெறுகிறது. மனிதன் தன் தேவைக்காகவும், சுயநலத்துக்காகவும் இறைவனை நாடிச்செல்லும் நிலையே வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதனின் இன்பமான  வாழ்க்கைக்கும் தன் சிக்கல்கள் தீரவும் வழிபாடானது அவரவர் விருப்பத்திற்கு இணங்க மாற்றம் கொண்டமையைக் காணமுடிகிறது.

    இலக்கியங்கள் போற்றும் வழிபாடு

    வழிபாடானது பழக்கங்களில் தோன்றியமை என்பதைப் புலப்படுத்தும் வகையாக தொன்மையான இலக்கண நூலானத் தொல்காப்பியம்,

    வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
    பழிதீர் செல்வமொடு வழிவழிழச் சிறந்து
    பொலிமின்..                                           தொல் .1367

    என்னும் வரிகளால் வழிபாட்டு நிலையினை உணர்த்துகிறது. வழிபாட்டினால் வாழ்க்கை வளம்பெறும் என்பதை மக்கள் நம்பிக்கையாகக் கொண்டனர் என்பதும், பண்டைத் தமிழ் மன்றங்களிலும்,மரங்களிலும்,கற்களிலும் தெய்வம் உறைவதாக நம்பி அவற்றை வழிபட்டனர் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது.

    எட்டுத்தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூலான பரிபாடலில்,

                      ……….. யாம் இரப்பவை
                    பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால்
                    அருளும் அன்பும் அறனும் மூன்றும்
                    உருளிணர்க் கடம்பின் ஒலிதாராயோ                பரி.5.78-81  

    என்னும் வரிகளால் மனிதன் தன் வாழ்க்கை நிலையை உயர்த்தும் பொருட்டும், நிலைப்படுத்தும் பொருட்டும் வழிபாட்டை மேற்கொண்டான் என்பதை உணர்த்துகிறது.

    சிலப்பதிகாரத்தில் கோயில்  வழிபாட்டு நிலையானது பல்வேறு நிலைகளாக மேற்கொண்டமையையும், அவற்றின் சிறப்புகளையும் பின்வரும் நிலைகள் விவரிக்கின்றன.

    • கோயில் வழிபாடு
    • நன்னீராட்டு
    • மந்திரம் உச்சரித்தல்
    • பாடல்கள் பாடுதல்
    • புண்ணிய நதிகளில் நீராடுதல்
    • பலியிடுதல்
    • தெய்வ அருள் பெறல்

    கோயில் வழிபாடு

             சிலம்பில் கோயில் வழிபாட்டு முறையில் முதலில் பலிபீடத்தை மலரிட்டு வழிபடுதல் பின்பற்றப்படுகிறது. கொற்றவையின் உருவமாகக் கொண்ட பெண்ணை வணங்கும் முன்,

                    விலைப்பலி யுண்ண மலர்ப்பலி பீடிகைக்
                    கலைப்பா யூர்தியைக் கைதொழுது            சிலம்பு. 12.43-44

    பலிபீடத்தை வணங்கிய வழிபாட்டினைக் கூறுகிறது. பலிபீடத்திற்கு பிறகு தெய்வ வாகனத்தை வழிபடும் நிலையானது இருந்தமையைச்  சிலம்பு குறிப்பிட்டுச் சொல்கிறது.

    கோட்டம்  என்ற சொல்லானது கோயில் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. கோட்டம் கட்டிடங்கள் இல்லாமல் திறந்த வெளியில் வேல், வச்சிரம் போன்றவற்றை நட்டுச் சுற்றிலும் வேலியமைத்த பகுதியானது கோட்டம் என்றழைக்கப்படுகிறது.

                    அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
                    ………………
                    நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் 
                                                                                                                                                  சிலம்பு. 9..9-13

    என்று பல்வேறு வகையான கோயில்களைச் சிலம்பில் எடுத்துரைத்துச் செல்கிறார் இளங்கோ.

                    பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
                    அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
                    ………..
                    கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்          சிலம்பு. 5.169-181

    என்னும் வரிகள் கோயில் வழிபாட்டின் சிறப்பினை உணர்த்துகிறது.

    நன்னீராட்டு

    கோயிலில் செய்யப்படும் அபிடேக முறையானது ”நீரணி விழா” என்று சிலம்பில் வழங்கப்படுகிறது.

                       நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவனும்     சிலம்பு. 10.22

    திருமஞ்சனநீரைப் பொன்னாலாகிய குடத்தில் ஏந்தி மண்ணில் வாழ்வோர் அதிசியிக்கவும், விண்ணுலகத்தார் வியப்புறும்  வகையிலும் தேவர் கோமானாகிய இந்திரனின் திருவுருவத்திற்கு திருமஞ்சனம் நீராட்டல் நடைபெற்றமையை,

                     புண்ணிய நல்நீர்  பொன்குடத்து ஏந்தி
                    மண்ணகம் மருள வானகம் வியப்ப
                    விண்ணவர் தலைவனை விழுநீர ஆட்டி     சிலம்பு. 10.166-168

    கண்ணகியின் உருவக் கல்லை சேரமன்னன் கங்கையின் புனித நீரிலே கற்றறிந்தோர் கூறியநெறியுடனும், முறையுடனும் நீராட்டித் தூய்மை செய்ததை,

                    கங்கைப் பேர்யாற்றுக் கரை அகம் புகுந்து
                    பால்படு மரபிற் பத்தினிக் கடவுளை                 
                     நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து          சிலம்பு. 27.14-16

    என்பதைச் சிலப்பதிகார வரிகள் உணர்த்துகிறது.

    மந்திரம் உச்சரித்தல்

    இறைவனது நாமத்தைப் பலமுறை உச்சரிப்பதால் நன்மை என்பதை மக்கள் நம்பினர். இறைவனது வழிபாட்டில் மந்திரம் உச்சரித்தல் முக்கிய இடம் வகுத்தமையை உணரமுடிகிறது.

                    மறைமொழிதானே மந்திரம் என்ப                  தொல்.1434

    இறைவனது நாமம், மந்திரம் என்பதைத் தொல்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.

                    துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
                    வாயி லாளரை மயக்குதுயில் உறுத்து        சிலம்பு. 16.143-144

    விழித்துக் கொண்டிருப்போரை மந்திரத்தால் தூங்கச் செய்யும் கள்வர்களின் செயலைச் சிலம்பில் இளங்கோகூறுகிறார்.

                    மந்திரம் நாவிடை வழுதுத்துவராயின்
                    இந்திரகுமரரின் யாங்காண் குவமோ         சிலம்பு. 27.172-173

    இந்திரனின் ஆபரணத்தைக் களவாடும் ஆற்றல் பெறுவர் என்னும் செய்திகள் வாயிலாக மந்திரம் உச்சரித்தல் தீமைக்கும் பயன்படுத்தியமையை அறியமுடிகிறது.

    பாடல் பாடுதல்

    வழிபாட்டு நிலையில் பாட்டுப்பாடி வழிபாடு செய்தல் என்னும் நிலையானது ஒரு அங்கமாக அமைகிறது.

                     மாயோன் பாணியும் வருணப்பூதர்
                    நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
                    வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்                  சிலம்பு. 6.35-37

    என்னும் வரிகளில் குறத்தியரின் குறிஞ்சிப்பாணி, ஓதைப்பாணி, குழலின் பாணி போன்றவை நீர்படைக்காதையில் பாடியமைக் காணலாகிறது.

                    ……………….அணங்குமுன் நிறீஇ
                    விலைப்பலி உண்ணும் மலர்ப்பலி பீடிகைக்
                    கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி           சிலம்பு.12.42-44

    என்னும் வரிபாடலில் மானுடரை வாழ்த்தியும், தெய்வத்தைப் போற்றியும் அமைந்த வேட்டு வரிப்பாடல்கள் சான்றாகும்.

    புண்ணிய நீராடல்

    திருத்தலங்களில் உள்ள நீர் புனிதநீராடல் போற்றப்படுகிறது. அத்தகைய நீரின் சிறப்புகள் சிலம்பில் எட்டு இடங்களில் பேசப்படுகின்றது.

                       குமரியும் பெருந்துறை கொள்கையிற் படிந்து      சிலம்பு.15.15

    என்னும் பாடல்வரி மாடலன் குமரியில் நீராடியதையும்,

                    என்வாய்க் கடெடார் இறந்தேர்ர் உண்மையின்
                    நன்னீர்க் கங்கை ஆடப் போந்தேன்   சிலம்பு.27.109-110

    என்னும் பாடல்வரிகள் மாடலன் கங்கையில் நீராடியதையும்,

                    ஆர்த்த கணவன் அகன்றன்ன் போய் எங்கும்
                    தீர்த்த்த் துறைபடிவேன்                            சிலம்பு.9.37-38

    என்னும் வரிகள் தேவந்தியானவள் தான் பிரிந்த கணவனைச் சேரும் பொருட்டு புண்ணிய நீரில் நீராடியமையை எடுத்துரைக்கிறது.இறைவனை வழிபடும் முன்பு அங்குள்ள புண்ணிய தலத்தில் நீராடல் என்பது முக்கிய அங்கமாக அமைந்தமையைக் காணமுடிகிறது.

    பலியிடுதல்

    வழிபாட்டில் இறைவனுக்கு பலியிட்டு வழிபடல் என்ற நிலையானது நன்றியை செலுத்தும் வகையிலும் தன் வழிபாட்டின் குறைகளையும்  போக்கும் பொருட்டும் இந்நிகழ்வு நடைபெற்றது. பலியீட்டு முறையில் இறைவனுக்கு விலங்குகள், பறவைகள், கனிகள், மலர்கள் படைத்து வழிபாடானது நடைபெற்றதை அறியமுடிகிறது.

                    உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
                    மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிர
                                                                                                                                           சிலம்பு 26.195-196

     என்னும் சிலப்பதிகார வரிகள் உயிர்ப்பலி கொடுத்தமையை உணர்த்துகிறது.

    புறத்திணையில் வெட்சித்திணை ஆநிரைக் கவருதலை எடுத்துரைக்கிறது. அந்நிலையில் ஆநிரையைக் கவரச் செல்லும் வெட்சி வீரருக்கு வெற்றி தெய்வமான கொற்றவை துணை நிற்பதை,

                    அடல்வலி எயினர் நின்னடிதொடு கடனிது
                    மிடறுகு குருதிகொள் விரல்தரு விலையே ………….

    என்னும் வரிகள் வெற்றிக்குப் பின் கொற்றவைக்கு உயிர்ப்பலியிட்டு வெற்றியைக் கொண்டாடியமையை எடுத்துரைக்கிறது.

    அருள் பெறல்

    மக்களின் நிறைகுறைகளையும் அவர்களது தீமைகளையும் எடுத்துக்கூறுபவர் தெய்வத்தின் அருள் பெற்றவர். அவர் வழிபாட்டின் போது மக்களுக்கு அருள்கூறி வழிசெய்வர்.

                     பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி
                    தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்தி சிலம்பு 12.7-8

    என்னும் வரியில் சாலினி தெய்வ அருள்பெற்ற நிலையை எடுத்துரைக்கிறது.

                       …………….. உயர்மொழி கூறித்
                    தெய்வம்உற்று எழுந்த தேவந்திகைதான்  சிலம்பு 30.44-45
                    பாசாண்டன்யான் பார்ப்பனி தன்மேல்
                    மாடல மறையோடு வந்தேன்            சிலம்பு 30.69-70

    என்னும் வரிகளில் தேவந்தி தெய்வ அருள் பெற்ற நிலையினை எடுத்துரைக்கிறது.

    முடிவுகள்

    • சங்ககால மக்கள் இயற்கை சத்திகளைத் தெய்வமாக வழிபட்டனர்.
    • வழிபாட்டு நிலையில் பூசை,பாடல்கள்,மந்திரங்கள் கட்டாயமாக அமைந்தமையைக் காணமுடிகிறது.
    • வழிபாடானது பழக்கத்தின் அடிப்படையில் தோன்றியமை என்பது புலப்படுகிறது.
    • கோயில் வழிபாட்டு நிலையில் பலியிடல் நிகழும் இடம் முதலில் வழிபட்டதன் மூலமாக சக்தி நிறைந்த பீடமாக அமைந்தமையை உணரமுடிகிறது.
    • நீரணிவிழா வாயிலாக திருவுருவங்களுக்கு நீராட்டல் அமைந்தன.
    • மந்திரம் என்பது நன்மை, தீமை இரண்டிற்கும் உச்சரித்த நிலையைக் காணமுடிகிறது.
    • வழிபாட்டில் தன் வேண்டுதல் நிறைவேற அல்லது நிறைவேறிய பின்பு கடவுளுக்கு பலியிடதல் என்பது வழக்கமாகக் கொள்ளப்பட்டது.
    • வழிபாட்டின் உச்சநிலை தெய்வத்தின் அருள்பெற்று அதனடிப்படையில் மக்கள் நன்முறையில் வாழ்ந்த நிலையைக் காணமுடிகிறது.
    • வழிபாட்டு நிலையானது ஒன்றன் தொடர்ச்சியாக மன்றொன்று இந்தமையைக் காணமுடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. சிலம்பொலி சு.செல்லப்பன், சிலப்பதிகாரம், பாரதி நிலையம், சென்னை
    2. சுப்பிரமணியன் ச.வே, சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், சென்னை
    3. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
    4. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணார் உரை,சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
    5. பரிபாடல் , சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    வழிபாட்டு முறைகள் தொன்றுதொட்டு இன்றுவரை தொடர்ந்து வரும் நிலையில், இடம் காலத்துக்கு ஏற்ப அவை மாறுபட்டும் விளங்குகின்றன. இக்கட்டுரை, சிலம்பில் கோவில் வழிபாட்டு முறைகளைப் பன்முகங்களில் தொகுத்து வழங்குகிறது.

    சிலம்பின் மையப்புள்ளயான ‘ஊழ்வினை’ சார்ந்து விளங்கும் வழிபாட்டுமுறை எனச் சுட்டியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். தொல்காப்பியம் விளக்கும் வழிபாட்டுமுறையை மேற்கோள் காட்டி, சிலம்பில் வழிபட்டதை விளக்கியிருப்பது சிறப்பு.

    வழிபாட்டு விளக்கம், முறை, இலக்கியங்களில் வழிபாடு இவை தகுந்த சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. அவை சிலம்பின் கதையோட்டத்துடன் பொருந்தியிருப்பதை
    இக்கட்டுரையில் சுட்டியிருப்பது சிறப்பு.
    ஏழு குறுந்தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள இக்கட்டுரை கோவில் அமைப்பு,  அபிடேக முறை, பாடல்முறை, பலியிடுதல் முதலியனவற்றைத் திறம்பட எடுத்தியம்புகிறது. மக்கள் வாழ்வியலை ஒட்டி வாழிபாட்டுமுறை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
    வழிபாட்டின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து கூறும் முடிவுரைக் கருத்துகள் குறுகத் தரித்த, செழிப்பான தன்மையுடன் விளங்குகின்றது.
    சிலம்பு  வழிபாடு  குறித்த கருத்துகளை, பிற  இலக்கியங்களில் கூறப்பட்ட வழிபாட்டு முறைகளுடன் ஒப்பிட்டு விரிவான ஆய்வுத் தொகுப்பாக வழங்க முயற்சி செய்யலாம். குறுந்தலைப்பின் கீழ்வரும் கருத்துகளை விரிவாக்கிப் பெரிய அளவில் ஆய்வுத்தொகுப்பாக வழங்கலாம்.

    படிக்கப் படிக்க வியக்க வைக்கும், சிலம்பில் கொட்டிக்கிடக்கும் ஆழமான வாழ்வியலின் ஒரு துளியாக இக்கட்டுரை தரும் வழிபாட்டுச் செய்திகள் சிலம்பு அனுபவத்துக்கு மேலும் நயம் கூட்டுகின்றது.  


     

    Share
  • (Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

    (Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

    (Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு

    மு. மோகனலட்சுமி

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    அரிய கையெழுத்துச் சுவடித்துறை

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    முன்னுரை

     பெருமையும் வளமும் பெற்ற தமிழ் மொழியைப் பன்னெடுங்காலமாக வளர்த்த இலக்கியங்களும் இலக்கணங்களும் நம் மொழியின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. ஓர் இலக்கியத்தில் அல்லது இலக்கணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் மொழியமைப்புகளையும் விளக்கிக் கூறுவதற்கென உரைகள் தேவைப்பட்டன.

    2500 ஆண்டுகளுக்கு முன்னர்ப் படைக்கப்பட்ட தொல்காப்பியத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் நேரும்போது உரையாசிரியர்கள் மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்தரும் வகையில் உரைகள் எழுதிச் சிறப்புச்செய்தனர். அவர்களின் அணுகுமுறை, கல்வி கேள்விகளில் கிடைத்த பட்டறிவு, குறிக்கோள் போன்றவற்றின் அடிப்படையில் மொழி நடை மாறியிருப்பதைக் காண முடிகிறது. நிறைய சான்றோர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

    இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவருமே தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய பெரும் சிறப்பு வாய்ந்த உரையாசிரியர்கள் ஆவர் (சுப்பிரமணியன், 2004).

    ‘’இலக்கியம் இலக்கணம் எனும் இரண்டில் முதன்முதலில் இலக்கண நூல்களுக்கே உரைகள் எழுதத் தலைப்பட்டனர் சான்றோர் பெருமக்கள்’’ என்று [இளங்குமரன், 1988-பக். 28] இலக்கண வரலாற்றில் கூறுகிறார்.

    காலந்தோறும் விரிவடைந்து வருகின்ற ஆய்வுலகில் எழுகின்ற புதுச் சிந்தனைகள், ஆய்வுநெறி அனுகூலங்கள் போன்றவை உரையாசிரியர்களின் உள்ளத்தில் பதிந்து அவற்றின் தாக்கத்தால் புதிய கோணங்களில் இலக்கணத்தை ஆராய்ந்து தெளிவுரை, புத்துரை, விளக்கவுரை, பொழிப்புரை, சிற்றுரை, பேருரை, நயவுரை, போன்ற பல உரைகளும் எழுதி உரைமரபை உருவாக்கித் தந்துள்ளனர்.

    பதிப்புகள்

    ‘’முதன்முதலில் அருஞ்சொற்களுக்குப் பொருள் தரும் வகையிலேயே உரைகள் தொடங்கின. சொற்களைக் கொண்டுகூட்டி முடிக்கும் வகைகளுமே முதற்படிகளாக அமைந்தன. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களுக்கு மிகச் சுருக்கமான குறிப்புரையே எழுதப்பட்டன.’’ [அரவிந்தன், 2018]. இதைத்தொடர்ந்து, குறிப்புரை களுடன் சொல்லிவந்த விளக்கம், மேற்கோள் ஆகியவற்றோடு உரைகள் விரிவடைந்தன. பதிப்புக்களும் அவ்வாறே மாறிவந்தன.

    பல உரையாசிரியர்களும் எழுதிப் படைத்த உரைகளைத் தொகுத்துச் சரிபார்த்துப் பிழைகளை நீக்கி, விடுபட்டவைகளைத் தேடியெடுத்து, உரைகளுக்கான விளக்கங்களுடன் பதிப்பிப்பது என்பது எளிதான பணி அன்று.  பனையோலைகளில் இருந்த நூல்களை அச்சேற்றிப் பதிப்பித்தோரின் சமூகச் சிந்தனைகளும் மொழிச் சிந்தனைகளும் போற்றுதற்குரியன.

    இவ்வாறான நிலையில் ‘குருசாமி ஐயர்’ என்னும் இயற்பெயர் கொண்டு பின்னாளில் தமிழியக்கத்தலைவர் மறைமலை அடிகளின் கருத்துப்படி ‘அடிகளாசிரியர்’ எனத் தம் பெயரை மாற்றிக்கொண்டவர்இவர். இச்சான்றோரின் தொல்காப்பியப் பதிப்புக்கள் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    அடிகளாசிரியரியரின் தமிழ்ப் பணி

                மூலநூல்களைக் கற்பிக்கும் போது எதிர்ப்பட்ட இன்னல்களை நீக்குவதற்கு உரைநூல்களே துணைநின்றன. அதே நேரத்தில் சுவடி வடிவில் இருந்தவற்றை அச்சு வடிவிற்குக் கொண்டுவந்து பொதுமக்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி செய்த முயற்சியின் வெற்றி பதிப்பாசிரியர்களையே சாரும்.  அவர்களுள் அடிகளாசிரியரின் பங்கு மிகச் சிறந்தது ஆகும்.

                ‘பேதைமையை மறுத்தல்’ அடிகளாசிரியரின் அடிப்படைப் பண்பாகும். தமிழ் மொழியும் வடமொழியும் இறையுணர்வின் இரு கண்கள் என்ற கூற்று பேதைமை யுடையதே என்பது அவர் கருத்து. தமிழ்ப் பண்பிலிருந்து வட மொழிக்குச் சென்ற கருத்துக்களை மீட்டெடுக்கத் தம்மை ஆற்றல்படுத்திக் கொள்ள வடமொழியையும் கற்றார்.

                ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.’

    [திருமந்திரம் 1984. செய்யுள் 81]

    என்னும் திருமந்திரத்தையே தனக்கிடப்பட்ட தெய்வ ஆணையாகக் கொண்டு தமிழ்ப் பணி செய்து வந்தார்.

                புதிய இலக்கியம் புனைவதை விட முன்னோர் மொழிந்தவற்றைப் பின்னோர் அறியப் பதிப்பிக்கும் பணியே சிறப்புடையதுஎன எண்ணித்தொல்காப்பியம் முதலான முப்பது  நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து செயலாற்றினார்.

                பலவகைகளிலும் ஆராய்ந்து முடிவை வெளிக்கொணர்தல், கற்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் புரியும் படியும் கருத்துக்களைத் தருதல், சமூகத்தின் கல்வி அறிவு வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு பதிப்பித்தல், நூலாசிரியரின் அல்லது உரையாசிரியரின் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கருத்துக்களை அறிந்து உரையெழுதுதல் போன்றவற்றைத் தம் குறிக்கோளாகக் கொண்டு தொல்காப்பியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கினார்.

                இலக்கணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போதுஇலக்கியத்திற்கு உரை எழுதுவது ஓரளவு எளிமையாகும். ஆனால் மரபு வழுவாது கருத்துக்கள் கூறவேண்டிய கட்டாயம் இலக்கணத்திற்கு உண்டு [நன்னூல்,1984]. அது மட்டுமல்லாமல் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் குறிக்கோளை உள்ளத்தில்கொண்டு இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர்களுள் அடிகளாசிரியர் முக்கியமானவர்.

    ‘அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகள் எளிமைப்படுத்தப்பட்ட முறையில் பதிக்கப்பட்டுள்ளவை என்பதே அவற்றின் தனிச் சிறப்பாகும்.’ [சிவபெருமான், 2009]

    அடிகளாசிரியர் சி.வை.தாமோதரம் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி, தி.வே.கோபாலையர், போன்ற தொல்காப்பியப் பதிப்பாசிரியர் களுக்கும் இவருக்குமான பதிப்பு வேறுபாடுகள் பல உண்டு. முதலாவதாக, சிறப்புப் பாயிரத்திற்கு மட்டுமே இருபது பக்க அளவில் விளக்கவுரை எழுதியிருப்பது அவருடைய தனித் தன்மையாகும். இரண்டாவதாக, இளம்பூரணாரின் உரையை அடிப்படையாகக் கொண்டு பதிப்பின் போது வெகுவாக ஆராய்ந்து, சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார் ஆகியோரின் உரைகளையும் இலக்கண நூல் உரையாசிரியர்களின் உரைகளையும் நிகண்டுகளையும் பயன்படுத்தி உரை எழுதியது. மூன்றாவதாக, உரைக்கே உரைவிளக்கம் எழுதிப் பதிப்பிக்கும் முறையைக் கையாண்டார்.

    உரையாசிரியர்களின் மொழி நடையைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் இன்னல்களை நீக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு உரைவிளக்கம் அளித்தார். அதை அவருடைய சிறந்த பங்களிப்பு எனக் கூறலாம்.எடுத்துக்காட்டாக,

    தொல்காப்பிய சொல்லதிகார இளம்பூரணர் உரைப் பதிப்பில் ‘உயர்திணை’ பற்றிய உரை விளக்கம் மிக அருமையானதாகும்.

     

    ‘’உயர் திணை என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் கூறிய விளக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிட்டுக் கடைசியில் தம் கருத்தையும் நிலை நாட்டியுள்ளார்.

                சேனாவரையர்                      –        மக்கட்சாதி

    நச்சினார்க்கினியர்               –       உயர்ந்த ஒழுக்கம்

    தெய்வச்சிலையார்             –       உயர்தல் என்பது மிகுதி

               கல்லாடனார                             –       உயர்திணை என்பது இறந்த கால    வினைத்தொகை

             மயிலைநாதர்                              –      உயர் என்பது மிகுதி, திணை என்பது பொருள்

    சங்கரநமச்சிவாயர்                –       திணை என்பது பல பொருள் குறித்த ஒரு சொல். ஈண்டு குலத்தினை                                                                                      உணர்த்துகிறது.

    இவற்றை எல்லாம் தொகுத்துக் கூறிய அடிகளாசிரியர். இறுதியில் தம் கருத்தான அதற்குப் ‘பொருள் என்னும் பொருளே தக்கதாம்’ என்பதை எடுத்துக் கூறுவது அவர் கையாளும்  உரைவிளக்க உத்தியாகும்.

    இவர் இளம்பூரணாரின் உரையைத் தெரிவுசெய்ததற்குக் காரணம், ‘தொல்காப்பியத்தை உணர்ந்துகொள்ள இளம்பூரணர் உரையே ஏற்றது என்பது அடிகளாசிரியரின் துணிபாகும். எனவே, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்-செய்யுளியல் மற்றும் ஏனைய எட்டு இயல்கள் ஆகியவற்றைப் பதிப்பிக்க இளம்பூரணர் உரையையே தேர்வு செய்தார். அவ்வாறே பதிப்பித்தும் வந்துள்ளார்.’  எனச் சிவபெருமான் தம் முன்னுரையில் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    தொல்காப்பிய எழுத்ததிகார வளர்நிலைப் பதிப்பில் இவரின் பங்கு முக்கியமானது. அவ்வுரையைக் கரந்தைப் புலவர் கல்லூரியில்மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் போது அதிலுள்ள பிழைகளை நீக்கி வடிவமைத்தார். அதுவே மாணவர்களையும் ஈர்த்தது என்பதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை.

    சிறப்புப் பாயிரத்திற்கென 25 பக்க அளவில் விளக்க உரையும் நூல் மரபு பற்றி 35 பக்கங்களில் தெளிவுரையும் எழுதியது அவர்க்கு இலக்கணத்தில் இருந்த ஆர்வத்தை மேம்படுத்தி நம் இலக்கண அறிவையும் தூண்டியதில் வியப்பொன்றுமில்லை.

    எழுத்ததிகாரப் பதிப்பும் அச்சிடுதலும்

    முதன்முதலாக, 1969-இல் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தின் இளம்பூரணர் உரையைத் தம் சொந்தப் பொருட்செலவிலேயே வெளியிட்டார். இதற்காக அவர் நான்கு ஆண்டுக்காலம் கடும் உழைப்பை மேற்கொண்டு பின்னர் அச்சுப்பணிக்கென இரண்டு ஆண்டுக் காலம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.  புதிதாகப் பதிப்பிப்பவர்களில் பெரும்பாலோர் இவ்வின்னல்களைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

    பதிப்புத் தொடர்பாக, அடிகளாசிரியர் அனுபவித்த இன்னல்கள் பல.தமிழ் வித்துவான்களிடமும் மடத்தலைவர்களிடமும் கேட்டுப் பயனில்லை. இவரிடமும் போதிய தொழில் நுட்பமில்லை.  இதனால் எல்லாம் கடவுள் செயலே என்று நம்பியிருக்கும் தறுவாயில் இராசபாளையம் மணிமேகலை மன்றத்தார் பூ.கு. குப்புசாமி ராஜா என்பவர் தொல்காப்பிய செய்யுளியல் இரு சூத்திர விளக்கக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தினார். பரிசுத் தொகை ரூ. 1000 எனவும் அறிவித்தார்.

    ‘ஐவகை யடியும் விரிக்கும் காலை

    மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்

    எழுபது வகையின் வழுவிலவாகி

    அறுநூற்றிருபத் தைந்தா கும்மே’

    என்னும் நூற்பாவிற்கான விளக்கத்தை அடிகளாசிரியர் ‘ஐவகையடியும்’ விளக்கம்’ என்னும் கட்டுரையை மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்களை நடுவராகக் கொண்டு அவரது கட்டுரையே பரிசு பெறத் தகுதிவாய்ந்தது. எனினும் ஐயத்தை முழுமையாகத் தீர்க்கவில்லை. ஆதலால் பாதிப் பரிசு தரலாம் என முடிவு செய்தனர்.

    அடிகளாசிரியர் எழுதிய கட்டுரை சிறந்ததெனத் தேர்வாகியும் ரூ. 500 மட்டுமே கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு பணியைத் தொடங்கினார்.கீரம்பூர் குப்புசாமி ஐயரிடம் ரூ 500– ஐயும் மாணவர்  நா . முத்துசாமி அவர்களிடம் ஒரு தொகையையும் கடனாகப் பெற்றுப் பதிப்பை வெளியிட்டார்.

    அடிகளாசிரியரைப் போன்றே சேனாவரையரின் சொல்லதிகார உரையை முதன்முதலாகப் பதிப்பித்த பதிப்பு வேந்தரும் இன்னல்பட்டார்.‘’சி. வை. தாமோதரம் பிள்ளையும்அதை அச்சிடுவதற்கான பொருள் இல்லாத போது பர்மா செல்வந்தர்களின் பொருளுதவியுடன் உரையை அச்சிட்டார். இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையை 1868-ஆம் ஆண்டு வெளியிட்டார்.’’ [பாண்டுரங்கன், 2008]. இவரைப் போன்றே அடிகளாசிரியரும் பொருளாதாரச் சிக்கலிலிருந்து வெளிவர வள்ளல்களின் துணையை நாடியதில் வியப்பு ஏதும் இல்லை[அடிகளாசிரியர்,1969].

    எழுத்ததிகாரத்தின் மேன்மையையும் எளிமையையும் கருத்தில் கொண்டு பல பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கற்பிப்பதற்கு இப்பதிப்பையே பயன்படுத்தினர் என்பது அடிகளாசிரியரின்  விளக்கத்திற்கும் செம்மையான பதிப்பிற்கும் கிடைத்த பெருமை எனலாம்.

    எழுத்ததிகாரத்தின் இப்பதிப்பின் சிறப்பை உணர்ந்த அப்போதைய தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரான மாண்பமை வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் அடிகளாசிரியரைத் தமிழ்ப் பல்கலைக் கழகச் சுவடித்துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராக நியமனம் செய்தார். அதோடு, தொல்காப்பியத்தை முழுவதுமாகப் பதிப்பித்துத் தரும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தார் என்பது அடிகளாசிரியரின் பதிப்பின் மேலும் அவரது உழைப்பின் மேலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

    எழுத்ததிகாரப் பதிப்பின் சிறப்பு பல்வேறு பேராசிரியப் பெருமக்களால் புகழப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. குறிப்பாக, மு சண்முகம் பிள்ளை [1978] அவர்களைக் கூறலாம். அவரைத் தொடர்ந்துதெ. ஞானசுந்தரம், அபிரகாம் அருளப்பன்  போன்ற பேராசிரியர்களும் அடிகளாசிரியரை மிகுந்த பதிப்புத் திறன் வாய்ந்தவர் என்று தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    சொல்லதிகாரப் பதிப்பும் அச்சிடுதலும்

    எழுத்ததிகாரப் பதிப்பின் திறமும் பொருளதிகாரப் பதிப்பின்எடுப்பும் தோன்றுமாறு சொல்லதிகாரப் பதிப்பைத் தனி மதிப்புடன் பதிப்பித்துள்ளார்.

                தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை பதிப்பித்த ஆண்டு 1969. சொல்லதிகாரம் பதிப்பித்த ஆண்டு 1988. சொல்லதிகாரப் பதிப்பு முடிவடைய 19 ஆண்டுகள் ஆயின. கரந்தைப் புலவர் கல்லூரியில் எடுத்த முயற்சி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நிறைவேறியது. இச்செய்தியைக் குறிப்பிடும் போது அவர்,             ‘’யான் தஞ்சாவூர் கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது பல இலக்கண நூல்களைக் கற்றேன். அவற்றில் பிழைகள் இருப்பதைப் பார்த்து ‘இலக்கண நூல்களில் காணப்படும் பிழைகள்’ [பக் 42] என்னும் தலைப்பில் எழுதினேன். தமிழ்ப்பொழில் இதழில் வேண்டுகோள்கட்டுரையாக வெளியிட்டார்கள்.

    ‘’இப்படிப் பிழைகள் இருப்பது நம் தாய் மொழிக்கு இழுக்கு தரும்.அதனால் தமிழறிஞர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு ஓலைச் சுவடிகள், அச்சுப்படிகள்  போன்றவற்றை வைத்து ஒப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்ட போது யாரும் முன்வரவில்லை.’’

    தமிழ் மக்கள் செய்த தவப் பயனால் தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றிற்று. பல்கலைக்கழகத்தார் இப்பணிக்கான முயற்சியை அடிகளாசிரியரிடம் ஒப்படைத்தபோது, ‘’முதன் முதல் தொல்காப்பிய செய்யுளியல் இளம்பூரணர் உரையை ஆராய்ந்து கொடுத்தேன். ஆனால் 1985-இல் தான் அச்சிட்டு வெளியிட்டனர். அதன் பிறகுதான் சொல்லதிகார உரையைத் தொடங்கினேன்’’ என்று குறிப்பிடுகிறார். [அடிகளாசிரியர், தொல். சொல். இளம்பூரணர் உரை பக்கம் 7,8]

    தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் விருப்பத்தை முழுமை செய்ய, தம் உடல் நலமின்மையையும்பொருட்படுத்தாமல் அரும் முயற்சி செய்து இளம்பூரணரின் உரையுடன் சொல்லதிகாரத்தைப் பதிப்பித்துக் கொடுத்தார்.

    பதிப்பிற்கு ஆதாரமாக அவர், திருப்பாதிரிபுலியூர் தவத்திரு ஞானியார் மடத்து ஓலைச் சுவடி, திருவாடுதுறை ஆதீனத்து ஓலைச் சுவடிகளோடு அதுவரை அச்சில் வெளியான இலக்கண இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டும் மிகவும் முயன்று சொல்லதிகாரத்தைப் பதிப்பித்தார்.

    சொல்லதிகாரத்தைப் பதிப்பிப்பதற்கு அவர் 19 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் என்பது அவரது கடின உழைப்பையும் முயற்சியையும் அதன் சிறப்பையும் உறுதிப்படுத்துகிறது. பதிப்பு மிகச் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறைக்கு அது சான்றாக அமைகிறது.

    அவருடைய உரைவிளக்கத்திற்கு இன்னுமொரு சான்று

    ‘’இடையெனப் படுப பெயரோடும் வினையோடும்

    நடைபெற் றியலும் தமக்கியல்பிலவே.’’

    [தொல். சொல். இடை.நூற்பா1]

    இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரை இல்லை. ஆனால் பிற உரையாசிரியரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தருகிறார். இதனால் ‘வந்தது கொண்டு வராதது முடித்தல்’ என்னும் உத்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது அவரது பதிப்புப் பணி.

    அடிகளாசிரியர் பதிப்பித்த தொல்காப்பிய சொல்லதிகாரம் 510 பக்கங்கள் மற்றும் 456 நூற்பாக்களை உள்ளடக்கியது. இவற்றையெல்லாம் விளக்கிக் கூறும் திறத்தால் இப்பதிப்பை அரிய நயங்கள்  கொண்ட பதிப்பாகக் கொள்ளலாம்.

    தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்101-ஆவது வெளியீடாக, 1988-ஆம் ஆண்டு ‘தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை’ என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.

    செய்யுளியல் பதிப்பும் அச்சும்

     

    வயது முதிர்ந்த நிலையில்  கண்நோயால் போராடிய போது தம் குடும்பத்தை விட்டுத் தம் இளைய மகனுடன் மட்டும் தஞ்சாவூர் வந்து தங்கிப்பணியாற்றித் தம் பதிப்புப் பணியை மேற்கொண்டார்.

    பதிப்புப் பணிக்கான முயற்சியை மேற்கொள்ளும் போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த மாண்புமிகு வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் சிறப்பான பல அரிய பணிகளை நிறைவேற்றி வந்தார். அப்போது இப்பதிப்புப் பணிப் பற்றிய கருத்துக்களை முன் வைத்தபோது அவர்,

    ‘’பதிப்புப் பணி மிகச் சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் நீங்கள்‘ஏடு, கையெழுத்துப்பிரதிகளை முதலில் தொல்காப்பியம் முழுமைக்கும் திரட்டுக. பாடபேதம் பார்க்க, மூல பாடம் நிர்ணயிக்க’இத்தகைய தகவல்களைத் சேகரித்த பின் பதிப்புப் பணியை மேற்கொண்டால் பதிப்பின் தரம் சிறந்ததாக இருக்கும்.’’ என்று கூறிப் பதவிக்காகஆணையை அளித்தார்கள்.

    ‘இக்கட்டளையை ஏற்றுக்கொண்ட அடிகளாசிரியர் கடவுளின் அனுக்கிரகத்தால்தான் இப்பணி கிடைத்தது’ என உணர்ந்து தம் முயற்சியை மேற்கொண்டார்.

    துணைவேந்தரின் கருத்துப்படியே, ஓலைப்பிரதிகள், அச்சுப்பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், செந்தமிழ்ச் செல்வி முதலான ஆராய்ச்சி இதழ்களில் காணப்படும் கட்டுரைகள், கருத்தரங்க வெளியீடுகள், அறிஞர்கள் எழுதிய பொருளதிகாரப் பொருள் பற்றிய தனி வெளியீடுகள், தமிழ் ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் வெளியீடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தம் ஆய்வை மேற்கொண்டார்.

    இவரின் உழைப்பின் உந்துதலால் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத்துறையினர்1985-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் அடிகளாசிரியரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இளம்பூரணாரின் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியல் உரையைப் பதிப்பித்தனர்.

    பின்னர் செய்யுளியல் தவிர்த்த ஏனைய எட்டு இயல்களுக்கும் உரைப்பதிப்பு வெளியிட ஆய்வுகள் மேற்கொண்டார். அவற்றைப் பற்றிய நீண்ட ஆய்வுரையின் கையெழுத்துப் பிரதியைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு உரித்தாக்கினார். அது வெளிவருமானால் தொல்காப்பியத்திற்கான அவருடைய உரை முழுமையாகும்.

    செய்யுளியல் பதிப்பில் உரை விளக்கம்

     தொல்காப்பியர் செய்யுள் உறுப்புக்களைச் சொல்லும் இடத்தே யாப்பு என்றொரு உறுப்பை ஆறாவது உறுப்பாகச் சொல்லியுள்ளார். யாப்பின் விளக்கம் கூறுமிடத்து,

                ‘’எழுத்து முதலா ஈண்டிய அடியில்

    குறித்த பொருளை முடிய நாட்டல்

    யாப்பென மொழிப யாப்பறி புலவர்.’’

    [பொருளாதிகாரம் செய்யுளியல் நூற்பா-74]

    சில புலவர்கள் எழுத்து, அசை, சீர்,அடி இவற்றை இனிய ஓசைப்பட அமைத்தல் என்று யாப்பை அரைகுறையாகக் கூறும் போது அடிகளாசிரியர்,‘யாப்பு- பொருள் யாத்தல் என்க’ என்று குறித்த பொருள் முற்றுலும் தெளிவாக அமையுமாறு கூறினார்.அடியில் வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தொல்காப்பியர் யாப்பு என்பதைச் செய்யுளின் உறுப்பாகக் கூறியுள்ளார்.’ என்று சிறப்பான உரை விளக்கம் தருகிறார். அது அவரின் ஆய்வுத்திறனையும் எடுத்தியம்பும் திறனையும் வெளிக்காட்டுகிறது.

    செய்யுளியலில் பாட வேறுபாடுகள்

    பொதுவாக,ஓலைச்சுவடிகளைப்படிஎடுப்பவர்களால் பிழைகள் நேரிடுவதுண்டு. அல்லதுநூலாசிரியர்கள் கூறும் கருத்துக்களில் உரையாசிரியர்கள் மாறுபட்டு நிற்கும் போது பாடவேறுபாடுகள் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றுகின்ற பாடபேதங் களை எவ்வாறு ஆராய்ந்து தெளிவுபடுத்துகிறார் என்பது அடிகளாசிரியருடைய உரைவிளக்கத்திற்குச் சான்று அளிக்கிறது.

    எடுத்துக்காட்டாக,

                ‘இறுவாய் ஒப்பினஃ தியை இயைபென மொழிப.’ என்பது இளம்பூரணர் பாடம்.      ‘இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே.’ என்பது பேராசிரியர் மற்றும்  நச்சினார்க்கினியர் பாடம். ‘இறுவாய் ஒப்பினஃ தியைபெனப்படுமே’ என்பது யாப்பருங்கலம் இயைபுத் தொடை இலக்கணம்.

    அதே நேரத்தில் மர்ரே பதிப்பு, பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் பாடத்தை முதலாவதாகவும், இளம்பூரணர் பாடத்தை இரண்டாவதாகவும்வேறுபட்ட பாடத்தை மூன்றாவதாகவும் அமைத்துத் தந்துள்ளனர். இவ்வாறு பாடபேதங்கள் ஏற்படுவதைச் சுட்டித் தம் கருத்துக்களை வெளிப்படுத்துவது அடிகளாசிரியரின் உத்தியாகும்.

    ‘இயைபு’ என்ற சொல்லே கேள்விக்குரியதாக அமைய, அடிகளாசிரியர் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்து உரைவிளக்கம் தருவதால் அதன் சிறப்பு புரிவதோடு ஆராய்ச்சி முறையையும் மறைமுகமாக அறிந்துகொள்ள முடிகிறது எனலாம்.

    இளம்பூரணர் செய்யுளியல் 97-வது நூற்பாவுரையில் இயைபை இறுதிநிலை எழுத்தின் மேல் வைத்துக் காட்டுகிறார். ‘இறுவாய் ஒப்பினஃ தியைபெனப்படுமே’ என்பது யாப்பருங்கல உரை [40]. இதன் உரையாசிரியர் அடிதொறும் இறுதிக்கண் எழுத்தாலும் சொல்லாலும் ஒன்றிவரின் இயைபு என்கிறார்.யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் அடிதொறும் இறுதிக்கண்நின்ற எழுத்து, அசை, சீர் ஒன்றுதல் என்கிறார்.பல்யாகனாரும் நந்தத்தனாரும் இறுதி சீர் ஒன்றுதலையே இயைபு என்றனர்.

                ‘’இயைபே இறு சீர் ஒன்றும் என்ப

                இறு சீர் ஒன்றின் இயைபெனப்படுமே’’

    இலக்கண விளக்க நூலார் ஈற்றெழுத்து ஒன்றிவருதல் இயைபு என்றனர்.

    ‘’இறுவாய் ஒப்பின் இயைபுத் தொடையாம்.’’

    இவற்றிலிருந்து பாட வேறுபாடு மட்டுமல்லாமல் இயைபு என்பதையும் விளக்கிவிட்டபெருமை அடிகளாசிரியரையே சாரும்.

    அடிகளாசிரியர்தாம் பதிப்பிப்பதற்கு முன்பு வெளியான நூல்களையும் உசாத்துணையாகக் கொண்டு அருமையான பதிப்பை  முழுமை செய்தார். சான்றாக,

    வ.உ. சிதம்பரம் பிள்ளையின் செய்யுளியல் பதிப்பு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரின் இளம்பூரணர் உரை.யாப்பருங்கலக்காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரச்சோழிய உரை, நேமிநாத உரை போன்ற பல உரைகளையும்  பயன்படுத்தியதோடு, ‘’ஒரு நூலைப் பதிப்பிக்கத்   தொடங்குவதற்கு முன்பு அந்நூலோடு தொடர்புடைய அனைத்து நூல்களையும் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.’’ என்ற கருத்தினையும் வலியுறுத்தினார்.[ அடிகளாசிரியர் தம் கைப்பட 1982-ஆம் ஆண்டு எழுதிய குறிப்புரை]. அதுவே அவரின் பதிப்புச் செம்மைக்குக் காரணமாயிற்று. பிழைகள் நேராவண்ணம் பார்த்துக்கொள்ளல் அவரது இயல்பு.

    பதிப்புக்களின் வடிவமைப்பும் சிறப்பும்

    அடிகளாசிரியரின் பதிப்புக்கள் செம்மையாக அமைவதன் காரணம் அவர் எடுத்துக்கொண்ட கவனமே. பதிப்பிக்கும் போது ஒவ்வொரு நூற்பாவுக்கும் கீழ்வருமாறு வடிவமைத்துக் கொண்டார்,

    1. நூற்பா, நுதலிய பொருள், நூற்பா பதவுரை, எடுத்துக்காட்டு, நூற்பாக் குறிப்பு, உரைக் குறிப்பு, பாட வேறுபாடு, சுவடி வேறுபாடு, பிற இலக்கண ஆசிரியர் கருத்து, பிற உரையாசிரியர் கருத்து, இவற்றில் இவர் சரியெனக் கொண்ட கருத்து என்னும் பதினொரு கூறுகளைக் கொண்டிருந்தது.
    2. உரைக்குறிப்புக்கள் தரும்போது ஒப்பீட்டு ஆய்வுமுறையைக் கையாண்டார். இளம்பூரணர் உரையோடு சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், யாப்பருங்கல விருத்திக்காரர், சங்கர நமச்சிவாயர் ஆகியோரின் உரைகளையும் தந்துள்ளார்.
    3. நூலாசிரியர் கருத்தை விளக்க உரையாசிரியரும் உரையாசிரியரின் கருத்தை விளக்கப் பதிப்பாசிரியரும் என்று காலத்தின் வழி நின்று உணர்த்தும் பணியே பதிப்பித்தல் எனத் தம் பதிப்பின் வாயிலாக மெய்பித்துள்ளார்.
    4. இவற்றோடு நூலின் இறுதியில் நூற்பாச் சொல்லகராதி, உரைப்பொருளடைவு, உதாரண மேற்கோள் அகராதி, நூற்பா முதற்குறிப்பு அகராதிஆகியவற்றைக் கொடுத்து பதிப்புக் கலைக்குப் புதிய வடிவம் கொடுத்துள்ளார்.

    பதிப்பிப்பதில் அவ்வளவு அக்கறையும் ஆழ்ந்த எச்சரிக்கை உணர்வுடனும் செயல்படும் அடிகளாசிரியர் அந்த அளவு அச்சகத்தாரும் மற்றோரும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் குறிப்புக்களையும் கொடுத்திருப்பது அவரது சமுதாய-கல்விச் சிந்தனையும் பதிப்பு பிழையின்றி வரவேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும்  மிகத் தெளிவாக வெளிப்படுவதைக் காணலாம்.

    சான்றாக,

    1. மூலமும் உரையும் பாட வேறுபாடுகளும் அடங்கிய பிரதி
    2. மூலத்திற்கும் உரைக்கும் விளக்கக் குறிப்பு அடங்கிய பிரதி

    இரண்டையும் அச்சகத்தார் அச்சிடும் போது கருத்தில் வைக்க வேண்டும். தாம் கொடுக்கும் குறிப்புக்களைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். பதிப்பு மிகச் செம்மையாக வரவேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறையைஇதில் காண முடிகிறது.

    1. மூலப் பாடத்தை அறிந்துகொள்ளச் சிவப்பு கோடுகள் போட்டுள்ளேன். அதைப் பெரிய எழுத்திலும்,
    2. மூலத்தின் பின் உரையை அச்சிட வேண்டும். அதாவது, மூலத்தை விடச் சிறிய எழுத்திலும் அச்சிட வேண்டும்.
    3. மேற்கோள், சிறப்புப் பெயர் இரண்டையும் உரைக்குப் பயன் படுத்திய எழுத்துக்களில் தடித்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும்,
    4. பாடபேதங்களைஅடிக்குறிப்பில் கொடுத்துவிடுக.
    5. மூலம், உரை, பாடபேதங்களை மேற்குறித்தவாறு அச்சிட்ட பின் பதிப்பாசிரியர் குறிப்புக்களை அச்சேற்றுங்கள்.போன்ற தெளிவான விளக்க முறை ஒன்றை வகுத்துக் கொடுத்த பெருமைக்குரியவர்.

    [அடிகளாசிரியர் தம் கைப்பட 1985-ஆம் ஆண்டில் எழுதிய குறிப்புரை. பக்கம் 85]

    முடிவுரை

    அடிகளாசிரியர் மிகத் திறமை வாய்ந்த பதிப்பாசிரியர். அவரது தொல்காப்பிய பதிப்புக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இன்றும் தங்கள் இலக்கண வகுப்புகளில் பயன்படுத்துவது அவரின் பதிப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும். அவரின் தனிக் கவனமும் பதிப்புக்கள் செம்மையாக வரவேண்டும் என்பதில் காட்டிய அக்கறையும் அவருடைய பதிப்புக்கள் சிறந்து விளங்கக் காரணமாயின. அவருடைய ‘உரைக்கு உரைவிளக்கம்’ அளித்த உத்தி காலந்தோறும்  பின்பற்றப்படும் முன்மாதிரியாகத் திகழ்வதில் வியப்பொன்றுமில்லை.

    நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என்னும் மூவரில் பதிப்பாசிரியரின் பணிசிறப்பு மிக்கது என்பதை அடிகளாசிரியர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

    துணைநூற் பட்டியல்

    1. அடிகளாசிரியரின் சிவபெருமான், அ., தொல்காப்பியப் பதிப்புகள் ,  தமிழ்ப் பல்கலைக் கழகம்

    தஞ்சாவூர்,  2009.

    1. இலக்கண வரலாறு,  இளங்குமரன், இரா., மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.
    1. உரையாசிரியர்கள்,   அரவிந்தன், மு.வை, மணிவாசகர்பதிப்பகம், சென்னை, [எட்டாம் பதிப்பு],  தொல்காப்பியப் பதிப்புகள். சுப்பிரமணியன், ச.வே..உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை     2004
    1. சி.வை. தாமோதரம் பிள்ளை பாண்டுரங்கன், அ., செம்மொழி செய்தி மடல் 2. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,  சென்னை, 2008.
    1. திருமந்திரம் திருமூலர், கழகப் பதிப்பு,  சென்னை, 1984.
    1. தொல்காப்பியம்- சொல்லியல்  அடிகளாசிரியர். திரு, இளம்பூரணர் உரை [பதிப்பாசிரியர்],  தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 988.
    1. தொல்காப்பியப் பதிப்புகள் சண்முகம் பிள்ளை, மு., தமிழாய்வு -தொகுதி-8,  நன்னூல் தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்,  1984.

    ======================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இலக்கண நூல்களின் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு உரைகள் பெரிதும் துணை புரிகின்றன. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் எனப் பலரும் உரை இயற்றியிருக்கின்றனர். இவ்வுரைகளைத் தொகுத்து, சரிபார்த்து, பிழைகளை நீக்கி வெளியிடுவது என்பது எளிதான பணி அன்று. அத்தகைய பணிகளை மு ன்னெடுத்த அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புப் பணியினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த பெருமை அடிகளாசிரியருக்கு உண்டு. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் இளம்பூரணருரையினைப் பதிப்பிப்பதற்கு இவர் எடுத்து கொண்ட முயற்சிகள், நூலை அச்சிட இவர் பட்ட இன்னல்கள் ஆகியவற்றைக் கட்டுரையாளர் நிரல்படத் தொகுத்தளித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தமை, தொல்காப்பியச் செம்பதிப்புகளுக்கான ஆலோசனைகளை வழங்கியமை ஆகியன குறித்த செய்திகளைக் கட்டுரையாளர் சுட்டிச் செல்கின்றமை பாராட்டுதலுக்குரியன.

    ======================================================================

    Share
  • (Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

    (Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

    மு. கயல்விழி
    உதவிப்  பேராசிரியர், தமிழ்த் துறை, பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி, காஞ்சிபுரம்.
    மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

    திட்டச்சுருக்கம்

    சோழர்கள் வேளாண் நலன் சார்ந்த ஆட்சியாளர்கள். இவர்கள் காலத்தில் வேளாண்மையில் பெரும் புரட்சி ஏற்பட்டது. காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. காவிரி நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அவை மூலமாக ஆற்று நீர், ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன, பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. நதிகளின் குறுக்கே பல புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. குளங்ளும் தூர் வாரப்பட்டன.   சோழர்கள் நன்னீரைத் தேக்கி வைத்து விவசாயம் செழிக்கப் பாடுபட்டனர் “சோழ நாடு சோறுடைத்து” என்பதற்கு சோழர்களின் நீர்ப் பாசன உத்திகளே காரணங்கள் ஆகும்.

    முன்னுரை 

    “மேழிச் செல்வம் கோழைபடாது” என்பார்கள் பெரியோர். இம் மேழிச் செல்வத்தை மையமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த நாடு சோழ நாடு. இது வளமையும் செழுமையும் தன்னகத்தே கொண்டது. இது வற்றாத காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி. நைல் நதி   எவ்வாறு எகிப்து நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்ததோ அவ்வாறே காவிரி நதியும் சோழ நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்தது. இதனால் காவிரியைப் புகழப் போந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தன் பட்டினப்பாலையில் “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” என்று புகழ்கின்றார். பொங்கிப் பாய்ந்த இந்தக் காவிரியை ஆற்றுப்படுத்தி இதை நன்முறையில் விவசாயத்துக்குப் பயன்படுத்திய பெருமை சோழ மன்னர்களைச் சாரும். அவர்கள் பல்லாற்றானும் முயன்று இந்நீரைக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் பாய்ச்சி நன்முறையில் நீரைத் தேக்கி வேளாண் வளம் செழிக்கப் பாடுபட்டனர்.

    சோழ மன்னர்கள், சோழ நாடு மட்டுமன்றி பருவ மழையை மட்டுமே நம்பியிருந்த தொண்டை நாட்டிலும் விவசாயம் செழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு நீர் நிலைகளைக் காத்தனர். சோழ நாடு வளமுடன் திகழ்ந்ததற்குச் சோழ மன்னர்களின் சிறப்பான திட்டமிட்ட நீர்ப் பாசன உத்தியே காரணமாகும். நீரை நன்முறையில் தேக்குவதிலும் அதை முறையாகப் பயிர்களுக்குப் பயன்படுத்தச் செய்வதிலும் சோழ மன்னர்களுக்கு இணையாக இந்தியாவில்  வேறு  அரசர்களைக் காணவியலாது (சோழர்களின் சமகால ஆட்சியாளர்களான சாளுக்கியர்கள் போர்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினர். சேரநாடு, இயற்கையாகவே நீர் வளம் நிறைந்த பகுதியாகும். பாண்டிய நாடு, வானம் பார்த்த பூமி என்பதால் அவர்கள் வேளாண்மைக்கு அதிக அக்கறை  காட்டவில்லை. எனவே சோழரைப் போன்று பிற அரசர்கள் வேளாண்மைக்கு அதிகம் முக்கியத்துவம் நல்கினாரில்லை). சோழர்களின் சிறந்த நீர் மேலாண்மை முறையால் வேளாண்மை செழித்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது, மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனர்.

    நீர்ப்பாசன நிர்வாகம் 

    நீர்ப் பாசன மேலாண்மை என்பது நன்னீரை  ஒரு துளியேனும் வீணாக்காமல் நன்முறையில் வேளாண்மைக்குப் பயன்படுத்தி வேளாண் வளம் செழிக்கச் செய்தலாகும். நீர்ப் பாசன மேலாண்மையை நன்கறிந்த சோழர்கள், அதை நன்முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டனர். இயற்கையாய்க் கிடைக்கும் நீரை நன்கு பயன்படுத்தி வேளாண்மை வளம் பெறச் செய்வதில் சோழர்களுக்கு ஈடு இணை ஒருவரும் இலர். சோழர் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் தொண்டை நாடு இருந்தது. சோழ நாடு ஆற்று நீர்ப் பாசனத்தை மையமாகவும், தொண்டை நாடு கிணறு மற்றும் ஏரி நீர்ப் பாசனத்தையும் நம்பியிருந்தன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் யாவற்றிலும் பாரபட்சம் பாராமல் விவசாயத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தனர்.

    அக்காலத்தில் ஏரிகள், குளங்கள், கிணறுகள், கால்வாய்கள், ஆறுகள் யாவற்றையும் முறையே பராமரிப்பது இன்றியமையாததாயிற்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரி வாரியத்தவர், இப்பணியைச் கிராமங்களில் செய்து வந்தனர். பல பகுதிகளில் இந்நீர் பாசனத்தைக் கண்காணிப்பதற்காக பிரத்தியேக வரிகளும் விதிக்கப் பட்டன. இதற்காகப் பொது மக்களும் நன்கொடையைத் தாராளமாக வழங்கினர் (SII.Vol:6.No:294).  இது தவிர்த்து 1 மா நெல் விளைச்சலுக்கு, 2 மரக்கால் நெல்லும் இதற்கு பொதுமக்கள் ஏரி வாரியத்துக்கு வழங்கினர். இவ்வாறு வழங்கப்பட்ட வரிக்கு “ஏரி ஆயம்” என்று பெயர் (SII.Vol:7.No:805). குளங்களைப் பராமரித்தல், ஏரிகளின் கரைகளைக் கண்காணித்தல், கால்வாய்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை ஏரி வாரியத்தவர் முறையுடன் செய்து வந்தனர். இதனால் நீர் வீணாகாமல் முறையாக நிலங்களைச் சென்றடைந்தது. விவசாயத்துக்குத் தொண்டு செய்வதில் சோழ மன்னர்கள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டனர். மன்னர்கள் தவிர அரசு அலுவலர்களும் ஊர் பிரமுகர்களும் தன்னார்வலர்களும் நீர்ப் பாசன உத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.

    ஆற்றுநீர்ப் பாசனம் 

    தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்ட நீர்ப் பாசன முறை, ஆற்று நீர்ப் பாசன முறையாகும். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, சேயாறு, வேகவதி போன்ற ஆறுகள் பாய்ந்து நிலங்களை வளப்படுத்தின. அக்காலத்தில் காவிரி ஆற்றின் கரைகள் நன்கு பலப்படுத்தப்பட்டன காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. (ARE.No:11/1911). பல புதிய கிளை ஆறுகளும் இக்காலத்தில் வெட்டப்பட்டன. வீரசோழன் வடவாறு, மதுராந்தகன் வடவாறு, மண்ணியாறு போன்ற ஆறுகள் புதியதாக வெட்டப்பட்டன, தஞ்சாவூருக்கு வடக்கே ஓடும் வீரசோழன் வடவாறும், திருப்பனந்தாளுக்கு வடக்கே ஓடும் மதுராந்தகன் வடவாறும், முதலாம் பராந்தகனால் (கி.பி.907-53) வெட்டப்பட்டன.

    இது தவிர திருவைக்காவூர், திருப்புறம்பியம், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் வழியாகப் பாய்ந்தோடும் மண்ணியாறு, முதலாம் பராந்தகனால் திருத்தி அமைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மற்றும் கோனேரிராஜபுரம் வழியாக ஓடும் கீர்த்திமான் ஆறு, முதலாம் இராஜராஜனால் (கி.பி. 985-1014) வெட்டப்பட்டது. குடமுருட்டியில் பிரியும் முடிகொண்டான் ஆறு, முதலாம் இராஜேந்திர சோழனால் (கி.பி.1012-44) வெட்டப்பட்டது (ARE.No:75/1927-28). திருவாரூர் மாவட்டம் திருமணஞ்சேரிக்கு அருகிலுள்ள வீரசோழன் ஆறு, வீரராஜேந்திரனால் (கி.பி.1063-70) வெட்டப்பட்டது (SII.Vol:8.No:243). மேலும் குத்தாலத்துக்கு அருகிலுள்ள விக்கிரமனாறு, விக்கிரம சோழனால் (கி.பி.1118-36) வெட்டப்பட்டது. இவை தவிர தடுப்பணைகள் பல கட்டப்பட்பட்டு, நீர் தேக்கப்பட்டது. திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோவிலடியில் காவிரிக்கு குறுக்கே ஒரு பேரணை, வீர இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

    ஆற்றுக் கால்வாய்கள் 

    நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு, அவை மூலமாக ஆற்று நீர் ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. பொதுவாக வற்றாத ஜீவ நதியாகத் திகழ்ந்த காவிரி நதியிலிருந்து கால்வாய்கள் பல வெட்டப்பட்டு, நீர் கொண்டுவரப்பட்டன. இந்தக் கால்வாய்கள் ஆண்டு முழுவதும் ஏரி வாரியத்தால் முறையாகப் பராமரிக்கப்பட்டன. பல கால்வாய்கள் அவற்றை வெட்டிய சோழ மன்னர்கள் பெயரிலே அழைக்கப்பட்டன. இராஜராஜன் வாய்க்கால், திருச்சி மாவட்டம் திருமழபாடியில் வெட்டப்பட்டது (SII.Vol:15No:644).  அவரது மகனான இராஜந்திர சோழன் வாய்க்கால், இதே மாவட்டத்திலுள்ள கீழ்ப்பழுவூரில் வெட்டப்பட்டது. (SII.Vol:3.No:71).  மேலும் அன்பில் என்ற கிராமத்தில் இவனது பெயரிலே மற்றொரு வாய்க்காலும் வெட்டி, நீர் கொண்டு வரப்பட்டது (SII.Vol:8.No:192).  சோழன் மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-56) காலத்தில் திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் பிள்ளைக்கொல்லி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:76).  ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூரில் வேள்குல பீமன் வாய்க்கால் வெட்டப்பட்டது. (SIIVol:13.No:36).

    இவை தவிர  பல புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907), ஆதிச்ச வாய்க்காலை வெட்டி, நீர் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உத்தமசீலி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:133). முதலாம் இராஜராஜன் திருச்சியில், புகழ் மிக்க உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைத்தான். (ARE.No:24/1925). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் பராந்தக சோழன் பரமேஸ்வர வாய்க்காலை வெட்டி, பாலாற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்தான் (ARE.No:160/1940). இதே மாவட்டம் உக்கலில் இரண்டாம் இராஜேந்திர சோழன், பராக்கிரம சோழ வாய்க்காலை வெட்டினான் (ARE.No:160/1940). முதலாம் இராஜராஜன், வேலூர் மாவட்டம் திருமால்பூரில் விமலாதித்த வாய்க்காலை வெட்டினான் (SIIVol:13.No:30).  திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ள பெருவள வாய்க்கால் மற்றும் இதே ஊரில் பைங்கணி வாய்க்கால்களும் இவன்  காலத்தில்தான்  வெட்டப்பட்டன (SII.Vol:2.No:5).

    ஏரிப் பாசனம் 

    சோழர் காலத்தில் ஏரிப்பாசனம் சிறப்புற்றது. மற்ற பாசன முறைகளை விட ஏரிப்பாசன முறை சிறப்பானது, பாதுகாப்பானது, எளிதானது. எனவே சோழ மன்னர்கள் நாடு முழுவதுமுள்ள பல ஏரிகளைப்  புதுப்பித்தும் தேவைப்படும் இடங்களில் புதிய ஏரிகளை வெட்டுவித்தும் சிறப்பாகப் பணியாற்றினர். சோழ மன்னர்கள் பலர், தம் பெயரில் புதிய ஏரிகளை அமைத்தனர். விழுப்புரம் மாவட்டம் உலகபுரத்தில் கண்டராதித்த ஏரியைக் கண்டராதித்த சோழன் (கி.பி.950-57) வெட்டினான் (ARE.No:140/1919).   திருச்சி மாவட்டம் திருமழப்பாடியில் செம்பியன் மாதேவ ஏரியை செம்பியன் மாதேவி என்ற அரசி வெட்டினாள் (SII.Vol:5.No:644). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள ஏரியை மதுராந்தக சோழன் (கி.பி.970-85)  வெட்டினான். இதே மன்னன் பாண்டிச்சேரியிலுள்ள திருபுவணியிலும் தன் பெயரில் ஓர் ஏரியினை வெட்டுவித்தான் (ARE.No:192/1919). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் சுந்தரப் சோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி என்ற இரு ஏரிகளை குந்தவை என்ற சோழ இளவரசி வெட்டினாள் (SII.Vol:3.No:147).  முதலாம் இராஜேந்திர சோழன் தன் வட இந்திய வெற்றியை நினைவுகூருமுகமாய் பெரம்பலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ கங்கம் என்ற ஏரியை ஏற்படுத்தினான்.

    முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120) சித்தூருக்கு அருகிலுள்ள புங்கனூரில் இராஜேந்திர சோழப் பேரேரியை வெட்டினான். (SII.Vol:3.No:205).  இதே மன்னன் பாபநாசத்துக்கு அருகே முனியூரில் ஒரு ஏரியை வெட்டினான் (ARE.No:540/1906). சிதம்பரம் வட்டம் வீராணத்தில் தமிழகத்தின் மிகப்  பெரிய வீராணம் ஏரியை முதலாம் பராந்தகன் வெட்டினான். (ARE.No:615/1920). இவன் காலத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கபுரத்தில் சோழவாரிதி ஏரி வெட்டப்பட்டது (Epi.Gra.Ind.No:3.P:91). இதே மன்னன் விண்ணமங்கலம் ஏரியையும், (SIIVol:2.No:380). திருவண்ணாமலை மாவட்டம் சோதியம்பாக்கம் ஏரியையும் வெட்டினான் (SII.Vol:3.No:11).   இவன் காலத்தில் குளித்தலைக்கு அருகேயுள்ள நங்கவரம் ஏரியும் (SII.Vol:8.No:651), திருக்கோவிலூரில் புத்தேரியும் வெட்டப்பட்டன (SII.Vol:7.No:798). முதலாம் இராஜராஜன் புதுக்கோட்டை மாவட்டம் திருவேழ்ப்பூர் ஏரியை வெட்டினான், பாண்டிச்சேரியிலுள்ள பாகூர் ஏரியும் இக்காலத்தில்தான் வெட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கீழ்ப்பழுவூரில் உள்ள பன்மகேஸ்வரப் பேரேரி இக்காலத்தில் வெட்டப்பட்டது (SII.Vol:5.No:724). முதலாம் இராஜராஜன் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஏரியை வெட்டுவித்தான் (ARE.No:355/1917). புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாம் இராஜராஜன் காலத்தில் வெட்டப்பட்டது (ARE.No:191/1930). பிற்காலச் சோழர்கள் காலத்தில் சித்தூருக்கு அருகேயுள்ள மேகலாசப் பல்லி ஏரியும், யோகி மல்லாவரத்து நாராயண புத்தேரியும் வெட்டப்பட்டன.

    சோழர் காலத்தில் ஏற்கெனவே இருந்த பல ஏரியின் கரைகள் உயர்த்தப்பட்டன. முதலாம் இராஜராஜன் காலத்தில் பரமேஸ்வரப் பேரேரியின் கரையை அம்பலக்கூத்தன் என்பவன் உயர்த்தினான் (ARE.No:191/1977). மேலும் நரசிங்க மங்கலத்து ஏரியை அருணிதிக் கலியன் என்ற அரசு அதிகாரி புனரமைத்தான் (SII.Vol:3.No:106). புயலால் உடைந்த திருக்காஞ்சி ஏரிக்கரையை இவ்வூர்த் தலைவனே தன் சொந்தச் செலவில் புனரமைத்தான் (ARE.No:215/1919). ஏரிகள் மூலம் நல்ல பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காகப் பல ஏரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதற்காகும் செலவை அந்தந்த ஊர்க் கோயில்களே ஏற்றுக்கொண்டன. சான்றாக திருவள்ளூர் மாவட்டம் திருக்கச்சூரில் உள்ள ஏரியைப் புனரமைக்கும் பணியை அவ்வூர்க் கோயிலே ஏற்றுக்கொண்டது (ARE.No:295/1909).

    சில சமயங்களில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. இது நிலங்கள் அதிக பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சான்றாகத் திருவாய்ப்பாடி கிராமத்தில்  உள்ள ஏரியிலிருந்து புதிய வாய்க்கால் வெட்டப்பட்டது. அதற்காகும் செலவை ஈடுகட்ட, அவ்வூர் தரிசு நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதன் மூலம் புதிய நிலங்கள் பாசன வசதி பெற்றன (ARE.No:88/1931-32).  சோழர் காலத்தில் அரசும் அரசு அலுவலர்களும் தவிர, தனி மனிதர்களும் நீர்ப் பாசனத்திற்குத் தொண்டுகள் பல புரிந்துள்ளனர். சான்றாகப் பதக்கம் என்ற ஊரில் ஏரியின் குமிழியை அவ்வூர்ப் பிரமுகன் புஷ்ப மாணிக்க செட்டி    என்பவன் கட்டுவித்தான் (ARE.No:171/1942). விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் தூம்பைக் காக்கு நாயகன் என்பவன் கட்டுவித்தான். வேலூர் மாவட்டம் ஒழுகூர் ஏரியின் தூம்பை மாவலி வாணராயன் என்ற சிற்றரசன் கட்டுவித்தான். காவேரிப் பாக்கத்தில் உள்ள ஏரியின் தூம்பை வீர வினோதச் சம்புவராயன் கட்டுவித்தான் (ARE.No:390/1905).   ஏரிகளில் உள்ள தூம்புகள் கல்லிலே அமைக்கப்பட்டன. அவை நீர் வெளியேறுவதைத் தடுத்தன. மேலும் வெளியேறும் நீரின் அளவையும் கட்டுபடுத்தின. சோழர் காலத்தில் ஏரிப் பாசனம், உள்ளூர் ஏரி வாரியத்தின் மூலம் செம்மையான முறையில் நிர்வகிக்கப்பட்டது.

    குளத்து நீர்ப் பாசனம் 

    சோழர் காலத்தில் குளத்துப் பாசன முறை சிறப்புடன் காணப்பட்டது. பல ஊர்களில் ஆற்று நீர்க் கால்வாய்கள் மூலம் குளங்களை  அடைந்து அவை விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் பொதுமக்கள் நீர் அருந்தவும் பயன்பட்டன. குளங்களில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக “மாண்டுகள்” (தடுப்புகள்)  அமைக்கப்பட்டன. சோழர் காலத்தில் பல புதிய குளங்கள் வெட்டப்பட்டன. சான்றாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருவெறும்பூரில் முதலாம் பரந்தக சோழன் கவிர் குளம் என்ற குளத்தை வெட்டினான் (SII.Vol:17.No:336). பல குளங்களுக்கு மதகுகளும் மாண்டுகளும் அமைக்கப்பட்டன. ஏரிகளுக்குத் தூம்பு போல், குளங்களுக்கு மாண்டுகள் செயல்பட்டன. சான்றாக மூன்றாம் இராஜராஜன் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் துரிஞ்சம் பூண்டியிலும், சிறுவாங்கூரிலும் உள்ள குளங்களில் புதிய மாண்டுகள் அமைக்கப்பட்டன. அவை தடுப்புகள் போன்று செயல்பட்டன.

    குளங்களிலிருந்து நீரை வெளியேற்றும் கால்வாய்கள் கற்களால் கட்டப்பட்டன. இவை குழாய்கள் போன்று காணப்பட்டன. இந்த குளங்களை முறையாகப் பராமரிக்க, அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர் (SII.Vol:8.No:652). பொதுவாக ஏரி வாரியத்தவர்களே இக்குளங்களை நிர்வகித்தனர். குளங்களில் உள்ள வண்டல்களை அகற்ற, தனிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சான்றாக திருவண்ணாமலை மாவட்டம் காப்பளூரில் குளத்து வண்டல் எடுக்க. பராந்தக சோழன் காலத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் (ARE.No:284/1939).  இப்பணிக்காக அவர்களுக்குக்  கருவிகளும் ஓடங்களும் வழங்கப்பட்டன. கோடைக் காலங்களில் குளங்களில் நீர் வற்றிய பின் அவற்றின் அடியில் தேங்கும் வண்டல்கள் எடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன. இதற்குக் “குளவடை” என்று பெயர்.

    கிணற்றுப் பாசனம் 

    கிணற்றுப் பாசனம் தொண்டை மண்டலத்தில் அதிகம் காணப்பட்டது. பருவ மழையை மட்டும் நம்பிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் காணப்பட்டது. கிணற்று நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக ஏரிகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டது. சால்கள் மூலம் நீர் இறைக்கப்பட்டுப் பயிரிடப்பட்டன. ஏற்றம் இறைக்கும் வழக்கம்  நாடு முழுவதும்  பரவலாகக் காணப்பட்டது.

    முடிவுரை 

    சோழர் காலம், தமிழகத்தின் ஈடு இணையில்லாப் பொற்காலமாகும். பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை மக்களை அண்டாமல் சோழ மன்னர்கள் காத்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மையே அடிப்படை என்பதால் அதை வளர்ப்பதில் அதிக முனைப்பு காட்டினர். வேளாண்மைக்கு அடிப்படையான நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கக் கூடாது என்பதற்காக ஏரிகள், குளங்கள் வெட்டி, அவற்றைப் பாசனத்துக்கு நன்முறையில் பயன்படுத்தினர். சோழர்கள் நீர்ப் பாசன உத்தியைப் போன்று சிறப்பான முறையை வேறு எந்நாட்டிலும், எக்காலத்திலும் காணவியலாது. சோழர்கள் அரசு வேளாண் நலன் சார்ந்த அரசாகத் திகழ்ந்தது. சோழ மன்னர்கள் கால வெள்ளத்தில் மறைந்தாலும், அவர்கள் வெட்டிய ஏரிகளும் கால்வாய்களும், குளங்களும் இன்றும் நிலைத்து நின்று அவர்கள் புகழைப் பறைசாற்றி வருகின்றன. சோழர்களின் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு (Benevolent Government) என்பதற்கு அவர்களின் நீர் மேலாண்மை உத்தியே சாலச் சிறந்த சான்றாகும்.

    சுருக்கம் (Abbreviations)

    1.ARE-Annual Report on Indian Epigraphy

    2. SII-South Indian Inscriptions

    3. Epi.Gra.Ind-Epigraphica Indica

    பார்வை நூற்பட்டியல்

    1. Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, University of Madras, Chennai.

    2. Neelakanta Sastri.K.A,(1939), Studies in Cola History and Administration, University of Madras, Chennai.

    3. Appadorai. A. (1990).Economic Conditions in South India (1000-15000), University of Madras, Chennai.

    4.பிள்ளை.கே.கே. (1977) ,சென்னை,தமிழ் நாட்டு வரலாறு- மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    5.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை,( 2008), பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

    6.பிள்ளை.கே.கே. (1997) ,சென்னை, சோழர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    7.பாலசுப்பிரமணியம்.மா (1979), சென்னை, சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை முறைகள் குறித்த செய்திகளை ஆய்வாளர் சிறப்புற எடுத்துரைத்துள்ளார். மேலும் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஏரிகள், கால்வாய்கள் முதலியனவற்றையும் வரிசைப்படுத்தியுள்ளார். சோழர்கள் காலத்து நிர்வாகம், வாழ்வியல் முதலியனவற்றை ஆய்வு செய்வோருக்கும் இக்கட்டுரை துணைநிற்கும்.  


     

    Share
  • (Peer Reviewed) காப்பியமாந்தர் படைப்புகளும் கருத்துருவாக்கங்களும்

    (Peer Reviewed) காப்பியமாந்தர் படைப்புகளும் கருத்துருவாக்கங்களும்

    முனைவர் மு.சுதா
    உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி


    தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை தமிழ் இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்குரிய காப்பிய இலக்கியங்கள்.

    அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அற இலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்துக் கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப் பதிவாய் அமைந்ததும் தனிச் சிறப்பாகும். தாம் தோன்றிய சமூகக் கட்டமைப்புக்குக் உட்பட்டு அதே நேரத்தில் சமூக மேன்மைக்குக் காரணமான தங்களது உள்ளக்கிடக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் படைப்புகளின் வழி பதிவு செய்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காப்பியப் பெருமக்கள். இது இவர்களுடைய ஆளுமைத்திறனாகும். இவ்வாளுமைப்பண்பை உணர இவர்கள் தம் படைப்புகளை ஆழ்ந்து நோக்கவேண்டும்.

    படைப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே படைப்பின் நோக்கம் பற்றியும் அறிய இயலும். அவற்றின்வழி அப்படைப்பு தோன்றிய சமூகம் பற்றியும் உணரவியலும். சமுதாயத்திற்குத் தன் உருவாக்கத்தின் வழி ஏதோ ஒன்றைக் கூறவியலும் ஆசிரியனின் உள்ளக்கிடக்கையை உணர முடியும். அவ்வாறில்லாமல் ஓர்காப்பியத்தைச் சுவைக்காகப் பொழுதுபோக்கிற்காகப் புத்திலக்கியம் என்ற நிலையில் மட்டும் காண்பது சரியானதல்ல. காப்பிய ஆசிரியனின் ஒவ்வொரு படைப்பும் நல்லகருத்து உருவாக்கத்திற்கே. அந்த சமூகநோக்குச் சிந்தனையைக் கருத்தினைத் தான் உருவாக்கிய மாந்தர் படைப்புளின் வழி அவ்வாசிரியன் வெளிக்கொணருகின்றான்.

    மாந்தர்படைப்பு என்பது காப்பியத்தின் உயிர்நாடியைப்போன்றது என்பர். இத்தகைய மாந்தர்களை எடுத்தாளும் காப்பியன் தான் ஒரு நோக்கத்தில் அம்மாந்தர் படைப்புகளுக்கு உயிர் கொடுக்க அதனைத் தவறாக உணர்வதுடன் காலப்போக்கில் அப்படைப்பு பற்றிய தவறான கருத்துருவாக்கங்களையும் பதியவைத்துப் படைப்பாசிரியரின் நோக்கத்தையே சிதைத்து விடுகின்றனர். இத்தகைய போக்கு மாறவேண்டும் என்ற அடிப்படையிலேயே காப்பியமாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும் என்ற தலைப்பில் இவ்வாய்வுக்கட்டுரை அமைகின்றது.

    கோவலன் மாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும்

    சிலம்பின் முதன்மை மாந்தர் கோவலன். கற்பில் சிறந்தவளாம் பொற்புடைத் தெய்வமாம் புகழப்படும் கண்ணகியையும், கணிகையர் குலத்துப்பிறந்த கற்பில் சிறந்தவளாகிய மாதவியையும் தன் உறவாக்கிக் கொண்டவன். சூழலால் செல்வம் இழந்து, பிறந்தகத்தைத் தொலைத்து, அன்புக்குரியோளைப் பிரிந்து அகம்காத்தோளை அழைத்துக்கொண்டு தொலைத்த செல்வத்தை மீட்டுப் பெறச் சென்றவன் பிறந்த மண்தொடாதே மரணத்தைத் தொடுகின்றான். அய்யோ பாவம்! என அவலமடையச்செய்யும் மாந்தர்படைப்பாகக் கோவலன் அனைவரின் மனத்திலும் பதிகின்றான். கணவனுக்காக நீதிகேட்கும் கண்ணகியின் போர்ச்செயலில் கோவலன் உயர்வடைகின்றான். ஆனால் கோவலனின் மாந்தர் படைப்பை உற்று நோக்குகையில் இளங்கோவடிகள் ஏதோ ஒன்றை உணர்த்த விரும்புவதை உணரவேண்டும். செல்வத்தில் பிறந்து வாழ்க்கையை வாழத்தெரியாத ஒருவன் தான் அழிந்து போவது மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்தோரையும் அழித்துவிடுவான் என்ற சமூகநோக்குச் சிந்தனை விதைக்கு உதாரணமாக கோவலன் விளங்குவதை தனது காப்பியஅடிகளில் இளங்கோவடிகள் சுட்டிச் செல்வதை நோக்கவேண்டும்.

    சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன் கோவலன் கண்ணகியை மணம் புரிந்து வாழ்வினைத் துவங்குவது முதல் மாதவியுடன் வாழ்வு, மீண்டும் கண்ணகியை வந்தடைந்து மதுரைக்குச் செல்லுதல், ஊழ்வினை காரணமாகக் கொலைப்படுதல் என்று இம்மாந்தர் படைப்பு அமைகின்றது.

    இம்மாந்தர்படைப்பினைக் காப்பியக் கதைப்போக்கில் காணுவது ஒருநிலை என்றால் அம்மாந்தரின் வழிச் சமூகத்திற்குப் படைப்பாளன் கூறவிழைவதென்ன? என்பதனை ஆய்வின் வழி எடுத்துரைப்பதும் கடமையாகும். ஏனென்றால் ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவனது படைப்பிற்கும் எனக் கொள்கைகள் உண்டு. சமூகத்திற்கு அவன் கூற விழையும் கருத்துண்டு. அவற்றை ஆய்வின் வழி கூறல் என்பது இன்றியமையாதது.

    கோவலன் என்ற படைப்பின் வழி இளங்கோவடிகள் பல கருத்துகளை உலகிற்குச் சுட்டிச்செல்கிறார். அவற்றில் ஒன்று எல்லா காலத்திற்கும் உரியவாகும் ‘நிதிமேலாண்மை’ எனும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய இன்றியமையா சிந்தனையாகும்.

    ‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ (குறள்: 247)

    பொருளின் முக்கியத்துவம் இங்கு உணர்தத்ப்படுகின்றது. வாழ்க்கைக்குரிய ஆதாரமான இப்பொருளாதாரம் அன்று மட்டுமல்ல இன்றும் மிகத்தேவையான ஒன்றாகும். இத்தகையப் பொருளைப் போற்றிக்காவாதுவிட்டால் அது பொருளுக்குரியவரை மட்டுமல்லாது அவரைச் சார்ந்து வாழும் அனைவரையும் அல்லல்படுத்தும். தனிமனிதன் மட்டுமல்லாது அவனால் உருவாகும் இச்சமுதாயம் மேம்பட ஒவ்வொருவருக்கும் பொருளாதாரம் பற்றிய சிந்தனை இருக்கவேண்டும்.

    இக்கருத்தை காலம்தோறும் இலக்கியங்கள் பதிவுசெய்துகொண்டு வருகின்றன. பொருளின் தேவையை மட்டும் பதிவுசெய்யாது அப்பொருளை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதனையும் வலியுறுத்துவது இவ்விலக்கியங்களின் குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும்.

    ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு’ (குறள்: 385)

    என்பது வள்ளுவரின் வாக்கு. எத்தகையோன் அரசன்? எது சிறந்த ஆட்சி? என்று எடுத்துரைக்கையில் பொருளைச்சேர்தலும் அப்பொருள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும் அங்ஙனம் வந்தவற்றை  ஒருவழித் தொகுத்தலும் தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும் காத்தவற்றை அறம் பொருள் இன்பங்களின் பொருட்டு விடுத்தலும் செய்தல்வேண்டும். தேடும் பொருளை இவ்வாறு பாதுகாப்பதே நல்ல அரசு என்று வள்ளுவர் கூறும் கருத்து ஓர் அரசனுக்கு மட்டும் உரிய மேலாண்மைப்பண்பு மட்டுமல்ல. பொறுப்புடைய ஒவ்வொருவருக்கும் வேண்டிய பண்பாகும்.

    நிதிமேலாண்மை இல்லாத ஒருவனிடத்து அப்பொருள் தங்குவதில்லை. அவ்வாறு தங்காதப்பொருளினால் அப்பொருளுக்குரியவன் மட்டுமல்லாது அவனைச் சார்ந்தோரும் துன்புறுவர் என்பதையே நம் இலக்கியங்கள் காலந்தோறும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. நாட்டிற்குத் தலைவனானாலும் வீட்டிற்குத் தலைவனானாலும் அங்கு அவனுக்கு பொருளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. பொருளைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனைப் பாதுகாத்துச் சுற்றம் காப்பவனே சிறந்த மேலாண்மைப்பண்புடையவன் என்று இலக்கியங்கள் அறிவுறுத்தத் தவறவில்லை.

    குறிப்பாக நிதிமேலாண்மை  பற்றிக்குறிப்பிடுகையில்

    ‘ஒரு நிறுவனம் வரவும் வரவிற்குள் செலவும் செய்யத் திட்டமிடல் வேண்டும். வருங்காலத்தில் எதிர்பாராத் தேவைகள் ஏற்படக் கூடுமாதலால் தனியே ஒரு ஒதுக்கீட்டு நிதி ஏற்படுத்தவேண்டும் என்கிறது. மேலும் இவ்வாறு திட்டமிடாத நிறுவனம் அழிந்து விடுவதுடன் நிதி ஆதாரமின்றி செலவழிக்கும் அந்நிறுவனத்தார் நிதிமேலாண்மைப் பண்பற்றவர்கள்’ (பேரா.சி.நாகராசன், பேரா.சா.நடராசன், பேரா.சி.ரா.மணிவாசகம், மேலாண்மை பொருளும் கோட்பாடுகளும், ப: 245) என்றும் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    சிலப்பதிகாரம் இந்நிதிமேலாண்மைச் சிந்தனையை அழகாகப் பதிவு செய்துள்ளது. இளங்கோவடிகள்  மேலாண்மைப்பண்பு குறித்தத் தன் கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க கோவலன் மாந்தர்படைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். காப்பியத் தலைவனாகக் கோவலன் சுட்டப்பட்டாலும் அவன் போற்றுதலுக்கு உரியன் அல்லன் என்பதற்கான ஒருகாரணம் அவனிடத்து நிதிமேலாண்மைப்பண்பு இல்லாததேயாகும்.

    இப்பண்பில்லாத கோவலன் மட்டுமன்றி அவனைச் சார்ந்த மனைவியர், குடும்பம், சுற்றம், நட்பு ஆகியோரும் எவ்வித தொடர்பில்லாத மதுரையைச் சார்ந்த மன்னவன் மக்கள் வரை அனைவரும் அல்லலுறுகின்றனர். வள்ளுவர் அரசுக்குக் கூறிய நிதிமேலாண்மைப்பண்பு அரசனுக்கு நிகராகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த உயர் குடியினராகப் போற்றப்பட்ட வணிகக்குடியில் வந்த கோவலனுக்கு இல்லாது போனதால் ஏற்பட்ட இழிநிலையாகும். செல்வச் செழிப்பானக் கோமானாய்ப் பிறந்தவன். அச்செல்வத்தைப் பேணிப் பாதுகாக்காததால் அடையும் நிலையினை, நிதிமேலாண்மைப் பண்பு என்றால் என்ன என்பதனை, அத்திறன் இல்லாதவர் எந்நிலை அடைவர் என்பதனைக் கோவலன் எனும் மாந்தர் படைப்பின் வழி மக்களுக்கு உணர்த்திச் செல்கிறார்.

    ‘பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
    ஒரு தனிக் குடிகளோடு  உயர்ந்தோங்கு செல்வத்தான்
    வருநிதிபிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான்’  ( சிலம்பு: மங்கலவாழ்த்துக்காதை: 30-33)

    என்று கோவலனின் தந்தை மாசாத்துவானை அறிமுகப்படுத்துகிறார். இங்கு கோவலனின் செல்வவளம் சுட்டப்படுகிறது. இவன் திருமணம் செய்ததும் ‘வான்மழை போன்ற கொடைத்தன்மை’ பொருந்திய கையை உடைய செல்வச் செழிப்பைக் கொண்ட மாநாய்கனின் மகளான கண்ணகியையாம். இவர்கள் பிறந்த புகாரும் வந்தாரை வாழவைக்கும் செழிப்புடையது.

    ‘உரைசால் சிறப்பின் அரை கவிழை திருவின்
    பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
    முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
    வழங்கத் தவாஅ வளர்த தாகி
    அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
    ஒருங்கு தொக்கு அன்ன உடைப்பெரும பண்டம்
    கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
    குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்’ (சிலம்பு: மனையறம்படுத்தக்காதை: 1-8)

    என்று புகழ்கின்றார். கோவலனையும் கண்ணகியையும் அவர்களுடன் பணிபுரியத்தக்க ஏவலாளிகளுடன் தனிக்குடித்தனம் வைத்து மகிழ்ந்ததை ‘உரிமைச்சுற்றமொடு ஒருதனிப் புணர்க்க’ என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் கோவலனின் பொருள்சிறப்பை இவ்வாறு விளக்கியுரைக்கக் காரணம் இப்பொருளைப் பாதுகாக்கும் தன்மையில்லாததைச் சுட்டவே எனக்கொள்ளலாம்.

    மாதவியைக் கண்டு மயங்கி உள்ளத்தைப் பறி கொடுத்த கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சுபொன்கொடுத்து மாதவியை விலைக்கு வாங்கும் அளவிற்கு சிறந்த செல்வந்தன். செல்வச்செழிப்பில் தன் மனதிற்கினிய வாழ்க்கையைப் பெற்ற கோவலன் அச்செல்வம் முழுவதையும் அவளுக்கு அர்ப்பணிக்கின்றான். வீடுமறந்து செய்தொழில் மறந்து சுற்றம் மறந்து காதலும் காமமும் நிறைய மகிழ்வான வாழ்வை மேற்கொள்ளுகின்றான்.

    ‘ஆகாறு அளவிட்டதாயினும் கேடு இல்லை
    போகாது அகலாக் கடை’ (குறள்: 478)

    என்று வள்ளுவர் வரவும் செலவும் குறித்து உரைப்பது ஈண்டு குறிக்கத்தக்கது. இங்கு வரவின்றிச் செலவு மட்டும் செய்து தன்நிலை தாழ்ந்து செல்கின்றான் கோவலன். ஒரு நிலையில் தான் காதல் கொண்ட அத்தூயவளின் உள்ளமும் அறியாமல் உலவுற்றத் திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்கின்றான். நல்ல செயலையும் மேற்கொள்ளாமல் செய்த செயலிலும் தடுமாறாமல் வாழுவதை அறியாத கோவலன் கண்ணகி, மாதவி என்ற இருநற் துணையின் உள்ளமறிந்து கொள்ளாத தலைமைக்குரிய பண்பில்லாதவனாகவே காணமுடிகின்றது.

    செல்வம் அனைத்தையும் உயர் குடிப்; பிறப்பிற்கு இழிவு நேரும் வகையில் இழந்து மீண்டு வந்த கோவலன் கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டு வருத்தம் கொண்டு

    ‘சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
    குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
    இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன’ (சிலம்பு: கனாத்திறம் உரைத்தக் காதை: 69-71)

    என்பதாக இளங்கோவடிகள் சுட்டுகிறார். செல்வச் செழிப்புள்ள குடியில் பிறந்து மன்னனுக்கு நிகராக வாழ்ந்தவன் அச்செல்வத்தைப் பாதுகாக்காத மேலாண்மைத் திறனில்லாதவனாக இருந்தால் இறுதியில் நாணுற்றுத் தலைகுனியத்தான் வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சான்று பகரும். இதுபோன்று கோவலன் நிதிமேலாண்மைத் திறனில்லாதவன் என்பதற்கு இக்காப்பியம் முழுவதும் சான்று காட்டிச்செல்லலாம்.

    தன்னிடத்து வெட்கி நிற்கும் தன் தலைவனிடம் ‘சிலம்புள கொண்மென’ உரைக்கின்றாள் கண்ணகி. செல்வம் அனைத்தையும் இழந்தாலும் அவன் குடிக்கேயுரிய பண்பு அவனை மீண்டும் விடியலைத் தேட ஆயத்தப்படுத்துகிறது. ஆனாலும் அப்பொழுதும் தவறான முடிவால், எண்ணித் துணியாத கருமத்தினால்  அவன் அழிவை நோக்கியே செல்வதைக் காணமுடிகிறது. சிலம்பினைக் கொண்டு ‘சென்ற கலனோடு உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன்’ என்று மதுரைக்குப் புறப்படுகிறான்.

    இங்குதான் இளங்கோவடிகள் சுட்டிய புகார் நகரப் பெருமையை நோக்க வேண்டும் வந்தாரை வாழ வைக்கும் செல்வச்செழிப்புடைய ஊர் கோவலனது குடிப்பிறப்பு அறிந்த ஊர் அவன் வாணிகம் செய்த ஊர்  இங்கு அவன் குடி வணிக நேர்த்திக்கு அறிமுகமே தேவையில்லை. இத்தகைய நகரைவிட்டு முன்பின் அறியா மக்களை நம்பி மதுரை மாநகருக்கு பயணிக்கிறான். ஒரு நல்ல வணிகன் செய்யும் செயலல்ல இது. நாணத்தின் காரணமாக ஊரைவிட்டுச் செல்கின்றான் என்றாலும் விடியலைத்தேடுபவன் முன்பின் அறியா இடத்திற்கு இரவில் புறப்படுகின்றான். அதுவும் வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலாதவளிடத்துப் பொருள் சேர்த்து வருகிறேன் என்று வீறுகொண்டு கூறிச்செல்லாமல் பழகியறியாத பகுதிக்கு ‘ஏடு அலர் கோதாய் எழுக’ என்று கூறி அழைத்துச்செல்கின்றான். ‘இவளை உடன்கொண்டு போதல் ஏற்புடைய செயல்; அன்று என்று எவ்வளவு கூறினும் செல்லாது இருக்க மாட்டீர் போலும்’ என்று கவுந்தியடிகள் கோவலனின் செயலைத் தவறென்று உரைப்பது குறிக்கத்தக்கது.

    கோவலன் திட்டமிட்டு வணிகம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு இன்னும் வலுவான சான்றுகளைக் காட்டிச் செல்லலாம். காடுகாண்காதையில் மாங்காட்டு மறையோனிடம் ‘மாமறை  முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயென’ என்று வேண்டுகிறான். முன்பின் அறியா மதுரை மாநகருக்கு வணிகம் செய்யச் செல்லுதல் அவனுடைய தவறென்றால் மறையோன் குறிப்பிடும் மற்றொரு செய்தி கோவலனின் தவறானத் திட்டமிடாத செயல்படுத்துதலை உணர்த்தும். ‘முல்லையும்  குறிஞ்சியும் நல்லியல்பு கெட்டுத் தன்னைச் சார்ந்தாரை நடுங்கச்செய்யும் பாலை எனப்படும் வேனிற்காலத்தே காரிகையுடன் பயணம் மேற்கொண்டீரே’ என்று வருந்தியுரைக்கிறார் மாங்காட்டு மறையோன். இதனைப் பின்னர் கோவலன்

    ‘நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
    நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
    அறியாத தேயத்து ஆரிடை உழந்து
    சிறுமை உற்றேன் செய்தவத் தீர்யார்’ (சிலம்பு:ஊர்காண்காதை: 17-20)

    தானே செய்தவறுக்கான ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றான். ஆராயாமல் முடிவெடுத்து பின் துன்புறும் இவனது பண்பு இங்கு வெளிப்படுகிறது.

    ஒப்பற்றச் செல்வத்தைப் பெற்றவன் அதனைப் பேணாது விட்டுவிட்டாலும் மீண்டும் அதைப்பெற முயலவேண்டும். அதுவும் வணிகமே தொழிலாகக் கொண்டவன் மீண்டும் முயலும் போது முன்பைவிட நுட்பமாக ஆய்ந்து வணிகம் செய்தால் மட்டுமே அச்செல்வத்தைப் பெறமுடியும். ஆனால் திட்டமிடுதல் செயல்படுத்துதல் வெற்றியடைதல் என்ற வணிக மேலாண்மையே அறியாதவனாக அவனது அடுத்தடுத்தச்; செயல்கள் அமைகிறது.

    வணிகநோக்கில் செல்லும் கோவலன் மதுரையின் அரசரும் விரும்பும் அங்காடிவீதி, நவரத்தினக்கடைவீதி, பொன்மிகுகடைவீதி, கூலம் குவித்த கூலவீதி என அனைத்தையும் கண்டு தெளிந்து மீண்டும் கவுந்தியடிகளும் அடைக்கலமிருந்த கண்ணகியிருக்குமிடம் வருகின்றான்.

    மீண்டும் மாதரி ஐயையுடன் கண்ணகியை விட்டுச்செல்லும்போது ‘சிலம்புள கொண்மின்’  என்ற கண்ணகியின் முன் கூற்றின்படி இரண்டு சிலம்புகளைப் பெறாமல் ‘சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறிவருவன்’ என்கிறான். சிலம்பு ஒன்றைத் தா விற்றுவருகிறேன் என்பது நல்ல வணிக மகன் செய்யும் செயலல்லவே. இரு பொருளாகப் பயன்படும் ஓர் அணிகலனை ஒற்றையாய் விற்பது சரியோ! அதனை வாங்குவோர் தான் உண்டோ! இதைக் கோவலன் உணராது செய்கின்றான். இங்கும் இவனது வணிகத்திற்கு ஒவ்வாத செயல்தான் வெளிப்படுகிறது.

    அது மட்டுமன்றி அச்சிலம்பைக் கடைத்தெருவின் விற்கச் சென்றவன்

    ‘சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்
    சாம்ப10 நதம்என ஓங்கிய கொள்கையில்
    பொலம்தெரி மாக்கள் கலங்கஓர் ஒழித்தாங்கு
    இலங்குகொடி யெடுக்கும் நலம்கிளிர் வீதியாகிய’ (சிலம்பு:ஊர்காண்காதை: 201-204)

    பொன்னின் வேற்றுமையைப் பகுத்தறியும் பொன்வாணிகர் காணப்படும் பொன்மிகு கடைவீதியை முன்னரே கண்டவனன்றோ! அங்கல்லவா செல்லவேண்டும். ஆனால் கடைத்தெருவில்  செல்லும் வழியில் தான்கண்ட பொற்கொல்லனை அணுகி சிலம்பினை மதிப்பிடச் செய்கின்றான்.

    ‘காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கணி
    நீவிலை யிடுதற்காதி யோவென’ கோவலன் கேட்க, அதற்கு அவன்

    ‘அடியேன் அறியே னாயினும் வேந்தர்
    முடிமுதல் கலன்கள் சமைப்பேன் யான்’ (சிலம்பு:கொலைக்களக்காதை: 111-114)

    எனப் பதிலுரைக்கின்றான். பெண்களின் காற்சிலம்பினை மதிப்பிட அறியாதவன் ஆயினும் மன்னர்க்கு முடிமுதலிய அணிகளைச் செய்வதில் வல்லவன் நான் என்கிறான். கேட்கும் கேள்விக்கு தான் அறிந்தது என்ன என்று தெளிவாகப் பதிலிறுக்கிறான். ஒரு பொருளின் மதிப்பறியா ஒருவனிடத்து அப்பொருளைக் கொடுப்பது சரியானதோ! தன்தொழில் திறனைத் தானே அறிவிக்கும் அப்பொற்கொல்லனிடத்து ஒரு நல்ல வணிகநேர்த்தியறிந்தவன் பொருளைக் கொடுப்பனோ! ஆனால் கோவலன் போற்றருஞ் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்து அளிக்கின்றான். இதைவிட கோவலனின் மேலாண்மைக்குத் திறனுக்குச் சான்று காட்டத்தேவையில்லை.

    முறையற்ற இச்செயலால் கொலைக்களப்படுகின்றான் கோவலன். பிறந்தது முதல் பெற்ற செல்வத்தைப் போற்றிப் பாதுகாவாது கண்ணகி கூறியது போல் ‘போற்றா ஓழுக்கம்’ புரிந்தகோவலன் தான் பெற்றப் பொருளை போற்றாது, காவாது, வரவிற்கான முயற்சி செய்யாது அச்செல்வத்தை அழித்தலை மட்டும் செய்து அடுத்தடுத்து பொருளாதார மேன்மையடைதல் என்ற மேலாண்மைப் பண்பேயற்று உயர்வணிகக்குடியில் பிறந்தும் அக்குலத்திற்கேயுரிய வணிகத்திறமையும் இன்றி தவறுகள் இழைக்கின்றான். தானும் முயற்சிக்காது தன்முன்னோர்கள் ஈட்டிய பொருளையும் பாதுகாக்காது நல்ல தலைமைக்குரிய செயல்பாடுகள் இல்லாது அடுத்தடுத்தத் தவறான முடிவுகளால் உயிரையே இழக்கின்றான்.

    இளங்கோவடிகள் கோவலனின் முன்ஊழ் அவன் இறப்பிற்குக் காரணம் என்று வெளிப்படையாகச் சுட்டியிருந்தாலும் இம்மாந்தர்படைப்பின் வழியாக நிதிமேலாண்மைச் சிந்தனையையே முன்வைப்பதை உணரவேண்டும். தான் படைத்தக் காப்பியத்தில் உலாவரும் மாந்தர்களின் வழி நற்கருத்துகளைப் பதிவு செய்யும் அடிகள்  நிதிமேலாண்மைச் சிந்தனையை கோவலன் வழி எடுத்துரைக்கின்றார்.

    காப்பியங்கள் என்பது வெறும் கதையல்ல. நல்ல கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இணைப்புப்பாலம். உண்மையோ கற்பனையோ இக்காப்பியங்களின் தனிச்சிறப்பே தான்தோன்றியகாலத்து வாழ்ந்த மக்களுக்கு அவர்களால் ஏற்கப்பெறும் கதைப்போக்கில் அம்மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்ல அறிவுறுத்தல்களை கதைப்போக்கில் மாந்தர் படைப்புகளின் வழி எடுத்துரைப்பது ஆகும். இங்கு சமூகமேம்பாட்டை நோக்கிய படைப்பாளனின் கருத்து பதிவு செய்யப்படுவதோடு அப்படைப்பும் வெற்றிபெறுகிறது. காப்பியங்களைப் பொறுத்தவரையில் படைப்பாளனையும் படைப்பினையும் நோக்குதல் அவசியமானது. காப்பியத்தின் வழி எத்துணையோ நற்சிந்தனைகளை பதிவு செய்ய விழையும் இளங்கோவடிகள் கோவலன் எனும் மாந்தர் படைப்பின் வழி நிதிமேலாண்மை எனும் பொருளாதாரத்தத்துவத்தை கருத்துருவாக்கம் செய்கின்றார். இதுபோன்ற உண்மைகளை வெளிக்கொணராது ஏதேனும் ஓர் நோக்கிலேயே காணும் பார்வை மாறவேண்டும்.

    துணை நின்றன


    1. அழகு கிருஷ்ணன். பொ (1988) ,சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும், சமுதாய வரலாறும், ஐந்திணைப்பதிப்பகம்.

    2. துரைசாமிப்பிள்ளை. சு. ஔவை (1957) சிலப்பதிகார ஆராய்ச்சி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.

    3. பஞ்சாங்கம்.க, (2002), சிலப்பதிகாரத்திறனாய்வுகள், மெய்யப்பன் தமிழாய்வகம்.

    4. பரிமேலழகர் (உ.ஆ), (1991) திருக்குறள், கங்கை புத்தக நிலையம்.

    5. பெருமாள்சாமி.வெ, சிலப்பதிகாரம் (மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும்), பாரதி புத்தகாலயம்.

    6. பேரா.சி.நாகராசன், பேரா.சா.நடராசன், பேரா.சி.ரா.மணிவாசகம், மேலாண்மை பொருளும் கோட்பாடுகளும், ஆசிரியப்பயி்ற்சி பாடநூல்.

    7. வேங்கடசாமி நாட்டார்.ந.மு, (2014) சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), ராமையா பதிப்பகம்


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    செவ்விலக்கியப் படைப்புகளுக்கு அடுத்த நிலையில் சிறப்பினைப் பெற்று விளங்குவன காப்பியங்கள். இக்காப்பியங்களில் இடம்பெறும் மாந்தர்களின் படைப்பு என்பது காப்பியத்திற்கு உயிர்நாடியாக அமைகின்றது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் இளங்கோவடிகளால் படைக்கப்பட்ட தலைமாந்தர் கோவலன். இம்மாந்தர் படைப்பு, சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு எத்தகைய சிறப்புநிலை நோக்கிப் படைக்கப்பட்டது என்பதைக் கட்டுரையாளர் திறம்பட விளக்கியிருக்கின்றார்.


    Share
  • (Peer Reviewed) ஆன்ம விசார, உணர்வியல் நெருக்கமும்  மௌன மொழியும்

    (Peer Reviewed) ஆன்ம விசார, உணர்வியல் நெருக்கமும் மௌன மொழியும்

    செ. ர. கார்த்திக் குமரன்
    உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி
    மதுரை – 625 009.
    மின்னஞ்சல்:srkarthick21@gmail.com


    தொடக்கமாக

    நவீன தமிழிலக்கிய புனைகதைப் படைப்பிலக்கிய வெளியில், பல காத்திரமான படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன. இப்படைப்பாளர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக்கொடுத்த வகையில், மணிக்கொடி இதழின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி தொடங்கி பல முக்கிய எழுத்தாளர்களின் மனவெளியை, சமூகச் சிந்தனைச் சார்ந்த கருத்தியல்களை (உருவாக்கக் காரணியாக) பதிவு செய்யும் காரணியாக இவ்விதழ் விளங்கியது. நவீன சிந்தனையுடன் (மாற்றுச் சிந்தனையுடன்) கூடிய படைப்புகள் இவர்களால் சாத்தியமாக்கப்பட்டுள்ளன. மரபார்ந்த இலக்கியத் தளத்திலிருந்து இது பல்வேறு நிலைகளில்/வடிவங்களில் வேறுபட்டதினால் இதனை அன்றைய காலகட்டத்தில் குறைசொல்லியும் சமூகத்தில் கேடு விளைவிக்கக் கூடியது என்றும் மரபார்ந்த இலக்கியவாதிகளிடையே ஒரு கருத்து நிலவியது. இருப்பினும் அவற்றையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாது இப்புத்திலக்கியத்தை வரவேற்று, புதிய பொருண்மையில் வளரச்செய்தனர் இவ்விதழாசிரியர்கள். இதன் காரணமாகவே பலதரப்பட்ட படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இத்துடன், ஒவ்வொரு படைப்பாளரும் அவர்அவர்க்கென்று தனித்த மொழிநடையுடன் கூடிய உருவ, உள்ளடக்கத்துடன் படைப்புகளைப் படைத்தனர். இவர்களில் சிலரின் எழுத்துக்கள் குறித்து, தற்காலத்தில் அதிகம் பேசப்படாதபோதிலும் படைப்புகளில் தனக்கென தனித்த இடத்தை வகித்துள்ளனர். மேலும், ஆன்மவிசாரத்தைத் தொடும் கருத்தாக்கங்களை வெளிக்கொணர்ந்து, தத்துவார்த்தச் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையில், மௌனமான எழுத்துக்களின் வழி  மொழியைப் பிரயோகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் என்ற நவீன படைப்பாளியின் மௌடீக மற்றும் புதிருடன் கூடிய எழுத்துருவாக்கப் படைப்புகளைக் காணுவதாகவே இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

    லா.ச.ரா.

    லா.ச. ராமாமிருதம் 1916, அக்டோபர் 30, பெங்களூரில் பிறந்தார். ஆங்கிலத்தில் இவருடைய கதை 18வது வயதில் வெளியானது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதி வந்த இவரைத் தன் 50வது வயதில் சென்னை வாசகர் வட்டம் ‘புத்ர’ நாவலை எழுத வைத்தது. 1989இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்த ‘சிந்தா நதி’ என்னும் சுயசரிதை நூல் ‘சாகித்ய அகாதெமி’ விருது வென்றது. சிறுகதை, நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார். அக்டோபர் 30, 2007இல் தமது 92வது பிறந்த தினத்தில் சென்னையில் காலமானார்.

    “நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்” என்று எழுதினார் லா.ச.ரா. அந்த அளவிற்கு தன் எழுத்துக்களின் வழி மொழிக்கு மிக நெருங்கிச் சென்றவர். எழுத்தையே தன் உணர்வாகவும் உயிராகவும் கொண்டவர். மனித மனங்களின் உணர்வுகளின் ஊடாக ஆன்மாவைத் தொடும் நேர்த்தியை மொழியினூடாகக் கையாண்டவர். லா.ச.ரா.வை வாசிக்கும் வாசகனுக்குப் புதிர் விளையாட்டுடன் கூடிய சூழ்ச்சியைப் பெறவைத்து, திடுக்கிடச் செய்பவர். ஆழ்ந்த தரிசனங்களையும் அனுபவங்களையும் ஏற்படுத்தும் வகையில் இவருடைய எழுத்துக்கள் அமைந்திருப்பதோடு, பெண்ணின் மனநெகிழ்வுகளை, மனவெளிகளை உள்ளும் புறமும் அசாத்தியமான சொற்களோடு வெளிப்படுத்தி, வாசகனைக் கட்டிப்போட்டு, உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்பவர். சுயநிரூபணங்களையும் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களையும் தன் படைப்பினூடாக வெளிப்படுத்தியுள்ளார். நவீன  தமிழுலகில் இவரின் எழுத்துக்கள் தவிர்க்கவியலாத என்றென்றும் வாசிக்கப்பட வேண்டியவையாகவே உள்ளன.

    புத்ர

    தன் முன்னோர்களின் (ஐந்து தலைமுறை) வாழ்வியலை, அவர்களின் உணர்வுநிலைகளை, அன்பார்ந்த குணாதிசயங்களை, உறவு நிலைகளை, தான் கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தத்ரூபமாகப் புலப்படுத்தியுள்ளார். ஜகதா என்ற கதாபாத்திரத்தின் வழி தாய்மையின் (மாமியாரின்) இடையறாச் செயல்களை/எண்ணங்களைச் சொல்வதோடு, காலத்தினால்  ஏற்பட்ட வடுக்களையும் இரணங்களையும் இன்பதுன்பங்களையும் ஒரு சரடாகக்கொண்டு, அதனை எழுத்துருவாக்கியுள்ளார். பிராமணச் சமூகத்தில் பல மரபுகள்(Heritage) வழிவழியாகப் பின்பற்றி வந்தாலும் சில கணங்களில் பிற மனித உயிர்படும் வேதனைகளை, இன்னல்களைத் தாங்காது, சம்பிரதாயங்களை மீறி மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் நிலையை, தனக்கே உரிய மொழிநடையில் மொழிந்துள்ளார். தாய் – மகள் – மாமியார் ஆகிய மூன்று பெண்களின் தனித்துவங்களை, தங்களுக்குள் ஏற்படும் உணர்வுநிலைகளை, உடல்மொழியினைத் திறம்பட எடுத்துரைத்துள்ளார். உறவுகளினால் (ஜகதா(மருமகள்) – மாமியார்) இரண்டறக் கலந்திருக்கும்போது, மரணத்தால் (மாமியார்) மனித மனங்களுக்குள் நிகழும் நெருக்கடிகளை, வாழ்க்கையின் அபத்தத்தை/அர்த்தத்தை, தன் மௌன மொழியின் வாயிலாக வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மை ததும்பவைத்து, வாசிப்பை நிறுத்திடச் செய்கிறார். நிலையிலா வாழ்வியல் பயணத்தை நமக்கு உணர்த்தி, ஒரு வித தியான நிலையை அடையச் செய்கிறார்.

    “தர்க்கம், நியாயம் எல்லாம் பிரமாதமாய்த்தானிருக்கு. ஆனால் சம்பிரதாயம், வழக்கம், முறைன்னு நமக்கு முன்னால பெரியவாள் எல்லாம் தொன்றுதொட்ட ஏற்பாடா பண்ணிட்டுப் போயிருக்காளே. அதெல்லாம் பிசகுன்னு ஒரு நிமிஷத்தில் தூக்கியெறிஞ்சுட இந்த விஷயத்தில் என்ன அவசரம் வந்துடுத்து? நீ ஏன் கேக்கறேன்னு எனக்குத் தெரியும். இன்னிக்கு மத்தியானம் நடந்த விஷயத்தில் – அவள் குருவிக்காரியாயிருந்தால் என்ன, குபேர சம்பத்தாயிருந்தால் என்ன? நம் ஸ்திரீவர்க்கத்தின் மானம் மீட்கவேண்டிய அவசியம் நேர்ந்து போச்சு. அது மாதிரி உனக்கு நேரணுமா? அவளுக்கும் உனக்கும் ஈடா? அங்கு நீ பெற்றால் என்ன? நான் வந்து பார்க்க மாட்டேனா?

    என் பிடரியில் அத்தை கை எவ்வளவு சுகமாயிருக்கு! எனக்கு தூக்கம் வரது.

    என்னையறியாமல் என் தலை ஆடி, அத்தை கைமேல் சாயறது; அப்புறம் நினைவில்லை.”1

    மனிதனால் உருவாக்கப்பட்ட தர்க்க, நியாயத்திற்குக் கட்டுப்படாமல், குருவிக்காரியாகயிருந்தாலும் தன் (பிராமணன்) வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து, ஒரு வாரம் தாய்-சேயை நலமுடன் தங்க வைத்து, போகும்போது கையில் சில பொருட்களையும் கொடுத்து அனுப்பிய தாயின் (அத்தையின்) இயற்கை குணமானது, சம்பிரதாயம் போன்றவற்றையெல்லாம் மிகச்சாதாரணமாகத் தூக்கியெறியும் (பெண்ணின்) நிலையை இதன் வழி உணர்த்தியுள்ளார். இப்பெண்ணின் (அத்தை) செயலானது மானத்தின் பொருட்டு மட்டும் செய்த செயலன்று. தன் வருங்காலக் (ஜகதா) குழந்தையின்  வரவை நோக்கி காத்திருக்கும் நன்வுணர்வுச் செயலாகும். இவ்வாறாகப் பெண்ணின் இயல்புநிலையும் பரிவும் தொன்றுதொட்டு வந்த வழக்கம் மற்றும் முறைமைகளைக் கடந்து செல்லும் தன்மையுடையதைத் தன் எழுத்துக்களினூடாக் காட்சிப்படுத்தியுள்ளார்.

    “மாமியாருக்கு மத்தியானம் மூன்று மணிக்கே நினைவு தப்பிவிட்டது. இரவெல்லாம் ஜுரம் நெருப்பாய்க் காய்ந்தது. மூவரும் கண்ணிமைக்காமல் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வைத்தியன் வந்து நாடியைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி போனான்.

    பொலபொலவென விடியும் சமயம். கணீரெனும் குரலில் கிழவி மருமகளைக் கூப்பிட்டாள்.

    “குளுகுளுன்னு எனக்கு ஒரு டம்ளர் ஜலம் கொடேன்” என்று கேட்டு வாங்கிக் குடித்தாள்.

    “அப்பாடா! என் வயிறு குளிர்ந்தது. நான் இனிமேல் போயிடுவேன். ஆனால், ஒருத்தரும் அழுது ரகளைப் பண்ணிக் குழந்தைகளைப் பயமுறுத்திடாதேங்கோ. குழந்தைகள் தூங்கறதா? பரவாயில்லே. இப்போ ஒண்ணும் அதுகளை எழுப்ப வேண்டாம். இங்கே வா, பக்கத்திலே வா. நீ ரொம்ப நல்ல பெண். எனக்கு உன்னிடத்தில் பரம திருப்தி. அதனாலே உனக்கு நான் சொல்ல வேண்டியது ஒண்ணுமில்லே. அவர் எங்கே?”

    “இதோ இருக்கேனே” என்று கிழவர் பக்கத்திலே வந்தார். அவருள் நடக்கும் பயங்கரமான யுத்தத்தில், முகம் செவேலெனக் கொதித்துக்கொண்டிருந்தது.

    அத்தை லேசாய்ப் புன்னகை புரிந்தார்.

    “இதென்ன இவ்வளவு வருத்தப்படறேளே! நான் கொடுத்து வெச்சவன்னா! விளக்கை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, மடியில் மஞ்சளும் தேங்காயுமா, ராஜாத்தி மாதிரி போகப்போகிறேன். குழந்தை!”

    அவள் கணவரிடம் அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஆசையாய் ஒருமுறை உச்சந்தலையிலிருந்து முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டார். அவ்வளவுதான்”2

    வாழ்க்கையின் இறுதியில் ஏற்படும் மரணத்தைகூட மிக எளிதாகக் கடக்க நினைக்கிற அளவிற்கு, தான் வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த நிகழ்வுகளும் அனுபவங்களும் அவளுக்கு (மாமியாருக்கு) திருப்தியளிப்பதாக இருப்பதை இது காட்டுகிறது. இதனால் இம்மரணத்தைகூட எளிதில் வெல்லமுடிகிறது. எந்தவித அனுதாபங்களும் வருத்தங்களும் இனி வரப்போகிற நாட்களில் (தான் இறந்த பிற்பாடு) இருக்கக் கூடாது என்ற கண்டிப்பும் நிறைவான வாழ்வை வாழ்ந்துவிட்டதால் ஏற்படும் உணர்வுநிலையைத்தான் லா.ச.ரா. மேற்கண்ட வரிகள் மூலம் உணர்த்துகிறார். இப்படிப்பட்ட அமைதியான (புத்ர) நிலையில் மரணத்தை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி ஞானிகளுக்கு மட்டும் சாத்தியமன்று. பரிபூரண வாழ்க்கை வாழும் சாமான்ய மக்களுக்கும் நிகழக்கூடியது என்பதைத் தன் ஆன்ம எழுத்துருவாக்கத்தால் வெளிப்படுத்தியுள்ளார்.

    அபிதா

    1969இல் வெளிவந்த ‘அபிதா’, அகமரபின் உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக எழுதப்பட்ட பிரதியாகும். கரடிமலையைக் களமாகக் கொண்டு காலத்தின் முன்பின்னாக நினைவுகளுடன் ஒரு ஆண்மகன் அகத்திற்குள் நிகழும் காதல், காமம், பரிவு, கோபம், வெறுப்பு ஆகிய உணர்வுகளினூடாக ஏற்படும் அனுபவங்களை லா.ச.ரா. வெளிப்படுத்தியுள்ளார். அபிதா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது வாசகர்களுக்குத் திகைப்பும் பிரமிப்பும் ஈர்ப்பும் ஏற்படும்படி ஒருவித இலயத்துடன் சித்திரித்துள்ளார். இவளுடன் சகுந்தலை, சாவித்ரி ஆகிய பெண்களின் இயல்பை இயற்கையோடு தொடர்புபடுத்தி, அவர்களுடான மனதின் மொழியினைப் புலப்படுத்தியுள்ளார்.

    “அவள் புருவங்கள் வினாவில் உயர்கின்றன. ஆவேசம் வந்தாற்போல் என் வாயினின்று ஏதோ வார்த்தைகள் புறப்படுகின்றன.

    “சக்கு நீ சாகவில்லை.”

    அவள் பின்னடைந்தாள். அவள் விழிகள் வட்டமாயின. பயம், வியப்பு. நான் அவளை நெருங்கினேன்.

    “கிணற்றில் குடத்தை விட்டு, ஜலத்தைக் கலக்குமன் ஜலத்தின் பளிங்கில் தெரிவது யார் என்று கிணற்றில் எட்டிப் பார்?”

    அவள் கண்களில் கலக்கம் சட்டென விட்டது, புன்கையில் கன்னங்களில் வெளிச்சம் படர்ந்தது.

    “என்னவோன்னு பயந்தே போனேன். அம்மாவையே உரிச்சு வெச்சிருக்குன்னு அப்பா கூட ஒரொரு சமயம் சொல்வார். அதையே தாத்தா என் முகத்தைத் தடவித் தெரிஞ்சுண்டு சொல்வார். நானும் அப்பப்போ கண்ணாடியில் பார்த்ததுண்டு. பத்துத்தேய்க்கறப்போ, பித்தளைப் பாத்திரத்தில் பளிச்சுனு அழுக்குவிட்ட சுருக்கில் அது என் முகத்துக்குக் காட்டற பொம்மையில் என்னைப் பார்த்து என் அம்மாவை நினைப்பேன்.”

    திடீரென என்ன ஒரு பெரும் ஆவல் ஆட்கொண்டது.

    “உன்பேர் என்ன?”

    “அபிதா”

    நான் திரும்பச் சொல்லி பெயரை நாக்கில் சுவைக்கிறேன்.

    “அபிதா”

    அ – சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்,

    பி – உதடுகளின் சந்திப்பில்,

    தா – நாக்கின் தெரிப்பில்

    இத்தனைநாள் பிரிந்து போயும், மீண்டதுமே நினைவு கண்டுகொண்ட மனம், விட்ட இடத்திலிருந்து தொட்டுக்கொண்டு மொக்கு விரித்தாற்போல் கம்மென்று எழுதுகின்றது.

    “நேரமாச்சு போவோமா?”

    நீ சொல்கிறாய். செல்கிறாய், நான் உடன் வருகிறேன்.

    ஆண்டவன் வேண்டுவதும் இதுதான்.

    “என்னிடம் உன்னை ஒப்படை.”

    உன்னிடம் என்னைக் கொடுத்துவிட்டபின் இந்தச் சமயத்துக்கு என் மனம் எவ்வளவு லேசாயிருக்கிறது.”3

    சக்கு என்ற சகுந்தலையின் மகளான அபிதாவைக் கண்டதும் அவனுக்குள் எழும் உணர்வுகளை, உணர்வின் தெறிப்புகளை, ஆன்ம விழிப்புகளைத் தன் மொழியினூடே எடுத்தியம்புகிறார். தன் பழைய (காதல்) நினைவுகளிலிருந்து (சக்கு) மீண்டு அவளைக் (அபிதாவைக்) கண்டதும் நினைவுகள் நனவாகி, மனம் (ஆன்ம) நிம்மதி அடைவதையும் மேற்கண்ட வரிகள் தத்ரூபமாக உணர்த்துகின்றன. சமூக நியதிக்கு ஆட்படாத சூழலையும் மனம்/ஆன்மாவானது விதியின் வசத்தால் ஒருவித உறவுக்கு ஏங்கி ஆட்படுவதையும் மிக இயல்பாக வெளிக்காட்டுவதில் திறன் பெற்றுள்ளார் லா.ச.ரா. “தொடல் என்பது உறவின் ஆரம்பம்” என்ற ஃபிராய்டிய கூற்றுக்கிணங்க, அவன் செயல்பட்டிருந்தால் அபிதாவை அடையும் வாய்ப்பினைப் பெற்றிருப்பான். ஆனால் தொடாத காரணத்தினாலேயே அவளுடனான உறவை வளர்த்துக்கொள்ள முடியாமல் போயிற்று. மனம் சொல்வதை உடல் ஏற்க மறுக்கின்ற நிலையும் இதன்வழி அறியமுடிகிறது. மனிதன் தான் வாழ்கின்ற காலத்தில் ஏற்படுகின்ற (காதல், நட்பு) அனுபவங்களில் சில ஆன்மவிசாரத்தை அல்லது ஆன்மநெருக்கத்தை உண்டாக்கவல்லன. ஆனால், இவற்றையெல்லாம் கடந்துதான் வாழ்க்கையை வாழவேண்டியுள்ளது என்பதை லா.ச.ரா., தன் தத்துவார்த்த எழுத்தின் வழி ஆன்மாவைத் தொடுகிறார்.

    சிந்தா நதி

    தன் வாழ்வியல் அனுபவங்களை நினைவலைகளாகக் கொண்டு உருவாக்கிய சுயசரிதை பிரதிதான் சிந்தா நதி. இது தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. 1989 ஆம் ஆண்டு இப்பிரதி சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது. சிறுவயதிலிருந்து கிட்டதட்ட 70 ஆண்டுகள் வரையிலான தன் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை முன்பின்னாகத் தொகுத்து 48 தலைப்புகளில் எழுத்தாக்கியுள்ளார் லா.ச.ரா. ஒரு மனிதன் தான் வாழ்ந்த/வாழும் காலகட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வதென்பது பெரும்பாலும் சாத்தியமன்று. ஆனால், எழுத்தாளானுக்குச் சாத்தியம் என்று இப்பிரதியின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். அதனால்தான் இத்தகையதொரு படைப்பினை இலக்கிய உலகிற்கு அளிக்க முடிந்திருக்கின்றது. இதில் லா.ச.ரா. அடிக்கடி பயன்படுத்தி வரும் சொல்லான  “வேளை” வந்துவிட்டால் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை இப்படைப்பின் வழி உணர்த்தியுள்ளார். தன் காலகட்டத்தில் நிகழ்ந்த தூய இலக்கிய (மணிக்கொடி சதஸ்) சம்பாஷனைகளில் பங்குகொண்டதால், இலக்கியம் (நவீனம்) மற்றும் தீர்க்கமான எழுத்து குறித்த புரிதலும் உந்துதலும் ஏற்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறார்.

    நவீன சமூகத்தில் இயங்கும் மனிதர்களின்  ஆசை, பாசம், காமம், காதல், வேட்கை, பிரமை, பிரியம், கோபம், கலை, தாபம், கற்பனை, யோகம் போன்ற பலவற்றின் உணர்வுகளனூடான உள்தெறிப்புக்களை விவரணையாகச் சொல்லியிருக்கிறார். லா.ச.ரா. பத்து வயதாக இருந்தபோது அவருடைய அண்ணன் தனக்கு ஆங்கிலமும் கணிதப்பாடங்களையும் கற்றுத்தந்ததைப் பற்றியும் ஒழுக்கச் சீடனாகத் தான் வளர்ந்ததைப் பற்றியும் விவரித்துள்ளார். சமூகப்போக்கினை அறிந்து செயல்பட்டவர் என்ற ரீதியில் தமையனைத் தன் குருவாக மதித்தார். தன் தாயின் உள்உணர்வுகளின் வழி தரிசனத்தைக் கிடைக்கப் பெற்றார்.

    “சில சமயங்களில் அண்ணாவின் பாடங்களினின்று அபூர்வமாகக் கிடைத்த ஒழிவு நேரங்களில், ஊர் தாண்டி, வயல் நடுவே பிள்ளையார் கோயிலுக்கு அசருடன் போவேன்.

    போவோமே ஒழிய, பிள்ளையாரை வணங்கமாட்டார், சேவிக்கமாட்டார். சன்னிதானத்துக்கெதிரே, மார் மேல் கை கட்டியபடி, தரையில் வட்டம் போட்டாற் போல் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்கூட. நேரமாச்சு என்று சொல்லப் பயமாயிருக்கும். பிறகு கவனம் வெடுக்கெனக் கலைந்தாற் போல் தலையை உதறிக்கொண்டு சுற்று முற்றும் பார்ப்பார். அன்னியனைப் பார்ப்பது போல், கண்ணில் லேசான கருப்புக்கூட.

    “உருவேற திருவேறும்” என்பர். முன்பின் தாக்கல் மோக்கல் இல்லாமல்.

    “அப்படீன்னா?” நான் சின்னப் பையன் தானே!

    “புரியவில்லையா?” புன்னகை புரிவார் (அரிசிப்பல்) “புரிந்துகொள்ளும்போது புரிந்து கொள். புரியும் வேளை வரும்போதுதானே புரியும். அப்போதும் எல்லாமே புரிந்த மட்டில்தான்.” (இந்தச் சிலம்ப விளையாட்டு எனக்கென்ன புரிகிறது?) இப்போது அனுபவத்தில் அறிகிறேன்.

    பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்துகொண்டிருக்கிறது. பரிபாஷை தான் உண்மை பாஷை. ஒரு புருவ உயர்த்தல், ஒரு விரல் சொடுக்கு, ஒரு புன்னகை, அதரத்தின் வில் வளைவு மோனமாகக் கன்னத்தில் புரளும் இரு கண்ணீர்த் துளிகள், நாணத்தில் தலை குனிவு இவை பேசும் ஒரு அகிலம், மூச்சுவிடாமல் மணிக்கணக்கில் கொட்டும் வார்த்தைகளால் இயலா.”4

    மொழியின் அழகே மறைந்திருக்கின்ற அர்த்தங்களை வெளிப்படுத்துவதுதான். இதனையே லெவிஸ்ட்ராஸ் (Levis strauss) தொன்மம் பற்றி விளக்கும்போது “மொழிக்குள் புதைந்திருக்கின்ற (பாஷைக்குள் ஒரு பாஷை ஒளிந்துகொண்டிருக்கிறது)  அர்த்தமானது விரிவடைந்துகொண்டே இருக்கும் என்றும் அதனை வெளிப்படுத்தும்போது தான் அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியும்” என்கிறார்.  இதனைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் உடல்மொழிகள், பரிபாஷைகள், அனுபவத்தின் வழி புரியாதவற்றையும் புரிந்துகொள்ள முடியும் என்று விளக்குகிறார் லா.ச.ரா. நம் வாழ்வியல் (இயங்கியல்) ரீதியாகவே உண்மையை உணரமுடியும் என்கிறார்.

    “நான் எழுத்தின் உபாசகன். ஐம்பது வருட ஈடுபாட்டுக்குப் பின் தைரியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

    எழுத்தின் பலிபீடத்தில், தவங்கிடந்து பெற்ற பிள்ளைக்கு இட்ட தங்கத்தொட்டிலிருந்து அவன் வளர்ந்து மனிதனாகி ழுழுவயது வாழ்ந்து முடிந்த பின் அவன் சிதைக்கு அடுக்கும் வரட்டி வரை – ஏன், பின்னர் அவன் அஸ்தி கூட எடையாகிறது. ஆஷாட பூதித்தனம், நன்னம்பிக்கைகள், நாணயம் யாவுமே எம்மாத்திரம்? இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளும்போது இதுபோன்ற சாடல்களுக்கும் தயாராய் இருத்தல் வேண்டுமல்லவா?

    எழுத்து ஒரு பெரிய சவால். ருசி கண்டவன் அறிவான். ஒரு பெரிய உந்தல் வெறி / சொந்த நாணயத்துக்கு, அந்தந்த நாகரிகத்துக்கு எழுத்து ஒரு உரைகல் / எங்கோ ஆரம்பித்து, சிந்தா நதியின் கதி தள்ளி, எங்கோ வந்துவிட்டேன் -”5 எழுத்தின் தீவிரத்தையும் எழுத்தாளனுக்கு ஏற்படும் உந்துதலையும் ‘மோனம்’ என்ற தலைப்பின் கீழ் வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தைத் தவமாகக் கொண்டு இயங்கிய லா.ச.ரா. அத்தவத்திலிருந்து வாழ்க்கையில் யாரும் காணமுடியாத/அடையமுடியாத ஞானதரிசனத்தைக் கண்டடைந்தார். சிந்தா நதியில் இறங்கும் வாசகர்களுக்கு (வாசித்து முடித்தவுடன்) உடல் மற்றும் மனம் தூய்மை அடைவதோடு, நம் வாழ்க்கையில் நிகழ்ந்த உன்னதங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுமளவிற்கு அவருடைய எழுத்து இட்டுச்செல்லும். நதியின் போக்குக் கரடு முரடாக இருப்பதைப்போலவே தன் வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளதை லா.ச.ரா. இதன் வழி தெளிவுபடுத்துகிறார்.

    பாற்கடல்

    குடும்பம் என்ற அமைப்புக்குள் இருக்கும் அன்பு, பாசம், இரக்கம், கோபம், பெருமிதம் என்ற சகல உணர்வுகளை அழுத்தமாகவே வெளிப்படுத்தியுள்ளார். தன் முன்னோர்களின் வாழ்வியலிலும், அவர்களின் குணங்களிலும் லயித்து இருக்கிறார். தன் எண்ணங்களிலிருந்து அகலா வண்ணம், அம்முன்னோர்களின் செயல்கள், நம்பிக்கைகள், இலட்சியங்கள், ஆசாபாசங்கள், மனவலிமைகள், வாழ்க்கை முறைகள் (பழக்க வழக்கங்கள்), பாஷைகள் ஆகியன ஒருவித ஈர்ப்பை வழங்கியிருக்கின்றன. தற்காலத்தில் இவையெல்லாம் நீர்த்துபோயிருப்பதைத் தன் கவித்துவ எழுத்துகளினூடாக உணர்த்தும் விதமாக உள்ளது. வாழ்க்கையில் தான் தேடும் தரிசனங்களை, அமைதியை, தெளிவுகளை, மனநெகிழ்வுகளை எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல், தனக்காகவும்/கலைக்காகவும் ஆன்மவிசாரத்திற்காகவும் படைப்புகளை உருவாக்கியவர். “எனக்கு நேர்ந்த சம்பவங்கள் என் நோக்கை, எந்த அளவுக்குப் பாதித்தன என்பதைச் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை வாசகனுக்குச் சொந்தமாக்குவதே ‘பாற்கடல்’ எழுதும் நோக்கம். இதில் பிறர் காணும் வெற்றி, தோல்வி, குறைகள், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. என் விளக்குத் தூண்டுகோல் பற்றித்தான் நான் சொல்லிக்கொள்ள முடியும்.

    நடுநிசியின் முழுநிலவில் வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டே தெருவழியே செல்கிறேன். ஏன்? அது என் ஆனந்தம். நான் பிச்சைக்குப் பாடவில்லை. என் இச்சைக்கே பாடிக்கொண்டே போகிறேன்.

    சில கதவுகள் திறக்கின்றன.

    திறந்திருந்த கதவுகள் மூடிக்கொள்கின்றன.

    சிலர் வெளியே வந்து கவனிக்கவும் கவனிக்கின்றனர். இதுதான் இலக்கிய அனுபவம்”6 என தன் நோக்கம், வாழ்வியல் இயக்கம், அனுபவம், எழுத்து போன்றவைகளைக் குறித்து தத்துவார்த்த எழுத்துருவில் தனக்கே உரிய பாணியில் புலப்படுத்துகிறார். தன்னைப் பாதித்த விஷயங்கள் பலவற்றையும் இலக்கியமாக்குகிறார். இதனால்தானோ என்னவோ லா.ச.ரா.வின் எழுத்துக்கள் தனித்துவமாகத் திகழ்கின்றன.

    நிறைவாக

    நவீன இலக்கியத் தளத்தில் பல எழுத்தாளர்களுக்கு மத்தியில் லா.ச.ரா. தனித்து இயங்கக் கூடியவர். தன் கதையம்சத்திலும் வடிவமைப்பிலும் மொழிநடையிலும் மற்ற எந்த எழுத்தாளரையும் சாராதவர். “உணர்ச்சி பூர்வமான மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை, அவை நிகழும் கணங்களை, நிறுத்திப் பிடிக்கும் வகையில் சொல்லையும் சொல்லின் பொருளையும் இணைக்கும் ரசவாதத்தைத் திறமையுடன் கையாளும் பண்பு ராமாமிருதத்திடம் உண்டு. “நித்தியத்துவம் என்மேல் படும்போது அதைச் சொல்லில் பிடித்து, அந்த நிமிஷத்தை நித்தியமாக்கிவிடலே என் தேடல், என் கனவு” என்று அவரே தன் கொள்கையை விளக்குகிறார்.”7

    இவருடைய படைப்புகளை வாசிக்க நேரும் வாசகர்கள் ஆழ்ந்த உணர்வுக்கு ஆட்பட்டு, ஆன்மநெருக்கத்தினை அடைவர். இசை லயத்துடன் கூடிய மௌனமொழியின் வழி மனதின் பிரக்ஞையை தூண்டக்கூடியவர். எழுத்தையே தன் வாழ்க்கையாக, ஆன்மவெளிப்பாடாகக்  கொண்டு இயங்கியதால்தான் லா.ச.ரா. தனித்த ஆளுமையுடன் திகழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்க்கையின் தாத்பரியங்களைக் காட்டும் அவருடைய எழுத்துக்களானது காலத்தையும் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. லா.சா. ராமாமிருதம், ‘புத்ர’, ப. 118.
    2. மேலது., பக். 144-145.
    3. லா.சா. ராமாமிருதம், ‘அபிதா’, பக். 57-58.
    4. லா.சா. ராமாமிருதம், ‘சிந்தா நதி’, ப. 200.
    5. மேலது., பக். 203-204.
    6. லா.சா. ராமாமிருதம், ‘பாற்கடல்’, ப. 200.
    7. பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், ப. 158.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளர் தனது கட்டுரையில் லா.ச.ராவின் படைப்புணர்வை எடுத்துக் கூறியுள்ளது சிறப்பு. நாவல்கள் வாயிலாகப் பிராமணப் பெண்களின் மனவெளியைப் பூடக மொழியில் கூறியுள்ள பாங்கை விவாதப்படுத்தியிருப்பது அருமை. லா.ச.ரா என்றாலே சற்று மனதில் தயக்கம் ஏற்படும். ஆனால் ஆய்வாளர் துணிவோடு இக்கட்டுரையை உருவாக்கி லா.ச.ராவின் படைப்புலகில் நம்மை யும் அழைத்துச் செல்கிறார். தனது எழுத்து தனக்காக மட்டுமே எழுத ப்படுகிறது என்ற லா.ச.ராவின் எழுத்துத்தவத்தை அவரது படைப்பின் மூலம் வெளிப்படுத்தி நிற்கின்றது இக்கட்டுரை .


     

    Share
  • (Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்

    (Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்

    மு.கயல்விழி,
    உதவிப் பேராசிரியர் (தமிழ்),
    பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி,
    காஞ்சிபுரம்.
    மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

    முன்னுரை                                                                                                                         

    இடைக்காலத் தமிழக வரலாற்றில் அஞ்சினான் புகலிடங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அக்காலத் தமிழகத்தின்; வடபகுதியைச்  சம்புவராய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். இவர்கள் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் தனியரசு  செலுத்தியவர்கள். வட தமிழகத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர்கள் இவர்களே. இவர்கள் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வஞ்சினான் புகலிடங்கள் அவர்களின் மேம்பட்ட பொருளியல் அறிவைப் புலப்படுத்தின. தமிழக வணிகர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் இவர்கள் வணிகத்தின் மீதும், வணிகர் மீதும், நாட்டின் பொருளியல் நலன் மீதும், எத்துணை அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதைப் புலப்படுத்தின. அஞ்சினான் புகலிடங்களால் வணிகம் செழித்தது; வணிகர்கள் பாதுகாக்கப்பட்டனர். இதன் விளைவாய் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் அஞ்சினான் புகலிடங்களை ஆராய்வது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பணியாகும். இதன் சான்றுகள் தொல்லியல் துறை சார்ந்தது என்பதால் இது குறித்து அதிக ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சார்ந்து இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகின்றது.

    இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் (அவல) நிலை

    இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் நிலை மிகவும் குழப்பம் நிறைந்தது. தமிழகத்தின் தீயூழின் காரணமாய்ப் பேரரசுச் சோழர்களும், அவர்களைத் தொடர்ந்து பிற்காலப்பாண்டியர்களும் வீழ்ச்சியடைந்தனர். அவர்களின் வீழ்ச்சி மாபெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்ததுடன், எங்கும் அமைதியின்மை நிலவியது. தமிழகமே போர்க்களமாக மாறியது. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி.1219ல் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அழிவை ஏற்படுத்தினான். இதன்பின் அரசனான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1257ல் சோழநாட்டை வென்று நிர்மூலமாக்கினான் (பாண்டியர் வரலாறு. ப:445). இந்நிலையில் தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்டகோபாலன் கி.பி. 1267ல் காஞ்சிபுரத்தை வென்றான் (பிற்காலச் சோழர் சரிதம் .ப:386). சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் எந்தப் படையெடுப்பையும் தடுக்கவியலாத அளவுக்குப் பலவீனமானான். இது தவிர சேரமன்னன் பாஸ்கர இரவிவர்மன் கி.பி.1313ல் படையெடுத்துச் சோழநாட்டை வென்று தொண்டை நாடு வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். கி.பி.1313ல் காகதீய மன்னன் பிரதாபருத்திரன் தன் தளபதி முப்பிடி நாயகனை அனுப்பிக் காஞ்சிபுரத்தினைக் கைப்பற்றினான். போசள மன்னன் வீர நரசிம்மனும் தன் பங்குக்குப் பெரும் படையுடன் வந்து வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம் கண்ணனூரில் ஒரு அரசை நிர்மாணித்தான்.

    இதன் பின்னும்; அந்நியப் படையெடுப்புகள்; தொடர்ந்தன. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் (Malik Kafur)  தமிழகத்தின் மீது கி.பி.1311ல் படையெடுத்துப் பேரழிவையும், பெரும் சேதத்தையும் ஏற்படுத்கினான் (தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்.ப:387). அவனைத் தொடர்ந்து குஸ்ருகான் (Khusro Khan) கி.பி.1318லும், உலூக்கான் (Ulugh Khan) கி.பி.1323லும், தமிழகத்தைச் சூறையாடி, பெரும் பொருளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இவ்வாறு தொடர்ச்சியான படையெடுப்புகளால் மக்கள் சிக்கிச் சின்னா பின்னமானார்கள். தமிழகத்தில்; தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை தோன்றியது. இந்நிலையில் பஞ்சங்களும் தோன்றி மக்களை வாட்டி வதைத்தன. கி.பி.1344ல் காஞ்சிபுரம் மாவட்டம் நெரும்பூரிலும் (ARE.No:276/1912), இதேவாண்டு வேலூர் மாவட்டம் கலவை (SII.Vol:7 No-444) மற்றும் குடிமல்லூரிலும் (ARE.No:420/1905) பஞ்சங்கள் தோன்றின. இதன் காரணமாய் மக்கள் கடுமையான இன்னல்கள் அடைந்தனர். இவ்வாறு ஓயாத படையெடுப்புகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும், இடைக் காலத் தமிழ் மக்கள் சொல்லவியலாத் துயரடைந்தனர்.

    அஞ்சினான் புகலிடங்களின் தோற்றம்

    அஞ்சினான் புகலிடம் என்றால் தஞ்சம் தேடி அஞ்சி வருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் அமைப்பாகும். அஞ்சினான் புகலிடங்கள் முதலில் எங்கு தோன்றின என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை. பண்டைய நாளில் சமணர்கள் இது போன்ற அடைக்கலங்கள்; வழங்கும் அமைப்புகளை நடத்தினர். இது “அபயதானம்”என்று அழைக்கப்பட்டது. வாழ்க்கைப் போரில் தோற்று, அனைத்தையும் இழந்து, அநாதைகளாகிய அபலைகளுக்கு உணவும், உடையும், உறையுளும் சமணப் பெரியோர்களால் சமணப் பள்ளிகளில் (சமண ஆலயம்) வழங்கப்பட்டது. சான்றாகத் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள “ஜம்பை” என்ற ஊரினைக் கொள்ளலாம். இங்கு “கண்டராதித்தப் பெரும் பள்ளி” என்ற சமண ஆலயம் சோழர் காலத்தில் செயல்பட்டது. அங்கு “சோழத்துங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்” என்ற அஞ்சினான் புகலிடம் செயல்பட்டது. அங்கு தஞ்சம் தேடி வருபவர்களுக்கு உணவும், உடையும், தங்குமிடமும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் காலநிர்பந்தத்தால் அரசர்களாலே நடத்தப்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

    சோழர் காலத்தின் இறுதியில் தோன்றிய அரசியல் குழப்பங்களால் சமயம் சாராத அஞ்சினான் புகலிடங்கள் தமிழகத்தின் பலவிடங்களில் தோன்றின. பின்னர் வந்த சம்புவராயர் காலத்தில் இது பல்கிப் பெருகின. சோழர்கள் ஆட்சிக்குப் பின் தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய மன்னர்கள் நாட்டின் நிதி நிலையைச் சீர்த்திருத்த முனைந்தனர். சோழர் கால வரிவிதிப்பு முறைகள் இக்காலத்திற்குப் பொருந்தவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிகம் அழிந்தது, வணிகர்கள் வறியவராயினர். பலவிடங்களில் வியாபாரிகள் அரசு வரிகளைச் செலுத்தவியலாமல் ஊர்களை விட்டு ஓடினர். எனவே வணிகத்துக்கும், வணிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய இன்றியமையாப் பணியைச் சம்புவராய மன்னர்கள் முதலில் கொண்டனர். இதன் காரணமாய் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை  ஏற்படுத்தினர்.

    அஞ்சினான் புகலிடங்களின் நிலை

    அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்;பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கூர்ந்து ஆராயுமிடத்து அவை வணிகத்துக்காக நிறுவப்பட்ட புகலிடங்கள் என்பது தெளிவாகின்றது. அக்காலத்தில் போர்கள் என்பது அன்றாட நிகழ்வாய் மாறிய நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தால் அது போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில்; அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அஞ்சினான் புகலிடங்கள் ஏதும் அவ்விடங்களில் அமைக்கப்படவில்லை. மாறாக இப்புகலிடங்கள் அமைக்கப்பட்ட இடங்களெல்லாம் வணிக மையங்களாகத் திகழ்ந்தன. புதியதாக அமைக்கப்பட்ட இப்பகுதிகளி;ல் அக்கால வணிகக் குடியினரான காசாயக் குடியினர் (கைக்கோளர், சாலியர், கோலியர், சேனையங்காடிகள், செக்குக் குடிகள், செட்டிகள் போன்றோர்) பெருமளவில் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர்.

    போர்களால்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமேயன்றி பாதுகாப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டிராது. அக்காலத்தில் போரால் நேரடியாக பாதிக்கப்பட்ட எவ்விடங்களிலும்; அஞ்சினான் புகலிடங்கள் அமைக்கப்பட்டதாகச் சான்றுகளில்லை. மாறாகப் புதியதாக அமைக்கப்பட்ட அஞ்சினான் புகலிடங்களில்; வணிக இனத்தவர்கள் வந்து குடியேறி வணிகம் புரிய ஊக்கமளிக்கப்பட்டதற்குச் சான்றுகள் உள. எனவே அஞ்சினான் புகலிடங்கள் நிறுவும் நடவடிக்கையானது போரினால் வணிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிகம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட பொருளியல் தொடர் நடவடிக்கையாகக் கொள்ளவேண்டும். சம்புவராய மன்னர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்; துரிதமாகப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் பல  அஞ்சினான் புகலிடங்களை அமைத்தனர். எனவே, அஞ்சினான் புகலிடங்கள் என்பவை பொதுமக்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட அரண்கள் என்பதைவிட வணிகத்தையும்; வணிகர்களையும் பாதுகாக்க அரசு அமைத்த அமைவிடங்கள் என்பது சாலவும் பொருந்தும்.

    சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்:-

    சம்புவராய மன்னர்கள் பல்லவர்களுக்குப் பின்பு வந்த சோழர் காலத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை (வட தமிழ்நாட்டை) ஆண்ட அரச குலத்தவர் ஆவர். கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை இவர்களுடைய ஆட்சி நிலைத்திருந்தது. ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தைத்  தலைநகராகக் கொண்டு சோழர்களின் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்த அவர்கள் பின்பு படைவீடு என்ற இடத்தில் தம் தலைநகரை மாற்றிக்கொண்டனர். இவர்கள் சோழர்கள் ஆட்சியில் முக்கியப் படைத்தலைவர்களாகவும் குறுநில மன்னர்களாகவும் பணியாற்றினார்கள். இவர்கள் தமிழகத்தின் சிறந்த புராதனத் தமிழினத்தைச் சார்ந்தவர்கள். சோழர்களுடன் நெருங்கிய திருமண உறவைக் கொண்டவர்கள். பல்வேறு  சம்புவராய மன்னர்களின் கல்வெட்டுகள் இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்று உரைக்கின்றன (ARE.NO:244/1901 & ARE.NO: 453/1923-24 & ARE.NO:163/1915 & SII. Vol-3.No:63 & பெருமுக்கல் கல்வெட்டுகள், ப:60) மேலும் இவர்கள் பழம்பெருமை மிக்க வன்னிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சோழர்களின் குறுநில மன்னர்களாகப் பணியாற்றிய இவர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் சுதந்திர மன்னர்களாகத் தனியரசு செலுத்தினர்.

    இடைக்காலத்தில் இடைவிடாத போர்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே, சம்புவராய மன்னர்கள் வணிகம் வளர்ப்பதை முதற்பணியாகக் கொண்டனர். முதலில் வணிகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்கள் (அஞ்சினான் புகலிடங்கள்); அமைக்கப்பட்டன. இவ்வஞ்சினான் புகலிடங்கள் ஒரே இடத்தில் செறிந்து காணப்படாமல் நாடு முழுவது பரவிக் காணப்பட்டன. வணிக வளர்ச்சி தேவைப்படும் இடங்களில் இவை அமைக்கப்பட்டன. அஞ்சினான் புகலிடங்களி;ல் வந்து வியாபாரம் செய்ய வணிகர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டனர், அவர்கள் வணிகம் செய்து பிழைக்க ஊக்குவிக்கப்பட்டனர். அரசே இவ்விடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை நல்கியதுடன் வணிகர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்தது. சிலவிடங்களில் வணிகத் தெருக்கள் புதிதாய் அமைக்கப்பட்டன. அத்தெருக்களுக்கு பெயர்களும் சூட்டப்பட்டன. இங்கு புதிதாய்க் கடை வைத்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டி அரசுக்கு அவர்கள் முதலாண்டு செலுத்த வேண்டிய வரிகள் பெருமளவு தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அஞ்சினான் புகலிடங்களில் வணிகத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் சிறப்பாக வழங்கப்பட்டது.

    சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில்  அஞ்சினான் புகலிடங்களை நிறுவினர். ஆனால் இவற்றில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தன. திருமல்லிநாத சம்புவராயன் விழுப்புரம் மாவட்டம் “செவலப்பொறை” என்ற இடத்தில் அஞ்சினான் புகலிடம் ஒன்றை அமைத்தான் (ஆவணம் இதழ் எண்:16,ப:104). வென்று மண்கொண்ட சம்புவராயன் வேலூர் மாவட்டம் “கீழ்மின்னல்”(ARE.No:135/1933-34), “கூடநகரம்” (ARE.No:137/1926), மற்றும் “வேப்பூரிலும்” (ARE.No:499/1926), திருவள்ளூர் மாவட்டம் “திருவேற் காட்டிலும்” (ARE.No:393/1958-59), காஞ்சிபுரம் மாவட்டம் “கொத்திமங்கலம்” (ARE.No:137/1926) என்ற ஊரிலும் அஞ்சினான் புகலிடங்கள் நிறுவினான். மூன்றாம்  இராஜநாராயணச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “வடமாதிமங்கலம்” (ARE.No:62/1933-34) என்ற ஊரில் அஞ்சினான் புகலிடம் அமைத்தான். குலசேகரச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “தெள்ளாறு” (ARE.No:70/1934-35) மற்றும் “இடைப்பாறையிலும்” (ARE.No:141/1941-42) அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தான். இவ்வாறு சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை நிறுவி வணிகம் வளர்த்தனர்.

    முடிவுரை

    சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு. அவர்கள் காலத்தில் நாடு முழுவதும் பரவலாக நிறுவப்பட்ட இவ்வஞ்சினான் புகலிடங்கள் வணிகத்தைப் பாதுகாத்தன. திருடர்கள், கொள்ளையர்கள், அந்நியர் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றால் வணிகர்கள்  பாதிக்காமலிருக்க இவை பாதுகாப்பளித்தன. அஞ்சினான் புகலிடங்களில் வணிகம் செழித்தது, வணிகர்கள் கொழித்தனர். இங்கு பொதுமக்கள் தடையின்றி பொருட்களை விற்றும், அச்சமின்றி பண்டங்களை வாங்கியும் நாட்டின் பொருளியல் நிலையை உயர்த்தினர். இதனால் வணிகர்கள் நன்முறையில் பொருளீட்டியதுடன், அரசுக்கு முறையாக வரியும் செலுத்தினர். இதன் விளைவாய்; நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது. போரினால் வீழ்ச்சியடைந்த பொருளியல் நிலை இவ்வாறு உயர்ந்தது. மக்கள் நிம்மதியுடனும், வளத்துடனும், மகிழ்வுடனும் வாழ்ந்தனர். இடைக்காலத் தமிழக வரலாற்றில் சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த, பொருளியல் திறன் வாய்ந்த,  வணிகத் தொலைநோக்கு கொண்ட அரசு என்பதற்கு அவர்கள் ஏற்படுத்திய அஞ்சினான் புகலிடங்களே சாலச் சிறந்த சான்றுகளாகும்.

    விரிவாக்கம் (Abbreviations)
    1. ARE- Annual Report on Indian Epigraphy
    2. SII-South Indian Inscription
    கருவி நூற்பட்டியல் (Bibliography)

    1.Appadurai.A, (1990), Chennai, Economic Condition In South India, University of Madras.

    2.Neelakanta Sastri.K,A., (1975), Chennai, The Cholas, University of Madras.

    3.இராஜசேகரத் தங்கமணி.ம, (1978), சென்னை, பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

    4.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, (2008), சிதம்பரம், பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

    5.பிள்ளை.கே.கே. (2013), சென்னை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராச்சி நிறுவனம்.

    6.தமிழக வரலாறு – சோழர் காலம், (1998), சென்னை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்

    7.நடன.காசிநாதன் & வசந்த கல்யாணி.அர (பதி), (1998), சென்னை, பெருமுக்கல் கல்வெட்டுகள், தமிழ்சாடு  அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில வேந்தர்களாகிய சம்புவராயர்களின் பங்களிப்பு, தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். கடைசியாகத் தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களும் இவர்களே ஆவர். சோழர்களின் இறுதிக் காலத்தின்போது சமுதாயத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, அஞ்சினான் புகலிடங்கள் ஆகும். இந்தக் கட்டுரை இது குறித்துத் தெளிவாக விளக்குகிறது. அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன என்று கட்டுரையாசிரியர் அஞ்சினான் புகலிடங்கள் குறித்துக் கூறுகிறார். இயல்பாகவே குறுநில மன்னர்கள் மக்களின் துன்பம் துடைப்பதற்காக மேற்கொண்ட பல வழிகளை வரலாற்றின் மூலமாக அறிகிறோம். அந்த வழியில் சம்புவராய மன்னர்களின் சமுதாயப் பணி ஆகிய அஞ்சினான் புகலிடங்கள் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது. சம்புவராயர் குறித்து மேலும் சில விளக்கங்களைக் கட்டுரையாசிரியர் சற்று விரியத் தந்திருக்கலாம்.  


     

    Share
  • (Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்

    (Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்

    ஸ்ரீ. நடராஜன்
    ஆற்றல் அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.com
    
    இரெ. சந்திரமோகன்
    இயற்பியல் துறை, ஸ்ரீவித்யாகிரி கல்லூரி
    புதுவயல்
    மின்னஞ்சல்: rathinam.chandramohan@gmail.com
    
    

    பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்

    முன்னுரை

    நமது பழைய தமிழ்ப் பாடல்கள் அறிவியலைப் பற்றிப் பேசுகிறதா? முன்னோர்கள் அறிந்திருந்தனரா? என்பது போன்ற கேள்விகள் எப்போதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கிடைத்த அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி மற்றும் சமீபத்தில் கிடைத்தத் தகவல்களைக் கொண்டு இப்பாடல்களை ஆராயும் போது சில வியத்தகு முடிவுகள் கிடைக்கின்றன. அவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

    திருமந்திரப் பாடல்

    திருமந்திரத்தில் அணுவைப் பற்றி பாடியுள்ள இரு பாடல்களை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

    மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
    மேவியது கூறது ஆயிரமானால்
    ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே” [1]

    பொருள் :

    ‘துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து, இறந்தாரை எண்ணிக்கொண்டற்று’ என்பதுபோல ஆருயிரின் வடிவம் அளவிட்டுக் கூறவொண்ணாததாகும். அவ்வுண்மையினை ஒருவகையாக ஓதியருள்வாராயினர். உடல் கலன் உலகம் ஊண் முதலியவற்றுடன் பொருந்திய ஆருயிரின் வடிவினைக் கூறுவோமானால் பசுவினது மயிர் ஒன்றினை எடுத்து நூறுபங்கு செய்தல்வேண்டும். பின்பு அந் நூற்றினில் ஒன்றினை எடுத்து ஆயிரம் கூறுசெய்தல்வேண்டும். அந் நிலையில் ஏற்படும் ஒரு கூற்றினை நூறாயிரம் கூறுசெய்தால் எவ்வளவு ஏற்படுமோ அவ்வளவாகும் ஆருயிரின் வடிவமென்க. எனவே, ஆருயிர்க்கு வடிவமின்றென்னும் வாய்மையினை வனப்புற வகுத்து ஓதுவதிது.

    அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
    அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
    அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
    அணுவில் அணுவை அணுகலு மாமே. [2]

    பொருள்:

    அணுவாகிய ஆருயிர்க்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் ஆவன். அவனைத் திருவருளுணர்வால் அளவின்றி நுணுகி ஆராயவல்லார்கட்கு அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும். இப்பாடல்களில் அணுவின் அளவு எவ்வளவு இருக்கும் என்பது பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இப்பாடலில் அணுவின் அளவானது பசுவின் ரோமத்தை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே இப்பாடல் கூறும் அணுவின் அளவை ஆய்வு செய்வதற்குப் பசுவின் ரோமத்தை ஆய்வு செய்வதன் மூலம் தெளிவான விளக்கத்தைக் காண முடியும். இது போன்ற அடிப்படைத் துகள்களைப் பற்றி ஆராயும் போது அவற்றின் அளவுகளை மிகச்சரியாக சொல்லிவிட முடியுமா என்பது மற்றுமொரு ஆலோசனைக்குரிய விஷயம். ஏனென்றால் துகள்களின் அளவு மிகச் சிறியதாகச் செல்லச் செல்லக் குவாண்டம் விளைவுகள் அதிகமாக இருக்கும். இவ்வகையான விளைவுகள் குவாண்டம் நிலையில்லாத் தத்துவத்தின் மூலம் நிரூபிக்கப்படுகின்றன. நிலையில்லாத் தத்துவம் என்பது ஒரு துகளின் இருப்பினையும் மற்றும் அதன் உந்தத்தையும் இணைக்கிறது. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் குவாண்டம் துகள்களின் இயக்கத்தை ஆராயும்போது ஒரே நேரத்தில் துகள்களின் இருப்பினையும் மற்றும் உந்தத்தினையும் ஒருசேரக் கணக்கிட இயலாது என்பதாகும். அதாவது துகளின் இருப்பினை ஆராய வேண்டுமானால், அது உந்தத்தில் சார்பாக இருக்கும். இதேபோல உந்தத்தை ஆராய வேண்டுமானால் அது இருப்பின் சார்பாக இருக்கும். இவற்றைக் கீழ்காணும் சமன்பாடு மூலம் இணைக்க முடியும்.

    மேலும் இதே தத்துவத்தின் விளைவானது துகள்களின் அளவை ஆராயும்போது பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வாறெனில் அடிப்படைத் துகள்களின் அளவினை ஆராயும் போது அதன் உந்தமும் பெருமளவில் இந்த ஆய்வின் விளைவைப் பாதிக்கும். எனவே அடிப்படைத் துகளின் குறுக்களவினை மிகச் சரியாக அளவிட முடியாது.

    பசுவின் ரோமம்

    அடிப்படைத் துகள்களில் ஒன்றான எலக்ட்ரானின் வடிவமைப்பைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்துள்ளது [4]. கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் மேற்கொள்ளப்பட்ட அவ்வாய்வின் முடிவில் எலக்ட்ரானானது ஒப்பீட்டளவில் ஒரு கோள வடிவமான அமைப்பைப் பெற்றிருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு மிக குளிர்ந்த சூழ்நிலையானது ஏற்படுத்தப்பட்டது. இங்கு வெப்பநிலையானது 3 கெல்வின் என்ற அளவில் குளிர்ந்த நிலையில் இருக்கும் [4]. இதன்மூலம் அடிப்படைத் துகள்களின் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டு அவற்றின் அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

    இப்பாடலில் உள்ள கருத்துக்களை உறுதிசெய்ய பசுவின் ரோமத்தின் குறுக்களவானது ஆய்வகத்தில் கணக்கிடப்பட்டது. இந்த ஆய்வுக்காக பத்து பசு மாடுகளில் ரோமங்கள் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட ரோமங்கள் ஆய்வகத்திற்குக் கொண்டு வரப்பட்டு அவற்றின் குறுக்களவானது கண்டறியப்பட்டன. ஏர்வெட்ஜ் முறையில் ரோமத்தின் குறுக்களவானது அளவிடப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் ஏற்கனவே உள்ள ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது [3].

    உரோமத்தின் குறுக்களவு பின்வரும் சமன்பாட்டின்  மூலம் பெறப்படுகிறது.

                

    L என்பது கண்ணாடித் தட்டின் எல்லையிலிருந்து உரோமமானது வைக்கப்பட்டுள்ள நீளத்தையும், D என்பது கண்ணாடித் தட்டின் குறுக்களவையும்,  என்பது மஞ்சள் நிறத்தின் அலைநீளத்தையும், என்பது ஒளிவிலகல் எண்ணையும் மற்றும் N என்பது ஒளிப்பட்டைகளின் எண்ணிக்கையையும் குறிக்கும்.  எமது ஆய்வுத்தரவுகளில் பின்வரும் மதிப்புகள் அடிப்படையாகக் கையாளப்பட்டன.

    இவ்வாறு பெறப்பட்ட மதிப்புகளை குறுக்களவு சமன்பாட்டில் பிரதியிட, கிடைக்கும் எண்மதிப்பு உரோமத்தின் குறுக்களவை உறுதி செய்கிறது.

    இப்பகுதியானது பாடலின் வரியையும் மற்றும் கணக்கீடுகளையும் ஒப்பிட்டு விளக்குகிறது. நாம்  கண்டுபிடித்த ரோமத்தின் குறுக்களவை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கீடுகள் செய்யப்படுகின்றன. பசுவின் ரோமம் குறுக்களவு = 160 மைக்ரோ மீட்டர்

    முதல் வரி

    இரண்டாவது வரி

     

     

     

    மூன்றாவது வரி

     

    4 வது வரி

     

    இவ்வாறு கிடைக்கப்பட்ட எண் மதிப்பின் அளவை அறிவியல் தரவுகளுடன் ஒப்பிடும்போது சில ஒப்பீட்டளவிலான முடிவுகள் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கப்பட்ட மதிப்பான 160 x 10^-16 மீட்டர் என்ற எண் மதிப்பானது ஒரு ஹைட்ரஜன் அணுவை விட மிகக் குறுகியது. ஹைட்ரஜன் அணுவானது 53 x 10^-12 மீட்டர்கள் என்ற எண் மதிப்பைக் குறுக்களவாகப் பெற்றிருக்கும். எனவே இங்கு குறிப்பிட்டுள்ள அடிப்படைத்துகளின் அளவு என்பது இந்த ஹைட்ரஜன் அணுக்களை விடவும் மிகச் சிறியதாக இருக்கும்.

    குவாண்டம் தத்துவம்

    குவாண்டம் இயற்பியலைப் பொருத்தவரையில் நிகழ்தகவு விளையாட்டுகளின் அடிப்படையில் தத்துவங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குவாண்டம் இயற்பியலில் ஒரு துகளின் இருப்பை நிகழ்தகவு அடிப்படையில் வெளிப்படுத்த முடியும். இதற்குப் பின்னணியில் ஹெய்சன்பர்க்கின் நிலையில்லாத் தத்துவம் வேலை செய்கிறது. நிலையில்லாத் தத்துவத்தின்படி, இயங்கும் நிலையில் இருக்கும் ஒரு துகளின் இருப்பினையோ அல்லது உந்தத்தையோ ஒரு சேர அறுதியிட்டுக் கூற முடியாது.

    அவ்வாறெனில் துகள்களில் இயக்கத்தை எவ்வாறு கணக்கிடுவது? இந்த சிக்கலைத் தீர்க்க, நிகழ்தகவின் கணம் என்ற சமன்பாட்டுத் தொடர்பு பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையான சமன்பாடுகளில் அலைச்சார்பு என்பது பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணம், அடிப்படை நிலையில் பருப்பொருளானது, அலையாகவும், துகளாகவும் இயங்கி வருவதைக் குவாண்டம் இயற்பியல் விதிகள் வெளிப்படுத்துகின்றன.  அலைச் சார்பு என்பது இயங்கும் ஒரு துகளின் நிலையும், நேரத்தையும் இணைத்துக்கொண்ட ஒரு பொதுச்சார்பாக வரையறுக்கப்படுகிறது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு  துகள் ஒன்றின் நிகழ்தகவுக் கணத்தை வரையறுக்க முடியும். ஒரு துகளின் நிகழ்தகவுக் கணம் என்பது அதன் அலைச்சார்பு மற்றும் அதன் கலப்பு இணை ஆகியவற்றின் பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவில் இருக்கும்

    இந்த நிகழ்வுகளில் கணத்தை அலைசார்புடன் இயல்பாக்கும் செயல்முறைக்குத் (normalization) தலைப்படும் போது பின்வருமாறு மதிப்புகள் கிடைக்கிறது.

    நிகழ்தகவின் தற்போதைய கணம் என்பது, குவாண்டம் இயற்பியலின் ஷ்ரோடிங்கர் சமன்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம் பெறப்படுகிறது.

    குவாண்டம் இயற்பியல் ஆனது ஹில்பர்ட் வெளியில் கட்டமைக்கப்படுகிறது. ஹில்பர்ட் வெளியானது முடிவுறாப் பரிமாணங்களைக் கொண்டது. இதன்மூலம் தொன்மை இயற்பியலில் உள்ள முப்பரிமாண வெளியைத் தாண்டிய அதிகமான பரிமாணங்களில், சமன்பாடுகளை எழுத இயலும். மேலும் இவ்வெளியானது துகள் மற்றும் அலை சார்ந்த சமன்பாடுகளை எழுதுவதற்கு அதிக சுதந்திரத்தைத் தருகிறது.

    குவாண்டம் இயற்பியலின் எதிர்பார்ப்பு மதிப்புகள்

    குவாண்டம் இயற்பியலைப் பொருத்தவரையில் ஒரு துகளின் இருப்பையும், அதன் நேரத்தையும் இணைத்து நிகழ்தகவின் கணம் என்ற சமன்பாடு ஒன்றிணைப்பது குறித்துப் பார்த்திருந்தோம். நிகழ்தகவின் கணம் என்பது ஒரு துகள் ஆனது ஒரு குறிப்பிட்ட வெளி அளவில் மற்றும் இருக்கக்கூடிய மொத்த நேரங்களின் அமைப்பில் பரவியிருக்கும் நிகழ்தகவின் மொத்த எண்மதிப்பை அளவிடுகிறது. அவ்வாறெனில் ஒரு துகளின் அடிப்படை அளவை நாம் அறுதியிட்டு கூற முடியாதா? என்ற ஒரு கேள்வி எழுப்பலாம்.

    அதற்கு பதிலாக எதிர்பார்ப்பின் எண்மதிப்பு என்ற மாபெரும் விடையானது கிடைக்கிறது. எதிர்பார்ப்பின் எண்மதிப்பு என்பது நிகழ்தகவுக் கணங்களை, நாம் எதிர்பார்க்கும் நிலைப்பள்ளியில் தொகுக்கக் கிடைக்கும் எண்மதிப்பைப் பெற்றிருக்கும். அவற்றை சமன்பாடு வாயிலாக கீழ்கண்டவாறு எழுதலாம்.

    மொத்த ஆற்றலின் எதிர்பார்த்தல் எண் மதிப்பானது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது. எண்மதிப்பானது நிலை ஆற்றலின் எதிர்பார்த்தல் மதிப்பிற்கும் இயக்க ஆற்றலின் எதிர்பார்த்தல் மதிப்பிற்கும் உண்டான கூட்டுத் தொகைக்குச் சமமாக இருக்கும்.

    உந்தத்தின் எதிர்பார்த்தல் மதிப்பானது பின்வருமாறு எழுதப்படுகிறது.

    எஃரன்பெஸ்ட் விதியானது திசை வேகத்தையும் உந்தத்தையும் ஒருங்கிணைப்பது போல், விசையையும் நிலையாற்றலையும் ஒருங்கிணைக்கிறது.

    இவற்றின் விளைவாக எண்ணற்ற சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியும். சரி தற்போது இந்த கேள்விக்கு வருவோம். திருமந்திரம் சொல்லும் உயிர் பற்றிய அளவீடு குறித்து குவாண்டம் இயற்பியல் எவ்வாறு தனது கணக்கீடுகளை முன்வைக்கிறது? என்று இயற்பியலின் தலைசிறந்த கோட்பாட்டின் மீது நாம் கேள்வி எழுப்பலாம்.

    தற்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அலைச்சார்பு குறித்த தகவல்களின் மூலமும், எதிர்பார்ப்பின் கணம் என்ற சமன்பாட்டின் மூலமும் மேலே உள்ள கேள்வியைப் பற்றி விரிவாக ஆய்வு செய்யலாம். இதன் அடிப்படையில் நாம் பார்க்கும்போது ஒரு துகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பது என்பதை ஆராய்வது என்பது அதன் நிகழ்தகவுக் கணங்களில் மதிப்பைப் பொறுத்து அமையும்.
    இதனடிப்படையில் ஒரு துகளின் அளவானது அளவிடப்பட வேண்டும் வேண்டுமென்றால் அந்த கணக்கீடானது நிகழ் தகவுகளின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும். மேலும் குவாண்டம் இயற்பியல் அடிப்படைத்துகள்களை அலைத்துகள் கோட்பாட்டின் மூலம் ஆய்வு செய்கிறது. இக் கோட்பாட்டின்படி அதிக உந்தம் கொண்ட துகள்கள், குறைந்த அலைநீளம் கொண்டதாகச் செயல்படும் . இதன் விளைவாகத் திருமூலர் பாடலில் சொல்லியுள்ள மிகக் குறுகிய அளவிலான துகள்களை ஆய்வு செய்ய முற்படுகையில் அவற்றின் உந்தமானது மிக அதிகமாக இருக்கும் என்பதைக் கண்டறிய முடியும்.

    அத்தகைய துகள்களை ஆய்வு செய்ய வேண்டுமானால் மிக அதிக திறன் கொண்ட துகள் முடுக்கிகள் தேவைப்படும். எனவே திருமூலர் பாடலில் சொல்லியுள்ள உயிரின் அளவு குறித்த மதிப்பை நிகழ்தகவு கணங்களின் மதிப்பீடுகளில், தொடர் மதிப்புகளில் ஒரு நிகழ்தகவு எண்மதிப்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  எலக்ட்ரானின் தொன்மை ஆரம் என்பதைக் கீழ்வரும் சமன்பாடு மூலம் கணக்கிடலாம்.

    இவ்வாறு பெறப்படும் எண் மதிப்பு 2.82 x 10^-15 மீட்டர் என்ற எண் மதிப்பைப் பெற்றிருக்கும். மேலும் நமது கணக்கின் மூலம் கிடைக்கும் எண் மதிப்பானது, எலக்ட்ரானின் அளவைவிட சற்றுச் சிறிதாகவே உள்ளது. இது எலக்ட்ரானின் அலைச்சார்பு மூலம் பெறப்படுகிறது.

    முடிவுரை

    எலக்ட்ரானின் குறுக்களவு நேரடியாக மதிப்பிடப்பட இயலாது. காரணம் குவாண்டம் அளவில் அடிப்படைத் துகள்களானவை ஒரே சமயத்தில் துகளாகவும் அலையாகவும் பரிணமிக்கும்.  இவ்வெண் மதிப்பானது எலக்ட்ரானின் அலைச்சார்பு மூலம், நிலையில்லாக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பெறப்படுகிறது. தொன்மை இயற்பியலைப் பொருத்தவரை அறுதியிட்டு கூறப்படும் எண்மதிப்புகள் குவாண்டம் இயற்பியலில் நிகழ்தகவுக் கணங்களாக மாற்றப்படுவதால் நம்மால் ஒரு துகளின் அளவை அறுதியிட்டுக் கூறமுடியாது. எனவே இப்பாடலில் குறித்துள்ள ஆவியின் அளவு என்பதை நிகழ்தகவுக் கணங்களில் தொகுப்பாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பாடல் அணுவின் அளவு என்பது குறித்து விளக்கியிருந்தாலும், கணக்கீடுகளின் படி இப்பாடல் சொல்ல விழையும் அணு என்னும் கருத்து அடிப்படைத்துகள்களையே குறிக்கிறது என்று யூகிக்க முடிகிறது. எனவேதான் ஆவி என்னும் சொல்லாடலை அணு என்னும் சொல்லாடலுடன் இணைத்துப் பயன்படுத்தியுள்ளோம். திருமூலருக்கு குவாண்டம் இயற்பியல் தெரிந்திருக்குமா என்ற கேள்விக்கு இக்கட்டுரை செல்லவில்லை. மாறாக அவர் சொல்லும் கருத்தை குவாண்டம் இயற்பியலில் ஏற்றி விளக்க முற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழின் தொன்மைத்தன்மைகளை நாம் நவீன இயற்பியலில் மூலம் ஆய்வு செய்யும்போது பல்வேறு தகவல்கள் புரிய வருகிறது, என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இது போன்ற பல்வேறு கணக்கீடுகள் தமிழில் பல்வேறு நூல்களில் பொதிந்திருக்கும். அவற்றை ஆராய வேண்டியது ஆய்வாளர்களின் கடமை.

    ஆதாரங்கள்

    [1] திருமூலர், திருமந்திரம், சீவன், பா.2011
    [2] திருமூலர், திருமந்திரம், பசு இலக்கணம், பா.1
    [3] Kshirsagar, S. V., Singh, B., & Fulari, S. P. (2009). Comparative study of human and animal hair in relation with diameter and medullary index. Indian Journal of Forensic Medicine and Pathology, 2(3), 105-8.
    [4] Hudson, J. J., Kara, D. M., Smallman, I. J., Sauer, B. E., Tarbutt, M. R., & Hinds, E. A. (2011). Improved measurement of the shape of the electron. Nature, 473 (7348) 493.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இந்த ஆய்வுக் கட்டுரையானது, திருமந்திரப் பாடல் வரிகளை குவாண்டம் அறிவியலுடன் ஒப்பிட்டு விவரிக்கிறது. சில ஆய்வகச் சோதனைகளும், உசாத்துணைகளும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துகளை ஆய்வக சோதனைகள் மூலம் வெளிக்கொணரும் முயற்சிகள் பரவலாக மேலெழுவதற்கு இக்கட்டுரை தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.


     

    Share
  • (Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    (Peer Reviewed) உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப் பேராசிரியர்-தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி

    உளவியல் நோக்கில் ‘அவன்-அது = அவள்’

    மனித மனமே இலக்கியத்தின் வற்றாத ஊற்றுக்கண்ணாகும். மனித மனம் நுண்மையான, விசித்திரமான போக்கினைக் கொண்டது. விலங்குகளிலிருந்து மனிதன் மாறுபட்டுச் சிந்திக்க, செயலாற்றுவதற்கு அடிப்படையான காரணம் மனவுணர்ச்சிகளாகும்.

    ‘மனித உள்ளத்தின் உணர்வே (Human psyche) எல்லா அறிவியல்களுக்கும், கலைகளுக்கும் கருவறையாக விளங்குவது. எனவே அத்தகைய உள்ளத்தின் வழிமுறைகளை ஆராய்கிற உளவியல், இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிக்கும் ஏற்புடையதாக இருக்க முடியும்’ என்று உளவியல் அறிஞரான யுங் குறிப்பிடுகிறார். இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறையைப் பின்பற்றுவதால் படைப்பாளரின் மனநிலை, கதைமாந்தர்களின் மனநிலை, கதை தோன்றிய சூழல், சமூக இயல்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம். உளவியலாளர் மனித மனத்தை நனவு மனம், நனவிலி மனம் என இரண்டாகப் பிரிப்பர். மனித மனத்தின் நனவுநிலைக்கு அப்பாற்பட்டவையே நனவிலி மனம். பல அனுபவங்களை மனிதன் உள்வாங்கிக் கொள்ள அவை நாளடைவில் மறந்து போகின்றன. அந்த மறந்து போன எண்ணங்கள், உள்ளத்திலேயே பதிந்து விடும். இத்தகைய உள்ளத்தின் எண்ணங்களே நனவிலியாக உருவெடுக்கின்றன.

    பொதுவாக ஆண், பெண் மனங்களின் சிக்கல்களை அறிந்துகொள்ள இயலும். ஆனால் ஆண்,பெண் என்ற இருநிலையையும் கடந்து திருநங்கையாக வாழ்பவரின் மனநிலையை அவன்-அது = அவள் என்னும் நாவலின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    அவன் – அது = அவள்

    இந்நாவல் உடலளவில் ஆணாகவும், மனதளவில் பெண்ணாகவும்  மாற்றம் பெற்ற திருநங்கைகளின் அவல நிலையை எடுத்துரைக்கிறது. சமூகத்தில் பிறரைப் போல இயல்பான குடும்ப வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு வாழ்பவர்களே திருநங்கைகள். குடும்பத்தினரின் நிராகரிப்பு, சமூகத்தினரின் புறக்கணிப்பு இவற்றைக் கடந்து  தன்னிலையை அறிந்துகொள்ள இயலாமல் தவிக்கும் கோபி என்ற கோமதியின் மனப் போராட்டத்தை நுண்மையாக இந்நாவலில் எடுத்தாண்டுள்ளார் நாவாலாசிரியர் யெஸ்.பாலபாரதி.

    குடும்பத்தின் கடைக்குட்டியாக, ஆறாவதாகப் பிறந்த கோபி பையனாக இருப்பினும் அத்தையரின் அணைப்பில் பெண்களுக்கான அலங்காரங்கள் புனையப்பட்டுச் சிறுமிகளுடன் பல்லாங்குழி, பாண்டி விளையாடி வளர்ந்தான். ஐந்தாம் வகுப்பு முடிந்தவுடன் முடி வெட்டப்பட்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க, தன்னுலகம் மாற்றப்பட்டதாக ஆண் என்னும் உருவம் விருப்பமில்லாமல் தன் மேல் திணிக்கப்பட்டதாக உணர்ந்தான். ஆண் எனும் புதிய உலகத்தில் சரவணனின் நட்புடன் பதினொன்றாம் வகுப்பு வரை கல்வி கற்க, மனம் மட்டும் பெண்களின் உடையிலேயே விருப்பம் கொண்டது. வீட்டில் யாருமில்லாத வேளையில் சகோதரியின் பாவாடை, தாவணி அணிந்து கண்ணாடி முன் ஆடி, பாடிய கோபியைக் கண்ட சங்கரபாண்டி, அவமானமாகக் கருதி அவனை அடித்து நையப் புடைத்தான்.

    மனிதனின் மனம் பலவீனமானது. அடிமனத்தை id என்னும் தூண்டல்,  Ego எனும் ஆணவம், Super Ego எனும் மனச்சான்று என மூவகையாகப் பிரிப்பர். இம்மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

    ‘id என்பது குழந்தை மனம் போன்றது. அது விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. ஈட்டின் விருப்பங்களை ஈகோ பூர்த்தி செய்கின்றது. ஆனால் Super Ego-வின் அனுமதி பெற்று தான் எதையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உள்ளது’ என்பதற்கேற்ப கோபியின் மனம், பெண் உருவத்தின் மீது கொண்ட வேட்கையால் பெண்ணைப் போலவே உடையணிந்து மகிழ்கிறது. அதாவது மனச்சான்றின் அனுமதியோடு தூண்டல் ஏற்பட மனம் தான் விரும்பியதை அடைவதை அறிய முடிகிறது.

    ஏக்கம்

    மனித மனத்தில் வித்தாகத் தோன்றிய ஆசை பல நாட்களாகியும் நிறைவேறாமல் உறுத்திக்கொண்டிருக்க, அது ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு பெண்ணைப் போன்ற உறவுமுறைகளுடன் இயல்பான குடும்ப வாழ்க்கையைத் திருநங்கை வாழவியலாததால் ஏக்கம் உருவெடுக்கிறது. அவ்வேக்கத்தை நிறைவு செய்ய திருநங்கைகள் தங்களுக்குள்ளாகவே மகள், சகோதரி உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

    ‘நம்பள மாதிரி பொட்டைக்கு இன்னொரு பொட்டைதான் ஆதரவு. ஒரு பொட்ட இன்னொருத்தியைத் தத்து எடுத்துக்கிட்டு அவள மகளா சொந்தம் கொண்டாடுறது தான் மொற’ என்பதில் குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படும் திருநங்கை உறவுகளுக்காக ஏங்குவது தெளிவாகிறது. சுசீலா-கோமதியின் சகோதரி உறவு, தனத்தின் சேலா எனும் மகள் உறவுகளின் வாயிலாகத் திருநங்கைகள் பெண் உறவுகளிலேயே திருப்தியடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை அறிய முடிகிறது.

    மனப் போராட்டம் :

    ‘ஒரே நேரத்தில் நிறைவுற இயலாததும், ஒன்றற்கொன்று தனித் தனியானதுமான செயல்நோக்கமும் ஊக்கமும் உள்ளத்தில் இருப்பதனால் விளைவதே உள்ளப் போராட்டம்’ என்பதற்கேற்ப வளரிளம் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களால் கோபி மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறான். குடும்பமும் சமூகமும் தன்னை ஆணாகப் பார்க்க, தன் மனம் அதை ஏற்க முடியாமல் தவிக்கிறதே! பெண்ணாக நினைப்பதற்குக் காரணம் என்ன? தான் யார்? என்ற வினாவிற்கு விடை தெரியாமல் கோபியின் மனம் உள்ளப் போராட்டத்தில் சிக்குகிறது. வீட்டினர் கோபியின் உடை மாற்றத்துக்குக் காரணம் பெண்பேய் பிடித்திருப்பது எனக் கருதி அதையோட்டுவதற்கான பூசையை மேற்கொண்டனர்.

    ‘உண்மையில் தான் யார்? பெண் எனில் ஏன் அவர்களுக்கான உடல் இல்லாது போனது? ஆண் எனில் உடல்மொழியும், அந்த உணர்வுகளும் எப்படி வந்து சேர்ந்தது? கேள்விகள்… கேள்விகள்… கேள்விகள்… கண்களை இருட்டிக்கொண்டு வந்தது… விசும்பலற்ற அழுகை அது. ஏன் அழுகிறோம் என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான்’ என கோபியின் மனம் சிந்திப்பதில் தன்னை அடையாளம் காண முடியாத மனப் போராட்டத்தை உணர முடிகிறது. பேயோட்டுபவராவது தன்னை யார் எனத் தெரிவிப்பாரா? என்று ஏங்கும் மனம், சிகப்பு பாவாடை, மஞ்சள் தாவணி, வளையல்கள் எனத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது. திருநங்கைகளின் குடியிருப்புக்கு அருகே சென்ற கோபி, அவர்கள் ஆணுடையில் இருப்பினும் சராசரி ஆணாய்ச் செயல்படாததை உணர்ந்து பேசி, தன்னிலையை அறிந்துகொண்டான்.

    ‘நீ ஆம்பளையுமில்ல… பொம்பளையுமில்ல… ரெண்டும் கெட்டான்…

    கோபி மௌனமாக இருந்தான்.

    வெளங்கலையா ஆம்பளையா பொறந்துட்ட  பொம்பளைங்க தான்.. நம்மள அலின்னு சொல்றாங்க.. அடிக்கிறாங்க.’ என்பதன் வாயிலாக தன்னையறிந்து தன்னைப் போன்றவர்களும் உலகில் இருப்பதையறிந்து மகிழ்கிறான். திருநங்கைகளின் வீட்டில் பெண்ணுடையை அணிந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டு தன் வீட்டில் ஆண்மகனாக வேடமிட்டு வாழத் தொடங்குகிறான்.

    மனவடக்கமும் ஒடுக்கமும்:

    மனிதர்கள் மனத்தில் பல சோகங்கள் நிறைந்திருப்பினும் அவற்றை வெளிக்காட்டாமல் மனத்திற்குள் அடக்குவதும் ஒடுக்குவதும் உண்டு.

    ‘தொல்லை தரும் உள்துடிப்புகளையும் நினைவுகளையும் திட்டமிட்டு உணர்ந்து கவனத்தில்; களத்தினின்று அகற்றுவதை அடக்குதல் என்றும், அவற்றை முயற்சி இன்றி இயல்பாக நனவுநிலையினின்று நீக்கப்படுவதை ஒடுக்குதல்’ என்றும் பெசன்ட் கிரீப்பர் ராஜ் குறிப்பிடுகிறார்.

    பெண் என்ற உள்துடிப்பைச் சமூகத்திற்காக, கவனமாக மறைத்த கோபி, கல்லூரி விடுதியிலிருந்து வீட்டினர் அறியாமல் தன்னை ஒத்தவர்களைச் சந்தித்து மகிழ, கூத்தாண்டவர் கோயிலுக்குச் சென்றான். பயணத்தில் கோபியின் நடத்தையில் மாற்றத்தை அறிந்த மூன்று ஆண்கள் பாலியல் வன்புணர்ச்சி புரிய, அவன் மயக்கமடைந்தான். திருநங்கை தனம் மருத்துவமனையில் சேர்த்து, தன்னைக் காப்பாற்றியதை அறிந்ததும் பெண்கள் மட்டுமல்ல, தன்னைப் போன்றவர்களும் இப்பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுவது வெளியுலகிற்கு ஏன் தெரிவதில்லை?

    ‘ஏனிந்த இழிபிறப்பு? பிறப்பு என்பது விரும்பி ஏற்க முடியாததாக இருக்க.. இப்படி பிறந்ததற்கு நானோ என்னைப் போன்றவர்களோ எப்படிப் பொறுப்பேற்க முடியும்? பிறகு ஏன் என்னைப் போன்றவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சட்டம் எல்லாருக்கும் பொது தானே… சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் என்ன?’

    என்னும் அகத்தனிமொழியின் வாயிலாக சமூகத்தினரால் புறக்கணிக்கப்படும் கிருநங்கையின் வலியை உணர முடிகிறது. பள்ளி, கல்லூரிக்குச் சென்று கல்வி கற்க முடியாத நிலை, இரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்வதால் சமூகத்தினர் ஏற்படுத்தும் அவமானம், உணவகத்தில் காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் உணவு, திருநங்கையினரையே தவறாக உரைத்து வன்முறைக்கு உட்படுத்தும் காவல்துறை என வாழ்வின் பல இடங்களில் இப்பிறப்பின் சாபத்தை அனுபவிப்பதாகக் குறிப்பிடுவதில் மனவடக்கத்தையும் ஒடுக்கத்தையும்  காண முடிகிறது.

    குற்றவுணர்ச்சி:

    மனித மனம் கடந்த கால நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து தவறுக்கான காரணங்களைத் தீவிரமாக அலசுவதுண்டு. நிகழ்காலப் பிரச்சனையின் வேரைத் தேடும் மனிதனின் மனம் செய்த தவற்றினைச் சுட்டிக் காட்டுகிறது. அத்தருணத்தில் தோன்றும் உணர்ச்சியே குற்றவுணர்ச்சி. சூழ்நிலை மனிதனை முடிவெடுக்கத் தூண்டும்  நிலையில் அவன் சிந்தித்துச் சரியான முடிவை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில் துன்பமடைவது உறுதி என்பதைப் படைப்பாளரின் அவன்- அது அவள் புதினம் எடுத்துரைக்கிறது.

    காவல் துறையினரின் வன்முறையைத் தாங்கி, அவமானப்பட்டு மும்பைக்கு தனம், சுசீலாவுடன் பயணம் செய்ய முற்பட்ட கோமதி, தொடர்வண்டியில் பயணச்சீட்டு  பெறாமல் பயணிக்கிறோம் என்பதை அறிந்து பயந்தாள். ஒரு வயதான பெண்மணி திருநங்கை எனப் பாலியல் ரீதியாக இழிவாகப் பேச, அவமானப்பட்டாள்.

    ‘ச்சே.. என்ன வாழ்க்கை இது? ஒழுங்கா ஹாஸ்டல்லயே இருந்திருக்கலாம். சுயத்தோட வாழலாம்னு இவங்க கூட சேர்ந்த ஒரு வாரத்துக்குள்ள எத்தனை பிரச்சனைகளைச் சந்திச்சாச்சு… நிம்மதியா வாழக்கூட வேணாம்.. மனுசனாக்கூட வாழவிட மாட்டாங்க போலிருக்கே… வீட்டில் இருக்குற வரைக்கும்தான் உனக்குப் பாதுகாப்பு. உன் பாதுகாப்பு ஆயுசுக்கும் வேணும்னா… ஒழுங்கா படிச்சு பெரிய ஆளா வரணும் அப்பத்தான் நல்லது என்ற சங்கரண்ணனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைத்தது. விசும்பலாய் வெளிப்பட்டது.’

    வீட்டை விட்டு வெளியேறியதும் பட்ட துன்பங்கள், அவமானங்களால் கோமதியின் மனம் அகஸ்டின் சங்கரபாண்டியனின் அறிவுரைகளை மீறியதால் இந்நிலைக்கு ஆளானோமா? எனக்  குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பதை அறிய முடிகிறது.

    ஏமாற்றமும் தவிப்பும்:

    கோமதி, தனம், சுசீலா, சீத்தல், சுந்தரி போன்றவர்களின் வாயிலாகச் சமூகத்தில் உள்ள திருநங்கைகளின் வலியை நாவலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். கோமதி ஆணுறுப்பை நீக்கிய பிறகு இயல்பான பெண்ணின் வாழ்க்கையை ஒத்து, இல்லற வாழ்க்கையை வாழலாம் என எண்ணினாள். அன்பரசனின் மீது கொண்ட உண்மையான காதலால், நம்பிக்கையால் தனம், சுசீலா, சீத்தல் போன்ற உறவுகளின் அறிவுரையைக் கேட்காமல் அவனைக் கைப்பிடித்தாள். ஒரு வருடத்திற்கு பின் தோள்பட்டையின் இருபக்கங்களிலும் விளக்கேற்றும் அளவிற்கு இளைத்து கண்களில் பரிதவிப்புடன் நிற்கும் கோமதியைக் கண்ட சுசீலா பாசத்தால் தவித்து வினவினாள்.

    ‘சுசீலாவின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. வெளியில் சொல்ல முடியாத சோகம், பல நாட்கள் உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி இருந்தாகிவிட்டது. பல நாட்கள் மனசு சரியில்லாமல் போனாலும் அழுகை வராது. கோபமும் ஆத்திரமும் வெளிவருவதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்’ என்பதில் மனத்தின் வலி வெளிப்படுகிறது. கோமதி குடும்பத்தை விட்டு வெளியேறியபின் தாயாக, தமக்கையாக இருந்த தனம், சுசீலாவின் அன்பை அறிந்தவளாக ஏமாற்றத்தில் தவித்தாள். சுசீலா அவள் நிலை அறிந்து உணவு வாங்கித் தந்தாள். பசி நீங்கிய பின் கோமதி, அன்பரசு குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும் உடல் விருப்பத்தினை மட்டும் தீர்த்துக் கொள்வதாகவும் கடைகேட்டு பணம் சம்பாதித்து வருமாறு வற்புறுத்துவதாகவும் உரைத்தாள். கோமதி ஏமாந்ததை அறிந்த சுசீலா, மனம் நொந்தாள்.

    ‘இப்போது கண்ணைக் கசக்கிட்டு நிற்கும்போது மனசு வலிக்கிறது. வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத வலி. ஆணின் அடையாளத்தை இழக்கும் தருணத்தைவிட இந்த வலிக்குச்  சக்தி அதிகம். எதிர்பார்ப்பு, கனவுகள் என்ற எல்லா நம்பிக்கையையும் குலைக்கும் போது இப்படித்தான் வலியெடுக்கும். அதை உணரத்தான் முடியுமே தவிர விளக்கிச் சொல்லிவிட முடியாது’ என்பதில் வலியின் வேதனை புலனாகின்றது. குடும்பத்தினர் இழிபிறப்பாகக் கருதி, திருநங்கையினரை நிராகரிக்க, சமூகத்தினர் புறக்கணிக்க அன்பரசனின் காதல், கோமதிக்குப் பற்றுக்கோலாக இருந்தது. உடல்உறுப்பை நீக்கிப் பெண்ணாக உருமாறி, இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தவள், கணவனின் போக்கால் ஏமாற்றத்துடன் வேதனையடைந்தாள். முதலில் கணவனின் சந்தேகப் புத்தியைக் கண்டு தன்னையும் பெண்ணாகக் கருதிச் சந்தேகப்படுகிறானே என மகிழ்ச்சியுற்றாள். நாளடைவில் வன்முறை, வன்புணர்ச்சி, சந்தேகப் புத்தி எனக் கொடுமைப்படுத்தினும் கோமதி அவனை விட்டுப் பிரிய மறுக்கிறாள்.

    சுயம் தேடும் மனம்:

    பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகவும், பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவிலேயே முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்ற கோபி, மதுரையில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தான். சக மாணவர்களின், ஆசிரியர்களின் ஏளனப் பேச்சு, தவறான செய்கைகள் மனத்தைத் துன்புறுத்த, வகுப்பிற்கு வராமல் நண்பன் சரவணனின் உதவியுடன் விடுதியில் இருந்தவாறே படிக்க முற்பட்டான்.

    மனம், உடல்ரீதியாக சில சிக்கல்களை அனுபவிப்பினும் கோபி கற்பதை நிறுத்தவில்லை. வாழ்வின் உயர்வுக்கு, சிறந்த வேலை பெறுவதற்குக் கல்வியின் இன்றிமையாமையை உணர்ந்து செயல்பட்டான். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கோமதி, தன் மனவிருப்பத்திற்காக இயல்பாக வாழ ஒரு வாய்ப்பு என்ற நிலையில் திருநங்கை தனத்துடன் வாழ முற்படுகிறாள். எனினும் திருநங்கைகள் கடைக்குச் சென்று பிச்சை எடுப்பதற்கு அழைக்க, அவள் பணிக்குச் செல்வதாக உரைத்து மறுக்கிறாள். பிறரின் ஏளனச் சிரிப்பைக் கண்டதும் அழுதவளாக ஆதரவு தேடி தனத்தை நாடுகிறாள்.

    ‘பிச்ச எடுக்கத்தான் போகணும்னு அவங்க எல்லோரும் சொல்றாங்க. நா வேலைக்குப் போறேன்னு சொன்னதுக்கு சேர்ந்துக்கிட்டு சிரிக்கிறாங்க… எனக்கு அது புடிக்கலம்மா… நா வேலைக்கு போறேனேம்மா’ என்ற கோமதியின் சொற்களில் தன்மானம் வெளிப்படுகிறது. ஆனால் சமூகம், திருநங்கைகளுக்கு எத்தகைய வேலையும் தராமல் நிராகரிக்கும் என்ற நிதர்சனமான உண்மையை அவளே அனுபவத்தின் வாயிலாக உணரட்டும் எனத் தனம் எண்ணுகிறாள். தாய் பிச்சை எடுக்கச் செல்ல வேண்டாம் என்றுரைத்ததும் மகிழ்கிறாள்.

    அன்பரசுடனான காதலுக்காக உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்கி, தாயின் அறிவுரையை ஏற்காமல் எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டாள் கணவனுக்கு வேலையில்லாத தருணத்தில் கோமதி பிச்சையெடுக்கச் செல்வதில் தன்மானம் தகர்ந்து அன்பு மேலோங்குகிறது. எனினும் கணவன் தொடர்ந்து பிச்சையெடுக்க வற்புறுத்த, சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

    விரக்தி:

    ஒருவரது எண்ணங்கள் ஈடேறாத போதும், தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் போதும் மனத்தில் சலிப்பும் வெறுப்பும் உண்டாகின்றன. இத்தகைய மனநிலையே விரக்தியாகும்.

    ‘பொட்டயாப் பொறந்ததே தப்பு. அதுலையும் கல்யாணம் காட்சின்னு ஆசப்படுறது அதவிட தப்பு. பார்க்கலாம். இன்னும் எத்தனை காலத்துக்குன்னு .முடியிற வரைக்கும் சமாளிப்பேன். என்னைக்கு முடியாமப் போகுதோ. அன்னிக்கு ஏதாவது டிரெயினுக்கு முன்னால பாய்ஞ்சுடுவேன்..’ என்பதில் விரக்தியின் உச்சம் தற்கொலைக்குத் தள்ளும் என்ற உண்மை புலனாகின்றது.

    தொகுப்புரை:

    ஒரு புதினத்தின் முதன்மையான பாத்திரச் சித்திரிப்பில் மனித மனங்களின் வேட்கைகள், உயர்வு தாழ்வுகள், இலட்சியங்கள், நடத்தைகள் இடம் பெற்றிருப்பதில் உளவியலே வெளிப்படுகிறது. தான் யார்? என்பதறியாமல் துடிக்கும் இயலாமை, பாலியல் வன்புணர்ச்சியால் உடலும் மனமும் தளர்ந்து போதல், பிறப்பின் மீதான மனஒடுக்கம், குற்றவுணர்ச்சி, உறவுக்காக ஏங்கித் தவித்தல், குடும்ப அமைப்பை விரும்பி ஏமாறுதல், பெண் என்ற அங்கீகாரத்தை விரும்புதல், உயிரைப் பணயம் வைத்து ஆணுறுப்பை நீக்குதல், சமூகத்தினரின் இழிபேச்சிற்கு ஆளாகுதல், இல்லற வாழ்விற்காக தன்மானத்தைத் தகர்த்தல், வேதனையின் உச்சத்தில் தற்கொலையை நாடும் மனம் என இப்புதினம் திருநங்கைகளின் மனவுணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. சமூகத்தினரின் கேலி, ஏளனப் பேச்சிற்கு உள்ளாக்கப்பட்டு அவமானங்களையும், அநீதிகளையும் சந்தித்து மனம் துவண்டு வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம் என்ற முதன்மையான கருத்தை இப்புதினம் புலப்படுத்துகிறது.

     

    பார்வை நூல்கள்:

    1. அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
    2. அவன்-அது ஸ்ரீ அவள்- யெஸ்.பாலபாரதி;
    3. சங்க இலக்கியத்தில் உளவியல் – து.சிவராஜ்
    4. தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள் – முனைவர்.மு.அருணாசலம்
    5. தமிழும் பிற துறைகளும் – முனைவர்.உ.கருப்பத்தேவன்
    6. திறனாய்வுக் கலை – தி.சு.நடராசன்
    7. பெசன்ட் கிரீப்பர் ராஜ் – பிறழ்நிலை உளவியல்
    _________________________________________________________________________________________
    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
    ஆய்வாளர் இக்கட்டுரையில் திருநங்கைகளின் மனப் போராட்டத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். கோபி என்ற திருநங்கையின் வாழ்வியலை மையமாகக் கொண்டது இந்நாவல். ஒருவர் தன்னை மாற்றுப் பாலினமாக உணர்ந்து கொள்வதும்  அங்கீகரிக்க மறுக்கும் சமூக நிலையும் இக்கட்டுரையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. வாழ்தல் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் சமூகக் கட்டமைப்புகள் பெரும் தடையாகச் செயல்படுவதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவது சிறப்பு.
    _________________________________________________________________________________________

     

    Share
  • (Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

    (Peer Reviewed) தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

    நீ.அகிலாண்டேஸ்வரி
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக் கழகம்
    தஞ்சாவூர்- 10
    —————————————————————————————————————————————————-

    தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகள்

    கதைப்பாடல்கள் வாய்மொழி வரலாறு மட்டுமன்று வாழ்க்கைப் பொருளின் வரலாறு என்பது இன்று நாட்டுப்புறவியலாளர்கள் மட்டும் அல்ல வரலாற்று ஆசிரியர்களாளும் முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற வகையில் இவை வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைகின்றன. அவ்வகையில் சிவ விவேகானந்தனின் தம்பிமார் கதைப்பாடலில் வரலாற்றுப் பதிவுகளை ஆய்கிறது இக்கட்டுரை.

    கதைப்பாடலின் தோற்றம்

    பெரும்பாலும் கதைப்பாடல்கள் யாவும் பாரம்பரியமாக அந்நாட்டு மக்களால் வாய்மொழியாகப் பாடப்பட்டு வரும் இயல்பு உடையன. இதன் அடிப்படையில் தம்பிமார் கதைப்பாடலும் கோவில்களில் வில்லுப்பாட்டாகப் பாடப்பட்டு வருகிறது. வரலாற்றுக் கதைப்பாடல்கள் பெரும்பாலும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக எழும் போர்கள் பற்றி அமைவனவாகும்.  இதனடிப்படையில் தம்பிமார் கதை திருவிதாங்கூர் வரலாறு தொடர்பான ஒரு போர் கதைப்பாடலாகும்.

    வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம் சங்க காலத்தில் 13 மண்டலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவற்றுள் பூழி, குடம், குட்டம், வேண் என்ற நான்கு மண்டலங்களும் அரபிக்கடலை ஒட்டி வடக்கிலிருந்து தெற்காக அமைந்து இருந்தன. குட்ட நாட்டிற்குத் தெற்கில் உள்ள வேணாடு குமரிமுனை வரை பரவிக்கிடந்த்து. இந்த வேணாட்டை சங்க காலத்தில் வேள் மன்னர்கள்(குறுநில) ஆட்சி செய்து வந்துள்ளனர்.அவ்வாறு வேள் மன்னர்கள் ஆட்சி செய்த வேணாடு இன்றைய திருவிதாங்கூர் பகுதியாகும்.“ஆய்வேள், எவ்விவேள், பேகன்வேள், வேண்மான், பாரிவேள், நன்னன் முதலியோர் வேள் மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்’’.

    அரசு உருவாக்கமும் மன்னராட்சியும்

    மன்னராட்சி முறை என்பது உலகம் முழுவதும் வாரிசு முறையே இருந்து வந்துள்ளது. மேலும் நாடாலும் உரிமை மன்னனுக்குப் பிறகு வாரிசுகளுக்கும் வலிமையைக் கொண்டு யார் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களும் நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். இவை உலக நாடுகளில் நடந்து உள்ளன. சேர நாட்டில் வாரிசு உரிமை தாய்வழிச் சார்ந்தது எனவும், சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் தந்தை வழிச் சார்ந்தது எனவும் கருத்து நிலவுகிறது. ஆனால் தொல்காப்பியர் ‘தாயத்தின் அடையாத் தாயம்’1 என்று உலகம் முழுவதுக்குமான ஒரு பொதுவான வழக்கத்தைக் குறிப்பிட்டு உள்ளார். இதன் வழியாக அக்காலச் சமூகம் தந்தை வழிச் சமூகம் என்பது தெளிவாகிறது.

    தொல்காப்பியம்

    சோழர், பாண்டியர் மரபினரில் வாரிசு முறை பின்பற்றப் பட்டது. மேலும் இதிகாச புராணங்களில் பட்டத்து அரசியின் மூத்த மகனுக்கே என்கிறது. சோழர் பாண்டியர் மரபினில் சில சமயங்களில் மூத்த சகோதரனுக்குப் பின்னர் இளையவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற செய்திகளும் சங்க இலக்கியத்தில் உள்ளது.

                      “பரந்துபடு நல்லிசை எய்தி மற்று

                       உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்

                       ஒழித்த மாயம் அவர்க்குரி தன்றெ …’’ 2

    என்ற புறநானூற்றுப் பாடல் அரசுரிமை தந்தைக்குப் பின் மகனுக்கே என்பதை உணர்த்துகிறது. மேலும் மன்னர்கள் மரபுகளையும், வழக்காறுகளையும் மதித்தனர். முறைமுதற்கட்டில் என்பது மரபு. தந்தைவழி தாய முறையில் மூத்த மகனுக்கு அரசு உரிமை கிட்டியது என்பதை

                       “மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

                       பால்தர வந்த பழவிரல் தாயம்….’’ 3

    என்ற புறநானூற்றுப் பாடல் வழியாக அரசுரிமை தலைமுறை, தலைமுறையாக அரசின் மூத்த மகனுக்கு வந்துகொண்டிருந்தது என்பதை அறிய முடிகிறது.

    சங்க கால ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆட்சியாக திருவாங்கோட்டு மன்னர் ஆட்சி முறை இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இங்கு தந்தை வழிச்சமூகமோ அல்லது தாய் வழிச்சமூகமோ ஆட்சி நடத்தவில்லை. அதற்கு மாறாக மருமக்கள் வழி தாயத்தின் படி ஆட்சி நடந்துள்ளது. என்பதனைத் தம்பிமார் கதைப்பாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதாவது ராம வர்மாவிற்கு அரசாளக்கூடிய தகுதிகளோடு இரு மகன்கள் இருந்தும் அவர் தனது மருமகனான மார்த்தாண்ட வர்மாவிற்கு அரசுரிமையை வழங்குகிறார். இதனை,

                      “நானிலிருந்து பொறுத்தது போல் நலமாக நீபொறுத்து

                       முக்காலும் நீ பொறுத்து முடிசூட்டி நீ ஆண்டிடுவாய்

                       செங்கோலும் முத்திரையும் திருமுடியும் தான் கொடுத்து

                       திருக் கையினால் கொடுக்க திருவயது குறைந்திடுமாம்…’’4

    என்ற கதைப்பாடல் வரிகள் மூலமாக ராமவர்மா நாட்டை எந்தக் குறையும் இல்லாமல் ஆள வேண்டும் என்று மார்த்தாண்ட வர்மாவிடம் கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல், நாட்டை ஆள்வதற்கு உரிய செங்கோல், ராஜமுத்திரைமோதிரம் மற்றும் ராஜகிரீடம் ஆகியவற்றை தன் மருமகனிடம் ராமவர்மா அவர்கள் வழங்கினார் என்பதை அறிய முடிகிறது.

    மேலும் பொதுவாக மன்னராட்சி முறையில் அரசன் இறந்து விட்ட பிறகு அவனுடைய ஆண்வாரிசு அரசனாக்கப் படுவான். “இந்த வாரிசு உரிமையில் பொது மக்களின் பங்கு எதுவும் இருக்காது. புதிதாக வாரிசு உரிமை ஏற்ற அரசின் நேர்ப்பொறுப்பில் முன்பு இருந்த அரசின் கீழ் உள்ள நிலங்களும், ஊர்களும் அப்படியே தொடர்கின்றன’’5 ஆனால் தம்பிமார் கதைப்பாடலில் அரசனுக்குப்பிறகு அவனுடைய மருமகன் அரசுரிமை ஏற்று ஆட்சி நடத்தினான் என்பதை,

                       “ஆண்டிருக்கும் நாளையிலே அழகு முடிமன்னவரும்

                       ஆறிலொரு கடமை தாண்டி அசையாத மணியும்கட்டி

                       செங்கோலும் முத்திரையும் தேசமதில் சிறந்திலங்க

                       ஒன்றும் குறைவராமல் உலகமதை ஆண்டிருந்தார்….’’ 6

    என மார்த்தாண்டவர்மா ஆட்சிப் பொறுப்பினை  ஏற்ற பின் மக்களின் வருவாயில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வரியாக வசூலித்தார். மேலும் செங்கோல் வலையாத நிலையில் ஆட்சி புரிந்தார் என்பதை இக்கதைபாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

    மணமுறை

                       “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                       ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’’ 7

    என்கிறார். ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தனர். பின் பொய்யும், குற்றமும் மிகுந்த பின்பு இவனுடைய மனைவி இவள் என்று அடையாளப்படுத்தும் விதமாகத் தோன்றியதே திருமணம் என்கிறார் தொல்காப்பியர். மேலும் குறுந்தொகை தலைவி தலைவனுடன் தான் பழகியதற்குக் குருகைச் சாட்சியாக்குகிறாள்.

                       “யாரும் இல்லைத் தானே கள்வன்

                       தானது பொய்ப்பின் யானெவன் செய்தோ

                       ——————————————————-

                       ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

                       குருகும் உண்டு தான் மணந்த ஒன்றே…’’8

    என்றதன் வழி ஊரார் அறியாமல் நடந்த களவு வாழ்வில் ஆடவனிடம் பொய் தோன்றுமாயின் சாட்சி இல்லை என்ற நிலை அறியலாகிறது. இக்காரணத்தினால் திருமணம் தோன்றியது எனலாம். இதனையே,

                       “தந்தையும் கொடா அன் ஆயின் – வந்தோர்

                       ———————————————————-

                       ———————————————————-

                       படை மயங்கி ஆரிடை நெடுநல் ஊரே… ’’9 

    மணமகள் வீட்டில் பெண் கேட்டு ஊரரிய திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இன்றளவிலும் இருந்து வருவதைக் காணலாம். ஆனால் வேணாட்டின் திருமண முறைகள் சற்று வேறுபட்டு இருந்தன. யாதெனில் திருவாங்கோட்டு மன்னர்கள் யாரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களுடைய வாரிசுகளுக்கு அவருடைய நாட்டில் ஆட்சி செய்யும் உரிமை இல்லாத காரணத்தால் மன்னர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல பெண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். மன்னர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரகசிய மனைவிகளை வைத்திருந்தனர். ஆனால் மன்னர் ராமவர்மா மட்டுமே ஊரரிய கணிகையர்குலப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறார். அதன் பின் அவருக்கு மூன்று பிள்ளைகளும் பிறக்கின்றன.

    பொதுவாக இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கும், அவளுடைய வாரிசுகளுக்கும் சொத்துரிமைகள், இல்லறக் கடமைகள் என அனைத்து சமூக செயல்பாட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஆனால் ராமவர்மா அவர்கள் தன்னுடைய மனைவிக்கும், வாரிசுகளுக்கும் அரசுரிமையைத் தவிர்த்து மற்ற அனைத்து உரிமைகளையும் வழங்கியிருந்தார். இதனை,

                       “நாலாறு முட்டுச்  சந்தையிலே நல்லமுதல் எடுப்புகளும்

                       கொடுப்பக்குழி பேட்டையிலே கூண்ட முதல் எடுப்புகளும்

                       கொடுத்தாரே மன்னவரும் கூண்ட….’’10

    போரும், போருக்கான காரணங்களும்

    மூன்று வேந்த மரபினரும் தங்களிடம் மூன்றினைத் தவறாது வைத்திருந்தனர். அவை குடை, முடி, கோல். வெண்கொற்றக் குடை என்பது காவல் தொழிலையும், மணிமுடி என்பது அரசியல் தலைமையையும், செங்கோல் என்பது நீதியையும் குறிக்கும் குறியீடுகளாகத் திகழ்ந்தன. இவை மூன்றும் தனக்கு நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போர் மேற்கொண்டனர், சங்க கால வேந்தர்கள். அப்போரானது மண்ணாசைக் காரணமாகவும், பெண்ணாசைக் காரணமாகவும் நிகழ்ந்தன என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. இங்கு நடைபெறுகின்ற போரானது பெண்ணாசையின் காரணமாக நடக்கிறது. அதாவது தம்பிமார்களின் தங்கையை மன்னர் பெண் கேட்டலும் அதற்குத் தம்பிமார்கள் நிபந்தனையின் பேரில் மறுத்தலும் போருக்கு முக்கிய காரணமாகிறது.

    மார்த்தாண்டவர்மா அவர்கள் தம்பிமாரின் தங்கையைப் பெண் கேட்கிறார். அப்போது தம்பிமார்கள் துருவத்தில் பிறந்தார்க்கு பெண் கொடுப்பதில்லை என்று கூறி மறுத்து விடுகின்றனர். இதனால் கோபம் கொண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா  தம்பிமார்களுக்கு அவருடைய தந்தை கொடுத்த குமரி நாட்டுப் பகுதிகளையும், அவர்களின் அரண்மனையையும் பறித்துக் கொண்டு அவர்களையும் நாட்டை விட்டுத் துரத்திவிடுகிறான். இதனை,

                       “வலியதம்பி மன்னவர்க்கு மன்னவனார் கொடுத்திருந்த

                         வகைதொகையும் கூண்ட மன்னர் தானெடுத்தார்

                         குஞ்சுதம்பி மன்னவர்க்கு கொடுத்திருந்த வகைதொகையும்

                         திருவுளக் கோடாக வல்லோ சிறியவர் எடுத்துவிட்டார்…. ’’11

    என்ற கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம். மேலும் ஒரு தலைவன் நின் மகளைத் தருக என்று கேட்க அதனை அவனுக்கு எளியவன் ஒருவன் மறுத்துக் கூறுதலை புறநானூற்றின் வழியாக அறிய முடிகிறது.

    அரசனின் அறம்

                        “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

                          பொன்றுங்கால் பொன்றாத் துணை …’’12

    என்று கூறுகிறது வள்ளுவம். அதாவது அறம் செய்வதற்கு காலம், நேரம் பார்க்கவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவரின் ஆழமான கருத்தாக இருந்திருக்கின்றது. இந்த அறமானது தனிமனித வாழ்வில் பிரதிபலிக்கின்றது. அதாவது சர்வவல்லமையும், ஆதிக்க மனப்பான்மையும் கொண்டு இருந்தாலும் அறநெறியைப் பின்பற்றி ஆட்சி நடத்தல் வேண்டும் என்று மன்னருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை

                        “நான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட

                         அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

                         அதனால் நமர் எனக் கோல் கோடாது

                         பிறர் எனக் குணம் கொல்லாது …’’13

    என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. வலிமையான நான்கு படைகள் கொண்டு இருந்தாலும் அறநெறி வழியாகச் செயல்படுதலே நாட்டின் இறையான்மையைப் பாதுகாக்க முடியும் என்று மருதன் இளநாகனார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மார்த்தாண்டவர்மா இக்கொள்கையினைக் கடைபிடிக்கவில்லை. தான் ஒரு அரசன் என்கின்ற ஆளுகையையும், செல்வாக்கினையும் கொண்டு தம்பிமார்களின் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டுத் துரத்தி விடுகிறான். இதன் காரணமாகச் சர்வ வல்லமை பொருந்திய மன்னரைப் பெரும்படைகளைக் கொண்டு தம்பிமார்கள் தோற்கடித்து விடுகின்றன. இதனைக் கீழுள்ள கதைப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

                     மந்திரவாள் உறை உருவி வலுவுடனே குஞ்சு தம்பி

                     கைகலந்து வெட்டும் நேரம் கண்டாரே ’’…..14

    மன்னிக்கும் பண்பு

    முகம் தெரியாத யாரோ ஒருவர் மீதும், இனம் புரியாத ஏதோ ஒரு உயிரின் மீதும் செலுத்துகின்ற  அன்பு, நேசம் இவற்றைக் காட்டிலும் எதிரிகள் மற்றும் பகைவர்களை மன்னிக்கும் செயலே உயர்பண்பாகக் கருதப்படுகிறது. பிழை செய்தவர்களை மன்னிக்கும் பண்பு புநானூற்றில்

                       “நின் யான் பிழைத்து நோவாய்; என்னினும்

                       நீ பிழைத் தாய் போல் நனி நாணினையே …’’15

    என்று கண்ணனார் குறிப்பிடுகிறார். பகைவனே தவறு செய்திருந்தாலும் நான் தான் தவறு செய்தேன் என்று அவன்மேல் சினம் கொள்ளாது சொல்வது என்பது உயர்ந்த பண்பாகக்  கொள்ளப்படுகிறது. அதுபோல தம்பிமாரும் மன்னரும் ஒருவருக்கொருவர் தங்களுடைய பகையினை மறந்து சமாதானம் அடையும் படியாக அழகப்ப முதலியார் வேண்டிக்கொண்டதற்கு இணங்க அவர்கள் தங்களது பகையினை மறந்து மனதில் எந்த விதமான வஞ்சகமும் இல்லாமல் மன்னருடன் நட்பு பாராட்டி வந்தனர். அதாவது பகைவனை வெல்ல நண்பனாக்கிக் கொள்வது சிறந்த வழியாகும். அதுபோல தம்பிமார்களோடு மன்னர் மார்த்தாண்டவர்மா நட்பு பாராட்டி வந்தாலும் தம்மை கொள்ள வந்த தம்பிமார்களை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று அவர்கள் மீது வஞ்சகம் கொண்டு இருந்தார். இதனை,

                       “மன்னவரும் தன்மனதில் வஞ்சகமாய் தானினைந்து

                       ———————————————————————

                       ———————————————————————

                       நம்மைக்கொள்ள வந்தவனை தாம் கொலை செய்யவேனும்… ’’16

    என்ற கதைப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மேலும் போர்களில் எதிர்ப்படை வீரர்களைச் சிறைபிடித்தல் என்பது பொதுவான வழக்கம் ஆகும். அதுபோல தம்பிமார் கதையிலும் சிறைபிடித்தலுக்கு ஒப்பான இரு காட்சிகள் இடம்பெறுகின்றன. மன்னரைக் காண வந்த தம்பிமார்கள் இருவரையும் சூழ்ச்சியின் காரணமாகத் தனியே பிரித்து அவர்களிடம் உள்ள ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு காவலர்களை ஏவி சிறைபிடித்து விடுகிறார்  மன்னர் மார்த்தாண்டவர்மா. பொதுவாக நிராயுதபானியாக உள்ளவர்கள் எதிரியாக இருந்தாலும் கூட அவர்களிடம் போர் செய்தல் என்பது அரச மரபிற்கு அப்பாற்பட்டது. அது அரசனுக்குரிய தர்மமும் கிடையாது. ஆனால் மார்த்தாண்டவர்மா இத்தகைய அரச தர்மத்தை மீறி தம்பிமார்களைச் சிறைபிடித்துக் கொலை செய்து விடுகிறான். இருப்பினும் இது வெற்றியாகக் கருதப்படாது. ஏனெனில் இந்த வெற்றி அநியாயமாகவும், வஞ்சகச் சூழ்ச்சியாலும் பெறப்பட்டது. அதாவது போரின் மீறிப் பெற்றது. ஆதலின் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் தம்பிமார்களே என்று கூறினால் அது மிகையாகாது.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை,முதல் பதிப்பு – மே 2005, பக்கம் – 329
    2. .புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 224
    1. மேலது, பக்கம் – 75
    2. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன்.சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 289
    3. தமிழ் மக்கள் வரலாறு, அறவாணன் க.ப, தமிழ் கோட்டம், சென்னை, முதல் பதிப்பு மார்ச் 2006, பக்கம் – 195
    4. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன். சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு 2012, பக்கம் – 290
    5. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – மே 2005, பக்கம் 247
    6. குறுந்தொகை, சுப்பிரமணியன் ச.வே, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர் 2009, பக்கம் – 45
    7. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 331
    8. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு -2012, பக்கம் – 275
    9. மேலது, பக்கம் – 304
    10. திருக்குறள், பரிமேலழகர் உரை, செண்பகா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – ஆகஸ்ட் 2012, பக்கம் – 20
    11. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 77
    12. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 329
    13. புறநானூறு, புலியூர்கேசிகன், சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – டிசம்பர் 2010, பக்கம் – 64
    14. தம்பிமார் வரலாறு, விவேகானந்தன் .சிவ, காவ்யா வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 334.

    ———————————————————————————————————–

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளர் இக்கட்டுரையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். தம்பிமார் கதைப் பாடலின் வரலாற்றுப் பின்புலம் நன்றாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மருமக்கள் வழி மாண்மியம், தாய் வழிச் சமூகத்தின் எச்சமாக விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளார். துரோகத்தின் அரசியல் வரலாற்றைத் தம்பிமார் கதைப் பாடலும் பெற்றுள்ளதை அறிய முடிகிறது. தொல்காப்பியம் மற்றும் புறநானுற்றுச் சான்றுகள் கட்டுரைக்குக் கூடுதல் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    ———————————————————————————————————–

    Share
  • (Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர்  ஓர் சமூகச் சீர்திருத்தவாதி

    (Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி

    முனைவர் சொ. அருணன்
    முனைவர் பட்ட மேலாய்வாளர்,
    தமிழ்ப் பண்பாட்டு மையம்,
    அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3

    முன்னுரை

    இந்தியத் திருநாட்டின் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் முழுமுதற் காரணமாக விளங்குவது தமிழ் மரபு. தத்துவ, ஆன்மீக, சமுதாயக் கொடைகளை அது நிறையவே இந்தியாவுக்கும் உலகுக்கும் வழங்கியிருக்கிறது. அதனால்தான் பாரதியார்,

    எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை

    இந்தியா உலகிற் களிக்கும்[1]

    எனத் தமிழ்மொழி(வழி)யில் கூறி அறிமுகப்படுத்தினார்.

    பாரதியார் குறிப்பிடும் அமரநிலை என்பது சாவாக்கலையாகிய சித்த குணமேயாகும். சித்தர்கள் தமிழ்மரபு வேர்களில் கிளைத்த விழுதுகளாக விளங்குபவர்கள். இந்தச் சித்தநிலை யாவர்க்கும் கிடைக்க வேண்டியது என்பதே சித்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அவர்கள் சித்தநெறியைப் பாமரனுக்கும் புரியும்படி எடுத்துரைத்து  வழிகாட்டினார்கள். அவர்களுள் சித்தர் சிவவாக்கியர் மிக எளிமையாகவும், மக்களோடு மக்களாகக் கலந்தும் இந்தநெறியைப் போதித்து வந்தார். அவரைச் சமூகச் சீர்திருத்தவாதியாக இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது.

    யார் சித்தர்கள்?

    சித்தர் என்ற சொல்லுக்கான பொருளை உணர்த்தும் பிறசொற்கள் சங்ககால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலும்[2], திருக்குறளிலும்[3] பயின்று வரும் நிறைமொழி மாந்தர் என்ற தொடர், சித்தர்களையே குறிப்பிடுகிறது.

    நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியத் தொடருக்கு உரை கூறும் பேராசிரியர், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையவர்[4] என்கிறார்.

    புறநானூற்றுப் பாடலில் பெறப்படும் திறவோர் காட்சி[5] என்ற தொடர் சித்தர் அனுபவம் எனக் கருதப்படுகிறது. சித்து எனப்படும் இயற்கைகடந்த அற்புதச் செயல்களைப் பற்றிய குறிப்பு, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது. நிறைந்த ஆற்றல்களும் இயற்கை கடந்த மீவியல் செயல்களுமான பூமியைத் தோண்டி உள்ளே, புகுதல், ஆகாயத்தின்கண் ஏறுதல், கடல்மேல் காலால் நடத்தல் ஆகியவற்றைச் சித்தர்களுக்குரிய அற்புதங்களாகக் குறிப்பிடுவர்.

    தமிழ்மரபு சித்தர்களைப் பதினெண்மராக அடையாளம் காட்டுகிறது. ஆனால் இந்தப் பதினெண்மரும் தொகுப்பிற்குத் தொகுப்பு வேறுபடுகிறார்கள் எனினும் பதினெண்மர் என்னும் தொகையில் மாறுபாடில்லை. ஆனால் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் கடந்து விடுகிறது. இவ்வகையில் சித்தர்களில் போற்றுதற்குரியவராகவும் சிறப்பிடம் பெறுபவராகவும் விளங்குபவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். காரணம் அவர் அற்புதங்கள் செய்வதோடு நின்று விடாமல் மானுடச் சிந்தனைகளை முன்னிறுத்திய சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியதே எனலாம்.

    கருவிலே திருவுடையார்

    தோன்ற புகழொடு தோன்றியவராகக் கருவிலே திருவுடையவராக அவதரித்தவர் சித்தர் சிவவாக்கியர். சிவசிவா என்ற ஒலியுடன் நிலத்தில் பிறந்தவர்[6] ஆதலால் சிவவாக்கியர் எனப் பெயர் பெற்றார். திருவள்ளுவர் எழுதிய நூலை வள்ளுவம் என வழங்குதல் போலவே சிவவாக்கியர் இயற்றிய பாடல்களைச் சிவவாக்கியம் என்றே வழங்குகின்றனர்.

    சிவாயம் என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்திச் சிவக் கொள்கையும், சித்தநெறியும் பூண்டு நிறைந்தவர் சிவவாக்கியர். ஆனபோதும் பரசிவ வெள்ளத்திலேயே மூழ்கிக் களித்திருந்தாலும் சமூகத்தில் நிலைத்திருந்த மடமைகளைக் கண்டு சாடும் சீர்திருத்தவாதியாகவே சிவவாக்கியர் விளங்கினார்.

    பிற்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்கங்கள் சாடல் ஆகியவற்றுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் சித்தர் சிவவாக்கியரேயாவார்.

    தீண்டாமைக்கு எதிர்க்குரல்

    சமய ஒழுக்கங்களின் மீது படிந்த கறையே தீண்டாமை ஆயிற்று. ஒன்றே குலம் ஒருவனே தேவன்[7] எனத்தோன்றிய சமயக் கோட்பாடுகள் நாளடைவில் அயலார் தலையீடுகளால் தனக்கான தனித்த பக்தர்களைக் கொண்ட சங்கங்களாக மாறத் தொடங்கின. தொடர்ந்து அவை, சாத்திரம் சம்பிரதாயம் என்னும் பெயர்களில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டன. தமிழியத்திற்கும் இந்தியத்திற்கும் இது முரணான சமூக வழக்கு என்பதை,

    முன்னேற்றம் அடைந்த வகுப்பார் சில உரிமைகளைத் தமக்கு மட்டுமே உரியதாக வைத்துக் கொண்டனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் இறுமாப்புக் கொண்டனர். தகுதியேதுமின்றிப் பிறப்பால் தங்களை உயர்ந்தோர் எனக் கூறிக்கொண்டோர்களின் அறியாமையும் தன்னலப்போக்கும் இறுமாப்பும் சமூக வாழ்வைக் குன்றச் செய்து விட்டன[8] என்கிறார் விவேகானந்தர்.

    இதை முன்பே கடுமையாகச் சாடியவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். சிவவாக்கியர் மேட்டிமையோரின் தனித்துவமான அடையாளங்கள் சிலவற்றைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியவர். கோவில் வழிபாடு, குடுமி வைத்தல், பூணூல் அணிதல், நீராடல், எச்சில் குறித்த கட்டுப்பாடுகள், புலால் உண்ணாமை, வேதம் ஓதுதல், தீட்டுக் கருத்தியல் ஆகியன தமிழக மேட்டிமையோரின் பண்பாட்டு அடையாளங்களாகக் காட்சி அளிக்கின்றன. இப்பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிவவாக்கியர் எதிர்க்குரல் எழுப்பியுள்ளார்.[9]

    ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்

    சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை

    பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்

    சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே[10]

    எனச் சிவவாக்கியர் சாதிமுறைகளைச் சாடுவதோடு, சடங்குகளையும் வெறுத்தொதுக்குகிறார். வேதத்தை விலக்குவதோடு மந்திரங்களை மறுத்து, ஆகமங்களையும் ஆகாதென்கிறார். மதவாதங்களையும் புறச்சடங்குகளையும் புறக்கணிக்கிறார். போலிச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, மூடநம்பிக்கைகளுக்கெதிராக முழக்கமிடுகிறார். சாதி ஆவதேதடா[11] என்று வினவும் அவர் சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்?[12] எனவும் ஆவல் உறுகிறார். அவர்தம் பாடல்கள் முழுவதும் சமயக் கொள்கைகளை விடவும் இறைவழிபாட்டை விடவும் சமூகச் சீர்திருத்தமே மேலோங்கி நிற்கிறது.

    பெண்மை போற்றிய பெருந்தகையாளர்

    ஏனைய சித்தர்கள் பெண்மையை வெறுத்தொதுக்கும் பண்போடே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சித்தர் சிவவாக்கியர் பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளராக விளங்கியிருக்கிறார் என்பதை அவரது வரலாற்றின் வழி உணர முடிகிறது.

    குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட சிவவாக்கியர், அப்பெண்ணுக்குரிய குலத்தொழிலையே தாமும் செய்து ஏழுபருவம் இன்பம் துய்த்து வந்தார்[13] என்கிறது அவர்தம் வரலாறு.

    பெண்மையின் பெருமையை உணர்ந்தவர் சித்தர் சிவவாக்கியர். அதனால் பெண்ணின் உடல்சார்ந்த இயற்கைச் செயலாகிய குருதிப்போக்கைச் சுட்டிக்காட்டி அவளைத் தீட்டு என வெறுக்கும் மடமையைச் சிவவாக்கியர் முற்றிலும் உணர்ந்து எதிர்க்கிறார்.

    தூமைநீர் என்று சொல்லப்படும் அக்குருதிப் போக்கின் விளைவே மானுடத்தின் தோற்றக்களன். அதனைத் தீட்டு என்று புறந்தள்ளும் வேதியரை நோக்கி,

    மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்

    மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது

    நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா

    வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா[14]

    எனச் சினந்து சீறுகிறார்.

    இவ்வாறெல்லாம் தீட்டின் எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்க்கும் சிவவாக்கியரிடம் வழக்கமாகப் பிற சித்தர்களிடம் எழும் மாதரைப் பழிக்கும் நிலைப்பாடு காணப்படவில்லை.[15]

    வழிபாடு – பூசை – மந்திர மறுப்பு

    சிவவாக்கியர் தனது இளமைக்காலத்தில் இறைவனைத் தரிசிக்கவேண்டி, தலங்கள்தோறும் சென்று பூவும் புனலும் சொரிந்து வழிபட்டவரே. ஆனால் சித்தநிலைக்கு எய்தியபின்னர் அவற்றை எண்ணி வருந்துகிறார். இதனை,

    பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை

    பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை

    மிண்டனாய்த் திரித்தபோ திறைத்தநீர்க ளெத்தனை

    மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை[16]

    என்ற பாடல்வழி உணர்த்துகிறார். மேலும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் தமிழ்மரபுக்கு எதிரான அபிடேகமும், அருச்சனையும் அவருக்கு எரிச்சலையே ஊட்டியதால்,

    மாறுபட்ட மணி துலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்

    ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே

    மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்

    கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே[17]

    என்றும் சினந்து பாடுகிறார்.

    கருங்கல்லை நட்டு வழிபடும் உருவ வழிபாடு தேவைதான் எனினும், அதனை முறையோடு வழிபடாமல் சாத்திரமாகவும், சம்பிரதாயமாகவும் வழிபடும் வழிபாட்டினால் என்ன பயன் கிடைத்து விடும் என்று வினாவுகிறார்.

    நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

    சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா

    நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் ளிருக்கையில்

    சுட்டசட்டிச் சட்டுவக் கறிச்சுவை அறியுமோ?[18]

    என்று அரும்பொருள் தந்து உருவ வழிபாட்டின் பயனற்ற தன்மையைப் புலப்படுத்துகிறார்.

    உருவநிலையிலும் அருவநிலையிலும் அருவுருவ நிலையிலும் வைத்து இறைவனைப் போற்றும் மரபு சமய உலகினில் உண்டு. அதேபோது, உருவ வழிபாட்டின் மூலமாக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவதும் ஆன்மீகத்திற்குப் புறம்பான தீங்குகள் புரிவதும் ஆகிய நிலை கண்டு வெதும்புவது சிவவாக்கியரின் இயல்பாக இருப்பதைக் காணலாம்.[19]

    நிறைவாக

    சித்தர் சிவவாக்கியர் தம் பாடல்கள் முழுவதிலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளயே முன்னிறுத்திப் பாடியுள்ளார். இதற்காக அவர் எளிதான சொற்களையே கொண்டு மொழியாளுமை செய்திருக்கிறார். இயற்கையான எங்கும் காணக்கூடிய இயற்கைப் பொருள்களிலிருந்து வெளிப்படும் அவர்தம் உவமைகள் சமூகத்தின் புரையோடிக் கிடக்கும் இருளின்மீது அனல் வெள்ளமெனப் பாய்ந்து அதை எரிக்கின்றது.

    எழுத்தறிவு இல்லாத பாமர மக்களுக்கும் கூட உயர்ந்த யோகச் செய்திகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களது புழக்கத்திலுள்ள எளிய சொற்களையே தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.

    ஐம்புலனை வென்றவருக்கு அன்னமிடச் சொல்லி, பெண்மையைப் போற்றுகிறார். தீட்டு எனப் பெண்களை விலக்கி வைப்போரைத் திட்டுகிறார். இறைவனை வேண்டித் தவமிருக்கும் தவசிகளுக்கு இல்லறம் தடையன்று என்று நேர்மறைச் சிந்தனையை எழுப்புகிறார். சாதி சமய மறுப்புகளைத் துணிந்து கூறி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதத்தை ஒழித்து, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்து, சமூகச் சீர்திருத்தத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அடிகோலுகிறார்.

    யோகத்தால் ஞானமெய்தி எல்லோரும் இன்புற்றிருக்க விழையும் சீர்திருத்தச் சிந்தனையாளராக, சமுதாயச் சிற்பியாக சித்தர் சிவவாக்கியர் திகழ்கிறார் என்பது இக்கட்டுரையின் வழி தெளிவுபடுத்தப் பெறுகிறது.

    துணைநூற்பட்டியல்

    1. இராமசுப்பிரமணியம், வ.த., (உ.ஆ) புறநானூறு மூலமும் தெளிவுரையும், திருமகள் நிலையம், சென்னை, மு.ப. 2000,
    2. கருணாநிதி ஆ., முனைவர்,  (தொ.ஆ)  சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பாவை பதிப்பகம், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை  மு.ப. 2007.
    3. குன்றக்குடி அடிகளார், தவத்திரு, (உ.ஆ) திருக்குறள் உரை, அருள்நெறிப் பதிப்பகம், குன்றக்குடி, மு.ப. 2005
    4. சிவவாக்கியர், சிவவாக்கியம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, மு.ப.  1904
    5. திருமூலர், திருமந்திரம், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே,  சென்னை – 600108,  மு.ப.2004
    6. தொல்காப்பியர், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் புத்தக நிலையம், 31. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 1, மு.ப. 1999,
    7. பாண்டியன், அ., முனைவர், சித்தர் சிவவாக்கியர், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி – 8, மு.ப. 2015
    8. பாரதியார், பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே,  சென்னை – 600108,  மு.ப.2011
    9. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், அன்னை அபிராமி அருள் வெளியீடு, ………., 1978.
    10. விவேகானந்தர் சுவாமி, , விவேகானந்தர் ஞானதீபம், தொகுதி 8, ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை, மு.ப. 2001.

    அடிக்குறிப்புகள்

    [1] . பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதசமுதாயம் பாடல்..

    [2]. தொல்காப்பியர், தொல்காப்பியம், பாடல். 1484

    [3] . திருவள்ளுவர், திருக்குறள், பாடல். 28

    [4] . முனைவர் அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.34

    [5] .புறநானூறு 192 8-11

    [6]. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், ப.173

    [7] திருமூலர், திருமந்திரம், பா.300

    [8] .சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் ஞானதீபம் – 8, ப.400

    [9] .முனைவர் ஆ.கருணாநிதி, (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பக்.149-150

    [10] .சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.112

    [11] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.47

    [12] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.126

    [13]. அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், பக்.46-47.

    [14] சிவவாக்கியர், சிவவாக்கியம், பாடல்36.

    [15] அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், ப. 211.

    [16] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.29

    [17] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.34

    [18] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.520

    [19] அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.205

    —————————————————————————————————-

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் சித்தர் மரபு செழுமையான வளர்ச்சியைக் கொண்டு திகழ்கின்றது. பதினெண் சித்தர்கள் என்ற வரையறை ஆய்வாளர்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பதினெண் என்ற பட்டியல் மாறுபாடு உண்டு. எனினும் சித்தர்களில் சிவவாக்கியருக்கு என்று தனித்த இடம் உண்டு. சிவவாக்கியரின் சிந்தனைகள் பிற சித்தர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன என்பதைக் கட்டுரை விளக்க முற்படுகின்றது. குறிப்பாக மக்களிடையே மண்டிக்கிடந்த பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான கலகக் குரலை முன்வைத்ததில் சிவவாக்கியர் எந்தகைய நிலையில் செயல்பட்டுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் சான்றுகளோடு விளக்கியிருக்கின்றார்.

    —————————————————————————————————-

    Share
  • (Peer Reviewed) ஊருணி

    (Peer Reviewed) ஊருணி

    முனைவர் சே. கரும்பாயிரம்

    இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை.

    ———————————————————————————-

    ஊருணி

    மக்கள் குடிநீருக்காகவும் பாசனத்திற்காகவும் பருவ மழையை நம்பி இருக்கின்றனர். அப்பருவமழை வைகாசி, ஆனி (சூன்) மாதங்கள் முதல் ஆவணி, புரட்டாசி (செப்டம்பர்) மாதங்கள் வரை தென்மேற்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் புரட்டாசி, ஐப்பசி (அக்டோபர்) மாதங்கள் முதல் கார்த்திகை, மார்கழி (டிசம்பர்) மாதங்கள் வரை வடகிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றிலும் கிடைக்கிறது. அம்மழை எல்லா இடங்களிலும் பெய்வதில்லை. ஓர் இடத்தில் அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் பொழிகிறது. சில நேரங்களில் பெய்யாமலும் இருக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும்போதுதான் பஞ்சம் ஏற்படுகிறது. அத்தகைய பஞ்சத்தைத் தீர்க்க பண்டைத் தமிழர் மழைநீரினை வீணாக்காமல் சேகரிக்கும் முறையினைப் பின்பற்றினர்.

    பொழிகின்ற மழைநீர் ஓடைகள் பலவாகப் பிரிந்து ஆற்றில் சேர்கிறது. பெருக்கெடுத்து ஆற்றுநீர் ஓடுமிடங்களில் முன்னோர்கள் அணைகளைக் கட்டித் தடுத்து நிறுத்தினர். அணைகளில் வழிந்த நீரை ஏரி, குளம் முதலான நீர்நிலைகளில் நிரப்பினர். ஏரிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. ஓர் ஏரி நிரம்பிய பின் அதன் உபரிநீர் அடுத்த ஏரிக்குச் சென்றது. இவ்வாறு மழை நீரானது வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தேக்கி வைக்கப்பட்டது. எல்லா நீர்நிலைகளும் நிரம்பிய பின் எஞ்சிய நீரே கடலில் கலந்தது. அத்தகைய மழைநீரைப் பண்டைத் தமிழர் சேமித்த முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    குளம், ஏரி முதலான நீர்நிலைகளில் அவர்கள் நீர் சேமித்தது போல ஊருணி என்னும் நீர்நிலையிலும் நீரினைச் சேமித்தனர். அந்த நீர்நிலை மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். அந்நீர்நிலையை உலகப் பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள், நீலகேசி, கம்பராமாயணம், திருக்கைவழக்கம், திருக்கோவையார், கல்லாடம், திருக்குற்றாலக் குறவஞ்சி முதலான இலக்கியங்களும் திவாகரம் முதலான நிகண்டுகளும் அகராதிகளும் கூறியுள்ளன. தற்காலத்தில் ஊருணி என்னும் பெயரில் ஊர்ப் பெயர்களும் நீர்நிலைகளும் உள்ளன. அவ்வாறான ஊருணியை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    திருக்குறள்

    திருவள்ளுவர் உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றிமையாத நீரின் தேவையை உணர்ந்து கடவுள் வாழ்த்துக்கு அடுத்தாக வான்சிறப்பு என்னும் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார். மழை இயற்கை கொடுத்த கொடைகளுள் சிறந்தாகும். மழையைப் பற்றியும் மழைநீர் சேமிக்கக்கூடிய நீர்நிலை பற்றியும் குறட்பாக்கள் ஆங்காங்கே நேரடியாகவும் குறிப்பாகவும் கூறியுள்ளன. அந்த வகையில் ஒப்புரவு அறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறட்பாவில் உலகம் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற பேரறிவாளனிடம் (ஒப்புரவறிதல் கொண்டவனிடம்) உள்ள செல்வம் எல்லோருக்கும் பயன்படும் என்று கூறுவதற்கு உவமையாக “ஊருணி நீர்நிறைந் தற்றே” (திருக்குறள்.215) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அக்குறட்பாவில் ஊருணி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளதற்குப் பழைய உரையாசிரியர்களான மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிமேலழகர் ஆகியோர் உரை தந்துள்ளனர்.

     மணக்குடவர்

    மணக்குடவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உண்கின்ற கேணி” (திருக்குறள்.215, மணக்குடவர் உரை) என்னும் பொருளில் உரையைக் கூறியுள்ளார். அவர் கூறிய ஊர் உண்கின்ற கேணி என்னும் உரை சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இதனை,

              “ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க

                பாசி யற்றே” (குறுந்தொகை, 399:1,2)

    என்னும் பாடலடிகளில் ஊரார் உண்ணும் கேணியில் (சிறுகுளத்தில்) பாசியானது படர்ந்துள்ளது. அதனை நீக்கி உண்ணுவதற்குரிய நீராக்க முயற்சி செய்வர் என்றும்,

    “ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி

    வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை

    நுண்ணூற் கலிங்க முடீஇ” (புறநானூறு, 392:13-15)

    என்னும் பாடலடிகளில் பெரிய இலையுடைய பாசி ஊரார் உண்ணும் கேணியில் படர்ந்துள்ளது. அதனின் வேர் போல அணிந்திருந்த ஆடையைக் களைந்துவிட்டு, நேரிய கரையும் நுண்ணிய நூலாலுமான ஆடையை அணிந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளன. மேற்கூறியவற்றிலிருந்து ஊருணி என்பது ஊரார் உண்ணக் கூடிய சிறிய அளவுடைய நீர்நிலை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அவற்றில் கேணி என்பது எந்த நீர்நிலையை உணர்த்துகின்றது என்பதை அறிய வேண்டியுள்ளது.

    கேணி என்னும் சொல்லிற்கு மணலில் தோண்டிய கேணி (மணற்கேணி) (திருக்குறள், 396:1:3) என்றும் சேறாக உடைய நிலத்தில் தோண்டிய பள்ளம் (சுனை) (அகநானூறு,137:2:2) என்றும் அகலமாகத் தோண்டிய கிணறு (நற்றிணை, 92:5:4 ) என்றும் சிறிய அளவுடைய குளம் (சிறுகுளம்) (பட்டினப்பாலை, 51) என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. தற்காலத்தில் கேணி என்பது நீரூற்று உள்ள இடத்தில் வட்டவடிவமாகத் தோண்டி அதனைச் சுற்றிக் கல்லை அடுக்கிக் கட்டப்பட்டுக் குடிநீருக்காகவும் பிற தேவைகளுக்காகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இதற்குக் கிணறு என்னும் வேறு பெயரையும் குறிப்பிடுகின்றனர். கேணி, கிணறு ஆகிய இரண்டும் ஒன்றல்ல. அவை வெவ்வேறானவை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அது மேலும் ஆய்விற்குரியது. குறிப்பாக இந்தக் கேணி பழம்வீடுகளில் இன்றும் உள்ளதைக் காணமுடியும். ஆதலால் பல்வேறு பெயர்களைக் கொண்ட கேணி என்னும் நீர்நிலை தோன்றிய விதத்தை முதலில் காணவேண்டும்.

    பூமியின் மேற்பரப்பில் நீரோடுவது போலப் பூமியின் கீழ்ப்பரப்பில் நீரோட்டங்கள் உண்டு. அவ் விடத்தின் மேற்பரப்பில் இயற்கையாக வெளிவரும் நீரை ஊற்று என்பர். அது இயற்கையாக உருவாகும் நீரூற்றாகும். செயற்கை நீரூற்று என்பது மனித முயற்சியால் உருவாக்கப்படுவதாகும். நீரோடிய மேற்பகுதி வறண்ட நிலையில் இருக்கும். அவ் விடங்களின் கீழ்த் தோண்டினால் நீர் ஊறும். அதில் உள்ள நீரை இறைத்தால் மீண்டும் மீண்டும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். அதனை, “இறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும்” (திருக்குறள், 1161) என்பார் திருவள்ளுவர். நிலத்தில் தோண்டி உருவாக்கப்பட்ட மணற்கேணி, சுனை, கிணறு, சிறுகுளம் முதலான நீர்நிலைகள் நீரூற்றுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும். அதாவது மழை நீரினை நேரடியாகப் பெறாமல் ஊற்றிலிருந்து பெறப்பட்ட நீர்நிலைகள் எனப் புரிந்து கொள்ளலாம். நீரூற்றுகளிலிருந்து பெறப்பட்ட மேற்குறித்த நீர்நிலைகளில் கேணி என உரையாசிரியர் கூறும் பொருள் எது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

    “வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமும்

    கேணியுங் கிணறு நீணிலைப் படுவும்” (பெருங்கதை, 3:3:5,6)

    என்னும் பாடலடிகளில் கேணியை அடுத்துக் கிணறு என்னும் நீர்நிலை வந்துள்ளன. அதிலுள்ள கேணி என்பது சிறுகுளம் என்றும் அது இன்றைய மக்கள் பயன்படுத்தும் குட்டையைக் குறிக்கும் என்றும் உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் குறிப்பிட்டுள்ளார். குட்டையானது குளத்தைவிட சிறியதாகவும் மடுவை விட பெரியதாகவும் இருக்கும். அக்குட்டை வான் மழையை மட்டுமே நம்பியுள்ள நீர்நிலையாகும். மேற்குறித்த சான்றுகளின் முடிவாக உரையாசிரியர் மணக்குடவர் கூறியுள்ள கேணி என்னும் நீர்நிலை இன்றைக்குக் குட்டை (சிறுகுளம்) என்று சொல்வதை அறிந்து கொள்ளமுடிகிறது.

    பண்டைக் காலத்திலிருந்து கேணி என்று முடிகின்ற ஊர்ப் பெயர்கள் சிறிய நீர்நிலையுடைய குட்டை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது. சான்றாகத் திருவல்லிக்கேணியைக் குறிப்பிடலாம். கேணி என்றால் இன்றைய காலத்தில் மக்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காக உள்ள கேணியோடு ஒப்பிட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கூறப்படுகிறது. கேணி, குட்டை ஆகிய இரண்டும் நீர்நிலைகளாக இருந்தாலும் வெவ்வேறானவை ஆகும்.

    இன்றைய காலத்தில் நவீன சாதனங்களைக் கொண்டு நீரினைப் பெறுவதால் குட்டையானது பல இடங்களில் சிதிலமடைந்தும் தூர்ந்தும் போயுள்ளதை எளிதாகக் காணலாம். அக்குட்டைகளைத் தூர்வாரினால் மழை நீரினைச் சேகரிக்க முடியும். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்சனையும் தீரும்.

    பரிதியார்

    பரிதியார் ஊருணிக்கு “வானேரி” (திருக்குறள், 215, பரிதியார் உரை) என்று குறிப்பிட்டுள்ளார். வானேரி என்பதை வான் + ஏரி எனப் பிரிக்கலாம். வான் என்பது மழையையும் ஏரி என்பது நீர்நிலையையும் குறிப்பதாகும். அதாவது மழையினால் நேரடியாக நீர் பெறக்கூடிய நீர்நிலை என்பதே இதன் பொருளாகும். பொதுவாக ஏரியில் நீர் சேமித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே இருந்து வருகிறது. ஏரி என்னும் சொல்லில் இரண்டு இணைந்த ஏரிகள் (பட்டினப்பாலை, 39) இருந்ததையும் பரந்த அளவில் நீரினையுடைய ஏரி (சிலப்பதிகாரம், 13:192) இருந்ததையும் பண்டைய இலக்கியங்கள் சுட்டுகின்றன. முன்னோர்கள் ஏரியை ஏற்படுத்துவதிலும் பராமரித்தலிலும் தனிக் கவனம் செலுத்தினர் என்பதற்கு ஏரி வாரியம் அமைத்திருந்ததைச் சான்றாகக் கூறலாம்.

    ஏரியைக் குளம் என்றும் குளத்தை ஏரி என்றும் சொல்வது உண்டு. ஏரி, குளம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்பதை, “பூசல் வன்கரைக் குளங்களு மேரியும் புகுவ” (பெரிய புராணம், 1027:4) என்னும் பாடலடி குறிப்பிட்டுள்ளது. அதாவது குளங்களிலும் ஏரியிலும் ஒரே நேரத்தில் நீர் புகுதலால் இரண்டு நீர்நிலைகளும் வேறானவை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. அதோடு மட்டுமல்லாது அவ் வேரி ஆற்றுநீரைப் பெறக்கூடியதாகவும் அது பெரும்பாலும் பாசனத்திற்குப் பயன்படுபவதாகவும் இருந்தது. ஏரிகள் என்று பொதுவாகக் கூறினாலும் ஊருணிக்கு வானேரி என்று பரிதியார் உரை கூறியதை நோக்க வேண்டியுள்ளது.

    வானேரி என்பது ஆற்றுநீர் இல்லாத இடங்களில் மழைநீரைச் சேமிப்பதற்காக உருவாக்கப்படுவதாகும். அதாவது மழைப் பொழிந்தவுடன் நீரானது பள்ளத்தை நோக்கி ஓடும். அந்நீர் பள்ளமான பகுதியில் தேங்கும். முன்னோர்கள் அவ் விடத்தில் கரை அமைத்து நீரைத் தேக்கி, மழையினால் அக்கரை உடையாதவாறு காவல் காத்தனர். அவ் வேரிகள் மழைநீரினை மட்டுமே நம்பி இருப்பதால் வானம் பார்த்த ஏரி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பண்டைக் காலத்தில் பெரும்பாலும் அவ்வேரிகளை ஆறு இல்லாத ஊர்களில் உருவாக்கி இருக்க வேண்டும். அது மக்களுடைய குடிநீரின் தேவையை முதன்மையாய்த் தீர்த்திருக்கும். ஆற்றுநீர் ஓடாத இடங்களில் மழைநீரினைச் சேமித்து வைக்கும் பழக்கமுடையவர்கள் முன்னோர்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. எனவே வானேரியைப் பெரிய ஏரி என்று கூறுவாறுமுளர். அவ்வாறு கூறினாலும் அது மழைப் பொழிவை மட்டும் நம்பி இருப்பதால் பெரிய ஏரியாகவோ அல்லது ஏரியைவிடச் சிறியதாக உடைய குளமாகவோ இருக்க வாய்ப்பில்லை. அது ஒவ்வொரு ஊரிலும் மழை பெய்வதற்கு ஏற்றாற் போல அமைந்த ஒரு நீர்நிலை எனப் பொதுவாகக் குறிப்பிடலாம். அதனால்தான் ஊருணிக்கு வானேரி என்று பொருள் பொதிந்த உரையைப் பரிதியார் கூறியுள்ளதை நோக்க முடிகிறது.

    காளிங்கர்

    காலிங்கரைக் காளிங்கர் என்று அழைக்கும் மரபுமுண்டு. அவருடைய பெயரைத் தண்டபாணி தேசிகர் எழுதிய திருக்குறள் உரைக் களஞ்சியத்தில் காளிங்கர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆதலால் இக்கட்டுரையில் அவருடைய நூல் எடுத்தாளப்படுவதால் காளிங்கர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. காளிங்கர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊருணியாகிய பேரேரியும் பெருங்குளமும்” (திருக்குறள், 215, காளிங்கர் உரை) என்று குறிப்பிடுவார். அவர் கூறும் பேரேரியும் பெருங்குளத்தையும் இரண்டாகப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

    பண்டைய காலத்தில் கோட்டகம் (சீவகசிந்தாமணி, 41:3:4) என்னும் பெயரில் ஆழமான நீர்நிலை இருந்துள்ளது. அது பேரேரி என்னும் நீர்நிலையை ஒத்ததாக இருந்திருக்க வேண்டும். பொதுவாக ஏரியைச் சிற்றேரி, பேரேரி என்பர். சிற்றேரி என்பது தற்காலத்தில் தாங்கல் என்னும் பெயரில் வடமாவட்டங்களில் வழங்கப்படுவதைக் காணமுடிகிறது. பேரேரி என்பது பெரிய ஏரியைக் குறிக்கும். அப் பேரேரிகளை அரசர்கள் உருவாக்கியுள்ளனர். சுந்தரசோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி முதலான பேரேரிகளைச் சான்றாகக் கூறலாம். அரசர்கள் போலவே பேரேரிகளை அரசர்களுக்கு அமைச்சர்களாக இருந்தவர்களும் ஊர் தனவந்தர்களும் உருவாக்கியுள்ளனர். அது வற்றாத கடல் போலக் காட்சி அளித்ததால் சமுத்திரம், கடல், வாரிதி என்னும் பெயர்களையும் பெற்றுள்ளது. அதற்கு அம்பாசமுத்திரம் என்னும் ஊர்ப் பெயரில் நீர்நிலை இருந்துள்ளதைச் சான்றாகக் கூறலாம்.

    பேரேரியைப் பேரி என்று சொல்வதும் உண்டு. பேரி என்பது பேரேரியிலிருந்து மருவி வந்த சொல்லாகும்.  பேரி என்னும் சொல்லில், “சிவலப்பேரி (சீவலப்பேரி), வீரபாண்டியப்பேரி” (முக்கூடற்பள்ளு, 92) ஆகிய பெயர் கொண்ட ஏரிகள் சுட்டப்பட்டுள்ளன. அவ் விரண்டு ஏரிகளும் பேரேரியைக் குறிப்பதாகும். பொதுவாகப் பேரேரிகள் ஆற்றுநீர் இல்லாத காலங்களில் பாசனத்திற்கும் மக்களுடைய தேவைகளுக்கும் உதவியுள்ளன. அது பெரிய கொள்ளளவைக் கொண்ட நீர்நிலையாதலால் ஊரின் புறத்தேதான் அமைந்திருக்கும்.  முன்னோர்கள் ஊரின் புறத்தே அத்தகைய பேரேரியை அமைத்தது மழைக் காலங்களில் பெருமளவில் சேதத்தைத் தவிர்ப்பதற்காகவே என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

    பேரேரியைப் போலவே பெருங்குளமும் பெரிய நீர்நிலைக்கு வழங்கக்கூடிய பெயராகும். பொதுவாகக் குளத்தைச் சிறுகுளம், பெருங்குளம் (பெரிய குளம்) என்று குறிப்பிடுவர். சிறுகுளத்தைப் பற்றி முன்பே மணக்குடவர் உரையில் கூறியதைக் காண்க. பெருங்குளத்தைப் பண்டைய தமிழர் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

    “தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

    எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்

    பெருங்குளங் காவலன் போல” (அகநானூறு.252:11-13)

    என்னும் பாடலடிகளில் மழை பெய்ததனால் அலைகளையுடைய பெருங்குளத்தின் கரையானது தழும்பியது. அதனால் அக்கரையைக் காவல் செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளன.

    பெரிய குளம் என்பதால் கிட்டத்தட்ட ஏரி அளவிற்கு இருந்திருக்க வேண்டும். அப்பெருங்குளங்களுக்குப் பேரேரியைப் போலவே ஆற்றுநீர் பெறப்பட்டதும் அதன் கரை நீர் உடைந்து செல்லாத அளவிற்கு வலிமையாக இருந்ததும் பாசனத்திற்காக மடை திறந்து வாய்க்காலில் விடப்பட்டதும் கீழ்வரும் பாடலில் குறிப்பிடப்படுகிறது.

    “அனைய வாகிய நதிபரந் தகன்பணை மருங்கின்

    கனைநெ டும்புன னிறைந்துதிண் கரைப்பெருங்

    புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய்

    வினைஞ ரார்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ வியன்கால்” (பெரிய புராணம், 1105)

    என்பதன் மூலம் அறியலாம். மேற்கூறியவற்றிலிருந்து வற்றாத நீரினைக் கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கும் பாசனத்திற்கும் பேரேரி, பெருங்குளம் ஆகிய நீர்நிலைகள் பயன்பட்டதால் ஊருணி என்னும் சொல்லுக்குக் காளிங்கர் உரையெழுதியுள்ளதை நோக்கமுடிகிறது.

    பரிமேலழகர்        

    திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். அவர் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊரின் வாழ்வார் தண்ணீ ருண்ணுங் குளம்” (திருக்குறள், 215, பரிமேலழகர் உரை) என்று குறிப்பிட்டுள்ளார். உரையில் அவர் குறிப்பிடப்படுள்ள குளம் என்னும் நீர்நிலை மிகவும் பழைமை வாய்ந்ததாகும். அதாவது குளம் என்னும் நீர்நிலை நாகரிகக் கால மக்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக உலக நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியது என்பர். ஆற்றங்கரையில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இடம் மட்டுமல்ல. அது மக்கள் ஓர் இடத்தில் நிலைத்து வாழ்வதற்குரிய நீரினை முதன்மையாய்த் தந்த இடமுமாகும். அந்த இடத்தில் அவர்கள் குடிநீருக்காகவும் மற்றும் பிற தேவைகளுக்காவும் நீர்நிலைகளை உருவாக்கினர். அவற்றில் முதன்மையாக அமைவது குளமாகும்.

    பண்டைய தமிழர் குளங்கள் உருவாக்குவதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். தூர்ந்து போன குளத்தைத் தோண்டுதலும் (பட்டினப்பாலை, 282, 83), குளம் வெட்டுவதை அறமாகக் கருதிச் செய்தலையும் (சிறுபஞ்சமூலம், 66) பற்றிப் பண்டைய இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் அவர்கள் பயன்படுத்திய குளம் என்னும் நீர்நிலைக்குக் குட்டம் (சிறுபாணாற்றுப்படை, 180), கயம் (பரிபாடல், 7:23), தடம் (பரிபாடல், 6:87), வாவி (சீவகசிந்தாமணி, 1204:1), படுகர் (திவாகரம், 5:61), அகழ் (மலைபடுகடாம், 214), தடாகம் (பரிபாடல், 9:77) பொய்கை (பெருங்கதை, 3:9:12) முதலான வேறு பெயர்கள் வழங்குவதைக் காணமுடிகின்றது. மேற்கூறிய குளம் தொடர்பாக வழங்கும் வேறுபெயர்களை ஆராய்ச்சி செய்வது மேலும் ஆய்வுக்குப் பயனுடையதாக இருக்கும்.

    குளமானது குட்டையை விடப் பெரியதாகவும் ஏரியை விட சிறியதாகவும் இருக்கும். அதன் கரை பெரியதாக இருந்ததை “வியன்” என்று அகநானூறு (42:9:2) கூறியுள்ளது. அக்குளம் பெரும்பாலும் ஊர்க்குள்ளே இருந்துள்ளது. அது மழைநீரை வீணாக்காமல் சேமிக்கக் கூடியதாகவும் ஆற்றுநீரைப் பெறக் கூடியதாகவும் (மதுரைக்காஞ்சி, 244-246) இருந்துள்ளதைக் காணமுடிகிறது. சில நேரங்களில் மழை இல்லாமல் அது நீர் வற்றியும் இருந்தது. அதனை “அறுகுளம்” என்று புறநானூறு (142:1:1) குறிப்பிட்டுள்ளது.

    கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் கருத்து. ஊரில் கோயில் இருந்தால் கட்டாயம் குளம் இருக்கும். ஆதலால் தற்காலத்தில் ஊர்தோறும் குளங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.  அத்தகைய குளங்கள் பல உண்டு. அவை திருக்குளம், கோயிற்குளம், தெப்பக்குளம், தளிக்குளம், புதுமுகக்குளம், ஊர்க்குளம், முக்குளம், புதுக்குளம் முதலிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அத்தோடு மட்டுமல்லாது குளங்கள் பெயரால் இன்று பல ஊர்கள் அழைக்கப்படுகின்றன. சான்றாகச் சாத்தான் குளத்தைக் கூறலாம். எனவே பரிமேலழகர் ஊருணிக்குக் குளம் என்று குறிப்பிடுவதனால், அதன் தொன்மையும் ஊரின் கண்ணே இருந்தும் மக்களுடைய தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

    நீலகேசி

    ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்றான நீலகேசி ஊருணியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. வாய்க்கால் இல்லாத ஊருணிக்கு மழைநீர் எவ்வாறு புகும் என்பதைக் கீழ்வரும் பாடலடிகள் குறிப்பிட்டுள்ளது.

    “யூருணி நீர்நிறை வுண்டே யுறுபுனல்

    வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால்                  (நீலகேசி, 614:3,4)

    என்பதன் மூலம் ஊருணிக்கு வாய்க்கால் வழியாக நீர் வரவேண்டும் என்பதை அறியமுடிகிறது.

    கம்பராமாயணம்

    கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தில் ஊருணி என்னும் நீர்நிலையை அதன் பயன் நோக்கில் காட்சிப் படுத்தியுள்ளார். அவர் ஊரார் உண்ணக்கூடிய ஊருணி நிறைதலும், பலருக்கு உதவக்கூடிய மரங்கள் பழுத்தலும், மழைநீர் பெய்தலும், ஆற்றுநீர் பெறுகுதலும், யார் வேண்டாம் என்று கூறுவார் என்று கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

    “ஊருணி நிறையவு முதவு மாடுயர்

    பார்நுகர் பழுமரம் பழுத்த தாகவும்

    கார்மழை பொழியவுங் கழனி பாய்நதி

    வார்புனல் பெருகவும் மறுக்கின் றார்கள்யார்” (கம்பராமாயணம், 1480)

    என்பதன் மூலம் ஊருணி நிறைதல் என்பது ஊருணி நீர் நிறைந்தற்று என்னும் குறளைப் போலவே கூறியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும் திருக்குறளுக்கு உரையெழுதிய வ.உ. சிதம்பரனார் இப்பாடலை மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருக்கை வழக்கம்

              கம்பர் கம்பராமாயணம் பாடியது மட்டுமல்லாது சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கைவழக்கம் முதலான சிற்றிலக்கியங்களையும் பாடியுள்ளார். திருக்கை வழக்கத்தில் ஊருணி என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.

    “- சும்மையார்

    ஊருணி நீர்போ லுலகத் தவர்க்கெல்லாம்

    பேரறிவா லீயும்ப்ர தாபக்கை”              (திருக்கைவழக்கம், ப.20)

    என்னும் பாடலடிகளில் ஊருணியானது ஊரில் வாழ்வார் அனைவருக்கும் பயன்படுவது போலப் பிறர்க்கு உதவி செய்யும் உள்ளம் கொண்டவன் செல்வம் அனைவரும் உதவும் என்னும் கருத்தைப் பெறமுடிகிறது. இப்பாடலடிகள் மேற்கூறிய ஒப்புரவு அறிதல் என்னும் குறட்பாவின் கருத்திற்கு ஒப்பாக இருக்கிறது.

    திருக்கோவையார்

    “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டினார். அவர் அதன்படியே திருக்கோவையாரைப் பாடினார். அந்நூலில் ஊருணி என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.

    ஊருணி யுற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கு மூதியமே”            (திருக்கோவையார், 400:4)

    என்னும் பாடலடியில் தன்னிடம் வந்தவற்குப் பயனைக் கொடுப்பது ஊருணியாகும். அது போலத் தலைவனும் எல்லோர்க்கும் பயன் உடையவனாக இருப்பான் என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேற்குறித்த பாடலின் மூலம் தன்னிடம் வந்து சேர்ந்த நீரைப் பிறருக்குக் கொடுத்துப் பயன்தருவது ஊருணி என்று கூறுவதை அறியமுடிகிறது.  

    கல்லாடம்

    சங்கக் காலத்துப் புலவர், தொல்காப்பித்துக்கு உரையெழுதியவர், பாட்டியல் நூல் எழுதியவர் எனக் கல்லாடர் பெயரில் பலர் இருந்துள்ளனர். அவற்றுள் கல்லாடத்தை இயற்றிய கல்லாடரும் ஒருவராவார்.  அந்நூல் “கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்தகைய நூலில் ஊருணி என்னும் சொல் இரண்டு இடங்களில் ஆளப்பட்டுள்ளது.

    “பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம்

    விற்றுணுஞ் சேரி விடாதுறை யூர

    னூருணி யொத்த பொதுவாய்த் தம்பல

    நீயுங் குதட்டினை யாயிற் சேயாய்” (கல்லாடம், 58:15-18)

    என்னும் பாடலடிகளில் புதல்வனே! பல பொய்களைச் சொல்லியும் உண்மைகளைக் கைவிட்டும் இன்பத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட பரத்தையர் வாழுமிடத்தில் உன் தந்தை இருப்பது போல, ஊரார்க்குப் பொதுவாகிய ஊருணியை ஒத்த பரத்தையரின் வாய்த் தம்பலத்தை (வெற்றிலை, பாக்கு) நீயும் மென்றாய் என்று தாய் கூறுவதும்,

    “பொன்னணி மாடம் பொலிநகர்க் கூட

    லாவண விதி யனையவ ரறிவுறி

    ணூருணி யன்னநின் மார்பகந் தோய்ந்தவென

    னிணைமுலை நன்ன ரிழந்தன வதுபோன்” (கல்லாடம், 77:24-27)

    என்னும் பாடலடிகளில் பொன்னால் அணியப் பெற்ற மாடங்களாலே அழகு பெற்ற மதுரை மாநகரின் கடைத்தெருவினை ஒத்த நின்னுடைய (தலைவனுடைய) பரத்தையரை அறிவாராயின், ஊருணியை ஒத்த நின் மார்பினிடத்தே சேர்ந்த எனது இரண்டு மார்பகங்களும் நன்மை இழந்தது போல ஆகிவிடும் என்று தலைவி கூறுவதும் காணமுடிகிறது. மேற்கூறிய இரண்டு பாடலடிகளிலும் ஊருணி என்பது நீர்நிலை குறித்து வழங்கப்படுவதை அறியமுடிகிறது.

    திருக்குற்றாலக் குறவஞ்சி

    குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். அந்நூலில் “ஊருணிப்பற்று” (திருக்குற்றாலக் குறவஞ்சி, 81) என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஊருணிப்பற்றை ஊருணி + பற்று எனப் பிரிக்கலாம். ஊருணி என்பது நீர்நிலையையும் பற்று என்பது பயிரிடக்கூடிய நிலத்தையும் (வயலையும்) குறிக்கும். பொதுவாகப் பற்று என்னும் சொல்லில் வழங்கக்கூடிய நிலங்கள் அரசர்கள் காலத்தில் மானியமாக விடப்பட்ட நிலங்களைக் குறிப்பதாகும். அதனால் ஊருணி என்னும் நீர்நிலையைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட நிலத்திற்கு ஊருணிப்பற்று எனக் கூறுவது பொருத்தமாயிற்று. ஊருணிப்பற்றைப் போலவே ஊருணிப் பராமரிப்புக்காக விடப்பட்ட நிலத்திற்கு “ஊருணிப்புறம்” என்று சொல்வதைத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.108) குறிப்பிடுகிறது. எனவே நிலங்கள் ஊருணியைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளமுடிகிறது.

    நிகண்டுகள்

    நிகண்டின் தோற்றத்தை ஏழாம் நூற்றாண்டு என்பர். முதல் நிகண்டு திவாகரமாகும். திவாகரம் முதலான நிகண்டுகள் ஊருணி என்னும் சொல்லுக்கு “ஊர் உணும் பொதுநீர்” (திவாகரம், 5:64), “ஊருளோர் உண்நீர்” (பிங்கலம், 4:165), “உவளகம் (குளம்)” (சூடாமணி, 11:236) பொருள்களைத் தந்துள்ளன. சூடாமணி நிகண்டு உவளகம் என்னும் புதிய பொருளைத் தருகிறது. உவளகம் என்பது நீர்நிலையைக் குறிப்பதாகும். மேற்குறித்த நிகண்டுகள் ஊருணி என்னும் சொல்லுக்கு நீரையும் நீர்நிலையும் குறிப்பதை அறிய முடிகிறது.

    அகராதிகள்

    அகராதிகள் சொற்களின் அரிய பொருளை அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. அத்தகைய அகராதிகள் ஊருணி என்னும் சொல்லிற்கு “ஊராருண்ணுநீர்நிலை” (தமிழ்ப் பேரகராதி, ப.501) எனவும் “(பெரும்பாலும் கிராமப்புறத்தில் குடிநீருக்கான) குளம்” (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.233) எனவும் பொருள் விளக்கங்களைத் தருகின்றன. மேலும் தற்காலத்தில் ஊருணி என்ற பெயரில் நீர்நிலை இருப்பதும் ஊர்கள் இருப்பதும் அறியமுடிகிறது.

    இன்றைய நிலை

    இலக்கியங்கள், நிகண்டுகள், அகராதிகள் ஆகியவை ஊருணி என்னும் சொல்லிற்கு ஊரார் உண்ணக்கூடிய நீர், குளம், நீர்நிலை ஆகிய பொருள்களை விளக்கமாகத் தருக்கின்றன. இந்தச் சொல்லை ஊர் + உண் + இ எனப் பிரிக்கலாம். ஊர் என்பது ஊரினர் என்றும் உண் என்பது உண்ணப்படும் நீர் என்றும் இ என்பது விகுதியாகவும் உள்ளது. ஊரினர் என்பது இடவாகுபெயராகவும், உண் என்பது உண்ணுவது, குடிப்பது, பருகுவது முதலானவற்றிற்கு வினையாகவும், இ என்பது செயப்படுபொருள் விகுதியாகவும் பொருள்களைத் தந்து ஊருணி எனக் காரணப் பெயராக அமைகிறது. ஊருணியைப் போலவே “ஊருண்ணி” என்னும் சொல்லைத் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியும் (ப.108) “ஊரணி” என்னும் சொல்லைத் தமிழ்ப் பேரகராதியும் (ப.500) குறிப்பிட்டுள்ளன. ஊருண்ணி என்னும் சொல்லை ஊர் + உண்ணி எனப் பிரித்து ஊருண்ணியானது தொகுத்தல் விகாரமாகி ஊருணி என ஆயிற்று. ஊரணி என்னும் சொல்லானது ஊர் + அணி எனப் பிரிக்கலாம். அதாவது ‘கோயில் இல்லா ஊர் பாழ்’ என்பது போல ஊருணி இல்லாத ஊரும் பாழாகும். ஆகவே ஊருணி ஊரணி என்று மருவியதும் அது ஊரிலிருந்து அழகையும் தருகிறது. ஊரணி என்று மருவிய சொல்லானது பழம் நழுவி பாலில் விழுந்தது போலாயிற்று. அதனால் ஊரணி என்று கூறுவதும் சாலப் பொருத்தமாம். மேலும் தற்காலத்தில் ஊரணி என்னும் பெயரில் கல்லூரணி என்னும் ஊர் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

    மக்கள் ஊருணியைக் குளம் என்று சொல்வது பெருவழக்காய் இருக்கிறது. திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் ஊருணியைக் குளம் என்று குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது. அதோடு மட்டுமல்லாது பிற்காலத்தில் திருக்குறளுக்கு உரையெழுதிய பெரும்பாலானோர் ஊருணியை நீர் உண்ணக்கூடிய குளம் என்றே குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஊர்க்குடிநீர் மற்றும் பாசனத்திற்குப் பயன்படுத்திய நீர்நிலையை ஊருணிகுளம் என்னும் சொல்லில் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி (ப.108) குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கதாகும். தற்காலத்தில் ஊருணி என்ற பெயரில் மழைநீரினைச் சேமித்து வைக்கும் முறை மழைப் பொழிவு குறைவாக உடைய பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டின் வறட்சி மிகு மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரத்தில் காணப்படுகிறது. அந்நீர்நிலை குடிநீர்த் தேவைக்கும், மழை இல்லாத வறட்சிக் காலங்களில் பாசனத்திற்கும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. அந்நீர்நிலையின் மைய இடத்தில் கேணி அமைத்திருப்பர். வறண்ட காலங்களில் அக்கேணி நீர் மக்களுக்குப் பயன்படுகிறது.

    தொகுப்புரை

    • பண்டைய தமிழர் பயன்படுத்தி வந்த ஊருணி என்னும் நீர்நிலை காலந்தோறும் இருந்துள்ளதை அறியமுடிகிறது.
    • திருக்குறள் உரையாசிரியர்கள் குறிப்பிடும் கேணி, வானேரி, பேரேரி, பெருங்குளம், குளம் முதலான நீர்நிலைகளின் பெயர்கள் ஊருணிக்குப் பொதுவாய் அமைந்தது.
    • பண்டைய மக்கள் ஊரினருக்காகப் பயன்படுத்திய நீர்நிலைக்கு ஊருணி என்று கூறுவது பெயருக்கேற்றவாறு பொருத்தமாக அமைகிறது.
    • தென்மாவட்டங்களில் உள்ள சில நீர்நிலைகளை ஊருணி என்று அழைப்பது இன்றும் ஊருணி பயன்பாட்டில் உள்ளதை அறியமுடிகிறது.
    • மழைநீரைச் சேமித்துப் பயன்படுத்தும் இப்பண்பாடு பற்றிய அறிவினை இனிவரும் காலங்களுக்கும் தேவையாகும். அது பற்றிய அறிதலையும் புரிதலையும் தமிழ்ச் சமூக அறிவுக் களஞ்சியத்தில் வைப்பது கடமையாக உள்ளது.

    துணைநூற்பட்டியல்

    1. அகநானூறு, (பதி.) பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாத செட்டியார், கழக வெளியீடு, சென்னை, 1951.
    2. இராமாயணம் – அயோத்தியா காண்டம் (முதற்பகுதி), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 2010.
    3. ஏரெழுபது, திருக்கைவழக்கம், ஞானபீடம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆதீன வெளியீடு, காஞ்சிபுரம், 1966.
    4. கல்லாடம், (பதி.) அருணாசல குருக்கள், லக்ஷ்மீ விலாஸ சாலை, சென்னை, 1932.
    5. குறுந்தொகை, (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1955.
    6. சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1979.
    7. சிறுபஞ்சமூலம், (உரை.) வித்துவான் பு.சி. புன்னைவனநாத முதலியார், கழக வெளியீடு, சென்னை, 1963.
    8. சீவகசிந்தாமணி மூலம், நச்சினார்கியருரையும், (பதி.) உ.வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1969.
    9. திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலநாதசுவாமி கோயில் வெளியீடு, தென்காசி.
    10. திருக்குறள் உரைக்களஞ்சியம், ச.தண்டபாணி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 2008.
    11. திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், (உரை.) ஸ்ரீ.உ.வே.வை.மு. கோபாலக்ருஷ்ணமாசார்யர், ஆனந்தா பார்வதி அச்சகம், சென்னை, 1965.
    12. திருக்கோவையார், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1970.
    13. நற்றிணை நானூறு, (உரை.) அ. நாராயணசாமி ஐயர், கழக வெளியீடு, சென்னை, 1976.
    14. நீலகேசி, (பதி.) அ. சக்கரவர்த்தி நயினார், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984.
    15. பத்துப்பாட்டு மூலம் நச்சினார்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1986.
    16. புறநானூறு (201 – 400 பாட்டுகள்), (பதி.) ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, கழக வெளியீடு, 1951.
    17. பரிபாடல் மூலம் உரையும், (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, சென்னை, 1975.
    18. பெரிய புராணம் மூலமூம் தெளிவுரையும், பாகம் – 2, (உரை.) வ.த. இராம சுப்பிரமணியம், திருமகள் நிலையம், சென்னை, 2002.
    19. பெருங்கதை, – பகுதி – 2, (உரை.) பொ.வே. சோமசுந்தரனார், கழக வெளீயிடு, சென்னை, 1970
    20. முக்கூடற்பள்ளு, (பதி.) மு. அருணாசலம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1940.
    21. சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை, 2004.
    22. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, திருவான்மியூர், சென்னை, 2016.
    23. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, சாந்தி சாதனா வெளியீடு, சென்னை.
    24. தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982.

    ***************************************************************************************

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பண்டைத் தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். நீர்நிலைகளை உருவாக்கி விவசாயத்தில் பல புரட்சிகளைச் செய்துள்ளனர். ஆறு, குளம், ஓடை, ஊருணி போன்ற நீர்நிலைகள் விவாசயத்திற்குப் பயன்பட்டன. இக்கட்டுரை ஊருணி என்ற சொல்லையும் அதன் பயன்பாட்டையும் தெளிவாக விளக்குகின்றது. ஊருணி என்ற சொல்லாக்கமும், இலக்கியங்களிலும் உரைகளிலும் இச்சொல் எத்தகைய பின்புலத்தில் கையாளப்பட்டுள்ளது என்பதையும் கட்டுரையாளர் விளக்கியுள்ள திறம் பாராட்டிற்குரியது. ஊருணி குறித்து எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை உரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றி அமைந்துள்ளது. கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

    ***************************************************************************************

    Share
  • (Peer Reviewed) ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

    (Peer Reviewed) ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம்

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஐயப்பனது வழிபாடு இன்று யாவராலும் மேற்கொள்ளப்படும் வழிபாடாக விளங்குகிறது. இந்த வழிபாடு இடைவிட்டு வந்த ஒன்றா அல்லது தொன்று தொட்டு வந்த ஒன்றா என்னும் வாதப்பிரதி வாதங்களும் சர்ச்சைகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனாலும் ஐயப்ப வழிபாடு மட்டும் தனது நிலையில் உயர்வு பெற்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வழிபாடாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. அதுமட்டுமல்ல யாவரும் இந்த வழிபாட்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் பெரிதும் விருப்புடையவர்களாக இருப்பதையும் கண்டுகொள்ள முடிகின்றது.

    கந்த புராணம், விஷ்ணு புராணம், பத்ம புராணம், யாவும் ஐயப்ப வழிபாடு பற்றி எடுத்துச் சொல்லுகின்றன. இப்புராணங்கள் தெய்வத்தன்மை மிக்கன. இவற்றில் ஐயப்பன் பற்றிய குறிப்பும் அவரது தோற்றம் பற்றிய விளக்கங்களும் இருக்கின்ற காரணத்தால் ஐயப்ப வழிபாட்டை இடைநடுவில் வந்தது என்று வாதிடுவதோ விமர்சிப்பதோ பொருத்தமற்றதாகி விடுகிறது. இதனால் ஐயப்ப வழிபாடானது தொன்று தொட்டே வந்திருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறதல்லவா!

    ஐயப்பனை தர்மசாஸ்த்தா என்றும் பெயரிட்டும் வழிபடுவர். சாத்தன் என்பது காவலுக்குரிய தெய்வமாக விளங்கியிருக்கிறது. சாஸ்த்தா என்பது சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டு, அதுவே தமிழில் சாத்தா என மருவி பின்னர் சாத்தனார் ஆகியது எனவும் வரலாற்றால் அறிய முடிகிறது.

    காவல் தெய்வமாக விளங்கினார் என்பதற்கு அவரின் மற்றொரு பெயரான ‘பூதநாதன்’ என்பதும் பொருந்துவதாக இருப்பதாக வரலாறு சுட்டி நிற்கிறது. விநாயகப் பெருமானைக் கணங்களுக்கு அதிபதி என்ற நிலையில் ‘கணபதி’ என்கிறோம். தேவசேனைகளின் அதிபதியாக விளங்குவதால் முருகப்பெருமானைத் ‘தேவசேனாபதி’ என்கிறோம். ஐயப்பன் பூத கணங்களுக்குத் தலைமை தாங்குவதால் அவரைப் ‘பூதநாதன்’ எனப் போற்றுகிறோம். இதில் இன்னுமோர் அர்த்தத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். இந்த மனித சரீரமானது பஞ்ச பூதங்களால் ஆனது. எனவே பஞ்ச பூதங்களும்  எந்த நேரமும் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றிருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட மனிதர்களை அந்தப் பூதங்களிடமிருந்து காத்து இரட்சிக்கும் ஆற்றல் பூதநாதனாகிய ஐயப்பனால் மட்டுமே முடியும் அல்லவா? இதனாலும் பூதங்களை ஆளும் வல்லமை பெற்றவன் என்ற வகையிலும் ‘பூதநாதன்’ என்பது பொருத்தமாகி நிற்கிறதுதானே!

    ஐயப்ப வழிபாட்டில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் காரணமாகவும் அந்த வழிபாட்டை அனைவரும் கைக்கொள்ளுகின்றனரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு மண்டலம் என்பது சாதாரண விஷயமல்ல. அந்த ஒரு மண்டலமும் எந்தவிதமான கெட்ட பழக்கங்களையும் மனத்தாற்கூட நினையாமல் ஐயப்ப வழிபாடு நடத்தப்படுகின்றது. இங்கு மனம் தூய்மை அடைவதோடு வாழ்வும் வெளிச்சம் பெறமுடிகிறது எனலாம்.

     ” உற்றநோய் நோற்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை “

    என்னும் வள்ளுவர் வாக்கு இங்கு போற்றப்படும் நிலையே காணப்படுகின்றது. கடைப்பிடிப்பார்கள் செவ்வனே கடைப்பிடித்தால் சிறப்பு வந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இது ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம் எனலாம்.

    கடவுளர்களில்- பிரம்மச்சாரியாக ஐயப்பன் இருக்கின்றார். அதுமட்டுமல்ல அவரது கைகளிலே எந்தவித ஆயுதங்களும் இல்லை. இது அற்புதமான அமைப்பு அல்லவா? அவரது குழந்தை வடிவமும் புன்சிரிப்பு தவழும் முகலாவண்யமும் பார்ப்பவர் மனத்தைப் பக்குவப்படுத்திவிடும் அல்லவா!

    உலகிலே எங்குப் பார்த்தாலும் சண்டை சச்சரவுகளும் அழிவுகளுமே காணப்படுகின்றன. ஆயுதக் கலாசாரம் என்பது பெருகி அமைதியைக் குலைத்துவிட்டது. இந்த நிலையில் ஆயுதமே கையில் ஏந்தாது அமைதியாயும் சிரிப்போடும் ஐயப்பன் காணப்படுவது அகில உலக அமைதிக்கும் உலகம் தழுவிய சமாதானத்துக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டு அல்லவா! இதனாலும் இந்த வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

    காமம் என்பதுதான் யாவற்றுக்கும் மூல காரணமாகும். ஐயப்பன் பிரம்மச்சாரியாக விளங்கும் நிலையும், அவரது வழிபாட்டை மேற்கொள்ளும் நிலையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் நிலையும் ‘எம்மிடையே உள்ள சிற்றின்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும்‘ என்பதையே எடுத்துக் காட்டுகிறது. காம எண்ணங்கள் நம்மைவிட்டுப் போய்விட்டால் உலகிலே காணும் யாவுமே ஆனந்த மயமாகவே தோற்றமளிக்கும். அந்த ஆனந்தமும் அற்பமானதல்ல. அது இறைத் தன்மை மிக்கதாகவே இருக்கும். இவையெல்லாம் ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவங்கள் எனலாம்.

    எமக்குள்ளே இறைவன் இருக்கின்றான். அந்த இறைவனை நாங்கள் முயன்றால் கண்டுவிடலாம் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். அதற்கு நல்ல தேடல் வேண்டும்.

                             “தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்

                              தேடிக் காணொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் “

    என்று அருளாளர் ஒருவர் கூறுகின்றார். இது முற்றிலும் உண்மையானதாகும். இந்த அரிய தத்துவத்தை ஐயப்பன் வழிபாடு மிகவும் இலகுபடுத்தி இருக்கிறது.

    ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளை ஒருவராவது மற்றவரைப் பெயர்சொல்லி அழைப்பது வழக்கம் அன்று. ஒருவரை ஒருவர் ‘சாமி’ என்றுதான் அழைப்பார்கள். இதுதான் ஐயப்ப வழிபாட்டின் அதியுச்ச நிலை எனலாம். சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர் சாமி என்னும் நிலைக்கு வருவதை வேறு எந்த வழிபாட்டிலும் காணவே முடியாது. அதனை ஐயப்ப வழிபாடு ஒன்றே உணர்த்தி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மனிதர்கள் பல பிறவிகளிலும் செய்த பாவங்களும், புண்ணியங்களும் அவர்களுக்குப் பெரும் பாரமாகவே பிறவிதோறும் வந்து கொண்டிருக்கும். இவை இரண்டையும் விடும்பொழுதுதான் பிறவியென்னும் பிணி அகலும். இதனையே சைவ சித்தாந்தம் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்தினிபாதம் என்றெல்லாம் சொல்லும். இவை எமக்கும் விளங்குவது சற்றுக் கடினம்தான். ஆனால் ஐயப்ப வழிபாட்டில் இதனை இலகுவாக்கி ‘இருமுடி’ கட்டுதல் என்று வைத்துவிட்டார்கள். இருமுடியில் ஒன்றில் இறைவனுக்கான நிவேதனப் பொருட்களும் மற்றையதில் அடியவர்களுக்கான பொருட்களுமே  அடங்கியிருக்கும். இங்கே இறைவனுக்கானவற்றை புண்ணிய மூட்டை என்றும் மற்றதைப் பாவ மூட்டை என்றும் கொள்ளலாம் அல்லவா? இந்த ஆன்மா ஆனது பாவத்தையும் புண்ணியத்தையும் சுமந்தபடியேதான் இருக்கும். இறைவனிடம் போகும்பொழுது அதுவும் பக்தியுடன் பக்குவமாகப் போகும்பொழுது பாவத்தின் நிலை குறைந்து புண்ணியம் மேலோங்க, ஆன்மாவின் பாரம் குறைவடையும். இந்த அரிய கருத்தே இருமுடித் தத்துவம் என்று ஐயப்ப வழிபாட்டில் காணப்படுகின்றது என்பது மனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

    பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. ஐயப்ப தரிசனத்திலும் பதினெட்டுப் படிகள் இருக்கின்றன. பாரதப் போரில் அர்ஜுனன் கலங்கிய கலக்கத்தைத் தெளிவாக்கி இறைத் தத்துவத்தையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் பகவான் கண்ணன் காட்டியதுவே கீதையென்னும் வேதமாக வந்தது.

    அதே போன்றதுதான் ஐயப்ப வழிபாட்டிலும் பதினெட்டுப் படிகளின் தத்துவமும். முதல் ஐந்து படிகளும் கர்மேந்திரியங்களாகவும், அடுத்த ஐந்து படிகளும் ஞானேந்தியங்களாகவும், அடுத்த நான்கு படிகளும் அந்தக்கரணங்களாகவும், மிகுதி மூன்று படிகளும் முக்குணங்களாகவும் உருவகப்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கடந்தால் பதினெட்டாம் படியானது இறைதரிசனத்தைக் காட்ட வல்லது என்னும் அதியுன்னதத் தத்துவத்தை, படிகளைக் கொண்டே ஐயப்ப வழிபாடு உணர்த்தி நிற்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

    தேங்காயினுள் நெய்விட்டு அதனை ஐயப்ப தரிசனத்தின்பொழுது கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது. தேங்காயில் மூன்று கண்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு கண்ணை மட்டுமே திறந்து நெய்யினை விடுவார்கள். இங்கே கூட மிகச்சிறந்த தத்துவத்தை ஐயப்ப வழிபாடு காட்டி நிற்கிறது. மனிதர்களுக்குப் புறத்தே தெரிவது இரண்டு கண்களே. அதேவேளை மூன்றாவது கண்ணும் இருக்கின்றது. அதனையே அகக்கண் என்கிறார்கள். நெய் என்பது ஆன்ம ஞானம் அதனை உடம்பாகிய தேங்காயினுள் செலுத்த வேண்டுமானால் அதற்கு அகமாகிய கண்ணின் வழியேதான் செலுத்தமுடியும் எனவேதான் தேங்காயின் ஒரு கண்ணைத் திறத்தல் என்பது இங்கே ஏற்படுத்தப்பட்டது. இதனை அனைவரும் விளங்கி வழிபட்டால் நல்லதே.

    ஐயப்ப வழிபாட்டில் அரனும் அரியும் இணையும் தன்மை காணப்படுகிறது. அரியும் அரனும் சேர்ந்த வடிவமானதால்தான் அரிகரசுதன் ஐயன் ஐயப்பன் என்று போற்றப்படும் நிலை இந்த வழிபாட்டில் ஏற்பட்டது எனலாம். இதனால் சைவ வைணவ ஒற்றுமையின் வடிவமாகவும் ஐயப்பனும் அவரது வழிபாடும் அமைந்திருப்பதும் இந்த வழிபாட்டின் மிக உன்னதமான முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது என்றும் கொள்ளலாம்.

    ஆடுதல், பாடுதல், ஒன்று சேருதல், உணவிட்டு உபசரித்தல், சாதி, மத, ஏற்றத் தாழ்வுகள் பாராமை, சமரசம் என்னும் தரரகமந்திரமே மேலோங்கி இருத்தல், தீவிர வைராக்கியம், இன்முகம் காட்டுதல், இன்சொல் பேசுதல், பெரியவரைக் கனம் செய்யுதல், இப்படிப் பல நிலைகளில் ஐயப்ப வழிபாடு விளங்குகின்ற காரணத்தாலும் இன்றைய உலக நிலையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வழிபாடாக ஐயப்ப வழிபாடு திகழ்கின்றது.

            “சாமியே சரணம் ஐயப்பா ! சாமியே சரணம் ஐயப்பா!”

    என்னும் ஒலியானது உலகையே ஒன்று கூட்டும் சக்தி மிக்கதாக விளங்கி ஐயப்ப வழிபாட்டை உலக வழிபாடாக மாற்றிவிடும் சக்திபெற்றதாக இன்று பிரவாகித்து நிற்கிறது என்பது நிதர்சனமாகும்.

                                                                          “சரணம் சரணம் ஐயப்பா

           சாமி சரணம்  ஐயப்பா!”

    ———————————————————————————————————————————————

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஐயப்ப வழிபாட்டின் பெருமைகளையும் நுட்பங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. சாத்தனார் வழிபாட்டிலிருந்து பூதநாதன் தோன்றிய விதத்தையும், ஐயப்ப வழிபாட்டில் பொதிந்திருக்கும் அகப்பொருள் உண்மைகளையும் சைவசித்தாந்த, புராணச் சான்றுகளோடு நிறுவுகிறது. ஐயப்ப விரதத்தின் மெய்த்தத்துவங்கள், வைராக்கியக் கொள்கை, இருமுடி கட்டுதல் ஆயுதமின்மை ஆகியவற்றுக்கான விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. அற்றே தவத்திற் குரு என்னும் வள்ளுவத்தின் ஈற்றடிகளை வழிபாட்டிற்கான ஒழுகலாறாய்க் கட்டுரை உணர்த்துகிறது. இதனைப் போலவே அமைந்த முருக வழிபாட்டினையும் ஒப்புநோக்கியிருக்கலாம்.

    ———————————————————————————————————————————————

    Share
  • (Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்)

    (Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்)

    முனைவர் ஆ.ராஜா
    அருங்காட்சியகத் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர் – 613010

    சங்க காலம் தொட்டே கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் இலங்கை, அரேபியா, இந்தோனேசியா போன்ற கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த பகுதிகளாகும். இடைக்காலத்தில் சோழர், பாண்டியர், பிற்கால பாண்டியர், நாயக்கர் ஆகியோர்களும் இக்கடற்கரைப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் சிறப்புற்று விளங்கினர் என்று இப்பகுதியிலுள்ள கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகூர், நாகப்பட்டினம், சுந்தரபாண்டியப் பட்டினம், வட்டானம், கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளிலுள்ள இசுலாமியக் கல்வெட்டுகளின் வாயிலாகவும், இராமநாதபுரம் வட்டாரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட மரக்காயர் கல்வெட்டிகளின் வாயிலாகவும், குறிப்பாக தென் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மரக்காயர்களின் வரலாற்றுப் பதிவுகள் வாயிலாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது.

    மரக்காயர்கள் கி.பி.17-18ஆம் நூற்றாண்டுகளில் கடற்சார் வணிகத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தனர். குறிப்பாக இடைக்காலத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசிய ஆவணங்கள் இவர்களைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடுகின்றன.1 கி.பி.18ஆம் நூற்றாண்டில் தமிழகக் கடற்கரைப் பகுதியில் குறிப்பாக பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் மரக்காயர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதைத் தொண்டியில் கிடைக்கப்பெற்ற, கி.பி.1795இல் வெளியிடப்பட்ட மருது பாண்டியரின் கல்வெட்டில் காண முடிகிறது.2 இக்கல்வெட்டில் தொண்டியின் ஆபூப் சகா மரக்காயர் என்பவர் அதிகாரமிக்கவராகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரக்காயர்களின் செல்வாக்கைக் காட்டுகிறது. மரக்காயர்கள் எப்பொழுது தமிழக வணிகத்தில் ஈடுபட்டனர், எப்பொழுது செல்வாக்குப் பெறலாயினர் போன்றவற்றைச் சரியாக கணக்கிடுவது அரிதாக இருக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இடைக்காலத்தில் அஞ்சுவண்ணம் என்ற பிரிவில் இசுலாமியர்கள், குறிப்பாக சோனகர் எனப்பட்ட அரேபிய வணிகர்கள், தமிழகக் கடற்கரையில் இருந்ததை அறிய முடிகிறது. மரக்காயர்கள் என்ற தனிக் குழு அஞ்சுவண்ணத்திலிருந்து தோன்றியவர்களாகவும் இசுலாம் மதம் சார்ந்த மரக்காயர்கள் முதலில் வணிகத்தில் ஈடுபடாமல் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாகச் செயல்பட்டதாகவும் கருத வேண்டும். மரக்காயர் என்ற சொல் ‘மரக்கலநராயர்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். அவ்வாறாயின், இவர்கள் முதலில் கப்பல் மாலுமிகளாகத் தங்களது தொழிலைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது என பா.ஜெயக்குமார் கருதுகிறார்.3

    பாரூசு துறைமுகத்தைப் பற்றிக் குறிப்பிடும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி.1088ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய தமிழ்க் கல்வெட்டில்4 ‘மரக்கலநாயன்’ என்ற சொல் காணப்படுவது மேற்சுட்டிய கருத்துடன் ஒத்து வருவதால் மரக்கல நாயர்களாக இருந்த மரக்காயர்களின் தாக்கம் வணிகத்தில் இடைக்காலத்திலேயே இருந்ததாகக் கொள்ளலாம். இவ்வாறு, மரக்கலத்தை (கப்பல்களை) இயக்கிய இவர்கள் இடைக்காலத்தில் தாங்களே வாணிபத்தையும் முன்னின்று நடத்தியிருக்க வேண்டும்.

    மரக்காயர்களின் செயல்பாடுகள்

    கிழவன் சேதுபதி (1678-1710) பெரிய கோட்டையையும் அரண்மனையையும் கட்டி, சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் கீழக்கரை ‘சீதக்காதி மரைக்காயர்’ ஆவார்.5 கீழக்கரையிலுள்ள ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு ஒன்று இசுமாயிலெவை மகன்கள் கவீது முகம்மது மரைக்காயரும், அவுதில்க் காதிறு மரைக்காயரும் சேர்ந்து பள்ளிவாசல் ஒன்றை கட்டியமையைக் குறிப்பிடுகிறது.6

    அதே போன்று கீழக்கரை மற்றும் வேதாளை பள்ளிவாசல்களில் காணப்படுகிற கல்லறைக் கல்வெட்டுகளில் மார்த்தாண்ட மரக்காயர், செல்லக்குட்டி மரைக்காயர், மழமரைக்காயர், பெரியதம்பி மரக்காயர் என்றும் குறிப்பிடுகின்றது7. இவை அங்கிருந்த இசுலாமியர்களின் பெயர்களாகும். பெரும்பாலும் இசுலாமியப் பெயர்களின் பின்னொட்டில் மரக்காயர் என்றும் மரைக்காயர் என்றும் வருவதைக் காண முடிகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள வீட்டின் திண்ணைச் சுவரில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1812ஆம் ஆண்டு கல்வெட்டில்  நாகூர் நூர் முகம்மது மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர் என்பவர் வீடு, கடை, திருவாசல், குளம், தோட்டம், ஆகியவற்றைப் பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகிறது.8

    மேலும், கி.பி.1873 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டுகளின் வாயிலாக குஞ்சு மரைக்காயர் என்பவர் பீர் மண்டபம் கட்டியதையும், நாச்சிக்குளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் என்பவரும் நாகூர் தர்காவில் அமைந்துள்ள வடக்கு மினார் கட்டியதை அறிய முடிகிறது.9

    மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள்

    மேலும், இவ்வாய்வுக்கு வலுசேர்க்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, திருவாடானை வட்டத்திலுள்ள வட்டானம் என்ற இடத்தில் மூன்று மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.10 இக்கல்லறைக் கல்வெட்டுகள் இவ்வூரின் வடக்குப் புறத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளன. கி.பி.1497ஆம் ஆண்டைச் சார்ந்த முதல் கல்வெட்டானது 62 செ.மீ அகலமும், 56 செ.மீ உயரமும், 16 செ.மீ கனமும் கொண்ட அமைப்புடைய கல்லில் எட்டு வரிகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் பின்புறத்தில் திருக்கோயில் கட்டமைப்புகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள வட்ட வடிவத் தாமரையிதழ் வேலைப்பாடு இருப்பதைக் காண முடிகிறது. இக்கல்வெட்டின் மேல்பகுதி இசுலாமியக் கட்டடக் கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1503ஆம் ஆண்டைச் சார்ந்த இரண்டாவது கல்வெட்டு 59 செ.மீ அகலமும், 66 செ.மீ நீளமும், 15 செ.மீ கனமும் கொண்டுள்ள இக்கல்லில் ஒன்பது வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1506ஆம் ஆண்டைச் சார்ந்த மூன்றாவது கல்வெட்டு 62 செ.மீ அகலமும், 185 செ.மீ நீளமும், 16 செ.மீ கனமும் உடைய இக்கல்லில் எட்டு வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் அனைத்துமே இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த மரக்காயர்கள் இறப்புக்குப் பின் அவர்களுக்கு நினைவாக துயில் கொண்ட இடத்தில் வைக்கப்பட்ட கல்லறைக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டகளின் பாடம் பின்வருமாறு:

    கல்வெட்டு : 1

    படம் : 1. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1497)

    காலம் : ஹிஜிரி 902, பிங்கல = ஜூலை 11, கி.பி.1497 வெள்ளிக்கிழமை. (படம்:1)

    1. முகம்மது நவிக்கு
    2. யாண்டு 901 ஆவது
    3. பிங்கல வருஷம் ஆ
    4. டி மாதம் 13 தியதி
    5. நயினா மரக்காயர்
    6. செகு பூவக்கர் நயினா
    7. வெள்ளிக்கிழமை நா
    8. ளில் மரித்தார்.

    கல்வெட்டு : 2

    படம் : 2. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1497) பின்புறம் தாமரை இதழ் வேலைப்பாடு

    காலம் : ஹிஜிரி 902, ருத்ரோத்காரி, கி.பி.1503 ஏப்ரல் 20, வியாழக்கிழமை (படம்:3)

    1. முகம்மது நவிக்கு
    2. யாண்டு 908 வது
    3. உதிரொர்காரி வதுஷ
    4. ம் சித்திரை மாதம் 24
    5. தியதி செகுத்துமார் மர
    6. க்காயர் செகுநயினா
    7. வான அரிராசராம
    8. மரகுகாயர் வியா
    9. ழக்கிழமை நா.

    கல்வெட்டு : 3

    படம் : 3. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1503)

    படம் : 4. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1506)

    காலம் : ஹிஜிரி 911, க்ஸய (Kshaya) கி.பி.1506, வியாழக்கிழமை. (படம்:4)

    1. முகம்மது நவிக்கு
    2. யாண்டு 911 ஆவ
    3. து கிஷய வருஷம் அர்
    4. பசி மாதம் 290 செகு
    5. த்துமான மரக்காய
    6. ர் பீருகுட்டியார் வி
    7. யாழக்கிழமை நா
    8. ளில் மரித்தார்.

    மேற்குறிப்பிட்ட கி.பி.1497ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘நயினா மரக்காயர் செகு பூவக்கர்’ என்றும் கி.பி.1503ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘செகுநயினாவான அரிராசராம மரக்காயர் பீருகுட்டியார்’ என்றும் பெயரின் பின்னொட்டில் மரக்காயர் எனும் சொல் சேர்த்து குறிப்பிடுவதைக் காண முடிகிறது. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மரக்காயர் என்ற சொல், ஆட்பெயரின் பின்னெட்டாக வருவதால் இசுலாம் சமூகத்தினரின் ஒரு பிரிவினராக மரக்காயர்கள் இருப்பர்.

    மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையில் இசுலாமியச் சமயத்தைச் சார்ந்த மரக்காயர்கள், தமிழர்களாகவோ அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாகவோ இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தூண்டுகிறது. ஏனென்றால் தமிழகத்தின் தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலுள்ள இவர்கள், தற்போதுவரை தமிழையே தாய் மொழியாகக் கொண்டு பேசி வருகின்றார்கள் என்பதைக் கள ஆய்வுகளின் வாயிலாக அறிய முடிகிறது.

    இடைக்காலத்திலேயே மரக்காயர்கள் கடல்சார் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று, அதன் வாயிலாக பல்வேறு நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும். இன்றையளவிலும் மரக்காயர்கள் இசுலாமிய சமூகத்தில் பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்று நோக்கும்போது இவர்களின் முதன்மையான தொழிலாக வாணிபம் இருந்து வருகிறது.

    மேற்சுட்டிய இசுலாமியர்கள் நவீன காலத்திலும் மரம் வியாபாரம் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது சிறப்புக்குரியதாகும். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய கல்வெட்டில் குறிப்பிடப்படுகிற மரக்கலநாயர்கள் கி.பி.11ஆம் நூற்றாண்டில் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாக இருந்தமையால் அவற்றை தொடர்ந்து வந்த மரக்காயர்கள் அந்த மரம் சார்ந்த பொருட்களை வியாபாரம் (மரபுசார்ந்த தொழிலாக) செய்து வருவதைத் தற்காலத்திலும் காண முடிகிறது என்பதே சிறப்பு. மேலும், இவர்கள் துணிகள், பட்டுத் துணிகள் மற்றும் வாசனைத் திரவியப் பொருட்கள் போன்றவற்றையும் வியாபாரம் செய்யும் தொழிலையும் செய்து வருகின்றனர் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவர். இவர்கள் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலிருந்த நகரங்களில் பிரதானமாக வணிகம்சார் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆதலால்தான் மரக்காயர்கள் இன்றளவிலும் கடற்கரையோரப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதைக் காண முடிகிறது.

    கி.பி.14-15ஆம் நூற்றாண்டுகளில் மரக்காயர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை அமைத்திருந்தனர் என்பதை இப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகூர், நாகப்பட்டினம், சுந்தரபாண்டியப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மரக்காயர்களின் குடியேற்றங்கள் இருந்துள்ளன. இவர்கள் உள்நாட்டிலும், இலங்கை, அரேபியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளிலும் கடல்சார் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் வாயிலாக மரக்காயர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தூண்டுகிறது. இவர்கள் வாழ்வின் மேம்பாட்டிற்கு மூலதனமாக அமைந்த வணிகத்தை தங்களின் முதன்மை வாழ்வாதாரமாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே இனி வரும்காலங்களில் கூடுதலான கள ஆய்வு மேற்கொள்வதன் மூலம் மரக்காயர் சார்ந்த ஆவணங்களைக் கண்டறியும்போது, இவர்களின் குடியேற்றங்கள், செயல்பாடுகள், வணிகம் ஆகியவை குறித்து மிகுதியாக அறிய வாய்ப்பு அமையும்.

    சான்றெண் விளக்கம்

    1. Jayaseela Stephen, Portuguese in the Tamil coast, Navaijothi, publishing house, Pondicherry, 1998, PP.116-124.
    2. செ.இராசு, மருதுபாண்டியரின் தொண்டிக் கல்வெட்டு, ஆவணம் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992,ப.16 மற்றும் செ.இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2007, ப.51.
    3. பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், ப.192.
    4. எ.சுப்பராயலு, சுமத்ராவில் தமிழ்க் கல்வெட்டுகள், ஆவணம் 4, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1994,பக்.116 – 124.
    5. செ.இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2007, ப.98.
    6. மேலது, ப.155.
    7. மேலது, பக்.165-167.
    8. மேலது, பக். 54-55
    9. மேலது, பக்.76-78.
    10. வீ.செல்வகுமார், ஆ.ராஜா, சு.இராசவேலு, வட்டானம் கல்வெட்டுகள், ஆவணம் 23, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2012, பக்.162 – 163.

    =================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கடல் கடந்து வணிகத்தில் ஈடுபட்ட இசுலாமியர் பற்றிச் சில தமிழ் கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. இவை இவர்கள் தமிழகப் பகுதியில் இருந்து வணிகம் செய்ததற்குச் சான்றாகும். இதில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள் மரக்காயர்கள். ஆனாலும் மரக்காயர் பற்றிய கல்வெட்டுகள் மிகக் குறைவே.
    மரக்காயர்களை பற்றி அதிகக் கல்வெட்டுச் செய்தி இல்லாமையைப் போக்கும் வகையாக திருவாடானை வட்டத்தில் வட்டானம் என்ற இடத்தில் மூன்று மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள செய்தி இதற்குப் புதிய ஒளியைப் பாய்ச்சுவதாக உள்ளது.
    இவருடைய இந்தக் கட்டுரை இது காறும் இசுலாமியர் பற்றி  அறியப்படாத செய்திகளை நமக்கு வழங்குவது சிறப்பு. ஆனாலும் ஒரு குறை இசுலாமியர் சோழர் ஆட்சியிலேயே  தமிழகத்தில் இருந்திருந்தாலும் ஆசிரியர் முன்வைக்கின்ற செய்திகள், சான்றுகள், இசுலாமியரை தென் தமிழ்நாட்டவராகவே குறிப்பாக பாண்டிய நாட்டவராகவே அடையாளப்படுத்துகிறது. ஏன்? இது மதுரையில் இசுலாமியர் ஆட்சி சில காலம் நிலைபெற்று இருந்ததனால் ஏற்பட்ட விளைவா?

    மரக்காயர்களின் தாய்மொழி தமிழ் எனக் கொள்வதற்கான தரவுகள் எங்கே? இது தொடர்பான கள ஆய்வு விவரங்கள், ஆய்வு நிகழ்த்தியோர், ஆய்வுக்கு உட்பட்டோர், ஆய்வுக் காலம் போன்ற தரவுகள், சான்றுகளைத் தருதல் வேண்டும். ஆய்வாளர் பல இடங்களில் தம் கணிப்புகளை உரிய சான்றுகள் இல்லாமல் அளித்துள்ளார். முன்வைக்கும் ஒவ்வொரு செய்திக்கும் சான்று அளிப்பது, சீரிய ஆய்வு நடைமுறையும் நெறிமுறையும் ஆகும்.

    மரக்காயர்களின் வணிகத் தொடர்புகள் பற்றிய பகுதியில் சில நாடுகளை ஆய்வாளர் சுட்டுகிறார். நியூசிலாந்தில் தமிழ் எழுத்தில் இசுலாமிய வணிகர் பெயர் பொறித்த மணி கிடைத்துள்ளதை ஆய்வாளர் கவனித்திருக்கலாம். சுட்டி – https://www.booksfact.com/history/600-years-old-tamil-bell-new-zealand.html

    =================================================================
    Share