(Peer Reviewed) சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்
மு.கயல்விழி,
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி,
காஞ்சிபுரம்.
மின்னஞ்சல்: kayalarul22@gmail.com
முன்னுரை
இடைக்காலத் தமிழக வரலாற்றில் அஞ்சினான் புகலிடங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அக்காலத் தமிழகத்தின்; வடபகுதியைச் சம்புவராய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். இவர்கள் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டில் தனியரசு செலுத்தியவர்கள். வட தமிழகத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர்கள் இவர்களே. இவர்கள் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வஞ்சினான் புகலிடங்கள் அவர்களின் மேம்பட்ட பொருளியல் அறிவைப் புலப்படுத்தின. தமிழக வணிகர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் இவர்கள் வணிகத்தின் மீதும், வணிகர் மீதும், நாட்டின் பொருளியல் நலன் மீதும், எத்துணை அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதைப் புலப்படுத்தின. அஞ்சினான் புகலிடங்களால் வணிகம் செழித்தது; வணிகர்கள் பாதுகாக்கப்பட்டனர். இதன் விளைவாய் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. ஆனால் அஞ்சினான் புகலிடங்களை ஆராய்வது மிகவும் சவாலான மற்றும் சிக்கலான பணியாகும். இதன் சான்றுகள் தொல்லியல் துறை சார்ந்தது என்பதால் இது குறித்து அதிக ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சார்ந்து இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகின்றது.
இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் (அவல) நிலை
இடைக்காலத் தமிழகத்தின் அரசியல் நிலை மிகவும் குழப்பம் நிறைந்தது. தமிழகத்தின் தீயூழின் காரணமாய்ப் பேரரசுச் சோழர்களும், அவர்களைத் தொடர்ந்து பிற்காலப்பாண்டியர்களும் வீழ்ச்சியடைந்தனர். அவர்களின் வீழ்ச்சி மாபெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. தமிழகத்தில் அரசியல் குழப்பம் நீடித்ததுடன், எங்கும் அமைதியின்மை நிலவியது. தமிழகமே போர்க்களமாக மாறியது. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி.1219ல் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அழிவை ஏற்படுத்தினான். இதன்பின் அரசனான ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1257ல் சோழநாட்டை வென்று நிர்மூலமாக்கினான் (பாண்டியர் வரலாறு. ப:445). இந்நிலையில் தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்டகோபாலன் கி.பி. 1267ல் காஞ்சிபுரத்தை வென்றான் (பிற்காலச் சோழர் சரிதம் .ப:386). சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜன் எந்தப் படையெடுப்பையும் தடுக்கவியலாத அளவுக்குப் பலவீனமானான். இது தவிர சேரமன்னன் பாஸ்கர இரவிவர்மன் கி.பி.1313ல் படையெடுத்துச் சோழநாட்டை வென்று தொண்டை நாடு வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். கி.பி.1313ல் காகதீய மன்னன் பிரதாபருத்திரன் தன் தளபதி முப்பிடி நாயகனை அனுப்பிக் காஞ்சிபுரத்தினைக் கைப்பற்றினான். போசள மன்னன் வீர நரசிம்மனும் தன் பங்குக்குப் பெரும் படையுடன் வந்து வெற்றி பெற்று, திருச்சி மாவட்டம் கண்ணனூரில் ஒரு அரசை நிர்மாணித்தான்.
இதன் பின்னும்; அந்நியப் படையெடுப்புகள்; தொடர்ந்தன. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் (Malik Kafur) தமிழகத்தின் மீது கி.பி.1311ல் படையெடுத்துப் பேரழிவையும், பெரும் சேதத்தையும் ஏற்படுத்கினான் (தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்.ப:387). அவனைத் தொடர்ந்து குஸ்ருகான் (Khusro Khan) கி.பி.1318லும், உலூக்கான் (Ulugh Khan) கி.பி.1323லும், தமிழகத்தைச் சூறையாடி, பெரும் பொருளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இவ்வாறு தொடர்ச்சியான படையெடுப்புகளால் மக்கள் சிக்கிச் சின்னா பின்னமானார்கள். தமிழகத்தில்; தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை தோன்றியது. இந்நிலையில் பஞ்சங்களும் தோன்றி மக்களை வாட்டி வதைத்தன. கி.பி.1344ல் காஞ்சிபுரம் மாவட்டம் நெரும்பூரிலும் (ARE.No:276/1912), இதேவாண்டு வேலூர் மாவட்டம் கலவை (SII.Vol:7 No-444) மற்றும் குடிமல்லூரிலும் (ARE.No:420/1905) பஞ்சங்கள் தோன்றின. இதன் காரணமாய் மக்கள் கடுமையான இன்னல்கள் அடைந்தனர். இவ்வாறு ஓயாத படையெடுப்புகளாலும், இயற்கைச் சீற்றங்களாலும், இடைக் காலத் தமிழ் மக்கள் சொல்லவியலாத் துயரடைந்தனர்.
அஞ்சினான் புகலிடங்களின் தோற்றம்
அஞ்சினான் புகலிடம் என்றால் தஞ்சம் தேடி அஞ்சி வருபவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் அமைப்பாகும். அஞ்சினான் புகலிடங்கள் முதலில் எங்கு தோன்றின என்ற முடிவு இன்னும் எட்டப்படவில்லை. பண்டைய நாளில் சமணர்கள் இது போன்ற அடைக்கலங்கள்; வழங்கும் அமைப்புகளை நடத்தினர். இது “அபயதானம்”என்று அழைக்கப்பட்டது. வாழ்க்கைப் போரில் தோற்று, அனைத்தையும் இழந்து, அநாதைகளாகிய அபலைகளுக்கு உணவும், உடையும், உறையுளும் சமணப் பெரியோர்களால் சமணப் பள்ளிகளில் (சமண ஆலயம்) வழங்கப்பட்டது. சான்றாகத் திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள “ஜம்பை” என்ற ஊரினைக் கொள்ளலாம். இங்கு “கண்டராதித்தப் பெரும் பள்ளி” என்ற சமண ஆலயம் சோழர் காலத்தில் செயல்பட்டது. அங்கு “சோழத்துங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம்” என்ற அஞ்சினான் புகலிடம் செயல்பட்டது. அங்கு தஞ்சம் தேடி வருபவர்களுக்கு உணவும், உடையும், தங்குமிடமும் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட இந்த அஞ்சினான் புகலிடங்கள் காலநிர்பந்தத்தால் அரசர்களாலே நடத்தப்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
சோழர் காலத்தின் இறுதியில் தோன்றிய அரசியல் குழப்பங்களால் சமயம் சாராத அஞ்சினான் புகலிடங்கள் தமிழகத்தின் பலவிடங்களில் தோன்றின. பின்னர் வந்த சம்புவராயர் காலத்தில் இது பல்கிப் பெருகின. சோழர்கள் ஆட்சிக்குப் பின் தொண்டை நாட்டை ஆண்ட சம்புவராய மன்னர்கள் நாட்டின் நிதி நிலையைச் சீர்த்திருத்த முனைந்தனர். சோழர் கால வரிவிதிப்பு முறைகள் இக்காலத்திற்குப் பொருந்தவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிகம் அழிந்தது, வணிகர்கள் வறியவராயினர். பலவிடங்களில் வியாபாரிகள் அரசு வரிகளைச் செலுத்தவியலாமல் ஊர்களை விட்டு ஓடினர். எனவே வணிகத்துக்கும், வணிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய இன்றியமையாப் பணியைச் சம்புவராய மன்னர்கள் முதலில் கொண்டனர். இதன் காரணமாய் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை ஏற்படுத்தினர்.
அஞ்சினான் புகலிடங்களின் நிலை
அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்;பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கூர்ந்து ஆராயுமிடத்து அவை வணிகத்துக்காக நிறுவப்பட்ட புகலிடங்கள் என்பது தெளிவாகின்றது. அக்காலத்தில் போர்கள் என்பது அன்றாட நிகழ்வாய் மாறிய நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டிருந்தால் அது போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில்; அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அஞ்சினான் புகலிடங்கள் ஏதும் அவ்விடங்களில் அமைக்கப்படவில்லை. மாறாக இப்புகலிடங்கள் அமைக்கப்பட்ட இடங்களெல்லாம் வணிக மையங்களாகத் திகழ்ந்தன. புதியதாக அமைக்கப்பட்ட இப்பகுதிகளி;ல் அக்கால வணிகக் குடியினரான காசாயக் குடியினர் (கைக்கோளர், சாலியர், கோலியர், சேனையங்காடிகள், செக்குக் குடிகள், செட்டிகள் போன்றோர்) பெருமளவில் வரவேற்கப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர்.
போர்களால்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டுமேயன்றி பாதுகாப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டிராது. அக்காலத்தில் போரால் நேரடியாக பாதிக்கப்பட்ட எவ்விடங்களிலும்; அஞ்சினான் புகலிடங்கள் அமைக்கப்பட்டதாகச் சான்றுகளில்லை. மாறாகப் புதியதாக அமைக்கப்பட்ட அஞ்சினான் புகலிடங்களில்; வணிக இனத்தவர்கள் வந்து குடியேறி வணிகம் புரிய ஊக்கமளிக்கப்பட்டதற்குச் சான்றுகள் உள. எனவே அஞ்சினான் புகலிடங்கள் நிறுவும் நடவடிக்கையானது போரினால் வணிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிகம் செழிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட பொருளியல் தொடர் நடவடிக்கையாகக் கொள்ளவேண்டும். சம்புவராய மன்னர்கள் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்; துரிதமாகப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் பல அஞ்சினான் புகலிடங்களை அமைத்தனர். எனவே, அஞ்சினான் புகலிடங்கள் என்பவை பொதுமக்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட அரண்கள் என்பதைவிட வணிகத்தையும்; வணிகர்களையும் பாதுகாக்க அரசு அமைத்த அமைவிடங்கள் என்பது சாலவும் பொருந்தும்.
சம்புவராயர் கால அஞ்சினான் புகலிடங்கள்:-
சம்புவராய மன்னர்கள் பல்லவர்களுக்குப் பின்பு வந்த சோழர் காலத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை (வட தமிழ்நாட்டை) ஆண்ட அரச குலத்தவர் ஆவர். கி.பி 10 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை இவர்களுடைய ஆட்சி நிலைத்திருந்தது. ஆரம்பத்தில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்களின் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்த அவர்கள் பின்பு படைவீடு என்ற இடத்தில் தம் தலைநகரை மாற்றிக்கொண்டனர். இவர்கள் சோழர்கள் ஆட்சியில் முக்கியப் படைத்தலைவர்களாகவும் குறுநில மன்னர்களாகவும் பணியாற்றினார்கள். இவர்கள் தமிழகத்தின் சிறந்த புராதனத் தமிழினத்தைச் சார்ந்தவர்கள். சோழர்களுடன் நெருங்கிய திருமண உறவைக் கொண்டவர்கள். பல்வேறு சம்புவராய மன்னர்களின் கல்வெட்டுகள் இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்று உரைக்கின்றன (ARE.NO:244/1901 & ARE.NO: 453/1923-24 & ARE.NO:163/1915 & SII. Vol-3.No:63 & பெருமுக்கல் கல்வெட்டுகள், ப:60) மேலும் இவர்கள் பழம்பெருமை மிக்க வன்னிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் சோழர்களின் குறுநில மன்னர்களாகப் பணியாற்றிய இவர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் சுதந்திர மன்னர்களாகத் தனியரசு செலுத்தினர்.
இடைக்காலத்தில் இடைவிடாத போர்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. எனவே, சம்புவராய மன்னர்கள் வணிகம் வளர்ப்பதை முதற்பணியாகக் கொண்டனர். முதலில் வணிகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்கள் (அஞ்சினான் புகலிடங்கள்); அமைக்கப்பட்டன. இவ்வஞ்சினான் புகலிடங்கள் ஒரே இடத்தில் செறிந்து காணப்படாமல் நாடு முழுவது பரவிக் காணப்பட்டன. வணிக வளர்ச்சி தேவைப்படும் இடங்களில் இவை அமைக்கப்பட்டன. அஞ்சினான் புகலிடங்களி;ல் வந்து வியாபாரம் செய்ய வணிகர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டனர், அவர்கள் வணிகம் செய்து பிழைக்க ஊக்குவிக்கப்பட்டனர். அரசே இவ்விடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை நல்கியதுடன் வணிகர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்தது. சிலவிடங்களில் வணிகத் தெருக்கள் புதிதாய் அமைக்கப்பட்டன. அத்தெருக்களுக்கு பெயர்களும் சூட்டப்பட்டன. இங்கு புதிதாய்க் கடை வைத்து வணிகம் செய்யும் வணிகர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டி அரசுக்கு அவர்கள் முதலாண்டு செலுத்த வேண்டிய வரிகள் பெருமளவு தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அஞ்சினான் புகலிடங்களில் வணிகத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் சிறப்பாக வழங்கப்பட்டது.
சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் அஞ்சினான் புகலிடங்களை நிறுவினர். ஆனால் இவற்றில் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தன. திருமல்லிநாத சம்புவராயன் விழுப்புரம் மாவட்டம் “செவலப்பொறை” என்ற இடத்தில் அஞ்சினான் புகலிடம் ஒன்றை அமைத்தான் (ஆவணம் இதழ் எண்:16,ப:104). வென்று மண்கொண்ட சம்புவராயன் வேலூர் மாவட்டம் “கீழ்மின்னல்”(ARE.No:135/1933-34), “கூடநகரம்” (ARE.No:137/1926), மற்றும் “வேப்பூரிலும்” (ARE.No:499/1926), திருவள்ளூர் மாவட்டம் “திருவேற் காட்டிலும்” (ARE.No:393/1958-59), காஞ்சிபுரம் மாவட்டம் “கொத்திமங்கலம்” (ARE.No:137/1926) என்ற ஊரிலும் அஞ்சினான் புகலிடங்கள் நிறுவினான். மூன்றாம் இராஜநாராயணச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “வடமாதிமங்கலம்” (ARE.No:62/1933-34) என்ற ஊரில் அஞ்சினான் புகலிடம் அமைத்தான். குலசேகரச் சம்புவராயன் திருவண்ணாமலை மாவட்டம் “தெள்ளாறு” (ARE.No:70/1934-35) மற்றும் “இடைப்பாறையிலும்” (ARE.No:141/1941-42) அஞ்சினான் புகலிடங்கள் அமைத்தான். இவ்வாறு சம்புவராய மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளில் அஞ்சினான் புகலிடங்களை நிறுவி வணிகம் வளர்த்தனர்.
முடிவுரை
சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு. அவர்கள் காலத்தில் நாடு முழுவதும் பரவலாக நிறுவப்பட்ட இவ்வஞ்சினான் புகலிடங்கள் வணிகத்தைப் பாதுகாத்தன. திருடர்கள், கொள்ளையர்கள், அந்நியர் படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள் இவற்றால் வணிகர்கள் பாதிக்காமலிருக்க இவை பாதுகாப்பளித்தன. அஞ்சினான் புகலிடங்களில் வணிகம் செழித்தது, வணிகர்கள் கொழித்தனர். இங்கு பொதுமக்கள் தடையின்றி பொருட்களை விற்றும், அச்சமின்றி பண்டங்களை வாங்கியும் நாட்டின் பொருளியல் நிலையை உயர்த்தினர். இதனால் வணிகர்கள் நன்முறையில் பொருளீட்டியதுடன், அரசுக்கு முறையாக வரியும் செலுத்தினர். இதன் விளைவாய்; நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டது. போரினால் வீழ்ச்சியடைந்த பொருளியல் நிலை இவ்வாறு உயர்ந்தது. மக்கள் நிம்மதியுடனும், வளத்துடனும், மகிழ்வுடனும் வாழ்ந்தனர். இடைக்காலத் தமிழக வரலாற்றில் சம்புவராயர் அரசு மக்கள் நலன் சார்ந்த, பொருளியல் திறன் வாய்ந்த, வணிகத் தொலைநோக்கு கொண்ட அரசு என்பதற்கு அவர்கள் ஏற்படுத்திய அஞ்சினான் புகலிடங்களே சாலச் சிறந்த சான்றுகளாகும்.
விரிவாக்கம் (Abbreviations)
- ARE- Annual Report on Indian Epigraphy
- SII-South Indian Inscription
கருவி நூற்பட்டியல் (Bibliography)
1.Appadurai.A, (1990), Chennai, Economic Condition In South India, University of Madras.
2.Neelakanta Sastri.K,A., (1975), Chennai, The Cholas, University of Madras.
3.இராஜசேகரத் தங்கமணி.ம, (1978), சென்னை, பாண்டியர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
4.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, (2008), சிதம்பரம், பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
5.பிள்ளை.கே.கே. (2013), சென்னை, தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராச்சி நிறுவனம்.
6.தமிழக வரலாறு – சோழர் காலம், (1998), சென்னை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
7.நடன.காசிநாதன் & வசந்த கல்யாணி.அர (பதி), (1998), சென்னை, பெருமுக்கல் கல்வெட்டுகள், தமிழ்சாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை.
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
சோழ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட குறுநில வேந்தர்களாகிய சம்புவராயர்களின் பங்களிப்பு, தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். கடைசியாகத் தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களும் இவர்களே ஆவர். சோழர்களின் இறுதிக் காலத்தின்போது சமுதாயத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, அஞ்சினான் புகலிடங்கள் ஆகும். இந்தக் கட்டுரை இது குறித்துத் தெளிவாக விளக்குகிறது. அஞ்சினான் புகலிடங்கள் போர்க் காலங்களில் துன்புற்ற மக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு அரண்கள் என்றும், வணிகர்களின் பாதுகாப்புக்காகவும். வணிகத்தின் வளர்ச்சிக்காகவும் நிறுவப்பட்ட பொருளியல் அமைவிடங்கள் என்றும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன என்று கட்டுரையாசிரியர் அஞ்சினான் புகலிடங்கள் குறித்துக் கூறுகிறார். இயல்பாகவே குறுநில மன்னர்கள் மக்களின் துன்பம் துடைப்பதற்காக மேற்கொண்ட பல வழிகளை வரலாற்றின் மூலமாக அறிகிறோம். அந்த வழியில் சம்புவராய மன்னர்களின் சமுதாயப் பணி ஆகிய அஞ்சினான் புகலிடங்கள் குறித்து இந்தக் கட்டுரை பேசுகிறது. சம்புவராயர் குறித்து மேலும் சில விளக்கங்களைக் கட்டுரையாசிரியர் சற்று விரியத் தந்திருக்கலாம்.