இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 13

அவ்வைமகள்

13. ஆயத்தச் சிந்தையும் புரட்சிப் பிரசவமும்

புரட்சிகள் எவ்வாறு உருவாகின்றன என்று நாம் சிந்தித்து வரும் இத்தருணத்தில், புரட்சிக்குண்டான காரணங்கள், சமுதாயத்தில் எல்லோரும் அறியும்படியாக், பொத்தம்பொதுவில் நடக்கிறபோது – ஏன் ஒருவர் – ஒரே ஒருவர் புரட்சியாளனாக ஆகிறார் என்று ஒரு வினா வருகின்றது.

புரட்சியும் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒன்றே போன்றவை. புரட்சியைப் போன்றே, அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று நிகழவேண்டுமேன்றால் அதற்கு, பல்முகக் காரணங்கள் இருக்கவேண்டும் (அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்கள்); புறத்தே இருந்து வரும் ஊக்குவிப்பான்களும் வேண்டும். இவை அனைத்தும் எல்லாத் தருணங்களிலும் எவருக்கும் கிடைக்கப்பெறுவதாகத்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. ஆனால் ஒரே ஒருவர் தான் புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார்.

இது இவ்வாறு நடப்பதன் காரணம் என்னவென்று நோக்கினால், தயார் நிலைச் சிந்தையோடு (prepared mind) எவரொருவர் இருக்கிறாரோ அவர் மட்டுமே அந்த அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார் என்பது புரியும்.

தயார் நிலைச் சிந்தையை விளக்குவதற்கு. சர் ஐசக் நியூட்டனை ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்வோம். என்றைக்கு ஆப்பிள்  மரங்கள், இந்த பூமியில் உருவாகினவோ அன்றிலிருந்தே ஆப்பிள் பழங்கள் மரத்திலிருந்து கீழே விழுந்து கொண்டு தான் இருந்தன.  ஆனால், தன் முன்னே மரத்திலிருந்து ஆப்பிள் விழுகையில், இப்பழம் ஏன் மேலே செல்லாமல் கீழே விழவேண்டும்? என்கிற முதல் வினாவை – உலகில் யாரெவரும் எழுப்பாத முதல் வினாவை நியூட்டன் எழுப்புகிறான். அந்த வினாதான் புரட்சியின் பொறி – அந்தப்பொறி தான் – அவனை மாபெரும் அறிவியல் புரட்சி ஒன்றை நிகழ்த்தவைக்கிறது. இன்று நியூட்டன் அறிவியலில் ஒரு சகாப்தம்.

நியூட்டனைப்போன்றே நம்மவரான சர் சி.வி. ராமன், மத்தியதரைக்கடலில் பயணம் செய்யும்போது தன கண்முன் தோற்றம் தந்து கொண்டிருந்த, வானமும் கடலும்  ஏன் நீல வண்ணத்தில் இருக்கின்றன என்று வினவினார். வானம் என்பது வெகு இயல்பாக எப்போதும் எல்லோருக்கும் நீலவண்ணத்தில் தான் காட்சியுறுகிறது ஆனால் அது வினவவேண்டிய விடயமாக. ஆய்வு செய்யவேண்டிய விடயமாக சி. வி. ராமனுக்கு மட்டுமே புலப்பட்டது; அதனால் அவன் மாபெரும் அறிவியல் புரட்சியை நிகழ்த்துகிறவனாயினான். இன்று நியூட்டனைப் போன்றே சி. வி. ராமனும் அறிவியலில் ஒரு சகாப்தம்.

தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளினால் உந்தப்பட்டு, அந்நிகழ்வுகளின் மூலமாய் நிற்கும் ஆதியை சரிவர அறியும் முகமாக, அதுகாறும் வேறு எவரும் கேட்காத முதல் கேள்வியை ஒருவர் எழுப்புகிறார் என்றால், அவருக்கு ஆங்கே, ஆயத்த உள்ளம் – தயார் நிலைச் சிந்தை – Prepared Mind – வாய்க்கப்பெற்றிருந்தது என்று பொருள்.

சரி, ஒருவர் தயார் நிலைச் சிந்தையைப் பெற வேண்டுமென்றால்  அதற்கு என்ன தேவை என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது அல்லவா?

பாண்டித்யம்  அதாவது  ஆழ்ந்த அறிவும் அதனோடு  தம்மைச் சுற்றி நடப்பவற்றைக் காணுகிற இயல்பும், சமூக நேசமும், எளிமையான எண்ணப்போக்கும் ஆகிய நான்முகத் திறன் ஒரே நேரத்தில் தேவை.

புரட்சி விளைக்கப் போகிற துறை எதுவோ அல்லது உபதுறை எதுவோ அல்லது அத்துறையைச் சார்ந்த சித்தாந்தம் எதுவோ அதிலே மிகவும் ஆழ்ந்து நிறைந்த பாண்டித்யம் ஒருவருக்கு இருக்கிறபோது அவர் ஒரு உண்மையான, சமூகநேசனாக இருக்கிற வகையில், அவருக்கு வாய்க்கப் பெற்றிருக்கிற பாண்டித்யத்தின் நாடிநரம்புகளை மீட்டிக் கிளர்த்துவிடும்படியான  சம்பவம் ஒன்று அவரது சூழலில் நடக்கிறபோது, அக்கணம், அவருள் தடையின்றி, எளியதாய், அனாயாசமாய்க் கிளம்புவதுதான் புரட்சியின் பொறி.

பொறி கிளம்பியது என்றால் உடனே புரட்சி விளைந்துவிடும் என்று பொருள் இல்லை. நான் ஏற்கனவே கூறியதைப்போல, துரிதப்புரட்சிகள் நிலைத்தவையகா!

பொருட்கள் உற்பத்தியில், Idea to Product என்கிற வாசகம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற வாசகம். எண்ணம் செயல்  ஆகிய இரண்டும் தொடர்புடையவை என்றாலும், அவை இருவேறு துருவங்களைப் போன்று எட்டித் தொலைவில்  நிற்பவை. ஒரு எண்ணமானது  செயல் எனும் நிலையை அடைய நிறையப் பாடுபடவேண்டும் – அதற்கு, நிறைய காலம் பிடிக்கும். பட்டுபூச்சியின் வாழ்க்கைச் சுழலில் நடக்கும் உருமாற்ற நிகழ்வுகளைப் போல – பலபடி நிலைகளை எண்ணம் கடந்து சென்றாக வேண்டும். அப்போதுதான் அது  தேவையான பரிமாணங்களையும், பலத்தையும், ஆற்றலுடன் விரைந்தெழும், உத்வேகத்தைப் பெற்றதாய், வெளிக்கிளம்ப முடியும்.

புரட்சிகள் உருவெடுக்கத் தேவைப்படும், இவ்வாறான காலத்தேவையை, புரட்சிக் கருநிலைக் காலம்  அல்லது புரட்சிக் கர்ப்பக் காலம் (gestation Period of revolution) எனலாம்.

இந்தக்கட்டுரைத் தொடரின் கதாநாயகர்களான வள்ளலாரும் ஸ்டீவ் ஜாப்சும் இவ்வாறேதான் புரட்சிக் கர்ப்பக் காலத்தினை அனுபவித்து வெளி வந்தவர்கள். அவர்களது புரட்சிகள் நிலைத்தவையாய் நின்றமைக்கு, அவர்கள் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட இயற்கையான புரட்சிப் பிரசவமே காரணம்.

சமயத்தில் பாண்டித்யம் இருந்தமையால், தன்னைச் சுற்றி, சமயம் தொட்டு சம்பவங்கள் நிகழ்ந்த வாக்கில், என் மக்களுக்காய் நான் எளிமையாய் என்ன செய்வது என்ற தீவிர சிந்தையில்  மனமும் உடலும் நெகிழ்ந்து,  வள்ளலார்  சமயப் புரட்சிக் கருவுருகிறார்.

கணினித் துறையில் பாண்டித்யம் இருந்தமையால், தன்னைச் சுற்றி, கணினி தொட்டு சம்பவங்கள் நிகழ்ந்த வாக்கில், என் மக்களுக்காய் நான் எளிமையாய் என்ன செய்வது என்ற தீவிர சிந்தையில்  மனமும் உடலும் நெகிழ்ந்து,  ஸ்டீவ் ஜாப்ஸ்  தொழிற்நுட்பப் புரட்சிக் கருவுருகிறார். துறை வேறு, கால கட்டம் வேறு என்றாலும், புரட்சியின் கட்டுமானத்தில் இவ்விருப் புரட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை.

சரி, புரட்சியாளர்களின் வாழ்நாளிலேயே, அவர்களது புரட்சி உச்ச நிலை வளர்ச்சியைக் கண்டுவிடுகிறதா என்று கேட்போமேயானால், இல்லை என்று தான் கூற முடியும். பல புரட்சியாளர்களின் புரட்சி அவர்கள் கண்முன்னாலேயே, தரைமட்டமாய் வீழ்வதுண்டு. சில புரட்சியாளர்களின் புரட்சி அவர்கள் வாழும்போது வளர்ந்து, அவர்கள் மறைவுக்குப்பின் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி நிற்பன.

நியூட்டனுக்கும் ராமனுக்கும் இதே நிலைதான் – நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கை விதியை ஒரு பரிசோதனையாகச் செய்து நிரூபணம் செய்ய 111 வருடங்கள் ஆயின; இது நியூட்டன் இறந்து 71 ஆண்டுகளுக்குப் பிறகு. ராமனின் ராமன் விளைவை ஒரு வணிகக் கருவியாக (Raman Spectrometer) உருவாக்கி வெளியிட 27 வருடங்கள் ஆயின. ஆனால் இந்தக்  கருவி, ராமனின் மறைவுக்குப் பிறகு, பல வளர்ச்சி நிலைகளைக் கடந்து இன்று சிறப்பான மேம்பட்டக் கருவியாக புழக்கத்தில் இருக்கிறது. ராமன் தனது கண்டுபிடிப்பினாலான முதல் நிலைக் கருவியைத் தானே காணும் பேறு  பெற்றார். நியூட்டனுக்கு  அந்த பாக்கியம் இல்லாமல் போனது.

வள்ளலார் பற்றியும், ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும், தற்காலத்தில் நாம் நித்ர்சனமாக அறியும் உண்மைகளை வைத்து அளவிடும்போது, ஸ்டீவ் ஜாப்ஸ், வள்ளலார் இருவருமே உலகிற்கு, நிலைத்தப் புரட்சியை அளித்தவர்களே என்று இப்போது நம்மால் உறுதியாகக் கூற முடியும்.

(மேலும் பேசுவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.