புலனாய்வு இதழியலில் சாதனை படைத்த பெண்மணி

0
Nellie_Bly

-மேகலா இராமமூர்த்தி

அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில், மைக்கேல் காக்ரன் (Michael Cochran), மேரி ஜேன் கென்னடி காக்ரன் (Mary Jane Kennedy Cochran) ஆகியோருக்கு மகளாக 1864ஆம் ஆண்டு மே 5இல் பிறந்தவர் எலிசபெத் ஜேன் காக்ரன் (Elizabeth Jane Cochran). வளமையானவராக விளங்கிய தந்தையார் மைக்கேல் காக்ரன், 6 வயதுக் குழந்தையாக எலிசபெத் இருந்தபோதே இறந்தமையால் குழந்தைப் பருவத்திலேயே பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் எலிசபெத்துக்கு ஏற்பட்டது.

பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கிய எலிசபெத், இண்டியானா பள்ளியில் (Indiana Normal School, now Indiana University of Pennsylvania) ஆசிரியப் பணிக்கான கல்வியைப் பயின்றுவந்தார். குடும்பச் சூழல் அவரைத் தொடர்ந்து பயில அனுமதிக்காததால் தம் கல்வியை முடிக்காமலேயே அவர் வெளியேறவேண்டியதாயிற்று. எனினும் கல்வியிலிருந்த ஆர்வம் காரணமாகத் தாமே பலவற்றைப் படித்துத் தம் பொது அறிவை வளர்த்துக்கொண்டார் எலிசபெத்.

அப்போது பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கிலிருந்து வெளிவந்த ’Pittsburgh Dispatch’ எனும் நாளிதழில் ”பெண்கள் எதற்கு ஏற்றவர்கள்?” (What Girls Are Good For?) எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. ”பெண்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவும், வீட்டுப்பணிகளை ஆற்றவுமே ஏற்றவர்கள்; கல்வி கற்கவும் பணிபுரியவும் பெண்கள் கிளம்புவது அரக்கத்தனமானது” என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது (பெண்ணடிமைத்தனத்தில் நம் நாட்டுக்குச் சற்றும் குறைந்ததில்லை அமெரிக்கா என்றறிக!).

அந்தக் கட்டுரையைப் படித்து வெகுண்ட எலிசபெத், ”பெண்கள் அடுப்பூதுவதற்கும், பிள்ளை பெறுவதற்கும் மட்டுமே ஏற்றவர்கள் எனும் எண்ணம் வன்மையாகக் கண்டிக்கத்தது; அறிவிற் சிறந்தவர்களான பெண்கள் கல்வி கற்கவும் வெளியில் சென்று பணிபுரியவும் ஏற்றவர்கள்; சமூகம் அவர்களைத் திருமண வாழ்வு எனும் பெயரில் வீட்டுக்குள் முடக்காமல் வெளியில் சென்று பணியாற்ற அனுமதிக்கவேண்டும்” என்று காட்டமாக மறுப்புக் கடிதம் எழுதி, ”தனித்திருக்கும் அபலைப்பெண்” (Lonely Orphan Girl) என்று கையொப்பமிட்டு Pittsburgh Dispatch நாளிதழுக்கு அனுப்பினார்.

அவரின் கருத்துக்களால் கவரப்பட்ட அந்நாளிதழின் ஆசிரியர் ஜார்ஜ் மேடன் (George Madden), அக்கடிதத்தைத் தம் நாளிதழில் வெளியிட்டதோடு எலிசபெத்தைத் தம் நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றவும் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பினை ஏற்று அந்நாளிதழில் பணிக்குச் சேர்ந்தார் எலிசபெத். 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பாடலாசிரியராக விளங்கியவரும், ’அமெரிக்க இசையின் தந்தை’ (Father of American Music) என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் பாஸ்டரின் (Stephen Foster) பாடலொன்றில் இடம்பெற்ற பெண் பெயரான ’நெல்லி பிளை’ (Nellie Bly) என்பதை எலிசபெத்தின் புனைபெயராகச் சூட்டினார் ஜார்ஜ் மேடன். அதுமுதல் ’நெல்லி பிளை’ என்ற பெயரிலே எழுதத் தொடங்கினார் எலிசபெத். இனி நாமும் எலிசபெத்தை ’நெல்லி பிளை’ என்றே அழைப்போம்.

பெண்களின் வாழ்க்கை, அமெரிக்கத் தொழிலாளர்களின் நிலை, அவர்களின் கல்வி குறித்தெல்லாம் Pittsburgh Dispatch நாளிதழில் எழுதினார் நெல்லி பிளை. ஆறு மாதங்களுக்கு மெக்சிகோ சென்று தங்கி அங்குள்ளோரின் வாழ்வியல் குறித்து ’Six Months in Mexico’ எனும் தலைப்பில் நாளிதழில் தொடர் கட்டுரைகள் எழுதினார். மெக்சிகோவிலிருந்து திரும்பி வந்த அவரை Pittsburgh Dispatch நாளிதழின் ”பெண்கள் பக்கம்” பகுதிக்குப் பொறுப்பாசிரியராக்கிய ஜார்ஜ் மேடன், பெண்களின் பேஷன் ஈடுபாடு, மலர்க் கண்காட்சிகள் குறித்தெல்லாம் எழுதுமாறு பணிக்கவே, பத்திரிகையாளர் பணியை ”சீரியஸ் பிசினஸாக”க் கருதிய நெல்லிக்கு இவை பிடிக்கவில்லை. எனவே Pittsburgh Dispatch நாளிதழிலிருந்து விலகினார்.

பிட்ஸ்பர்க் நகரிலிருந்து பத்திரிகைத் துறையின் மையமாக அக்காலத்தில் விளங்கிய நியூ யார்க் நகருக்குக் குடிபெயர்ந்தார் நெல்லி. அப்போது அவருக்கு வயது 23. பத்திரிகையாளர் பணிதேடிப் பல மாதங்கள் அலைந்தார்; எதுவும் கிடைக்கவில்லை. ஜோசப் புலிட்சர் (Joseph Pulitzer) நடத்திவந்த ’தி நியூ யார்க் வேர்ல்ட்’ (The New York World) எனும் நாளிதழ் இயங்கிவந்த அலுவலகத்துக்கு ஒருநாள் சென்று அப்பத்திரிகையின் ஆசிரியர்களைச் சந்தித்த நெல்லி, பத்திரிகைத் துறையில் எத்தகு சவாலான பணியையும் ஏற்றுச் செய்வதற்குத் தாம் தயாராக இருப்பதை அவர்களிடம் தெரிவித்தார். அவரின் துணிவால் கவரப்பட்ட அந்நாளிதழ் ஆசிரியர்கள்,

“மனநலக் காப்பகம் ஒன்றில் நடைபெறுகின்ற முறைகேடுகள் குறித்து அறிந்துவர நீங்கள் அங்கே மனநோயாளிபோலச் செல்ல வேண்டியிருக்கும். உங்களால் மனநோயாளிபோல் நடிக்க இயலுமா?” என்று நெல்லியிடம் கேட்க, சற்றும் தயங்காமல் அதற்கு ஒப்புக்கொண்டார் நெல்லி. உடனே பத்திரிகையாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டது.

நியூ யார்க்கிலுள்ள பிளாக்வெல் தீவிலிருந்த (Blackwell’s Island; Now the island is renamed Roosevelt Island) பெண்களுக்கான மனநலக் காப்பகத்தின் (Women’s Lunatic Asylum) நிலையை அறிந்துவருவதே நெல்லிக்கு அளிக்கப்பட்டிருந்த பணி. மனநோயாளியாக அங்கே சென்றால்தான் அக்காப்பகத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவ்வாறு நடிப்பதற்கு ஆயத்தமான நெல்லி, அதன் முதற்கட்டமாகத் தாம் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென்று இரவுநேரத்தில் அலறுவது, சம்பந்தமில்லாமல் பேசுவது என்று தம் ’பைத்தியக்கார’ வேலைகளைத் தொடங்கினார்; அவரது சேட்டைகள் பொறுக்கமுடியாமல் போகவே அவர் தங்கியிருந்த குடியிருப்பின் உரிமையாளர் காவல்துறையில் புகாரளித்தார். காவல்துறையினரும், மருத்துவர்களும் நெல்லியின் நடவடிக்கைகளை அருகிலிருந்து கண்டு அவருக்கு உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று சான்றிதழ் அளிக்கவே, பிளாக்வெல் தீவிலிருந்த பெண்களுக்கான மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் நெல்லி.

அங்கேயும் தன் நடிப்பைத் தொடர்ந்தார் அவர். மனநோயாளிகளாக அங்கே தங்கியிருந்த பெண்கள் கொடூரமாக நடத்தப்படுவதையும், அவர்களுக்குக் கெட்டுப்போன உணவு வழங்கப்படுவதையும், நாற்காலிகளில் கட்டிவைக்கப்பட்டு அப்பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதையும், உறைபனியின்மீது மணிக்கணக்கில் சிகிச்சை என்ற பெயரில் அவர்கள் அமர்த்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுவதையும், இன்னபிற கொடுமைகளையும் நேரில் கண்டார் நெல்லி. அதுமட்டுமா? மனநோயாளியாக உள்ளே சென்றதால் தாமும் அக்கொடுமைகளை அனுபவித்தார். அங்கு அவர் கண்டறிந்த மற்றொரு உண்மை, அங்கிருந்த எல்லாப் பெண்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர்; நல்ல அறிவுடன் இருந்த பெண்களும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டும், வறுமையால் மனநோயாளிகளெனத் தவறாக அடையாளப்படுத்தப்பட்டும் அந்தக் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பத்து நாள்கள் அங்கே தங்கி அக்காப்பகத்தின் முறைகேடுகள் அனைத்தையும் அறிந்துகொண்டார் நெல்லி. பத்தாவது நாள் தி நியூ யார்க் வேர்ல்ட் நாளிதழ் சார்பில் அங்கே வந்த வழக்கறிஞர், நெல்லி குறித்த உண்மைகளைக் காப்பகத்தாரிடம் தெரிவித்து அவரை வெளியில் கொண்டுவந்தார்.

வெளியில் வந்த நெல்லி மனநலக் காப்பகத்தில் தாம் கண்ட அனைத்து உண்மைகளையும் தி நியூ யார்க் வேர்ல்ட் நாளிதழில், ”பைத்தியக்கார விடுதியில் பத்து நாள்கள்” (Ten Days in a Mad-House) எனும் தலைப்பில் கட்டுரைகளாக வெளியிட்டார். அவற்றைப் படித்த நியூ யார்க் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர். பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்திய அக்கட்டுரைகளைத் தொகுத்து நெல்லி நூலாகவும் வெளியிட்டார்.

அவரது கட்டுரைகளைக் கண்ட நியூ யார்க் நகர நிர்வாகம், அந்தக் காப்பகத்தின் செயற்பாடுகள் குறித்து நீதிபதிகளின் விசாரணைக்கு உத்தரவிட்டது. மனநலக் காப்பகங்களுக்கான பட்ஜெட்டை உயர்த்தி அங்கே முறையான சிகிச்சை, சுகாதாரமான இடவசதி, தரமான உணவு, மனிதநேய அணுகுமுறை ஆகியவற்றை வழங்கும்பொருட்டுச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. தம் துணிச்சலான செயற்பாடுகளால் அமெரிக்காவின் நட்சத்திரப் பத்திரிகையாளராக அனைவராலும் கொண்டாடப்பட்டார் நெல்லி பிளை.

சமூக அக்கறையும் புதிய சாதனைகள் படைப்பதில் ஈடுபாடும் கொண்ட நெல்லி பிளை, ஜூல்ஸ் வெர்ன் எனும் புகழ்வாய்ந்த எழுத்தாளரின் ”80 நாள்களில் உலகைச் சுற்றி” (Jules Verne’s Around the World in Eighty Days) எனும் நாவலால் ஈர்க்கப்பட்டு அதனை முறியடிக்கும் வகையில் 72 நாள்களில் உலகைச் சுற்றிவரக் கிளம்பினார். அப்பயணத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், எகிப்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றார். ”உலகம் சுற்றிய வாலை’யான நெல்லி பிளை, 72 நாள்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்களில் தம் பயணத்தை நிறைவுசெய்து நியூ யார்க்கிற்குத் திரும்பி உலக சாதனை படைத்தார்.

இப்பயணம் பெண்ணின் சுதந்திர உணர்வு, துணிவு, சாதிக்கும் திறன் ஆகியவற்றின் அடையாளங்களாக அப்போது பார்க்கப்பட்டது; இப்பயணத்தால் உலகப் பிரபலமாகவும் மாறினார் நெல்லி பிளை.

தம்முடைய 31ஆவது வயதில் தம்மைவிட 40 வயதுக்குமேல் மூத்தவரான தொழிலதிபர் இராபர்ட் சீமேனை (Robert Seaman) மணந்த நெல்லி, இராபர்ட்டின் மரணத்திற்குப் பின்பு அவரது நிறுவனத்தையும் (Iron Clad Manufacturing Company) எடுத்து நடத்தித் தொழில்முனைவோராகவும் சாதித்தார். எதிர்பாராத விதமாகச் சில ஆண்டுகளில் அந்நிறுவனம் முடங்கிப்போனதால் மீண்டும் பத்திரிகையாளர் பணிக்குத் திரும்பினார் அவர்.

புலனாய்வு இதழியலின் முன்னோடிப் பெண் பத்திரிகையாளர் (Pioneer woman in Investigative Journalism), சிறந்த ஊடகவியலாளர் (A great journalist), பெண்ணியவாதி, (Feminist), துணிவும் சுதந்திர உணர்வும் கொண்ட பெண் (A woman with courage and a sense of freedom), தொழில்முனைவோர் (Entrepreneur) எனப் பன்முகத் திறனாளராகத் திகழ்ந்த நெல்லி பிளை, 1922ஆம் ஆண்டு தம்முடைய 57ஆவது வயதில் நிமோனியா நோயால் மரித்தார்.

2002ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அவரது அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள், புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. பல பள்ளிகள், பூங்காக்கள் அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

”சரியாகப் பயன்படுத்தப்பெறும் ஆற்றல் எதையும் சாதிக்கும்” என்று திடமாக நம்பி அவ்வாறே செயற்பட்ட நெல்லி பிளை மறைந்து ஒரு நூற்றாண்டுக்குமேல் ஆகிவிட்டது; எனினும், அவருடைய துணிச்சலான செயற்பாடுகளும் சாதனைகளும் இன்றும் நமக்கு வியப்பையும் பிரமிப்பையும் தருவனவாகவே இருக்கின்றன. நெல்லி பிளையின் வாழ்க்கை இன்றைய பெண்களுக்கும் சிறந்த வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனில் மிகையில்லை.

*****

கட்டுரைக்கு உதவியவை:

1.https://www.britannica.com/biography/Nellie-Bly?utm_source=chatgpt.com

2.https://www.nationalgeographic.com/history/history-magazine/article/nellie-bly-united-states-first-investigative-journalist-started-asylum?utm_source=chatgpt.com

3.https://www.womenshistory.org/education-resources/biographies/nellie-bly-0?utm_source=chatgpt.com

4.https://en.wikipedia.org/wiki/Nellie_Bly

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.