நாங்குநேரி வாசஸ்ரீ

81. பழைமை

குறள் 801:

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

பழைமை ங்கது என்னன்னா ரொம்ப நாள் பழகின சேக்காளி உரிமல தப்பா என்னமும் செஞ்சாலும் அதப் பெரிசாக்காம விடுததுதான்.

குறள் 802:

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்

சேக்காளிங்க உரிமையாச் செய்யுதத நட்புக்கு உறுப்புனு சொல்லுதோம். அந்த உரிமைய நெனச்சி சந்தோசப்படுதது பெரியமனுசங்களுக்கு கடம ஆவும்.

குறள் 803:

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை

பிடிக்கலன்னாலும் பழைய சேக்காளிங்க செஞ்சத ஒத்துக்கிட்டு தானே செஞ்சது கணக்கா காட்டிக்கிடலேன்னா அம்புட்டு நாள் பழகினதுல என்ன பிரயோசனம்?

குறள் 804:

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

தம்மேல இருக்க உரிமையில சேக்காளி கேக்காமலேயே ஒரு காரியத்த செஞ்சுபோட்டாலும் ஒத்துக்கிட்டு நடப்பாங்க புத்தியுள்ளவுக.

குறள் 805:

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

நாம வெசனப்படுததுமாரி வேலய சேக்காளி செஞ்சுபோட்டாம்னா அதுக்கு அறியாமை மட்டுந்தான் காரணமா.  உரிமையுந்தான்னு நெனச்சிக்கிடணும்.

குறள் 806:

எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

எல்லையக் கடக்காம வரமொறையோட பழகுதவங்க, தன்னோட பழைய சேக்காளி கெடுதியச் செஞ்சாலும் அதுக்காவ ஒறவ அத்து விடமாட்டாக.

குறள் 807:

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்

தன்னோட சேக்காளி அழிஞ்சுபோவுதது கணக்கா கெடுதலச் செஞ்சாலும் ரொம்பகாலம் பழகினவுக அவன் மேல இருக்க நேசத்த விட மாட்டாக.

குறள் 808:

கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்

சேக்காளி உரிமையா தப்பு செஞ்சத பொறத்தியார் எடுத்துச்சொல்லியும் கேக்காத நல்லவனுக்கு அவுக கூட சேக்க வச்சிருந்த நாளெல்லாம் வீணான நாள் ஆவும்.

குறள் 809:

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

பலகாலமா பழகின சேக்காளி என்னமாரி நடந்துக்கிட்டாலும் சேக்கைய கைவிடாம இருக்கவர ஒலகம் போற்றும்.

குறள் 810:

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

பழைய சேக்காளிக தப்பே செஞ்சாலும் சண்ட போடாம சேக்கயா இருக்கவன பகையாளியும் விரும்புவான்.

(அடுத்தாப்லையும் வரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *