குறளின் கதிர்களாய்…(277)

செண்பக ஜெகதீசன்
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணுங் கொளல்.
– திருக்குறள் -986 (சான்றாண்மை)
புதுக் கவிதையில்…
சால்பாம் பொன்னின்
தரமறிய
உரசிப் பார்க்கும் உரைகல்,
தம்மிலும் தாழ்ந்தோரிடத்தும்
தமது
தோல்வியை ஒப்புக்கொள்ளலே…!
குறும்பாவில்…
சான்றாண்மையை மதிப்பிடும் உரைகல்,
தம்மைவிடத் தாழ்ந்தோரிடத்திலும் தமது
தோல்வியை ஒத்துக்கொள்வதுதான்…!
மரபுக் கவிதையில்…
பொன்னின் தரமதைப் பார்த்திடவே
போட்டே உரசிடும் உரைகல்போல்
நன்றெனச் சால்பை மதிப்பிடவே
நல்லதாய் உரைகல் ஒன்றுண்டு,
தன்னைப் போலே யில்லாமல்
தனக்கும் கீழாய் உள்ளவர்கள்
தன்னையும் மதித்தே அவர்களிடம்
தனது தோல்வியின் ஒப்புதலே…!
லிமரைக்கூ..
உரைகல் தரங்காட்டும் பொன்னை,
கீழ்நிலையுள்ளோரிடம் தோல்வியை ஒத்திடும் பண்பு
உரைகல்லாய் மதிப்பிடும் சால்பது தன்னை…!
கிராமிய பாணியில்…
தங்கத்தோட தரம்பாக்க
அத
ஒரசிப் பாக்க
ஒரகல்லு உண்டு..
அதுபோல
மனுசனுலயும்
நல்லகொணமுள்ள
சான்றோனான்னு பாக்க
ஒரகல்லு ஒண்ணுண்டு..
அதுதான்,
தன்னவிடவும் தாழ்ந்தவங்கிட்டயும்
தனக்க தோல்விய
ஒப்புக்கொள்ளுற கொணந்தான்…!