(Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்

0

மு. கயல்விழி
உதவிப்  பேராசிரியர், தமிழ்த் துறை, பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி, காஞ்சிபுரம்.
மின்னஞ்சல்: kayalarul22@gmail.com

திட்டச்சுருக்கம்

சோழர்கள் வேளாண் நலன் சார்ந்த ஆட்சியாளர்கள். இவர்கள் காலத்தில் வேளாண்மையில் பெரும் புரட்சி ஏற்பட்டது. காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. காவிரி நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அவை மூலமாக ஆற்று நீர், ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன, பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. நதிகளின் குறுக்கே பல புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. குளங்ளும் தூர் வாரப்பட்டன.   சோழர்கள் நன்னீரைத் தேக்கி வைத்து விவசாயம் செழிக்கப் பாடுபட்டனர் “சோழ நாடு சோறுடைத்து” என்பதற்கு சோழர்களின் நீர்ப் பாசன உத்திகளே காரணங்கள் ஆகும்.

முன்னுரை 

“மேழிச் செல்வம் கோழைபடாது” என்பார்கள் பெரியோர். இம் மேழிச் செல்வத்தை மையமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்த நாடு சோழ நாடு. இது வளமையும் செழுமையும் தன்னகத்தே கொண்டது. இது வற்றாத காவிரி நதி பாய்ந்து வளப்படுத்தும் பூமி. நைல் நதி   எவ்வாறு எகிப்து நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்ததோ அவ்வாறே காவிரி நதியும் சோழ நாட்டுக்கு உயிராய்த் திகழ்ந்தது. இதனால் காவிரியைப் புகழப் போந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் தன் பட்டினப்பாலையில் “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” என்று புகழ்கின்றார். பொங்கிப் பாய்ந்த இந்தக் காவிரியை ஆற்றுப்படுத்தி இதை நன்முறையில் விவசாயத்துக்குப் பயன்படுத்திய பெருமை சோழ மன்னர்களைச் சாரும். அவர்கள் பல்லாற்றானும் முயன்று இந்நீரைக் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் பாய்ச்சி நன்முறையில் நீரைத் தேக்கி வேளாண் வளம் செழிக்கப் பாடுபட்டனர்.

சோழ மன்னர்கள், சோழ நாடு மட்டுமன்றி பருவ மழையை மட்டுமே நம்பியிருந்த தொண்டை நாட்டிலும் விவசாயம் செழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு நீர் நிலைகளைக் காத்தனர். சோழ நாடு வளமுடன் திகழ்ந்ததற்குச் சோழ மன்னர்களின் சிறப்பான திட்டமிட்ட நீர்ப் பாசன உத்தியே காரணமாகும். நீரை நன்முறையில் தேக்குவதிலும் அதை முறையாகப் பயிர்களுக்குப் பயன்படுத்தச் செய்வதிலும் சோழ மன்னர்களுக்கு இணையாக இந்தியாவில்  வேறு  அரசர்களைக் காணவியலாது (சோழர்களின் சமகால ஆட்சியாளர்களான சாளுக்கியர்கள் போர்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினர். சேரநாடு, இயற்கையாகவே நீர் வளம் நிறைந்த பகுதியாகும். பாண்டிய நாடு, வானம் பார்த்த பூமி என்பதால் அவர்கள் வேளாண்மைக்கு அதிக அக்கறை  காட்டவில்லை. எனவே சோழரைப் போன்று பிற அரசர்கள் வேளாண்மைக்கு அதிகம் முக்கியத்துவம் நல்கினாரில்லை). சோழர்களின் சிறந்த நீர் மேலாண்மை முறையால் வேளாண்மை செழித்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது, நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது, மக்கள் நிம்மதியாய் வாழ்ந்தனர்.

நீர்ப்பாசன நிர்வாகம் 

நீர்ப் பாசன மேலாண்மை என்பது நன்னீரை  ஒரு துளியேனும் வீணாக்காமல் நன்முறையில் வேளாண்மைக்குப் பயன்படுத்தி வேளாண் வளம் செழிக்கச் செய்தலாகும். நீர்ப் பாசன மேலாண்மையை நன்கறிந்த சோழர்கள், அதை நன்முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டனர். இயற்கையாய்க் கிடைக்கும் நீரை நன்கு பயன்படுத்தி வேளாண்மை வளம் பெறச் செய்வதில் சோழர்களுக்கு ஈடு இணை ஒருவரும் இலர். சோழர் காலத்தில் அவர்களின் ஆட்சியின் கீழ் தொண்டை நாடு இருந்தது. சோழ நாடு ஆற்று நீர்ப் பாசனத்தை மையமாகவும், தொண்டை நாடு கிணறு மற்றும் ஏரி நீர்ப் பாசனத்தையும் நம்பியிருந்தன. சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் யாவற்றிலும் பாரபட்சம் பாராமல் விவசாயத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தனர்.

அக்காலத்தில் ஏரிகள், குளங்கள், கிணறுகள், கால்வாய்கள், ஆறுகள் யாவற்றையும் முறையே பராமரிப்பது இன்றியமையாததாயிற்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரி வாரியத்தவர், இப்பணியைச் கிராமங்களில் செய்து வந்தனர். பல பகுதிகளில் இந்நீர் பாசனத்தைக் கண்காணிப்பதற்காக பிரத்தியேக வரிகளும் விதிக்கப் பட்டன. இதற்காகப் பொது மக்களும் நன்கொடையைத் தாராளமாக வழங்கினர் (SII.Vol:6.No:294).  இது தவிர்த்து 1 மா நெல் விளைச்சலுக்கு, 2 மரக்கால் நெல்லும் இதற்கு பொதுமக்கள் ஏரி வாரியத்துக்கு வழங்கினர். இவ்வாறு வழங்கப்பட்ட வரிக்கு “ஏரி ஆயம்” என்று பெயர் (SII.Vol:7.No:805). குளங்களைப் பராமரித்தல், ஏரிகளின் கரைகளைக் கண்காணித்தல், கால்வாய்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை ஏரி வாரியத்தவர் முறையுடன் செய்து வந்தனர். இதனால் நீர் வீணாகாமல் முறையாக நிலங்களைச் சென்றடைந்தது. விவசாயத்துக்குத் தொண்டு செய்வதில் சோழ மன்னர்கள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டனர். மன்னர்கள் தவிர அரசு அலுவலர்களும் ஊர் பிரமுகர்களும் தன்னார்வலர்களும் நீர்ப் பாசன உத்திக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.

ஆற்றுநீர்ப் பாசனம் 

தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்ட நீர்ப் பாசன முறை, ஆற்று நீர்ப் பாசன முறையாகும். காவிரி, தென்பெண்ணை, பாலாறு, சேயாறு, வேகவதி போன்ற ஆறுகள் பாய்ந்து நிலங்களை வளப்படுத்தின. அக்காலத்தில் காவிரி ஆற்றின் கரைகள் நன்கு பலப்படுத்தப்பட்டன காவிரிக் கரையின் இரு மருங்கும் நன்கு உயர்த்தப்பட்டன. (ARE.No:11/1911). பல புதிய கிளை ஆறுகளும் இக்காலத்தில் வெட்டப்பட்டன. வீரசோழன் வடவாறு, மதுராந்தகன் வடவாறு, மண்ணியாறு போன்ற ஆறுகள் புதியதாக வெட்டப்பட்டன, தஞ்சாவூருக்கு வடக்கே ஓடும் வீரசோழன் வடவாறும், திருப்பனந்தாளுக்கு வடக்கே ஓடும் மதுராந்தகன் வடவாறும், முதலாம் பராந்தகனால் (கி.பி.907-53) வெட்டப்பட்டன.

இது தவிர திருவைக்காவூர், திருப்புறம்பியம், திருவாய்ப்பாடி, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் வழியாகப் பாய்ந்தோடும் மண்ணியாறு, முதலாம் பராந்தகனால் திருத்தி அமைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மற்றும் கோனேரிராஜபுரம் வழியாக ஓடும் கீர்த்திமான் ஆறு, முதலாம் இராஜராஜனால் (கி.பி. 985-1014) வெட்டப்பட்டது. குடமுருட்டியில் பிரியும் முடிகொண்டான் ஆறு, முதலாம் இராஜேந்திர சோழனால் (கி.பி.1012-44) வெட்டப்பட்டது (ARE.No:75/1927-28). திருவாரூர் மாவட்டம் திருமணஞ்சேரிக்கு அருகிலுள்ள வீரசோழன் ஆறு, வீரராஜேந்திரனால் (கி.பி.1063-70) வெட்டப்பட்டது (SII.Vol:8.No:243). மேலும் குத்தாலத்துக்கு அருகிலுள்ள விக்கிரமனாறு, விக்கிரம சோழனால் (கி.பி.1118-36) வெட்டப்பட்டது. இவை தவிர தடுப்பணைகள் பல கட்டப்பட்பட்டு, நீர் தேக்கப்பட்டது. திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோவிலடியில் காவிரிக்கு குறுக்கே ஒரு பேரணை, வீர இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

ஆற்றுக் கால்வாய்கள் 

நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு, அவை மூலமாக ஆற்று நீர் ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. பொதுவாக வற்றாத ஜீவ நதியாகத் திகழ்ந்த காவிரி நதியிலிருந்து கால்வாய்கள் பல வெட்டப்பட்டு, நீர் கொண்டுவரப்பட்டன. இந்தக் கால்வாய்கள் ஆண்டு முழுவதும் ஏரி வாரியத்தால் முறையாகப் பராமரிக்கப்பட்டன. பல கால்வாய்கள் அவற்றை வெட்டிய சோழ மன்னர்கள் பெயரிலே அழைக்கப்பட்டன. இராஜராஜன் வாய்க்கால், திருச்சி மாவட்டம் திருமழபாடியில் வெட்டப்பட்டது (SII.Vol:15No:644).  அவரது மகனான இராஜந்திர சோழன் வாய்க்கால், இதே மாவட்டத்திலுள்ள கீழ்ப்பழுவூரில் வெட்டப்பட்டது. (SII.Vol:3.No:71).  மேலும் அன்பில் என்ற கிராமத்தில் இவனது பெயரிலே மற்றொரு வாய்க்காலும் வெட்டி, நீர் கொண்டு வரப்பட்டது (SII.Vol:8.No:192).  சோழன் மூன்றாம் இராஜராஜன் (கி.பி.1216-56) காலத்தில் திருச்சி மாவட்டம் திருவானைக்காவில் பிள்ளைக்கொல்லி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:76).  ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூரில் வேள்குல பீமன் வாய்க்கால் வெட்டப்பட்டது. (SIIVol:13.No:36).

இவை தவிர  பல புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907), ஆதிச்ச வாய்க்காலை வெட்டி, நீர் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உத்தமசீலி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:133). முதலாம் இராஜராஜன் திருச்சியில், புகழ் மிக்க உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைத்தான். (ARE.No:24/1925). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் பராந்தக சோழன் பரமேஸ்வர வாய்க்காலை வெட்டி, பாலாற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்தான் (ARE.No:160/1940). இதே மாவட்டம் உக்கலில் இரண்டாம் இராஜேந்திர சோழன், பராக்கிரம சோழ வாய்க்காலை வெட்டினான் (ARE.No:160/1940). முதலாம் இராஜராஜன், வேலூர் மாவட்டம் திருமால்பூரில் விமலாதித்த வாய்க்காலை வெட்டினான் (SIIVol:13.No:30).  திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ள பெருவள வாய்க்கால் மற்றும் இதே ஊரில் பைங்கணி வாய்க்கால்களும் இவன்  காலத்தில்தான்  வெட்டப்பட்டன (SII.Vol:2.No:5).

ஏரிப் பாசனம் 

சோழர் காலத்தில் ஏரிப்பாசனம் சிறப்புற்றது. மற்ற பாசன முறைகளை விட ஏரிப்பாசன முறை சிறப்பானது, பாதுகாப்பானது, எளிதானது. எனவே சோழ மன்னர்கள் நாடு முழுவதுமுள்ள பல ஏரிகளைப்  புதுப்பித்தும் தேவைப்படும் இடங்களில் புதிய ஏரிகளை வெட்டுவித்தும் சிறப்பாகப் பணியாற்றினர். சோழ மன்னர்கள் பலர், தம் பெயரில் புதிய ஏரிகளை அமைத்தனர். விழுப்புரம் மாவட்டம் உலகபுரத்தில் கண்டராதித்த ஏரியைக் கண்டராதித்த சோழன் (கி.பி.950-57) வெட்டினான் (ARE.No:140/1919).   திருச்சி மாவட்டம் திருமழப்பாடியில் செம்பியன் மாதேவ ஏரியை செம்பியன் மாதேவி என்ற அரசி வெட்டினாள் (SII.Vol:5.No:644). காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள ஏரியை மதுராந்தக சோழன் (கி.பி.970-85)  வெட்டினான். இதே மன்னன் பாண்டிச்சேரியிலுள்ள திருபுவணியிலும் தன் பெயரில் ஓர் ஏரியினை வெட்டுவித்தான் (ARE.No:192/1919). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் சுந்தரப் சோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி என்ற இரு ஏரிகளை குந்தவை என்ற சோழ இளவரசி வெட்டினாள் (SII.Vol:3.No:147).  முதலாம் இராஜேந்திர சோழன் தன் வட இந்திய வெற்றியை நினைவுகூருமுகமாய் பெரம்பலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ கங்கம் என்ற ஏரியை ஏற்படுத்தினான்.

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120) சித்தூருக்கு அருகிலுள்ள புங்கனூரில் இராஜேந்திர சோழப் பேரேரியை வெட்டினான். (SII.Vol:3.No:205).  இதே மன்னன் பாபநாசத்துக்கு அருகே முனியூரில் ஒரு ஏரியை வெட்டினான் (ARE.No:540/1906). சிதம்பரம் வட்டம் வீராணத்தில் தமிழகத்தின் மிகப்  பெரிய வீராணம் ஏரியை முதலாம் பராந்தகன் வெட்டினான். (ARE.No:615/1920). இவன் காலத்தில் வேலூர் மாவட்டம் சோளிங்கபுரத்தில் சோழவாரிதி ஏரி வெட்டப்பட்டது (Epi.Gra.Ind.No:3.P:91). இதே மன்னன் விண்ணமங்கலம் ஏரியையும், (SIIVol:2.No:380). திருவண்ணாமலை மாவட்டம் சோதியம்பாக்கம் ஏரியையும் வெட்டினான் (SII.Vol:3.No:11).   இவன் காலத்தில் குளித்தலைக்கு அருகேயுள்ள நங்கவரம் ஏரியும் (SII.Vol:8.No:651), திருக்கோவிலூரில் புத்தேரியும் வெட்டப்பட்டன (SII.Vol:7.No:798). முதலாம் இராஜராஜன் புதுக்கோட்டை மாவட்டம் திருவேழ்ப்பூர் ஏரியை வெட்டினான், பாண்டிச்சேரியிலுள்ள பாகூர் ஏரியும் இக்காலத்தில்தான் வெட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் கீழ்ப்பழுவூரில் உள்ள பன்மகேஸ்வரப் பேரேரி இக்காலத்தில் வெட்டப்பட்டது (SII.Vol:5.No:724). முதலாம் இராஜராஜன் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஏரியை வெட்டுவித்தான் (ARE.No:355/1917). புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாம் இராஜராஜன் காலத்தில் வெட்டப்பட்டது (ARE.No:191/1930). பிற்காலச் சோழர்கள் காலத்தில் சித்தூருக்கு அருகேயுள்ள மேகலாசப் பல்லி ஏரியும், யோகி மல்லாவரத்து நாராயண புத்தேரியும் வெட்டப்பட்டன.

சோழர் காலத்தில் ஏற்கெனவே இருந்த பல ஏரியின் கரைகள் உயர்த்தப்பட்டன. முதலாம் இராஜராஜன் காலத்தில் பரமேஸ்வரப் பேரேரியின் கரையை அம்பலக்கூத்தன் என்பவன் உயர்த்தினான் (ARE.No:191/1977). மேலும் நரசிங்க மங்கலத்து ஏரியை அருணிதிக் கலியன் என்ற அரசு அதிகாரி புனரமைத்தான் (SII.Vol:3.No:106). புயலால் உடைந்த திருக்காஞ்சி ஏரிக்கரையை இவ்வூர்த் தலைவனே தன் சொந்தச் செலவில் புனரமைத்தான் (ARE.No:215/1919). ஏரிகள் மூலம் நல்ல பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காகப் பல ஏரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதற்காகும் செலவை அந்தந்த ஊர்க் கோயில்களே ஏற்றுக்கொண்டன. சான்றாக திருவள்ளூர் மாவட்டம் திருக்கச்சூரில் உள்ள ஏரியைப் புனரமைக்கும் பணியை அவ்வூர்க் கோயிலே ஏற்றுக்கொண்டது (ARE.No:295/1909).

சில சமயங்களில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. இது நிலங்கள் அதிக பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சான்றாகத் திருவாய்ப்பாடி கிராமத்தில்  உள்ள ஏரியிலிருந்து புதிய வாய்க்கால் வெட்டப்பட்டது. அதற்காகும் செலவை ஈடுகட்ட, அவ்வூர் தரிசு நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதன் மூலம் புதிய நிலங்கள் பாசன வசதி பெற்றன (ARE.No:88/1931-32).  சோழர் காலத்தில் அரசும் அரசு அலுவலர்களும் தவிர, தனி மனிதர்களும் நீர்ப் பாசனத்திற்குத் தொண்டுகள் பல புரிந்துள்ளனர். சான்றாகப் பதக்கம் என்ற ஊரில் ஏரியின் குமிழியை அவ்வூர்ப் பிரமுகன் புஷ்ப மாணிக்க செட்டி    என்பவன் கட்டுவித்தான் (ARE.No:171/1942). விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் தூம்பைக் காக்கு நாயகன் என்பவன் கட்டுவித்தான். வேலூர் மாவட்டம் ஒழுகூர் ஏரியின் தூம்பை மாவலி வாணராயன் என்ற சிற்றரசன் கட்டுவித்தான். காவேரிப் பாக்கத்தில் உள்ள ஏரியின் தூம்பை வீர வினோதச் சம்புவராயன் கட்டுவித்தான் (ARE.No:390/1905).   ஏரிகளில் உள்ள தூம்புகள் கல்லிலே அமைக்கப்பட்டன. அவை நீர் வெளியேறுவதைத் தடுத்தன. மேலும் வெளியேறும் நீரின் அளவையும் கட்டுபடுத்தின. சோழர் காலத்தில் ஏரிப் பாசனம், உள்ளூர் ஏரி வாரியத்தின் மூலம் செம்மையான முறையில் நிர்வகிக்கப்பட்டது.

குளத்து நீர்ப் பாசனம் 

சோழர் காலத்தில் குளத்துப் பாசன முறை சிறப்புடன் காணப்பட்டது. பல ஊர்களில் ஆற்று நீர்க் கால்வாய்கள் மூலம் குளங்களை  அடைந்து அவை விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் பொதுமக்கள் நீர் அருந்தவும் பயன்பட்டன. குளங்களில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக “மாண்டுகள்” (தடுப்புகள்)  அமைக்கப்பட்டன. சோழர் காலத்தில் பல புதிய குளங்கள் வெட்டப்பட்டன. சான்றாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருவெறும்பூரில் முதலாம் பரந்தக சோழன் கவிர் குளம் என்ற குளத்தை வெட்டினான் (SII.Vol:17.No:336). பல குளங்களுக்கு மதகுகளும் மாண்டுகளும் அமைக்கப்பட்டன. ஏரிகளுக்குத் தூம்பு போல், குளங்களுக்கு மாண்டுகள் செயல்பட்டன. சான்றாக மூன்றாம் இராஜராஜன் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் துரிஞ்சம் பூண்டியிலும், சிறுவாங்கூரிலும் உள்ள குளங்களில் புதிய மாண்டுகள் அமைக்கப்பட்டன. அவை தடுப்புகள் போன்று செயல்பட்டன.

குளங்களிலிருந்து நீரை வெளியேற்றும் கால்வாய்கள் கற்களால் கட்டப்பட்டன. இவை குழாய்கள் போன்று காணப்பட்டன. இந்த குளங்களை முறையாகப் பராமரிக்க, அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர் (SII.Vol:8.No:652). பொதுவாக ஏரி வாரியத்தவர்களே இக்குளங்களை நிர்வகித்தனர். குளங்களில் உள்ள வண்டல்களை அகற்ற, தனிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சான்றாக திருவண்ணாமலை மாவட்டம் காப்பளூரில் குளத்து வண்டல் எடுக்க. பராந்தக சோழன் காலத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் (ARE.No:284/1939).  இப்பணிக்காக அவர்களுக்குக்  கருவிகளும் ஓடங்களும் வழங்கப்பட்டன. கோடைக் காலங்களில் குளங்களில் நீர் வற்றிய பின் அவற்றின் அடியில் தேங்கும் வண்டல்கள் எடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன. இதற்குக் “குளவடை” என்று பெயர்.

கிணற்றுப் பாசனம் 

கிணற்றுப் பாசனம் தொண்டை மண்டலத்தில் அதிகம் காணப்பட்டது. பருவ மழையை மட்டும் நம்பிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் காணப்பட்டது. கிணற்று நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக ஏரிகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டது. சால்கள் மூலம் நீர் இறைக்கப்பட்டுப் பயிரிடப்பட்டன. ஏற்றம் இறைக்கும் வழக்கம்  நாடு முழுவதும்  பரவலாகக் காணப்பட்டது.

முடிவுரை 

சோழர் காலம், தமிழகத்தின் ஈடு இணையில்லாப் பொற்காலமாகும். பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை மக்களை அண்டாமல் சோழ மன்னர்கள் காத்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மையே அடிப்படை என்பதால் அதை வளர்ப்பதில் அதிக முனைப்பு காட்டினர். வேளாண்மைக்கு அடிப்படையான நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கக் கூடாது என்பதற்காக ஏரிகள், குளங்கள் வெட்டி, அவற்றைப் பாசனத்துக்கு நன்முறையில் பயன்படுத்தினர். சோழர்கள் நீர்ப் பாசன உத்தியைப் போன்று சிறப்பான முறையை வேறு எந்நாட்டிலும், எக்காலத்திலும் காணவியலாது. சோழர்கள் அரசு வேளாண் நலன் சார்ந்த அரசாகத் திகழ்ந்தது. சோழ மன்னர்கள் கால வெள்ளத்தில் மறைந்தாலும், அவர்கள் வெட்டிய ஏரிகளும் கால்வாய்களும், குளங்களும் இன்றும் நிலைத்து நின்று அவர்கள் புகழைப் பறைசாற்றி வருகின்றன. சோழர்களின் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு (Benevolent Government) என்பதற்கு அவர்களின் நீர் மேலாண்மை உத்தியே சாலச் சிறந்த சான்றாகும்.

சுருக்கம் (Abbreviations)

1.ARE-Annual Report on Indian Epigraphy

2. SII-South Indian Inscriptions

3. Epi.Gra.Ind-Epigraphica Indica

பார்வை நூற்பட்டியல்

1. Neelakanta Sastri.K.A,(1975), The Cholas, University of Madras, Chennai.

2. Neelakanta Sastri.K.A,(1939), Studies in Cola History and Administration, University of Madras, Chennai.

3. Appadorai. A. (1990).Economic Conditions in South India (1000-15000), University of Madras, Chennai.

4.பிள்ளை.கே.கே. (1977) ,சென்னை,தமிழ் நாட்டு வரலாறு- மக்களும் பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

5.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை,( 2008), பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

6.பிள்ளை.கே.கே. (1997) ,சென்னை, சோழர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

7.பாலசுப்பிரமணியம்.மா (1979), சென்னை, சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

சோழ மன்னர்களின் நீர் மேலாண்மை முறைகள் குறித்த செய்திகளை ஆய்வாளர் சிறப்புற எடுத்துரைத்துள்ளார். மேலும் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஏரிகள், கால்வாய்கள் முதலியனவற்றையும் வரிசைப்படுத்தியுள்ளார். சோழர்கள் காலத்து நிர்வாகம், வாழ்வியல் முதலியனவற்றை ஆய்வு செய்வோருக்கும் இக்கட்டுரை துணைநிற்கும்.  


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.