(Peer Reviewed) சித்தர் சிவவாக்கியர் ஓர் சமூகச் சீர்திருத்தவாதி

0
முனைவர் சொ. அருணன்
முனைவர் பட்ட மேலாய்வாளர்,
தமிழ்ப் பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி – 3

முன்னுரை

இந்தியத் திருநாட்டின் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் முழுமுதற் காரணமாக விளங்குவது தமிழ் மரபு. தத்துவ, ஆன்மீக, சமுதாயக் கொடைகளை அது நிறையவே இந்தியாவுக்கும் உலகுக்கும் வழங்கியிருக்கிறது. அதனால்தான் பாரதியார்,

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற் களிக்கும்[1]

எனத் தமிழ்மொழி(வழி)யில் கூறி அறிமுகப்படுத்தினார்.

பாரதியார் குறிப்பிடும் அமரநிலை என்பது சாவாக்கலையாகிய சித்த குணமேயாகும். சித்தர்கள் தமிழ்மரபு வேர்களில் கிளைத்த விழுதுகளாக விளங்குபவர்கள். இந்தச் சித்தநிலை யாவர்க்கும் கிடைக்க வேண்டியது என்பதே சித்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அவர்கள் சித்தநெறியைப் பாமரனுக்கும் புரியும்படி எடுத்துரைத்து  வழிகாட்டினார்கள். அவர்களுள் சித்தர் சிவவாக்கியர் மிக எளிமையாகவும், மக்களோடு மக்களாகக் கலந்தும் இந்தநெறியைப் போதித்து வந்தார். அவரைச் சமூகச் சீர்திருத்தவாதியாக இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது.

யார் சித்தர்கள்?

சித்தர் என்ற சொல்லுக்கான பொருளை உணர்த்தும் பிறசொற்கள் சங்ககால இலக்கியங்களில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலும்[2], திருக்குறளிலும்[3] பயின்று வரும் நிறைமொழி மாந்தர் என்ற தொடர், சித்தர்களையே குறிப்பிடுகிறது.

நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியத் தொடருக்கு உரை கூறும் பேராசிரியர், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையவர்[4] என்கிறார்.

புறநானூற்றுப் பாடலில் பெறப்படும் திறவோர் காட்சி[5] என்ற தொடர் சித்தர் அனுபவம் எனக் கருதப்படுகிறது. சித்து எனப்படும் இயற்கைகடந்த அற்புதச் செயல்களைப் பற்றிய குறிப்பு, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது. நிறைந்த ஆற்றல்களும் இயற்கை கடந்த மீவியல் செயல்களுமான பூமியைத் தோண்டி உள்ளே, புகுதல், ஆகாயத்தின்கண் ஏறுதல், கடல்மேல் காலால் நடத்தல் ஆகியவற்றைச் சித்தர்களுக்குரிய அற்புதங்களாகக் குறிப்பிடுவர்.

தமிழ்மரபு சித்தர்களைப் பதினெண்மராக அடையாளம் காட்டுகிறது. ஆனால் இந்தப் பதினெண்மரும் தொகுப்பிற்குத் தொகுப்பு வேறுபடுகிறார்கள் எனினும் பதினெண்மர் என்னும் தொகையில் மாறுபாடில்லை. ஆனால் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் கடந்து விடுகிறது. இவ்வகையில் சித்தர்களில் போற்றுதற்குரியவராகவும் சிறப்பிடம் பெறுபவராகவும் விளங்குபவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். காரணம் அவர் அற்புதங்கள் செய்வதோடு நின்று விடாமல் மானுடச் சிந்தனைகளை முன்னிறுத்திய சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியதே எனலாம்.

கருவிலே திருவுடையார்

தோன்ற புகழொடு தோன்றியவராகக் கருவிலே திருவுடையவராக அவதரித்தவர் சித்தர் சிவவாக்கியர். சிவசிவா என்ற ஒலியுடன் நிலத்தில் பிறந்தவர்[6] ஆதலால் சிவவாக்கியர் எனப் பெயர் பெற்றார். திருவள்ளுவர் எழுதிய நூலை வள்ளுவம் என வழங்குதல் போலவே சிவவாக்கியர் இயற்றிய பாடல்களைச் சிவவாக்கியம் என்றே வழங்குகின்றனர்.

சிவாயம் என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்திச் சிவக் கொள்கையும், சித்தநெறியும் பூண்டு நிறைந்தவர் சிவவாக்கியர். ஆனபோதும் பரசிவ வெள்ளத்திலேயே மூழ்கிக் களித்திருந்தாலும் சமூகத்தில் நிலைத்திருந்த மடமைகளைக் கண்டு சாடும் சீர்திருத்தவாதியாகவே சிவவாக்கியர் விளங்கினார்.

பிற்காலச் சமூகச் சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்கங்கள் சாடல் ஆகியவற்றுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் சித்தர் சிவவாக்கியரேயாவார்.

தீண்டாமைக்கு எதிர்க்குரல்

சமய ஒழுக்கங்களின் மீது படிந்த கறையே தீண்டாமை ஆயிற்று. ஒன்றே குலம் ஒருவனே தேவன்[7] எனத்தோன்றிய சமயக் கோட்பாடுகள் நாளடைவில் அயலார் தலையீடுகளால் தனக்கான தனித்த பக்தர்களைக் கொண்ட சங்கங்களாக மாறத் தொடங்கின. தொடர்ந்து அவை, சாத்திரம் சம்பிரதாயம் என்னும் பெயர்களில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டன. தமிழியத்திற்கும் இந்தியத்திற்கும் இது முரணான சமூக வழக்கு என்பதை,

முன்னேற்றம் அடைந்த வகுப்பார் சில உரிமைகளைத் தமக்கு மட்டுமே உரியதாக வைத்துக் கொண்டனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற கற்பனையில் இறுமாப்புக் கொண்டனர். தகுதியேதுமின்றிப் பிறப்பால் தங்களை உயர்ந்தோர் எனக் கூறிக்கொண்டோர்களின் அறியாமையும் தன்னலப்போக்கும் இறுமாப்பும் சமூக வாழ்வைக் குன்றச் செய்து விட்டன[8] என்கிறார் விவேகானந்தர்.

இதை முன்பே கடுமையாகச் சாடியவர் சித்தர் சிவவாக்கியர் ஆவார். சிவவாக்கியர் மேட்டிமையோரின் தனித்துவமான அடையாளங்கள் சிலவற்றைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்கியவர். கோவில் வழிபாடு, குடுமி வைத்தல், பூணூல் அணிதல், நீராடல், எச்சில் குறித்த கட்டுப்பாடுகள், புலால் உண்ணாமை, வேதம் ஓதுதல், தீட்டுக் கருத்தியல் ஆகியன தமிழக மேட்டிமையோரின் பண்பாட்டு அடையாளங்களாகக் காட்சி அளிக்கின்றன. இப்பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிவவாக்கியர் எதிர்க்குரல் எழுப்பியுள்ளார்.[9]

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்

சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை

பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகாள்

சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே[10]

எனச் சிவவாக்கியர் சாதிமுறைகளைச் சாடுவதோடு, சடங்குகளையும் வெறுத்தொதுக்குகிறார். வேதத்தை விலக்குவதோடு மந்திரங்களை மறுத்து, ஆகமங்களையும் ஆகாதென்கிறார். மதவாதங்களையும் புறச்சடங்குகளையும் புறக்கணிக்கிறார். போலிச் செயல்களைக் கடுமையாகக் கண்டித்து, மூடநம்பிக்கைகளுக்கெதிராக முழக்கமிடுகிறார். சாதி ஆவதேதடா[11] என்று வினவும் அவர் சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பதெக்காலம்?[12] எனவும் ஆவல் உறுகிறார். அவர்தம் பாடல்கள் முழுவதும் சமயக் கொள்கைகளை விடவும் இறைவழிபாட்டை விடவும் சமூகச் சீர்திருத்தமே மேலோங்கி நிற்கிறது.

பெண்மை போற்றிய பெருந்தகையாளர்

ஏனைய சித்தர்கள் பெண்மையை வெறுத்தொதுக்கும் பண்போடே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சித்தர் சிவவாக்கியர் பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளராக விளங்கியிருக்கிறார் என்பதை அவரது வரலாற்றின் வழி உணர முடிகிறது.

குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தனது இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட சிவவாக்கியர், அப்பெண்ணுக்குரிய குலத்தொழிலையே தாமும் செய்து ஏழுபருவம் இன்பம் துய்த்து வந்தார்[13] என்கிறது அவர்தம் வரலாறு.

பெண்மையின் பெருமையை உணர்ந்தவர் சித்தர் சிவவாக்கியர். அதனால் பெண்ணின் உடல்சார்ந்த இயற்கைச் செயலாகிய குருதிப்போக்கைச் சுட்டிக்காட்டி அவளைத் தீட்டு என வெறுக்கும் மடமையைச் சிவவாக்கியர் முற்றிலும் உணர்ந்து எதிர்க்கிறார்.

தூமைநீர் என்று சொல்லப்படும் அக்குருதிப் போக்கின் விளைவே மானுடத்தின் தோற்றக்களன். அதனைத் தீட்டு என்று புறந்தள்ளும் வேதியரை நோக்கி,

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்

மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது

நாதமேது வேதமேது நற்குலங்கள் ஏதடா

வேதமோதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா[14]

எனச் சினந்து சீறுகிறார்.

இவ்வாறெல்லாம் தீட்டின் எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்க்கும் சிவவாக்கியரிடம் வழக்கமாகப் பிற சித்தர்களிடம் எழும் மாதரைப் பழிக்கும் நிலைப்பாடு காணப்படவில்லை.[15]

வழிபாடு – பூசை – மந்திர மறுப்பு

சிவவாக்கியர் தனது இளமைக்காலத்தில் இறைவனைத் தரிசிக்கவேண்டி, தலங்கள்தோறும் சென்று பூவும் புனலும் சொரிந்து வழிபட்டவரே. ஆனால் சித்தநிலைக்கு எய்தியபின்னர் அவற்றை எண்ணி வருந்துகிறார். இதனை,

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை

பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை

மிண்டனாய்த் திரித்தபோ திறைத்தநீர்க ளெத்தனை

மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை[16]

என்ற பாடல்வழி உணர்த்துகிறார். மேலும் பூவும் புனலும் சொரிந்து வழிபடும் தமிழ்மரபுக்கு எதிரான அபிடேகமும், அருச்சனையும் அவருக்கு எரிச்சலையே ஊட்டியதால்,

மாறுபட்ட மணி துலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்

ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே

மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்

கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே[17]

என்றும் சினந்து பாடுகிறார்.

கருங்கல்லை நட்டு வழிபடும் உருவ வழிபாடு தேவைதான் எனினும், அதனை முறையோடு வழிபடாமல் சாத்திரமாகவும், சம்பிரதாயமாகவும் வழிபடும் வழிபாட்டினால் என்ன பயன் கிடைத்து விடும் என்று வினாவுகிறார்.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணென்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் ளிருக்கையில்

சுட்டசட்டிச் சட்டுவக் கறிச்சுவை அறியுமோ?[18]

என்று அரும்பொருள் தந்து உருவ வழிபாட்டின் பயனற்ற தன்மையைப் புலப்படுத்துகிறார்.

உருவநிலையிலும் அருவநிலையிலும் அருவுருவ நிலையிலும் வைத்து இறைவனைப் போற்றும் மரபு சமய உலகினில் உண்டு. அதேபோது, உருவ வழிபாட்டின் மூலமாக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவதும் ஆன்மீகத்திற்குப் புறம்பான தீங்குகள் புரிவதும் ஆகிய நிலை கண்டு வெதும்புவது சிவவாக்கியரின் இயல்பாக இருப்பதைக் காணலாம்.[19]

நிறைவாக

சித்தர் சிவவாக்கியர் தம் பாடல்கள் முழுவதிலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளயே முன்னிறுத்திப் பாடியுள்ளார். இதற்காக அவர் எளிதான சொற்களையே கொண்டு மொழியாளுமை செய்திருக்கிறார். இயற்கையான எங்கும் காணக்கூடிய இயற்கைப் பொருள்களிலிருந்து வெளிப்படும் அவர்தம் உவமைகள் சமூகத்தின் புரையோடிக் கிடக்கும் இருளின்மீது அனல் வெள்ளமெனப் பாய்ந்து அதை எரிக்கின்றது.

எழுத்தறிவு இல்லாத பாமர மக்களுக்கும் கூட உயர்ந்த யோகச் செய்திகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களது புழக்கத்திலுள்ள எளிய சொற்களையே தம் பாடல்களில் கையாண்டுள்ளார்.

ஐம்புலனை வென்றவருக்கு அன்னமிடச் சொல்லி, பெண்மையைப் போற்றுகிறார். தீட்டு எனப் பெண்களை விலக்கி வைப்போரைத் திட்டுகிறார். இறைவனை வேண்டித் தவமிருக்கும் தவசிகளுக்கு இல்லறம் தடையன்று என்று நேர்மறைச் சிந்தனையை எழுப்புகிறார். சாதி சமய மறுப்புகளைத் துணிந்து கூறி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதத்தை ஒழித்து, மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்து, சமூகச் சீர்திருத்தத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அடிகோலுகிறார்.

யோகத்தால் ஞானமெய்தி எல்லோரும் இன்புற்றிருக்க விழையும் சீர்திருத்தச் சிந்தனையாளராக, சமுதாயச் சிற்பியாக சித்தர் சிவவாக்கியர் திகழ்கிறார் என்பது இக்கட்டுரையின் வழி தெளிவுபடுத்தப் பெறுகிறது.

துணைநூற்பட்டியல்

  1. இராமசுப்பிரமணியம், வ.த., (உ.ஆ) புறநானூறு மூலமும் தெளிவுரையும், திருமகள் நிலையம், சென்னை, மு.ப. 2000,
  2. கருணாநிதி ஆ., முனைவர்,  (தொ.ஆ)  சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பாவை பதிப்பகம், 142, ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை  மு.ப. 2007.
  3. குன்றக்குடி அடிகளார், தவத்திரு, (உ.ஆ) திருக்குறள் உரை, அருள்நெறிப் பதிப்பகம், குன்றக்குடி, மு.ப. 2005
  4. சிவவாக்கியர், சிவவாக்கியம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, மு.ப.  1904
  5. திருமூலர், திருமந்திரம், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே,  சென்னை – 600108,  மு.ப.2004
  6. தொல்காப்பியர், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் புத்தக நிலையம், 31. சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 1, மு.ப. 1999,
  7. பாண்டியன், அ., முனைவர், சித்தர் சிவவாக்கியர், 321, மூன்றாம் முதன்மைச் சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி – 8, மு.ப. 2015
  8. பாரதியார், பாரதியார் கவிதைகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை பிராட்வே,  சென்னை – 600108,  மு.ப.2011
  9. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், அன்னை அபிராமி அருள் வெளியீடு, ………., 1978.
  10. விவேகானந்தர் சுவாமி, , விவேகானந்தர் ஞானதீபம், தொகுதி 8, ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் சென்னை, மு.ப. 2001.

அடிக்குறிப்புகள்

[1] . பாரதியார், பாரதியார் பாடல்கள், பாரதசமுதாயம் பாடல்..

[2]. தொல்காப்பியர், தொல்காப்பியம், பாடல். 1484

[3] . திருவள்ளுவர், திருக்குறள், பாடல். 28

[4] . முனைவர் அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.34

[5] .புறநானூறு 192 8-11

[6]. மாணிக்கவாசகம், இரா. நம்நாட்டுச் சித்தர்கள், ப.173

[7] திருமூலர், திருமந்திரம், பா.300

[8] .சுவாமி விவேகானந்தர், விவேகானந்தர் ஞானதீபம் – 8, ப.400

[9] .முனைவர் ஆ.கருணாநிதி, (தொ.ஆ) சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை, பக்.149-150

[10] .சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.112

[11] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.47

[12] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.126

[13]. அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், பக்.46-47.

[14] சிவவாக்கியர், சிவவாக்கியம், பாடல்36.

[15] அ.பாண்டியன், முனைவர், சித்தர் சிவவாக்கியர், ப. 211.

[16] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.29

[17] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.34

[18] சித்தர் சிவவாக்கியர், சிவவாக்கியம், பா.520

[19] அ.பாண்டியன், சித்தர் சிவவாக்கியர், ப.205

—————————————————————————————————-

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழில் சித்தர் மரபு செழுமையான வளர்ச்சியைக் கொண்டு திகழ்கின்றது. பதினெண் சித்தர்கள் என்ற வரையறை ஆய்வாளர்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பதினெண் என்ற பட்டியல் மாறுபாடு உண்டு. எனினும் சித்தர்களில் சிவவாக்கியருக்கு என்று தனித்த இடம் உண்டு. சிவவாக்கியரின் சிந்தனைகள் பிற சித்தர்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன என்பதைக் கட்டுரை விளக்க முற்படுகின்றது. குறிப்பாக மக்களிடையே மண்டிக்கிடந்த பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கு எதிரான கலகக் குரலை முன்வைத்ததில் சிவவாக்கியர் எந்தகைய நிலையில் செயல்பட்டுள்ளார் என்பதைக் கட்டுரையாளர் சான்றுகளோடு விளக்கியிருக்கின்றார்.

—————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.