படக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. அய்மான் பின் முபாரக்கின் புகைப்படக்கருவி எழிலாய்ப் பதிவுசெய்திருக்கும் இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டி 242க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
”அன்பின் வழியது உயிர்நிலை” என்று பேராசான் வள்ளுவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் அன்பில் பி(இ)ணைந்திருக்கும் கவிக்குலங்கள் நம்மை நெகிழவைக்கின்றன!
கவிஞர்களே! இந்தக் கவிக்குலத் தோழர்களைப் பாடுக பாட்டே என்று சொல்லி உங்களை அன்போடு அழைக்கின்றேன்!
*****
”கடுவனே! வெட்கங்கொண்ட மந்தியினை நீ வேட்கையுடன் சேர்ந்து குறிஞ்சிக் காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்” என்று குறிஞ்சிப்பண்ணில் கவிதை பாடுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
குறிஞ்சிப் பண்
வண்டு சுழன்றிடும் சோலைமிடைக் காதல்
கண்டு உயிர்வாழ்ந்து பரிணமிப்பாய்
வெட்கங் கொண்ட கொடிச்சியினை – கடுவனே
வேட்கையுடனே சேர்ந்திருப்பாய்!
கொட்டும் சாரல் வெக்கைத் தவிர்க்கக்
கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் – அது
வானவர் உலகையே காட்டுமென்ற
வள்ளுவன் வாக்கை மெய்ப்பிப்பாய்!
நேற்று இன்று நாளையின்றி
நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
காற்றிடை நுழையாக் காதல் கொண்டு – குறிஞ்சிக்
காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்
*****
நல்ல கவிதையை யாத்தளித்த தோழருக்கு நன்றி!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
மனிதன் மட்டும்…
குரங்கி லிருந்து பிறந்தவன்தான்
குணமதில் மனிதன் மாறிவிட்டான்,
மரத்தை உறைவிடம் ஆக்கியேதான்
மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினமே,
மரத்தின் கிளையி லிருந்தாலும்
மரத்தை யழிக்க நினைப்பதில்லை,
தரத்தி லுயர்வாம் மனிதனவன்
தாழ்கிறான் மரங்கள் தனையழித்தே…!
தம் மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினங்கள் மரத்தினை அழிப்பதில்லை. ஆனால் பகுத்தறிவு பெற்றதால் குரங்கினும் தரமுயர்ந்துவிட்ட மனிதனோ மரங்களை அழித்தொழிக்கின்றான் என்று மனிதனின் மடமையைச் சுட்டிக்காட்டும் கடமையைச் சரியாய்ச் செய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.