படக்கவிதைப் போட்டி 237இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

திரு. லோகேஷ் எடுத்துள்ள இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 237க்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

மிதிவண்டிகள் அருகி மோட்டார் வாகனங்கள் பெருகிச் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் இன்னமும் மிதிவண்டியை மதித்து மிதிப்பதற்கே இந்தப் பெரியவருக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். எனினும் சட்டைகூட அணியாமல் வெயிலில் செல்லும் இவருடைய தளர்ந்த தோற்றம் நம் மகிழ்ச்சியை வற்றச்செய்துவிடுகின்றது.

இப்படத்துக்குப் பொருத்தமான பாடலை படைத்துத் தரும்படி நம் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கின்றேன்.

*****

’பெற்ற பிள்ளைகள் வெளிநாடேகிவிட, உற்ற துணையாயிருந்தவளோ விண்ணேகிவிட, துணையேதுமின்றித் தன் பிழைப்புக்காய் உழைக்கும் முதியவர் இவர்’ என்று இப்பெரியவரின் வருந்தத்தக்க வாழ்வைக் கவிதையாக்கியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

உயிர்த் துணை…

பெற்றெடுத்துப்
பேணி வளர்த்துப்
படிக்கவைத்த பிள்ளைகள்,
போய்விட்டனர்
வெளிநாட்டுக்கு-
விமானம் ஏறி..

உற்ற துணையாயிருந்த
ஒருத்தியும்
போய்ச் சேர்ந்துவிட்டாள்,
ஒற்றை ஆளாய் இவரை
விட்டுவிட்டு..

மற்றவர்களும்
மறந்துவிட்டனர்..

உயிரே யற்ற
ஒரே துணை,
ஓட்டை மிதிவண்டியில்
வற்றிய உடலுடன்
வேலைக்குச் செல்கிறார்-
வயிற்றுப் பிழைப்புக்காக…!

*****

’மாசு இல்லா வான்வெளியும், தூசு இல்லாச் சாலையுமாகக் காட்சியளிக்கும் கிராமத்தில் இம்முதியவர் மேற்கொள்ளும் சுகமான மிதிவண்டிப் பயணம் வருங்காலத்தில் படத்தில் மட்டுமே சாத்தியமாகிடுமோ?’ என வருந்துகின்கிறார் திரு. கோ. சிவகுமார்.

காட்சிப் பொருள்

மாசு இல்லா வானவெளி!
தூசு இல்லாச் சாலை வழி!
ஓங்கி வளர்ந்து
மொட்டையான
ஒற்றைப் பனைமரம்!
ஆங்காங்கே
நிழல் மரங்கள்!
தண்ணீர் வண்டிகளும்
சரக்கு வண்டிகளும்
தடயங்கள் பதிக்காத சாலை!
அதில்
சுகமான மிதிவண்டிப் பயணம்!
இந்தக் கிராமத்தின்
அடையாளங்களெல்லாம்
இனி
படத்தில் மட்டுமே
பார்க்க முடியும்
காட்சிப் பொருளாய்
ஆகிடுமோ!

*****

’ஓடி ஓடி உழைத்து நாடி தளர்ந்தபின்னும் உழைத்துச் சாப்பிட்டால்தான் சோறு உடம்பில் ஒட்டும் எனும் கொள்கையுடைய இம்முதியவரைச் சுமந்துசெல்லும் மிதிவண்டி முன்பு விமானமும் தூசுதான்!’ என்கிறார் திரு. ராவணா சுந்தர்.

உள்ளம் – வயதறியாது

பொட்டவெளிக்காட்டில்
உச்சிவெயில் அடிக்கையில்
நட்ட நடுச் சாலையில்
பட்டமரமெல்லாம்
மூலைக்கு ஒன்றாய்
பேருக்கு நிற்கையில,
பட்ட கடனெல்லாம்
பலனற்றுப் போனாலும்,
கருத்த மேனியில்
விழுந்த தழும்புகள்
பல கதைகள் கூறும்,
மேலாடை விடுத்து
உன் அங்கங்கள்
வடித்த கண்ணீரில்
கலந்த உதிரங்களை
என்றும் உன் தோள்களுக்குத்
துணையான துண்டின் வாசமறியும்,
செருப்பாய் நீ
சிற்றுண்டி வித்து
உழைத்துச் சீராட்டிய உறவுகளெல்லாம்
சீமையில் செழிப்புற,
எலும்புகள் மேற்தோலில் எட்டிப்பார்த்தாலும்
ஒட்டிய வயிற்றுக்கு
உழைச்சாதான் சோறு
உடம்பில் ஒட்டும்னு,
உன்குருதி புடைக்க
நீ ஓங்கி மிதிக்கிற
மிதிவண்டியப் பார்க்கும்போது,
தூரப் பறக்கும் விமானத்தையும்
சற்று ஏளனமாப் பார்க்க வைக்கும்.

*****

உறவுக்கும் உணர்வுக்கும் சொந்த பந்தங்களுக்கும் அடிமையான வாழ்க்கை நிகழ்வுகளைச் சுழன்றுசெல்லும் மிதிவண்டிச் சக்கரங்களைப்போலச் சற்றே சுழற்றிப் பார்க்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

தொலை தூரத்து வெளிச்சம்

மெல்ல மிதிக்க
மிதிவண்டிச் சக்கரம்
மெல்லச் சுழலுது முன்னே!
நினைவுச் சக்கரமோ
மெல்லச் சுழன்றது பின்னே!

இனி ஒரு சுதந்திரம் வேண்டும்
என்று அன்று குரல் கொடுத்த அண்ணல்
சுதந்திரம் கிடைத்ததோ நாட்டுக்கு
ஆண்டாண்டு காலமாய்
அடிமைகளாய் வாழ்ந்ததால்
இன்றும் இருக்கிறோம் அடிமைகளாய்!

மிதிவண்டியில் சங்கிலியால் இணைந்து
முன் சக்கரத்தோடு பயணம் செய்யும்
பின் சக்கரமாய்த்
தாலிச் சங்கிலியால் என்னோடு இணைந்து
வாழ்க்கைப் பயணத்தை அவளோடு துவங்கிட
உறவுக்கு அடிமையாய் ஆனேனே!

உணர்வுக்கு அடிமையாகிட
உயிர்களை அவள் சுமந்திட
புதுச் சொந்தங்களுக்கு அடிமையாய் ஆனேனே!
உறவுகளும் சொந்தங்களும்
அன்பால் இணைந்திட
பந்தங்களுக்கு அடிமை ஆனேனே!

அத்தனையும் இழந்து
தனிமரமாக நிற்கையில்
அடிமைச் சங்கிலிகள் அறுந்து போய்
தொடருது வாழ்க்கைப்பயணம்!
வெளிச்சம் தரும் விடுதலை வேண்டி
இறைவா உன் திருவடி தேடி
இன்னும் ஒரு சுதந்திரம் வேண்டும்!

*****

செப்பமிட்ட பாதையில் மிதிவண்டியில் பயணிப்பதால் மட்டும் பண்படா வாழ்க்கையினைச் சரிப்படுத்திவிடமுடியாது எனும் வாழ்வியல் உண்மையை விளம்பியிருக்கின்றார் திருமிகு. சத்யா இரத்தினசாமி.

வாழ்க்கை மிதித்து சலித்த தடங்களிலே…
மிஞ்சியது மிதிவண்டிதான்…….. எனச் சலித்துக்கொண்டாலும்
இயற்கைக்கு எதிராக எரிபொருள் வாகனங்கள் செய்யும் இம்சைக்கு
இது போதுமென்று , நீவிர் தேற்றிக்கொள்வது தெரிகின்றது.
பாதைகள் செப்பமிடப்பட்டாயிற்று ………..
எனினும் இன்னும் பண்படாத வாழ்க்கையினை
இரு சக்கர இடைவெளியில் மிதித்து மிதித்து மீள முடியாது..
மீண்டும் இன்றும் புறப்பட்டு விட்டாய்………
ஓய்வைத்தான் உள்ளம் வேண்டினாலும் உறங்கவிடாத் தேவைக்காக………

*****

சுழலும் மிதிவண்டிக்குப் போட்டியாகச் சீரிய கருத்துக்கள் பலவற்றைத் தம் கவிதைகளில் சிறப்பாகச் சுழலவிட்டிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரியவை.

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

பயணங்கள் முடிவதில்லை!

ஆதாரம் தேடித் தேடி
ஆண்டாண்டு அலையும் கொடிகள்!
சேதாரம் கிட்டாமல்
செழித்துக் காய்ந்த நிலங்கள்!
நீராதாரம் பொய்த்துப் போய்
காய்ந்த நிலமடந்தை!
ஏர்முனை தேய்ந்து போய்
மழுங்கிய மண்ணின் மைந்தர்!
ஒட்டிய தேகம் பட்டினி வயிறு
எலும்பு தெரியும் வெற்றுடம்பு
கந்தல் நிறை வேட்டி – என
உன்நிலை பார்த்தபின்பு
நூற்றாண்டு பல கண்டாலும்
காந்திக்கும் உடை மாறாது!

கண்ணில் கனவுகள் வண்ணம் இழந்து போனாலும்
கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும்
சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை – இவர்
வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!
இங்குப் பொய்த்தது பருவம் மட்டுமல்ல
பதவியிலிருப்போர் வாக்கும் தான்…!

”ஒட்டிய தேகமும், பட்டினி வயிறும், கட்டியிருக்கும் கந்தல் வேட்டியும் இப்பெரியவரின் இல்லாமைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றன. இந்த அவலநிலைக்கு இவர்மட்டுமா காரணம்? வாக்கு வாங்குவதற்காகச் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசியலாளரும் அல்லவோ காரணம்!” என்று நாட்டின் எதார்த்த நிலையைப் பாட்டில் வெளிக்காட்டியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *