மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

கொரனோ வந்து கோரமாய்த் தாண்டவம் ஆடி, பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையைக் கொரனோ ஏற்படுத்திவிட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து! குலவினால் ஆபத்து! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.

இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட தற்போதுள்ள நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். கொரோனா தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரோனாவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்கிறது. அதனால் தற்போது மருத்துவர்கள் கம்பியில்தான் நடக்கிறார்கள்.

வைத்தியர்களும் தாதியர்களும் வானத்திலிருந்து வந்து குதித்தவர்கள் அல்லர். அவர்களும் எங்களை ஒத்தவர்களே. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அன்பான கணவன், ஆசையான குழந்தை, அன்பான மனைவி அணைத்திடக் குழந்தை, அப்பா, அம்மா, சகோதரங்கள் என்று உறவுகளால் பிணைக்கப்பட்டே அவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கிறோமே தவிர – அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் களைப்பு இருக்கும், அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப்பதற்கு நாம் ஒருவரல்லர். எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங்கோணாமல் சினங்காட்டாமல் பசியை நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் வேலை செய்யவில்லை, சேவையாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.

இரத்தமும், சதையும், மரணமும், ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட ஓலமிட்டு நிற்பவரும், மரணவாயில் நிற்பவரும்தான் வந்துநிற்பார்கள். கார் இருந்தும், நல்ல வீடிருந்தும், நல்ல படுக்கை இருந்தும், அவர்களுக்கு நல்ல நித்திரைதான் வந்திடுமா? ஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா?

நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது . இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்தபின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந்திடலாம். ஆனால் கொரோனாவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ மருத்துவமனையிலேயே இருக்கும் நிலை உருவாகிவிட்டது.

பணிகூட இப்போது பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் எட்ட நிற்கும் நிலை. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொடமுடியா நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டிலிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்கத் தாயில்லை. பார்க்கத் துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை.

மூன்று பிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரிய விருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வரமுடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது அடம் பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கைப்பேசியில் கதைக்கிறார்கள். காணொலியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டு வாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய், காணாமலே போய்விடுகிறாள். கட்டிய கணவன் கதறி அழுகிறான். மருத்துவ மாது மனிதம் காக்க தெய்வமாகிறாள்.!

இங்கிலாந்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சக மருத்துவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவுகின்றார். இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும்புலமை பெற்றார். மருத்துவத்துக்குத் தன்னையே கொடுத்தும் விட்டார். மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார்.

வீடுசென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும்பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமா? மனைவியுடன் குழந்தையுடன் கைப்பேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே!

வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர், திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையைக் காணொலி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவ மாது. தாயைக் கண்ட குழந்தை அழுகிறது. அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வரமுடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை, தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன்! இதுதான் மருத்துவர்களின் நிலை! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கிவிடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவா? விருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை! பற்றற்ற நிலை!

தன் கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தைக் கண்டு தாதியர்களால் தாங்க இயலவில்லை. பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள்? மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொரு விதம். “மக்கள் சேவை மகேசன் சேவை” இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம்.

மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று “கண்கண்ட தெய்வம்” ஆகின்றார்.

விதண்டாவாதம் பேசுவதும், விஷமத்தனமாய்க் கருத்துகளைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும், நாட்டுநிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையின்மையினையே காட்டும். வீட்டுக்கே வரமுடியாமல் நாட்டினைக் காத்திட தம் வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். “மானிட உருவில் பூமிக்கு வந்த தெய்வங்களே”  இவர்கள் என்பதை யாவரும் மனத்தில் இருத்த வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *