ஏறன் சிவா
 
காலத்தால் அழியாத பொன்னும் வேண்டேன்!
கவலைகளே அற்றதொரு நிலையும் வேண்டேன்!
சோலைக்கு நடுவேநல் மனையும் வேண்டேன்!
துள்ளியங்கு வந்துதொடும் தென்றல் வேண்டேன்!
ஆல்போல பல்லாண்டு வாழ்தல் வேண்டேன்!
அறிவுலகில் மேதையென புகழும் வேண்டேன்!
ஞாலத்தை உயர்த்துகின்ற நற்சொல் ஒன்றை
நற்றமிழில் நான்படைக்க வேண்டு மம்மா!
 
கனிச்சாற்றை முப்பொழுதும் சுவைத்தல்  வேண்டேன்!
கண்ணசைவில் நினைத்ததனை முடித்தல் வேண்டேன்!
பனிமலையைக் காலடியில் பணித்தல் வேண்டேன்!
படைகொண்டு வெற்றிகளைக் குவித்தல் வேண்டேன்!
இனிமையான அழகுடைய பெண்ணி னோடு
இன்புற்றுக் கழிக்கின்ற பொழுதும் வேண்டேன்!
நனிசிறந்த புதுக்கருத்தைக் கொண்டு நல்ல
தமிழ்படைக்கும் நெஞ்செனக்கு வேண்டு மம்மா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.