படக்கவிதைப் போட்டி – 243
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
மரம் நடுவாய்…
மரங்களை வெட்டி யழித்துவிட்டு
மாடிகள் கட்டும் மனிதாகேள்,
இருப்பது சிலநாள் இவ்வுலகில்
இதற்குள் இயற்கையை அழிப்பதேனோ,
மரங்களால் தானே மழைவந்தே
மன்னுயி ரெல்லாம் பிழைத்திருக்கும்,
கருத்தினி லிதனைக் கொண்டேதான்
காசினி வாழவை மரம்நட்டே…!
செண்பக ஜெகதீசன்…
விதையாய் விழுந்தாலும்
விண்ணை நோக்கி
மண்ணை பிளந்து
முயன்றால் தான்
முளைத்திட முடியும்
முயலாமையால்
பயனேதும் இல்லை
வானளாவ உயர்ந்திட
முயற்சி ஒன்று போதுமே
விதையாய் நெஞ்சில்
விழுந்த யாவும்
திருவினையாய் மாறிடுமே
விதையாய் விழுந்தாலும்
பழுதாகி போகாமல்
மண்ணை பிளந்து
முளைத்தெழ
மண்ணில் ஈரம் வேண்டும்
எழும் எண்ணமும்
கண்ட கனவும்
மெய்ப்படுமே
நெஞ்சில் வீரமும்
ஈரமும் சேர்ந்திருந்தாலே
விதையாய் விழுந்து
முளைத்து செடியாய்
மரமாய் வளர்ந்திட
நீர் வேண்டும்
அன்பெனும் விதையை
நெஞ்சில் விதைத்து
நீர்விட்டு
மனிதநேயமேனும்
மரத்தை வளர்த்திடுவோம்
நிழல் தரும் மேகமாய்
இதயங்கள் கொண்டாடும் வானமாய்
எதிரியையும் அரவணைத்து
எல்லைகள் கடந்து வாழ்ந்திருப்போம்
என்றென்றும் புன்னகையுடன்
ஒன்றே குலமென்று
இவ்வுலகுக்கு உணர்த்தி நிற்போம்
வளமுடன் வாழ்ந்திடவே
நெஞ்சில் விதையாய்
அன்பை மட்டும் விதைத்திடவே
விளையும் பயிர்
சிறுகடுகு என்றாலும் அதன் காரம் குறைவதில்லை
சிறுமனிதன் என்று எண்ணித் துவளுவதில் ஞாயமில்லை
தீச்சுடரைக் கானகத்தில் இட்ட கதை அறிவோம்ட்
தத்தரிகிட நாதம் நமது நெஞ்சினிலே வைப்போம்..
சின்னத் துளிகள் என்று ஏண்ணி
துடைத்தழிக்க நினைப்போர் இருந்தாலும்
மடைகள் உடைக்கும் வெள்ளமாய் மாறி
தடைகள் தாண்டிச் சென்றிடுவோம்…
காரியம் யாவும் செய்திடும் வகையில்
வீரியம் கொண்ட விதையாய் ஆகி
விண்ணைத் தொடும் விருட்சமாய்ப் படர
மண்ணைப் பிளந்து முளைத்திடுவோம்…