நாங்குநேரி வாசஸ்ரீ

107. இரவச்சம்

குறள் 1061

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்

இருக்கத ஒளிச்சிவையாம குடுக்குத கொணம் ஒடையவங்ககிட்ட கூட, ஒண்ண குடு னு கையேந்தாம இருக்குதது கோடி மடங்கு நல்லது.

குறள் 1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

இந்த ஒலகத்தப் படைச்சவன் சிலபேர பிச்சை எடுத்துதான் வாழணும்ங்குத நெலமையில வச்சிருந்தாம்னா அவனும் அதே நெலைமையில கெட்டொழிஞ்சி திரியட்டும்.

குறள் 1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்

வறுமையால வருத சங்கடத்த ஒழைக்காம கையேந்தி போக்கிக்கிடலாம்னு நெனையுததக் காட்டிலும் கொடும வேற இல்ல.

குறள் 1064

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு

பொழைப்புக்கு வழியத்துப் போனாலும் மத்தவங்கிட்ட கையேந்த நெனையாத கொணம் இந்த ஒலகமே கொள்ளாத அளவு பெருமயக் கொண்டது.

குறள் 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்

நீத்த கஞ்சி யின்னாலும் சொந்த ஒழைப்புல சம்பாரிச்ச துட்டுல குடிச்சா அதக் காட்டிலும் சந்தோசம் வேற ஒண்ணுமில்ல. ‘

குறள் 1066

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்

பசுமாட்டுக்கு தண்ணிவேணும்னு கையேந்தி நின்னாலும், அப்டி கேக்குத நாக்குக்கு அதவிட கேவலம் வேற ஒண்ணுமில்ல.

குறள் 1067

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று

கையேந்திதான் நிக்கணும்னாலும் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லைன்னு சொல்லுதவன்கிட்ட கையேந்தி நிக்காதீகன்னு கையேந்தி நிக்கவங்க எல்லாரையும் கையேந்தி கேட்டுக்கிடுதேன்.

குறள் 1068

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்

இருக்கத ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத கல்நெஞ்சுக்காரன் மேல கையேந்துதல்னு சொல்லுத தோணி மோதிச்சுன்னா அது ஒடைஞ்சு நொறுங்கிப் போவும்.

குறள் 1069

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

கையேந்தி நிக்குதவங்கள நெனச்சா மனசு உருகுது. ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுதவங்களப் பாத்தா உருகுத மனசு இல்லாம அழிஞ்சே போவுது.

குறள் 1070

கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்

மனசில்லாதவனோட இல்லைங்குத சொல்ல கேக்குத நேரமே கையேந்துதவன் உசிரு போவுதே அப்டி சொல்லுதவன்உசிரு மட்டும் எங்ஙன ஒளிஞ்சுகிட்டு கெடக்குமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.