குத்தாலம் குமார்

பாஸ்கர் சேஷாத்ரி
நேற்று நான் வாசுவைப் பார்த்தேன். பெரிய நட்பில்லை என்றாலும் ஒரு பத்து வருடப் பழக்கம் உண்டு.
வேகத்துக்குப் பேர் போனவர். சமையல் கலையில் கெட்டி. அவனுக்கு உள்ள வியாதி பேசிப் பேசி எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் என்பதுதான். அவனுக்கு அது குறை இல்லை. ஆனால் பலருக்கு அவன் பேச்சு பிடிக்காது. கேட்கப் பொறுமையும் இருக்காது. அந்தக் கல்யாண வீட்டில் அவன், பெண்ணுக்குக் கொஞ்சம் தள்ளிய உறவாம்.
பக்கத்து இலை. அவனுக்குப் பொறுமையில்லை.
“சிங்கப்பெருமாள் கோயில்ல ஒரு காபி சாப்பிட்டேன், முடியல!” என்றான்
இப்ப பாஸ்ட் வண்டி டயத்தை மாத்திட்டான் தெரியுமா?
நேற்று இரண்டு மாடு அடிபட்டுப் போச்சு
“சார், உங்க இலை கிழிஞ்சிருக்கு”.
“பரவாயில்லை. டிபன் தானே!” என்றேன்
இப்பல்லாம் பிளாஸ்டிக் இலையாமே?
“அப்பிடியா?” என்றேன்
சரி. அப்பிடியே எதனா கல்யாண காண்ட்ராக்ட் சொல்லேன். நார்த் இந்தியனும் செய்வேன் கரண்டி பிடிச்ச கை. சும்மா இருக்க முடியல. பணமும் இல்லை, பையன் ஏதோ சம்பாதிக்கிறான்.
நிச்சயம் சொல்றேன். உன் நம்பரைச் சொல்லு.
தரேன். உனக்கு ரொட்டிக்காரன் தெரு சம்பத் ஞாபகம் இருக்கா?
கொஞ்சம் யோசிச்சா தெரியும்.
அவனும் என்னை மாதிரி. ஆனால் கை நீளம். நடுவுல கொஞ்சம் வீட்டு புரோக்கர் வேலையும் செய்றேன். இப்பல்லாம் ஒரு பெர்சென்ட் கமிஷன். ஆனா பார்டிங்க ரொம்ப கெட்டி. கழட்டி விட்டுட்ரானுங்க.
ஆமா செல் போன் ரிப்பேர் பண்றவன் யாரானா தெரியுமா?
தெரியும். நம்பர் வேணுமா?
அப்புறம் வாங்கிக்கறேன்.
ஆமா வாசு சார், உன் ஒய்ப் லக்ஷ்மி என்ன பண்றா?
அவ போய் எட்டு வருஷம் ஆச்சு. ஹை சுகர். அவ அப்பன் சொத்து.
சரி உங்க ஊர்ல எங்கயோ பிளாஸ்டிக் ரோடு போடறங்காளமே. எந்த தெரு?
அவன் பேசிக்கொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அவனை ‘வாட்டர்பால் வாசு’ என்பார்கள் எங்கள் தெருவில்.
அவன் பேசுவது அவனை மறக்கத்தான் என்பது இப்போது புரிந்தது.
வாசு சார் என அவர் முதுகில் கை வைத்தபோது அவர் சிலிர்த்ததில் நான் அவரை வாங்கிக்கொண்டேன்.