வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்- 8

0

தி. இரா. மீனா                            

 அமுகே ராயம்மா

அமுகே தேவய்யாவின் மனைவி அமுகே ராயம்மா. இவருக்கு வரதாணியம்மா என்றொரு பெயருமுண்டு. இவர்களது தொழில் ஆடை நெய்வதாகும். அமுகேஸ்வர இலிங்கா என்பது இவரது முத்திரையாகும். சமூக விமர்சனம், மனிதர் நடத்தை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி இவர் வசனங்கள் அமைகின்றன.

1.“இகசுகத்திற்காக இலிங்கத்தை மறந்து அலைகின்ற
பிறவிகளை என்னென்பது ஐயனே?
இலிங்கத்தில் நம்பிக்கையில்லை
ஜங்கமத்தில் அன்பில்லை மனவுறுதியில் தெளிவில்லை
சிவனைக்  கண்டேனெனச் சொல்லும் மூடரின் முகம்
பார்ப்பதும் அவர்வழிச் செல்வதும் பெரும்பிழை அமுகேஸ்வரனே”

2.“அறிய முடிபவரை பற்றற்றவரென்பேன்
ஒழுக்கமறிந்தவரை வெல்லுதற்கு அரியவரென்பேன்
போற்றுதல் தூற்றுதலுக்கு அப்பாற்பட்டவரை மகிழ்வாளனென்பேன்
தத்துவமறிந்தும் குழந்தை போலானவரை
சிவஞானி என்பேனய்யா அமுகேஸ்வரனே“

3.“விண்ணில் சஞ்சரிப்பவனுக்கு கம்பின் தயவெதற்கு ஐயனே?
மண்ணைத் தொடாமல் நடப்பவனுக்கு பூமியின் தயவெதற்கு ?
தன்னை அறிந்தவனுக்கு ஞானியரின் உரையெதற்கு ?
துறவிக்கு மங்கையரின் தயவெதற்கு ?
அமுகேஸ்வரனை அறிந்தால் மற்றவரின் தயவெதற்கு ஐயனே?”

4. “ஞானமென்பது தெருவின் பொருளா?
பையில் நிரப்பிக் கொள்ளும் கொள்ளா?
பையில் இருக்கும் சீரகமா?
செக்கினுள் இருக்கும் புண்ணாக்கா?
ஞானமென்பது வெளிப்படையாக அறிய இயலாதது
வெற்றி தோல்வியில் வெற்றி பேசப்படக் கூடாதது
இது பற்றற்றவரின் பண்பென்பேன்
அமுகேஸ்வர இலிங்கனென்பேன்”

5. “மூக்கிழந்தவன் கண்ணாடியைப் பார்ப்பதேன்?
கையற்றவனுக்கு குதிரை ஏற்றமெதற்கு?
முடவன் ஏணியில் ஏறலாமா?
பக்தி, ஞானம், பற்று ஆகியவை அற்றவருக்கு
இஷ்டலிங்கமெதற்கு் அமுகேஸ்வரனே?”

6. “வேடமேற்று உணவிற்கு அலையும்
வேடதாரிகளைக் கண்டு மனம் வெட்கும்
இலிங்கமறியாது அதோடு இணைந்தோம் என்பவரைப்
பார்க்க விரும்பாதென் மனம்
உபசரித்தேனெனும் அறிவற்றவரைச் சரணர் வி்ரும்புவாரோ?
அமுகேஸ்வரரின் இலிங்கம் அறியாதவரை இலிங்கம்
உணர்ந்தவரென எப்படிச் சொல்வேன் ஐயனே ?”

அநாமிகா நாச்சய்யா

மாருடிகே என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவர் செக்காட்டும் தொழில் செய்தவர். ’நாச்சய்யபிரிய சென்னராமன்” என்பது இவரது முத்திரையாகும்.

“பசிக்கு அழிவில்லை புலனிச்சைக்குக் குலமில்லை
இறப்பிற்கு மதிப்பில்லை,ஆசைக்கு அளவில்லை
அநாமிக நாச்சய்யாபிரிய சென்னராமய்யன்
அனைத்திலிருந்தும் விலகியவன்”

அங்கசோகினலிங்கதந்தே

இவருடைய முத்திரை “போக பங்கேஸ்வர லிங்கா” என்பதாகும். தத்துவப் பார்வை, அருவ-உருவ நிலை இணைப்பு என்ற தன்மையில் இவர் வசனங்கள் அமைகின்றன.

“மரத்திற்குள்ளிருக்கும் அக்னி தானே எரிவதுண்டா?
கல்லினுள்ளிருக்கும் ஒளி தானே சுடர் தருவதுண்டா?
வஞ்சகனின் பக்தி இழிவானவனின் பற்றுறுதி
அறியாமல் மெய்யை அறிய இயலாது
உண்மை, பொய் சாட்சி அறியாமல்
மெய்யை அறிய இயலாது
குரு, இலிங்கம், ஜங்கமம் அறியாமல் காட்டும் பக்தி
ஓட்டைப் பாத்திரத்தின் நீர்,கயிரற்ற பொம்மை
கண்களற்ற பார்வை போல வீணானது.
உச்சியில் வேருள்ள செடிக்கு நீர் விட இயலுமா?
எண்ணத் தெளிவு வேண்டும் போக பங்கேஸ்வரனுடைய
ஐக்கியம்தான் சரணரின் இன்பம்”

அறிவின மாரிதந்தே

பசவேசரின் சீடரான இவர் சிவசாரணர் கூட்டத்தில் மிக்க மதிப்புடையவராகப் போற்றப்பட்டவர். இவருடைய பெயருடன் கூடிய அடைமொழியைப் போலவே இவர் வசனங்கள் அறிவு பற்றியதிகம் பேசுகின்றன. குரு, இலிங்கம், ஜங்கமம், சைவம், வீரசைவம் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. ’சதாசிவ மூர்த்திலிங்கா’ இவரது முத்திரையாகும்.

1. “உருவம் நிலைத்துத் தெரியும் சலனமற்ற நீரில்,
பிரதிபிம்பத்திற்கு இடமுண்டோ நீர் அசைந்தால்?
அறிவு அலைபாய்ந்தால் அதிலுறையும்
உருவத்திற்குக் கட்டுப்பாடு இருக்குமோ?
இந்த இருநிலையின் விடுகதை தெரியும்
ஒளியான சதாசிவமூர்த்திலிங்கத்தில்”

2. “மனதின் செயலின்றி கல், மரத்திற்குப் பின்னால்
வழிபடுவது கடவுளாகுமா?
சதாசிவமூர்த்தியின் லிங்கமாக
இருப்பதை அறிகின்ற அறிவுதான் மெய்”

3. “மணமுடைய மலரைப் பறிப்பதன்றி
மணமான தென்றலைப் பறிக்க முடியுமா?
ஆன்மாவைக் கொண்ட உடலை அறியலாம்
உடலை உள்ளடக்கிய ஆன்மாவை?
கடவுள் அங்கமெடுப்பின் அறியலாம்
அங்கமே கடவுளானால்?
முதல், இடை, கடை என்பது மலருக்குண்டு, மணத்திற்கு?
அறிவதற்கும் அறிந்ததற்கும் இட்டலிங்கம்
அடையாளமாக சதாசிவமூர்த்தி இலிங்கவடிவமுண்டு”

4. “கூர்முனை மழுங்கினால் வாளின் உடலென்ன செய்யும்?
அறிவு மழுங்கினால் செயல்பாடு என்ன செய்யும்?
ஒழுக்கம் தவறினால் உயர்வு அடையாளமென்னசெய்யும்?
மனம், வாக்கு, மெய் தீயசெயல்
செல்வத்துக்கும் பக்திக்கும் கேடு.
இது போல சதாசிவமூர்த்திலிங்கம் அறியவேண்டும்”

5. “பாலற்ற பசுவிடம் கன்றை விட்டால்
உதைக்குமேயன்றி பால்புகட்டுமா?
அறிவற்றவனால் செயல்பட முடியுமா?
செயலென்பது பசு,அறிவென்பது பால்
வேட்கையென்பது கன்று
இம்மூன்றையும் உணர்ந்தவன் சதாசிவமூர்த்தி இலிங்கம்.”

–  [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *