(Peer Reviewed) அதிகார முறைமையும் அழகர் திறனும்

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
முன்னுரை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படினும் தமிழிலக்கிய உலகில் தனித்தும் தலைமை சான்றும் விளங்குவது திருக்குறளே. நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டு திகழும் தமிழின் தலைமைப் பனுவலான அதற்கு உரைகண்ட சான்றோருள் பரிமேலழகரும் ஒருவர். அவருடைய உரையழகை அவர் மேல் ஏற்றி இக்கட்டுரையில் இனி அவர் ‘அழகர்’ என்றே குறிக்கப்படுவார். திருக்குறளின் முதல் உரையாசிரியர்கள் பதின்மருள் காலத்தால் பிற்பட்ட அழகரின் உரை ஏனைய உரைகளை எல்லா உரைக்கூறுகளிலும் விஞ்சிக், காலத்தை வென்றும் கடந்தும் நிற்கும் சிறப்பினை உடையதாக விளங்குகிறது. அத்தகைய சிறப்புக் கூறுகளுள் ஒன்றான திருக்குறள் அதிகார முறைவைப்பினுக்கு அழகர் கூறும் விளக்கத்தினைச் சுருக்கமாக எடுத்துரைப்பதையே இக்கட்டுரை தனது முதன்மை நோக்கமாகக் கொண்டு அமைகிறது.
1. அழகரின் உரை மாண்பு
எப்பொருளைப் பற்றியும் எழுதுவதற்கு முன்னால் அதுபற்றிய முந்தைய அறிஞர்தம் கருத்துக்களை அறிந்து கொள்ள முயல்வது ஆய்வு நெறிகளுள் தலையாயதாகும். செந்நெறியாகிய அந்நெறியைப் பின்பற்றிய அறிஞருள் அழகரும் ஒருவர். இவர் உரைக்கு முன்னோடியாக இருந்த உரை மணக்குடவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே ஆகும். தமிழ் மரபார்ந்த அவ்வுரை ‘செந்தமிழ்ச் செம்மல்’ வ.உ.சி. அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற சிறப்பினையுடையது. “பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார்” என்னும் கருத்து அழகர் உரை ஆதரவாளரும் எதிர்ப்பாளரும் சிந்தனையுள் இருத்த வேண்டிய ஒன்றாகும்.
1.1. அழகரின் உரை நெறி
தமிழிலக்கிய உரை வரலாற்றில் அழகரின் திருக்குறள் உரை தனிச்சிறப்பினைப் பெற்று நிலைத்திருப்பதற்குப் புறக்காரணங்களைவிட அவ்வுரையின் கட்டுமானமாகிய அகக்காரணமே தலையானதாகும். வேறு எந்த இலக்கிய உரைகளிலும் காண்பதற்கு அரியனவாகிய அக்கட்டுமானச் சிறப்புக்கள் எளிய புரிதலுக்காகப் பின்வருமாறு பட்டியலிடப்படுகின்றன.
- குறட்பாவுக்கு உரையெழுங்கால் ஏனையோர் எழுதிய உரைகளை நினைவிற் கொள்கிறார்.
- பாடவேறுபாடுகளைக் குறித்துக் காட்டுகிறார்.
- பொருத்தமற்ற பாடங்களை விலக்குகிற இவர் தவறான உரையைக் காரணம் காட்டி மறுக்கின்றார்.
- மதிக்கத்தக்க பிற உரைகளை ‘என்பாரும் உளர்’ எனச் சுட்டிச் செல்கிறார்.
- மாறுபட்ட கொள்கைகளையும் மதிக்கும் பண்பாளரான இவர், போற்றத்தகுந்த வேறுபாடுகளைப் போற்றுகின்றார்.
மேற்சொல்லப்பட்ட அழகரின் இத்தகைய உரை மாண்புகள், அவ்வுரையில் காணப்படும் இலக்கண மற்றும் இலக்கிய சிறப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் தனித்தனித் தொகுப்புக்கும் ஆய்வுக்கும் உட்படும் சிறப்புக்குரியன. அவற்றுள் ஒன்றான அதிகார முறைவைப்புக்கான விளக்கம் பற்றிய ஆய்வு பின்வரும் பத்திகளில் தொடர்கிறது.
1.2. அழகர் நோக்கில் இயல்களுக்குள் அதிகாரங்கள்
மானுடத்திற்கான நெறிமுறைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துணர்த்தும் திருக்குறளில் அறத்துப்பால், ‘பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்’ என நான்காகவும், பொருட்பால், ‘அரசியல் அங்கவியல், ஒழிபியல்’ என மூன்றாகவும், காமத்துப்பால், ‘களவியல், கற்பியல்’ என இரண்டாகவும் அமைந்து நூல் நிறைகிறது. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதும் திருக்குறள் தன்னுள் ஒன்பது இயல்களைக் கொண்டிருப்பதுமான ஒற்றுமை வியப்பானதாகக் கருதப்படலாம். அழகர் திருக்குறள் அதிகாரங்களை ஒன்றிலிருந்து இறுதிவரை நிரலாக நோக்குவதில்லை. ஒவ்வொரு இயலையும் தனித்தனிப் பொருண்மை கூறும் பகுதிகளாகக் கொண்டு அவற்றுள் அடங்கியிருக்கிற அதிகாரங்களுக்கேற்றபடியே வைப்புமுறை கூறி விளக்குவதை அறிய முடிகிறது.
1.2.1 இயலுக்குள் அதிகாரங்கள் ஒரு சிந்தனை
இயலுக்குள் ‘அதிகாரம்’ என்னும் வரையறையால் தமது உரையில் பொருட்சிதைவோ மயக்கமோ ஏற்படுவதற்கான வாய்ப்பினை அழகர் தவிர்த்து விடுகிறார். அதாவது இல்லறவியல் அதிகாரக் கருத்துக்கள் அவ்வியலுக்கு உரியன, துறவறவியலில் உரைக்கப்பட்ட கருத்துக்கள் துறவறவியலுக்குரியன என்னும் தெளிவை முன்னிறுத்திக் கொள்கிறார். இந்தத் தெளிவு ஒவ்வொரு பாலிலும் அவர் பிரித்தமைத்துக் கொண்ட இயலிலும் இயலுக்குள் அமைந்த அதிகாரங்களுக்குள்ளும் புலனாவதை அறியலாம். சான்றாகத் திருக்குறளில் ஒரே அதிகாரம் ஒரு இயலாக அமைந்திருப்பது ‘ஊழ்’ என்னும் அதிகாரமாகும். இது துறவறவியலின் இறுதியாக அமைந்திருப்பது. இது அவ்வியலோடு இணையாது தனித்ததொரு இயலாக அமைந்ததன் காரணத்தை அறிய முயல்கிறார் அழகர். ‘ஊழ்’ என்பது அறத்தோடு தொடர்புடையது என்பதும் பொருளுக்கோ இன்பத்திற்கோ தனித்தனியான தொடர்பற்றது என்பதும் அவருக்குத் தெரிந்த உண்மை. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டதாலேயே,
“இது பொருள் இன்பங்கள் இரண்டற்கும் பொதுவாய் ஒன்றனுள்
வைக்கப்படாமையானும் அறத்தொடு இயைபுடைமையானும் அதனது
இறுதிக்கண் வைக்கப்பட்டது.”
என அதிகார வைப்பு முறைக்கு விளக்கம் கூற முடிகிறது. வேறுவகையாகச் சொன்னால் 38ஆவது அதிகாரமாக உள்ள ஊழ் என்பது 109ஆவது அதிகாரமாக அமைக்கப்படாததற்கான காரணத்தைக் கண்டறிய முயல்கிறார் என்பதாம். ‘ஊழ்’ தனி இயலானதற்கும் அது அறத்துப்பாலின் இறுதியில் வைக்கப்பட்டதற்கும் அழகரின் இந்த விளக்கமே துணை புரிகிறது. ஓர் இயலின் தொடக்கமாகவும் இறுதியாகவும் அமைந்துள்ள ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தின் வைப்புமுறை பெரிதும் நுட்பமானது., சிந்திகக்கத்தக்கது. இத்தகைய நுட்பமான சிந்தனை சார்ந்த அதிகார வைப்புமுறைகள் ஒருசில எடுத்துக்காட்டுக்களால் விளக்கப்படுகின்றன.
1.3. அழகரின் அதிகார வைப்புமுறைக் கோட்பாடுகள்
பொதுவாக ஒவ்வொரு அதிகாரத் தொடக்கத்தில் அதிகாரத் தலைப்புக்கான விளக்கத்தைக் கூறி அதற்கும் அதற்கு முந்தைய அதிகாரத்திற்கும் உள்ள பொருள் தொடர்பால் வைப்புமுறையை விளக்குவது அழகருக்கு இயல்பு. ஆனால் ஒருசில நேர்வுகளில் முற்றிலும் மாறுபட்டுப் பெரிதும் நுட்பமாக வைப்புமுறை கூறுவது அவர்க்கேயுரிய தனிச்சிறப்பாகும்.
- அதிகாரத் தலைப்புக்கான பொருளை விளக்குவதன் மூலம் இரண்டு அதிகாரங்களின் வைப்புமுறைப் பொருத்தத்தை விளக்குதல்
- முந்தைய அதிகாரத்தின் இறுதியிலேயே பின்வரும் அதிகாரத்திற்கான வைப்புமுறையை விளக்குதல்
- பொருள் விளக்கத்தை மட்டுமே கூறி வைப்புமுறையைக் கற்பாரே உணரச் செய்தல்
- இரண்டுக்கும் மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருளை விளக்குவதன் மூலம் அதிகார வைப்புமுறைக்கான பொருத்தத்தை விளக்குதல்.
- இயலின் இறுதியில் வைப்புமுறைக்கான காரணத்தை விளக்குதல்
என்னும் ஐந்து முறைகளில் திருக்குறள் அதிகார வைப்புமுறைக்கான காரணங்களைப் அழகர் விளக்குவதாகக் கொள்ளலாம்.
1.4. அதிகாரத் தொடக்கத்தில் வைப்புமுறைப் பொருத்தம்
அதிகார வைப்புமுறையை விளக்குவதில் அழகர் பெரிதும் இம்முறையையே பின்பற்றியுள்ளார். சான்றாக,
“இது பெரும்பாலும் அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய
அதனைப் (சிற்றினத்தைப்) பொருந்தின், பெரியாரைத் துணைக்கோடல்
பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன் (பெரியாரைத்
துணைக்கோடலின்) பின் வைக்கப்பட்டது”
எனச் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகார வைப்பிற்குக் காரணம் சுட்டுவதும்,
“தகை அணங்குற்ற தலைமகன் இது (குறிப்பறிதல்)
வேண்டுமாகலான் அணங்குறுத்தலின் பின் வைக்கப்பட்டது”
எனக் காமத்துப்பாலின் குறிப்பறிதல் (110) அதிகார வைப்பிற்குக் காரணம் காட்டுவதும் சில எடுத்துக்காட்டுக்கள் ஆகலாம்.
1.5. முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்பு முறை பொருத்தம்
திருக்குறள் அறத்துப்பால் ஆறாவது அதிகாரம் ‘வாழ்க்கைத் துணைநலம்’ ஏழாவது அதிகாரம் ‘புதல்வரைப் பெறுதல்’ (இதனை ‘மக்கட்பேறு’ என்றே அழைக்கவேண்டும் என்று பெண்ணியச் சிந்தனையாளர் பலரும் கூறுவர். ஆனால் இந்த மாற்றத்தைப் பரிமேலழகருக்கு முன்பே பரிதியார் முதலியோர் உரைகளிலும் காணமுடிகிறது) (419) ‘புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத் தொடக்கத்தில்,
“இறுபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன்
மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர்கடன்
வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும்
அல்லது இறுக்கப்படாமையின் அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்
மக்களைப் பெறுதல்”
எனப் பொருள் விளக்கம் கூறிய அழகர், ‘அதிகார முறைமை மேலே பெறப்பட்டது’ என முந்தைய அதிகாரத்தின் இறுதியில் அமைந்த அவர்தம் உரைப்பகுதியை அவரே சுட்டிக்காட்டுகிறார். ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் முந்தைய அதிகாரத்தில் அமைந்த இறுதிக் குறளான,
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”
என்னும் குறட்பாவிற்குச் சிறப்புரை எழுதிய அழகர்,
“வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிநலம் கூறி
வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய்
செய்யப்பட்டது”
என அதிகாரங்களின் அமைப்பு முறைக்கு விளக்கமளிப்பதைக் காண முடிகிறது. இவ்வாறு அழகர் உரையெழுதுவதற்குக் காரணமே திருக்குறள் கட்டமைப்பை அவர் ஊன்றி நோக்கியதேயாகும். அதாவது ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் ஏனைய ஒன்பது குறட்பாக்களும் மனைவியின் மாட்சிமையைப் பேச, இவ்வொரு குறட்பா மட்டும் தனித்துநின்று மக்களைப் பற்றிப் பேசுகிறது என்னும் நுட்பத்தை அழகர் புரிந்து கொள்ளுகிறார். கொண்டு, இல்வாழ்க்கையின் நலம் மக்கட்பேறே என்னும் முடிவுக்கு வந்து அடுத்த அதிகாரம் அதனைப் பற்றியே பேசுகிறது என்பதைப் பெறவைத்து விடுகிறார். வாழ்க்கைத் துணை, துணையின் நலம், (இல்வாழ்க்கையின் நலம்) மக்கட்பேறு என்னும் கருத்து நிரலும், ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறட்பா அமைப்பும் அடுத்து நின்ற ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத் தலைப்பும் அழகரின் நுண்மாண் நுழைபுலமும் ஒரே இழையில் ஊடாடுவதை இதனால் புரிந்து கொள்ள இயலும். இவ்வாறு எதிர்வரும் அதிகாரத்தின் வைப்புமுறைக்கு முந்தைய அதிகாரத்தின் இறுதியில் வைப்புமுறை விளக்கம் கூறும் இவர்தம் உரைப்போக்கினை நன்றியில் செல்வம் (101), நல்குரவு (105) முதலிய அதிகாரங்களிலும் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.
1.6. வைப்புமுறை அமைதியைக் கற்பாரே உணரச் செய்தல்
அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் விளக்கம் கூறி, வைப்புமுறைக்கான காரணத்தைக் கூறும் நெறிக்கு அடுத்த நிலையில் பெரும்பான்மையான இடங்களில் அழகர் பின்பற்றும் நெறி இதுதான். வைப்புமுறைக்கான காரணம் தெளிவாகுமாறு விளக்கம் அமைந்து விடுதலின் அதற்கான காரணத்தை அவர் தனித்துச் சுட்டாதிருந்திருக்கலாம். மேலும் கற்பாரின் ‘புரிதிறனை’ உயர்வாகக் கருதும் அவரது உயர்பண்பாட்டின் வெளிப்பாடாகவும் கருதலாம். கல்வியின் சிறப்பை முதலில் உடன்பாட்டால் கூறித் தொடர்ந்து ‘கல்லாமை’ என அதன் சிறப்பையே எதிர்மறை முகத்தால் பெறவைத்த திருவள்ளுவர் கேள்வியினால் கல்விச்சிறப்பை நிறைவு செய்கிறார். இவைகளின் விளைவாக அமைவது செயற்கை அறிவு. இச்செயற்கை அறிவுடன் இயற்கையில் அமையும் உண்மையறிவு இணைந்தாலேயே அறிவுடைமை முழுமை பெறும். கல்வி, கல்லாமை, கேள்வி என்னும் நிரலில் அமைந்திருக்கும் ‘அறிவுடைமை’ (43) என்னும் அதிகாரம் உண்மையறிவின் இன்றியமையாமையை வற்புறுத்துவது.
“கல்வி கேள்விகளின் ஆய அறிவோடு உண்மையறிவு
உடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்”
எனக் கூறி விடுக்கிறார் அழகர். வான்சிறப்பு (2), அறன்வலியுறுத்தல் (4), வாழ்க்கைத் துணைநலம் (6), அன்புடைமை (8), துறவு (35), அவா அறுத்தல் (37), பெரியாரைத் துணைக்கோடல் (45), வலியறிதல் (48), காலமறிதல் (49), இடமறிதல் (50), தெரிந்து வினையாடல் (52), இடுக்கண் அழியாமை (63), வினைத்திட்பம் (67), வினைசெயல்வகை (68), அவையஞ்சாமை (73), நாடு (74), படைமாட்சி (77), படைச்செருக்கு (78), நட்பு (79), நட்பாராய்தல் (80), பண்புடைமை (100), நாணுடைமை (102), இரவு (106), இரவச்சம் (107), புணர்ச்சி மகிழ்தல் (111), படர்மெலிந்திரங்கல் (117), நெஞ்சொடு புலத்தல் (130), புலவி (131), புலவி நுணுக்கம் (132), ஊடலுவகை (133) என்னும் அதிகாரங்களில் எல்லாம் ‘அதிகார முறைமையும் இதனானே விளங்கும்’ என்ற தொடரின் மூலம் வைப்புமுறை அமைதியைக் கற்பாரை உணரச் செய்யும் வகையில் உரையெழுதியுள்ளார் அழகர்.
1.7. ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் வைப்புமுறை
இன்னதற்குப் பின் இது என்பது நிரலான வைப்புமுறை. இன்னவைகளுக்குப் பின் இன்னது என்பது கூடுதல் நிரலாகக் கொள்ளப்படலாம் அழகர் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்திற்கான வைப்புமுறையைப் பதிவு செய்கிற போது அதற்கு முந்தைய அதிகாரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது ஒன்றுக்கு மேற்பட்ட முந்தைய அதிகாரப் பொருண்மைகளைக் கருத்திற் கொண்டு வைப்புமுறைக்குப் பொருத்தம் காண்பதை அறிய முடிகிறது. இது பற்றிய விளக்கம் ஒருசில சான்றுகளால் பின்வரும் பத்தியில் ஆராயப்படுகிறது.
1.7.1. அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை
அழுக்காறாமை, வெஃகாமைக்குப் பின் புறங்கூறாமை வைத்தது பற்றிய விளக்கத்தை அழகர் இப்படிப் பதிவு செய்திருக்கிறார். அழுக்காறு, வெஃகுதல், புறங்கூறுதல் ஆகியன மனம், மொழி, மெய் என்னும் களங்களில் தோன்றும் பாவங்களாகும். மனக்குற்றம் ஏனைய குற்றங்களுக்குக் காரணமாகிறது. புறங்கூறுதல் மொழிக்குற்றம். பிறர் ஆக்கம் கண்டவழி அழுக்கறுத்தல், தனக்குரியதல்லாத பொருளை வெஃகுதல் முதலியன மனக்குற்றங்கள். ‘புறங்கூறாமை’ (19) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை எழுதும் அழகர், இதனைக் கருத்திற் கொண்டு,
“மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், அஃது
அழுக்காறாமை, வெஃகாமைகளின் பின் வைக்கப்பட்டது.”
என எழுதும் உரைப்பகுதியால் குற்றங்களைக் காரண காரியத்தோடு பகுத்து நோக்கும் அழகர் திறம் புலப்படுவதை அறிய முடிகிறது.
1.7.2. இனியவை கூறல் புறங்கூறாமை, பயனில சொல்லாமை
அறத்துப்பாலில் இனியவை கூறல் (18), புறங்கூறாமை (19) என்னும் அதிகாரங்களை அடுத்துப் பயனில சொல்லாமை (20) என்னும் அதிகாரம் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தின் இட வைப்புமுறை பற்றிச் சிந்திக்கும் அழகர், அறத்துப்பால் முழுமையையும், அதன்கண் அமைந்துள்ள இயல் அனைத்தையும் ஓரலகாகக் கொள்கிறார். கொண்டு,
“பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்லாமை என வாக்கின்கண்
நிகழும் பாவம் நான்கனுள் பொய், துறந்தார்க்கல்லது ஒருதலையாக்
கடியலாகாமையின் அஃதொழித்து, இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை
மூன்றனுள், கடுஞ்சொல், இனியவை கூறலானும் குறளை
புறங்கூறாமையானும் விலக்கி நின்ற பயனில சொல் இதனால்
விலக்குகின்றார் ஆகலின் இது புறங்கூறாமையின் பின்
வைக்கப்பட்டது.”
என வைப்புமுறை கூறுவதைக் காணமுடிகிறது. இதனால் பாவங்களை அதிகாரப்படுத்துங்கால் திருவள்ளுவர் கொண்டிருந்த நோக்கத்தையும் கருத்தையும் அறியும் அழகரின் ஆர்வம் புலப்படுவதை உணர முடியும்.
1.7.3. பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை.
தீ நெறி விலக்கி நன்னெறி செலுத்தும் பெரியாரைத் துணைக்கோடல் (45) என்னும் அதிகாரத்தில் நேர்முகமாகவும் சிற்றினம் சேராமை (46) என்னும் அதிகாரத்தில் எதிர்முகமாகவும் கூறிய திருவள்ளுவர், தெரிந்து செயல்வகை (47) என்னும் அதிகாரத்திற்கு வைப்புமுறை கூறும்பொழுது,
“அச்செயல் (தெரிந்து செயல்வகை) பெரியாரைத் துணைக்கோடல்
பயனுடைத்தாயவழி அவரோடும் செய்யப்படுவது ஆகலின் இது
சிற்றினஞ்சேராமையின் பின் வைக்கப்பட்டது”
என விளக்கிக் காட்டுகிறார். ‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தை அடுத்துள்ள ஓர் அதிகாரப் பொருளை (47) அதற்கு இரண்டு அதிகாரங்கள் முன்னதாக உடைய ‘பெரியாரைத் துணைக்கோடல்’ (45) என்னும் அதிகாரப் பொருண்மையோடு இயைபு கண்டு வைப்புமுறை உரைக்கும் அழகரின் சதுரப்பாடு அறியத்தக்கது.
1.7.4. புணர்ச்சி மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற்சிறப்புரைத்தல்
தமிழ் அகத்திணை மரபின் நுட்பமான பகுதிகளை அழகர் சிந்தித்திருப்பதற்குக் காமத்துப்பாலுக்கான அவரது உரையே கரியாகிறது. காதலைத் தலைவனுக்கு வெளிப்படையாகக் கூறுவதோ, காதல் மீக்கூரும் நிலையில் மடலேறுவதோ தலைவிக்கு மரபன்று. ஆயினும் தலைவனோடு புணர்ச்சி நிகழ்ந்துழித் தலைவன்மீது தான் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தும் உரிமை அவளுக்கு உண்டு. இதனைத்தான் திருவள்ளுவர் காதற்சிறப்புரைத்தல் (113) என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுகிறார். இந்த அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் (111), நலம்புனைந்துரைத்தல் (112) ஆகிய அதிகாரங்களின் பின் வைக்கப்பட்டதற்கான காரணத்தை,
“இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், புணர்ச்சி
மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது”
என முறைவைப்பு விளக்கமாகக் கூறி அமைகிறார்.
1.8. இயல் இறுதியில் அதிகார வைப்புமுறை
நூல் பாலாகவும் பால் இயல்களாகவும் இயல் அதிகாரங்களாகவும் அதிகாரம் குறட்பாக்களாகவும் தன்னிறைவு பெறுகின்றன. இயலின் உள்ளடக்க இறுதியாக அதிகாரம் அமையும். அழகர் இயல் இறுதியைப் பால் இறுதியாகக் கணித்து அதிகார அமைப்பு முறை வகுத்திருப்பதையும் காணமுடிகிறது. பொருட்பாலில் அரசியலையும் அங்கவியலையும் தொடர்ந்து ஒழிபியல் அமைந்திருக்கிறது. ஒழிபியலின் இறுதி அதிகாரமாக அமைந்திருப்பது ‘கயமை’ என்பதாகும். ‘கயமை’ என்பது பண்பாகுபெயராய்க் கீழோரைக் குறித்தது. இந்த அதிகாரத்திற்கு முன்பாக அமைந்த ‘இரவச்சம்’ என்னும் அதிகாரத்திற்கும் ‘கயமை’ என்னும் அதிகாரத்திற்கும் ஏற்புடைய இயைபு காண அழகர் பொருட்பால் முழுமையையும் ஒருசேர நோக்கிப் பொருட்பாலின் ஏனைய இயல்களாகிய அரசியலையும் அங்கவியலையும் கருத்திற் கொண்டு ‘கயமை’ என்னும் அதிகாரத் தலைப்பிற்கான பொருள் விளக்கத்தையும் அதிகார வைப்புமுறையையும் சுட்டிக்காட்டுவது பெரு வியப்பளிப்பதாக அமைந்திருக்கிறது. அதிகார நிரலாக வைப்புமுறை, ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்கள் நோக்கிய வைப்புமுறை முதலியவற்றினின்றும் இம்முறை பெரிதும் வேறுபாடு உடையது என்பதை அறியலாம்.
“மேல் அரசியலுள்ளும் அங்கவியலுள்ளும் சிறப்பு வகையால்
கூறப்பட்ட குணங்களுள் ஏற்புடையன குறிப்பினால் யாவர்க்கும்
எய்த வைத்தமையின், ஆண்டுக் குறிப்பால் கூறியனவும் ஈண்டு
ஒழிபியலுள் வெளிப்படக் கூறியனவுமாய குணங்கள் யாவும்
இலராய கீழோரது தன்மை. அதனால் இது எல்லாவற்றிற்கும் பின்
வைக்கப்பட்டது”
பால், இயல், அதிகாரம், குறட்பா என ஒவ்வொரு கூறுகளையும் தனித்தும் இணைத்தும் நோக்கி உரையெழுதும் பேராற்றல் உடைய பேராசிரியராகவே அழகர் திகழ்ந்திருக்கிறார். இனிக், ‘கயமை’ என்னும் அதிகாரம் காமத்துப்பாலைத் தவிர்த்த ஏனை பொருட்பகுதியின் இறுதியில் அமைந்திருப்பதற்கு அழகர் குறிக்கும் ‘’எல்லாவற்றிற்கும்’ என்னும் சொல்லின் நுட்பத்தை உணர்தல் வேண்டும். காமத்துப்பால் இருக்கவும் ‘எல்லாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம் சிந்தித்தற்குரியதே. இதனால் அதிகார வைப்புமுறையைப் பாலின் அடிப்படையிலும் சிந்தித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மேலும் இறைவனில் தொடங்கி கயவரில் நிறைவு செய்திருக்கும் திருவள்ளுவரின் சதுரப்பாடும் பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது.
முடிவுரை
அழகர் திருக்குறளுக்கு உரையெழுதுவதற்கு முன் பன்முறை அதனை நன்கு ஊன்றிப் பயின்றுள்ளார் என்பதற்கு அதிகார வைப்புமுறை பற்றிய அவர் கொள்கையும் ஒரு வலிமையான சான்றாகத் திகழ்கிறது. நிரலாகப் படித்துக் கொண்டே எழுதியிருந்தால் இவ்வாறு பல்வகை முறைமைகள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. திருவள்ளுவரின் உள்ளத்தை அறிந்து கொள்ள அவர் செய்திருக்கும் முயற்சி ‘நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆரளவின்று’ என்றே கூறலாம். அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்புமுறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்புமுறை கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது. அந்தக் காரணங்களைத் தம் புலமைத்திறம் தோன்ற அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். உரையாசிரியர் பெருமக்களுள் அழகரைப் போல பெருமையுற்றோர் பலர். ஆனால் அவரைப் போலப் பன்முகத் தாக்குதலுக்கு ஆளானவர் யாருமிலர். அவருடைய உரை மாண்புகளை வகைமாதிரிகளாகக் (GENRE) கொண்டு அவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படல் வேண்டும். ஏனைய உரையாசிரியர்களின் உரைகளோடு ஒப்பிட்டுக் காணும் முயற்சி பல்க வேண்டும். தமிழிலக்கிய வரலாற்றில் திருக்குறள் தனித்து விளங்குவது போலவே அழகர் உரையும் தனிச்சிறப்புடன் விளங்குவது உண்மை. “காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?”
“பரிமேலழகரின் உரையை மறுக்கும் முயற்சிகள் பரிமேலழகர்
புலமைப் பாறையைச் சுற்றியடிக்கும் அலைமோதல்களாக
அமைந்தனவேயன்றி அப்பாறையின் உருக்கோட்டம் கண்டு செப்பம்
செய்யும் சிற்றுளிகளாகக் கூட அமையவில்லை”.
இது திராவிட இயக்கக் கொள்கைச் சார்பாளரும் பன்மொழிப் புலவருமான உயர்திரு க. அப்பாத்துரையார் அழகர் உரைக்குத் தந்திருக்கும் சான்றிதழ். இந்தச் சான்றிதழைக் கற்பார் பார்வைக்கு வைப்பதையே தனது தலையாய கடனாகக் கொண்டு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.
துணைநூற் பட்டியல்
1. திருக்குறள் பரிமேலழகர் உரை, வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன், உமா பதிப்பகம், சென்னை – 600 001, முதற்பதிப்பு – 2009
2. திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல், புலவர் ச.சீனிவாசன், மெய்யப்பன் தமிழாய்வு மையம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001, முதற்பதிப்பு – 2002
3. பன்முகப் பார்வையில் பரிமேலழகர், முனைவர் நா.பாலுசாமி, அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007, முதற்பதிப்பு – 2005
4. உரையாசிரியர்கள், மு.வை.அரவிந்தன், 8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108, முதற்பதிப்பு – 1968
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தமிழ் இலக்கிய இலக்கண வல்லாளர்களால் வலுவான அடிப்படைக் காரணம் இல்லாது புறக்கணிப்புக்கு ஆளான பேரறிஞர் நிரலில் வரும் இருவரில் ஒருவர் பரிமேலழகர். மற்றொருவர் நச்சினார்க்கினியர். எழுதப்பட்ட ஏனைய உரைகளெல்லாம் தமிழ் மரபை மட்டுமே சார்ந்திருப்பது போலவும் பரிமேலழகர் ஒருவர்தான் வடமொழிச் சார்ந்த உரையெழுதினார் என்பது போலவும் கருக்கொண்ட எண்ணம் பலருடைய புலமை இழப்பிற்கே பெரிதும் காரணமாயிற்று. அழகரை ஆய்வுப் பொருளாகத் தேர்ந்த ஆய்வாளரின் புலமைத் துணிச்சல் பாராட்டுக்குரியது.
- திருக்குறள் அதிகார வைப்புக்கான அழகர் தரும் காரணங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் குழப்பம் ஏதுமில்லாமலும் நிரல்பட விளக்குவது எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய ஆய்வாளரின் சிந்தனைத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.
- பகுப்புக்கேற்ற தரவுகள் எண்ணிக்கையில் பல இருப்பினும் அளவு கருதி வரையறுத்துக் கொண்டது கட்டுரையைச் செறிவாக்கும் முயற்சியாகவே கருதப்படலாம்.
- ‘புறங்கூறாமை’ என்னும் அதிகார வைப்பிற்கு அழகர் தாம் சொல்ல வந்த விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட முயற்சியும் அதனைக் கண்டறிந்து ஆய்வுலகப் பார்வைக்கு வைப்பதற்கு ஆய்வாளர் எடுத்துக் கொண்ட முயற்சியும் ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்துள்ளது.
- ‘அதிகார வைப்பிற்கான விளக்கம்’ எனக் கருதுகோளைத் தெளிவாக அமைத்துக் கொண்டதால் கருதுகோளை விளக்கி உறுதிப்படுத்துவதற்கான தரவுகளைத் தொகுப்பதில் கட்டுரையாளர் தமது இடர்ப்பாடுகளைக் குறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. ஏனைய ஆய்வாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய கருதுகோள் பற்றிய உண்மை இது. அடிப்படையான தரவுகளையும் சான்றுகளையும் மனத்தளவில் பதித்துச் சிந்தித்துப் பார்த்தாலொழிய வலிமையான கருதுகோள் அமைவது கடினம். கருதுகோள் தெளிவானால் கட்டுரை தெளிவாகும்.
- “காமத்துப்பால் இருக்கவும் ‘எலலாவற்றிற்கும் பின்’ என்பதற்கான காரணம் சிந்தித்தற்குரியதே.” என்னும் கட்டுரையாளரின் பதிவு சரியே. காமத்துப்பாலில் திருவள்ளுவரின் கருத்தேதும் இல்லை. இருபத்தைந்து அதிகாரங்களும் அகப்பொருள் மாந்தர் கூற்றாகவே அமைந்து போனதே அழகரின் (ஆசிரியர் கூற்றாக அமைந்த) ‘எல்லாவற்றிற்கும்’ என்பதற்கான காரணம் என் பணிவான கருத்து.
- “அதிகாரத்தின் இருப்பிடத்தையோ தலைப்பையோ அவர் மாற்ற எண்ணியிருந்தாலோ மாற்றியிருந்தாலோ இவ்வாறு பல்வகை வைப்பு முறைகளைக் கூறியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. நூல் அமைந்திருந்த அதிகார முறையிலேயே வைப்பு முறை கூறவேண்டிய நெறிக்கு அவர் கட்டுப்பட்டதால்தான் அவ்வதிகார வைப்புக்கான காரணத்தைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு நேர்ந்தது.” என முடிவுரைப் பதிவு மிகவும் ஆற்றல் வாய்ந்த பதிவு. இதனால் திருக்குறள் அதிகாரவைப்புக்களைப பரிமேலழகரே உண்டாக்கினார் என்னும் வாதம் வேர்பிடிக்காப் பயிராகிவிடுவதைக் காணலாம்.
- கட்டுரையாளர் சான்றெண் பதிவுகளுக்கான எண்களையோ நூல்களையோ குறிப்பிடாது துணைநூற்பட்டியல் மட்டும் கூறியிருப்பதற்கான காரணம் புலப்படவில்லை.
- வைப்புமுறையில் அழகரோடு மாறுபடும் தற்கால உரையாசிரியர்களின் பதிவுகளையும் ஒப்பிட்டு உண்மையைச் சொல்லியிருந்தால் கட்டுரையின் ஆய்வுச்செறிவு கூடியிருக்கக்கூடும்.
கருதுகோள் அமைப்பு, கருதுகோளுக்கிணங்க, தரவுகள் மற்றும் குறுந்தலைப்புகள் பகுப்பு என முப்பரிமாணத்திலும் தெளிவே முன்னிற்பதால் கட்டுரை சிறக்கிறது. அறிவு தெளிவின் மேற்று! ‘தெளிவு பெற்ற மதியினாய்’ என்பது மகாகவி வாக்கு. இதுபோன்ற கட்டுரைகள் வல்லமையின் கொள்கைக் ‘குரலை’ முழக்கமாக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை!